39 Bible Verses About God's Wisdom

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

Bible Verses About God's Wisdom
  1. 13 ஞானத்தைக் கண்டடைகிற மனிதனும்,

    புத்தியைச் சம்பாதிக்கிற மனிதனும் பாக்கியவான்கள்.

    14 அதின் வியாபாரம் வெள்ளி வியாபாரத்திலும்,

    அதின் ஆதாயம் சுத்தப்பொன்னிலும் உத்தமமானது.

    15 முத்துக்களைவிட அது விலையேறப்பெற்றது;

    நீ ஆசைப்படுவது ஒன்றும் அதற்கு சமமல்ல.

    16 அதின் வலதுகையில் நீடித்த ஆயுளும்,

    அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.

    17 அதின் வழிகள் இனிதான வழிகள்,

    அதின் பாதைகளெல்லாம் சமாதானம்.

    18 அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவமரம்,

    அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.

    19 யெகோவா ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி,

    புத்தியினாலே வானங்களை நிலைநிறுத்தினார்.

    20 அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது,

    ஆகாயமும் பனியைப் பெய்கிறது.

    21 என் மகனே, இவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக;

    மெய்ஞானத்தையும் நல்ல ஆலோசனையையும் காத்துக்கொள்.

    22 அவைகள் உன்னுடைய ஆத்துமாவுக்கு உயிரும்,

    உன்னுடைய கழுத்துக்கு அலங்காரமுமாகவும் இருக்கும்.

    23 அப்பொழுது நீ பயமின்றி உன்னுடைய வழியில் நடப்பாய்,

    உன்னுடைய கால் இடறாது.

    24 நீ படுக்கும்போது பயப்படாமல் இருப்பாய்;

    நீ படுத்துக்கொள்ளும்போது உன்னுடைய தூக்கம் இன்பமாக இருக்கும்.

    25 திடீரென வரும் திகிலும்,

    துன்மார்க்கர்களின் பேரழிவும் வரும்போது நீ பயப்படவேண்டாம்.

    26 யெகோவா உன்னுடைய நம்பிக்கையாக இருந்து,

    உன்னுடைய கால் சிக்கிக்கொள்ளாதபடிக் காப்பார்.

  2. 18 சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாக இருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாக இருக்கிறது. 19 அந்தப்படி:

    “ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து,

    புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன்” என்று எழுதியிருக்கிறது.

    20 ஞானி எங்கே? வேதபண்டிதன் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? இந்த உலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா? 21 எப்படியென்றால், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாமல் இருந்ததினால், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமானது. 22 யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள்; 23 நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதர்களுக்கு இடறலாகவும் கிரேக்கர்களுக்குப் பைத்தியமாகவும் இருக்கிறார். 24 ஆனாலும் யூதர்களானாலும் கிரேக்கர்களானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாக இருக்கிறார். 25 இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் எனப்படுவது மனிதர்களுடைய ஞானத்திலும் அதிக ஞானமாக இருக்கிறது; தேவனுடைய பலவீனம் எனப்படுவது மனிதர்களுடைய பலத்திலும் அதிக பலமாக இருக்கிறது. 26 எப்படியென்றால், சகோதரர்களே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மனிதர் பார்வையில் ஞானிகள் அநேகர் இல்லை, வல்லவர்கள் அநேகர் இல்லை, பிரபுக்கள் அநேகர் இல்லை. 27 ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். 28 உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாக எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும் தேவன் தெரிந்துகொண்டார். 29 மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார். 30 அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவிற்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மைபாராட்டுகிறவன் கர்த்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக, 31 அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.

  3. 13 உங்களில் ஞானியும் விவேகியுமாக இருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடு தன் செயல்களை நல்ல நடக்கையினாலே காண்பிக்கவேண்டும். 14 உங்களுடைய இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டவேண்டாம்; சத்தியத்திற்கு விரோதமாகப் பொய் சொல்லாமலிருங்கள். 15 இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாக இல்லாமல், உலக சம்பந்தமானதும், ஜென்ம சுபாவத்திற்குரியதாகவும், பேய்த்தனத்திற்குரியதுமாகவும் இருக்கிறது. 16 வைராக்கியமும், விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் எல்லாத் தீயச்செய்கைகளுமுண்டு. 17 பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாகவும், பின்பு சமாதானமும் சாந்தமும், அன்புமிக்கதாகவும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாகவும், பட்சபாதமில்லாததாகவும், மாயமில்லாததாகவும் இருக்கிறது. 18 நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.

  4. 5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். 6 ஆனாலும் அவன் கொஞ்சம்கூட சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு கேட்கவேண்டும்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாக இருக்கிறான். 7 அப்படிப்பட்ட மனிதன், தான் கர்த்தரிடத்தில் எதையாவது பெறலாமென்று நினைக்காமல் இருப்பானாக. 8 ஏனென்றால், இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாக இருக்கிறான்.

  5. 19 பின்பு இரவுநேரத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது; அப்பொழுது தானியேல் பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினான். 20 பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்திற்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் மகிமையுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது. 21 அவர் காலங்களையும் நேரங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். 22 அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும். 23 என் பிதாக்களின் தேவனே, நீர் எனக்கு ஞானமும் வல்லமையும் கொடுத்து, நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக்கொண்டதை இப்பொழுது எனக்கு அறிவித்து, ராஜாவின் காரியத்தை எங்களுக்குத் தெரிவித்ததினால், உம்மைத் துதித்துப் புகழுகிறேன் என்றான்.

  6. 30 எனவே, நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்து, இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம் பெற்றிருக்கிறதுபோல, 31 அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமல் இருந்தும், பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம்பெறுவார்கள். 32 எல்லோர்மேலும் இரக்கமாக இருப்பதற்காக, தேவன் எல்லோரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்.

    33 ஆ! தேவனுடைய செல்வம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாக இருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளந்துபார்க்க முடியாதவைகள், அவருடைய வழிகள் ஆராய்ந்துபார்க்க முடியாதவைகள்!

    34 “கர்த்தருடைய சிந்தையைத் தெரிந்துகொண்டவன் யார்?

    அவருக்கு ஆலோசனைக்காரனாக இருந்தவன் யார்?

    35 தனக்குத் திரும்பக்கிடைக்கும் என்று முதலில் அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?”

    36 எல்லாம் அவராலும், அவர் மூலமாகவும், அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

  7. 1 என் மகனே, நீ உன்னுடைய செவியை ஞானத்திற்குச் சாய்த்து,

    உன்னுடைய இருதயத்தைப் புத்திக்கு அமையச்செய்வதற்காக,

    2 நீ என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு,

    என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,

    3 ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,

    4 அதை வெள்ளியைப்போல் நாடி,

    புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடினால்,

    5 அப்பொழுது யெகோவாவுக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து,

    தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.

    6 யெகோவா ஞானத்தைத் தருகிறார்;

    அவருடைய வாயிலிருந்து அறிவும் புத்தியும் வரும்.

    7 அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞானத்தை வைத்திருக்கிறார்;

    உத்தமமாக நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாக இருக்கிறார்.

    8 அவர் நியாயத்தின் வழிகளைத் தற்காத்து,

    தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.

    9 அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும்,

    எல்லா நல்வழிகளையும் அறிந்துகொள்வாய்.

    10 ஞானம் உன்னுடைய இருதயத்தில் நுழைந்து,

    அறிவு உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்போது,

    11 நல்யோசனை உன்னைக் காப்பாற்றும்,

    புத்தி உன்னைப் பாதுகாக்கும்.

    12 அதினால் நீ துன்மார்க்கர்களுடைய வழிக்கும்,

    மாறுபாடு பேசுகிற மனிதனுக்கும்,

    13 இருளான வழிகளில் நடக்க நீதிநெறிகளைவிட்டு,

    14 தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கர்களுடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும்,

    15 மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும்

    நீ தப்புவிக்கப்படுவாய்.

  8. 8 பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே,

    அவன் உன்னைப் பகைப்பான்;

    ஞானமுள்ளவனைக் கடிந்துகொள்,

    அவன் உன்னை நேசிப்பான்.

    9 ஞானமுள்ளவனுக்குப் போதி, அவன் ஞானத்தில் தேறுவான்;

    நீதிமானுக்கு உபதேசம் செய்,

    அவன் அறிவில் விருத்தியடைவான்.

    10 யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;

    பரிசுத்த தேவனின் அறிவே அறிவு.

    11 என்னாலே உன்னுடைய ஆயுசு நாட்கள் பெருகும்;

    ஆயுளின் வருடங்கள் விருத்தியாகும்.

    12 நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்;

    நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது.

  9. 1 தாவீதின் மகனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்:

    2 இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து,

    புத்திமதிகளை உணர்ந்து,

    3 விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம்.

    4 இவைகள் பேதைகளுக்கு புத்தியையும், வாலிபர்களுக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும்.

    5 புத்திமான் இவைகளைக் கேட்டு அறிவில் வளருவான்;

    விவேகி நல்ல ஆலோசனைகளை அடைந்து;

    6 நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும்,

    ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் சொன்ன மறைபொருட்களையும் அறிந்துகொள்வான்.

    7 யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;

    மூடர் ஞானத்தையும் அறிவுரைகளையும் அசட்டை செய்கிறார்கள்.

  10. 24 உழுகிறவன் விதைக்கிறதற்காக நாள்தோறும் உழுகிறதுண்டோ? தன் நிலத்தைக் கொத்தி நாள்தோறும் பரம்படிக்கிறது உண்டோ? 25 அவன் அதை மேலாக பரப்பினபின்பு, அதற்கேற்ற இடத்தில் உளுந்தைத் தெளித்து, சீரகத்தைத் தூவி, முதல்தரமான கோதுமையையும் தெரிந்துகொண்ட வாற்கோதுமையையும் கம்பையும் விதைக்கிறான் அல்லவோ? 26 அவனுடைய தேவன் அவனை நன்றாய்ப் போதித்து, அவனை உணர்த்துவிக்கிறார். 27 உளுந்து இரும்புக்கோலாலே போரடிக்கப்படுகிறதில்லை; சீரகத்தின்மேல் வண்டியின் உருளை சுற்றவிடப்படுகிறதுமில்லை; உளுந்து கோலினாலும் சீரகம் மிலாற்றினாலும் அடிக்கப்படும். 28 அப்பத்திற்குத் தானியம் இடிக்கப்படும்; இடைவிடாமல் அவன் அதைப் போரடிக்கிறதில்லை; அவன் தன் வண்டியின் உருளையால் அதை நசுக்குகிறதுமில்லை, தன் குதிரைகளால் அதை நொறுக்குகிறதுமில்லை. 29 இதுவும் சேனைகளின் யெகோவாவாலே உண்டாகிறது; அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்.

  11. 1 உங்களுக்காகவும் லவோதிக்கேயாவில் இருக்கிறவர்களுக்காகவும், சரீரத்தில் என் முகத்தைக் காணாதிருக்கிற மற்றெல்லோருக்காகவும் மிகுந்த போராட்டம் எனக்கு உண்டென்று நீங்கள் அறியவிரும்புகிறேன். 2 அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவிற்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன். 3 அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.

  12. 18 ஒருவனும் தன்னைத்தானே ஏமாற்றாமல் இருக்கட்டும்; இந்த உலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று நினைத்தால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகவேண்டும். 19 ஏனெனில், இந்த உலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாக இருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும், 20 ஞானிகளுடைய எண்ணங்கள் வீணாக இருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது. 21 இப்படியிருக்க, ஒருவனும் மனிதர்களைக்குறித்து மேன்மைபாராட்டாமலிருப்பானாக; எல்லாம் உங்களுடையதே; 22 பவுலானாலும், அப்பொல்லோவானாலும், கேபாவானாலும், உலகமானாலும், ஜீவனானாலும் மரணமானாலும், நிகழ்காரியங்களானாலும், வரும்காரியங்களானாலும், எல்லாம் உங்களுடையது; 23 நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்.

  13. 16 பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது!

    வெள்ளியை சம்பாதிப்பதைவிட புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை

  14. 1 சகோதரர்களே, நான் உங்களிடம் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த பேச்சுத் திறமையோடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை. 2 நான் உங்களோடு இருக்கும்போது சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவைத்தவிர, வேறொன்றையும் அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன். 3 அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடம் இருந்தேன். 4 உங்களுடைய விசுவாசம் மனிதர்களுடைய ஞானத்தில் அல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு, 5 என் பேச்சும் என் பிரசங்கமும் மனித ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாக இல்லாமல், பரிசுத்த ஆவியானவராலும், பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாக இருந்தது.

    6 அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இந்த உலகத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இந்த உலகத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, 7 உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாக இருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். 8 அதை இந்த உலகத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. 9 எழுதியிருக்கிறபடி:

    “தேவன் தம்மேல் அன்பு செலுத்துகிறவர்களுக்கு ஆயத்தம் செய்தவைகளைக்

    கண் காணவும் இல்லை, காது கேட்கவும் இல்லை,

    அவைகள் மனிதனுடைய இருதயத்தில் தோன்றவும் இல்லை;

    10 நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியானவராலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழமான காரியங்களையும் ஆராய்ந்திருக்கிறார். 11 மனிதனிலுள்ள ஆவியேதவிர மனிதர்களில் எவன் மனிதனுக்குரியவைகளை அறிவான்? அதைப்போல, தேவ ஆவியானவரைத்தவிர, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். 12 நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியானவரையே பெற்றோம். 13 அவைகளை நாங்கள் மனிதஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவியானவர் போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவியானவருக்குரியவைகளை ஆவியானவருக்குரியவைகளோடு சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம். 14 ஜென்ம சுபாவமான மனிதனோ தேவ ஆவியானவருக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபடி ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவும் மாட்டான். 15 ஆவியானவருக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.

    16 “கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக

    அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்?”

    எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.

  15. 1 அப்பொழுது யெகோவா: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு மறுமொழியாக:

    2 “அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை இருளாக்குகிற இவன் யார்?

    3 இப்போதும் மனிதனைப்போல் ஆடையைக்கட்டிக்கொள்;

    நான் உன்னைக் கேட்பேன்;

    நீ எனக்குப் பதில் சொல்

    4 நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்?

    நீ அறிவாளியானால் அதைச் சொல்.

    5 அதற்கு அளவு குறித்தவர் யார்?

    அதின்மேல் நூல்போட்டவர் யார்?

    இதை நீ அறிந்திருந்தால் சொல்.

    6 அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது?

    அதின் மூலைக்கல்லை வைத்தவர் யார்?

    7 அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஒன்றாகப்பாடி,

    தேவமகன்கள் எல்லோரும் கெம்பீரித்தார்களே.

    8 கர்ப்பத்திலிருந்து பிறக்கிறதுபோல் கடல் புரண்டுவந்தபோது,

    அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?

    9 மேகத்தை அதற்கு ஆடையாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும்,

    10 நான் அதற்கு எல்லையைக் குறித்து,

    அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு:

    11 இதுவரை வா, மீறி வராதே;

    உன் அலைகளின் பெருமை இங்கே அடங்குவதாக என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்?

    12 தீயவர்கள் பூமியிலிருந்து அகற்றிப்போடுவதற்காக,

    அதின் கடைசி எல்லைகளைப் பிடிக்க,

    13 உன் வாழ்நாளிலே எப்போதாவது நீ அதிகாலைக்குக் கட்டளை கொடுத்து,

    சூரிய உதயத்திற்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ?

    14 பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல வேறே தோற்றம்கொள்ளும்;

    அனைத்தும் ஆடை அணிந்திருக்கிறதுபோலக் காணப்படும்.

    15 துன்மார்க்கரின் ஒளி அவர்களைவிட்டு எடுபடும்;

    மேட்டிமையான கை முறிக்கப்படும். 16 நீ சமுத்திரத்தின் அடித்தளங்கள்வரை புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ?

    17 மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ?

    மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ?

    18 நீ பூமியின் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ?

    இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல்.

    19 வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்திற்கு வழியெங்கே?

    இருள் குடிகொண்டிருக்கும் இடமெங்கே?

    20 அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ?

    அதின் வீட்டிற்குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ?

    21 நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ?

    உன் நாட்களின் எண்ணிக்கை அவ்வளவு பெரிதோ?

    22 உறைந்த மழையின் கிடங்குகளுக்குள் நீ நுழைந்தாயோ?

    கல்மழையிலிருக்கிற கிடங்குகளைப் பார்த்தாயோ?

    23 ஆபத்துவரும் காலத்திலும், கலகமும் போரும் வரும் காலத்திலும்,

    பயன்படுத்த நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன்.

    24 வெளிச்சம் பரப்புகிறதற்கும், கீழ்காற்று பூமியின்மேல் வீசுவதற்கான வழி எங்கே?

    25 பாழும் வெட்டவெளியுமான தரையைத் திருப்தியாக்கி,

    இளம்செடிகளின் முளைகளை முளைக்கவைப்பதற்கு,

    26 பூமியெங்கும் மனிதர் குடியில்லாத இடத்திலும்,

    மனிதநடமாட்டமில்லாத வனாந்திரத்திலும் மழையைப் பொழியச்செய்து,

    27 வெள்ளத்திற்கு நீர்க்கால்களையும்,

    இடிமுழக்கங்களுடன் வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்?

    28 மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளைப் பிறப்பித்தவர் யார்?

    29 உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது?

    ஆகாயத்தின் உறைந்த பனியைப் பெற்றவர் யார்?

    30 தண்ணீர் பனிக்கட்டியாகி மறைந்து,

    ஆழத்தின் முகம் கெட்டியாக உறைந்திருக்கிறதே.

    31 அறுமீன் நட்சத்திரத்தின் அழகின் ஒற்றுமையை நீ இணைக்கமுடியுமோ?

    அல்லது விண்மீன் குழுவை கலைப்பாயோ?

    32 நட்சத்திரங்களை அதினதின் காலத்திலே வரவைப்பாயோ?

    துருவமண்டலத்தின் நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?

    33 வானத்தின் அமைப்பை நீ அறிவாயோ?

    அது பூமியை ஆளும் ஆளுகையை நீ திட்டமிடுவாயோ?

    34 ஏராளமான தண்ணீர் உன்மேல் பொழியவேண்டும் என்று

    உன் சத்தத்தை மேகங்கள்வரை உயர்த்துவாயோ?

    35 நீ மின்னல்களை வரவழைத்து,

    அவைகள் புறப்பட்டுவந்து: இதோ,

    இங்கேயிருக்கிறோம் என்று உனக்குச் சொல்ல வைப்பாயோ?

    36 மறைவான இடத்தில் ஞானத்தை வைத்தவர் யார்?

    உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்?

    37 ஞானத்தினாலே மேகங்களை எண்ணுபவர் யார்?

    38 தூசியானது பரவலாகவும்,

    மண்கட்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும்,

    வானத்தின் மேகங்களிலுள்ள தண்ணீரைப் பொழியச்செய்கிறவர் யார்?

    39 நீ சிங்கத்திற்கு இரையை வேட்டையாடி,

    40 சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து குகையில் பதுங்கியிருக்கிறபோது,

    அவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ?

    41 காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு,

    ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது,

    அவைகளுக்கு இரையைச் சேகரித்துக் கொடுக்கிறவர் யார்?

  16. 15 எனவே, நீங்கள் ஞானம் இல்லாதவர்களைப்போல நடக்காமல், ஞானம் உள்ளவர்களைப்போலக் கவனமாக நடந்துகொண்டு, 16 நாட்கள் பொல்லாதவைகளாக இருப்பதால் காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். 17 எனவே, நீங்கள் அறிவில்லாதவர்களாக இல்லாமல், கர்த்தருடைய விருப்பம் என்னவென்று உணர்ந்துகொள்ளுங்கள்.

  17. 15 எனவே, கர்த்தராகிய இயேசுவின்மேல் உள்ள உங்களுடைய விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லோர்மேலும் உள்ள உங்களுடைய அன்பையும்குறித்து நான் கேள்விப்பட்டு, 16 இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து, 17 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும், 18 அவர் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை என்னவென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற உரிமைப்பங்கினுடைய மகிமையின் ஐசுவரியம் என்னவென்றும்; 19 தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த வல்லமையின்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடம் காண்பிக்கும் அவருடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் என்னவென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டும் என்றும் வேண்டிக்கொள்ளுகிறேன். 20 எல்லா ஆளுகைக்கும், அதிகாரத்திற்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்திற்கும், இக்காலத்தில் மட்டுமல்ல வருங்காலத்திற்கும் பெயர்பெற்றிருக்கும் எல்லா நாமத்திற்கும் மேலாக அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, 21 அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபக்கத்தில் உட்காரும்படிச் செய்து, 22 எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, 23 எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.

  18. 24 யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு திரளாக இருக்கிறது!

    அவைகளையெல்லாம் ஞானமாகப் படைத்தீர்;

    பூமி உம்முடைய பொருட்களினால் நிறைந்திருக்கிறது.

    25 பெரிதும் அகலமுமான இந்த கடலும் அப்படியே நிறைந்திருக்கிறது;

    அதிலே வாழும் சிறியவைகளும் பெரியவைகளுமான கணக்கில்லாத உயிர்கள் உண்டு.

    26 அதிலே கப்பல்கள் ஓடும்;

    அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு.

  19. 12 தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் கணக்கிட்டு, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, மலைகளை அளவுகோலாலும், தராசாலும் நிறுத்தவர் யார்? 13 யெகோவாவுடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்? 14 தமக்கு அறிவை உணர்த்தவும், தம்மை நியாயவழியிலே உபதேசிக்கவும், தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு விவேகத்தின் வழியை அறிவிக்கவும், அவர் யாருடன் ஆலோசனை செய்தார்?

  20. 9 என்னுடைய மகனாகிய சாலொமோனே, நீ உன்னுடைய பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் பணிந்துகொள்; யெகோவா எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றென்றைக்கும் கைவிடுவார்.

  21. இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல்.

    1 யெகோவாவே, நீர் என்னை ஆராய்ந்து,

    அறிந்திருக்கிறீர்.

    2 என்னுடைய உட்காருதலையும்

    என்னுடைய எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்;

    என்னுடைய நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.

    3 நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்;

    என்னுடைய வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.

    4 என்னுடைய நாவில் சொல் உருவாகுமுன்னே,

    இதோ, யெகோவாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.

    5 முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி,

    உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்.

    6 இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும்,

    எனக்கு எட்டாத உயரமுமாக இருக்கிறது.

  22. 28 பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது.

  23. 12 அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூமியின் நிலப்பரப்பை தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்.

  24. 7 அன்று இரவிலே தேவன் சாலொமோனுக்குக் காட்சியளித்து: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார். 8 சாலொமோன் தேவனை நோக்கி: தேவரீர் என் தகப்பனாகிய தாவீதுக்குப் பெரிய கிருபை செய்து, என்னை அவனுடைய இடத்திலே ராஜாவாக்கினீர். 9 இப்போதும் தேவனாகிய யெகோவாவே, நீர் என் தகப்பனாகிய தாவீதுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தம் உறுதிப்படுவதாக; தேவரீர் பூமியின் தூளைப்போன்ற ஏராளமான மக்களின்மேல் என்னை ராஜாவாக்கினீர். 10 இப்போதும் நான் இந்த மக்களுக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய மக்களை நியாயம் விசாரிக்கத் தகுதியுள்ளவன் யார் என்றான். 11 அப்பொழுது தேவன் சாலொமோனை நோக்கி: இந்த விருப்பம் உன் இருதயத்தில் இருந்ததாலும், நீ ஐசுவரியத்தையும் சொத்துக்களையும் கனத்தையும், உன் எதிரிகளின் உயிரையும், நீடித்த ஆயுளையும் கேட்காமல், நான் உன்னை அரசாளச்செய்த என் மக்களை நியாயம் விசாரிப்பதற்கேற்ற ஞானத்தையும் விவேகத்தையும் நீ கேட்டதாலும், 12 ஞானமும் விவேகமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்கு முன்னும் பின்னும் இருந்த ராஜாக்களுக்கு இல்லாத ஐசுவரியத்தையும் சொத்துக்களையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார்.

  25. 8 என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று யெகோவா சொல்கிறார். 9 பூமியைக்காட்டிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைக்காட்டிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைக்காட்டிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.

  26. 8 பரிசுத்தவான்கள் எல்லோரையும்விட சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவில்லாத ஐசுவரியத்தை யூதரல்லாதவர்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 9 தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிற்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படி, 10 உன்னதங்களிலுள்ள ஆட்சிக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாக இப்பொழுது தெரியவரும்படி, 11 இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள்முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் என்னவென்று, எல்லோருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

  27. 5 நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்;

    அவருடைய அறிவு அளவில்லாதது.

  28. 24 ஆகவே, நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனிதனுக்கு ஒப்பிடுவேன். 25 பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. 26 நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனிதனுக்கு ஒப்பிடப்படுவான். 27 பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். 28 இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லிமுடித்தபோது, அவர் வேதபண்டிதர்களைப்போல போதிக்காமல், அதிகாரமுடையவராக அவர்களுக்குப் போதித்ததினால், 29 மக்கள் அவருடைய போதனையைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

  29. 7 இப்போதும் என்னுடைய தேவனாகிய யெகோவாவே, தேவரீர் உமது அடியேனை என்னுடைய தகப்பனாகிய தாவீதின் இடத்திலே ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்குவரத்து அறியாத சிறுபிள்ளையாக இருக்கிறேன். 8 நீர் தெரிந்துகொண்டதும் மிகுதியான எண்ணிக்கைக்கு அடங்காததும் கணக்கில் சேராததுமான திரளான மக்களாகிய உமது மக்களின் நடுவில் அடியேன் இருக்கிறேன். 9 ஆகையால் உமது மக்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று பகுத்தறியவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; மிகுதியாக இருக்கிற உமது மக்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான். 10 சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்குப் பிரியமான விண்ணப்பமாக இருந்தது. 11 ஆகையால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேட்காமலும், ஐசுவரியத்தைக் கேட்காமலும், உன்னுடைய எதிரிகளின் உயிரைக் கேட்காமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிப்பதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு கேட்டுக்கொண்டதால், 12 உன்னுடைய வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்கு இணையானவன் உனக்குமுன்பு இருந்ததுமில்லை, உனக்கு இணையானவன் உனக்குப்பின்பு எழும்புவதுமில்லை. 13 இதுவுமில்லாமல், நீ கேட்காத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன்னுடைய நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்கு இணையானவன் இருப்பதில்லை. 14 உன்னுடைய தகப்பனாகிய தாவீது நடந்தது போல, நீயும் என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய நியமங்களையும் கைக்கொண்டு, என்னுடைய வழிகளில் நடந்தால், உன்னுடைய நாட்களையும் நீடித்திருக்கச்செய்வேன் என்றார்.

  30. 28 ராஜா தீர்த்த இந்த நியாயத்தை இஸ்ரவேலர்கள் எல்லோரும் கேள்விப்பட்டு, நியாயம் விசாரிப்பதற்கு தேவன் அருளின ஞானம் ராஜாவிற்கு உண்டென்று கண்டு, அவனுக்குப் பயந்தார்கள்.

  31. 22 உயர்ந்தோரை நியாயந்தீர்க்கிற தேவனுக்கு அறிவை உணர்த்த யாராலாகும்?

  32. 7 ஆரம்பகாலத்து மக்களை நான் ஸ்தாபித்தது முதற்கொண்டு, என்னைப்போல எதையாகிலும் வரவழைத்து, இன்னின்னதென்று முன்னறிவித்து, எனக்கு முன்னே வரிசையாக நிறுத்தத்தக்கவன் யார்? நிகழ்காரியங்களையும் வருங்காரியங்களையும் தங்களுக்கு அவர்கள் அறிவிக்கட்டும்.

  33. 7 தேசங்களின் ராஜாவே, உமக்குப் பயப்படாதிருப்பவன் யார்? தேவரீர் ஒருவருக்கே பயப்படவேண்டியது; மக்களுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய எல்லா தேசத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை.

  34. 12 முதியோரிடத்தில் ஞானமும் வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.

    13 அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாக இருக்கும்?

    அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.

  35. 14 ஆகவே, என்ன பதில் சொல்லுவோமென்று கவலைப்படாமலிருக்கும்படி உங்களுடைய மனதிலே தீர்மானம் செய்துகொள்ளுங்கள். 15 உங்களுக்கு எதிராக இருக்கிறவர்கள் ஒருவரும் எதிர்த்துப் பேசவும் எதிர்த்து நிற்கவும் முடியாத வார்த்தையையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.

  36. 29 தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலைப்போல பரந்த புரிந்துகொள்ளும் திறனையும் கொடுத்தார். 30 சகல கிழக்குப்பகுதி மக்களின் ஞானத்தையும் எகிப்தியர்களின் சகல ஞானத்தையும்விட சாலொமோனின் ஞானம் சிறந்ததாக இருந்தது. 31 அவன் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் மகன்களிலும், மற்ற எல்லா மனிதர்களிலும் ஞானவானாக இருந்தான்; சுற்றிலும் இருந்த சகல தேசங்களிலும் அவன் புகழ் பிரபலமாக இருந்தது. 32 அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து. 33 லீபனோனில் இருக்கிற கேதுரு மரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டு வரைக்குமுள்ள மரமுதலிய தாவரங்களைக்குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊருகிற பிராணிகள் மீன்கள் ஆகிய இவைகளைக் குறித்தும் சொன்னான். 34 சாலொமோனின் ஞானத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட பூமியின் எல்லா ராஜாக்களிடத்திலுமிருந்தும் எல்லா தேசத்து மக்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்பதற்கு வந்தார்கள்.

  37. 24 உங்களை இடறிவிழாமல் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே அதிக மகிழ்ச்சியோடு உங்களை மாசு இல்லாதவர்களாக நிறுத்தவும், வல்லமை உள்ளவரும், 25 தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும், இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.

  38. 30 யெகோவாவுக்கு விரோதமான

    ஞானமும், புத்தியும், ஆலோசனையும் இல்லை.

  39. 12 ஆதலால்: ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது, அசீரிய ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின் வினையையும், அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும் நான் விசாரிப்பேன் என்கிறார். 13 அவன் என் கையின் பெலத்தினாலும், என் ஞானத்தினாலும் இதைச் செய்தேன்; நான் புத்திமான், நான் மக்களின் எல்லைகளை மாற்றி, அவர்கள் பண்டகசாலைகளைக் கொள்ளையிட்டு வல்லவனைப்போல் குடிமக்களைத் தாழ்த்தினேன். 14 ஒரு குருவிக்கூட்டைக் கண்டுபிடிக்கிறதுபோல் என் கை மக்களின் ஆஸ்தியைக் கண்டுபிடித்தது; விட்டுவிடப்பட்ட முட்டைகளை வாரிக்கொள்வதுபோல் பூமியையெல்லாம் நான் வாரிக்கொண்டேன்; ஒருவரும் இறக்கையை அசைத்ததுமில்லை, வாயைத் திறந்ததுமில்லை, கீச்சென்று சத்தமிட்டதுமில்லை என்று சொல்கிறான்.