78 Bible Verses About Stars

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

Bible Verses About Stars
  1. 1 ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, 2 “யூதர்களுக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைத் தொழுதுகொள்ள வந்தோம்” என்றார்கள். 3 ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். 4 அவன் பிரதான ஆசாரியர்கள், மக்களின் வேதபண்டிதர்கள் எல்லோரையும் கூடிவரச்செய்து: “கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று” அவர்களிடத்தில் விசாரித்தான். 5 அதற்கு அவர்கள்: “யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அது ஏனென்றால்: 6 யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் மக்களாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது” என்றார்கள். 7 அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாக அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாக விசாரித்து: 8 நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாக விசாரியுங்கள்; நீங்கள் பிள்ளையைக் கண்டபின்பு, நானும் வந்து பிள்ளையைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களை பெத்லகேமுக்கு அனுப்பினான். 9 ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகும்போது, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. 10 அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். 11 அவர்கள் அந்த வீட்டிற்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாக விழுந்து பிள்ளையைப் பணிந்துகொண்டு, தங்களுடைய பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாக வைத்தார்கள். 12 பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாம் என்று கனவில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறுவழியாகத் தங்களுடைய நாட்டிற்குத் திரும்பிப்போனார்கள்.

  2. 14 பின்பு தேவன்: “பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகட்டும்” என்றார். மேலும் அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருடங்களையும் குறிக்கிறதற்காகவும் இருப்பதாக” என்றார். 15 “அவைகள் பூமியின்மேல் பிரகாசிப்பதற்காக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாக இருக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது. 16 தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். 17 அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், 18 பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்திற்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். 19 சாயங்காலமும் விடியற்காலமுமாகி நான்காம் நாள் முடிந்தது.

  3. 7 அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்;

    அவர் நட்சத்திரங்களை மறைத்துப்போடுகிறார்.

    8 அவர் ஒருவரே வானங்களை விரித்து,

    சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர்.

    9 அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும், மிருகசீரிஷத்தையும்,

    அறுமீனையும், தெற்கு மண்டலங்களையும் உண்டாக்கினவர்.

    10 ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும்,

    எண்ணமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.

  4. 16 தமது வலது கையிலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயில் இருந்து இரண்டு பக்கமும் கூர்மையான வாள் புறப்பட்டு வந்தது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போல இருந்தது. 17 நான் அவரைப் பார்த்தபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலது கையை என்மேல் வைத்து, என்னைப் பார்த்து: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாக இருக்கிறேன்; 18 மரித்தேன், ஆனாலும், இதோ, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன், ஆமென்; நான் மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை வைத்திருக்கிறேன். 19 நீ பார்த்தவைகளையும் இருக்கிறவைகளையும், இவைகளுக்குப் பின்பு நடக்கப்போகிறவைகளையும் எழுது; 20 என் வலது கையில் நீ பார்த்த ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்கள்; நீ பார்த்த ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகள்.

  5. 9 இதோ, தேசத்தைப் பாழாக்கி, அதின் பாவிகளை அதிலிருந்து அழிப்பதற்காகக் யெகோவாவுடைய நாள் கடுமையும், மூர்க்கமும், மிகுந்த கோபமுமாக வருகிறது. 10 வானத்தின் நட்சத்திரங்களும் விண்மீன்களும் ஒளி கொடாமலிருக்கும்; சூரியன் உதிக்கும்போது இருண்டுபோகும்; சந்திரன் ஒளி கொடாமலிருக்கும்.

  6. 2 அவருடைய தூதர்களே,

    நீங்கள் அனைவரும் அவரைத் துதியுங்கள்;

    அவருடைய சேனைகளே, நீங்கள் அனைவரும் அவரைத் துதியுங்கள்.

    3 சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்;

    பிரகாசமுள்ள எல்லா நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள்.

    4 வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்;

    வானத்தின் மேலுள்ள தண்ணீர்களே,

    அவரைத் துதியுங்கள்.

    5 அவைகள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்;

    அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.

    6 அவர் அவைகளை என்றைக்குமுள்ள எல்லாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்;

    மாறாத கட்டளையை அவைகளுக்கு நியமித்தார்.

  7. 3 இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்,

    அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.

    4 அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி,

    அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார்.

    5 நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்;

    அவருடைய அறிவு அளவில்லாதது.

  8. 3 உமது விரல்களின் செயல்களாகிய உம்முடைய வானங்களையும்,

    நீர் அமைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,

    4 மனிதனை நீர் நினைக்கிறதற்கும்,

    மனுக்குலத்தை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.

    5 நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்;

    மகிமையினாலும், மரியாதையினாலும் அவனை முடிசூட்டினீர்.

  9. 3 ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.

  10. 17 அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல;

    அவரைத் தரிசிப்பேன், அருகாமையில் அல்ல;

    ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும்,

    ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்;

    அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி,

    சேத் சந்ததி எல்லோரையும் நிர்மூலமாக்கும்.

  11. 6 தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்;

    அவர் கிருபை என்றுமுள்ளது.

    7 பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்;

    அவர் கிருபை என்றுமுள்ளது;

    8 பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்;

    அவர் கிருபை என்றுமுள்ளது.

    9 இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்;

    அவர் கிருபை என்றுமுள்ளது;

  12. 1 இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, யெகோவாவுடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: “ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாக இருக்கிறேன்” என்றார். 2 அதற்கு ஆபிராம்: “யெகோவா ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் குழந்தையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரைச் சேர்ந்த இந்த எலியேசர் என் வீட்டைப் பராமரிக்கிறவனாக இருக்கிறானே” என்றான். 3 பின்னும் ஆபிராம்: “தேவரீர் எனக்கு வாரிசு அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்கு வாரிசாக இருக்கிறான்” என்றான். 4 அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: “இவன் உனக்கு வாரிசு அல்ல, உனக்குப் பிறப்பவனே உனக்கு வாரிசு ஆவான்” என்று சொல்லி, 5 அவர் அவனை வெளியே அழைத்து: “நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை உன்னாலே எண்ணமுடியுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: “உன் சந்ததி இந்தவிதமாக இருக்கும்” என்றார். 6 அவன் யெகோவாவை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாகக் கருதினார்.

  13. 16 இவைகளை சபைகளில் உங்களுக்குச் சாட்சியாக தெரிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும், வம்சமும், பிரகாசமுள்ள விடியற்கால நட்சத்திரமுமாக இருக்கிறேன்” என்றார்.

  14. 8 அவர் நட்சத்திரங்களையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர்; அவர் மரணஇருளை அதிகாலையாக மாற்றி, பகலை இரவாக அந்தகாரப்படுத்துகிறவர்; அவர் கடலின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியின் பரப்பின்மேல் ஊற்றுகிறவர்; யெகோவா என்பது அவருடைய நாமம். 9 பாதுகாப்பான இடத்தின்மேல் அழிவு வரும்படியாக, அவர் கொள்ளை கொடுத்தவனைப் பலத்தவனுக்கு விரோதமாக இலகுவடையச் செய்கிறவர்.

  15. 39 எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனிதர்களுடைய மாம்சம் வேறு, மிருகங்களுடைய மாம்சம் வேறு, மீன்களுடைய மாம்சம் வேறு, பறவைகளுடைய மாம்சம் வேறு. 40 வானத்திற்குரிய மேனிகளும் உண்டு, பூமிக்குரிய மேனிகளும் உண்டு; வானத்திற்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறு, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறு; 41 சூரியனுடைய மகிமையும் வேறு, சந்திரனுடைய மகிமையும் வேறு, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறு, மகிமையிலே நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.

  16. 10 மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றில் ஒருபங்கின்மேலும், நீரூற்றுகளின்மேலும் விழுந்தது. 11 அந்த நட்சத்திரத்திற்கு எட்டி என்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கு எட்டியைப்போலக் கசப்பானது; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனிதர்களில் அநேகர் மரித்தார்கள். 12 நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றில் ஒருபங்கும், சந்திரனில் மூன்றில் ஒருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றில் ஒருபங்கும் சேதமானது, அவைகளில் மூன்றில் ஒரு பங்கு இருள் அடைந்தது; பகலிலும் மூன்றில் ஒரு பங்கு பிரகாசம் இல்லாமல்போனது, இரவிலும் அப்படியே ஆனது.

  17. 15 “யெகோவா ஓரேபிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடன் பேசின நாளில், நீங்கள் ஒரு உருவத்தையும் காணவில்லை. 16 ஆகையால் நீங்கள் உங்களைக் கெடுத்துக்கொண்டு, ஆண் உருவமும், பெண் உருவமும், 17 பூமியிலிருக்கிற எந்தவொரு மிருகத்தின் உருவமும், ஆகாயத்தில் பறக்கிற இறக்கையுள்ள எந்தவொரு உருவமும், 18 பூமியிலுள்ள எந்தவொரு ஊரும் பிராணியின் உருவமும், பூமியின்கீழ் தண்ணீரிலுள்ள எந்தவொரு உயிரினத்தின் உருவமாயிருக்கிற இவைகளில் எந்தவொரு உருவத்திற்கும் ஒப்பான சிலையை உங்களுக்கு உண்டாக்காமல், 19 உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய யெகோவா வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா மக்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுதுவணங்க சம்மதிக்காமல், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள். 20 இந்நாளில் நீங்கள் இருக்கிறதுபோல, தமக்குச் சொந்தமான மக்களாயிருக்க, யெகோவா உங்களைச் சேர்த்துக்கொண்டு, உங்களை எகிப்து என்னும் இரும்பை உருக்கும் உலையிலிருந்து புறப்படச்செய்தார்.

  18. 1 அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு பெண் சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் தலையின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன. 2 அவள் கர்ப்பவதியாக இருந்து, பிரசவவேதனையடைந்து, குழந்தைபெறும்படி கதறி அழுதாள். 3 அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு கிரீடங்களையுடைய சிவப்பான பெரிய இராட்சசப் பாம்பு இருந்தது. 4 அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளியது; பிரசவவேதனைப்படுகிற அந்தப் பெண் குழந்தைபெற்றவுடனே, அவளுடைய குழந்தையைக் கொன்றுபோடுவதற்காக அந்த இராட்சசப் பாம்பு அவளுக்கு முன்பாக நின்றது.

  19. 42 அப்பொழுது தேவன் அவர்களைவிட்டு விலகி, வானத்தின் கோள்களுக்கு ஆராதனைசெய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து:

    இஸ்ரவேல் வம்சத்தாரே,

    நீங்கள் வனாந்திரத்திலிருந்த நாற்பது வருடங்கள்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும்,

    43 பணிந்துகொள்ளும்படி

    நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும்,

    உங்களுடைய தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே;

    ஆகவே, உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன்’ என்றும் தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதே.

  20. 26 ஜெயம்பெற்று கடைசிவரைக்கும் நான் செய்த காரியங்களைச் செய்கிறவன் எவனோ அவனுக்கு நான் என் பிதாவிடம் இருந்து அதிகாரம் பெற்றதுபோல, தேசங்களின் மக்கள்மேல் அதிகாரம் கொடுப்பேன். 27 அவன் இரும்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள். 28 விடியற்கால நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.

  21. 31 அறுமீன் நட்சத்திரத்தின் அழகின் ஒற்றுமையை நீ இணைக்கமுடியுமோ?

    அல்லது விண்மீன் குழுவை கலைப்பாயோ?

    32 நட்சத்திரங்களை அதினதின் காலத்திலே வரவைப்பாயோ?

    துருவமண்டலத்தின் நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?

    33 வானத்தின் அமைப்பை நீ அறிவாயோ?

    அது பூமியை ஆளும் ஆளுகையை நீ திட்டமிடுவாயோ?

  22. 26 உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் படையை பெரிய கூட்டமாகப் புறப்படச்செய்து, அவைகளையெல்லாம் பெயர்சொல்லி அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது. 27 யாக்கோபே, இஸ்ரவேலே: என் வழி யெகோவாவுக்கு மறைவானது என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ ஏன் சொல்லவேண்டும்? 28 பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது. 29 சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகச்செய்கிறார்.

  23. 25 இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்திரத்திலே இருந்த நாற்பது வருடங்கள்வரையில் பலிகளையும், காணிக்கைகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ? 26 நீங்கள் உங்களுக்கு உண்டாக்கின மோளோகுடைய கூடாரத்தையும், உங்களுடைய தெய்வங்களின் நட்சத்திர ராசியாகிய உங்களுடைய சிலைகளின் பல்லக்கையும் சுமந்துகொண்டு வந்தீர்களே. 27 ஆகையால் உங்களைத் தமஸ்குவுக்கு அப்பால் குடிபோகச்செய்வேன் என்று சேனைகளுடைய தேவன் என்னும் நாமமுள்ள யெகோவா சொல்லுகிறார்.

  24. இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.

    1 வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன,

    ஆகாய விரிவு அவருடைய கைகளின் செயல்களை அறிவிக்கிறது.

    2 பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது,

    இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.

    3 அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை,

    அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.

    4 ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும்,

    அவைகளின் வசனங்கள் உலகின் கடைசிவரைக்கும் செல்லுகின்றன;

    அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை உண்டாக்கினார்.

    5 அது தன்னுடைய மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல் இருக்கிறது,

    பெலசாலியைப்போல் தன்னுடைய பாதையில் ஓட மகிழ்ச்சியாக இருக்கிறது.

    6 அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு,

    அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது;

    அதின் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை.

  25. 12 அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! தேசங்களை கீழ்ப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! 13 நான் வானத்திற்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் மலையிலே வீற்றிருப்பேன் என்றும்,

  26. 13 உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் சோதிடர்களும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னைத் தப்புவித்துக் காப்பாற்றட்டும். 14 இதோ, அவர்கள் பதரைப்போல் இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்; அவர்கள் தங்கள் உயிரை நெருப்புத்தழலினின்று விடுவிப்பதில்லை; அது குளிர்காயத்தக்க தழலுமல்ல; எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல. 15 உன் சிறுவயதுமுதல் நீ பிரயாசப்பட்டு எவர்களுடன் வியாபாரம்செய்தாயோ, அவர்களும் அப்படியே இருப்பார்கள்; அவரவர் தங்கள் போக்கிலே போய் அலைவார்கள்; உன்னை காப்பாற்றுவார் இல்லை.

  27. 4 நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்?

    நீ அறிவாளியானால் அதைச் சொல்.

    5 அதற்கு அளவு குறித்தவர் யார்?

    அதின்மேல் நூல்போட்டவர் யார்?

    இதை நீ அறிந்திருந்தால் சொல்.

    6 அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது?

    அதின் மூலைக்கல்லை வைத்தவர் யார்?

    7 அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஒன்றாகப்பாடி,

    தேவமகன்கள் எல்லோரும் கெம்பீரித்தார்களே.

  28. 8 அதைப்போலவே, சொப்பனக்காரர்களாகிய இவர்களும் சரீரத்தை அசுத்தப்படுத்திக்கொண்டு, கர்த்தரின் அதிகாரத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களை அவமதிக்கிறார்கள். 9 பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசோடு வாக்குவாதம்பண்ணினபோது, அவனை அவமதித்து குற்றப்படுத்தத் துணிவில்லாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று சொன்னான். 10 இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளை அவமதிக்கிறார்கள்; புத்தி இல்லாத மிருகங்களைப்போல சுபாவத்தின்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள். 11 இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே வேகமாக ஓடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள். 12 இவர்கள் உங்களுடைய அன்பின் விருந்துகளில் கறைகளாக இருந்து, பயம் இல்லாமல் விருந்து சாப்பிட்டு, தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்கிற மேய்ப்பராக இருக்கிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடிபட்டு ஓடுகிற தண்ணீர் இல்லாத மேகங்களும், இலைகள் உதிர்ந்து, கனிகள் இல்லாமல் இரண்டுமுறை காய்ந்தும் வேர் இல்லாத மரங்களும், 13 தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது.

  29. 7 உன்னை நான் அணைத்துப்போடும்போது, வானத்தை மூடி, அதின் நட்சத்திரங்களை இருண்டு போகச்செய்வேன்; சூரியனை மேகத்தினால் மூடுவேன், சந்திரனும் தன்னுடைய ஒளியைக் கொடுக்காமல் இருக்கும். 8 நான் வானஜோதியான விளக்குகளையெல்லாம் உன்மேல் இருண்டு போகச்செய்து, உன்னுடைய தேசத்தின்மேல் இருளை வரச்செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

  30. 29 அந்தநாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் இருளடையும், சந்திரன் ஒளியைக் கொடுக்காமல் இருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் வல்லமைகள் அசைக்கப்படும். 30 அப்பொழுது மனிதகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனிதகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள எல்லாக் கோத்திரத்தார்களும் கண்டு புலம்புவார்கள்.

  31. 10 அவைகளுக்கு முன்பாக பூமி அதிரும்; வானங்கள் அசையும்; சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்; நட்சத்திரங்கள் ஒளி மங்கும். 11 யெகோவா தமது படைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய முகாம் மகா பெரியது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; யெகோவாவுடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாக இருக்கும்; அதைச் சகிக்கிறவன் யார்?

  32. 24 அந்த நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப்பின்பு, சூரியன் இருள் அடையும், சந்திரன் ஒளியைக் கொடுக்காது; 25 வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களில் உள்ள அதிகார வல்லமைகள் அசைக்கப்படும். 26 அப்பொழுது மனிதகுமாரன் அதிக வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைப் பார்ப்பார்கள். 27 அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களை பூமியின் கடைசிமுனையிலிருந்து, வானத்தின் கடைசிமுனை வரைக்கும் உள்ள நான்கு திசைகளிலும் இருந்து கூட்டிச் சேர்ப்பார்.

  33. 19 அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்களுடைய இருதயங்களில் உதிக்கும்வரைக்கும் இருள் உள்ள இடத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அந்த வசனத்தைக் கவனித்திருப்பது நலமாக இருக்கும். 20 வேதத்தில் உள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் தீர்க்கதரிசியினுடைய சொந்த விளக்கமாக இருக்காது என்று நீங்கள் முதலில் அறியவேண்டும். 21 தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனிதர்களுடைய விருப்பத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனிதர்கள் பரிசுத்த ஆவியானவராலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.

  34. 4 பின்பு ராஜா: பாகாலுக்கும் விக்கிரகத்தோப்புக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் செய்யப்பட்டிருந்த சகல பணிமுட்டுகளையும் யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து வெளியேற்ற, பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும் இரண்டாம் பகுதியிலுள்ள ஆசாரியர்களுக்கும் வாசல் காக்கிறவர்களுக்கும் கட்டளையிட்டு, அவைகளை எருசலேமுக்கு வெளியே கீதரோன் வெளிகளில் சுட்டெரித்து, அவைகளின் சாம்பலைப் பெத்தேலுக்குக் கொண்டுபோகச்செய்தான். 5 யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமைச் சுற்றிலும் மேடைகளின்மேல் தூபம்காட்ட, யூதாவின் ராஜாக்கள் வைத்த பூசாரிகளையும், பாகாலுக்கும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகங்களுக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் தூபம்காட்டினவர்களையும் அகற்றிவிட்டான்.

  35. 12 அவர் ஆறாம் முத்திரையை உடைப்பதைப் பார்த்தேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கருப்புக் கம்பளியைப்போலக் கருத்துப்போனது; சந்திரன் இரத்தம்போல ஆனது. 13 அத்திமரம் பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது. 14 வானமும் சுருட்டப்பட்ட புத்தகம்போல விலகிப்போனது; மலைகள் தீவுகள் எல்லாம் தங்களுடைய இடங்களைவிட்டு விலகிச்சென்றன.

  36. 15 சூரியனும், சந்திரனும் இருண்டுபோகும், நட்சத்திரங்கள் ஒளிமங்கும்.

  37. 10 உன்னுடன் கூடவந்த மனிதனுடைய கண்களுக்கு முன்பாக அந்தக் கலசத்தை உடைத்துப்போட்டு, 11 அவர்களை நோக்கி: திரும்பச் சரிசெய்யமுடியாத குயவனுடைய மண்பாத்திரத்தை உடைத்துப்போட்டவிதமாக, நான் இந்த மக்களையும் இந்த நகரத்தையும் உடைத்துப்போடுவேன்; புதைக்கிறதற்கு இடமில்லாததினால் தோப்பேத்தில் சவங்களைப் புதைப்பார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 12 இவ்விதமாக நான் இந்த இடத்திற்கும் இதின் குடிமக்களுக்கும் செய்து, இந்த நகரத்தைத் தோப்பேத்திற்குச் சரியாக்குவேன். 13 எந்த வீடுகளின்மேல் வானத்தின் எல்லா சேனைக்கும் தூபங்காட்டி, அந்நிய தெய்வங்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளாகிய எருசலேமின் வீடுகளும் யூதாவுடைய ராஜாவின் வீடுகளும் தோப்பேத் என்கிற இடத்தைப்போல் தீட்டுப்பட்டவைகளாக இருக்குமென்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

  38. 35 சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திரன், நட்சத்திரங்களை இரவு வெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கும் விதத்தில் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் யெகோவா என்னும் பெயருடைய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: 36 இந்த அமைப்புகள் எனக்கு முன்பாக இல்லாமல் ஒழிந்துபோனால், அப்பொழுது இஸ்ரவேல் சந்ததியும் எனக்கு முன்பாக என்றைக்கும் ஒரு தேசமாயிராமல் அகன்றுபோகும் என்று யெகோவா சொல்லுகிறார். 37 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: மேலே இருக்கிற வானங்கள் அளக்கப்படவும், கீழே இருக்கிற பூமியின் அஸ்திபாரங்கள் ஆராயமுடியுமானால், நான் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரையும் அவர்கள் செய்த எல்லாவற்றிக்காகவும் வெறுத்துவிடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

  39. 5 அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்;

    பூமி யெகோவாவுடைய கருணையினால் நிறைந்திருக்கிறது.

    6 யெகோவாவுடைய வார்த்தையினால் வானங்களும்,

    அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் அனைத்தும் உண்டாக்கப்பட்டது.

    7 அவர் கடலின் தண்ணீர்களைக் குவியலாகச் சேர்த்து,

    ஆழமான தண்ணீர்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார்.

    8 பூமியெல்லாம் யெகோவாவுக்குப் பயப்படுவதாக;

    உலகத்திலுள்ள குடிமக்களெல்லாம் அவருக்கு பயந்திருப்பதாக.

  40. 1 தேசங்களே, கேட்கிறதற்கு அருகில் வாருங்கள்; மக்களே, கவனியுங்கள்; பூமியும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதில் உற்பத்தியான யாவும் கேட்பதாக. 2 சகல தேசங்களின்மேலும் யெகோவாவுடைய கடுங்கோபமும், அவைகளுடைய சகல சேனைகளின்மேலும் அவருடைய உக்கிரமும் மூளுகிறது; அவர்களை அழிவிற்கு நியமித்து, கொலைக்கு ஒப்புக்கொடுக்கிறார். 3 அவர்களிலே கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியப்பட்டுக்கிடப்பார்கள்; அவர்களுடைய சடலங்கள் நாற்றமெடுக்கும்; அவர்களுடைய இரத்தத்தினாலே மலைகளும் கரைந்துபோகும். 4 வானத்தின் சர்வ சேனையும் கரைந்து, வானங்கள் புத்தகச்சுருளைப்போல் சுருட்டப்பட்டு, அவைகளின் சர்வசேனையும் திராட்சைச்செடியின் இலைகள் உதிர்வதுபோலவும், அத்திமரத்தின் காய்கள் உதிர்வதுபோலவும் உதிர்ந்து விழும்.

  41. 16 தங்கள் தேவனாகிய யெகோவாவின் கற்பனைகளையெல்லாம் விட்டுவிட்டு, இரண்டு கன்றுக்குட்டிகளாகிய வார்ப்பித்த விக்கிரகங்களைத் தங்களுக்கு உண்டாக்கி, விக்கிரகத் தோப்புகளை நாட்டி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு, பாகாலை வணங்கினார்கள். 17 அவர்கள் தங்கள் மகன்களையும் தங்கள் மகள்களையும் அக்கினியில் சுட்டெரித்துப்போட்டு, குறிகேட்டு சகுனங்கள் பார்த்து, யெகோவாவுக்குக் கோபமுண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்கிறதற்குத் தங்களை விற்றுப்போட்டார்கள். 18 ஆகையால் யெகோவா இஸ்ரவேலின்மேல் மிகவும் கோபமடைந்து, அவர்களைத் தம்முடைய முகத்தைவிட்டு அகற்றினார்; யூதா வம்சம் மாத்திரமே மீதியானது. 19 யூதா மக்களும் தங்கள் தேவனாகிய யெகோவாவின் கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் இஸ்ரவேல் உண்டாக்கின வழிபாடுகளில் நடந்தார்கள். 20 ஆகையால் யெகோவா இஸ்ரவேல் சந்ததியாரையெல்லாம் புறக்கணித்து, அவர்களைத் தமது முகத்தைவிட்டுத் தள்ளும்வரை ஒடுக்கி, அவர்களைக் கொள்ளைக்காரர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.

  42. 1 அக்காலத்தில் யூதாவினுடைய ராஜாக்களின் எலும்புகளையும், அவர்களுடைய பிரபுக்களின் எலும்புகளையும், ஆசாரியர்களின் எலும்புகளையும், தீர்க்கதரிசிகளின் எலும்புகளையும் எருசலேமுடைய குடிமக்களின் எலும்புகளையும், அவர்களுடைய கல்லறைகளிலிருந்து எடுத்து, 2 அவர்கள் நேசித்ததும், சேவித்ததும், பின்பற்றினதும், தேடினதும், பணிந்துகொண்டதுமாயிருந்த சூரியனுக்கும், சந்திரனுக்கும், வானத்தின் சர்வசேனைக்கும் முன்பாக அவைகளைப் பரப்பிவைப்பார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; அவைகள் வாரி அடக்கம்செய்யப்படாமல் பூமியின்மேல் எருவாகும். 3 இந்தத் துஷ்ட வம்சத்தில் மீதியாயிருந்து, என்னால் எல்லா இடங்களிலும் துரத்திவிடப்பட்டு மீந்திருக்கிற யாவருக்கும், ஜீவனைப்பார்க்கிலும் மரணமே விருப்பமாயிருக்குமென்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

  43. 10 அது வானத்தின் சேனைவரை வளர்ந்து, அதின் சேனையாகிய நட்சத்திரங்களில் சிலவற்றை பூமியிலே விழச்செய்து, அவைகளை மிதித்தது.

  44. 15 யெகோவாவுடைய தூதனானவர் இரண்டாவது முறை வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு: 16 “நீ உன் மகன் என்றும், உனது ஒரேமகன் என்றும் பார்க்காமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்ததால்; 17 நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்திலுள்ள நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகச்செய்வேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் எதிரிகளின் வாசல்களைச் சொந்தமாக்கிக் கொள்ளுவார்கள் என்றும், 18 நீ என்னுடைய சொல்லுக்குக் கீழ்ப்படிந்ததால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள அனைத்து தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றார்.

  45. 1 அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக:

    2 “அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது;

    அவர் தமது உன்னதமான இடங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்.

    3 அவருடைய படைகளுக்குத் தொகையுண்டோ?

    அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது?

    4 இப்படியிருக்க, மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி?

    பெண்ணிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?

    5 சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசிக்காமலிருக்கிறது;

    நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.

    6 புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுமக்களும் எம்மாத்திரம்” என்றான்.

  46. 4 நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லா மக்களின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடு கூட கெம்மரீம் என்பவர்களின் பெயரையும், 5 வீடுகளின்மேல் வானசேனையை வணங்குகிறவர்களையும், யெகோவாவின் பெயரில் ஆணையிட்டு, மல்காமின் தெய்வத்தின் பெயரிலும் ஆணையிட்டு வணங்குகிறவர்களையும், 6 யெகோவாவைவிட்டுப் பின்வாங்குகிறவர்களையும், யெகோவாவை தேடாமலும், அவரைக்குறித்து விசாரிக்காமலும் இருக்கிறவர்களையும், இவ்விடத்தில் இராதபடிக்கு அழியச்செய்வேன்.

  47. 12 ஆகவே, எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்கு அருகில் இருக்கும்பொழுது மட்டுமில்லை, நான் தூரத்தில் இருக்கும்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்களுடைய இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். 13 ஏனென்றால், தேவனே தம்முடைய தயவுள்ள விருப்பத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராக இருக்கிறார். 14 நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதும் இல்லை என்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள், 15 கோணலும் மாறுபாடுமான வம்சத்தின் நடுவிலே குற்றம் இல்லாதவர்களும் கபடு இல்லாதவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளாக இருப்பதற்கு, 16 எல்லாவற்றையும் முறுமுறுப்பு இல்லாமலும் வாக்குவாதம் இல்லாமலும் செய்யுங்கள்.

  48. 22 உன் முற்பிதாக்கள் எழுபதுபேராக எகிப்திற்குப் போனார்கள்; இப்பொழுதோ உன் தேவனாகிய யெகோவா உன்னுடைய பெருக்கத்திலே வானத்தின் நட்சத்திரங்களைப் போலாக்கினார்.

  49. 2 “உன் தேவனாகிய யெகோவாவின் கண்களுக்கு முன்பாக எந்த ஆணாவது பெண்ணாவது உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற வாசல்கள் ஒன்றில் அக்கிரமம்செய்து, அவருடைய உடன்படிக்கையை மீறி, 3 நான் விலக்கியிருக்கிற வேறே தெய்வங்களையாவது, சந்திரன் சூரியன் முதலான வானசேனைகளையாவது பணிந்து, அவைகளை வணங்குகிறதாகக் காணப்பட்டால், 4 அது உன் காதுகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாக விசாரிக்கவேண்டும்; அது உண்மையென்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் காண்பாயானால், 5 அந்த அக்கிரமத்தைச்செய்த ஆணையும் பெண்ணையும் உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறிவாயாக. 6 சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலை செய்யப்படக்கடவன்; ஒரே சாட்சியினுடைய வாக்கினால் அவனைக் கொலைசெய்யக்கூடாது. 7 அவனைக் கொலை செய்கிறதற்குச் சாட்சிகளுடைய கைகள் முந்தியும் எல்லா மக்களுடைய கைகள் பிந்தியும் அவன்மேல் இருப்பதாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.

  50. 1 மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; அவனுடைய தாயின் பெயர் எப்சிபாள். 2 யெகோவா இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்தின மக்களுடைய அருவருப்புகளின்படியே, அவன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, 3 தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகாலுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் செய்ததுபோல விக்கிரகத்தோப்பை உண்டாக்கி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு அவைகளை வணங்கினான். 4 எருசலேமிலே என் நாமத்தை விளங்கச்செய்வேன் என்று யெகோவா சொல்லிக் குறித்த யெகோவாவுடைய ஆலயத்திலே அவன் பலிபீடங்களைக் கட்டி, 5 யெகோவவுடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டி, 6 தன் மகனைப் பலியாக அக்கினியில் சுட்டெரித்து, நாள் நட்சத்திரம் பார்க்கிறவனுமாயிருந்து, ஜோதிடம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, யெகோவாவுக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாகச் செய்தான்.

  51. 23 இஸ்ரவேலை வானத்தின் நட்சத்திரங்கள்போல பெருகச்செய்வேன் என்று யெகோவா சொல்லியிருந்ததால், தாவீது இருபது வயதுமுதல் அதற்குக் கீழுள்ளவர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கவில்லை.

  52. 6 நீர் ஒருவரே யெகோவா; நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்; வானசேனைகள் உம்மை பணிந்துகொள்ளுகிறது.

  53. 8 விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் உரிமைப்பங்காகப் பெறப்போகிற இடத்திற்குப் போக அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் எதுவென்று தெரியாமல் புறப்பட்டுப்போனான். 9 விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே அந்நியனைப்போல வாழ்ந்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் வாரிசாகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்; 10 ஏனென்றால், தேவனே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்கள் உள்ள நகரத்திற்கு அவன் காத்திருந்தான். 11 விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவர் என்று எண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலன் பெற்று, வயதானவளாக இருந்தும் குழந்தைப் பெற்றாள். 12 எனவே, சரீரம் செத்தவன் என்று நினைக்கப்படும் ஒருவனாலே, வானத்தில் உள்ள அதிகமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையில் உள்ள எண்ணமுடியாத மணலைப்போலவும் அதிக மக்கள் பிறந்தார்கள்.

  54. 9 அவன் வேறொரு கனவு கண்டு, தன் சகோதரர்களை நோக்கி: “நான் இன்னும் ஒரு கனவைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது” என்றான். 10 இதை அவன் தன்னுடைய தகப்பனுக்கும், சகோதரர்களுக்கும் சொன்னபோது, அவனுடைய தகப்பன் அவனைப் பார்த்து: “நீ கண்ட இந்தக் கனவு என்ன? நானும் உன்னுடைய தாயாரும், சகோதரர்களும் தரைவரைக்கும் குனிந்து உன்னை வணங்கவருவோமோ” என்று அவனைக் கடிந்துகொண்டான்.

  55. 1 ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.

  56. 11 இஸ்ரவேலின் பரிசுத்தரும் அவனை உருவாக்கினவருமாகிய யெகோவா சொல்கிறதாவது: வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்; என் பிள்ளைகளைக்குறித்தும், என் கரங்களின் கிரியைகளைக்குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள். 12 நான் பூமியை உண்டாக்கி, நானே அதின்மேல் இருக்கிற மனிதனைப் படைத்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்.

  57. 1 எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலது கையில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் நடுவிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது; 2 நீ செய்தவைகளையும், உன் கடினஉழைப்பையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகித்துக்கொள்ளமுடியாமல் இருக்கிறதையும், அப்போஸ்தலர்களாக இல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலர்கள் என்று சொல்லுகிறதை நீ சோதித்துப்பார்த்து அவர்கள் பொய்யர்கள் என்பதைக் கண்டுபிடித்ததையும்; 3 நீ சகித்துக்கொண்டு இருக்கிறதையும், பொறுமையாக இருக்கிறதையும், என் நாமத்திற்காக ஓய்வு இல்லாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன். 4 ஆனாலும், நீ ஆரம்பத்திலே வைத்திருந்த அன்பைவிட்டுவிட்டாய் என்று உன்மேல் எனக்குக் குறை உண்டு. 5 எனவே, நீ எந்த நிலைமையில் இருந்து விழுந்தாய் என்பதை நினைத்து, மனம்திரும்பி, ஆதியில் செய்த செய்கைகளைச் செய்; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, நீ மனம்திரும்பவில்லை என்றால், உன் விளக்குத்தண்டை அதனிடத்திலிருந்து நீக்கிவிடுவேன். 6 நான் வெறுக்கிற நிக்கொலாய் மதத்தைச் சேர்ந்தவர்களின் செய்கைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்தில் உண்டு. 7 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவன் எவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் நடுவில் இருக்கிற ஜீவமரத்தின் கனியை உண்ணக்கொடுப்பேன் என்று எழுது.

  58. 21 இப்படியே நாங்கள் வேலைசெய்துகொண்டிருந்தோம்; அவர்களிலே பாதி ஆட்கள் கிழக்கு வெளுக்கும் நேரம்முதல் நட்சத்திரங்களை காணும்வரை ஈட்டிகளைப் பிடித்திருந்தார்கள். 22 அந்தச் சமயத்திலே நான் மக்களைப் பார்த்து: இரவில் நமக்குக் காவலுக்கும் பகலில் வேலைக்கும் உதவ, அவரவர் தங்கள் வேலைக்காரர்களோடு எருசலேமுக்குள்ளே இரவு தங்கவேண்டும் என்று சொல்லி, 23 நானோ, என்னுடைய சகோதரர்களோ, என்னுடைய வேலைக்காரர்களோ, என்னைப் பின்பற்றி காவல்காக்கிற வீரர்களோ எங்கள் உடைகளை மாற்றிக் கொள்ளாதிருந்தோம்; ஒவ்வொருவரும் தங்களிடத்தில் ஆயுதங்களையும் தண்ணீரையும் வைத்திருந்தார்கள்.

  59. 9 அதின் மறையும் காலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு,

    அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் தோன்றாமலும், விடியற்காலத்து வெளுப்பை அது பார்க்காமலும் இருப்பதாக.

  60. 12 தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ?

    நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.

  61. 22 வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் கடற்கரை மணல் அளக்கப்படாததுமாக இருக்கிறதுபோல, நான் என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் எனக்கு ஊழியம் செய்கிற லேவியரையும் பெருகச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றார்.

  62. 25 சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள மக்களுக்குத் தத்தளிப்பும் இக்கட்டும் உண்டாகும்; கடலும் அலைகளும் முழக்கமாக இருக்கும். 26 வானத்தின் கோள்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துக்களுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனிதர்களுடைய இருதயம் சோர்ந்துபோகும். 27 அப்பொழுது மனிதகுமாரன் அதிக வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைப் பார்ப்பார்கள்.

  63. 20 அநேகநாளாகச் சூரியனாவது நட்சத்திரங்களாவது காணப்படாமல், மிகுந்த பெருங்காற்றுமழையும் அடித்துக் கொண்டிருந்தபடியினால், இனித் தப்பிப்பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் இல்லாமல்போனது.

  64. 4 ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டதால்,

  65. 1 நீ உன்னுடைய வாலிப நாட்களில் உன்னைப் படைத்தவரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருடங்கள் சேராததற்குமுன்னும்., 2 சூரியனும், வெளிச்சமும், சந்திரனும், நட்சத்திரங்களும், இருளாகாமல் இருப்பதற்கு முன்னும், 3 மழைக்குப்பின் மேகங்கள் திரும்பத்திரும்ப வராததற்குமுன்னும், வீட்டுக் காவலாளிகள் தள்ளாடி, பெலசாலிகள் கூனிப்போய், எந்திரம் அரைக்கிறவர்கள் கொஞ்சமானதால் ஓய்ந்து, ஜன்னல் வழியாகப் பார்க்கிறவர்கள் இருண்டுபோகிறதற்குமுன்னும், 4  எந்திர சத்தம் நின்றதினால் தெருவாசலின் கதவுகள் அடைபட்டு, குருவியின் சத்தத்திற்கும் எழுந்திருக்கவேண்டியதாகி, இசைக்கும் பெண்களெல்லாம் உணர்வு இழப்பதற்குமுன்னும், 5 மேட்டுக்காக திகில் உண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி, வாதுமைமரம் பூப்பூத்து, வெட்டுக்கிளியும் பாரமாகி, வாழ்வதற்கான ஆசை அற்றுப்போகாததற்கு முன்னும், மனிதன் தன்னுடைய நித்திய வீட்டிற்குப் போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்குமுன்னும், 6 வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு, பொற்கிண்ணி நசுங்கி, ஊற்றின் அருகே சால் உடைந்து, துரவண்டையில் உருளை நொறுங்கி, 7 இந்தவிதமாக மண்ணானது தான் முன் இருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன்னுடைய வாலிபப்பிராயத்திலே நினை. 8 மாயை மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.

  66. 13 உமது ஊழியக்காரர்களாகிய ஆபிரகாமையும், ஈசாக்கையும், இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்களுடைய சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகச்செய்து, நான் சொன்ன இந்த தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார்கள் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படி, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டு அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே” என்று கெஞ்சிப் பிரார்த்தனை செய்தான்.

  67. 1 சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் வைத்திருப்பவர் சொல்லுகிறதாவது; உன் செய்கைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவன் என்று பெயர்பெற்றிருந்தும் செத்தவனாக இருக்கிறாய்.

  68. 10 உங்கள் தேவனாகிய யெகோவா உங்களைப் பெருகச்செய்தார்; இதோ, இந்நாளில் நீங்கள் வானத்தின் நட்சத்திரங்களைப்போல திரளாக இருக்கிறீர்கள்.

  69. 1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்.

  70. 16 பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது;

    தேவனே நீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர்.

  71. 19 சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்;

    சூரியன் தன்னுடைய மறையும் நேரத்தை அறியும்.

  72. 16 என்னைக் யெகோவாவுடைய ஆலயத்தின் உள்முற்றத்திற்கு கொண்டுபோனார்; இதோ, யெகோவாவுடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்கள், தங்களுடைய முதுகைக் யெகோவாவுடைய ஆலயத்திற்கும் தங்களுடைய முகத்தைக் கிழக்குத்திசைக்கும் நேராகத் திருப்பினவர்களாகக் கிழக்கே இருக்கும் சூரியனை வணங்கினார்கள். 17 அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்களுடைய தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சைக்கிளையைத் தங்களுடைய மூக்கிற்கு நேராகப் பிடிக்கிறார்கள். 18 ஆகையால் நானும் கடுங்கோபத்துடன் காரியத்தை நடத்துவேன்; என்னுடைய கண் தப்பவிடுவதில்லை, நான் இரங்குவதில்லை; அவர்கள் மகா சத்தமாக என்னுடைய காதுகள் கேட்கக் கூப்பிட்டாலும் அவர்களுக்கு நான் கேட்பதில்லை என்றார்.

  73. 3 தேவன் “வெளிச்சம் உண்டாகட்டும்,” என்றார், வெளிச்சம் உண்டானது. 4 வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். 5 தேவன் வெளிச்சத்திற்குப் பகல் என்றும், இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் முடிந்தது.

  74. 1 இந்தவிதமாக வானமும் பூமியும், அவைகளில் இருக்கிற அனைத்தயும் உண்டாக்கப்பட்டு முடிந்தன. பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் உண்டாக்கப்பட்ட வரலாறு இவைகளே. 2 தேவன் தாம் செய்த தம்முடைய செயலை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உருவாக்கும் தம்முடைய செயல்களையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். 3 தேவன் தாம் உருவாக்கும் தம்முடைய செயல்களையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்ததினால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

  75. 26 சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாகச் செல்லும்போதும்,

    நான் அதை நோக்கி:

    27 என் மனம் இரகசியமாக மயங்கி,

    என் வாய் என் கையை முத்தம் செய்ததுண்டானால்,

    28 இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்;

    அதினால் உன்னதத்திலிருக்கிற தேவனை மறுதலிப்பேனே.

  76. 5 யெகோவாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும்,

    பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும்.

  77. 31 யெகோவாவுடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருவதற்குமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

  78. 1 ஆரம்பத்திலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடம் இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது. 2 அவர் ஆரம்பத்திலே தேவனோடு இருந்தார். 3 எல்லாமும் அவர் மூலமாக உண்டானது; உண்டானது ஒன்றும் அவர் இல்லாமல் உண்டாகவில்லை.