34 Bible Verses About Trials

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

Bible Verses About Trials
  1. 1 தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, உலகமெங்கும் சிதறுண்டு வாழும் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது.

    2 என் சகோதரர்களே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் சிக்கிக்கொள்ளும்போது, 3 உங்களுடைய விசுவாசத்தின் பரீட்சையானது சகிப்புத்தன்மையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். 4 நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாக இல்லாமல், தேறினவர்களாகவும் நிறைவுள்ளவர்களாகவும் இருப்பதற்காக, சகிப்புத்தன்மையானது தனது செயலைச் செய்துமுடிக்கட்டும். 5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். 6 ஆனாலும் அவன் கொஞ்சம்கூட சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு கேட்கவேண்டும்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாக இருக்கிறான். 7 அப்படிப்பட்ட மனிதன், தான் கர்த்தரிடத்தில் எதையாவது பெறலாமென்று நினைக்காமல் இருப்பானாக. 8 ஏனென்றால், இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாக இருக்கிறான்.

  2. 13 சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாமல் இருப்பானாக; தேவன் தீமைகளினால் சோதிக்கப்படுகிறவர் இல்லை, ஒருவனையும் அவர் சோதிக்கிறவரும் இல்லை. 14 அவனவன் தன்தன் சொந்த ஆசையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். 15 பின்பு ஆசையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பெற்றெடுக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பெற்றெடுக்கும். 16 என் பிரியமான சகோதரர்களே, ஏமாந்துபோகவேண்டாம். 17 நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரலோகத்திலிருந்து உண்டாகி, ஒளிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது; அவரிடத்தில் எந்தவொரு மாறுதலும், எந்தவொரு வேற்றுமையின் நிழலும் இல்லை.

  3. 12 பிரியமானவர்களே, உங்களைப் பரீட்சைப்பார்க்க உங்கள் நடுவில் அக்கினியைப்போன்ற சோதனைகள் வரும்போது ஏதோ புதுமை நடக்கிறது என்று ஆச்சரியப்படாமல், 13 கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழ்வதற்காக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். 14 நீங்கள் கிறிஸ்துவின் நாமத்திற்காக அவமதிக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால், தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே அவமதிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார். 15 ஆகவே, உங்களில் யாரும் கொலைபாதகனாகவோ, திருடனாகவோ, தீங்கு செய்தவனாகவோ, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாகவோ இருந்து பாடுபடுகிறவனாக இருக்கக்கூடாது. 16 ஒருவன் கிறிஸ்தவனாக இருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமல் இருந்து, அதினால் தேவனை மகிமைப்படுத்தவேண்டும்.

  4. 3 அதுமட்டும் இல்லை, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது என்று நாங்கள் அறிந்து, 4 உபத்திரவங்களிலும் மேன்மைபாராட்டுகிறோம். 5 மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறதினால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.

  5. 6 இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியம் என்பதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். 7 அழிந்துபோகிற தங்கம் நெருப்பினாலே சோதிக்கப்படும்; அதைவிட அதிக விலையுயர்ந்த உங்களுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையும் உண்டாகக் காணப்படும்.

  6. 2 உன் தேவனாகிய யெகோவா உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருடங்களும் வனாந்திரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. 3 அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனிதன் உணவினால் மாத்திரம் அல்ல, யெகோவாவுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்துவதற்கு, நீயும் உன் முற்பிதாக்களும் அறியாமலிருந்த மன்னாவினால் உன்னைப் பராமரித்தார். 4 இந்த நாற்பது வருடங்களும் உன்மேல் இருந்த ஆடை பழையதாகிப் போகவும் இல்லை, உன் கால் வீங்கவும் இல்லை. 5 ஒருவன் தன் மகனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய யெகோவா உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக.

  7. 9 அந்த மூன்றாம் பங்கை நான் நெருப்புக்குட்படச்செய்து, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்களுடைய விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என் மக்களென்று நான் சொல்லுவேன், யெகோவா என் தேவன் என்று அவர்கள் சொல்லுவார்கள்.

  8. 12 சோதனையைச் சகிக்கிற மனிதன் பாக்கியவான்; அவன் உத்தமன் என்று தெரிந்தபின்பு கர்த்தர், தம்மை நேசிக்கிறவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஜீவகிரீடத்தைப் பெறுவான்.

  9. 10 தேவனே, எங்களைச் சோதித்தீர்;

    வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர்.

    11 எங்களை வலையில் அகப்படுத்தி,

    எங்களுடைய இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர்.

    12 மனிதர்களை எங்களுடைய தலையின்மேல் ஏறிப்போகச்செய்தீர்;

    தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்;

    செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்.

  10. 7 அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினால் நான் என்னை உயர்த்தாமல் இருக்க, என் சரீரத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; நான் என்னை உயர்த்தாமல் இருக்க, அது என்னைக் குத்தும் சாத்தானுடைய தூதனாக இருக்கிறது. 8 அது என்னைவிட்டு நீங்கும்படி, நான் மூன்றுமுறை கர்த்தரிடம் வேண்டிக்கொண்டேன். 9 அதற்கு அவர்: என் கிருபை உனக்குப் போதும்; உன் பலவீனத்திலே என் பலம் பூரணமாக இருக்கும் என்றார். எனவே, கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாக மேன்மைபாராட்டுவேன். 10 அப்படியே நான் பலவீனமாக இருக்கும்போதே பலமுள்ளவனாக இருக்கிறேன்; எனவே கிறிஸ்துவுக்காக எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.

  11. 4 பாவம்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; 5 முழு உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்த நோவாவையும் மற்ற ஏழு நபர்களையும் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் பெரும்வெள்ளத்தை வரப்பண்ணி; 6 சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, தண்டனைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாக நடப்பவர்களுக்கு அவைகளை உதாரணமாக வைத்து; 7 அக்கிரமக்காரர்களோடு வாழ்கின்றபோது அவர்களுடைய காமவிகார செயல்களினால் வருத்தப்பட்டு, 8 நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமச் செய்கைகளைப் பார்த்து, கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க; 9 கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையில் இருந்து இரட்சிக்கவும், அக்கிரமக்காரர்களை தண்டனைக்குரியவர்களாக நியாயத்தீர்ப்பின் நாளுக்காக வைக்கவும் அறிந்திருக்கிறார்.

  12. 1 இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியென்றால், அவர் அவனை நோக்கி: “ஆபிரகாமே” என்றார்; அவன்: “இதோ அடியேன்” என்றான். 2 அப்பொழுது அவர்: “உன் மகனும், உனது ஒரேமகனும், உனக்குப் பிரியமான மகனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்திற்குப் போய், அங்கே நான் உனக்குச் சொல்லும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு” என்றார்.

  13. 31 பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையை முறத்தினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு அனுமதி கேட்டுக்கொண்டான். 32 நானோ உன் நம்பிக்கை இழந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரர்களைத் திடப்படுத்து என்றார். 33 அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாக இருக்கிறேன் என்றான். 34 அவர் அவனைப் பார்த்து: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

  14. 33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாகும்படி இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்துவிட்டேன் என்றார்.

  15. 14 மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியானவராலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய குமாரர்களாக இருக்கிறார்கள். 15 அப்படியே, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், ஆவியானவரால், அப்பா பிதாவே என்று கூப்பிடக்கூடிய பிள்ளை என்கிற உரிமையைப் பெற்றீர்கள். 16 நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம் என்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனே சாட்சிக் கொடுக்கிறார். 17 நாம் பிள்ளைகளானால் வாரிசுகளுமாமே; தேவனுடைய வாரிசுகளும், கிறிஸ்துவிற்கு உடன் வாரிசுகளுமாமே; கிறிஸ்துவோடு நாம் மகிமைப்படுவதற்காக அவரோடு பாடுபட்டால் அப்படி ஆகும்.

    18 ஆதலால் இந்தக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடம் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடக்கூடியவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.

  16. 1 ஆகவே, நாங்கள் இனிக் காத்திருக்கமுடியாமல், அத்தேனே பட்டணத்தில் தனிமையாக இருப்பது நல்லது என்று நினைத்தோம். 2 இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்களுடைய விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் நற்செய்தியில் எங்களுடைய உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம். 3 இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே. 4 நமக்கு உபத்திரவம் வருமென்று நாங்கள் உங்களிடத்திலிருந்தபோது, உங்களுக்கு முன்னறிவித்தோம்; அப்படியே சம்பவித்ததென்றும் அறிந்திருக்கிறீர்கள். 5 ஆகவே, நான் இனிப் பொறுத்திருக்கமுடியாமல், எங்களுடைய வேலை வீணாகப்போகத்தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்கு உட்படுத்தினதுண்டோவென்று, உங்களுடைய விசுவாசத்தை அறியும்படிக்கு அவனை அனுப்பினேன்.

  17. 3 சகோதரர்களே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக தேவனுக்கு நன்றிசெலுத்த கடனாளிகளாக இருக்கிறோம்; உங்களுடைய விசுவாசம் மிகவும் பெருகுகிறதினாலும், நீங்களெல்லோரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறதினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாக இருக்கிறது. 4 நீங்கள் சகிக்கிற எல்லாத் துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினாலே உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம்.

  18. 67 நான் உபத்திரவப்படுவதற்கு முன்பு வழிதப்பி நடந்தேன்;

    இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.

  19. 2 ஆனாலும் அவர் வரும் நாளைத் தாங்கிக்கொள்பவன் யார்? அவர் வெளிப்படும்போது நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய நெருப்பைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார். 3 அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார்; அவர் லேவியின் சந்ததியைச் சுத்திகரித்து, அவர்கள் யெகோவாவுடையவர்களாக இருப்பதற்காகவும், நீதியாகக் காணிக்கையைச் செலுத்துவதற்காகவும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.

  20. 15 மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, வாசிக்கிறவன் சிந்திக்கவேண்டும். நீங்கள் அதைப் பரிசுத்த இடத்தில் நிற்பதைப் பார்க்கும்போது, 16 யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவேண்டும். 17 வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாவது எடுப்பதற்கு இறங்காமலிருக்கவேண்டும். 18 வயலில் இருக்கிறவன் தன் ஆடைகளை எடுப்பதற்குத் திரும்பாமலிருக்கவேண்டும். 19 அந்த நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ. 20 நீங்கள் ஓடிப்போவது மழைக் காலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, நடக்காதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள். 21 ஏனென்றால், உலகம் உண்டானதுமுதல் இதுவரைக்கும் நடக்காததும், இனிமேலும் நடைபெறாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.

  21. 28 மேலும் எனக்கு ஏற்பட்ட சோதனைகளில் என்னோடுகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே.

  22. 12 இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று நினைக்கிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 13 மனிதர்களுக்குச் சம்பவிக்கிற சோதனையே அல்லாமல் வேறு சோதனை உங்களுக்குச் சம்பவிக்கவில்லை. தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார்; உங்களுடைய பெலத்திற்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடுக்காமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான வழியையும் உண்டாக்குவார்.

  23. 7 இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாகாமல், தேவனால் உண்டாகியிருக்கிறது என்று தெரியும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். 8 நாங்கள் எல்லாப் பக்கங்களிலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கம் அடைவதும், மனம் உடைவதும் இல்லை; 9 துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை. 10 கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவன் எங்களுடைய சரீரத்திலே தெரியும்படி, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்களுடைய சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.

  24. 1 ஆகவே, மேகத்தைப்போல இத்தனை அதிகமான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான எல்லாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாக இருக்கிற இயேசுவைப் பார்த்து, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஓடுவோம்; 2 அவர் தமக்குமுன்பாக வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை நினைக்காமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபக்கத்தில் வீற்றிருக்கிறார். 3 ஆகவே, நீங்கள் மனம் தளர்ந்தவர்களாக உங்களுடைய ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாமல் இருக்க, தமக்கு விரோதமாகப் பாவிகளால் செய்யப்பட்ட இந்தவிதமான வெறுக்கத்தக்க காரியங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.

  25. 5 அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய கண்டிப்பை அற்பமாக நினைக்காதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. 6 கர்த்தர் எவனை நேசிக்கிறாரோ அவனை அவர் கண்டித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று குழந்தைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதிகளை மறந்தீர்கள். 7 நீங்கள் கண்டிக்கப்படுவதை சகிக்கிறவர்களாக இருந்தால் தேவன் உங்களைப் பிள்ளைகளாக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் கண்டிக்காத பிள்ளைகள் உண்டோ? 8 எல்லோருக்கும் கிடைக்கும் கண்டிப்பு உங்களுக்குக் கிடைக்காமல் இருந்தால் நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாக இல்லாமல் வேசியின் பிள்ளைகளாக இருப்பீர்களே.

  26. 1 எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலது கையில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் நடுவிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது; 2 நீ செய்தவைகளையும், உன் கடினஉழைப்பையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகித்துக்கொள்ளமுடியாமல் இருக்கிறதையும், அப்போஸ்தலர்களாக இல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலர்கள் என்று சொல்லுகிறதை நீ சோதித்துப்பார்த்து அவர்கள் பொய்யர்கள் என்பதைக் கண்டுபிடித்ததையும்; 3 நீ சகித்துக்கொண்டு இருக்கிறதையும், பொறுமையாக இருக்கிறதையும், என் நாமத்திற்காக ஓய்வு இல்லாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன். 4 ஆனாலும், நீ ஆரம்பத்திலே வைத்திருந்த அன்பைவிட்டுவிட்டாய் என்று உன்மேல் எனக்குக் குறை உண்டு. 5 எனவே, நீ எந்த நிலைமையில் இருந்து விழுந்தாய் என்பதை நினைத்து, மனம்திரும்பி, ஆதியில் செய்த செய்கைகளைச் செய்; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, நீ மனம்திரும்பவில்லை என்றால், உன் விளக்குத்தண்டை அதனிடத்திலிருந்து நீக்கிவிடுவேன். 6 நான் வெறுக்கிற நிக்கொலாய் மதத்தைச் சேர்ந்தவர்களின் செய்கைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்தில் உண்டு. 7 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவன் எவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் நடுவில் இருக்கிற ஜீவமரத்தின் கனியை உண்ணக்கொடுப்பேன் என்று எழுது.

  27. 20 கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக்கேட்டு, உடனே அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுகிறவன்; 21 ஆனாலும் தனக்குள்ளே வேரில்லாதவனாக, கொஞ்சக்காலம்மட்டும் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.

  28. 9 அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்: என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லா மக்களாலும் பகைக்கப்படுவீர்கள். 10 அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். 11 அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை ஏமாற்றுவார்கள். 12 அக்கிரமம் பெருகுவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும். 13 இறுதிவரை நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். 14 ராஜ்யத்தினுடைய இந்த நற்செய்தி பூலோகமெங்கும் உள்ள எல்லா மக்களுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.

  29. 28 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாக தேவனிடம் அன்பாக இருக்கிறவர்களுக்கு எல்லாம் நன்மைக்குரியவைகளாக நடக்கிறது என்று அறிந்திருக்கிறோம். 29 தம்முடைய குமாரன் அநேக சகோதரர்களுக்குள்ளே முதற்பேறானவராக இருப்பதற்காக, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக இருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; 30 எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்தும் இருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியும் இருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியும் இருக்கிறார்.

  30. 8 அதுமட்டும் இல்லை, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். 9 நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்வதற்காக, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாக இல்லாமல், கிறிஸ்துவின்மேல் உள்ள விசுவாசத்தினால் வருகிறதும், விசுவாசம் மூலமாக தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாக இருந்து, கிறிஸ்துவிற்குள் இருக்கிறவன் என்று தெரியும்படிக்கும், 10 இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் தெரிந்துகொள்வதற்கும், அவருடைய மரணத்திற்கு இணையான மரணத்திற்குள்ளாகி, எப்படியாவது நான் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பதற்குத் தகுதியாவதற்கும்,

  31. 17 மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான். 18 ஈசாக்கிடம் உன் வம்சம் விளங்கும் என்று அவனிடம் சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்ப தேவன் வல்லவராக இருக்கிறார் என்று நினைத்து, 19 தன்னுடைய ஒரே மகனைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை ஒப்பனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.

  32. 35 பெண்கள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடு எழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடைவதற்கு, விடுதலைபெறச் சம்மதிக்காமல், வாதிக்கப்பட்டார்கள்; 36 வேறுசிலர் நிந்தைகளையும், அடிகளையும், கட்டுகளையும், சிறைக்காவலையும் அனுபவித்தார்கள்; 37 கல்லெறியப்பட்டார்கள், வாளால் அறுக்கப்பட்டார்கள், பரீட்சைப் பார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும், உபத்திரவத்தையும், துன்பத்தையும் அனுபவித்தார்கள்; 38 உலகம் அவர்களுக்குத் தகுதியாக இருக்கவில்லை; அவர்கள் வனாந்திரங்களிலும், மலைகளிலும், குகைகளிலும், பூமியின் வெடிப்புகளிலும், சிதறி அலைந்தார்கள்.

  33. 11 இதோ, பொறுமையாக இருக்கிறவர்களை பாக்கியவான்கள் என்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் பார்த்திருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும், இரக்கமும் உள்ளவராக இருக்கிறாரே.

  34. 10 என் பொறுமையைப்பற்றிச் சொல்லிய வசனத்திற்கு நீ கீழ்ப்படிந்து நடந்ததினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிப்பதற்காகப் பூச்சக்கரத்தின்மேல் வரப்போகிற சோதனைக்காலத்திற்கு நான் உன்னைத் தப்பித்துக் காப்பேன்.