34 Bible Verses About Judging Others

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

Bible Verses About Judging Others
  1. 1 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காமலிருங்கள். 2 ஏனென்றால், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். 3 நீ உன் கண்ணிலிருக்கிற பெரிய மரத்துண்டை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற சிறிய துரும்பைப் பார்க்கிறதென்ன? 4 இதோ, உன் கண்ணில் பெரிய மரத்துண்டு இருக்கும்போது உன் சகோதரனைப் பார்த்து: நான் உன் கண்ணிலிருக்கும் சிறிய துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? 5 மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற பெரிய மரத்துண்டை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரனுடைய கண்ணிலிருக்கிற சிறிய துரும்பை எடுத்துப்போடுவதற்கு உனக்கு தெளிவாகத் தெரியும். 6 பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள்; உங்களுடைய முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதீர்கள்; போட்டால் தங்களுடைய கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.

  2. 11 சகோதரர்களே, ஒருவருக்கொருவர் விரோதமாகப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாகப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாகப் பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்தினால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாக இல்லாமல், அதற்கு நியாயாதிபதியாக இருப்பாய். 12 நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தவரும் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?

  3. 34 திரும்பக் கொடுப்பார்கள் என்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும் என்று பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே. 35 உங்களுடைய பகைவர்களை நேசியுங்கள், நன்மை செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும், உன்னதமான தேவனுக்கு நீங்கள் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே. 36 எனவே உங்களுடைய பிதா இரக்கமுள்ளவராக இருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள்.

    37 மற்றவர்களைக் குற்றவாளிகள் என்று சொல்லாதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகள் என்று சொல்லப்படாமலிருப்பீர்கள்; மற்றவர்களை தண்டனைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாமலிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள். 38 கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாக அளந்து, உங்களுடைய மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.

  4. 24 தோற்றத்தின்படி தீர்ப்பு செய்யாமல், நீதியின்படி தீர்ப்பு செய்யுங்கள் என்றார்.

  5. 1 ஆகவே, மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, சாக்குப்போக்குச் சொல்லமுடியாது; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயும் செய்கிறதினால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைநீயே குற்றவாளியாக்குகிறாய். 2 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம். 3 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறாயோ? 4 அல்லது தேவனுடைய தயவு நீ மனம்திரும்புவதற்கு உன்னை நடத்துகிறதென்று தெரியாமல், அவருடைய தயவு, பொறுமை, நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ? 5 உன் மனதின் கடினத்திற்கும், மனம்திரும்பாத இருதயத்திற்கும் தகுந்தபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும். கோபத்தின் தண்டனை நாளிலே உனக்காகக் கோபத்தினைக் குவித்துக்கொள்ளுகிறாயே.

  6. 9 விபசாரக்காரர்களோடு கலந்திருக்கக்கூடாதென்று கடிதத்தில் உங்களுக்கு எழுதினேன். 10 ஆனாலும், இந்த உலகத்திலுள்ள விபசாரக்காரர்கள், பொருளாசைக்காரர்கள், கொள்ளைக்காரர்கள், விக்கிரக ஆராதனைக்காரர்கள் இவர்களோடு கொஞ்சம்கூட கலந்திருக்கக்கூடாது என்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டுப் போகவேண்டியதாயிருக்குமே. 11 நான் உங்களுக்கு எழுதினது என்னவென்றால், சகோதரன் என்னப்பட்ட ஒருவன் விபசாராக்காரனாகவோ, பொருளாசைக்காரனாகவோ, விக்கிரக ஆராதனைக்காரனாகவோ, தூஷிக்கிறவனாகவோ, குடிவெறியனாகவோ, கொள்ளைக்காரனாகவோ இருந்தால், அவனோடுகூட கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனோடுகூட உண்ணவும் கூடாது. 12 சபைக்கு வெளியே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் வேலையா? சபைக்குள்ளே இருக்கிறவர்களையல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்? 13 வெளியே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகவே, அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டு விலக்குங்கள்.

  7. 1 உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடு வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடம் போகாமல், அநியாயக்காரர்களிடம் போகத் துணிகிறதென்ன? 2 பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று உங்களுக்குத் தெரியாதா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, சாதாரண வழக்குகளைத் தீர்க்க நீங்கள் தகுதியற்றவர்களா? 3 நாம் தேவதூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று உங்களுக்குத் தெரியாதா? அப்படியிருக்க, இந்த வாழ்க்கைக்குரியவைகளை நீங்கள் நியாயந்தீர்த்துக்கொள்ளமுடியாதிருக்கிறது எப்படி? 4 இந்த வாழ்க்கைக்குரிய வழக்குகள் உங்களுக்கு இருந்தால், தீர்ப்புச்செய்கிறதற்கு, சபையில் சாதாரணமாக எண்ணப்பட்டவர்களை நியமித்துக்கொள்ளுங்கள். 5 உங்களுக்கு வெட்கம் உண்டாகும்படி இதைச் சொல்லுகிறேன். சகோதரனுக்கும் சகோதரனுக்கும் உண்டான வழக்கைத் தீர்க்கத்தக்க பகுத்தறிவு உள்ளவன் ஒருவன்கூட உங்களுக்குள் இல்லையா? 6 சகோதரனோடு சகோதரன் வழக்காடுகிறான், அவிசுவாசிகளுக்கு முன்பாகவும் அப்படிச்செய்கிறான்.

  8. 1 சகோதரர்களே, ஒருவன் எந்தவொரு குற்றத்தில் அகப்பட்டாலும், ஆவியானவருக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடு அப்படிப்பட்டவனைச் சீர்ப்படுத்துங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடி உன்னைக்குறித்து எச்சரிக்கையாக இரு. 2 ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய கட்டளையை நிறைவேற்றுங்கள்.

  9. 15 உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனிமையாக இருக்கும்போது, அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய். 16 அவன் செவிகொடுக்காமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய ஒப்புதல்களினாலே காரியங்களெல்லாம் உறுதிப்படும்படி இரண்டொருவரை உன்னுடனே அழைத்துக்கொண்டு போ. 17 அவர்களுக்கும் அவன் செவிகொடுக்காமற்போனால், அதை சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடுக்காமற்போனால், அவன் உனக்கு வேறுமார்க்கத்தான்போலவும் வரி வசூலிப்பவனைப்போலவும் இருப்பானாக. 18 உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 19 அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாவது பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 20 ஏனென்றால், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.

  10. 10 இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளி என்று தீர்க்கிறது என்ன? நீ உன் சகோதரனை அற்பமாக நினைக்கிறது என்ன? நாமெல்லோரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே. 11 அப்படியே:

    “முழங்கால்கள் எல்லாம் எனக்கு முன்பாக முடங்கும்,

    நாக்குகள் எல்லாம் தேவனை அறிக்கைப்பண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன்” என்பதாகக் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.

    12 எனவே, நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கு ஒப்புவிப்பான். 13 இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகள் என்று தீர்க்காமல் இருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடையையும் இடறலையும் போடக்கூடாது என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

  11. 16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். 17 உலகத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். 18 அவரை விசுவாசிக்கிறவன் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படமாட்டான்; விசுவாசிக்காதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசம் உள்ளவனாக இல்லாதபடியினால், அவன் தண்டனைத்தீர்ப்புக்கு உட்பட்டிருக்கிறான். 19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனிதர்களுடைய செயல்கள் தீமையானவைகளாக இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைவிட இருளை விரும்புகிறதே அந்த தண்டனைத் தீர்ப்புக்குக் காரணமாக இருக்கிறது. 20 தீங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் செய்கைகள் சுட்டி காட்டப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். 21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் செய்கைகள் தேவனுக்குள்ளாக செய்யப்படுகிறது என்று வெளிப்படும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.

  12. 3 அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை வேதபண்டிதர்களும், பரிசேயர்களும் அவரிடத்தில் அழைத்துவந்து, அவளை நடுவே நிறுத்தி: 4 போதகரே, இந்த பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டாள். 5 இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளைக் கொடுத்திருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். 6 அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாக்குவதற்கு, அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள் இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார். 7 அவர்கள் தொடர்ந்து அவரைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அவர் நிமிர்ந்துபார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மீது முதலாவது கல்லெறியட்டும் என்று சொல்லி,

  13. 15 கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடம் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பேராசையுள்ள ஓநாய்கள். 16 அவர்களுடைய செயல்களினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சைப் பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? 17 அப்படியே நல்லமரமெல்லாம் நல்லகனிகளைக் கொடுக்கும்; கெட்டமரமோ கெட்டகனிகளைக் கொடுக்கும். 18 நல்லமரம் கெட்டகனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்டமரம் நல்லகனிகளைக் கொடுக்கமாட்டாது. 19 நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, நெருப்பிலே போடப்படும். 20 ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.

  14. 3 ஆனாலும் நான் உங்களாலேயாவது மனிதர்களுடைய நியாயநாளின் விசாரணையினாலோ தீர்ப்பைப்பெறுவது எனக்கு மிகவும் சாதாரண காரியமாக இருக்கிறது; நானும் என்னைக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகிறதில்லை. 4 என்னிடத்தில் நான் எந்தவொரு குற்றத்தையும் அறியேன்; ஆனாலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே. 5 ஆதலால், கர்த்தர் வரும்வரைக்கும் நீங்கள் காலத்திற்குமுன்னே எதைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளிப்படையாக்கி, இருதயங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.

  15. 12 நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியானவரையே பெற்றோம். 13 அவைகளை நாங்கள் மனிதஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவியானவர் போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவியானவருக்குரியவைகளை ஆவியானவருக்குரியவைகளோடு சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம். 14 ஜென்ம சுபாவமான மனிதனோ தேவ ஆவியானவருக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபடி ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவும் மாட்டான். 15 ஆவியானவருக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.

    16 “கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக

    அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்?”

    எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.

  16. 3 சாப்பிடுகிறவன் சாப்பிடாமல் இருக்கிறவனை அற்பமாக நினைக்காமல் இருக்கவேண்டும்; சாப்பிடாமல் இருக்கிறவனும் சாப்பிடுகிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காமல் இருக்கவேண்டும்; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே. 4 மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய முதலாளிக்கே அவன் பொறுப்பாளி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராக இருக்கிறாரே.

  17. 1 உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று வெளிப்படையாக சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாக இருக்கிறதே. 2 இப்படிப்பட்டக் காரியத்தைச் செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள். 3 நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாக இருந்தும், ஆவியினாலே உங்களோடுகூட இருக்கிறவனாக, இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறேன். 4 அப்படியே நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தோடு கூடிவந்திருக்கும்போது, 5 அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.

  18. 7 யெகோவா சாமுவேலை பார்த்து: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனிதன் பார்க்கிறபடி நான் பார்க்கமாட்டேன்; மனிதன் முகத்தைப் பார்ப்பான்; யெகோவாவோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.

  19. 9 அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாக எண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார். 10 இரண்டு மனிதர்கள் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்திற்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி வசூலிப்பவன். 11 பரிசேயன் நின்று: தேவனே! நான் கொள்ளைக்காரர்கள், அநியாயக்காரர்கள், விபசாரக்காரர்கள் ஆகிய மற்ற மனிதர்களைப்போலவும், இந்த வரி வசூலிப்பவனைப்போலவும் இராததினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். 12 வாரத்தில் இரண்டுமுறை உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் பத்தில் ஒரு பங்கு காணிக்கை செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். 13 வரி வசூலிப்பவன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்திற்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாக இரும் என்றான். 14 அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாகத் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனென்றால், தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

  20. 15 நீங்கள் மனித வழக்கத்திற்கு ஏற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை; 16 நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படி இருக்கும்; ஏனென்றால், நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.

  21. 15 “நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்திற்கு பயப்படாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக.

  22. 12 உங்களுடைய வருத்தத்தையும், பிரச்சனைகளையும், வழக்குகளையும் நான் ஒருவனே தாங்குவது எப்படி? 13 நான் உங்களுக்கு தலைவர்களை ஏற்படுத்துவதற்காக, உங்களுடைய கோத்திரங்களில் ஞானமும், விவேகமும், அறிவும் உள்ளவர்களென்று நன்மதிப்பு பெற்ற மனிதர்களைத் தெரிந்துகொள்ளுங்கள் என்று சொன்னேன். 14 நீங்கள் எனக்கு மறுமொழியாக: நீர் செய்யச்சொன்ன காரியம் நல்லது என்றீர்கள். 15 ஆகையால் நான் ஞானமும், அறிவுமுள்ள மனிதர்களாகிய உங்கள் கோத்திரங்களின் வம்சத் தலைவர்களைத் தெரிந்துகொண்டு, அவர்கள் உங்களுக்குத் தலைவர்களாயிருக்க, ஆயிரம்பேருக்கு தலைவர்களாகவும், நூறுபேருக்கு தலைவர்களாகவும், ஐம்பதுபேருக்கு தலைவர்களாகவும், பத்துப்பேருக்கு தலைவர்களாகவும் உங்கள் கோத்திரங்களில் அதிகாரிகளாகவும் ஏற்படுத்தினேன். 16 அக்காலத்திலே உங்களுடைய நியாயாதிபதிகளை நான் நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரர்களின் வழக்குகளைக் கேட்டு, உங்கள் சகோதரர்களுக்கும், அவர்களிடத்தில் தங்கும் அந்நியனுக்கும், நீதியின்படி தீர்ப்புச் செய்யுங்கள். 17 நியாயத்திலே முகதாட்சிணியம் பார்க்காமல் பெரியவன் சொல்வதைக் கேட்பதுபோலச் சிறியவன் சொல்வதையும் கேட்கக்கடவீர்கள்; மனிதனுடைய முகத்திற்குப் பயப்படக்கூடாது; நியாயத்தீர்ப்பு தேவனுடையது; உங்களுக்குக் கடினமாயிருக்கும் காரியத்தை என்னிடம் கொண்டு வாருங்கள்; நான் அதைக் கேட்பேன் என்று சொல்லி,

  23. 5 ஒருவன் நீதிமானாக இருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து, 6 மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் மக்களின் அசுத்தமான சிலைகளுக்கு நேராகத் தன்னுடைய கண்களை ஏறெடுக்காமலும் தன்னுடைய அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும் மாதவிடாயுள்ள பெண்ணுடன் சேராமலும், 7 ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலும் இருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக்கொடுத்து, தன்னுடைய அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, ஆடையில்லாதவனுக்கு ஆடை அணிவித்து, 8 வட்டிக்குக் கொடுக்காமலும், அதிக லாபம் வாங்காமலும், அநியாயத்திற்குத் தன்னுடைய கையை விலக்கி, மனிதர்களுக்குள்ள வழக்கை உண்மையாகத் தீர்த்து, 9 என்னுடைய கட்டளைகளின்படி நடந்து, என்னுடைய நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாக இருந்தால் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

  24. 9 சகோதரர்களே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாக குறைசொல்லாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்.

  25. 17 அன்றியும் சகோதரர்களே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு எதிராகப் பிரிவினைகளையும், இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருந்து, அவர்களைவிட்டு விலகவேண்டும் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 18 அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கு ஊழியம் செய்யாமல் தங்களுடைய வயிற்றுக்கே ஊழியம் செய்து, நயமான மொழிகளாலும், இனிய பேச்சினாலும், கபடு இல்லாதவர்களின் இருதயங்களை ஏமாற்றுகிறவர்களாக இருக்கிறார்கள்.

  26. 21 ஆகவே, ஒருவன் இவைகளைவிட்டுத் தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நல்ல செயல்களுக்கும் ஆயத்தம் செய்யப்பட்டதுமான மதிப்புமிக்கப் பாத்திரமாக இருப்பான். 22 அன்றியும், பாலியத்திற்குரிய இச்சைகளுக்கு நீ விலகி ஓடி, சுத்த இருதயத்தோடு கர்த்த்தரை தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு. 23 புத்தியீனமும் அறிவில்லாததுமான வாக்குவாதங்கள் சண்டைகளை உண்டாக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகி இரு. 24 கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாக இல்லாமல், எல்லோரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதிப்பதற்குத் திறமையுள்ளவனும், தீமையைச் சகிக்கிறவனுமாக இருக்கவேண்டும். 25 எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை கொடுக்கத்தக்கதாகவும், 26 பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிக்கப்பட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கம் தெளிந்து அவன் தந்திரத்திற்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாக அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.

  27. 16 வேத வாக்கியங்களெல்லாம் தேவனால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனிதன் தேறினவனாகவும், எந்த நல்லசெயல்களையும் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, 17 அவைகள் உபதேசத்திற்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாக இருக்கிறது.

  28. 22 அன்றியும் பிதாவைக் மதிப்பதுபோல எல்லோரும் குமாரனையும் மதிக்கும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவரையும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

  29. 51 ஒரு மனிதன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனைத் தண்டனைக்கு உட்படுத்தலாம் என்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான்.

  30. 1 விசுவாசத்தில் பலவீனமாக உள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன சந்தேகங்களைக் குற்றமாக தீர்மானிக்காமல் இருங்கள்.

  31. 31 நம்மைநாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படமாட்டோம். 32 நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடு தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.

  32. 26 சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாகப் பாவம் செய்கிறவர்களாக இருந்தால், பாவங்களுக்காக செலுத்தப்படும் வேறொரு பலி இனி இல்லாமல், 27 நியாயத்தீர்ப்பு வரும் என்று பயத்தோடு எதிர்பார்ப்பதும், எதிரிகளை அழிக்கும் கோபத்தின் தண்டனையுமே இருக்கும். 28 மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; 29 தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தம் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தம் என்று நினைத்து, கிருபையின் ஆவியை அவமதிக்கிறவன் எவ்வளவு கொடிய தண்டனைக்கு தகுதியானவனாக இருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள். 30 பழிவாங்குதல் என்னுடையது, நானே பதில்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய மக்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் யார் என்று அறிவோம்.

  33. 1 என் சகோதரர்களே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற நீங்கள் ஒரு சிலரை பட்சபாதத்துடன் நடத்தாதிருங்கள். 2 ஏனென்றால், பொன்மோதிரமும் அழகான ஆடையும் அணிந்திருக்கிற ஒரு மனிதனும், கந்தையான ஆடை அணிந்திருக்கிற ஒரு ஏழ்மையானவனும் உங்களுடைய ஆலயத்திற்கு வரும்போது, 3 அழகான ஆடை அணிந்திருந்தவனைப் பார்த்து: ஐயா இந்த நல்ல இடத்தில் உட்காருங்கள் என்றும்; ஏழ்மையானவனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் காலடியிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால், 4 உங்களுக்குள்ளே பட்சபாதத்துடன், தகாத சிந்தனைகளோடு தீர்ப்பளிக்கிறவர்களாக இருப்பீர்களல்லவா?

  34. 1 பிரியமானவர்களே, உலகத்தில் அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்துப்பாருங்கள்.