26 Bible Verses About Forgiving Others
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
-
12 எங்களுடைய எதிராளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல
எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னியும்.
13 எங்களைச் சோதனைக்குட்படச் செய்யாமல்,
தீமையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும்,
ராஜ்யமும், வல்லமையும், மகிமையும்
என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்’ என்பதே.
14 மனிதர்களுடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்களுடைய பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். 15 மனிதர்களுடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னிக்காதிருந்தால், உங்களுடைய பிதா உங்களுடைய குற்றங்களையும் மன்னிக்காதிருப்பார்.
-
12 ஆகவே, நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாக, உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், அமைதியையும், நீடிய பொறுமையையும் அணிந்துகொண்டு; 13 ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். 14 இவை எல்லாவற்றின்மேலும், பூரண நற்குணத்தின் கட்டாகிய அன்பை அணிந்துகொள்ளுங்கள்.
-
31 எல்லாவிதமான கசப்பும், கோபமும், எரிச்சலும், கூக்குரலும், அவமதிப்பதும், மற்ற எல்லாக் கெட்டகுணமும் உங்களைவிட்டு நீங்கட்டும். 32 ஒருவருக்கொருவர் தயவாகவும் மனஉருக்கமாகவும் இருந்து, கிறிஸ்துவிற்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
-
25 நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்மேல் உங்களுக்கு ஏதாவது குறை உண்டாயிருக்கும் என்றால், பரலோகத்தில் இருக்கிற உங்களுடைய பிதா உங்களுடைய தவறுகளை உங்களுக்கு மன்னிப்பதற்காக, அந்தக் குறையை நீங்கள் அவனுக்கு மன்னியுங்கள். 26 நீங்கள் மன்னிக்காமலிருந்தால், பரலோகத்தில் இருக்கிற உங்களுடைய பிதாவும் உங்களுடைய தவறுகளை மன்னிக்கமாட்டார் என்றார்.
-
37 மற்றவர்களைக் குற்றவாளிகள் என்று சொல்லாதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகள் என்று சொல்லப்படாமலிருப்பீர்கள்; மற்றவர்களை தண்டனைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாமலிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.
-
3 உங்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனம் வருந்தினால், அவனுக்கு மன்னிப்பாயாக. 4 அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனம் வருந்துகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்.
-
21 கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான் என்பதும், முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 22 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு உரியவனாக இருப்பான். 23 ஆகவே, நீ பலிபீடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயானால், 24 அங்கே பலிபீடத்தின்முன்பு உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முதலில் உன் சகோதரனோடு ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.
-
15 உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனிமையாக இருக்கும்போது, அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய். 16 அவன் செவிகொடுக்காமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய ஒப்புதல்களினாலே காரியங்களெல்லாம் உறுதிப்படும்படி இரண்டொருவரை உன்னுடனே அழைத்துக்கொண்டு போ. 17 அவர்களுக்கும் அவன் செவிகொடுக்காமற்போனால், அதை சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடுக்காமற்போனால், அவன் உனக்கு வேறுமார்க்கத்தான்போலவும் வரி வசூலிப்பவனைப்போலவும் இருப்பானாக. 18 உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 19 அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாவது பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 20 ஏனென்றால், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
-
21 அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாகக் குற்றம் செய்துவந்தால், நான் எத்தனைமுறை மன்னிக்கவேண்டும்? ஏழுமுறை மட்டுமோ என்று கேட்டான். 22 அதற்கு இயேசு: ஏழுமுறை மாத்திரமல்ல, ஏழெழுபதுமுறைமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன். 23 எப்படியென்றால், பரலோகராஜ்யம் தன் வேலைக்காரர்களிடத்தில் கணக்குப்பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது. 24 அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பத்தாயிரம் வெள்ளிப்பணம் கடன்பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். 25 கடனைத்தீர்க்க அவனால் முடியாதபடியால், அவனுடைய எஜமான் அவனையும் அவனுடைய மனைவியையும் பிள்ளைகளையும், அவனுக்கு இருந்த எல்லாவற்றையும் விற்று, கடனைத்தீர்க்கும்படிக் கட்டளையிட்டான். 26 அப்பொழுது, அந்த வேலைக்காரன் காலில் விழுந்து வணங்கி: எஜமானனே! என்னிடத்தில் பொறுமையாக இரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத்தீர்க்கிறேன் என்றான். 27 அந்த வேலைக்காரனுடைய எஜமான் மனமிரங்கி, அவனை விடுதலைசெய்து, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான். 28 அப்படியிருக்க, அந்த வேலைக்காரன் புறப்பட்டுப்போகும்போது, தன்னிடத்தில் நூறு வெள்ளிக்காசுகள் கடன்பட்டிருந்தவனாகிய தன்னுடைய உடன்வேலைக்காரர்களில் ஒருவனைப் பார்த்து, அவனைப் பிடித்து, கழுத்தை நெரித்து: நீ வாங்கின கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான். 29 அப்பொழுது அவனுடைய உடன்வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாக இரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான். 30 அவனோ சம்மதிக்காமல், போய், அவன் வாங்கின கடனைக் கொடுத்துத்தீர்க்கும்வரைக்கும் அவனைச் சிறைச்சாலையில் வைத்தான். 31 நடந்ததை அவனுடைய உடன்வேலைக்காரர்கள் பார்த்து, மிகவும் துக்கப்பட்டு, எஜமானிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள். 32 அப்பொழுது அவனுடைய எஜமான் அவனை அழைப்பித்து: பொல்லாத வேலைக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். 33 நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, 34 அவனுடைய எஜமான் கோபமடைந்து, அவன் வாங்கின கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத்தீர்க்கும்வரைக்கும் தண்டிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான். 35 நீங்களும் அவனவன் தன்தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாக மன்னிக்காமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.
-
18 உங்களால் முடிந்தவரை எல்லா மனிதர்களோடும் சமாதானமாக இருங்கள். 19 பிரியமானவர்களே, “பழிவாங்குதல் என்னுடையது, நானே பதில்செய்வேன்,” என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதி இருக்கிறதினால், நீங்கள் பழிவாங்காமல், தேவனுடைய கோபத்தின் தண்டனைக்கு இடம்கொடுங்கள். 20 அன்றியும்,
உன் பகைவன் பசியாக இருந்தால்,
அவனுக்கு ஆகாரம் கொடு;
அவன் தாகமாக இருந்தால்,
அவனுக்கு ஏதாவது குடிக்கக்கொடு;
நீ இப்படிச் செய்வதினால் நெருப்புத் தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.”
-
43 உனக்கடுத்தவனைச் நேசித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்களுடைய சத்துருக்களை நேசியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். 45 இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவிற்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் தீயவர்கள்மேலும் நல்லவர்கள்மேலும் தமது சூரியனை உதிக்கச்செய்து, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். 46 உங்களை நேசிக்கிறவர்களையே நீங்கள் நேசிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? 47 உங்களுடைய சகோதரர்களைமட்டும் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? 48 ஆகவே, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா பூரண சற்குணராக இருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராக இருக்கக்கடவீர்கள்.
-
33 கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். 34 அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய ஆடைகளை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.
-
20 பின்பு யெகோவா “சோதோம் கொமோராவைக்குறித்து ஏற்படும் கூக்குரல் பெரிதாக இருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடியதாக இருப்பதினாலும், 21 நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன்” என்றார். 22 அப்பொழுது அந்த மனிதர்கள் அந்த இடத்தைவிட்டு சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் யெகோவாவுக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான். 23 அப்பொழுது ஆபிரகாம் அருகில் வந்து: “துன்மார்க்கனோடு நீதிமானையும் அழிப்பீரோ? 24 பட்டணத்திற்குள் ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அங்கேயிருக்கும் அந்த ஐம்பது நீதிமான்களுக்காகக் காப்பாற்றாமல் அந்த இடத்தை அழிப்பீரோ? 25 துன்மார்க்கனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதல்ல; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாக நடத்துவது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாமல் இருப்பாரோ” என்றான். 26 அதற்குக் யெகோவா: “நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்களுக்காக அந்த இடம் முழுவதையும் காப்பாற்றுவேன்” என்றார். 27 அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக: “இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடு பேசத்துணிந்தேன். 28 “ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேருக்காக பட்டணம் முழுவதையும் அழிப்பீரோ” என்றான். அதற்கு அவர்: “நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை” என்றார். 29 அவன் பின்னும் அவரோடு பேசி: “நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ” என்றான். அதற்கு அவர்: “நாற்பது நீதிமான்களுக்காக அதை அழிப்பதில்லை” என்றார். 30 அப்பொழுது அவன்: “நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ” என்றான். அதற்கு அவர்: “நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை” என்றார். 31 அப்பொழுது அவன்: “இதோ, ஆண்டவரோடு பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ” என்றான். அதற்கு அவர்: “இருபது நீதிமான்களுக்காக அதை அழிப்பதில்லை” என்றார். 32 அப்பொழுது அவன்: “ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருமுறை மட்டும் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: “பத்து நீதிமான்களுக்காக அதை அழிப்பதில்லை” என்றார். 33 யெகோவா ஆபிரகாமோடு பேசி முடிந்தபின்பு போய்விட்டார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்திற்குத் திரும்பினான்.
-
4 எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னியும்;
நாங்களும் எங்களிடம் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே;
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும், என்று சொல்லுங்கள்” என்றார்.
-
59 அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளும்போது, அவனைக் கல்லெறிந்தார்கள். 60 அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாமல் இரும் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி உயிரைவிட்டான்.
-
8 உன்னிடத்தில் நீ அன்பு செலுத்துகிறதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரீகப்பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள். 9 நீங்கள் பட்சபாதமுள்ளவர்களாக இருந்தால், பாவம்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தினாலே நியாயந்தீர்க்கப்படுவீர்கள். 10 எப்படியென்றால், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாக இருப்பான். 11 ஏனென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக என்று சொன்னவர் கொலை செய்யாதிருப்பாயாக என்றும் சொன்னார்; ஆதலால், நீ விபசாரம் செய்யாமலிருந்தும் கொலை செய்தாயானால் நியாயப்பிரமாணத்தை மீறினவனாவாய். 12 சுதந்திரப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்பு அடையப்போகிறவர்களாக அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள். 13 ஏனென்றால், இரக்கம் செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.
-
30 மறுநாளில் மோசே மக்களை நோக்கி: “நீங்கள் மகா பெரிய பாவம் செய்தீர்கள்; உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் யெகோவாவினிடத்திற்கு ஏறிப்போகிறேன்” என்றான். 31 அப்படியே மோசே யெகோவாவிடத்திற்குத் திரும்பிப்போய்: “ஐயோ, இந்த மக்கள் தங்கத்தினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரியபாவம் செய்திருக்கிறார்கள். 32 ஆகிலும், தேவரீர் அவர்களுடைய பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புத்தகத்திலிருந்து என்னுடைய பெயரைக் கிறுக்கிப்போடும்” என்றான்.
-
மஸ்கீல் என்னும் தாவீதின் பாடல்.
1 எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ,
எவனுடைய பாவம் மூடப்பட்டதோ,
அவன் பாக்கியவான்.
2 எவனுடைய அக்கிரமத்தைக் யெகோவா எண்ணாமலிருக்கிறாரோ,
எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.
3 நான் அடக்கிவைத்தவரையில்,
எப்பொழுதும் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.
4 இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாக இருந்ததினால்,
என் பெலன் கோடைக்கால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா)
5 நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்;
என் மீறுதல்களைக் யெகோவாவுக்கு அறிக்கையிடுவேன் என்றேன்;
தேவனே நீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா)
-
8 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
-
8 மேலும், நீங்களெல்லோரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கம் உள்ளவர்களும், சகோதரஅன்பு உள்ளவர்களும், மனதுருக்கம் உள்ளவர்களும், தாழ்மை உள்ளவர்களுமாக இருந்து, 9 தீமைக்குத் தீமையையும், அவமானத்திற்கு அவமானத்தையும் செய்யாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அழைக்கப்பட்டிருக்கிறவர்கள் என்று தெரிந்து, ஆசீர்வாதம்பண்ணுங்கள்.
-
7 தரித்திரனை அவனுடைய சகோதரர்கள் எல்லோரும் பகைக்கிறார்களே,
எத்தனை அதிகமாக அவனுடைய நண்பர்கள் அவனுக்குத் தூரமாவார்கள்;
அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான்,
அவைகளோ வெறும் வார்த்தைகளே.
-
17 உன் எதிரி விழும்போது சந்தோஷப்படாதே;
அவன் இடறும்போது உன்னுடைய இருதயம் சந்தோஷப்படாமல் இருப்பதாக.
18 யெகோவா அதைக் காண்பார், அது அவருடைய பார்வைக்கு தீங்காக இருக்கும்;
அப்பொழுது அவனிடத்திலிருந்து அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார்.
-
21 உன்னுடைய எதிரிகள் பசியாக இருந்தால்,
அவனுக்கு சாப்பிட உணவு கொடு;
அவன் தாகமாக இருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு.
22 அதினால் அவனை வெட்கப்படுத்துவாய்;
யெகோவா உனக்குப் பலனளிப்பார்.
-
36 எனவே உங்களுடைய பிதா இரக்கமுள்ளவராக இருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள்.
-
3 அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் யாராவது தன்னைக்குறித்து நினைக்கவேண்டிய அளவிற்கு அதிகமாக நினைக்காமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்துகொடுத்த விசுவாச அளவின்படி, தெளிந்த எண்ணம் உள்ளவனாக நினைக்கவேண்டும்.
-
இராகத் தலைவனுக்கு தாவீது எழுதிய பாடல். பத்சேபாளோடு தாவீது செய்த பாவத்திற்குப் பிறகு தீர்க்கதரிசியாகிய நாத்தான் தாவீதிடம் சென்று உணர்த்தியபோது இது பாடப்பட்டது.
1 தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும்,
உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.
2 என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி,
என்னுடைய பாவம்போக என்னைச் சுத்திகரியும்.
3 என்னுடைய மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்;
என்னுடைய பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.
4 தேவனே உம் ஒருவருக்கே விரோதமாக நான் பாவம்செய்து,
உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை செய்தேன்;
நீர் பேசும்போது உம்முடைய நீதி வெளிப்படவும், நீர் நியாயந்தீர்க்கும்போது,
உம்முடைய பரிசுத்தம் வெளிப்படவும் இதை அறிக்கையிடுகிறேன்.
Shows Read in context, Share and Copy.