63 Bible Verses About God's Character

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

Bible Verses About God's Character
  1. 1 இந்தவிதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறதினால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனிடம் சமாதானம் பெற்றிருக்கிறோம். 2 அவர் மூலமாக நாம் இந்தக் கிருபைக்குள் பிரவேசிக்கும் பாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோம் என்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம். 3 அதுமட்டும் இல்லை, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது என்று நாங்கள் அறிந்து, 4 உபத்திரவங்களிலும் மேன்மைபாராட்டுகிறோம். 5 மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறதினால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. 6 அன்றியும், நாம் பெலன் இல்லாதவர்களாக இருக்கும்போதே, குறித்தக் காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரர்களுக்காக மரித்தார். 7 நீதிமானுக்காக ஒருவன் இறப்பது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். 8 நாம் பாவிகளாக இருக்கும்போது கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த அவரது அன்பை நிரூபிக்கிறார். 9 இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, தேவனுடைய கோபத்திற்குத் தப்பி அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமே. 10 நாம் தேவனுக்கு பகைவர்களாக இருக்கும்போது, அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவரோடு ஒப்புரவாக்கப்பட்டோம் என்றால், ஒப்புரவாக்கப்பட்டப்பின்பு நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமே.

  2. 7 பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாக இருப்போம்; ஏனென்றால், அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். 8 அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார். 9 தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இந்த உலகத்திற்கு அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. 10 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற பாவநிவாரணபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. 11 பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாக நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிலொருவர் அன்புகூரக் கடனாளிகளாக இருக்கிறோம். 12 தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிலொருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.

  3. 5 யெகோவா ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, யெகோவாவுடைய நாமத்தைக் கூறினார். 6 யெகோவா அவனுக்கு முன்பாக கடந்துபோகிறபோது, அவர்: “யெகோவா, யெகோவா; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயவும், சத்தியமுள்ள தேவன். 7 ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும், மீறுதலையும், பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றம் இல்லாதவனாக விடாமல், தகப்பன்மார்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிக்கிறவர்” என்று கூறினார். 8 மோசே உடனே தரைவரைக்கும் குனிந்து பணிந்துகொண்டு:

  4. 11 அப்பொழுது மோசே தேவனை நோக்கி: “பார்வோனிடம் போகவும், இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான். 12 அதற்கு அவர்: “நான் உன்னோடு இருப்பேன்; நீ மக்களை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின்பு, நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம்” என்றார்.

    13 அப்பொழுது மோசே தேவனை நோக்கி: “நான் இஸ்ரவேலர்களிடம் போய், உங்கள் முன்னோர்களுடைய தேவன் உங்களிடம் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன்” என்றான். 14 அதற்கு தேவன்: “இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடன் சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று இஸ்ரவேலர்களுடன் சொல்” என்றார். 15 மேலும், தேவன் மோசேயை நோக்கி: “ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிற உங்கள் முன்னோர்களுடைய தேவனாகிய யெகோவா என்னை உங்களிடம் அனுப்பினார் என்று நீ இஸ்ரவேலர்களுக்கு சொல்; என்றைக்கும் இதுவே என்னுடைய நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என்றென்றைக்கும் என்னுடைய நாமம். 16 நீ போய், இஸ்ரவேலின் மூப்பர்களைக்கூட்டி, அவர்களிடத்தில்: ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுடைய தேவனாக இருக்கிற உங்கள் முன்னோர்களுடைய தேவனாகிய யெகோவா எனக்கு தரிசனமாகி, உங்களை நிச்சயமாக சந்தித்து, எகிப்தில் உங்களுக்குச் செய்யப்பட்டதைக் கண்டேன் என்றும்,

  5. 1 முற்காலத்தில் வெவ்வேறு காலங்களில், அநேக விதங்களில் தீர்க்கதரிசிகள் மூலமாக முற்பிதாக்களோடு பேசின தேவன், 2 இந்தக் கடைசிநாட்களில் குமாரன் மூலமாக நம்மோடு பேசினார்; இவரை எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்தார், இவர் மூலமாக உலகங்களையும் உண்டாக்கினார். 3 இவர் பிதாவுடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய குணத்தின் சாயலாகவும் இருந்து, எல்லாவற்றையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராக, அவர்தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார். 4 இவர் தேவதூதர்களைவிட எவ்வளவு விசேஷமான நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாக அவர்களைவிட மேன்மையுள்ளவரானார். 5 எப்படியென்றால், நீர் என்னுடைய நேசகுமாரன், இன்று நான் உம் தகப்பனானேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாக இருப்பேன், அவர் எனக்குக் குமாரனாக இருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாவது சொன்னது உண்டா? 6 மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர்கள் எல்லோரும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.

  6. 17 நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரலோகத்திலிருந்து உண்டாகி, ஒளிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது; அவரிடத்தில் எந்தவொரு மாறுதலும், எந்தவொரு வேற்றுமையின் நிழலும் இல்லை.

  7. 1 உசியா ராஜா மரணமடைந்த வருடத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய ஆடையின் தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. 2 சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் ஆறு இறக்கைகளிருந்தன; அவனவன் இரண்டு இறக்கைகளால் தன் முகத்தை மூடி, இரண்டு இறக்கைகளால் தன் கால்களை மூடி, இரண்டு இறக்கைகளால் பறந்து; 3 ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் யெகோவா பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று சத்தமிட்டுச் சொன்னார்கள். 4 சொன்னவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைக்கால்கள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது. 5 அப்பொழுது நான்: ஐயோ, அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனிதன், அசுத்த உதடுகளுள்ள மக்களின் நடுவில் குடியிருக்கிறவன்; சேனைகளின் யெகோவாவாகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.

  8. 7 யெகோவா சாமுவேலை பார்த்து: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனிதன் பார்க்கிறபடி நான் பார்க்கமாட்டேன்; மனிதன் முகத்தைப் பார்ப்பான்; யெகோவாவோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.

  9. 5 நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்;

    அவருடைய அறிவு அளவில்லாதது.

  10. 11 நீயோ, தேவனுடைய மனிதனே, இவைகளைவிட்டு விலகி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் நாடிப் பெற்றுக்கொள். 12 விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாக இருக்கிறாய். 13 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்வரைக்கும், நீ இந்தக் கட்டளையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கடைபிடிக்கும்படி, 14 எல்லாவற்றையும் உயிரோடு இருக்கச்செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவிற்கு முன்பாக நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன். 15 இயேசுவின் வருகையை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே ஸ்தோத்தரிக்கப்பட்ட ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், 16 அவர் ஒருவரே மரணம் இல்லாதவரும், ஒருவரும் நெருங்கமுடியாத ஒளியில் வாழ்கிறவரும், மனிதர்களில் ஒருவரும் காணாதவரும், காணக்கூடாதவருமாக இருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

  11. 1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்.

  12. 23 எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்களுடைய ஆராதனைகளை கவனித்துப் பார்த்தபொழுது, “அறியப்படாத தேவனுக்கு” என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைப் பார்த்தேன்; நீங்கள் அறியாமல் ஆராதனை செய்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். 24 உலகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறபடியால், கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் குடியிருப்பதில்லை. 25 எல்லோருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் எல்லாவற்றையும் கொடுக்கிற ஆண்டவர், தமக்கு ஏதாவது தேவையென்றால், மனிதர்கள் கைகளினால் பெற்றுக்கொள்வதில்லை. 26 மனித இனமான எல்லா மக்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே உண்டாக்கி, பூமியெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருக்கும் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; 27 கர்த்தராகிய அவரை மக்கள் தடவியாவது தேடிக் கண்டுபிடிக்கும்படி அப்படிச் செய்தார்; அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகில் உள்ளார். 28 ஏனென்றால், அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்களுடைய புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய வம்சத்தார் என்று சொல்லியிருக்கிறார்கள். 29 நாம் தேவனுடைய வம்சமாக இருப்பதினால், மனிதனுடைய யோசனையினாலும் சித்திரவேலையினாலும் உருவாக்கின தங்கம், வெள்ளி, கல் ஆகியவற்றிக்கு தெய்வம் ஒப்பாவார் என்று நாம் நினைக்கக்கூடாது.

  13. 8 பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருடங்களைப்போலவும், ஆயிரம் வருடங்கள் ஒருநாளைப்போலவும் இருக்கிறது என்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாமல் இருக்கவேண்டாம். 9 தாமதம் பண்ணுகிறார் என்று சிலர் நினைக்கிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதம்பண்ணாமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனம்திரும்பவேண்டும் என்று விரும்பி, நம்மேல் நீடியபொறுமை உள்ளவராக இருக்கிறார். 10 கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறதுபோல வரும்; அப்பொழுது வானங்கள் பயங்கர சத்தத்தோடு விலகிப்போகும், பஞ்சபூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதில் உள்ள செயல்களும் எரிந்து அழிந்துபோகும். 11 இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாக இருக்கிறதினால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த வாழ்க்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாக இருக்கவேண்டும்! 12 தேவன் வருகின்ற நாள் சீக்கிரமாக வருவதற்கு அதிக ஆவலோடு காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பஞ்சபூதங்கள் எரிந்து உருகிப்போகும். 13 அவருடைய வாக்குத்தத்தத்தின்படி நீதி நிலைத்திருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகும் என்று காத்திருக்கிறோம்.

  14. 17 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ சொன்ன இந்த வார்த்தையின்படி செய்வேன்; என்னுடைய கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன்” என்றார். 18 அப்பொழுது அவன்: “உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும்” என்றான். 19 அதற்கு அவர்: “என்னுடைய எல்லா தயவையும் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகச்செய்து, யெகோவாவுடைய நாமத்தை உனக்கு முன்பாகக்கூறுவேன்; எவன்மேல் கிருபையாக இருக்க விருப்பமாக இருப்பேனோ, அவன்மேல் கிருபையாக இருப்பேன்; எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ, அவன்மேல் இரக்கமாக இருப்பேன் என்று சொல்லி, 20 நீ என்னுடைய முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனிதனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கமுடியாது” என்றார். 21 பின்னும் யெகோவா: “இதோ, என் அருகில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு. 22 என்னுடைய மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகும்வரை என்னுடைய கரத்தினால் உன்னை மூடுவேன்; 23 பின்பு, என்னுடைய கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என்னுடைய பின்பக்கத்தைக் காண்பாய்; என்னுடைய முகமோ காணப்படாது” என்றார்.

  15. 43 உனக்கடுத்தவனைச் நேசித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்களுடைய சத்துருக்களை நேசியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். 45 இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவிற்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் தீயவர்கள்மேலும் நல்லவர்கள்மேலும் தமது சூரியனை உதிக்கச்செய்து, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். 46 உங்களை நேசிக்கிறவர்களையே நீங்கள் நேசிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? 47 உங்களுடைய சகோதரர்களைமட்டும் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? 48 ஆகவே, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா பூரண சற்குணராக இருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராக இருக்கக்கடவீர்கள்.

  16. தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம்.

    1 ஆண்டவரே, தேவனே நீர் தலைமுறை தலைமுறையாக

    எங்களுக்கு அடைக்கலமானவர்.

    2 மலைகள் தோன்றுமுன்பும்,

    நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும்,

    நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாக இருக்கிறீர்.

    3 நீர் மனிதர்களைத் தூளாக்கி,

    மனித சந்ததிகளை, திரும்புங்கள் என்கிறீர்.

    4 உமது பார்வைக்கு ஆயிரம் வருடங்கள்

    நேற்றுக்கழிந்த நாள்போலவும் இரவுவேளைபோலவும் இருக்கிறது.

  17. 27 யாக்கோபே, இஸ்ரவேலே: என் வழி யெகோவாவுக்கு மறைவானது என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ ஏன் சொல்லவேண்டும்? 28 பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது. 29 சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகச்செய்கிறார். 30 இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபர்களும் இடறிவிழுவார்கள். 31 யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் இறக்கைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையமாட்டார்கள், நடந்தாலும் சோர்வடையமாட்டார்கள்.

  18. 33 ஆ! தேவனுடைய செல்வம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாக இருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளந்துபார்க்க முடியாதவைகள், அவருடைய வழிகள் ஆராய்ந்துபார்க்க முடியாதவைகள்!

    34 “கர்த்தருடைய சிந்தையைத் தெரிந்துகொண்டவன் யார்?

    அவருக்கு ஆலோசனைக்காரனாக இருந்தவன் யார்?

    35 தனக்குத் திரும்பக்கிடைக்கும் என்று முதலில் அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?”

    36 எல்லாம் அவராலும், அவர் மூலமாகவும், அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

  19. 24 அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாமல் இரும்;

    உம்முடைய வருடங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.

    25 நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்;

    வானங்கள் உம்முடைய கரத்தின் செயல்களாக இருக்கிறது.

    26 அவைகள் அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் ஆடையைப்போல் பழமையாகப்போகும்;

    அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போகும்.

    27 நீரோ மாறாதவராக இருக்கிறீர்;

    உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை.

  20. 24 தேவன் ஆவியாக இருக்கிறார், அவரை ஆராதிக்கிறவர்கள் ஆவியோடும், உண்மையோடும் அவரை ஆராதிக்க வேண்டும் என்றார்.

  21. 22 ஆவியானவரின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், 23 சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு எதிரான பிரமாணம் ஒன்றும் இல்லை.

  22. 14 இதற்காக நான் பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள எல்லாக்குடும்பத்திற்கும் பெயரிட்ட சிருஷ்டிகராகிய, 15 நம்முடைய கர்த்தராக இருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு, 16 நீங்கள் அவருடைய ஆவியானவராலே உள்ளானமனிதனில் வல்லமையாகப் பலப்படவும், 17 விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்களுடைய இருதயங்களில் குடியிருக்கவும், நீங்கள் அன்பிலே வேர் ஊன்றி, நிலைபெற்றவர்களாகி, 18 எல்லாப் பரிசுத்தவான்களோடும் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் என்னவென்று உணர்ந்து; 19 அறிவிற்கு எட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய எல்லாப் பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படி, உங்களுக்கு ஆசியருளவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன். 20 நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாக நமக்குள் கிரியைசெய்கிற வல்லமையின்படி, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, 21 சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாகத் தலைமுறை தலைமுறைக்கும் எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

  23. 26 பின்பு தேவன்: “நமது சாயலாகவும் நமது தோற்றத்தின்படியேயும் மனிதனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் உயிரினங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் அனைத்துப் பிராணிகளையும் ஆண்டுகொள்ளட்டும்” என்றார்.

    27 தேவன் தம்முடைய சாயலாக மனிதனை உருவாக்கினார்,

    அவனைத் தேவசாயலாகவே உருவாக்கினார்;

    ஆணும் பெண்ணுமாக அவர்களை உருவாக்கினார்.

    28 பின்பு தேவன் அவர்களை நோக்கி: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் உயிரினங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற அனைத்து உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.

  24. 19 பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல;

    மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல;

    அவர் சொல்லியும் செய்யாமல் இருப்பாரா?

    அவர் வாக்களித்தும் நிறைவேற்றாமல் இருப்பாரா?

  25. 10 யெகோவா தேசங்களின் ஆலோசனையை வீணடித்து,

    மக்களுடைய நினைவுகளை பயனற்றதாக ஆக்குகிறார்.

    11 யெகோவாவுடைய ஆலோசனை நிரந்தரகாலமாகவும்,

    அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.

    12 யெகோவாவை தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட தேசமும்,

    அவர் தமக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்ட மக்களும் பாக்கியமுள்ளது.

    13 யெகோவா வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார்.

  26. 12 தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாகவும், இரண்டு பக்கமும் கூர்மையான எல்லாப் பட்டயத்தையும்விட கூர்மையானதாகவும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்க உருவக் குத்துகிறதாகவும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் பகுத்தறிகிறதாகவும் இருக்கிறது. 13 அவருடைய பார்வைக்கு மறைவான படைப்பு ஒன்றும் இல்லை; எல்லாம் அவருடைய கண்களுக்குமுன்பாக மறைக்கப்படாததாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.

  27. 30 தேவனுடைய வழி உத்தமமானது;

    யெகோவாவுடைய வசனம் புடமிடப்பட்டது;

    தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார்.

  28. 6 நான் யெகோவா, நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் மக்களாகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.

  29. 18 சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனிதர்களுடைய எல்லாவிதமான அவபக்திக்கும் அநியாயத்திற்கும் எதிராக, தேவனுடைய கோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. 19 தேவனைக்குறித்து தெரிந்துகொள்வது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். 20 எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தெய்வீகத்தன்மை என்பவைகள், படைக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகம் உண்டாக்கப்பட்டதிலிருந்து, தெளிவாகக் காணப்படும்; எனவே அவர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது.

  30. 1 அப்படியிருக்க, சகோதரர்களே, நீங்கள் உங்களுடைய சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும் என்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யும் புத்தியுள்ள ஆராதனை. 2 நீங்கள் இந்த உலகத்திற்கேற்ற வேஷம் போடாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான விருப்பம் என்னவென்று பகுத்தறிவதற்காக, உங்களுடைய மனம் புதிதாக மாறுகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

  31. 18 தேவனை ஒருவனும் ஒருநாளும் பார்த்ததில்லை, பிதாவின் மடியில் இருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.

  32. 15 அவர் கண்ணுக்குத் தெரியாத தேவனுடைய ரூபமும், எல்லாப் படைப்புக்கும் முதற்பேறுமானவர். 16 ஏனென்றால், அவருக்குள் எல்லாம் படைக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான எல்லாப் பொருட்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அரசாங்க ஆட்சி புரிவோர்களானாலும், அதிகாரங்களானாலும், எல்லாமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் படைக்கப்பட்டது. 17 அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.

  33. 8 இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார்.

  34. 5 தேவன் ஒளியாக இருக்கிறார், அவரிடம் கொஞ்சம்கூட இருள் இல்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற செய்தியாக இருக்கிறது. 6 நாம் அவரோடு ஐக்கியம் உள்ளவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாக இருந்தால், சத்தியத்தின்படி நடக்காமல் பொய் சொல்லுகிறவர்களாக இருப்போம். 7 அவர் ஒளியில் இருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியம் உள்ளவர்களாக இருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் எல்லாப் பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

  35. 9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராக இருக்கிறார்.

  36. 6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாக இருக்கிறேன்; என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். 7 என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைப் பார்த்தும் இருக்கிறீர்கள் என்றார்.

    8 பிலிப்பு அவரைப் பார்த்து: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். 9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைப் பார்த்தவன் பிதாவைப் பார்த்தான்; அப்படி இருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? 10 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களோடு சொல்லுகிற வசனங்களை நானாகவே சொல்லவில்லை; எனக்குள் வாழ்கிற பிதாவானவரே இந்த செயல்களைச்செய்து வருகிறார்.

  37. 17 நித்தியமாக நிலைத்திருக்கிற அழிவில்லாத கண்ணுக்குத் தெரியாத ராஜனுமாக, தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாக இருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

  38. 11 இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவென்றால், நாம் அவரோடுகூட மரித்தோமானால், அவரோடுகூடப் பிழைத்துமிருப்போம்; 12 அவரோடுகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடுகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்; 13 நாம் உண்மை இல்லாதவர்களாக இருந்தாலும், அவர் உண்மை உள்ளவராக இருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.

  39. 8 மேலும், நீங்களெல்லோரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கம் உள்ளவர்களும், சகோதரஅன்பு உள்ளவர்களும், மனதுருக்கம் உள்ளவர்களும், தாழ்மை உள்ளவர்களுமாக இருந்து, 9 தீமைக்குத் தீமையையும், அவமானத்திற்கு அவமானத்தையும் செய்யாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அழைக்கப்பட்டிருக்கிறவர்கள் என்று தெரிந்து, ஆசீர்வாதம்பண்ணுங்கள்.

    10 ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைப் பார்க்கவேண்டுமென்று இருக்கிறவன்

    தீமையானவைகளுக்குத் தன் நாக்கையும்,

    கபடான வார்த்தைகளுக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து,

    11 தீமைகளைவிட்டு நீங்கி, நன்மைசெய்து,

    சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரவேண்டும்.

    12 கர்த்தருடைய கண்கள் நீதிமான்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது,

    அவருடைய காதுகள் அவர்களுடைய வேண்டுதல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது;

    தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் எதிராக இருக்கிறது.”

    13 நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்?

  40. 5 இப்படியிருக்க, நீங்கள் அதிக கவனம் உள்ளவர்களாக உங்களுடைய விசுவாசத்தோடு தைரியத்தையும், தைரியத்தோடு ஞானத்தையும், 6 ஞானத்தோடு இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடு பொறுமையையும், பொறுமையோடு தேவபக்தியையும், 7 தேவபக்தியோடு சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடு அன்பையும் காட்டுங்கள்.

  41. 11 கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும்

    வல்லமையையும் பெற்றுக்கொள்கிறதற்குத் தகுதி உடையவராக இருக்கிறீர்;

    நீரே எல்லாவற்றையும் படைத்தீர்,

    உம்முடைய விருப்பத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும்

    படைக்கப்பட்டவைகளுமாக இருக்கிறது” என்றார்கள்.

  42. 4 “அவர் கன்மலை;

    அவருடைய செயல் உத்தமமானது;

    அவருடைய வழிகளெல்லாம் நியாயம்,

    அவர் அநீதி இல்லாத சத்தியமுள்ள தேவன்;

    அவர் நீதியும் செம்மையுமானவர்.

  43. 8 யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்;

    அவர்மேல் நம்பிக்கையாக இருக்கிற மனிதன் பாக்கியவான்.

  44. 10 பாபிலோனில் எழுபது வருடங்கள் முடிந்தபின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்திற்குத் திரும்பிவரச்செய்ய உங்கள்மேல் என் நல்வார்த்தையை நிறைவேறச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார். 11 நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுப்பதற்காக நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்திற்கு உகந்த நினைவுகளே. 12 அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்செய்வீர்கள்; நான் உங்கள் விண்ணப்பத்தை கேட்பேன். 13 உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடுவீர்கள் என்றால், என்னைத் தேடும்போது கண்டுபிடிப்பீர்கள்.

  45. 17 ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகா பலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய கரத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மால் செய்யமுடியாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.

  46. 25 அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். 26 ஆம், பிதாவே! இப்படிச்செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது. 27 எல்லாம் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதாவைத்தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்குப் பிதாவை வெளிப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைத்தவிர, வேறொருவனும் பிதாவை அறியமாட்டான்.

  47. 3 ஒன்றான உண்மை தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

  48. 21 இப்படியிருக்க, நியாயப்பிரமாணம் இல்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதற்கு நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியாக இருக்கிறது. 22 அது இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே வரும் தேவநீதியே; விசுவாசிக்கிற எல்லோருக்குள்ளும் எவர்கள் மேலும் அது வரும், வித்தியாசமே இல்லை. 23 எல்லோரும் பாவம்செய்து, தேவமகிமை இல்லாதவர்களாகி, 24 இலவசமாக அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; 25 தேவன் பொறுமையாக இருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களை அவர் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிப்பதற்காகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவிடம் விசுவாசமாக இருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாக காண்பிப்பதற்காகவும், இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிப்பதற்காகவும், 26 கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே வரும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்.

  49. 14 நீங்கள் முன்பே உங்களுடைய அறியாமையினாலே, உங்களுக்குள் இருந்த இச்சைகளின்படி இனி நடக்காமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாக இருந்து, 15 உங்களை அழைத்தவர் பரிசுத்தராக இருக்கிறதுபோல, நீங்களும் உங்களுடைய நடக்கைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருங்கள். 16 நான் பரிசுத்தர், ஆகவே, நீங்களும் பரிசுத்தமாக இருங்கள் என்று எழுதியிருக்கிறதே.

  50. 8 இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், துவக்கமும், முடிவுமாக இருக்கிறேன் என்று உரைக்கிறார்.

  51. 11 யெகோவாவே,

    தெய்வங்களில் உமக்கு ஒப்பானவர் யார்?

    பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும்,

    அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?

  52. 10 ஆகையால் தாவீது சபை அனைத்தின் கண்களுக்கு முன்பாகவும் யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் செலுத்திச் சொன்னது: எங்கள் முற்பிதாவாகிய இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, எல்லாக் காலங்களிலும் தேவரீருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. 11 யெகோவாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகள் எல்லாம் உம்முடையவைகள்; யெகோவாவே, ராஜ்ஜியமும் உம்முடையது; தேவரீர், எல்லோருக்கும் தலைவராக உயர்ந்திருக்கிறீர். 12 ஐசுவரியமும் புகழும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சக்தியும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும். 13 இப்போதும் எங்களுடைய தேவனே, நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்கிறோம். 14 இப்படி மனப்பூர்வமாகக் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் யார்? என்னுடைய மக்கள் யார்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.

  53. தாவீதின் பாடல்.

    1 பூமியும் அதின் நிறைவும்,

    உலகமும் அதிலுள்ள குடிமக்கள் யாவும் யெகோவாவுடையவை.

    2 ஏனெனில் அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி,

    அதை நதிகளுக்கு மேலாக நிறுவினார். 3 யார் யெகோவாவுடைய மலையில் ஏறுவான்?

    யார் அவருடைய பரிசுத்த இடத்தில் பிரவேசிப்பான்?

    4 கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் தூய்மை உள்ளவனுமாக இருந்து,

    தன்னுடைய ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடுக்காமலும்,

    பொய்யாக ஆணையிடாமலும் இருக்கிறவனே.

  54. 4 அவர் தம்முடைய மக்களை நியாயந்தீர்க்க

    உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்.

    5 பலியினாலே என்னோடு உடன்படிக்கை செய்த

    என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்.

    6 வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்;

    தேவனே நியாயாதிபதி. (சேலா)

    7 என்னுடைய மக்களே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே,

    உனக்கு விரோதமாகச் சாட்சி சொல்லுவேன்;

    நானே தேவன், உன்னுடைய தேவனாக இருக்கிறேன்.

    8 உன்னுடைய பலிகளுக்காக உன்னைக் கடிந்துக்கொள்ளமாட்டேன்;

    உன்னுடைய தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.

    9 உன்னுடைய வீட்டிலிருந்து காளைகளையும்,

    உன்னுடைய தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை.

    10 எல்லா காட்டு உயிரினங்களும், மலைகளில் ஆயிரமாயிரமாகத் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.

    11 மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்;

    வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.

    12 நான் பசியாக இருந்தால் உனக்குச் சொல்லமாட்டேன்;

    பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.

  55. லாமேட்.

    89 யெகோவாவே, உமது வசனம் என்றென்றைக்கும்

    வானங்களில் நிலைத்திருக்கிறது.

    90 உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்;

    பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது.

    91 உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்த நாள்வரைக்கும் நிற்கிறது;

    அனைத்தும் உம்மைச் சேவிக்கும்.

  56. 9 முன்பு ஆரம்பகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை. 10 முடிவிலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் ஆரம்பகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,

  57. 10 யெகோவாவோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய கடுங்கோபத்தை மக்கள் சகிக்கமாட்டார்கள். 11 வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராமல் அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.

  58. 26 ஏனென்றால், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராக இருக்கிறதுபோல, குமாரனும் தம்மில் தாமே ஜீவனுடையவராக இருக்கும்படி அருள்செய்திருக்கிறார்.

  59. 10 ஏனென்றால், நற்செயல்களைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவிற்குள் உருவாக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாக இருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.

  60. 6 விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாக இருப்பது முடியாதகாரியம்; ஏனென்றால், தேவனிடம் சேருகிறவன் அவர் இருக்கிறார் என்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுக்கிறவர் என்றும் விசுவாசிக்கவேண்டும்.

  61. 1 நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரியது என்று உணர்ந்து பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.

  62. 3 தேவனிடத்தில் அன்‌புகூறுவது என்பது அவருடைய கட்டளைகளைக் கடைபிடிப்பதே ஆகும்; அவருடைய கட்டளைகள் பாரமானவைகளும் இல்லை.

  63. 1 பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் பார்த்தேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; கடலும் இல்லாமல்போனது. 2 யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்திலிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருவதைப் பார்த்தேன்; அது தன் கணவனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. 3 மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனிதர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலம் இருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாக இருப்பார்; அவர்களும் அவருடைய மக்களாக இருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடு இருந்து அவர்களுடைய தேவனாக இருப்பார். 4 அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று சொன்னது.