62 Bible Verses About Suffering
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
-
21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும், வேதபண்டிதர்களாலும் பல பாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீடர்களுக்குச் சொல்லத்தொடங்கினார். 22 அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு சம்பவிக்கக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான். 23 அவரோ திரும்பி, பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாக இருக்கிறாய்; தேவனுக்குரியவைகளைச் சிந்திக்காமல் மனிதர்களுக்குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். 24 அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றவேண்டும். 25 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.
-
18 உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். 19 நீங்கள் உலகத்தாராக இருந்தால், உலகம் தன்னுடையதை நேசித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராக இல்லாதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. 20 வேலைக்காரன் தன் எஜமானைவிட பெரியவன் இல்லை என்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினது உண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வார்த்தையை கடைபிடித்தது உண்டானால், உங்களுடைய வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்.
-
13 பின்பு ஒருநாள் யோபுடைய மகன்களும் அவனுடைய மகள்களும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே சாப்பிட்டு திராட்சைரசம் குடிக்கிறபோது, 14 ஒரு ஆள் அவனிடத்தில் வந்து: எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்து கொண்டிருக்கும்போது, 15 சபேயர்கள் அவைகளை தாக்கி, அவைகளைக் கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்க வந்தேன் என்றான். 16 இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, வேறொருவன் வந்து: வானத்திலிருந்து தேவனுடைய நெருப்பு விழுந்து, ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்துப்போட்டது; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்க வந்தேன் என்றான். 17 இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, வேறொருவன் வந்து: கல்தேயர் மூன்று குழுக்களாக வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள், வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்க வந்தேன் என்றான். 18 இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, வேறொருவன் வந்து: உம்முடைய மகன்களும் உம்முடைய மகள்களும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டில் சாப்பிட்டுத் திராட்சைரசம் குடிக்கிறபோது, 19 வனாந்திரவழியாகப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நான்கு மூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின்மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்து போனார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்க வந்தேன் என்றான். 20 அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து: 21 நிர்வாணியாக என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாக அவ்விடத்திற்குத் திரும்புவேன்; எனக்கு இருந்ததெல்லாம் யெகோவா கொடுத்தார், யெகோவா அவைகளை எடுத்தார்; யெகோவாவுடைய நாமத்திற்கு நன்றி என்றான். 22 இவையெல்லாவற்றிலும் யோபு பாவம்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.
-
16 நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம் என்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனே சாட்சிக் கொடுக்கிறார். 17 நாம் பிள்ளைகளானால் வாரிசுகளுமாமே; தேவனுடைய வாரிசுகளும், கிறிஸ்துவிற்கு உடன் வாரிசுகளுமாமே; கிறிஸ்துவோடு நாம் மகிமைப்படுவதற்காக அவரோடு பாடுபட்டால் அப்படி ஆகும்.
18 ஆதலால் இந்தக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடம் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடக்கூடியவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். 19 மேலும் தேவனுடைய குமாரர்கள் வெளிப்படுத்தப்படுவதற்காக தேவனுடைய படைப்புகள் அதிக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது. 20 அது என்னவென்றால் படைப்புகள் அழிவிற்குரிய அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடு, 21 அந்தப் படைப்புகள் சொந்த இஷ்டத்தினாலே இல்லை, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. 22 எனவே, நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் படைப்புகள் எல்லாம் ஒன்றாகத் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது. 23 அதுவும் இல்லாமல், ஆவியானவரின் முதற்பலன்களைப் பெற்ற நாமும் நம்முடைய சரீர மீட்பாகிய பிள்ளை என்கிற உரிமை வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.
-
3 நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், எல்லாவிதமான ஆறுதலின் தேவனுமாக இருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். 4 தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எப்படிப்பட்ட உபத்திரவங்களிலும் இருப்பவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்கிறவர்களாவதற்கு, எங்களுக்கு வரும் எல்லா உபத்திரவங்களிலும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர். 5 எப்படியென்றால், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடம் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது. 6 எனவே, நாங்கள் உபத்திரவப்பட்டாலும், அது உங்களுடைய ஆறுதலுக்கும் இரட்சிப்பிற்கும் ஏற்றதாகும்; நாங்கள் ஆறுதல் அடைந்தாலும், அதுவும் உங்களுடைய ஆறுதலுக்கும் இரட்சிப்பிற்கும் ஏற்றதாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகித்துக்கொள்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன் தருகிறது. 7 நீங்கள் எங்களோடு பாடுபடுகிறதுபோல, எங்களோடு ஆறுதலும் பெற்றுக்கொள்கிறீர்கள் என்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறோம். 8 எனவே, சகோதரர்களே, ஆசியாவில் எங்களுக்கு ஏற்பட்ட உபத்திரவத்தை நீங்கள் தெரிந்துகொள்ளாமலிருக்க எங்களுக்கு மனமில்லை. என்னவென்றால், நாங்கள் பிழைப்போம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இல்லாமல்போகும் அளவிற்கு, எங்களுடைய பலத்திற்கும் மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டானது. 9 நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாக இல்லாமல், மரித்தவர்களை உயிரோடு எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாக இருப்பதற்காக, மரணம் வரும் என்று நாங்கள் எங்களுக்குள்ளே உறுதியாக இருந்தோம். 10 அப்படிப்பட்ட மரணத்திலிருந்தும் அவர் எங்களைக் காப்பாற்றினார், இப்பொழுதும் காப்பாற்றுகிறார், இனிமேலும் காப்பாற்றுவார் என்று அவரையே நம்பியிருக்கிறோம். 11 அநேகர் மூலமாக எங்களுக்கு உண்டான இரக்கத்திற்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படுவதற்கு, நீங்களும் ஜெபத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள்.
-
3 அதுமட்டும் இல்லை, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது என்று நாங்கள் அறிந்து, 4 உபத்திரவங்களிலும் மேன்மைபாராட்டுகிறோம். 5 மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறதினால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. 6 அன்றியும், நாம் பெலன் இல்லாதவர்களாக இருக்கும்போதே, குறித்தக் காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரர்களுக்காக மரித்தார். 7 நீதிமானுக்காக ஒருவன் இறப்பது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். 8 நாம் பாவிகளாக இருக்கும்போது கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த அவரது அன்பை நிரூபிக்கிறார்.
-
18 வேலைக்காரர்களே, அதிக பயத்தோடு உங்களுடைய எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும், சாந்தகுணமுள்ளவர்களுக்கும்மட்டும் இல்லை, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள். 19 ஏனென்றால், ஒருவன் அநியாயமாகப் பாடுகள்படும்போது தேவனை நினைத்துக்கொண்டே உபத்திரவங்களைப் பொறுமையாகச் சகித்துக்கொண்டால் அதுவே தேவனுக்குப் பிரியமாக இருக்கும். 20 நீங்கள் குற்றம் செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடு சகித்துக்கொண்டால், அதினால் என்ன நன்மை உண்டு? ஆனால், நீங்கள் நன்மைசெய்து பாடுகள்படும்போது பொறுமையோடு சகித்துக்கொண்டால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரியமாக இருக்கும். 21 இதற்காகத்தான் நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; ஏனென்றால், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுகள்பட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி வருவதற்காக உங்களுக்கு முன்மாதிரியை வைத்துப்போனார்.
22 அவர் பாவம் செய்யவில்லை,
அவருடைய வாயிலே வஞ்சனையும் காணப்படவில்லை;
23 அவர் தூஷிக்கப்படும்போது பதிலுக்குத் தூஷிக்காமலும்,
பாடுகள்பட்டபோது திரும்ப பயமுறுத்தாமலும்,
நியாயமாக நியாயத்தீர்ப்புச் செய்கிறவருக்கு தம்மையே ஒப்புவித்தார்.
-
12 பிரியமானவர்களே, உங்களைப் பரீட்சைப்பார்க்க உங்கள் நடுவில் அக்கினியைப்போன்ற சோதனைகள் வரும்போது ஏதோ புதுமை நடக்கிறது என்று ஆச்சரியப்படாமல், 13 கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழ்வதற்காக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். 14 நீங்கள் கிறிஸ்துவின் நாமத்திற்காக அவமதிக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால், தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே அவமதிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார். 15 ஆகவே, உங்களில் யாரும் கொலைபாதகனாகவோ, திருடனாகவோ, தீங்கு செய்தவனாகவோ, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாகவோ இருந்து பாடுபடுகிறவனாக இருக்கக்கூடாது. 16 ஒருவன் கிறிஸ்தவனாக இருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமல் இருந்து, அதினால் தேவனை மகிமைப்படுத்தவேண்டும்.
-
3 அவர் அசட்டைசெய்யப்பட்டவரும், மனிதரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைசெய்யப்பட்டிருந்தார்; அவரை ஒருபொருட்டாக எண்ணாமற்போனோம். 4 உண்மையாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று கருதினோம். 5 நம்முடைய மீறுதல்களின்காரணமாக அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின்காரணமாக அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். 6 நாம் எல்லோரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; யெகோவாவோ நம் அனைவருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழச்செய்தார்.
-
2 என் சகோதரர்களே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் சிக்கிக்கொள்ளும்போது, 3 உங்களுடைய விசுவாசத்தின் பரீட்சையானது சகிப்புத்தன்மையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். 4 நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாக இல்லாமல், தேறினவர்களாகவும் நிறைவுள்ளவர்களாகவும் இருப்பதற்காக, சகிப்புத்தன்மையானது தனது செயலைச் செய்துமுடிக்கட்டும்.
-
7 ஆனாலும், எனக்கு இலாபமாக இருந்தவைகள் எவைகளோ, அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டம் என்று நினைத்தேன். 8 அதுமட்டும் இல்லை, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். 9 நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்வதற்காக, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாக இல்லாமல், கிறிஸ்துவின்மேல் உள்ள விசுவாசத்தினால் வருகிறதும், விசுவாசம் மூலமாக தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாக இருந்து, கிறிஸ்துவிற்குள் இருக்கிறவன் என்று தெரியும்படிக்கும், 10 இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் தெரிந்துகொள்வதற்கும், அவருடைய மரணத்திற்கு இணையான மரணத்திற்குள்ளாகி, எப்படியாவது நான் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பதற்குத் தகுதியாவதற்கும், 11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்றும் குப்பையென்றும் நினைக்கிறேன்.
-
8 தெளிந்த புத்தி உள்ளவர்களாக இருங்கள், விழித்திருங்கள்; ஏனென்றால், உங்களுடைய எதிராளியாகிய பிசாசு கெர்ச்சிக்கிற சிங்கம்போல யாரை விழுங்கலாமோ என்று தேடிச் சுற்றித்திரிகிறான். 9 விசுவாசத்தில் உறுதியாக இருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்தில் உள்ள உங்களுடைய சகோதரர்களும் அப்படிப்பட்டப் பாடுகளை அனுபவிக்கிறார்கள் என்று தெரிந்திருக்கிறீர்களே. 10 கிறிஸ்து இயேசுவிற்குள் நம்மை அவருடைய நித்திய மகிமைக்கு அழைத்தவராக இருக்கிற எல்லாக் கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடுகள் அனுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; 11 அவருக்கு மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
12 உங்களுக்குப் புத்திசொல்லுவதற்கும், நீங்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை, தேவனுடைய உண்மையான கிருபைதான் என்று சாட்சியிடுவதற்கும், நான் சுருக்கமாக உங்களுக்கு எழுதி, உண்மையுள்ள சகோதரனாக எனக்குத் தோன்றுகிற சில்வானுவின் கையிலே கொடுத்து அனுப்பியிருக்கிறேன்.
-
1 ஆகவே, மேகத்தைப்போல இத்தனை அதிகமான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான எல்லாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாக இருக்கிற இயேசுவைப் பார்த்து, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஓடுவோம்; 2 அவர் தமக்குமுன்பாக வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை நினைக்காமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபக்கத்தில் வீற்றிருக்கிறார். 3 ஆகவே, நீங்கள் மனம் தளர்ந்தவர்களாக உங்களுடைய ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாமல் இருக்க, தமக்கு விரோதமாகப் பாவிகளால் செய்யப்பட்ட இந்தவிதமான வெறுக்கத்தக்க காரியங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள். 4 பாவத்திற்கு விரோதமாகப் போராடுகிறதில் இரத்தம் சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே.
-
1 பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் பார்த்தேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; கடலும் இல்லாமல்போனது. 2 யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்திலிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருவதைப் பார்த்தேன்; அது தன் கணவனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. 3 மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனிதர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலம் இருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாக இருப்பார்; அவர்களும் அவருடைய மக்களாக இருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடு இருந்து அவர்களுடைய தேவனாக இருப்பார். 4 அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று சொன்னது.
-
1 அவர் அப்புறம் போகும்போது பிறவிக் குருடனாகிய ஒரு மனிதனைப் பார்த்தார். 2 அப்பொழுது அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: ரபீ, இவன் குருடனாக பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். 3 இயேசு மறுமொழியாக: அது இவன் செய்த பாவமும் இல்லை, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமும் இல்லை, தேவனுடைய செயல்கள் இவனிடத்தில் வெளிப்படுவதற்கு இப்படிப் பிறந்தான்.
-
27 நான் வந்து உங்களைப் பார்த்தாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாக நின்று, ஒரே ஆத்துமாவினாலே நற்செய்தியின் விசுவாசத்திற்காகப் போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றுக்கும் பயப்படாமல் இருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எந்தவிதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் நற்செய்திற்குத் தகுதியானவர்களாக நடந்துகொள்ளுங்கள். 28 நீங்கள் பயப்படாமலிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அடையாளமாக இருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே. 29 ஏனென்றால், கிறிஸ்துவை விசுவாசிக்கிறதற்குமட்டும் இல்லை, அவருக்காகப் பாடுகள்படுகிறதற்கும் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. 30 நீங்கள் என்னிடம் பார்த்ததும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.
-
12 கர்த்தருடைய கண்கள் நீதிமான்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது,
அவருடைய காதுகள் அவர்களுடைய வேண்டுதல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது;
தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் எதிராக இருக்கிறது.”
13 நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்? 14 நீதிக்காக நீங்கள் பாடுகள்பட்டால் பாக்கியவான்களாக இருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து; 15 கர்த்தராகிய தேவனை உங்களுடைய இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களுக்குள் இருக்கிற நம்பிக்கையைப்பற்றி உங்களிடம் விசாரித்துக் கேட்கிற எல்லோருக்கும் சாந்தத்தோடும், மரியாதையோடும் பதில்சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாக இருங்கள். 16 கிறிஸ்துவிற்குரிய உங்களுடைய நல்ல நடக்கையை அவமதிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரர்கள் என்று உங்களுக்கு எதிராகச் சொல்லுகிற விஷயத்தில் அவர்கள் வெட்கப்பட்டுப்போகும்படி நீங்கள் நல்ல மனச்சாட்சி உள்ளவர்களாக இருங்கள். 17 தீமைசெய்து பாடுகள் அனுபவிப்பதைவிட, தேவனுக்கு விருப்பமானால், நன்மைசெய்து பாடுகள் அனுபவிப்பதே மேன்மையாக இருக்கும்.
-
16 அவர் பெண்ணை நோக்கி: “நீ கர்ப்பவதியாக இருக்கும்போது உன் வேதனையை மிகவும் அதிகப்படுத்துவேன்; வேதனையோடு பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன்னுடைய கணவனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்” என்றார். 17 பின்பு அவர் ஆதாமை நோக்கி: “நீ உன்னுடைய மனைவியின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சாப்பிடவேண்டாம் என்று நான் உனக்குச் சொன்ன மரத்தின் பழத்தை சாப்பிட்டதால், பூமி உன்னால் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் வருத்தத்தோடு அதின் பலனைச் சாப்பிடுவாய். 18 அது உனக்கு முட்செடிகளை முளைப்பிக்கும்; நிலத்தின் பயிர்வகைகளைச் சாப்பிடுவாய். 19 நீ மண்ணிலிருந்து எடுக்கப்பட்டதால், நீ மண்ணுக்குத் திரும்பும்வரைக்கும் உன் முகத்தின் வியர்வையைச் சிந்தி ஆகாரம் சாப்பிடுவாய்; நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்” என்றார்.
-
33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாகும்படி இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்துவிட்டேன் என்றார்.
-
7 அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினால் நான் என்னை உயர்த்தாமல் இருக்க, என் சரீரத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; நான் என்னை உயர்த்தாமல் இருக்க, அது என்னைக் குத்தும் சாத்தானுடைய தூதனாக இருக்கிறது. 8 அது என்னைவிட்டு நீங்கும்படி, நான் மூன்றுமுறை கர்த்தரிடம் வேண்டிக்கொண்டேன். 9 அதற்கு அவர்: என் கிருபை உனக்குப் போதும்; உன் பலவீனத்திலே என் பலம் பூரணமாக இருக்கும் என்றார். எனவே, கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாக மேன்மைபாராட்டுவேன். 10 அப்படியே நான் பலவீனமாக இருக்கும்போதே பலமுள்ளவனாக இருக்கிறேன்; எனவே கிறிஸ்துவுக்காக எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.
-
6 இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியம் என்பதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். 7 அழிந்துபோகிற தங்கம் நெருப்பினாலே சோதிக்கப்படும்; அதைவிட அதிக விலையுயர்ந்த உங்களுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையும் உண்டாகக் காணப்படும். 8 நீங்கள் அவரைப் பார்க்காமல் இருந்தும் அவரை நேசிக்கிறீர்கள்; இப்பொழுது நீங்கள் அவரைப் பார்க்காமல் இருந்தும் அவர்மேல் விசுவாசம் வைத்து, சொல்லமுடியாததும், மகிமையினால் நிறைந்ததுமாக இருக்கிற சந்தோஷம் உள்ளவர்களாகக் களிகூர்ந்து, 9 உங்களுடைய விசுவாசத்தின் பலனாகிய ஆத்தும இரட்சிப்பைப் பெற்றுக்கொள்கிறீர்கள்.
-
16 அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவு பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன்” என்றார்.
-
23 அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களா? நான் அதிகம்; புத்தியீனமாகப் பேசுகிறேன்; நான் அதிகமாகப் பிரயாசப்பட்டவன், அதிகமாக அடிபட்டவன், அதிகமாக சிறைக் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகமுறை மரணவேதனையில் சிக்கிக்கொண்டவன். 24 யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பது அடிகளாக ஐந்து முறை அடிக்கப்பட்டேன்; 25 மூன்றுமுறை பிரம்புகளால் அடிக்கப்பட்டேன், ஒருமுறை கல்லெறியப்பட்டேன், மூன்றுமுறை கப்பல் சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இரவும் பகலும் கழித்தேன். 26 அநேகமுறை பயணம் செய்தேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், திருடர்களால் வந்த மோசங்களிலும், என் சொந்த மக்களால் வந்த மோசங்களிலும், யூதரல்லாதவர்கள் மூலம் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்திரத்தில் உண்டான மோசங்களிலும், கடலில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரர்களால் வந்த மோசங்களிலும்; 27 பிரயாசத்திலும், வருத்தத்திலும் அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன். 28 இவைகள் மட்டுமல்லாமல், எல்லா சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை தினந்தோறும் துக்கப்படுத்துகிறது. 29 ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறது இல்லையோ? ஒருவன் பாவத்தில் விழுந்தால் என் மனம் எரியாமல் இருக்குமோ?
-
35 “உமக்காக எந்தநேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்” என்று எழுதியிருக்கிறபடி நடந்தாலும், 36 கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ? 37 இவைகள் எல்லாவற்றிலேயும் நாம் நம்மேல் அன்பு வைத்திருக்கிறவராலே முற்றிலும் வெற்றி பெறுகிறவர்களாக இருக்கிறோமே. 38 மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வரும்காரியங்களானாலும், 39 உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தப் படைப்புகளானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமுடியாது என்று நம்பியிருக்கிறேன்.
-
8 நாங்கள் எல்லாப் பக்கங்களிலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கம் அடைவதும், மனம் உடைவதும் இல்லை; 9 துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை. 10 கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவன் எங்களுடைய சரீரத்திலே தெரியும்படி, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்களுடைய சரீரத்தில் சுமந்து திரிகிறோம். 11 எப்படியென்றால், மரணத்திற்குரிய எங்களுடைய சரீரத்திலே இயேசுவினுடைய ஜீவன் தெரியும்படி உயிரோடு இருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவுக்காக மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம்.
-
16 எனவே, நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்களுடைய புறம்பான மனிதன் அழிந்தாலும், உள்ளான மனிதன் நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறான். 17 மேலும் காணப்படுகிறவைகளை இல்லை, காணாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கிப்போகும் இலேசான நம்முடைய உபத்திரவம், மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. 18 ஏனென்றால், காணப்படுகிறவைகள் தற்காலிகமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.
-
8 தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என்னுடைய நற்செய்தியின்படியே, மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டவர் என்று நினைத்துக்கொள். 9 இந்த நற்செய்தியினிமித்தம் நான் பெரும் பாவம் செய்தவனைப்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அனுபவிக்கிறேன்; தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை. 10 ஆகவே, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடு பெற்றுக்கொள்ளும்படி, எல்லாவற்றையும் அவர்கள் நிமித்தமாக சகித்துக்கொள்ளுகிறேன். 11 இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவென்றால், நாம் அவரோடுகூட மரித்தோமானால், அவரோடுகூடப் பிழைத்துமிருப்போம்; 12 அவரோடுகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடுகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;
-
12 அன்றியும் கிறிஸ்து இயேசுவிற்குள் தேவபக்தியாக நடக்க விருப்பமாக இருக்கிற அனைவரும் துன்பப்படுவார்கள்.
-
14 வானங்களின்வழியாகப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறதினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாகப் பற்றிக்கொண்டிருப்போம். 15 நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதாபப்படமுடியாத பிரதான ஆசாரியர் நமக்கு இல்லாமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டும், பாவம் இல்லாதவராக இருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கு இருக்கிறார். 16 எனவே, நாம் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளவும், சரியான நேரத்தில் உதவிசெய்யும் கிருபையை அடையவும், தைரியமாகக் கிருபையின் சிங்காசனத்திடம் சேருவோம்.
-
3 சகோதரர்களே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக தேவனுக்கு நன்றிசெலுத்த கடனாளிகளாக இருக்கிறோம்; உங்களுடைய விசுவாசம் மிகவும் பெருகுகிறதினாலும், நீங்களெல்லோரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறதினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாக இருக்கிறது. 4 நீங்கள் சகிக்கிற எல்லாத் துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினாலே உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம். 5 நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடுகள் அநுபவிக்கிறவர்களாக இருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் தகுதியுடையவர்கள் என்று எண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமானத் தீர்ப்புச் செய்கிறவரென்பதற்கு, அதுவே ஆதாரமாக இருக்கிறது.
-
9 என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்க தேவதூதர்களைவிட கொஞ்சம் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைப் பார்க்கிறோம். 10 ஏனென்றால், தமக்காகவும் தம்மூலமாகவும் எல்லாவற்றையும் உண்டாக்கினவர், அநேக பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கும்போது அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துவது அவருக்கு ஏற்றதாக இருந்தது.
-
7 இப்படியிருக்க, சகோதரர்களே, கர்த்தருடைய வருகைவரை நீடிய பொறுமையாக இருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்கனியை அடையவேண்டும் என்று, முன்மாரியும், பின்மாரியும் வரும்வரை, நீடிய பொறுமையோடு காத்திருக்கிறான். 8 நீங்களும் நீடிய பொறுமையோடு இருந்து, உங்களுடைய இருதயங்களை உறுதிப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாக இருக்கிறது. 9 சகோதரர்களே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாக குறைசொல்லாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார். 10 என் சகோதரர்களே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும், நீடிய பொறுமைக்கும் உதாரணமாக வைத்துக்கொள்ளுங்கள். 11 இதோ, பொறுமையாக இருக்கிறவர்களை பாக்கியவான்கள் என்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் பார்த்திருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும், இரக்கமும் உள்ளவராக இருக்கிறாரே.
-
1 இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக சரீரத்திலே பாடுகள்பட்டதினால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாக அணிந்துகொள்ளுங்கள். 2 ஏனென்றால், சரீரத்தில் பாடுபடுகிறவன் இனி சரீரத்தில் இருக்கும் காலம்வரைக்கும் மனிதர்களுடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய விருப்பத்தின்படியே பிழைப்பதற்காகப் பாவங்களைவிட்டு விலகியிருப்பான்.
-
71 நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது;
அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
-
10 நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
11 “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவிதமான தீமையான சொற்களையும் உங்கள்மேல் பொய்யாகச் சொல்வார்களானால் பாக்கியவான்களாக இருப்பீர்கள்; 12 சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருங்கள்; பரலோகத்தில் உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும்; உங்களுக்குமுன்பே வாழ்ந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.
-
40 அப்பொழுது அவர்கள் அவனுடைய யோசனைக்கு உடன்பட்டு, அப்போஸ்தலர்களை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள். 41 அவருடைய நாமத்துக்காக தாங்கள் அவமானமடைவதற்குத் தகுதியானவர்களாக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாக ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், 42 தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி இயேசுவே கிறிஸ்து என்று பிரசங்கித்தார்கள்.
-
50 அதுவே என்னுடைய துன்பத்தில் எனக்கு ஆறுதல்,
உம்முடைய வாக்குத்தத்தம் என்னை உயிர்ப்பித்தது.
-
13 மனிதர்களுக்குச் சம்பவிக்கிற சோதனையே அல்லாமல் வேறு சோதனை உங்களுக்குச் சம்பவிக்கவில்லை. தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார்; உங்களுடைய பெலத்திற்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடுக்காமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான வழியையும் உண்டாக்குவார்.
-
8 சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தவருமானவர் சொல்லுகிறதாவது; 9 உன் செய்கைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியம் உள்ளவனாக இருந்தும் உனக்கு இருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதர்கள் என்று சொல்லியும் யூதர்களாக இல்லாமல் சாத்தானுடைய கூட்டமாக இருக்கிறவர்கள் செய்யும் அவதூறுகளையும் அறிந்திருக்கிறேன். 10 நீ படப்போகிற பாடுகளைப்பற்றிப் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படுவதற்காகப் பிசாசு உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாட்கள் உபத்திரவப்படுவீர்கள். ஆனாலும் நீ மரிக்கும்வரை உண்மையாக இரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
-
(இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.)
1 என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?
எனக்கு உதவி செய்யாமலும்,
நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேட்காமலும் ஏன் தூரமாக இருக்கிறீர்?
2 என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன்,
பதில் கொடுக்கவில்லை;
இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதி இல்லை.
-
21 தெர்பை பட்டணத்தில் அவர்கள் நற்செய்தியைப் பிரசங்கித்து, அநேகரைச் சீடர்களாக்கினபின்பு, லீஸ்திராவிற்கும் இக்கோனியாவிற்கும் அந்தியோகியாவிற்கும் திரும்பிவந்து, 22 சீடர்களுடைய மனதைத் தைரியப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின்வழியாக தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும் என்று சொன்னார்கள்.
-
2 ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய கட்டளையை நிறைவேற்றுங்கள்.
-
11 என் குறைகளினால் நான் இப்படிச் சொல்லவில்லை; ஏனென்றால், நான் எந்த நிலைமையில் இருந்தாலும் மனதிருப்தியாக இருக்கக் கற்றுக்கொண்டேன். 12 தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எந்த இடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாக இருக்கவும், பட்டினியாக இருக்கவும், பரிபூரணமடையவும், குறைவுபடவும் கற்றுக்கொண்டேன். 13 என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலன் உண்டு. 14 ஆனாலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடு பங்குகொண்டது நலமாக இருக்கிறது.
-
24 இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் சரீரத்தினாலே நிறைவேற்றுகிறேன். 25 ஆரம்ப காலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாக இருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தை நிறைவாகத் தெரியப்படுத்துகிறதற்கு, 26 உங்கள்நிமித்தம் தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட வேலையின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன்.
-
8 ஆகவே, நம்முடைய கர்த்த்தரைப்பற்றிய சாட்சியைக்குறித்தாவது, அவர்நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக்குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவ வல்லமைக்குரியபடி நற்செய்திக்காக என்னோடுகூடத் தீங்கு அனுபவி. 9 அவர் நம்முடைய செயல்களின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆரம்பகாலமுதல் கிறிஸ்து இயேசுவிற்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார். 10 நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் தோன்றியதன் மூலமாக அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தை அழித்து, ஜீவனையும் அழியாமையையும் நற்செய்தியினாலே வெளியரங்கமாக்கினார். 11 அதற்கு நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், யூதரல்லாதவர்களுக்குப் போதகனாகவும் நியமிக்கப்பட்டேன். 12 அதினாலே நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆனாலும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்தவர் யார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்தநாள்வரைக் காத்துக்கொள்ள வல்லவராக இருக்கிறார் என்று உறுதியாக நம்புகிறேன்.
-
10 நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர்கள், ஆனால் நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனமானவர்கள், ஆனால் நீங்கள் பலவான்கள்; நீங்கள் மேன்மையானவர்கள், ஆனால் நாங்கள் மேன்மையற்றவர்கள். 11 இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், கொடூரமாக தாக்கப்பட்டவர்களும், தங்க இடம் இல்லாதவர்களுமாக இருக்கிறோம். 12 எங்களுடைய கைகளினாலே வேலைசெய்து பாடுபடுகிறோம், சபிக்கப்படும்போது ஆசீர்வதிக்கிறோம், துன்பப்படும்போது சகிக்கிறோம். 13 நிந்திக்கப்படும்போது வேண்டிக்கொள்ளுகிறோம், இந்தநாள்வரை உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லோரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவும் ஆனோம்.
-
1 புத்தியில்லாத கலாத்தியர்களே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமலிருக்க உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டவராக உங்களுடைய கண்களுக்குமுன் தெளிவாக உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே. 2 ஒன்றைமட்டும் உங்களிடமிருந்து தெரிந்துகொள்ள விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலோ, விசுவாசக் கேள்வியினாலோ, எதினாலே ஆவியானவரைப் பெற்றுக்கொண்டீர்கள்? 3 ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது சரீரத்தினாலே முடிவு பெறப்போகிறீர்களோ? நீங்கள் இவ்வளவு புத்தி இல்லாதவர்களா? 4 இத்தனை பாடுகளையும் வீணாக அனுபவித்தீர்களோ? அவைகள் வீணாகப்போய்விட்டதே. 5 அன்றியும் உங்களுக்கு ஆவியானவரைக் கொடுத்து, உங்களுக்குள்ளே அற்புதங்களைச் செய்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலோ, விசுவாசக் கேள்வியினாலோ, எதினாலே செய்கிறார்? 6 அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக நினைக்கப்பட்டது.
-
3 நீயும் இயேசுகிறிஸ்துவிற்கு நல்ல போர்வீரனாக தீங்கு அனுபவி.
-
9 அப்பொழுது அவனுடைய மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்திலே உறுதியாக நிற்கிறீரோ? தேவனை நிந்தித்து உயிரை விடும் என்றாள். 10 அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவம் செய்யவில்லை.
-
10 யெகோவாவோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்கு உட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், யெகோவாவுக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
-
41 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். 42 பசியாக இருந்தேன், நீங்கள் எனக்கு ஆகாரம் கொடுக்கவில்லை; தாகமாக இருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தணிக்கவில்லை; 43 அந்நியனாக இருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; ஆடையில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாகவும் சிறையில் அடைக்கப்பட்டவனாகவும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை என்பார். 44 அப்பொழுது, அவர்களும் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், ஆடையில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், சிறையில் அடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள். 45 அப்பொழுது, அவர் அவர்களுக்கு மறுமொழியாக: மிகவும் எளியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். 46 அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார்.
-
9 நீங்களோ எச்சரிக்கையாக இருங்கள், ஏனென்றால், உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், நீங்கள் ஜெப ஆலயங்களில் அடிக்கப்படுவீர்கள்; என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் சாட்சியாக அவர்களுக்கு முன்பாக நிறுத்தப்படுவீர்கள். 10 எல்லா தேசத்தின் மக்களுக்கும் நற்செய்தி முதலில் பிரசங்கிக்கப்படவேண்டும். 11 அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது, நீங்கள் என்ன பேசவேண்டும் என்று கவலைப்படாமலும் சிந்திக்காமலும் இருங்கள்; அந்த நேரத்திலே உங்களுக்குக் கொடுக்கப்படுகிற வார்த்தைகளையே பேசுங்கள்; ஏனென்றால், பேசுகிறவர்கள் நீங்கள் இல்லை, பரிசுத்த ஆவியானவரே பேசுகிறவர். 12 அன்றியும் சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளையையும் மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றோருக்கு எதிராகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலைசெய்ய ஒப்புக்கொடுப்பார்கள். 13 என் நாமத்தினால் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள். கடைசிவரைக்கும் நிலைத்து நிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
-
42 பிதாவே, உமக்கு விருப்பமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆனாலும் என்னுடைய விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார்.
-
13 ஒருவன் தன் நண்பனுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை.
-
5 மனிதனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவனுடைய இருதயத்தின் நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், யெகோவா கண்டு, 6 தாம் பூமியிலே மனிதனை உண்டாக்கினதற்காகக் யெகோவா மனவேதனை அடைந்தார்; அது அவர் இருதயத்திற்கு வருத்தமாக இருந்தது. 7 அப்பொழுது யெகோவா: “நான் உருவாக்கிய மனிதனை பூமியின்மேல் வைக்காமல், மனிதன் முதற்கொண்டு, மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள்வரை உண்டாயிருக்கிறவைகளை அழித்துப்போடுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனவேதனையாக இருக்கிறது” என்றார்.
-
2 உன் தேவனாகிய யெகோவா உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருடங்களும் வனாந்திரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. 3 அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனிதன் உணவினால் மாத்திரம் அல்ல, யெகோவாவுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்துவதற்கு, நீயும் உன் முற்பிதாக்களும் அறியாமலிருந்த மன்னாவினால் உன்னைப் பராமரித்தார்.
-
25 மனிதனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்;
நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.
-
1 அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். 2 அவர் இரவும் பகலும் நாற்பதுநாட்கள் உபவாசமாக இருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டானது. 3 அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: “நீர் தேவனுடைய குமாரனென்றால், இந்தக் கற்கள் அப்பங்களாக மாறும்படிச் சொல்லும்” என்றான். 4 அவர் மறுமொழியாக:
“மனிதன் அப்பத்தினால்மட்டுமில்லை,
தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே” என்றார்.
-
46 மூன்று மணியளவில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். 47 அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். 48 உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்பஞ்சை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி. அவருக்குக் குடிக்கக்கொடுத்தான். 49 மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள். 50 இயேசு, மறுபடியும் மகா சத்தமாகக் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.
-
15 அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களோடுகூட இந்த பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாக இருந்தேன். 16 தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறும்வரைக்கும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, 17 அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்செய்து: நீங்கள் இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்ளுங்கள்; 18 தேவனுடைய ராஜ்யம் வரும்வரைக்கும் நான் திராட்சைரசத்தைப் பருகுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 19 பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்செய்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாக இருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார். 20 போஜனம்செய்தபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய ஒப்பந்தமாக இருக்கிறது என்றார்.
-
26 ஆதலால் ஒரு உறுப்பு பாடுபட்டால் எல்லா உறுப்புகளும் அதோடுசேர்ந்து பாடுபடும்; ஒரு உறுப்பு மகிமைப்பட்டால் எல்லா உறுப்புகளும் அதோடுசேர்ந்து சந்தோஷப்படும்.
-
12 சோதனையைச் சகிக்கிற மனிதன் பாக்கியவான்; அவன் உத்தமன் என்று தெரிந்தபின்பு கர்த்தர், தம்மை நேசிக்கிறவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
Shows Read in context, Share and Copy.