74 Bible Verses About Promises

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

Bible Verses About Promises
  1. 13 ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடுவதற்கு தம்மைவிட பெரியவர் ஒருவரும் இல்லாததினாலே தமது நாமத்தினாலே ஆணையிட்டு: 14 நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார். 15 அப்படியே, அவன் பொறுமையாகக் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றுக்கொண்டான். 16 மனிதர்கள் தங்களைவிட பெரியவர்கள் பெயரில் ஆணையிடுவார்கள்; எல்லா விவாதங்களிலும் உறுதிப்படுத்துவதற்கு ஆணையிடுதலே முடிவு. 17 அப்படியே, தேவனும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாகக் காண்பிக்க விருப்பம் உள்ளவராக, ஒரு ஆணையினாலே அதை உறுதிப்படுத்தினார். 18 நமக்கு முன்பாக வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்வதற்கு அடைக்கலமாக ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதல் உண்டாவதற்கு, கொஞ்சம்கூட பொய் சொல்லாத தேவன் அப்படிச் செய்தார்.

  2. 16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். 17 உலகத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். 18 அவரை விசுவாசிக்கிறவன் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படமாட்டான்; விசுவாசிக்காதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசம் உள்ளவனாக இல்லாதபடியினால், அவன் தண்டனைத்தீர்ப்புக்கு உட்பட்டிருக்கிறான். 19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனிதர்களுடைய செயல்கள் தீமையானவைகளாக இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைவிட இருளை விரும்புகிறதே அந்த தண்டனைத் தீர்ப்புக்குக் காரணமாக இருக்கிறது. 20 தீங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் செய்கைகள் சுட்டி காட்டப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.

  3. 31 இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் மக்களுடனும் யூதா மக்களுடனும் புது உடன்படிக்கைசெய்வேன். 32 நான் அவர்கள் முற்பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவர கைப்பிடித்த நாளில் அவர்களுடன் செய்த உடன்படிக்கையைப்போல அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று யெகோவா சொல்லுகிறார். 33 அந்நாட்களுக்குப்பிறகு, நான் இஸ்ரவேல் மக்களுடன் செய்யப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்தில் வைத்து, அதை அவர்கள் இருதயத்தில் எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் மக்களாயிருப்பார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 34 இனி ஒருவன் தன் அருகில் உள்ளவனையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: யெகோவாவை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்வரை, எல்லோரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.

  4. 38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியானவரின் வரத்தைப் பெறுவீர்கள். 39 வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்களுடைய பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள அனைவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி;

  5. 9 தாமதம் பண்ணுகிறார் என்று சிலர் நினைக்கிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதம்பண்ணாமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனம்திரும்பவேண்டும் என்று விரும்பி, நம்மேல் நீடியபொறுமை உள்ளவராக இருக்கிறார்.

  6. 17 இப்படி நான் யோசித்தது வீணாக யோசித்தேனோ? அல்லது ஆம் ஆம் என்கிறதும், இல்லை இல்லை என்கிறதும், என்னிடத்திலே இருப்பதற்காக, நான் யோசிக்கிறவைகளை சரீரத்தின்படி யோசிக்கிறேனோ? 18 நாங்கள் உங்களுக்குச் சொன்ன வார்த்தை ஆம் என்றும் இல்லை என்றும் இல்லை; அதற்கு உண்மையுள்ள தேவனே சாட்சி. 19 என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும், இல்லை என்றும் இல்லாமல், ஆம் என்றே இருக்கிறார். 20 எங்களால் தேவனுக்கு மகிமை உண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவிற்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே. 21 உங்களோடு எங்களையும் கிறிஸ்துவிற்குள் உறுதிப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே. 22 அவர் நம்மை முத்திரை செய்து, நம்முடைய இருதயங்களில் ஆவியானவரை உத்திரவாதமாகக் கொடுத்திருக்கிறார்.

  7. 13 அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்கோ அல்லது அவன் வம்சத்திற்கோ நியாயப்பிரமாணத்தினால் கிடைக்காமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது. 14 நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்தவர்கள் வாரிசுகளானால் விசுவாசம் வீணாகப்போகும், வாக்குத்தத்தமும் இல்லாமல்போகும். 15 மேலும் நியாயப்பிரமாணம் கோபத்தை உண்டாக்குகிறது, நியாயப்பிரமாணம் இல்லை என்றால் கீழ்ப்படியாமையும் இல்லை. 16 எனவே, சுதந்திரமானது கிருபையினால் உண்டாகிறதாக இருப்பதற்காக அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்த வம்சத்தினர்களுக்குமட்டும் இல்லை, நம் எல்லோருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சேர்ந்தவர்களான எல்லா வம்சத்தினர்களுக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாக இருப்பதற்காக அப்படி வருகிறது.

  8. 1 நம்முடைய தேவனும் இரட்சகருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன்பேதுரு எழுதுகிறதாவது: 2 தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிந்துகொள்கிற அறிவின்‌ மூலமாக உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகட்டும்.

    3 தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய எல்லாவற்றையும், அவருடைய தெய்வீக வல்லமையானது நமக்குத் தந்தருளினது மட்டுமல்லாமல், 4 இச்சையினால் உலகத்தில் உள்ள தீமைக்குத் தப்பி, தெய்வீக சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாவதற்காக, அதிக மேன்மையும் அருமையான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

  9. 1 யெகோவா ஆபிராமை நோக்கி: “நீ உன் பிறந்த தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும்விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்குப் போ. 2 நான் உன்னைப் பெரிய இனமாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பெயரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாக இருப்பாய். 3 உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உன்மூலம் ஆசீர்வதிக்கப்படும்” என்றார். 4 யெகோவா ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான்; லோத்தும் அவனோடுகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, 75 வயதுள்ளவனாக இருந்தான்.

  10. 4 அன்றியும், அவர் அவர்களோடு கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் தண்ணீரினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாட்களுக்குள்ளே பரிசுத்த ஆவியானவராலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். 5 ஆகவே, நீங்கள் எருசலேமைவிட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.

  11. 23 அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுவதில் அசைவில்லாமல் உறுதியாக இருப்போம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராக இருக்கிறாரே.

  12. 22 பின்பு தேவன் சவுலைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தினார். ஈசாயின் மகனாகிய தாவீதை என் மனதிற்கு பிடித்தவனாகப் பார்த்தேன்; எனக்கு விருப்பமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்து சாட்சியும் சொன்னார். 23 அவனுடைய வம்சத்திலே தேவன் தமது வாக்குத்தத்தத்தின்படியே இஸ்ரவேலுக்கு இரட்சகராக இயேசுவை எழும்பப்பண்ணினார்.

  13. 24 ஆகவே, ஆரம்பமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கட்டும்; ஆரம்பமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்கள் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள். 25 நித்தியஜீவனை கொடுப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.

  14. 12 நீங்கள் பின்வாங்கிப்போய், உங்களுக்குள்ளே மீதியாக இருக்கிற இந்த மக்களோடு சேர்ந்துகொண்டு, அவர்களோடு சம்பந்தம் கலந்து, நீங்கள் அவர்களிடமும் அவர்கள் உங்களிடமும் உறவாடினால், 13 உங்களுடைய தேவனாகிய யெகோவா இனி இந்த தேசங்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடமாட்டார் என்றும், உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து அழிந்துபோகும்வரைக்கும், அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், வலையாகவும், உங்களுடைய முதுகுகளுக்குச் சவுக்காகவும், உங்களுடைய கண்களுக்கு முட்களாகவும் இருப்பார்கள் என்றும் நிச்சயமாக அறியுங்கள். 14 இதோ, இன்று நான் பூலோகத்தார்கள் எல்லோரும் போகிற வழியிலே போகிறேன்; உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுக்காகச் சொன்ன நல்ல வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்களுடைய முழு இருதயத்தாலும், முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறினது, அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை. 15 இப்பொழுதும் உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களிடம் சொன்ன நல்ல காரியமெல்லாம் உங்களுக்கு எப்படி நிறைவேறியதோ, அப்படியே, உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய உடன்படிக்கையை நீங்கள் மீறி, அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டு, அவைகளைப் பணிந்துகொள்ளும் காலத்தில், 16 உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை அழிக்கும்வரைக்கும், யெகோவா உங்கள்மேல் எல்லாத் தீமையான காரியங்களையும் வரச்செய்வார்; யெகோவாவுடைய கோபம் உங்கள்மேல் பற்றியெரியும்; அவர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரமாக அழிந்துபோவீர்கள் என்றான்.

  15. 11 நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுப்பதற்காக நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்திற்கு உகந்த நினைவுகளே. 12 அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்செய்வீர்கள்; நான் உங்கள் விண்ணப்பத்தை கேட்பேன்.

  16. 13 நீங்களும் உங்களுடைய இரட்சிப்பின் நற்செய்தியாகிய சத்திய வசனத்தைக்கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவரால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். 14 அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய உரிமைப்பங்கின் உத்திரவாதமாக இருக்கிறார்.

  17. 19 அவன் விசுவாசத்திலே பலவீனமாக இருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாக இருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் நினைக்காமல் இருந்தான். 20 தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாகச் சந்தேகப்படாமல், 21 தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராக இருக்கிறார் என்று முழுநிச்சயமாக நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவன் ஆனான். 22 எனவே, அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. 23 “அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது,” என்பது, அவனுக்காகமட்டும் இல்லை, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது. 24 நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.

  18. 23 அடிமையானவளுக்குப் பிறந்தவன் சரீரத்தின்படி பிறந்தான், சுதந்திரமுள்ளவளுக்குப் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான். 24 இவைகள் ஞான அர்த்தம் உள்ளவைகள்; அந்த இரண்டு பெண்களும் இரண்டு ஏற்பாடுகளாம்; ஒன்று சீனாய்மலையில் உண்டான ஏற்பாடு, அது அடிமைத்தனத்திற்குள்ளாகக் குழந்தைப் பெறுகிறது, அது ஆகார் என்பவள் தானே. 25 ஆகார் என்பது அரபிதேசத்தில் உள்ள சீனாய்மலை; அந்த ஆகார் இப்பொழுது இருக்கிற எருசலேமுக்கு அடையாளம்; ஏனென்றால், இவள் தன் பிள்ளைகளோடு அடிமைப்பட்டிருக்கிறாளே. 26 மேலான எருசலேமோ சுதந்திரம் உள்ளவள், அவளே நம்மெல்லோருக்கும் தாயானவள். 27 அந்தப்படி பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்திரு; கர்ப்பவேதனைப்படாதவளே, மகிழ்ச்சியாக எழும்பி ஆர்ப்பரி; கணவன் உள்ளவளைவிட மலடியான பெண்ணுக்கே அதிக பிள்ளைகள் உண்டு என்று எழுதியிருக்கிறது. 28 சகோதரர்களே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாக இருக்கிறோம்.

  19. 12 சோதனையைச் சகிக்கிற மனிதன் பாக்கியவான்; அவன் உத்தமன் என்று தெரிந்தபின்பு கர்த்தர், தம்மை நேசிக்கிறவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஜீவகிரீடத்தைப் பெறுவான்.

  20. 3 இந்தத் தேசத்தில் குடியிரு; நான் உன்னோடுகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் அனைத்தையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன். 4 ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டதால், 5 நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகச்செய்து, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் அனைத்தையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள அனைத்து தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.

  21. 29 சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகச்செய்கிறார். 30 இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபர்களும் இடறிவிழுவார்கள். 31 யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் இறக்கைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையமாட்டார்கள், நடந்தாலும் சோர்வடையமாட்டார்கள்.

  22. 33 அவர் தேவனுடைய வலது கரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியானவரைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறவைகளையும் கேட்கிறவைகளையும் பொழிந்தருளினார்.

  23. 21 அப்படியென்றால் நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு எதிரானதா? இல்லையே; நியாயப்பிரமாணம் உயிரைக் கொடுக்கக்கூடியதாக இருந்திருந்தால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே. 22 அப்படி இல்லாததினால், இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசம் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படும்படி வேதம் எல்லாவற்றையும் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது.

  24. 4 இதைக்குறித்து நான் முன்னமே சுருக்கமாக எழுதியிருக்கிறேன். 5 அதை நீங்கள் படிக்கும்போது கிறிஸ்துவின் இரகசியத்தைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அறிவை அறிந்துகொள்ளலாம்; 6 இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுக்குலத்திற்கு அறிவிக்கப்படவில்லை.

  25. 6 கிறிஸ்துவானவர் விசேஷித்த வாக்குத்தத்தங்களினால் நிறுவிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராக இருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார். 7 அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாமல் இருந்தால், இரண்டாம் உடன்படிக்கை தேவையில்லையே. 8 அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களைப் பார்த்து: இதோ, கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தும் காலம் வருகிறது.

  26. 13 அவருடைய வாக்குத்தத்தத்தின்படி நீதி நிலைத்திருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகும் என்று காத்திருக்கிறோம். 14 ஆகவே, பிரியமானவர்களே இவைகள் வருவதற்காகக் காத்திருக்கிற நீங்கள் கறை இல்லாதவர்களும் பிழை இல்லாதவர்களுமாகச் சமாதானத்தோடு அவர் சந்நிதியில் காணப்படுவதற்கு கவனமாக இருங்கள்.

  27. 12 அங்கே அவன் ஒரு கனவுகண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர்கள் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாக இருந்தார்கள். 13 அதற்கு மேலாகக் யெகோவா நின்று: “நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய யெகோவா; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். 14 உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரவுவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். 15 நான் உன்னோடு இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்திற்கு உன்னைத் திரும்பி வரச்செய்வேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யும்வரை உன்னைக் கைவிடுவதில்லை” என்றார்.

  28. 19 பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல;

    மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல;

    அவர் சொல்லியும் செய்யாமல் இருப்பாரா?

    அவர் வாக்களித்தும் நிறைவேற்றாமல் இருப்பாரா?

  29. 6 நீ உன் தேவனாகிய யெகோவா வுக்குப் பரிசுத்த மக்கள், பூமியிலுள்ள எல்லா மக்களிலும் உன் தேவனாகிய யெகோவா உன்னைத் தமக்குச் சொந்தமாயிருப்பதற்காகத் தெரிந்துகொண்டார். 7 சகல மக்களிலும் நீங்கள் எண்ணிக்கையில் அதிகமான மக்களென்று யெகோவா உங்கள்மேல் அன்புவைத்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை; நீங்கள் எல்லா மக்களிலும் சிறிய கூட்டமாயிருந்தீர்கள். 8 யெகோவா உங்களில் அன்புசெலுத்தியதாலும், உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றவேண்டும் என்பதினாலும்; யெகோவா பலத்த கையினால் உங்களைப் புறப்படச்செய்து, அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்தும், அதின் ராஜாவான பார்வோனின் கையிலிருந்தும் உங்களை மீட்டுக்கொண்டார். 9 ஆகையால் உன் தேவனாகிய யெகோவாவே தேவன் என்றும், தம்மில் அன்புவைத்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைவரை உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும், 10 தம்மைப் பகைக்கிறவர்களுக்கு வெளிப்படையாகப் பதிலளித்து அவர்களை அழிப்பார் என்றும், தம்மைப் பகைக்கிறவனுக்கு அவர் தாமதியாமல் வெளிப்படையாகப் பதிலளிப்பார் என்றும் நீ அறிவாயாக. 11 ஆகையால் நீ செய்யும்படி நான் இன்று உனக்குக் கட்டளையிடுகிற கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்வாயாக.

  30. 56 தாம் வாக்குத்தத்தம் செய்தபடியெல்லாம் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கொடுத்த யெகோவாவுக்கு ஸ்தோத்திரம், அவர் தம்முடைய ஊழியக்காரனாகிய மோசேயைக்கொண்டு சொன்ன அவருடைய நல்வார்த்தைகளில் ஒரு வார்த்தைகூட தவறிப்போகவில்லை.

  31. 49 என் பிதா வாக்குத்தத்தம் செய்ததை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் நிரப்பப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.

  32. 6 தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்கிற நம்பிக்கைக்காகவே நான் இப்பொழுது நியாயம் விசாரிக்கப்படுகிறவனாக நிற்கிறேன். 7 இரவும் பகலும் இடைவிடாமல் ஆராதனை செய்துவருகிற நம்முடைய பன்னிரண்டு கோத்திரத்தார்களும் அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்று நம்பியிருக்கிறார்கள். அகிரிப்பா ராஜாவே, அந்த நம்பிக்கையினிமித்தமே யூதர்கள் என்மேல் குற்றஞ்சுமத்துகிறார்கள்.

  33. 1 இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, சரீரத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுத்தமானவைகளும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடு நிறைவாக்குவோம்.

  34. 8 சரீரமுயற்சி கொஞ்சம் பிரயோஜனமுள்ளது; ஆனால், தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப்பின்பு வரும் ஜீவனுக்கும் உள்ள வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.

  35. 1 கிறிஸ்து இயேசுவினால் உண்டாயிருக்கிற ஜீவனைக்குறித்த வாக்குத்தத்தத்தின்படி, தேவனுடைய விருப்பத்தினாலே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாக இருக்கிற பவுல்,

  36. 35 ஆகவே, அதிக பலனைத் தரும் உங்களுடைய தைரியத்தை விட்டுவிடாமல் இருங்கள். 36 நீங்கள் தேவனுடைய விருப்பத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறுவதற்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாக இருக்கிறது.

  37. 12 உன்னுடைய நாட்கள் நிறைவேறி, நீ உன்னுடைய பிதாக்களோடு படுத்திருக்கும்போது, நான் உனக்குப்பின்பு உனக்கு பிறக்கும் உன்னுடைய சந்ததியை எழும்பச்செய்து, அவன் ராஜ்ஜியத்தை நிலைப்படுத்துவேன். 13 அவன் என்னுடைய நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவனுடைய ராஜ்ஜியபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கச்செய்வேன். 14 நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்கு மகனாக இருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனிதர்கள் பயன்படுத்தும் பிரம்பினாலும் மனிதர்களுடைய கசையடிகளினாலும் தண்டிப்பேன். 15 உனக்கு முன்பாக நான் தள்ளிவிட்ட சவுலிடமிருந்து என்னுடைய கிருபையை விலக்கினதுபோல அவனைவிட்டு விலக்கமாட்டேன். 16 உன்னுடைய வீடும், உன்னுடைய ராஜ்ஜியமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக உறுதிப்பட்டிருக்கும்; உன்னுடைய சிங்காசனம் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் என்கிறார் என்று சொல்லச்சொன்னார்.

  38. 4 நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை செய்துகொண்டால், அதைச் செலுத்தத் தாமதிக்காதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்துகொண்டதைச் செய். 5 நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற்போவதைவிட, நேர்ந்துகொள்ளாமல் இருப்பதே நலம்.

  39. 1 உங்களுடைய இருதயம் கலங்காமல் இருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாக இருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாக இருங்கள். 2 என் பிதாவின் வீட்டில் அநேக தங்கும் இடங்கள் இருக்கின்றன; அப்படி இல்லாமலிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு இடத்தை உங்களுக்காக ஆயத்தம் செய்யப்போகிறேன். 3 நான் போய் உங்களுக்காக இடத்தை ஆயத்தம்செய்தபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். 4 நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.

    5 தோமா அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான். 6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாக இருக்கிறேன்; என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

  40. 32 நீர் என்னுடைய மகன், இன்று நான் உம்மைப் பெற்றேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே, 33 இயேசுவை உயிரோடு எழுப்பினதினாலே தேவன் நம்முடைய முற்பிதாக்களுக்கு அருளிய வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கிறோம். 34 அவர் இனி ஒருபோதும் அழிவுக்குட்படாதபடி தேவன் அவரை உயிரோடு எழுப்பினார் என்பதைக்குறித்து:

    தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை

    உங்களுக்குக் கட்டளையிடுவேன்’ என்று உரைத்தார்.

  41. 29 நீங்கள் கிறிஸ்துவுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராகவும், வாக்குத்தத்தத்தினால் வாரிசுகளாகவும் இருக்கிறீர்கள்.

  42. 43 இந்தவிதமாகக் யெகோவா இஸ்ரவேலுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுடைய முற்பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தையெல்லாம் கொடுத்தார்; அவர்கள் அவைகளைச் சுதந்தரித்துக்கொண்டு, அவைகளிலே குடியிருந்தார்கள். 44 யெகோவா அவர்களுடைய முற்பிதாக்களுக்கு ஆணையிட்டபடியெல்லாம் அவர்களைச் சுற்றிலும் யுத்தமில்லாமல் ஓய்ந்திருக்கச்செய்தார்; அவர்களுடைய எல்லா எதிரிகளிலும் ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கவில்லை; அவர்கள் எதிரிகளையெல்லாம் யெகோவா அவர்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தார். 45 யெகோவா இஸ்ரவேல் குடும்பத்தார்களுக்குச் சொல்லியிருந்த நல்ல வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறினது.

  43. 42 அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும்,

    தம்முடைய ஊழியனாகிய ஆபிரகாமையும் நினைத்து,

    43 தம்முடைய மக்களை மகிழ்ச்சியோடும்,

    தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படச்செய்து,

  44. 3 கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாமல் இருப்பதாக;

    நீ அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டி,

    அவைகளை உன்னுடைய இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.

    4 அதினால் தேவனுடைய பார்வையிலும் மனிதர்களுடைய பார்வையிலும் தயவையும் நற்புத்தியும் பெறுவாய்.

    5 உன்னுடைய சுயபுத்தியின்மேல் சாயாமல்,

    உன்னுடைய முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாக இருந்து,

    6 உன்னுடைய வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்;

    அப்பொழுது அவர் உன்னுடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

  45. 10 நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்செய்வேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். 11 இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற அனைவரும் வெட்கி கனவீனமடைவார்கள்; உன்னுடன் வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற்போவார்கள். 12 உன்னுடன் போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னுடன் போர்செய்த மனிதர்கள் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்.

  46. 2 நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ நெருப்பில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; நெருப்புத்தழல் உன்னை சுட்டெரிக்காது.

  47. 16 ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைப்பற்றிச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்த சந்ததி கிறிஸ்துவே.

  48. 17 ஆகவே, நான் சொல்லுகிறது என்னவென்றால், கிறிஸ்துவை முன்னிட்டு தேவனால் முன்னமே உறுதிப்பண்ணப்பட்ட உடன்படிக்கையை நானூற்றுமுப்பது வருடங்களுக்குப்பின்பு உண்டான நியாயப்பிரமாணமானது, வாக்குத்தத்தத்தைப் பயனற்றதாக்காது. 18 அன்றியும், உரிமைப்பங்கானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிருக்காது; தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே.

  49. 24 உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.

  50. 9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராக இருக்கிறார்.

  51. 8 யெகோவா தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னுடன் இருப்பார்; அவர் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்” என்றான்.

  52. 9 நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பெலன்கொண்டு திடமனதாக இரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடங்களெல்லாம் உன் தேவனாகிய யெகோவா உன்னோடு இருக்கிறார்” என்றார்.

  53. 3 என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடு உடன்படிக்கை செய்து,

    என்னுடைய ஊழியனாகிய தாவீதை நோக்கி:

    4 என்றென்றைக்கும் உன்னுடைய சந்ததியை நிலைநிறுத்தி,

    தலைமுறை தலைமுறையாக உன்னுடைய சிங்காசனத்தை நிறுவுவேன் என்று ஆணையிட்டேன் என்றீர். (சேலா)

  54. 8 ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையும்,

    ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும்,

    9 அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார். 10 அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும்,

    இஸ்ரவேலுக்கு நிரந்தர உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:

    11 உங்களுடைய சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.

  55. 33 அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையில் செலுத்துவாயாக என்று முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 34 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; எதையும் செய்வேன் என்று சத்தியம் செய்யவேண்டாம்; பரலோகத்தின்பேரில் சத்தியம் செய்யவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம். 35 பூமியின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். 36 உன் தலையின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அதின் ஒரு முடியையாவது வெண்மையாக்கவும் கருமையாக்கவும் உன்னால் முடியாதே. 37 உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.

  56. 37 தேவனாலே செய்யமுடியாத காரியம் ஒன்றும் இல்லை என்றான்.

  57. 13 நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படி அதைச் செய்வேன். 14 என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.

    15 நீங்கள் என்னிடத்தில் அன்பாக இருந்தால் என் கட்டளைகளைக் கடைபிடியுங்கள். 16 நான் பிதாவை கேட்டுக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களோடு இருக்கும்படி சத்திய ஆவியானவராகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தருவார். 17 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைப் பார்க்காமலும், அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களோடு தங்கி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். 18 நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன், உங்களிடம் வருவேன்.

  58. 19 அப்படியென்றால், நியாயப்பிரமாணத்தின் நோக்கம் என்ன? வாக்குத்தத்தத்தைப் பெற்ற சந்ததி வரும்வரைக்கும் அக்கிரமங்களினிமித்தமாக நியாயப்பிரமாணம் தேவதூதர்களைக்கொண்டு மத்தியஸ்தனுடைய கையிலே கொடுக்கப்பட்டது.

  59. 8 விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் உரிமைப்பங்காகப் பெறப்போகிற இடத்திற்குப் போக அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் எதுவென்று தெரியாமல் புறப்பட்டுப்போனான். 9 விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே அந்நியனைப்போல வாழ்ந்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் வாரிசாகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்;

  60. 39 இவர்கள் எல்லோரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை பெற்றுக்கொள்ளாமற்போனார்கள். 40 நாம் இல்லாமல் அவர்கள் பூரணர்களாகாதபடி விசேஷித்த நன்மையானதை தேவன் நமக்காக முன்னதாகவே நியமித்திருந்தார்.

  61. 7 யெகோவா ஆபிராமுக்குக் காட்சியளித்து: “உன் சந்ததிக்கு இந்த தேசத்தைக் கொடுப்பேன்” என்றார். அப்பொழுது அவன் தனக்குக் காட்சியளித்த யெகோவாவுக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

  62. 15 யெகோவாவுடைய தூதனானவர் இரண்டாவது முறை வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு: 16 “நீ உன் மகன் என்றும், உனது ஒரேமகன் என்றும் பார்க்காமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்ததால்; 17 நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்திலுள்ள நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகச்செய்வேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் எதிரிகளின் வாசல்களைச் சொந்தமாக்கிக் கொள்ளுவார்கள் என்றும், 18 நீ என்னுடைய சொல்லுக்குக் கீழ்ப்படிந்ததால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள அனைத்து தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றார்.

  63. 7 கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; 8 ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். 9 உங்களில் எந்த மனிதனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? 10 மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? 11 ஆகவே, பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?

  64. 25 இயேசு அவளைப் பார்த்து: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாக இருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; 26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறன் எவனும் என்றென்றைக்கும் மரிக்காமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.

  65. 8 இந்த வார்த்தை உன் அருகில் உன் வாயிலும்

    உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது;

    இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.

    9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார் என்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். 10 இருதயத்திலே விசுவாசிக்கிறதினால் நீதி உண்டாகும். வாயினாலே அறிக்கைபண்ணுகிறதினால் இரட்சிப்பு உண்டாகும். 11 அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவது இல்லை என்று வேதம் சொல்லுகிறது. 12 யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லோருக்கும் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற எல்லோரையும் அளவில்லாமல் ஆசீர்வதிக்கிறவராக இருக்கிறார். 13 எனவே, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.

  66. 4 அவர்கள் பரதேசிகளாகத் தங்கின தேசமாகிய கானான்தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களோடு என்னுடைய உடன்படிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறேன். 5 எகிப்தியர்கள் அடிமையாக வைத்திருக்கிற இஸ்ரவேலர்களின் பெருமூச்சையும் நான் கேட்டு, என்னுடைய உடன்படிக்கையை நினைத்தேன். 6 ஆதலால், இஸ்ரவேலர்களை நோக்கி: நானே யெகோவா, உங்கள்மேல் எகிப்தியர்கள் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு, நீங்கலாக்கி, பலத்த கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு, 7 உங்களை எனக்கு மக்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாக இருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர்கள் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்களுடைய தேவனாகிய யெகோவா நான் என்று அறிவீர்கள். 8 ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சொந்தமாகக் கொடுப்பேன்; நான் யெகோவா என்று அவர்களுக்குச் சொல் என்றார்.

  67. 1 மோசே இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரங்களின் தலைவர்களை நோக்கி: “யெகோவா கட்டளையிடுவது என்னவென்றால்: 2 “ஒருவன் யெகோவாவுக்கு எந்த ஒரு பொருத்தனை செய்தாலும், அல்லது எந்த ஒரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்திக்கொண்டாலும், அவன் சொல்தவறாமல் தன்னுடைய வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யவேண்டும்.

  68. 25 பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும்,

    மனிதனுக்குக் கண்ணியாக இருக்கும்.

  69. 31 ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாமல் இருங்கள். 32 இவைகளையெல்லாம் தேவனை அறியாதவர் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்களுடைய பரமபிதா அறிந்திருக்கிறார். 33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு சேர்த்துக்கொடுக்கப்படும்.

  70. 17 ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறும் நேரம் நெருங்கியபோது,

  71. 31 இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்தில் இருந்தால் நமக்கு எதிராக இருப்பவன் யார்? 32 தம்முடைய சொந்தக்குமாரன் என்றும் பார்க்காமல் நம்மெல்லோருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடு சேர்த்து மற்ற எல்லாவற்றையும் நமக்குக் கொடுக்காமல் இருப்பது எப்படி? 33 தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். 34 தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே உயிரோடு எழுந்தும் இருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபக்கத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே. 35 “உமக்காக எந்தநேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்” என்று எழுதியிருக்கிறபடி நடந்தாலும்,

  72. 15 சகோதரர்களே, மனிதர்களின் முறைகளின்படிச் சொல்லுகிறேன்; மனிதர்களுக்குள்ளே உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை ஒருவனும் தள்ளுகிறதுமில்லை, அதினோடு எதையும் கூட்டுகிறதுமில்லை.

  73. 12 தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாகவும், இரண்டு பக்கமும் கூர்மையான எல்லாப் பட்டயத்தையும்விட கூர்மையானதாகவும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்க உருவக் குத்துகிறதாகவும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் பகுத்தறிகிறதாகவும் இருக்கிறது. 13 அவருடைய பார்வைக்கு மறைவான படைப்பு ஒன்றும் இல்லை; எல்லாம் அவருடைய கண்களுக்குமுன்பாக மறைக்கப்படாததாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.

  74. 5 ஜெயம் பெறுகிறவன் எவனோ அவனுக்கு வெண்மையான ஆடை அணிவிக்கப்படும்; ஜீவபுத்தகத்திலிருந்து அவனுடைய பெயரை நான் நீக்கிப்போடாமல், என் பிதாவிற்கு முன்பாகவும் அவருடைய தூதர்களுக்கு முன்பாகவும் அவன் பெயரை அறிக்கைச் செய்வேன்.