52 Bible Verses About Revival

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

Bible Verses About Revival
  1. 2 உமது மக்களின் அக்கிரமத்தை மன்னித்து,

    அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர். (சேலா)

    3 உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு,

    உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர்.

    4 எங்கள் இரட்சிப்பின் தேவனே,

    நீர் எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும்,

    எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறச்செய்யும்.

    5 என்றைக்கும் எங்கள்மேல் கோபமாக இருப்பீரோ?

    தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கச்செய்வீரோ?

    6 உமது மக்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி

    நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ?

    7 யெகோவாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து,

    உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும்.

  2. 17 உமது கரம் உமது வலதுபக்கத்து மனிதன்மீதிலும்,

    உமக்கு நீர் திடப்படுத்தின மனிதகுமாரன் மீதிலும் இருப்பதாக.

    18 அப்பொழுது உம்மைவிட்டுப் பின்வாங்கமாட்டோம்;

    எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது பெயரைத் தொழுதுகொள்ளுவோம்.

    19 சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,

    எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும்;

    உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும்,

    அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

  3. 15 நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்கிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்செய்கிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்செய்கிறேன்.

  4. 2 யெகோவாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன்,

    எனக்குப் பயமுண்டானது;

    யெகோவாவே, வருடங்களின் நடுவிலே உம்முடைய செயலை உயிர்ப்பியும்,

    வருடங்களின் நடுவிலே அதை விளங்கச்செய்யும்;

    கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும்.

  5. 7 நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும்,

    அப்பொழுது நான் சுத்தமாவேன்;

    என்னைக் கழுவியருளும்;

    அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.

    8 நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படிச் செய்யும்,

    அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் சந்தோஷப்படும்.

    9 என்னுடைய பாவங்களைப் பார்க்காதபடி நீர் உமது முகத்தை மறைத்து,

    என்னுடைய அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.

    10 தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே உருவாக்கும், நிலையான ஆவியை என்னுடைய உள்ளத்திலே புதுப்பியும்.

    11 உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும்,

    உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.

    12 உமது இரட்சிப்பின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து,

    உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.

    13 அப்பொழுது தீயவர்களுக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்;

    பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.

  6. 1 யெகோவாவிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைக் கீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார். 2 இரண்டுநாட்களுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம். 3 அப்பொழுது நாம் அறிவடைந்து, யெகோவாவை அறியும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் சூரிய உதயம்போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மழை பின்மழையைப்போலவும் நம்மிடத்தில் வருவார். 4 எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது. 5 ஆகையால் தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களை வெட்டினேன்; என் வாயின் வார்த்தைகளைக்கொண்டு அவர்களைக் கொன்றேன்; உன்மேல் வரும் தண்டனைகள் வெளிச்சத்தைப்போல் வெளிப்படும். 6 பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும் விரும்புகிறேன்.

  7. 42 அவர்கள் அப்போஸ்தலர்களுடைய போதனைகளிலும், ஐக்கியத்திலும், அப்பம் புசித்தலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாகத் தரித்திருந்தார்கள். 43 எல்லோருக்கும் பயமுண்டானது. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அதிசயங்களும் செய்யப்பட்டது. 44 விசுவாசிகள் எல்லோரும் ஒன்றாக இருந்து, எல்லாவற்றையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள். 45 நிலங்களையும் சொத்துக்களையும்விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவைக்குத்தக்கதாக அவைகளில் எல்லோருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள். 46 அவர்கள் ஒருமனப்பட்டவர்களாக தேவாலயத்திலே அனுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்புசித்து மகிழ்ச்சியோடும் கபடம் இல்லாத இருதயத்தோடும் சாப்பிட்டு, 47 தேவனைத் துதித்து, மக்களெல்லோரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். மீட்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.

  8. 6 அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது. 7 ஆகவே, தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். 8 தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடம் சேருவார். பாவிகளே, உங்களுடைய கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்களுடைய இருதயங்களைப் பரிசுத்தம் செய்யுங்கள். 9 நீங்கள் துயரப்பட்டுப் புலம்பி அழுங்கள்; உங்களுடைய சிரிப்பு புலம்பலாகவும், உங்களுடைய சந்தோஷம் துயரமாகவும் மாறட்டும். 10 கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.

  9. 7 யெகோவாவுடைய வேதம் குறைவற்றதும்,

    ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாக இருக்கிறது;

    யெகோவாவுடைய சாட்சி முழுமையானதும்,

    பேதையை ஞானியாக்குகிறதுமாக இருக்கிறது.

  10. 19 ஆகவே, கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் நாட்கள் வரும்படிக்கும், முன்பே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடம் அனுப்பவும், 20 உங்களுடைய குற்றங்கள் மன்னிக்கப்படவும் நீங்கள் மனந்திரும்பி குணப்படுங்கள். 21 உலகம் உண்டானதுமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகள் எல்லோருடைய வார்த்தையினாலும் முன்னமே சொன்ன எல்லாம் நிறைவேறிமுடியும் நாட்கள் வரும்வரை அவர் பரலோகத்தில் இருக்கவேண்டும்.

  11. 1 அப்படியிருக்க, சகோதரர்களே, நீங்கள் உங்களுடைய சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும் என்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யும் புத்தியுள்ள ஆராதனை. 2 நீங்கள் இந்த உலகத்திற்கேற்ற வேஷம் போடாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான விருப்பம் என்னவென்று பகுத்தறிவதற்காக, உங்களுடைய மனம் புதிதாக மாறுகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

  12. 107 நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்;

    யெகோவாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.

  13. 1 இஸ்ரவேலே, உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய். 2 வார்த்தைகளைக்கொண்டு யெகோவாவிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாக அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் பலிகளைச் செலுத்துவோம்.

  14. 7 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்கு நன்மையாக இருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடம் வரமாட்டார்; நான் போனால் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். 8 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். 9 அவர்கள் என்னை விசுவாசிக்காதபடியினாலே பாவத்தைக்குறித்தும், 10 நீங்கள் இனி என்னைப் பார்க்காதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும், 11 இந்த உலகத்தின் தலைவன் நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.

  15. 9 முன்பே நியாயப்பிரமாணம் இல்லாதவனாக இருந்தபோது நான் ஜீவனுள்ளவனாக இருந்தேன்; கட்டளை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன்.

  16. 4 நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயவும் மனிதர்கள்மேலுள்ள அன்பும் வெளிப்பட்டபோது, 5 நாம் செய்த நீதியின் செயல்களினிமித்தம் அவர் நம்மை இரட்சிக்காமல், தமது இரக்கத்தின்படியே, மறுபிறப்பு முழுக்கினாலும், பரிசுத்த ஆவியானவருடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். 6 தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்திரராகத்தக்கதாக, 7 அவர் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக, அந்தப் பரிசுத்த ஆவியானவரை நம்மேல் சம்பூரணமாகப் பொழிந்தருளினார்.

  17. 3 ராஜா யெகோவாவுடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறமுறையில் காலைமாலைகளில் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும், ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் பண்டிகைகளிலும் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும் தன் சொத்துக்களிலிருந்து எடுத்துத் தன் பங்கைக் கொடுத்தான். 4 ஆசாரியர்களும் லேவியர்களும் யெகோவாவுடைய நியாயப்பிரமாணத்தை உற்சாகமாகக் கைக்கொள்ள, அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுக்க மக்களுக்கும் எருசலேமின் குடிகளுக்கும் கட்டளையிட்டான். 5 இந்த வார்த்தை பிரபலமானபோது, இஸ்ரவேல் மக்கள் தானியத்திலும், திராட்சைரசத்திலும், எண்ணெயிலும், தேனிலும், நிலத்தின் எல்லா வரவிலும் முதற்பலன்களைத் திரளாகக் கொண்டுவந்து, சகலத்திலும் தசமபாகத்தைப் பரிபூரணமாகக் கொடுத்தார்கள். 6 யூதாவின் பட்டணங்களில் குடியிருந்த இஸ்ரவேல் வம்சத்தாரும், யூதா வம்சத்தாரும், மாடுகளிலும் ஆடுகளிலும் தசமபாகத்தையும், தங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தம் செய்யப்பட்டவைகளில் தசமபாகத்தையும் கொண்டுவந்து குவியல் குவியலாக வைத்தார்கள். 7 மூன்றாம் மாதத்தில் குவியல் செய்யத்துவங்கி ஏழாம் மாதத்தில் முடித்தார்கள். 8 எசேக்கியாவும் பிரபுக்களும் வந்து, அந்தக் குவியல்களைப் பார்க்கும்போது, யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, அவருடைய மக்களாகிய இஸ்ரவேலைப் புகழ்ந்தார்கள்.

  18. டாலெத்.

    25 என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது;

    உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.

  19. 1 ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் தண்ணீர்களிடம் வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சைரசமும் பாலும் வாங்கிக்கொள்ளுங்கள். 2 நீங்கள் உண்மையான உணவு அல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் ஏன் செலவழிக்கவேண்டும்? நீங்கள் எனக்குக் கவனமாகச் செவிகொடுத்து, சிறப்பானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பொருட்களினால் மகிழ்ச்சியாகும். 3 உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதிற்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.

  20. 11 நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுப்பதற்காக நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்திற்கு உகந்த நினைவுகளே. 12 அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்செய்வீர்கள்; நான் உங்கள் விண்ணப்பத்தை கேட்பேன். 13 உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடுவீர்கள் என்றால், என்னைத் தேடும்போது கண்டுபிடிப்பீர்கள். 14 நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பி, நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை விலக்கியிருந்த இடத்துக்கே உங்களைத் திரும்பிவரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

  21. 37 இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலர்களையும் பார்த்து: சகோதரர்களே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள். 38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியானவரின் வரத்தைப் பெறுவீர்கள். 39 வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்களுடைய பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள அனைவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; 40 இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்த வம்சத்தை விட்டுவிலகி உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான். 41 அவனுடைய வார்த்தைகளை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையதினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விசுவாசிகளின் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.

  22. 1 அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாக இருந்த உங்களை உயிர்ப்பித்தார். 2 அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இந்த உலக வழக்கத்திற்கு ஏற்றபடியும், கீழ்ப்படியாத பிள்ளைகளிடம் இப்பொழுது செயலாற்றும் ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்குரியபடியும் நடந்துகொண்டீர்கள். 3 அவர்களுக்குள்ளே நாமெல்லோரும் முற்காலத்திலே நமது சரீர விருப்பத்தின்படியே நடந்து, நமது சரீரமும் மனதும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபத்தின் பிள்ளைகளாக இருந்தோம். 4 தேவனோ இரக்கத்தில் செல்வந்தமுள்ளவராக நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, 5 அக்கிரமங்களில் மரித்தவர்களாக இருந்த நம்மைக் கிறிஸ்துவோடு உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்;

  23. 1 சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் வைத்திருப்பவர் சொல்லுகிறதாவது; உன் செய்கைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவன் என்று பெயர்பெற்றிருந்தும் செத்தவனாக இருக்கிறாய். 2 நீ விழித்துக்கொண்டு, மரித்துப்போகிறதாக இருக்கிற காரியங்களைப் பெலப்படுத்து; உன் செய்கைகள் தேவனுக்குமுன்பாக நிறைவானவைகளாக நான் பார்க்கவில்லை. 3 எனவே நீ கேட்டதையும், பெற்றுக்கொண்டதையும் நினைத்துப்பார்த்து, அதற்குக் கீழ்ப்படிந்து மனம்திரும்பு. நீ விழிப்படையாவிட்டால், திருடனைப்போல உன்னிடம் வருவேன்; நான் உன்னிடம் வரும் நேரத்தை நீ தெரியாமல் இருப்பாய். 4 ஆனாலும் தங்களுடைய ஆடைகளை அசுத்தப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்கு உண்டு; அவர்கள் தகுதி உடையவர்களாக இருப்பதால், வெண்மையான ஆடை அணிந்து என்னோடு நடப்பார்கள். 5 ஜெயம் பெறுகிறவன் எவனோ அவனுக்கு வெண்மையான ஆடை அணிவிக்கப்படும்; ஜீவபுத்தகத்திலிருந்து அவனுடைய பெயரை நான் நீக்கிப்போடாமல், என் பிதாவிற்கு முன்பாகவும் அவருடைய தூதர்களுக்கு முன்பாகவும் அவன் பெயரை அறிக்கைச் செய்வேன். 6 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது.

  24. 11 ஒரு எகிப்தியனை வெளியில் அவர்கள் கண்டு, அவனைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்து, சாப்பிட அவனுக்கு அப்பமும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்து, 12 அத்திப்பழ அடையின் ஒரு துண்டையும், உலர்ந்த இரண்டு திராட்சைப்பழக் குலைகளையும் அவனுக்குக் கொடுத்தார்கள்; அதை அவன் சாப்பிட்டபின்பு, அவனுடைய உயிர் திரும்ப அவனுக்குள் வந்தது. அவன் இரவு பகல் மூன்று நாளாக அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் இருந்தான்.

  25. 7 யெகோவாவுடைய தூதன் திரும்ப இரண்டாவதுமுறையும் வந்து அவனைத் தட்டியெழுப்பி: எழுந்து சாப்பிடு; நீ போகவேண்டிய பயணம் வெகுதூரம் என்றான். 8 அப்பொழுது அவன் எழுந்து சாப்பிட்டுக் குடித்து, அந்த உணவின் பெலத்தினால் 40 நாட்கள் இரவும் பகலும் ஓரேப் என்னும் தேவனுடைய மலைவரையும் நடந்துபோனான்.

  26. 1 எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி, இருபத்தொன்பது வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; சகரியாவின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் அபியாள். 2 அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் யெகோவாவின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான். 3 அவன் தன் அரசாட்சியின் முதலாம் வருடம் முதலாம் மாதத்தில் யெகோவாவுடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, அவைகளைப் பழுதுபார்த்து, 4 ஆசாரியர்களையும் லேவியர்களையும் அழைத்துவந்து, அவர்களைக் கிழக்கு வீதியிலே கூடிவரச்செய்து, 5 அவர்களை நோக்கி: லேவியரே, கேளுங்கள்: நீங்கள் இப்போது உங்களைப் பரிசுத்தம் செய்துகொண்டு, உங்கள் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவுடைய ஆலயத்தைப் பரிசுத்தம்செய்து, அசுத்தமானதைப் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளியே கொண்டுபோங்கள்.

  27. 15 யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து அந்நிய தெய்வங்களையும் அந்த சிலையையும் அகற்றிவிட்டு, யெகோவாவுடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லாப் பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்கு வெளியே போடச் செய்து, 16 யெகோவாவுடைய பலிபீடத்தைப் பழுதுபார்த்து, அதன்மேல் சமாதானபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் செலுத்தி, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை ஆராதிக்கவேண்டும் என்று யூதாவுக்குக் கட்டளையிட்டான்.

  28. கோராகின் குடும்பத்தின் மஸ்கீல் என்னும் இராகத் தலைவனிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் பாடல்.

    1 மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,

    தேவனே, என்னுடைய ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.

    2 என்னுடைய ஆத்துமா தேவன்மேல், உயிருள்ள தேவன்மேலேயே தாகமாக இருக்கிறது;

    நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?

  29. 14 அரண்மனை பாழாக விடப்படும், மக்கள் நிறைந்த நகரம் வெறுமையாகும், மேடும் கோபுரமும் என்றைக்கும் கெபிகளாகும், அவைகள் காட்டுக்கழுதைகள் களிக்கும் இடமாயும் மந்தைகளுக்கு மேய்ச்சலிடமாயும் இருக்கும். 15 உன்னதத்திலிருந்து நம்மேல் தேவனுடைய ஆவி ஊற்றப்படும்வரை அப்படியே இருக்கும்; அப்பொழுது வனாந்திரம் செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான வயல்வெளி காடாக நினைக்கப்படும். 16 வனாந்திரத்திலே நியாயம் வாசமாயிருக்கும், செழிப்பான வயல்வெளியிலே நீதி தங்கித்தரிக்கும். 17 நீதியின் செயல் சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமைதலும் சுகமுமாம்.

  30. 28 பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது. 29 சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகச்செய்கிறார். 30 இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபர்களும் இடறிவிழுவார்கள். 31 யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் இறக்கைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையமாட்டார்கள், நடந்தாலும் சோர்வடையமாட்டார்கள்.

  31. 12 ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புங்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 13 நீங்கள் உங்கள் உடைகளையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையும் உள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாக இருக்கிறார்.

  32. 15 அவர்கள் சாப்பிட்டபின்பு, இயேசு சீமோன்பேதுருவைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, இவர்களைவிட நீ அதிகமாக என்மேல் அன்பாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். 16 இரண்டாவதுமுறை அவர் அவனைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, நீ என்மேல் அன்பாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். 17 மூன்றாவதுமுறை அவர் அவனைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாவதுமுறை தன்னைக் கேட்டதினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். 18 நீ சிறுவயதுள்ளவனாக இருந்தபோது நீயே ஆடை அணிந்துகொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாக ஆகும்போது உன் கரங்களை நீட்டுவாய்; வேறொருவன் உனக்கு ஆடையை அணிவித்து, உனக்கு இஷ்டமில்லாத இடத்திற்கு உன்னைக் கொண்டுபோவான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 19 இந்தவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறான் என்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனைப் பார்த்து: என்னைப் பின்பற்றிவா என்றார்.

  33. 8 பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி எல்லைவரையிலும், எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள் என்றார்.

  34. 17 எனவே, கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவென்றால், யூதரல்லாதவர்கள் தங்களுடைய வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடக்காமல் இருங்கள். 18 அவர்கள் புத்தியில் இருள் அடைந்து, தங்களுடைய இருதயக் கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவன் தரும் ஜீவனுக்கு அந்நியர்களாக இருந்து; 19 உணர்வில்லாதவர்களாக, எல்லாவித அசுத்தங்களையும் ஆவலோடு செய்வதற்கு, தங்களைக் காமஇச்சைகளுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். 20 நீங்களோ இந்தவிதமாகக் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை. 21 இயேசுவிடம் உள்ள சத்தியத்தின்படி, நீங்கள் அவரிடம் கேட்டு, அறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே. 22 அப்படியே, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனிதனை நீங்கள் களைந்துவிட்டு, 23 உங்களுடைய உள்ளத்திலே புதியவர்களாகி, 24 உண்மையான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக உருவாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொள்ளுங்கள்.

  35. 9 ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனிதனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, 10 தன்னைப் படைத்தவருடைய சாயலுக்கு ஒப்பாக பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொண்டிருக்கிறீர்களே. 11 அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனம் உள்ளவனென்றும், விருத்தசேதனம் இல்லாதவனென்றுமில்லை, யூதனல்லாதவனென்றும் வெளிதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுதந்திரமானவனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லோரிலும் எல்லாமுமாக இருக்கிறார். 12 ஆகவே, நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாக, உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், அமைதியையும், நீடிய பொறுமையையும் அணிந்துகொண்டு; 13 ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். 14 இவை எல்லாவற்றின்மேலும், பூரண நற்குணத்தின் கட்டாகிய அன்பை அணிந்துகொள்ளுங்கள்.

  36. 16 எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள். 17 இடைவிடாமல் ஜெபம்செய்யுங்கள். 18 எல்லாவற்றிலேயும் நன்றி சொல்லுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவிற்குள் உங்களைக்குறித்து தேவனுடைய விருப்பமாக இருக்கிறது. 19 ஆவியை அவித்துப்போடாமலிருங்கள். 20 தீர்க்கதரிசனங்களை சாதாரணமாக எண்ணாதிருங்கள். 21 எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

  37. 27 அவர்கள் யோசேப்பு தங்களுடனே சொன்ன வார்த்தைகள் எல்லாவற்றையும் அவனுக்குச் சொன்னபோதும், தன்னை ஏற்றிக்கொண்டு போகும்படி யோசேப்பு அனுப்பின வண்டிகளை அவன் கண்டபோதும், அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபின் ஆவி உயிர்த்தது.

  38. 1 அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலும் இருந்த மூப்பர்களையெல்லாம் வரவழைத்தான்; அவர்கள் அவனிடத்தில் கூடினபோது, 2 ராஜாவும், அவனோடு யூதாவின் மனிதர்கள் யாவரும் எருசலேமின் குடிமக்கள் அனைவரும், ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், சிறியோர்முதல் பெரியோர்வரையுள்ள அனைவரும் யெகோவாவின் ஆலயத்திற்குப் போனார்கள்; யெகோவாவுடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கை புத்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான். 3 அப்பொழுது ராஜா, தூண் அருகே நின்று, யெகோவாவைப் பின்பற்றி நடக்கவும், அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் கைக்கொள்ளவும், அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற அந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றவும் யெகோவாவுடைய சந்நிதியில் உடன்படிக்கை செய்தான்; மக்கள் எல்லோரும் உடன்படிக்கைக்கு உடன்பட்டார்கள். 4 பின்பு ராஜா: பாகாலுக்கும் விக்கிரகத்தோப்புக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் செய்யப்பட்டிருந்த சகல பணிமுட்டுகளையும் யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து வெளியேற்ற, பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும் இரண்டாம் பகுதியிலுள்ள ஆசாரியர்களுக்கும் வாசல் காக்கிறவர்களுக்கும் கட்டளையிட்டு, அவைகளை எருசலேமுக்கு வெளியே கீதரோன் வெளிகளில் சுட்டெரித்து, அவைகளின் சாம்பலைப் பெத்தேலுக்குக் கொண்டுபோகச்செய்தான்.

  39. இராகத் தலைவனுக்கு தாவீது எழுதிய பாடல். பத்சேபாளோடு தாவீது செய்த பாவத்திற்குப் பிறகு தீர்க்கதரிசியாகிய நாத்தான் தாவீதிடம் சென்று உணர்த்தியபோது இது பாடப்பட்டது.

    1 தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும்,

    உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.

    2 என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி,

    என்னுடைய பாவம்போக என்னைச் சுத்திகரியும்.

    3 என்னுடைய மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்;

    என்னுடைய பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.

    4 தேவனே உம் ஒருவருக்கே விரோதமாக நான் பாவம்செய்து,

    உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை செய்தேன்;

    நீர் பேசும்போது உம்முடைய நீதி வெளிப்படவும், நீர் நியாயந்தீர்க்கும்போது,

    உம்முடைய பரிசுத்தம் வெளிப்படவும் இதை அறிக்கையிடுகிறேன்.

  40. 34 எனக்கு உணர்வைத் தாரும்;

    அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு,

    என்னுடைய முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்.

    35 உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்;

    நான் அதில் பிரியமாக இருக்கிறேன்.

    36 என்னுடைய இருதயம் பொருளாசையைச் சார்ந்து இருக்காமல்,

    உமது சாட்சிகளைச் சார்ந்து இருக்கும்படி செய்யும்.

    37 மாயையைப் பார்க்காதபடி நீர் என்னுடைய கண்களை விலக்கி,

    உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.

  41. 40 இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாக இருக்கிறேன்;

    உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்.

  42. 149 உம்முடைய கிருபையின்படி என்னுடைய சத்தத்தைக் கேளும்;

    யெகோவாவே, உம்முடைய நியாயத்தீர்ப்பின்படி என்னை உயிர்ப்பியும்.

  43. 5 அப்பொழுது நான்: ஐயோ, அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனிதன், அசுத்த உதடுகளுள்ள மக்களின் நடுவில் குடியிருக்கிறவன்; சேனைகளின் யெகோவாவாகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன். 6 அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்துவந்து, 7 அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான்.

  44. 7 நான் யெகோவா என்று அறியும் இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்; அவர்கள் என் மக்களாக இருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்; அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்.

  45. 33 அந்நாட்களுக்குப்பிறகு, நான் இஸ்ரவேல் மக்களுடன் செய்யப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்தில் வைத்து, அதை அவர்கள் இருதயத்தில் எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் மக்களாயிருப்பார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 34 இனி ஒருவன் தன் அருகில் உள்ளவனையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: யெகோவாவை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்வரை, எல்லோரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.

  46. 40 நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, யெகோவாவிடத்தில் திரும்பக்கடவோம்.

  47. 19 அவர்கள் என்னுடைய கட்டளைகளின்படி நடந்து, என்னுடைய நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஒருமனப்பட்ட இருதயத்தைத் தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் சரீரத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன். 20 அவர்கள் என்னுடைய மக்களாக இருப்பார்கள், நான் அவர்கள் தேவனாக இருப்பேன்.

  48. 20 எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தம்செய்தான். 21 குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே பரலோகத்திற்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன் என்று சொன்னான். 22 அப்பொழுது தகப்பன் தன் வேலைக்காரர்களை நோக்கி: நீங்கள் உயர்ந்த ஆடைகளை கொண்டுவந்து இவனுக்கு உடுத்தி இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். 23 கொழுத்தக் கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் விருந்து கொண்டாடுவோம். 24 என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்.

  49. 16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். 17 உலகத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

  50. 18 பொல்லாதவழிக்கு உன்னைக் கொண்டுச்செல்லும் மதுபானத்தை நீ குடித்து வெறிகொள்ளாமல், பரிசுத்த ஆவியானவரால் நிறைந்து;

  51. 4 ஆனாலும், நீ ஆரம்பத்திலே வைத்திருந்த அன்பைவிட்டுவிட்டாய் என்று உன்மேல் எனக்குக் குறை உண்டு. 5 எனவே, நீ எந்த நிலைமையில் இருந்து விழுந்தாய் என்பதை நினைத்து, மனம்திரும்பி, ஆதியில் செய்த செய்கைகளைச் செய்; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, நீ மனம்திரும்பவில்லை என்றால், உன் விளக்குத்தண்டை அதனிடத்திலிருந்து நீக்கிவிடுவேன்.

  52. 15 உன் செய்கைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிரும் இல்லை அனலும் இல்லை; நீ குளிராக அல்லது அனலாக இருந்தால் நன்றாக இருக்கும். 16 இப்படி நீ குளிரும் இல்லாமல் அனலும் இல்லாமல் வெதுவெதுப்பாக இருக்கிறதினால் உன்னை என் வாயில் இருந்து வாந்திபண்ணிப்போடுவேன். 17 நீ பாக்கியமில்லாதவனாகவும், பரிதாபப்படத்தக்கவனாகவும், தரித்திரனும், பார்வை இல்லாதவனாகவும், நிர்வாணியாகவும் இருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவான் என்றும், பொருளாதார வசதிபடைத்தவன் என்றும், எனக்கு ஒரு குறையும் இல்லை என்றும் சொல்லுகிறதினால்; 18 நான்: நீ ஐசுவரியவானாவதற்காக நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தெரியாதபடி நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்மையான ஆடைகளையும் என்னிடம் வாங்கிக்கொள்ளவும், நீ பார்வை பெறுவதற்காக உன் கண்களுக்கு மருந்து போடவேண்டும் என்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். 19 நான் நேசிக்கிறவர்கள் எவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; எனவே நீ எச்சரிக்கையாக இருந்து, மனம்திரும்பு. 20 இதோ, வாசற்படியிலே நின்று கதவைத் தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், நான் அவன் வீட்டிற்குள் சென்று, அவனோடுகூட உணவு உண்பேன், அவனும் என்னோடு உண்பான். 21 நான் ஜெயம்பெற்று என் பிதாவுடைய சிங்காசனத்திலே அவரோடு உட்கார்ந்ததுபோல, ஜெயம் பெறுகிறவன் எவனோ, அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடு உட்காருவதற்கு அருள்செய்வேன். 22 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது என்றார்.