50 Bible Verses About God's Creation
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
-
1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். 2 பூமியானது. ஒழுங்கற்றதாகவும் வெறுமையாகவும் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். 3 தேவன் “வெளிச்சம் உண்டாகட்டும்,” என்றார், வெளிச்சம் உண்டானது. 4 வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். 5 தேவன் வெளிச்சத்திற்குப் பகல் என்றும், இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் முடிந்தது. 6 பின்பு தேவன்; “தண்ணீர்களின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகட்டும்,” என்றும், “அது தண்ணீரிலிருந்து தண்ணீரைப் பிரிக்கட்டும்” என்றும் சொன்னார். 7 தேவன் ஆகாயவிரிவை உருவாக்கி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற தண்ணீருக்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற தண்ணீருக்கும் பிரிவை உண்டாக்கினார்; அது அப்படியே ஆனது. 8 தேவன் ஆகாயவிரிவுக்கு “வானம் என்று பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி, இரண்டாம் நாள் முடிந்தது. 9 பின்பு தேவன்: “வானத்தின் கீழே இருக்கிற தண்ணீர் ஓரிடத்தில் சேர்ந்து, வெட்டாந்தரை காணப்படுவதாக,” என்றார்; அது அப்படியே ஆனது. 10 தேவன் வெட்டாந்தரைக்கு “பூமி” என்றும், சேர்ந்த தண்ணீருக்கு “சமுத்திரம்” என்றும் பெயரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார். 11 அப்பொழுது தேவன்: “பூமியானது புல்லையும், விதையைக் கொடுக்கும் தாவரங்களையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய பழங்களைத் தங்கள் தங்கள் வகையின்படியே கொடுக்கும் பழமரங்களையும் முளைப்பிக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது. 12 பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் வகையின்படியே விதையைக் கொடுக்கும் தாவரங்களையும், தங்கள் தங்கள் வகைகளின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய பழங்களைக் கொடுக்கும் மரங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார். 13 சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் முடிந்தது. 14 பின்பு தேவன்: “பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகட்டும்” என்றார். மேலும் அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருடங்களையும் குறிக்கிறதற்காகவும் இருப்பதாக” என்றார். 15 “அவைகள் பூமியின்மேல் பிரகாசிப்பதற்காக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாக இருக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது. 16 தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். 17 அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், 18 பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்திற்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். 19 சாயங்காலமும் விடியற்காலமுமாகி நான்காம் நாள் முடிந்தது. 20 பின்பு தேவன்: “நீந்தும் உயிரினங்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், தண்ணீரானது திரளாக பிறப்பிக்கட்டும்” என்றார். 21 தேவன், மகா பெரிய கடலில் வாழும் உயிரினங்களையும், தண்ணீரில் தங்கள் தங்கள் வகையின்படியே திரளாகப் பிறப்பிக்கப்பட்ட அனைத்துவித நீரில்வாழும் உயிரினங்களையும், சிறகுள்ள வகைவகையான அனைத்துவிதப் பறவைகளையும் உருவாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார். 22 தேவன் அவைகளை ஆசீர்வதித்து, “நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திரத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியிலே பெருகட்டும்” என்றும் சொன்னார். 23 சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் முடிந்தது. 24 பின்பு தேவன்: “பூமியானது வகைவகையான உயிரினங்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், வகைவகையாகப் பிறப்பிக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது. 25 தேவன் பூமியிலுள்ள வகைவகையான காட்டுமிருகங்களையும், வகைவகையான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார். 26 பின்பு தேவன்: “நமது சாயலாகவும் நமது தோற்றத்தின்படியேயும் மனிதனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் உயிரினங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் அனைத்துப் பிராணிகளையும் ஆண்டுகொள்ளட்டும்” என்றார்.
27 தேவன் தம்முடைய சாயலாக மனிதனை உருவாக்கினார்,
அவனைத் தேவசாயலாகவே உருவாக்கினார்;
ஆணும் பெண்ணுமாக அவர்களை உருவாக்கினார்.
28 பின்பு தேவன் அவர்களை நோக்கி: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் உயிரினங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற அனைத்து உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். 29 பின்னும் தேவன்: “இதோ, பூமியின்மேல் எங்கும் விதை தரும் அனைத்துவிதத் தாவரங்களையும், விதை தரும் பழமரங்களாகிய அனைத்துவித மரங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாக இருப்பதாக; 30 பூமியிலுள்ள அனைத்து மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள அனைத்து பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான அனைத்துவிதத் தாவரங்களையும் ஆகாரமாகக் கொடுத்தேன்” என்றார்; அது அப்படியே ஆனது. 31 அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அவைகள் மிகவும் நன்றாக இருந்தன; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் முடிந்தது.
-
8 தேவனாகிய யெகோவா கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனிதனை அதிலே வைத்தார். 9 தேவனாகிய யெகோவா, பார்வைக்கு அழகும் சாப்பிடுவதற்கு ஏற்ற அனைத்துவித மரங்களையும், தோட்டத்தின் நடுவிலே வாழ்வளிக்கும் மரத்தையும், நன்மை தீமை அறியத்தக்க ஆற்றலைக் கொடுக்கும் மரத்தையும் பூமியிலிருந்து முளைக்கச்செய்தார். 10 தோட்டத்திற்குத் தண்ணீர் பாய ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நான்கு பெரிய ஆறுகளானது. 11 முதலாம் ஆற்றுக்கு பைசோன் என்று பெயர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அந்த இடத்திலே பொன் உண்டு. 12 அந்த தேசத்தின் பொன் நல்லது; அந்த இடத்திலே நறுமணப்பிசினும், விலையேறிய முத்துகளும் உண்டு. 13 ஆற்றுக்கு கீகோன் என்று பெயர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.
14 மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பெயர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நான்காம் ஆற்றுக்கு ஐப்பிராத்து என்று பெயர். 15 தேவனாகிய யெகோவா மனிதனை ஏதேன் தோட்டத்திற்கு அழைத்துவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். 16 தேவனாகிய யெகோவா மனிதனை நோக்கி: “நீ தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் தாராளமாக சாப்பிடலாம். 17 ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் பழத்தை சாப்பிடவேண்டாம்; அதை நீ சாப்பிடும் நாளில் சாகவே சாவாய்” என்று கட்டளையிட்டார். 18 பின்பு, தேவனாகிய யெகோவா: “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்” என்றார். 19 தேவனாகிய யெகோவா பூமியிலுள்ள அனைத்துவித மிருகங்களையும், ஆகாயத்தின் அனைத்துவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பெயரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த உயிரினத்திற்கு ஆதாம் என்னென்ன பெயரிட்டானோ அதுவே அதற்குப் பெயரானது. 20 அப்படியே ஆதாம் அனைத்துவித நாட்டுமிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், அனைத்துவிதக் காட்டுமிருகங்களுக்கும் பெயரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை. 21 அப்பொழுது தேவனாகிய யெகோவா ஆதாமுக்கு ஆழ்ந்த உறக்கத்தை வரச்செய்தார், அவன் ஆழ்ந்து உறங்கினான்; அவர் அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.
22 தேவனாகிய யெகோவா தாம் மனிதனிலிருந்து எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனிதனிடத்தில் கொண்டுவந்தார். 23 அப்பொழுது ஆதாம்: “இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாக இருக்கிறாள்; இவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டதால் மனுஷி எனப்படுவாள்” என்றான். 24 இதன் காரணமாக மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடு இணைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாக இருப்பார்கள். 25 ஆதாமும் அவனுடைய மனைவியும் நிர்வாணிகளாக இருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.
-
15 அவர் கண்ணுக்குத் தெரியாத தேவனுடைய ரூபமும், எல்லாப் படைப்புக்கும் முதற்பேறுமானவர். 16 ஏனென்றால், அவருக்குள் எல்லாம் படைக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான எல்லாப் பொருட்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அரசாங்க ஆட்சி புரிவோர்களானாலும், அதிகாரங்களானாலும், எல்லாமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் படைக்கப்பட்டது. 17 அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. 18 அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராக இருக்கும்படி, அவரே துவக்கமும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த முதற்பேறுமானவர். 19 எல்லாப் பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாக இருக்கவும், 20 அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாகத் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் தேவனுக்கு விருப்பமானது.
-
1 இந்தவிதமாக வானமும் பூமியும், அவைகளில் இருக்கிற அனைத்தயும் உண்டாக்கப்பட்டு முடிந்தன. பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் உண்டாக்கப்பட்ட வரலாறு இவைகளே. 2 தேவன் தாம் செய்த தம்முடைய செயலை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உருவாக்கும் தம்முடைய செயல்களையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். 3 தேவன் தாம் உருவாக்கும் தம்முடைய செயல்களையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்ததினால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
-
1 முற்காலத்தில் வெவ்வேறு காலங்களில், அநேக விதங்களில் தீர்க்கதரிசிகள் மூலமாக முற்பிதாக்களோடு பேசின தேவன், 2 இந்தக் கடைசிநாட்களில் குமாரன் மூலமாக நம்மோடு பேசினார்; இவரை எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்தார், இவர் மூலமாக உலகங்களையும் உண்டாக்கினார். 3 இவர் பிதாவுடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய குணத்தின் சாயலாகவும் இருந்து, எல்லாவற்றையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராக, அவர்தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார். 4 இவர் தேவதூதர்களைவிட எவ்வளவு விசேஷமான நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாக அவர்களைவிட மேன்மையுள்ளவரானார்.
-
18 சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனிதர்களுடைய எல்லாவிதமான அவபக்திக்கும் அநியாயத்திற்கும் எதிராக, தேவனுடைய கோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. 19 தேவனைக்குறித்து தெரிந்துகொள்வது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். 20 எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தெய்வீகத்தன்மை என்பவைகள், படைக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகம் உண்டாக்கப்பட்டதிலிருந்து, தெளிவாகக் காணப்படும்; எனவே அவர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. 21 அவர்கள் தேவனைத் தெரிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், நன்றி சொல்லாமலும் இருந்து, தங்களுடைய சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்ச்சி இல்லாத அவர்களுடைய இருதயம் இருள் அடைந்தது. 22 அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பைத்தியக்காரர்களாகி, 23 அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனிதர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய உருவங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். 24 இதனால் அவர்கள் தங்களுடைய இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்களுடைய சரீரங்களை அவமானப்படுத்துவதற்காக தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். 25 தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, படைத்தவரைத் தொழுதுகொள்ளாமல் படைக்கப்பட்டவைகளைத் தொழுதுகொண்டார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.
-
1 ஆரம்பத்திலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடம் இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது. 2 அவர் ஆரம்பத்திலே தேவனோடு இருந்தார். 3 எல்லாமும் அவர் மூலமாக உண்டானது; உண்டானது ஒன்றும் அவர் இல்லாமல் உண்டாகவில்லை. 4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனிதனுக்கு ஒளியாக இருந்தது. 5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதை மேற்கொள்ளவில்லை.
-
5 அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்;
பூமி யெகோவாவுடைய கருணையினால் நிறைந்திருக்கிறது.
6 யெகோவாவுடைய வார்த்தையினால் வானங்களும்,
அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் அனைத்தும் உண்டாக்கப்பட்டது.
7 அவர் கடலின் தண்ணீர்களைக் குவியலாகச் சேர்த்து,
ஆழமான தண்ணீர்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார்.
8 பூமியெல்லாம் யெகோவாவுக்குப் பயப்படுவதாக;
உலகத்திலுள்ள குடிமக்களெல்லாம் அவருக்கு பயந்திருப்பதாக.
9 அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.
-
3 உமது விரல்களின் செயல்களாகிய உம்முடைய வானங்களையும்,
நீர் அமைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,
4 மனிதனை நீர் நினைக்கிறதற்கும்,
மனுக்குலத்தை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.
5 நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்;
மகிமையினாலும், மரியாதையினாலும் அவனை முடிசூட்டினீர்.
6 உம்முடைய கைகளின் செயல்களின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து.
7 ஆடுமாடுகள் எல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும்,
8 ஆகாயத்துப் பறவைகளையும்,
கடலின் மீன்களையும், கடல்களில் வாழ்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
9 எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே,
உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது!
-
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
1 வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன,
ஆகாய விரிவு அவருடைய கைகளின் செயல்களை அறிவிக்கிறது.
2 பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது,
இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.
3 அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை,
அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.
4 ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும்,
அவைகளின் வசனங்கள் உலகின் கடைசிவரைக்கும் செல்லுகின்றன;
அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை உண்டாக்கினார்.
5 அது தன்னுடைய மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல் இருக்கிறது,
பெலசாலியைப்போல் தன்னுடைய பாதையில் ஓட மகிழ்ச்சியாக இருக்கிறது.
6 அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு,
அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது;
அதின் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை.
-
3 விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையாலே உண்டாக்கப்பட்டது என்றும், இவ்விதமாக, காணப்படுகிறவைகள் காணப்படுகிறவைகளால் உண்டாகவில்லை என்றும் அறிந்திருக்கிறோம்.
-
18 ஆதலால் இந்தக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடம் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடக்கூடியவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். 19 மேலும் தேவனுடைய குமாரர்கள் வெளிப்படுத்தப்படுவதற்காக தேவனுடைய படைப்புகள் அதிக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது. 20 அது என்னவென்றால் படைப்புகள் அழிவிற்குரிய அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடு, 21 அந்தப் படைப்புகள் சொந்த இஷ்டத்தினாலே இல்லை, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. 22 எனவே, நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் படைப்புகள் எல்லாம் ஒன்றாகத் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது. 23 அதுவும் இல்லாமல், ஆவியானவரின் முதற்பலன்களைப் பெற்ற நாமும் நம்முடைய சரீர மீட்பாகிய பிள்ளை என்கிற உரிமை வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.
-
22 அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனே பட்டணத்தாரே, எல்லாக் காரியத்திலும் உங்களை அதிக பக்தியுள்ளவர்களாகப் பார்க்கிறேன். 23 எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்களுடைய ஆராதனைகளை கவனித்துப் பார்த்தபொழுது, “அறியப்படாத தேவனுக்கு” என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைப் பார்த்தேன்; நீங்கள் அறியாமல் ஆராதனை செய்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். 24 உலகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறபடியால், கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் குடியிருப்பதில்லை. 25 எல்லோருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் எல்லாவற்றையும் கொடுக்கிற ஆண்டவர், தமக்கு ஏதாவது தேவையென்றால், மனிதர்கள் கைகளினால் பெற்றுக்கொள்வதில்லை. 26 மனித இனமான எல்லா மக்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே உண்டாக்கி, பூமியெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருக்கும் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; 27 கர்த்தராகிய அவரை மக்கள் தடவியாவது தேடிக் கண்டுபிடிக்கும்படி அப்படிச் செய்தார்; அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகில் உள்ளார். 28 ஏனென்றால், அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்களுடைய புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய வம்சத்தார் என்று சொல்லியிருக்கிறார்கள். 29 நாம் தேவனுடைய வம்சமாக இருப்பதினால், மனிதனுடைய யோசனையினாலும் சித்திரவேலையினாலும் உருவாக்கின தங்கம், வெள்ளி, கல் ஆகியவற்றிக்கு தெய்வம் ஒப்பாவார் என்று நாம் நினைக்கக்கூடாது. 30 மக்களின் அறியாமையின் நாட்களை தேவன் பார்க்காதவர்போல இருந்தார்; இப்பொழுது மனம் மாறவேண்டும் என்று எல்லா மனிதர்களுக்கும் கட்டளையிடுகிறார். 31 ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அந்த நாளிலே அவர் தாம் நியமித்த மனிதனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாக நியாயந்தீர்ப்பார்; அந்த மனிதனை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லோருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான். 32 மரித்தவர்களின் உயிர்த்தெழுதலைக்குறித்து பவுல் சொல்வதை அவர்கள் கேட்டபோது, சிலர் கேலிசெய்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை வேறொரு நாளில் கேட்போம் என்றார்கள். 33 எனவே, பவுல் அவர்களைவிட்டுப் போய்விட்டான். 34 சிலர் பவுலோடு சேர்ந்துகொண்டு, விசுவாசிகளானார்கள். அவர்களில் மார்ஸ் மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவனாகிய தியொனீசியு என்பவனும், தாமரி என்னும் பெயருள்ள ஒரு பெண்ணும், வேறு சிலரும் இருந்தார்கள்.
-
11 கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும்
வல்லமையையும் பெற்றுக்கொள்கிறதற்குத் தகுதி உடையவராக இருக்கிறீர்;
நீரே எல்லாவற்றையும் படைத்தீர்,
உம்முடைய விருப்பத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும்
படைக்கப்பட்டவைகளுமாக இருக்கிறது” என்றார்கள்.
-
6 நீர் ஒருவரே யெகோவா; நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்; வானசேனைகள் உம்மை பணிந்துகொள்ளுகிறது.
-
7 தேவனாகிய யெகோவா மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, உயிரடையச்செய்யும் சுவாசத்தை அவனுடைய மூக்கின் துவாரத்திலே ஊதினார், மனிதன் உயிருள்ள ஆத்துமாவானான்.
-
8 ஓய்வுநாளைப் பரிசுத்தமாக அனுசரிக்க நினை; 9 ஆறுநாட்களும் நீ வேலைசெய்து, உன்னுடைய செயல்களையெல்லாம் நடத்து; 10 ஏழாம்நாளோ உன்னுடைய தேவனாகிய யெகோவாவுடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன்னுடைய மகனானாலும், உன்னுடைய மகளானாலும், உன்னுடைய வேலைக்காரனானாலும், உன்னுடைய வேலைக்காரியானாலும், உன்னுடைய மிருகஜீவனானாலும், உன்னுடைய வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், எந்த வேலையும் செய்யவேண்டாம். 11 யெகோவா ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், யெகோவா ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
-
3 யெகோவாவே மகா தேவனும், எல்லா தெய்வங்களுக்கும் மகாராஜனுமாக இருக்கிறார்.
4 பூமியின் ஆழங்கள் அவருடைய கையில் இருக்கிறது;
மலைகளின் உயரங்களும் அவருடையவைகள்.
5 கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்;
காய்ந்த தரையையும் அவருடைய கரம் உருவாக்கினது.
6 நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக
நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடுவோம் வாருங்கள்.
7 அவர் நம்முடைய தேவன்;
நாம் அவர் மேய்ச்சலின் மக்களும்,
அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.
-
1 அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே,
யெகோவாவை துதியுங்கள்;
உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.
2 அவருடைய தூதர்களே,
நீங்கள் அனைவரும் அவரைத் துதியுங்கள்;
அவருடைய சேனைகளே, நீங்கள் அனைவரும் அவரைத் துதியுங்கள்.
3 சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்;
பிரகாசமுள்ள எல்லா நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள்.
4 வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்;
வானத்தின் மேலுள்ள தண்ணீர்களே,
அவரைத் துதியுங்கள்.
5 அவைகள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்;
அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.
6 அவர் அவைகளை என்றைக்குமுள்ள எல்லாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்;
மாறாத கட்டளையை அவைகளுக்கு நியமித்தார்.
7 பூமியிலுள்ளவைகளே, யெகோவாவை துதியுங்கள்;
பெரிய மீன்களே, எல்லா ஆழங்களே,
8 அக்கினியே, கல்மழையே, உறைந்த மழையே, மூடுபனியே,
அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே,
9 மலைகளே, எல்லா மேடுகளே, கனிமரங்களே,
எல்லா கேதுருக்களே,
10 காட்டுமிருகங்களே, எல்லா நாட்டு மிருகங்களே,
ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே,
11 பூமியின் ராஜாக்களே, எல்லா மக்களே, பிரபுக்களே,
பூமியிலுள்ள எல்லா நியாயாதிபதிகளே,
12 வாலிபரே, கன்னிகைகளே, முதிர் வயதுள்ளவர்களே, பிள்ளைகளே,
யெகோவாவை துதியுங்கள்.
13 அவர்கள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்;
அவருடைய பெயர் மட்டும் உயர்ந்தது;
அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.
14 அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும்,
தம்மைச் சேர்ந்த மக்களாகிய இஸ்ரவேல் மக்களுக்கும் கொண்டாட்டமாக,
தம்முடைய மக்களுக்கு ஒரு கொம்பை உயர்த்தினார்.
அல்லேலூயா.
-
3 நடமாடுகிற உயிரினங்கள் அனைத்தும் உங்களுக்கு உணவாக இருக்கட்டும்; பசுமையான தாவரங்களை உங்களுக்குக் கொடுத்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குக் கொடுத்தேன். 4 இறைச்சியை அதின் உயிராகிய இரத்தத்துடன் சாப்பிடவேண்டாம். 5 உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; அனைத்து உயிரினங்களிடத்திலும் மனிதனிடத்திலும் பழிவாங்குவேன்; மனிதனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன். 6 மனிதன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டதால், மனிதனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனிதனாலே சிந்தப்படட்டும்.
-
தாவீதின் பாடல்.
1 பூமியும் அதின் நிறைவும்,
உலகமும் அதிலுள்ள குடிமக்கள் யாவும் யெகோவாவுடையவை.
2 ஏனெனில் அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி,
அதை நதிகளுக்கு மேலாக நிறுவினார்.
-
13 நீர் என்னுடைய சிந்தையைக் கைக்கொண்டிருக்கிறீர்;
என்னுடைய தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். 14 நான் பிரமிக்கத்தக்க அதிசயமாக உண்டாக்கப்பட்டதால், உம்மைத் துதிப்பேன்;
உமது செயல்கள் அதிசயமானவைகள்;
அது என்னுடைய ஆத்துமாவுக்கு நன்றாகத் தெரியும்.
15 நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு,
பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாக உருவாக்கப்பட்டபோது,
என்னுடைய எலும்புகள் உமக்கு மறைவாக இருக்கவில்லை.
16 என்னுடைய கருவை உம்முடைய கண்கள் கண்டது;
என்னுடைய உறுப்புகளில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும்,
அவைகள் உருவேற்படும் நாட்களும்,
உமது புத்தகத்தில் எழுதியிருந்தது.
-
5 வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற மக்களுக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்கிறதாவது: 6 நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைச் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும், 7 கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப் பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை மக்களுக்கு உடன்படிக்கையாகவும் தேசங்களுக்கு ஒளியாகவும் வைக்கிறேன். 8 நான் யெகோவா, இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை சிலைகளுக்கும் கொடுக்கமாட்டேன். 9 ஆரம்பகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்கிறேன்.
10 கடலில் பயணம்செய்கிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே, அவைகளின் குடிகளே, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்.
-
17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவிற்குள் இருந்தால் புதுப்படைப்பாக இருக்கிறான்; பழையவைகள் எல்லாம் ஒழிந்துபோனது, எல்லாம் புதிதானது. 18 இவைகளெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மை அவரோடு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். 19 அது என்னவென்றால், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவிற்குள் அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடம் ஒப்புவித்தார். 20 ஆகவே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக இருந்து, தேவனோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவினால் உங்களை வேண்டிக்கொள்கிறோம். 21 நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாக இருப்பதற்காக, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
-
7 அவர் வடக்குமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து,
பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.
8 அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்;
அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை.
9 அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாயத்தை பலப்படுத்தி,
அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார்.
10 அவர் தண்ணீர்கள்மேல் சுழற்சி வட்டம் அமைத்தார்;
வெளிச்சமும் இருளும் முடியும்வரை அப்படியே இருக்கும்.
11 அவருடைய கண்டிப்பினால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும்.
12 அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரச்செய்து,
தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார்.
13 தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்;
அவருடைய கை நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உண்டாக்கியது.
14 இதோ, இவைகள் அவருடைய படைப்பில் கடைசியானவைகள்,
அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்;
அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார்” என்றான்.
-
5 வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் எனப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக ஆண்டவன்மார்களும் உண்டாயிருந்தாலும், 6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்கு உண்டு, அவராலே அனைத்தும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்கு உண்டு; அவர் மூலமாக அனைத்தும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாக நாமும் உண்டாயிருக்கிறோம்.
-
4 அவர் திரும்பவருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? முற்பிதாக்கள் மரித்தபின்பு எல்லாக் காரியங்களும் படைப்பின் ஆரம்பத்தில் இருந்தவிதமாகவே இருக்கிறதே என்று சொல்லுவார்கள். 5 ஆதிகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும் பூமியும் தண்ணீரிலிருந்து தோன்றி தண்ணீரினாலே நிலைகொண்டிருக்கிறது என்பதையும், 6 அப்பொழுது இருந்த உலகம் பெருவெள்ளத்தினாலே அழிந்தது என்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள். 7 இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அதே வார்த்தையினாலே நெருப்புக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தி இல்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரை காக்கப்பட்டிருக்கிறது. 8 பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருடங்களைப்போலவும், ஆயிரம் வருடங்கள் ஒருநாளைப்போலவும் இருக்கிறது என்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாமல் இருக்கவேண்டாம். 9 தாமதம் பண்ணுகிறார் என்று சிலர் நினைக்கிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதம்பண்ணாமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனம்திரும்பவேண்டும் என்று விரும்பி, நம்மேல் நீடியபொறுமை உள்ளவராக இருக்கிறார். 10 கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறதுபோல வரும்; அப்பொழுது வானங்கள் பயங்கர சத்தத்தோடு விலகிப்போகும், பஞ்சபூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதில் உள்ள செயல்களும் எரிந்து அழிந்துபோகும். 11 இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாக இருக்கிறதினால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த வாழ்க்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாக இருக்கவேண்டும்! 12 தேவன் வருகின்ற நாள் சீக்கிரமாக வருவதற்கு அதிக ஆவலோடு காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பஞ்சபூதங்கள் எரிந்து உருகிப்போகும். 13 அவருடைய வாக்குத்தத்தத்தின்படி நீதி நிலைத்திருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகும் என்று காத்திருக்கிறோம்.
-
16 அவர் பெண்ணை நோக்கி: “நீ கர்ப்பவதியாக இருக்கும்போது உன் வேதனையை மிகவும் அதிகப்படுத்துவேன்; வேதனையோடு பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன்னுடைய கணவனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்” என்றார். 17 பின்பு அவர் ஆதாமை நோக்கி: “நீ உன்னுடைய மனைவியின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சாப்பிடவேண்டாம் என்று நான் உனக்குச் சொன்ன மரத்தின் பழத்தை சாப்பிட்டதால், பூமி உன்னால் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் வருத்தத்தோடு அதின் பலனைச் சாப்பிடுவாய். 18 அது உனக்கு முட்செடிகளை முளைப்பிக்கும்; நிலத்தின் பயிர்வகைகளைச் சாப்பிடுவாய். 19 நீ மண்ணிலிருந்து எடுக்கப்பட்டதால், நீ மண்ணுக்குத் திரும்பும்வரைக்கும் உன் முகத்தின் வியர்வையைச் சிந்தி ஆகாரம் சாப்பிடுவாய்; நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்” என்றார்.
-
7 இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார்,
அவைகள் உனக்குப் போதிக்கும் ஆகாயத்துப் பறவைகளைக் கேள்,
அவைகள் உனக்கு அறிவிக்கும்.
8 அல்லது பூமியை விசாரித்துக் கேள்,
அது உனக்குப் போதிக்கும்;
சமுத்திரத்தின் மீன்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும்.
9 யெகோவாவுடைய கரம் இதைச் செய்ததென்று இவைகள் எல்லாவற்றினாலும் அறியாதவன் யார்?
10 எல்லா உயிரினங்களின் உயிரும்,
மாம்சமான எல்லா மனிதரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது.
11 வாயானது ஆகாரத்தை ருசிபார்க்கிறதுபோல,
காதானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா?
12 முதியோரிடத்தில் ஞானமும் வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.
-
2 மகிழ்ச்சியோடு யெகோவாவுக்கு ஆராதனைசெய்து,
ஆனந்தசத்தத்தோடு அவர் முன்பாக வாருங்கள்.
3 யெகோவாவே தேவனென்று அறியுங்கள்;
நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்;
நாம் அவர் மக்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாக இருக்கிறோம்.
-
8 கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானது இல்லை, இது தேவனுடைய ஈவு; 9 ஒருவரும் பெருமைப்படாதபடி இது செயல்களினால் உண்டானது இல்லை; 10 ஏனென்றால், நற்செயல்களைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவிற்குள் உருவாக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாக இருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
-
10 கர்த்தாவே, நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கைவேலைகளாக இருக்கிறது; 11 அவைகள் அழிந்துபோகும்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகள் எல்லாம் ஆடைபோலப் பழைமையாகப்போகும்; 12 ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது அவைகள் மாறிப்போகும்; ஆனால், நீரோ மாறாதவராக இருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்து போவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.
-
28 பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது.
-
6 நான் வடக்கை நோக்கி: கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் மகன்களையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் மகள்களையும், 7 நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் பெயர் சூட்டப்பட்ட அனைவரையும் கொண்டுவா என்பேன்.
-
11 வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராமல் அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். 12 அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூமியின் நிலப்பரப்பை தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார். 13 அவர் சத்தமிடும்போது வானத்தில் திரளான தண்ணீர் உண்டாகிறது; அவர் பூமியின் எல்லையிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது கிடங்குகளிலிருந்து புறப்படச்செய்கிறார்.
-
8 லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் முடவனாக இருந்து, ஒருபோதும் நடக்காமல், கால்கள் செயலற்றவனாக உட்கார்ந்து, 9 பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு, 10 நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தமாகச் சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான். 11 பவுல் செய்ததை மக்கள் கண்டு, தேவர்கள் மனித உருவமெடுத்து நம்மிடத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா மொழியிலே சத்தமிட்டுச் சொல்லி, 12 பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்குரி என்றும் சொன்னார்கள். 13 அல்லாமலும் பட்டணத்திற்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய முக்கியமான கோவிலின் மதகுரு எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, மக்களோடுகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான். 14 அப்போஸ்தலர்களாகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்களுடைய துணிகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்திற்குள்ளே ஓடி, உரத்த சத்தமாக: 15 மனிதர்களே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனிதர்கள் தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் கடலையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்கு திரும்பவேண்டும் என்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம். 16 கடந்த காலங்களில் அவர் எல்லா மக்களையும் தங்கள் தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தும், 17 அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாக அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணியிருக்கிறார் என்றார்கள். 18 இப்படி அவர்கள் சொல்லியும் தங்களுக்கு மக்கள் பலியிடாதபடிக்கு அவர்களை தடுத்து நிறுத்துவது கடினமாக இருந்தது.
-
1 அப்பொழுது யெகோவா: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு மறுமொழியாக:
2 “அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை இருளாக்குகிற இவன் யார்?
3 இப்போதும் மனிதனைப்போல் ஆடையைக்கட்டிக்கொள்;
நான் உன்னைக் கேட்பேன்;
நீ எனக்குப் பதில் சொல்
4 நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்?
நீ அறிவாளியானால் அதைச் சொல்.
5 அதற்கு அளவு குறித்தவர் யார்?
அதின்மேல் நூல்போட்டவர் யார்?
இதை நீ அறிந்திருந்தால் சொல்.
6 அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது?
அதின் மூலைக்கல்லை வைத்தவர் யார்?
7 அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஒன்றாகப்பாடி,
தேவமகன்கள் எல்லோரும் கெம்பீரித்தார்களே.
8 கர்ப்பத்திலிருந்து பிறக்கிறதுபோல் கடல் புரண்டுவந்தபோது,
அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?
9 மேகத்தை அதற்கு ஆடையாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும்,
10 நான் அதற்கு எல்லையைக் குறித்து,
அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு:
11 இதுவரை வா, மீறி வராதே;
உன் அலைகளின் பெருமை இங்கே அடங்குவதாக என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்?
12 தீயவர்கள் பூமியிலிருந்து அகற்றிப்போடுவதற்காக,
அதின் கடைசி எல்லைகளைப் பிடிக்க,
13 உன் வாழ்நாளிலே எப்போதாவது நீ அதிகாலைக்குக் கட்டளை கொடுத்து,
சூரிய உதயத்திற்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ?
14 பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல வேறே தோற்றம்கொள்ளும்;
அனைத்தும் ஆடை அணிந்திருக்கிறதுபோலக் காணப்படும்.
15 துன்மார்க்கரின் ஒளி அவர்களைவிட்டு எடுபடும்;
மேட்டிமையான கை முறிக்கப்படும். 16 நீ சமுத்திரத்தின் அடித்தளங்கள்வரை புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ?
17 மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ?
மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ?
18 நீ பூமியின் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ?
இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல்.
19 வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்திற்கு வழியெங்கே?
இருள் குடிகொண்டிருக்கும் இடமெங்கே?
20 அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ?
அதின் வீட்டிற்குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ?
21 நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ?
உன் நாட்களின் எண்ணிக்கை அவ்வளவு பெரிதோ?
22 உறைந்த மழையின் கிடங்குகளுக்குள் நீ நுழைந்தாயோ?
கல்மழையிலிருக்கிற கிடங்குகளைப் பார்த்தாயோ?
23 ஆபத்துவரும் காலத்திலும், கலகமும் போரும் வரும் காலத்திலும்,
பயன்படுத்த நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன்.
24 வெளிச்சம் பரப்புகிறதற்கும், கீழ்காற்று பூமியின்மேல் வீசுவதற்கான வழி எங்கே?
25 பாழும் வெட்டவெளியுமான தரையைத் திருப்தியாக்கி,
இளம்செடிகளின் முளைகளை முளைக்கவைப்பதற்கு,
26 பூமியெங்கும் மனிதர் குடியில்லாத இடத்திலும்,
மனிதநடமாட்டமில்லாத வனாந்திரத்திலும் மழையைப் பொழியச்செய்து,
27 வெள்ளத்திற்கு நீர்க்கால்களையும்,
இடிமுழக்கங்களுடன் வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்?
28 மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளைப் பிறப்பித்தவர் யார்?
29 உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது?
ஆகாயத்தின் உறைந்த பனியைப் பெற்றவர் யார்?
30 தண்ணீர் பனிக்கட்டியாகி மறைந்து,
ஆழத்தின் முகம் கெட்டியாக உறைந்திருக்கிறதே.
31 அறுமீன் நட்சத்திரத்தின் அழகின் ஒற்றுமையை நீ இணைக்கமுடியுமோ?
அல்லது விண்மீன் குழுவை கலைப்பாயோ?
32 நட்சத்திரங்களை அதினதின் காலத்திலே வரவைப்பாயோ?
துருவமண்டலத்தின் நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?
33 வானத்தின் அமைப்பை நீ அறிவாயோ?
அது பூமியை ஆளும் ஆளுகையை நீ திட்டமிடுவாயோ?
34 ஏராளமான தண்ணீர் உன்மேல் பொழியவேண்டும் என்று
உன் சத்தத்தை மேகங்கள்வரை உயர்த்துவாயோ?
35 நீ மின்னல்களை வரவழைத்து,
அவைகள் புறப்பட்டுவந்து: இதோ,
இங்கேயிருக்கிறோம் என்று உனக்குச் சொல்ல வைப்பாயோ?
36 மறைவான இடத்தில் ஞானத்தை வைத்தவர் யார்?
உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்?
37 ஞானத்தினாலே மேகங்களை எண்ணுபவர் யார்?
38 தூசியானது பரவலாகவும்,
மண்கட்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும்,
வானத்தின் மேகங்களிலுள்ள தண்ணீரைப் பொழியச்செய்கிறவர் யார்?
39 நீ சிங்கத்திற்கு இரையை வேட்டையாடி,
40 சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து குகையில் பதுங்கியிருக்கிறபோது,
அவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ?
41 காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு,
ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது,
அவைகளுக்கு இரையைச் சேகரித்துக் கொடுக்கிறவர் யார்?
-
25 நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்;
வானங்கள் உம்முடைய கரத்தின் செயல்களாக இருக்கிறது.
26 அவைகள் அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் ஆடையைப்போல் பழமையாகப்போகும்;
அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போகும்.
27 நீரோ மாறாதவராக இருக்கிறீர்;
உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை.
-
1 என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று;
என் தேவனாகிய யெகோவாவே, நீர் மிகவும் பெரியவராக இருக்கிறீர்;
மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர்.
2 ஒளியை ஆடையாக அணிந்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர்.
3 தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மேல்தளமாக்கி,
மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய இறக்கைகளின்மேல் செல்லுகிறார்.
4 தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும்,
தம்முடைய ஊழியக்காரர்களை நெருப்பு ஜூவாலைகளாகவும் செய்கிறார்.
5 பூமி ஒருபோதும் நகர்த்த முடியாதபடி அதின் அஸ்திபாரங்கள்மேல் அதை நிறுவினார்.
6 அதை ஆடையினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்;
மலைகளின்மேல் தண்ணீர்கள் நின்றது.
7 அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி,
உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துசென்றது.
8 அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி,
நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது.
9 அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி
கடக்காமல் இருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர்.
10 அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்;
அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது.
11 அவைகள் வெளியின் உயிர்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும்;
அங்கே காட்டுக்கழுதைகள் தங்களுடைய தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்.
12 அவைகளின் ஓரமாக வானத்துப் பறவைகள் குடியிருந்து,
கிளைகள் மேலிருந்து பாடும்.
13 தம்முடைய மேல்வீடுகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் இறைக்கிறார்;
உமது செயல்களின் பயனால் பூமி திருப்தியாக இருக்கிறது.
14 பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும்,
மனிதருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்.
15 மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சைரசத்தையும்,
அவனுக்கு முகக்களையை உண்டாக்கும் எண்ணெயையும்,
மனிதனுடைய இருதயத்தை ஆதரிக்கும் உணவையும் விளைவிக்கிறார்.
16 யெகோவாவுடைய மரங்களும்,
அவரால் நடப்பட்ட லீபனோனின் கேதுருக்களும் செழித்து நிறைந்திருக்கும்.
17 அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருமரங்கள் கொக்குகளின் குடியிருப்பு.
18 உயர்ந்த மலைகள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுயல்களுக்கும் அடைக்கலம்.
19 சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்;
சூரியன் தன்னுடைய மறையும் நேரத்தை அறியும்.
20 நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இரவுநேரமாகும்;
அதிலே எல்லா காட்டு உயிர்களும் நடமாடும்.
21 இளசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு உணவு கிடைக்கும்படித்தேடும்.
22 சூரியன் உதிக்கும்போது அவைகள் ஒதுங்கி,
தங்களுடைய மறைவிடங்களில் படுத்துக்கொள்ளும்.
23 அப்பொழுது மனிதன் மாலைவரை தன்னுடைய வேலைக்கும்,
தன்னுடைய உழைப்புக்கும் புறப்படுகிறான்.
24 யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு திரளாக இருக்கிறது!
அவைகளையெல்லாம் ஞானமாகப் படைத்தீர்;
பூமி உம்முடைய பொருட்களினால் நிறைந்திருக்கிறது.
25 பெரிதும் அகலமுமான இந்த கடலும் அப்படியே நிறைந்திருக்கிறது;
அதிலே வாழும் சிறியவைகளும் பெரியவைகளுமான கணக்கில்லாத உயிர்கள் உண்டு.
26 அதிலே கப்பல்கள் ஓடும்;
அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு.
27 ஏற்றவேளையில் உணவைத் தருவீர் என்று அவைகளெல்லாம்
உம்மை நோக்கிக் காத்திருக்கும்.
28 நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்;
நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும்.
29 நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்;
நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் இறந்து,
தங்களுடைய மண்ணுக்குத் திரும்பும்.
30 நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் உருவாக்கப்படும்;
நீர் பூமி அனைத்தையும் புதிதாக்குகிறீர்.
31 யெகோவாவுடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்;
யெகோவா தம்முடைய செயல்களிலே மகிழுவார்.
32 அவர் பூமியை நோக்கிப்பார்க்க, அது அதிரும்;
அவர் மலைகளைத் தொட, அவைகள் புகையும்.
33 நான் உயிரோடிருக்கும்வரை என்னுடைய யெகோவாவைப் பாடுவேன்;
நான் உயிரோடிருக்கும்வரையும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன்.
34 நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாக இருக்கும்;
நான் யெகோவாவுக்குள் மகிழுவேன்.
35 பாவிகள் பூமியிலிருந்து மறைந்து,
துன்மார்க்கர்கள் இனி இல்லாமற்போவார்கள்.
என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று,
அல்லேலூயா.
-
17 இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை. 18 நான் படைக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் மக்களை மகிழ்ச்சியாகவும் படைக்கிறேன். 19 நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் மக்களின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை.
-
4 தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்;
சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது.
-
18 வானங்களைப் படைத்து பூமியையும் வெறுமையாக இருக்கும்படிப் படைக்காமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை நிலைநிறுத்தின தேவனாகிய யெகோவா சொல்கிறதாவது: நானே யெகோவா, வேறொருவர் இல்லை.
-
26 வானத்துப் பறவைகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்களுடைய பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைவிட நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? 27 கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? 28 உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறது ஏன்? காட்டுப்பூக்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; 29 என்றாலும், சாலொமோன்கூட தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாவது உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 30 விசுவாசக்குறைவுள்ளவர்களே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப்புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
-
1 பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் பார்த்தேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; கடலும் இல்லாமல்போனது. 2 யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்திலிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருவதைப் பார்த்தேன்; அது தன் கணவனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. 3 மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனிதர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலம் இருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாக இருப்பார்; அவர்களும் அவருடைய மக்களாக இருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடு இருந்து அவர்களுடைய தேவனாக இருப்பார். 4 அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று சொன்னது. 5 சிங்காசனத்தின்மேல் உட்காருந்திருந்தவர்: இதோ, நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும் அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.
-
1 தேவனாகிய யெகோவா படைத்த அனைத்து காட்டு உயிரினங்களைவிட பாம்பானது தந்திரமுள்ளதாக இருந்தது. அது பெண்ணை நோக்கி: “நீங்கள் தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் சாப்பிடக்கூடாது என்று தேவன் சொன்னாரா” என்றது. 2 பெண், பாம்பை நோக்கி: “நாங்கள் தோட்டத்திலுள்ள மரங்களின் பழங்களைச் சாப்பிடலாம்; 3 ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற மரத்தின் பழத்தைக்குறித்து, தேவன்: நீங்கள் சாகாமலிருக்க அதை சாப்பிடவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார்” என்றாள். 4 அப்பொழுது பாம்பு, பெண்ணை நோக்கி: “நீங்கள் சாகவே சாவதில்லை; 5 நீங்கள் இதை சாப்பிடும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்” என்றது. 6 அப்பொழுது அந்தப் பெண், அந்த மரத்தின் பழம் சாப்பிடுவதற்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு ஆசைப்படத்தக்க பழமுமாக இருக்கிறது என்று கண்டு, அந்தப் பழத்தைப் பறித்து, சாப்பிட்டு, தன் கணவனுக்கும் கொடுத்தாள்; அவனும் சாப்பிட்டான்.
-
1 ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனிதனை உருவாக்கின நாளிலே அவனை தேவசாயலாக உண்டாக்கினார்.
-
25 இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை சமமாக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்கிறார். 26 உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் படையை பெரிய கூட்டமாகப் புறப்படச்செய்து, அவைகளையெல்லாம் பெயர்சொல்லி அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.
-
17 ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகா பலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய கரத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மால் செய்யமுடியாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.
-
10 அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாக உண்டானது, உலகமோ அவரை அறியவில்லை.
-
38 மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வரும்காரியங்களானாலும், 39 உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தப் படைப்புகளானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமுடியாது என்று நம்பியிருக்கிறேன்.
Shows Read in context, Share and Copy.