57 Bible Verses About Satan

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

Bible Verses About Satan
  1. 3 அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு கிரீடங்களையுடைய சிவப்பான பெரிய இராட்சசப் பாம்பு இருந்தது. 4 அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளியது; பிரசவவேதனைப்படுகிற அந்தப் பெண் குழந்தைபெற்றவுடனே, அவளுடைய குழந்தையைக் கொன்றுபோடுவதற்காக அந்த இராட்சசப் பாம்பு அவளுக்கு முன்பாக நின்றது. 5 எல்லா தேசங்களையும் இரும்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை அவள் பெற்றாள்; அவளுடைய குழந்தை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது. 6 அந்தப் பெண் வனாந்திரத்திற்கு ஓடிப்போனாள்; அவளை ஆயிரத்து இருநூற்றுஅறுபது நாட்கள் போஷிப்பதற்காக தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அங்கே இருந்தது. 7 வானத்திலே யுத்தம் உண்டானது; அந்த யுத்தத்தில் மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் இராட்சசப் பாம்போடு யுத்தம்பண்ணினார்கள்; இராட்சசப் பாம்பும் அதைச் சேர்ந்த தூதர்களும் யுத்தம்பண்ணியும் வெற்றி பெறமுடியவில்லை. 8 பரலோகத்தில் அவர்கள் இருந்த இடமும் காணாமல்போனது. 9 உலகம் முழுவதையும் ஏமாற்றுகிறவன் பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட ஆரம்பத்தில் இருந்த பாம்பாகிய பெரிய இராட்சசப் பாம்பு தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதோடு அதைச் சேர்ந்த தூதர்களும் தள்ளப்பட்டார்கள்.

  2. 10 கடைசியாக, என் சகோதரர்களே, கர்த்தரிலும் அவருடைய வல்லமையிலும் பலப்படுங்கள். 11 நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திறமையுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதங்களையும் அணிந்துகொள்ளுங்கள். 12 ஏனென்றால், சரீரத்தோடும் இரத்தத்தோடும் இல்லை, ஆளுகைகளோடும், அதிகாரங்களோடும், இந்த உலகத்தின் இருளின் அதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் படைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. 13 எனவே, தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், எல்லாவற்றையும் செய்துமுடித்தவர்களாக நிற்கவும் திறமையுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். 14 சத்தியம் என்னும் கச்சையை உங்களுடைய இடுப்பில் கட்டினவர்களாகவும், நீதி என்னும் மார்புக்கவசத்தை அணிந்தவர்களாகவும்; 15 சமாதானத்தின் நற்செய்திக்குரிய ஆயத்தம் என்னும் காலணிகளைக் கால்களிலே தொடுத்தவர்களாகவும்; 16 சாத்தான் எய்யும் அக்கினி அம்புகளையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாக, எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம் என்னும் கேடயத்தைப் பிடித்துக்கொண்டவர்களாகவும் நில்லுங்கள்.

  3. 1 ஒரு தேவதூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். 2 பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட ஆரம்பத்தில் இருந்த பாம்பாகிய இராட்சசப் பாம்பை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருடங்கள் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருடங்கள் நிறைவேறும்வரைக்கும் அது மக்களை ஏமாற்றாதபடிக்கு அதைப் பாதாளத்திலே போட்டு, அதின்மேல் முத்திரைபோட்டான். 3 அதற்குப்பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும். 4 அன்றியும், நான் சிங்காசனங்களைப் பார்த்தேன்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அதிகாரம் அளிக்கப்பட்டவர்கள் அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள். இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் உருவத்தையாவது வணங்காமலும் தங்களுடைய நெற்றியிலும் தங்களுடைய கையிலும் அதின் முத்திரையைத் அணிந்துகொள்ளாமலும் இருந்தவர்களையும் பார்த்தேன். அவர்கள் உயிர்த்தெழுந்து கிறிஸ்துவோடுகூட ஆயிரம் வருடங்கள் அரசாண்டார்கள். 5 மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருடங்கள் முடியும்வரை உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல். 6 முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாக இருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரம் இல்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவிற்கும் முன்பாக ஆசாரியர்களாக இருந்து, அவரோடுகூட ஆயிரம் வருடங்கள் அரசாளுவார்கள்.

    7 அந்த ஆயிரம் வருடங்கள் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி, 8 பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள தேசத்து மக்களாகிய கோகையும் மாகோகையும் ஏமாற்றவும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய எண்ணிக்கை கடற்கரை மணலைப்போல இருக்கும். 9 அவர்கள் பூமியெங்கும் நிரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களை அழித்துப்போட்டது. 10 மேலும் அவர்களை ஏமாற்றின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் இருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் எல்லாக் காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.

  4. 8 தெளிந்த புத்தி உள்ளவர்களாக இருங்கள், விழித்திருங்கள்; ஏனென்றால், உங்களுடைய எதிராளியாகிய பிசாசு கெர்ச்சிக்கிற சிங்கம்போல யாரை விழுங்கலாமோ என்று தேடிச் சுற்றித்திரிகிறான். 9 விசுவாசத்தில் உறுதியாக இருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்தில் உள்ள உங்களுடைய சகோதரர்களும் அப்படிப்பட்டப் பாடுகளை அனுபவிக்கிறார்கள் என்று தெரிந்திருக்கிறீர்களே. 10 கிறிஸ்து இயேசுவிற்குள் நம்மை அவருடைய நித்திய மகிமைக்கு அழைத்தவராக இருக்கிற எல்லாக் கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடுகள் அனுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;

  5. 6 ஒருநாள் தேவதூதர்கள் யெகோவாவுடைய முன்னிலையில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான். 7 யெகோவா சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான். 8 யெகோவா சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார். 9 அதற்குச் சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: யோபு வீணாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? 10 நீர் அவனையும் அவனுடைய வீட்டையும் அவனுக்கு இருந்த எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவனுடைய கைகளின் வேலைகளை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகியது. 11 ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு இருக்கிறவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்திற்கு முன்னே உம்மை நிந்திக்கமாட்டானோ பாரும் என்றான். 12 யெகோவா சாத்தானை நோக்கி: இதோ, அவனுக்கு இருக்கிறவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல்மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார்; அப்பொழுது சாத்தான் யெகோவாவுடைய சமுகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போனான்.

  6. 7 பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் ஏமாற்றப்படாமலிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராக இருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாக இருக்கிறான். 8 பாவம் செய்கிறவன் பிசாசினால் உண்டாயிருக்கிறான்; ஏனென்றால், பிசாசானவன் ஆரம்பமுதல் பாவம் செய்கிறான், பிசாசினுடைய செயல்களை அழிப்பதற்காக தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். 9 தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யமாட்டன், ஏனென்றால், அவருடைய வித்து அவனுக்குள் நிலைத்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவம் செய்யமாட்டான். 10 இதினாலே தேவனுடைய பிள்ளைகள் யாரென்றும், பிசாசின் பிள்ளைகள் யாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவன் இல்லை.

    11 நாம் ஒருவரையொருவர் நேசிக்கவேண்டும் என்பதே நீங்கள் ஆரம்பமுதல் கேள்விப்பட்ட செய்தியாக இருக்கிறது. 12 சாத்தானால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போல இருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் செய்கைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய செய்கைகள் நீதி உள்ளவைகளுமாக இருந்ததினிமித்தம்தானே.

  7. 42 இயேசு அவர்களைப் பார்த்து: தேவன் உங்களுடைய பிதாவாக இருந்தால் என்னிடத்தில் அன்பாக இருப்பீர்கள். ஏனென்றால், நான் தேவனிடத்தில் இருந்து வந்திருக்கிறேன்; நான் நானாக வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். 43 என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமல் இருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாமல் இருக்கிறதினால் அல்லவா? 44 நீங்கள் உங்களுடைய தகப்பனாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்களுடைய தகப்பனின் ஆசைகளின்படி செய்ய விருப்பமாக இருக்கிறீர்கள்; அவன் ஆரம்ப முதற்கொண்டு மனித கொலைபாதகனாக இருக்கிறான்; சத்தியம் அவனிடத்தில் இல்லாததினால் அவன் சத்தியத்திலே நிலை நிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் தகப்பனுமாக இருக்கிறதினால் அவன் பொய் பேசும்போது தன்னுடைய சுபாவத்தின்படி அப்படிப் பேசுகிறான். 45 நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறதினால் நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை. 46 என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தமுடியும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருந்தும், நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கவில்லை. 47 தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாகாததினால் செவிகொடுக்காமல் இருக்கிறீர்கள் என்றார்.

  8. 12 அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! தேசங்களை கீழ்ப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! 13 நான் வானத்திற்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் மலையிலே வீற்றிருப்பேன் என்றும், 14 நான் மேகங்களுக்கு மேலாக வானங்களில் ஏறுவேன்; உன்னதமான தேவனுக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. 15 ஆனாலும் நீ ஆழமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.

  9. 1 தேவனாகிய யெகோவா படைத்த அனைத்து காட்டு உயிரினங்களைவிட பாம்பானது தந்திரமுள்ளதாக இருந்தது. அது பெண்ணை நோக்கி: “நீங்கள் தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் சாப்பிடக்கூடாது என்று தேவன் சொன்னாரா” என்றது. 2 பெண், பாம்பை நோக்கி: “நாங்கள் தோட்டத்திலுள்ள மரங்களின் பழங்களைச் சாப்பிடலாம்; 3 ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற மரத்தின் பழத்தைக்குறித்து, தேவன்: நீங்கள் சாகாமலிருக்க அதை சாப்பிடவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார்” என்றாள். 4 அப்பொழுது பாம்பு, பெண்ணை நோக்கி: “நீங்கள் சாகவே சாவதில்லை; 5 நீங்கள் இதை சாப்பிடும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்” என்றது.

  10. 7 ஆகவே, தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். 8 தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடம் சேருவார். பாவிகளே, உங்களுடைய கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்களுடைய இருதயங்களைப் பரிசுத்தம் செய்யுங்கள். 9 நீங்கள் துயரப்பட்டுப் புலம்பி அழுங்கள்; உங்களுடைய சிரிப்பு புலம்பலாகவும், உங்களுடைய சந்தோஷம் துயரமாகவும் மாறட்டும். 10 கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.

  11. 41 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.

  12. 24 பரிசேயர்கள் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றபடியல்ல என்றார்கள். 25 இயேசு அவர்கள் யோசனைகளை அறிந்து, அவர்களைப் பார்த்து: தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாகப்போகும்; தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது. 26 சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? 27 நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்களுடைய பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகவே, அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாக இருப்பார்கள். 28 நான் தேவனுடைய ஆவியானவராலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடம் வந்திருக்கிறதே. 29 அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழிய பலவானுடைய வீட்டிற்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடமுடியும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்.

  13. 12 மேலும், எங்களை எதிர்க்க நேரம் தேடுகிறவர்களுக்கு நேரம் கிடைக்காதபடிக்கு, தங்களைக்குறித்து மேன்மைபாராட்டுகிற காரியத்தில் அவர்கள் எங்களைப்போலக் காணப்படும்படி, நான் செய்வதையே இன்னும் செய்வேன். 13 அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தை அணிந்துகொண்டவர்களாக இருக்கிறார்கள். 14 அது ஆச்சரியம் இல்லை, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தை அணிந்துகொள்வானே. 15 எனவே அவனுடைய ஊழியக்காரர்களும் நீதியின் ஊழியக்காரர்களுடைய வேஷத்தை அணிந்துகொண்டால் அது ஆச்சரியம் இல்லையே; அவர்கள் முடிவு அவர்கள் செய்கைகளைப் பொருத்திருக்கும்.

  14. 17 பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடு திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள். 18 அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.

  15. 30 இயேசு அவர்களைப் பார்த்து: இந்தச் சத்தம் எனக்காக உண்டாகாமல் உங்களுக்காக உண்டானது. 31 இப்பொழுதே இந்த உலகத்திற்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்.

  16. 1 அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் யெகோவாவுடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதம் செய்ய அவன் வலதுபக்கத்திலே நின்றான். 2 அப்பொழுது யெகோவா சாத்தானை நோக்கி: யெகோவா உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட யெகோவா உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியிலிருந்து தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா என்றார். 3 யோசுவாவோ என்றால் அழுக்கு உடை அணிந்தவனாகத் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான். 4 அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேல் இருக்கிற அழுக்கு உடைகளைக் களைந்துபோடுங்கள் என்றார்; பின்பு அவனை நோக்கி: பார், நான் உன் அக்கிரமத்தை உன்னிடத்திலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த உடையை உடுத்தினேன் என்றார். 5 அவன் தலையின்மேல் சுத்தமான தலைப்பாகையை வைப்பார்களாக என்றார்; அப்பொழுது சுத்தமான தலைப்பாகையை அவன் தலையின்மேல் வைத்து, அவனுக்கு ஆடைகளை உடுத்தினார்கள்; யெகோவாவுடைய தூதன் அங்கே நின்றார்.

  17. 1 சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பி, இஸ்ரவேலைக் கணக்கெடுக்க தாவீதைத் தூண்டிவிட்டது. 2 அப்படியே தாவீது யோவாபையும், படைத்தளபதிகளையும் நோக்கி: நீங்கள் போய், பெயெர்செபாதுவங்கி தாண்வரை இருக்கிற இஸ்ரவேலை எண்ணி, அவர்களின் எண்ணிக்கையை நான் அறியும்படி என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றான்.

  18. 31 பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையை முறத்தினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு அனுமதி கேட்டுக்கொண்டான். 32 நானோ உன் நம்பிக்கை இழந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரர்களைத் திடப்படுத்து என்றார். 33 அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாக இருக்கிறேன் என்றான். 34 அவர் அவனைப் பார்த்து: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

  19. 6 தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார். 7 அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அவைகளைச் சுற்றியுள்ள பட்டணத்து மக்களும், அவர்களைப்போல விபசாரம்பண்ணி, இயற்கைக்கு மாறான இச்சைகளிலே விழுந்து, நித்திய அக்கினியின் தண்டனையைப் பெற்று அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். 8 அதைப்போலவே, சொப்பனக்காரர்களாகிய இவர்களும் சரீரத்தை அசுத்தப்படுத்திக்கொண்டு, கர்த்தரின் அதிகாரத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களை அவமதிக்கிறார்கள். 9 பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசோடு வாக்குவாதம்பண்ணினபோது, அவனை அவமதித்து குற்றப்படுத்தத் துணிவில்லாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று சொன்னான்.

  20. 13 அப்பொழுது தேவனாகிய யெகோவா பெண்ணை நோக்கி: “நீ ஏன் இப்படிச் செய்தாய் என்றார். அந்தப் பெண்: “பாம்பு என்னை ஏமாற்றியது, நான் சாப்பிட்டேன்” என்றாள். 14 அப்பொழுது தேவனாகிய யெகோவா பாம்பை நோக்கி: “நீ இதைச் செய்ததால் அனைத்து நாட்டுமிருகங்களிலும் அனைத்து காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; 15 உனக்கும் பெண்ணுக்கும், உன் சந்ததிக்கும் அவளுடைய சந்ததிக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிகாலை நசுக்குவாய்” என்றார்.

  21. 13 இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாக இருக்கிற பிதாவிற்கு நன்றி செலுத்துகிறோம். 14 குமாரனாகிய இயேசுகிறிஸ்துவிற்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.

    15 அவர் கண்ணுக்குத் தெரியாத தேவனுடைய ரூபமும், எல்லாப் படைப்புக்கும் முதற்பேறுமானவர். 16 ஏனென்றால், அவருக்குள் எல்லாம் படைக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான எல்லாப் பொருட்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அரசாங்க ஆட்சி புரிவோர்களானாலும், அதிகாரங்களானாலும், எல்லாமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் படைக்கப்பட்டது. 17 அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.

  22. 14 எனவே, பிள்ளைகள் சரீரத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாக இருக்க, அவரும் அவர்களைப்போல சரீரத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்திற்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிப்பதற்கும், 15 ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்தில் வாழ்ந்தவர்கள் எல்லோரையும் விடுதலைபண்ணுவதற்கும் அப்படியானார்.

  23. 8 மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: 9 “நீர் சாஷ்டாங்கமாக விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்” என்று சொன்னான்; 10 அப்பொழுது இயேசு: “அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே” என்றார். 11 அப்பொழுது பிசாசு அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்கு பணிவிடை செய்தார்கள்.

  24. 21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும், வேதபண்டிதர்களாலும் பல பாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீடர்களுக்குச் சொல்லத்தொடங்கினார். 22 அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு சம்பவிக்கக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான். 23 அவரோ திரும்பி, பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாக இருக்கிறாய்; தேவனுக்குரியவைகளைச் சிந்திக்காமல் மனிதர்களுக்குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.

  25. 17 அன்றியும் சகோதரர்களே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு எதிராகப் பிரிவினைகளையும், இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருந்து, அவர்களைவிட்டு விலகவேண்டும் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 18 அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கு ஊழியம் செய்யாமல் தங்களுடைய வயிற்றுக்கே ஊழியம் செய்து, நயமான மொழிகளாலும், இனிய பேச்சினாலும், கபடு இல்லாதவர்களின் இருதயங்களை ஏமாற்றுகிறவர்களாக இருக்கிறார்கள். 19 உங்களுடைய கீழ்ப்படிதல் எல்லோருக்கும் தெரியவந்திருக்கிறது. எனவே, உங்களைக்குறித்து சந்தோஷப்படுகிறேன்; ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும், தீமைக்குப் பேதைகளுமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். 20 சமாதானத்தின் தேவன் சீக்கிரமாகச் சாத்தானை உங்களுடைய கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென்.

  26. 3 அப்பொழுது யெகோவா சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனிதனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை; காரணமில்லாமல் அவனை அழிப்பதற்கு நீ என்னை தூண்டினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாக நிற்கிறான் என்றார். 4 சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் உயிருக்குப் பதிலாகத் தனக்கு இருந்த எல்லாவற்றையும், மனிதன் கொடுத்துவிடுவான். 5 ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி, அவனுடைய எலும்பையும் அவனுடைய உடலையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்திற்கு முன்பாக உம்மை நிந்திக்கமாட்டானோ பாரும் என்றான். 6 அப்பொழுது யெகோவா சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆனாலும் அவனுடைய உயிரை மாத்திரம் விட்டுவிடு என்றார். 7 அப்பொழுது சாத்தான் யெகோவாவுடைய முன்னிலையைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவனுடைய உச்சந்தலைவரை கொடிய கொப்புளங்களால் அவனை வாதித்தான்.

  27. 1 பிரியமானவர்களே, உலகத்தில் அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்துப்பாருங்கள். 2 தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாம் என்றால்: சரீரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை செய்கிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. 3 சரீரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை செய்யாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. 4 பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை வென்றீர்கள்; ஏனென்றால், உலகத்தில் இருக்கிறவனைவிட உங்களுக்குள் இருக்கிறவர் பெரியவர். 5 அவர்கள் உலகத்திற்குரியவர்கள், ஆகவே, உலகத்திற்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும்.

  28. 37 இவைகள் எல்லாவற்றிலேயும் நாம் நம்மேல் அன்பு வைத்திருக்கிறவராலே முற்றிலும் வெற்றி பெறுகிறவர்களாக இருக்கிறோமே. 38 மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வரும்காரியங்களானாலும், 39 உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தப் படைப்புகளானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமுடியாது என்று நம்பியிருக்கிறேன்.

  29. 13 மனிதர்களுக்குச் சம்பவிக்கிற சோதனையே அல்லாமல் வேறு சோதனை உங்களுக்குச் சம்பவிக்கவில்லை. தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார்; உங்களுடைய பெலத்திற்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடுக்காமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான வழியையும் உண்டாக்குவார்.

  30. 1 கண்காணி பொறுப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை. 2 எனவே கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய கணவனும், நிதானமுள்ளவனும், தெளிந்த புத்தி உள்ளவனும், யோக்கியதை உள்ளவனும், அந்நியர்களை உபசரிக்கிறவனும், திறமையாகப் போதிக்கிறவனுமாக இருக்கவேண்டும். 3 அவன் மதுபானத்திற்கு அடிமையானவனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை விரும்புகிறவனுமாக இல்லாமல், பொறுமை உள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பணஆசை இல்லாதவனுமாக இருந்து, 4 தன் சொந்தக் குடும்பத்தை நன்றாக நடத்துகிறவனும், தன் குழந்தைகளை எல்லா நல்லொழுக்கமும் உள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாக இருக்கவேண்டும். 5 ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்தத்தெரியாமல் இருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்? 6 அவன் பெருமை அடைந்து, சாத்தானைப்போல தண்டனையிலே விழாதபடிக்கு, புதிய சீடனாக இருக்கக்கூடாது. 7 அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, விசுவாசமில்லாத மக்களிடம் நற்பெயர் பெற்றவனாக இருக்கவேண்டும்.

  31. 7 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்கு நன்மையாக இருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடம் வரமாட்டார்; நான் போனால் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். 8 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். 9 அவர்கள் என்னை விசுவாசிக்காதபடியினாலே பாவத்தைக்குறித்தும், 10 நீங்கள் இனி என்னைப் பார்க்காதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும், 11 இந்த உலகத்தின் தலைவன் நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.

  32. 20 நீங்களோ இந்தவிதமாகக் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை. 21 இயேசுவிடம் உள்ள சத்தியத்தின்படி, நீங்கள் அவரிடம் கேட்டு, அறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே. 22 அப்படியே, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனிதனை நீங்கள் களைந்துவிட்டு, 23 உங்களுடைய உள்ளத்திலே புதியவர்களாகி, 24 உண்மையான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக உருவாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொள்ளுங்கள். 25 அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் சரீர பாகங்களாக இருக்கிறபடியால், பொய்யைப் பேசாமல், ஒவ்வொருவனும் மற்றவனோடு உண்மையைப் பேசவேண்டும். 26 நீங்கள் கோபப்பட்டாலும் பாவம் செய்யாமல் இருங்கள்; சூரியன் மறைவதற்கு முன்பே உங்களுடைய எரிச்சல் மறைந்துபோகட்டும்; 27 பிசாசுக்கு இடம் கொடுக்கவேண்டாம்.

  33. 7 அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும், தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுவதற்குமுன்னே அது வெளிப்படாது. 8 நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் தோற்றத்தினாலே நாசம்பண்ணுவார். 9 அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி எல்லா பொய்யான வல்லமையோடும் அடையாளங்களோடும் அற்புதங்களோடும், 10 கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் எல்லாவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாகச் சத்தியத்தை நேசிக்க அவர்கள் மறுத்ததினால் அப்படி நடக்கும்.

  34. 14 எனவே இளவயதுள்ள விதவைகள் திருமணம்செய்யவும், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவும், வீட்டை நடத்தவும், எதிரியானவன் அவதூறாக பேசுவதற்கு இடம்கொடுக்காமலும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். 15 ஏனென்றால், இதற்குமுன்பு சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப்போனார்கள்.

  35. 1 பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நெருங்கிற்று. 2 அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து, மக்களுக்குப் பயந்தபடியினால், எவ்விதமாக இதைச்செய்யலாமென்று வகைதேடினார்கள். 3 அப்பொழுது பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபெயர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான். 4 அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் படைத்தலைவர்களிடத்திலும்போய், அவரைக் காட்டிக்கொடுக்கும் விதத்தைக்குறித்து அவர்களோடு ஆலோசனை செய்தான். 5 அவர்கள் சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுக்க உடன்பட்டார்கள். 6 அதற்கு அவன் சம்மதித்து, மக்கள்கூட்டமில்லாத நேரத்தில் அவரை அவர்களுக்குக் காட்டிக்கொடுக்கும்படி சமயந்தேடினான்.

  36. 3 பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, சொத்தை விற்றதில் ஒரு பங்கை மறைத்துவைத்து, பரிசுத்த ஆவியானவரிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன? 4 அதை விற்கும் முன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றப்பின்பும் அதின் கிரயப்பணம் உன்னிடத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணம் கொண்டதென்ன? நீ மனிதனிடத்தில் இல்லை, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான்.

  37. 17 சகோதரர்களே, நாங்கள் இருதயத்தின்படி உங்களோடிருந்து, சரீரத்தின்படி கொஞ்சநாட்கள் உங்களைவிட்டுப் பிரிந்திருந்ததினாலே, உங்களுடைய முகத்தைப் பார்க்கவேண்டுமென்று மிகுந்த ஆசையோடு அதிகமாக முயற்சி செய்தோம். 18 ஆகவே, நாங்கள் உங்களிடம் வர ஒன்று இரண்டுமுறை விருப்பமாக இருந்தோம். பவுலாகிய நானே வர விருப்பமாக இருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைசெய்தான்.

  38. 9 உன் செய்கைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியம் உள்ளவனாக இருந்தும் உனக்கு இருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதர்கள் என்று சொல்லியும் யூதர்களாக இல்லாமல் சாத்தானுடைய கூட்டமாக இருக்கிறவர்கள் செய்யும் அவதூறுகளையும் அறிந்திருக்கிறேன். 10 நீ படப்போகிற பாடுகளைப்பற்றிப் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படுவதற்காகப் பிசாசு உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாட்கள் உபத்திரவப்படுவீர்கள். ஆனாலும் நீ மரிக்கும்வரை உண்மையாக இரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.

  39. 8 மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பெயரையுடைய எலிமா என்பவன், அதிபதியை இயேசுவை விசுவாசிக்காமல் திசைதிரும்பும்படி செய்ய, அவர்களோடு எதிர்த்து நின்றான். 9 அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவனாக அவனை உற்றுப்பார்த்து: 10 எல்லாக் கபடமும் அக்கிரமமும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, உண்மைக்கெல்லாம் பகைவனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதை நிறுத்தமாட்டாயோ?

  40. 22 அன்றியும், பாலியத்திற்குரிய இச்சைகளுக்கு நீ விலகி ஓடி, சுத்த இருதயத்தோடு கர்த்த்தரை தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு. 23 புத்தியீனமும் அறிவில்லாததுமான வாக்குவாதங்கள் சண்டைகளை உண்டாக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகி இரு. 24 கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாக இல்லாமல், எல்லோரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதிப்பதற்குத் திறமையுள்ளவனும், தீமையைச் சகிக்கிறவனுமாக இருக்கவேண்டும். 25 எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை கொடுக்கத்தக்கதாகவும், 26 பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிக்கப்பட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கம் தெளிந்து அவன் தந்திரத்திற்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாக அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.

  41. 4 பாவம்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; 5 முழு உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்த நோவாவையும் மற்ற ஏழு நபர்களையும் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் பெரும்வெள்ளத்தை வரப்பண்ணி; 6 சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, தண்டனைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாக நடப்பவர்களுக்கு அவைகளை உதாரணமாக வைத்து; 7 அக்கிரமக்காரர்களோடு வாழ்கின்றபோது அவர்களுடைய காமவிகார செயல்களினால் வருத்தப்பட்டு, 8 நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமச் செய்கைகளைப் பார்த்து, கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க; 9 கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையில் இருந்து இரட்சிக்கவும், அக்கிரமக்காரர்களை தண்டனைக்குரியவர்களாக நியாயத்தீர்ப்பின் நாளுக்காக வைக்கவும் அறிந்திருக்கிறார். 10 விசேஷமாக அசுத்தமான ஆசைகளோடு சரீரத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தரின் அதிகாரத்தை அவமதிக்கிறவர்களை அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரமானவர்கள், அகங்காரம் நிறைந்தவர்கள், மகத்துவங்களை அவமானப்படுத்த பயப்படாதவர்கள்.

  42. 18 தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யமாட்டான் என்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவனை தேவன் தீமையிலிருந்து காக்கிறார், சாத்தான் அவனைத் தொடமாட்டான். 19 நாம் தேவனால் உண்டாயிருக்கிறோம் என்றும், உலகம் முழுவதும் சாத்தானுக்குள் இருக்கிறது என்றும் அறிந்திருக்கிறோம். 20 அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்கு புத்தியைக் கொடுத்திருக்கிறார் என்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாக இருக்கிறார். 21 பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.

  43. 19 ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, சாத்தான் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.

  44. 5 பின்பு சாத்தான் அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து: 6 இவைகள் எல்லாவற்றின்மேலும் உமக்கு அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் என்னுடைய பொறுப்பில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுப்பேன். 7 நீர் என்முன் பணிந்து தொழுதுகொண்டால் இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். 8 இயேசு அவனுக்கு மறுமொழியாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய யெகோவாவைமட்டும் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்குமட்டும் ஆராதனைசெய் என்று எழுதியிருக்கிறது என்றார்.

  45. 4 மனைவியானவள் தன் சொந்த சரீரத்திற்கு அதிகாரியல்ல, கணவனே அதற்கு அதிகாரி; அப்படியே கணவனும் தன் சொந்த சரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி. 5 உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையில்லாதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாமல் இருங்கள்; உங்களுக்கு சுயக்கட்டுப்பாடு இல்லாததினால் சாத்தான் உங்களை சோதிக்காதபடிக்கு, மறுபடியும் இணைந்துவாழுங்கள்.

  46. 10 யாரை நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனை நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்களுக்காக கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன். 11 சாத்தானாலே நாம் மோசமடையாமல் இருக்க அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் இல்லை.

  47. 3 ஆனாலும், பாம்பானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை ஏமாற்றினதுபோல, உங்களுடைய மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையிலிருந்து விலகும்படி கெடுக்கப்படுமோ என்று பயந்திருக்கிறேன்.

  48. 22 எருசலேமிலிருந்து வந்த வேதபண்டிதர்கள்: இவன் பெயெல்செபூலை உடையவனாக இருக்கிறான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். 23 அவர்களை அவர் அழைத்து, உவமைகளாக அவர்களுக்குச் சொன்னது என்னவென்றால்: சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி? 24 ஒரு ராஜ்யம் தனக்குத்தானே எதிராகப் பிரிந்து இருந்தால், அந்த ராஜ்யம் நிலைத்துநிற்காதே. 25 ஒரு வீடு தனக்குத்தானே எதிராகப் பிரிந்து இருந்தால், அந்த வீடு நிலைத்துநிற்காதே. 26 சாத்தான் தனக்குத்தானே எதிராக எழும்பிப் பிரிந்து இருந்தால், அவன் நிலைத்து நிற்கமுடியாமல், அழிந்துபோவானே.

  49. 27 அந்த அப்பத் துண்டை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து: நீ செய்கிறதைச் சீக்கிரமாகச் செய் என்றார்.

  50. 15 நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையில் இருந்து காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

  51. 7 அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினால் நான் என்னை உயர்த்தாமல் இருக்க, என் சரீரத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; நான் என்னை உயர்த்தாமல் இருக்க, அது என்னைக் குத்தும் சாத்தானுடைய தூதனாக இருக்கிறது. 8 அது என்னைவிட்டு நீங்கும்படி, நான் மூன்றுமுறை கர்த்தரிடம் வேண்டிக்கொண்டேன். 9 அதற்கு அவர்: என் கிருபை உனக்குப் போதும்; உன் பலவீனத்திலே என் பலம் பூரணமாக இருக்கும் என்றார். எனவே, கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாக மேன்மைபாராட்டுவேன். 10 அப்படியே நான் பலவீனமாக இருக்கும்போதே பலமுள்ளவனாக இருக்கிறேன்; எனவே கிறிஸ்துவுக்காக எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.

  52. 20 அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாக அற்புதங்கள் செய்த கள்ளத்தீர்க்கதரிசியும் பிடிக்கப்பட்டான். தன்னுடைய அற்புதங்கள் மூலமாக மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களையும் அதின் உருவத்தை வணங்கினவர்களையும் ஏமாற்றினவன் இவனே; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடு தள்ளப்பட்டார்கள்.

  53. 8 வேறொரு தூதன் பின்னேசென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய கோபமான மதுவை எல்லா தேசத்து மக்களுக்கும் குடிக்கக் கொடுத்தாளே! என்றான். 9 அவர்களுக்குப் பின்னால் மூன்றாம் தூதன் வந்து, அதிக சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்கித் தன் நெற்றியிலோ தன் கையிலோ அதின் முத்திரையை அணிந்து கொள்ளுகிறவன் எவனோ, 10 அவன் தேவனுடைய கோபத்தின் தண்டனையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் ஊற்றப்பட்ட அவருடைய கோபமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும், அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான். 11 அவர்களுடைய வாதையின் புகை எல்லாக் காலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய பெயரின் முத்திரையை அணிந்துகொள்ளுகிற அனைவருக்கும் இரவும் பகலும் ஓய்வு இருக்காது. 12 தேவனுடைய கட்டளைகளையும் இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே வெளிப்படும் என்று சொன்னான்.

  54. 1 அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.

  55. 13 பெர்சியா ராஜ்ஜியத்தின் அதிபதி இருபத்தொரு நாட்கள்வரை என்னோடு எதிர்த்து நின்றான்; ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்; ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தங்கியிருந்தேன்.

  56. 15 வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்; இவர்களே வழியருகே விதைக்கப்பட்டவர்கள்.

  57. 13 சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாமல் இருப்பானாக; தேவன் தீமைகளினால் சோதிக்கப்படுகிறவர் இல்லை, ஒருவனையும் அவர் சோதிக்கிறவரும் இல்லை. 14 அவனவன் தன்தன் சொந்த ஆசையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். 15 பின்பு ஆசையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பெற்றெடுக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பெற்றெடுக்கும்.