77 Bible Verses About Anger

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

Bible Verses About Anger
  1. 25 அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் சரீர பாகங்களாக இருக்கிறபடியால், பொய்யைப் பேசாமல், ஒவ்வொருவனும் மற்றவனோடு உண்மையைப் பேசவேண்டும். 26 நீங்கள் கோபப்பட்டாலும் பாவம் செய்யாமல் இருங்கள்; சூரியன் மறைவதற்கு முன்பே உங்களுடைய எரிச்சல் மறைந்துபோகட்டும்; 27 பிசாசுக்கு இடம் கொடுக்கவேண்டாம். 28 திருடுகிறவன் இனித் திருடாமல், குறைவாக உள்ளவனுக்குத் தன்னிடமிருந்து கொடுக்கும்படி, தன் கைகளினால் பயனுள்ள வேலைசெய்து முயற்சி செய்யவேண்டும். 29 கெட்டவார்த்தை எதுவும் உங்களுடைய வாய்களால் பேசவேண்டாம்; பக்திவளர்ச்சிக்கு தகுந்த நல்லவார்த்தை இருந்தால், கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமாக இருப்பதற்காக அதையே பேசுங்கள். 30 அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்காக முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தாமல் இருங்கள். 31 எல்லாவிதமான கசப்பும், கோபமும், எரிச்சலும், கூக்குரலும், அவமதிப்பதும், மற்ற எல்லாக் கெட்டகுணமும் உங்களைவிட்டு நீங்கட்டும். 32 ஒருவருக்கொருவர் தயவாகவும் மனஉருக்கமாகவும் இருந்து, கிறிஸ்துவிற்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

  2. 19 ஆகவே, என் பிரியமான சகோதரர்களே, அனைவரும் கேட்கிறதற்கு விரைவாகவும், பேசுகிறதற்கு பொறுமையாகவும், கோபித்துக்கொள்கிறதற்குத் தாமதமாகவும் இருக்கவேண்டும்; 20 மனிதனுடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே. 21 ஆகவே, நீங்கள் எல்லாவித பாவமான அசுத்தங்களையும் கொடிய தீயகுணத்தையும் அகற்றிவிட்டு, உங்களுடைய உள்ளத்தில் நாட்டப்பட்டதாகவும், உங்களுடைய ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாகவும் இருக்கிற திருவசனத்தைச் சாந்தமாக ஏற்றுக்கொள்ளுங்கள். 22 அல்லாமலும், நீங்கள் உங்களை ஏமாற்றாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாக மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாகவும் இருங்கள்.

  3. 1 நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். 2 பூமியிலுள்ளவைகளை இல்லை, மேலானவைகளையே விரும்புங்கள். 3 ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்களுடைய ஜீவன் கிறிஸ்துவோடு தேவனுக்குள் மறைந்திருக்கிறது. 4 நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடுகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள். 5 ஆகவே, விபசாரம், அசுத்தம், மோகம், தீய எண்ணம், விக்கிரக ஆராதனையான பொருளாசை ஆகிய இந்த உலகத்திற்குரிய பாவ சுபாவத்தை அழித்துப்போடுங்கள். 6 இவைகளினாலேயே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வரும். 7 நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே வாழ்ந்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள். 8 இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்களுடைய வாயிலிருந்து வரக்கூடாத நிந்தனையும், வம்புவார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள். 9 ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனிதனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, 10 தன்னைப் படைத்தவருடைய சாயலுக்கு ஒப்பாக பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொண்டிருக்கிறீர்களே. 11 அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனம் உள்ளவனென்றும், விருத்தசேதனம் இல்லாதவனென்றுமில்லை, யூதனல்லாதவனென்றும் வெளிதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுதந்திரமானவனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லோரிலும் எல்லாமுமாக இருக்கிறார். 12 ஆகவே, நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாக, உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், அமைதியையும், நீடிய பொறுமையையும் அணிந்துகொண்டு; 13 ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். 14 இவை எல்லாவற்றின்மேலும், பூரண நற்குணத்தின் கட்டாகிய அன்பை அணிந்துகொள்ளுங்கள். 15 தேவசமாதானம் உங்களுடைய இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியுள்ளவர்களாகவும் இருங்கள்.

  4. 12 இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் வாங்குகிறவர்களுமாகிய அனைவரையும் வெளியே துரத்தி, காசுக்காரர்களுடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்து: 13 என்னுடைய வீடு ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் திருடர்களுடைய குகையாக்கினீர்கள் என்றார்.

  5. 21 கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான் என்பதும், முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 22 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு உரியவனாக இருப்பான். 23 ஆகவே, நீ பலிபீடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயானால், 24 அங்கே பலிபீடத்தின்முன்பு உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முதலில் உன் சகோதரனோடு ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.

    25 எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடுக்காமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுக்காமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாக அவனோடு சமாதானமாகு. 26 இல்லாவிட்டால், நீ ஒரு காசும் குறைவில்லாமல் செலுத்தித்தீர்க்கும்வரைக்கும் சிறைச்சாலையிலிருந்து வெளியே வரமாட்டாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

  6. 10 மோசேயும் ஆரோனும் சபையாரைக் கன்மலைக்கு முன்பாகக் கூடிவரச்செய்தார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: “கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படச்செய்வோமோ” என்று சொல்லி, 11 தன்னுடைய கையை ஓங்கி, கன்மலையைத் தன்னுடைய கோலினால் இரண்டுமுறை அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாகப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது.

  7. 7 யெகோவாவை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு;

    காரியசித்தியுள்ளவன் மேலும்

    தீவினைகளைச் செய்கிற மனிதன் மேலும் எரிச்சலாகாதே.

    8 கோபத்தை தள்ளி, கடுங்கோபத்தை விட்டுவிடு;

    பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.

    9 பொல்லாதவர்கள் அறுக்கப்பட்டுபோவார்கள்;

    யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ

    பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.

    10 இன்னும் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இருக்கமாட்டான்;

    அவன் நிலையை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.

  8. 19 சரீரத்தின் செய்கைகள் வெளியரங்கமாக இருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், 20 விக்கிரக ஆராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், 21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைப் பெற்றுக்கொள்வதில்லை என்று முன்னமே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

    22 ஆவியானவரின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், 23 சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு எதிரான பிரமாணம் ஒன்றும் இல்லை. 24 கிறிஸ்துவினுடையவர்கள் தங்களுடைய சரீரத்தையும் அதின் ஆசைகளையும் இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். 25 நாம் ஆவியானவராலே பிழைத்திருந்தால், அவருக்கேற்றபடி நடப்போம்.

  9. 9 உன்னுடைய மனதில் சீக்கிரமாகக் கோபம் கொள்ளாதே;

    மூடர்களின் இருதயத்திலே கோபம் குடிகொள்ளும்.

  10. 17 ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாமல் இருங்கள்; எல்லா மனிதர்களுக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்யுங்கள். 18 உங்களால் முடிந்தவரை எல்லா மனிதர்களோடும் சமாதானமாக இருங்கள். 19 பிரியமானவர்களே, “பழிவாங்குதல் என்னுடையது, நானே பதில்செய்வேன்,” என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதி இருக்கிறதினால், நீங்கள் பழிவாங்காமல், தேவனுடைய கோபத்தின் தண்டனைக்கு இடம்கொடுங்கள். 20 அன்றியும்,

    உன் பகைவன் பசியாக இருந்தால்,

    அவனுக்கு ஆகாரம் கொடு;

    அவன் தாகமாக இருந்தால்,

    அவனுக்கு ஏதாவது குடிக்கக்கொடு;

    நீ இப்படிச் செய்வதினால் நெருப்புத் தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.”

    21 நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.

  11. 1 சாந்தமான பதில் கடுங்கோபத்தை அடக்கும்;

    கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும். 2 ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்;

    மூடர்களின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.

  12. 32 பலவானைவிட நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்;

    பட்டணத்தைப் பிடிக்கிறவனைவிட தன்னுடைய மனதை அடக்குகிறவன் உத்தமன்.

  13. 11 மனிதனுடைய விவேகம் அவனுடைய கோபத்தை அடக்கும்;

    குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.

    12 ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்;

    அவனுடைய தயவு புல்லின்மேல் பெய்யும் பனிபோல இருக்கும்.

  14. 1 இயேசு மறுபடியும் ஜெப ஆலயத்திற்குச் சென்றார். அங்கே சூம்பின கையையுடைய ஒரு மனிதன் இருந்தான். 2 அவர் ஓய்வுநாளில் அவனைச் சுகமாக்கினால் அவர்மேல் குற்றஞ்சாட்டலாம் என்று அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். 3 அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனிதனைப் பார்த்து: எழுந்து நடுவில் நில் என்று சொல்லி; 4 அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ அல்லது தீமை செய்வதோ, ஜீவனைக் காப்பாற்றுவதோ அல்லது அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் மவுனமாக இருந்தார்கள். 5 அவர்களுடைய இருதயத்தின் கடினத்தினால் அவர் விசனப்பட்டு, கோபத்துடன் சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனிதனைப் பார்த்து: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மற்றொரு கையைப்போல சுகமானது. 6 உடனே பரிசேயர்கள் புறப்பட்டுப்போய், அவரைக் கொலைசெய்யவேண்டும் என்று, அவருக்கு எதிராக ஏரோதியர்களோடு ஆலோசனைபண்ணினார்கள்.

  15. 22 கோபக்காரன் வழக்கை உண்டாக்குகிறான்;

    கடுங்கோபி பெரும்பாதகன்.

  16. 3 சிலநாட்கள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் பழங்களைக் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். 4 ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவனுடைய காணிக்கையையும் யெகோவா ஏற்றுக்கொண்டார். 5 காயீனையும் அவனுடைய காணிக்கையையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவனுடைய முகத்தோற்றம் வேறுபட்டது. 6 அப்பொழுது யெகோவா காயீனை நோக்கி: “உனக்கு ஏன் எரிச்சல் உண்டானது? உன் முகத்தோற்றம் ஏன் வேறுபட்டது? 7 நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாமலிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அது உன்னை ஆளுகை செய்ய விரும்பும், ஆனால் நீ அதை ஆளுகை செய்யவேண்டும்” என்றார். 8 காயீன் தன்னுடைய சகோதரனாகிய ஆபேலோடு பேசினான்; அவர்கள் வயல்வெளியில் இருக்கும்போது, காயீன் தன்னுடைய சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாக எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.

  17. 18 கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்;

    நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.

  18. 29 நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்;

    முன்கோபியோ புத்தியீனத்தை விளங்கச்செய்கிறான்.

  19. 11 மூடன் தன்னுடைய உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்;

    ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.

  20. 4 அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமை இல்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாக இருக்காது, 5 அயோக்கியமானதைச் செய்யாது, தன்னலத்தைத் தேடாது, கோபமடையாது, தீங்கு நினைக்காது, 6 அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். 7 எல்லாவற்றையும் தாங்கும், எல்லாவற்றையும் விசுவாசிக்கும், எல்லாவற்றையும் நம்பும், எல்லாவற்றையும் சகிக்கும்.

  21. 5 சிமியோனும், லேவியும் சகோதரர்கள்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள். 6 என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே; அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு மனிதனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை அழித்தார்களே. 7 அவர்களுடைய கடுமையான கோபமும், கொடுமையான மூர்க்கமும் சபிக்கப்படுவதாக; யாக்கோபிலே அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும் செய்வேன்.

  22. 16 ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்;

    மதியீனனோ கடுங்கோபம்கொண்டு துணிகரமாக இருக்கிறான்.

    17 முன்கோபி மதிகேட்டைச் செய்வான்;

    கெட்டச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.

  23. 24 கோபக்காரனுக்குத் தோழனாகாதே;

    கோபமுள்ள மனிதனோடு நடக்காதே.

    25 அப்படிச் செய்தால். நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு,

    உன்னுடைய ஆத்துமாவுக்குக் கண்ணியை கொண்டுவருவாய்.

  24. 4 அல்லது தேவனுடைய தயவு நீ மனம்திரும்புவதற்கு உன்னை நடத்துகிறதென்று தெரியாமல், அவருடைய தயவு, பொறுமை, நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ? 5 உன் மனதின் கடினத்திற்கும், மனம்திரும்பாத இருதயத்திற்கும் தகுந்தபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும். கோபத்தின் தண்டனை நாளிலே உனக்காகக் கோபத்தினைக் குவித்துக்கொள்ளுகிறாயே. 6 தேவன் அவனவனுடைய செய்கைகளுக்குத் தகுந்தபடி அவனவனுக்குப் பலன் கொடுப்பார். 7 சோர்ந்துபோகாமல் நல்ல செயல்களைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுப்பார். 8 சண்டைக்காரர்களாக இருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ தேவனுடைய உக்கிரமான கோபம் வரும். 9 முதலில் யூதர்களிலும் பின்பு கிரேக்கர்களிலும் பொல்லாப்பு செய்கிற எந்தவொரு மனிதனுக்கும் உபத்திரவமும், வியாகுலமும் உண்டாகும்.

  25. 33 பாலைக் கடைதல் வெண்ணையைப் பிறப்பிக்கும்;

    மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்;

    அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.

  26. 8 யெகோவா உருக்கமும், இரக்கமும்,

    நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.

    9 அவர் எப்பொழுதும் கடிந்துகொள்வதில்லை;

    என்றைக்கும் கோபமாக இருப்பதில்லை.

    10 அவர் நம்முடைய பாவங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் செய்யாமலும்,

    நம்முடைய அக்கிரமங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.

    11 பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ,

    அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாக இருக்கிறது.

  27. 8 அன்றியும், ஆண்கள் கோபமும், வாக்குவாதமும் இல்லாமல் பரிசுத்தமான கரங்களை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டும் என்று விரும்புகிறேன். 9 பெண்களும் மயிரைப் பின்னுவதினாலும், பொன்னினாலும் மற்றும் முத்துக்களினாலும், விலையுயர்ந்த ஆடைகளினாலும் தங்களை அலங்கரிக்காமல்,

  28. 13 பின்பு யூதர்களுடைய பஸ்காபண்டிகை நெருங்கியிருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப்போய், 14 தேவாலயத்திலே ஆடுகள், மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், பணம் மாற்றுகிறவர்கள் உட்கார்ந்திருக்கிறதையும் பார்த்து, 15 கயிற்றினால் ஒரு சாட்டையை உண்டாக்கி, அவர்கள் அனைவரையும் ஆடுமாடுகளையும், தேவாலயத்திற்கு வெளியே துரத்திவிட்டு, பணம் மாற்றுக்காரர்களுடைய பணங்களைக் கொட்டி, மேசைகளைக் கவிழ்த்துப்போட்டு, 16 புறா விற்கிறவர்களைப் பார்த்து: இவைகளை இந்த இடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். 17 அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்தியின் வைராக்கியம் தீயைப்போல என்னை எரித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீடர்கள் நினைவுகூர்ந்தார்கள். 18 அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள்.

  29. 16 கிறிஸ்துவின் நற்செய்தியைக்குறித்து நான் வெட்கப்படமாட்டேன்; முதலில் யூதர்களிலும், பின்பு கிரேக்கர்களிலும் விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாக இருக்கிறது. 17 “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்த நற்செய்தியினால் வெளிப்படுத்தப்படுகிறது.

    18 சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனிதர்களுடைய எல்லாவிதமான அவபக்திக்கும் அநியாயத்திற்கும் எதிராக, தேவனுடைய கோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

  30. 4 தகப்பன்மார்களே, நீங்களும் உங்களுடைய பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற ஒழுக்கத்திலும் போதனையிலும் அவர்களை வளர்த்துங்கள்.

  31. 7 ஏனென்றால், கண்காணியானவன் தேவனுடைய மேற்பார்வைக்காரனுக்குரியவிதமாக, குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடிக்காதவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்காதவனும்,

  32. 4 அப்பொழுது மோசே: “யெகோவா உரைக்கிறதாவது, நடு இரவிலே நான் எகிப்திற்குள்ளே புறப்பட்டுப்போவேன். 5 அப்பொழுது சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் எந்திரம் அரைக்கும் அடிமைப்பெண்ணுடைய தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்திலிருக்கிற முதற்பேறனைத்தும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தும் சாகும் என்று சொன்னதுமன்றி, 6 அதினால் எகிப்து தேசம் எங்கும் முன்னும் பின்னும் ஒருபோதும் உண்டாகாத பெரிய கூக்குரல் உண்டாகும். 7 ஆனாலும் யெகோவா எகிப்தியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் செய்கிற வித்தியாசத்தை நீங்கள் அறியும்படி, இஸ்ரவேல் மக்கள் அனைவருக்குள்ளும் மனிதர்கள்முதல் மிருகஜீவன்கள் வரைக்கும் ஒரு நாய் கூட தன்னுடைய நாவை அசைப்பதில்லை. 8 அப்பொழுது உம்முடைய வேலைக்காரர்களாகிய இவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து, பணிந்து. நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் எல்லோரும் புறப்பட்டுப்போங்கள் என்று சொல்லுவார்கள்; அதின்பின்பு புறப்படுவேன்” என்று சொல்லி, கடுங்கோபத்தோடு பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.

  33. 17 “உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகைக்காதே; பிறன்மேல் பாவம் சுமராதபடி அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும். 18 பழிக்குப்பழி வாங்காமலும் உன் மக்கள்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் யெகோவா.

  34. 16 மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்;

    அவமானத்தை மூடுகிறவனோ விவேகி.

  35. 3 கல் கனமும், மணல் பாரமுமாக இருக்கும்;

    மூடனுடைய கோபமோ இந்த இரண்டைவிட பாரமாம்.

    4 கடுங்கோபம் கொடுமையுள்ளது, கோபம் பயங்கரமானது;

    பொறாமையோவென்றால், அதற்கு முன்னே நிற்கக்கூடியவன் யார்?

  36. 19 அவன் முகாமிற்கு அருகே, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபமடைந்தவனாய், தன்னுடைய கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே வீசி உடைத்துப்போட்டு; 20 அவர்கள் உண்டாக்கின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் மக்கள் குடிக்கும்படி செய்தான். 21 பின்பு, மோசே ஆரோனை நோக்கி: “நீ இந்த மக்கள்மேல் இந்தப் பெரிய பாவத்தைச் சுமத்துகிறதற்கு, இவர்கள் உனக்கு என்ன செய்தார்கள்” என்றான். 22 அதற்கு ஆரோன்: “என்னுடைய ஆண்டவனுக்குக் கோபம் வராமல் இருப்பதாக; இது பொல்லாத மக்கள் என்று நீர் அறிந்திருக்கிறீர். 23 இவர்கள் என்னை நோக்கி: எங்களுக்கு முன்னேசெல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டாக்கும்; எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன நடந்ததோ அறியோம்” என்றார்கள். 24 அப்பொழுது நான்: தங்கங்களை உடையவர்கள் எவர்களோ அவர்கள் அதைக் கழற்றித் தரவேண்டும் என்றேன்; அவர்கள் அப்படியே செய்தார்கள்; அதை அக்கினியிலே போட்டேன், அதிலிருந்து இந்தக் கன்றுக்குட்டி வந்தது என்றான்.

  37. 30 அப்பொழுது சவுல் யோனத்தான்மேல் கோபப்பட்டு, அவனைப் பார்த்து: கலகமும் முரட்டாட்டமும் உள்ளவளின் மகனே, நீ உனக்கு வெட்கமாகவும், உன் தாயின் மானத்திற்கு வெட்கமாகவும், ஈசாயின் மகனைத் தோழனாகத் தெரிந்து கொண்டிருக்கிறதை நான் அறியேனோ? 31 ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும், உன் அரசாட்சியானாலும் நிலைப்பதில்லை; இப்போதே அவனை அழைத்து, என்னிடத்தில் கொண்டுவா; அவன் சாகவேண்டும் என்றான். 32 யோனத்தான் தன்னுடைய தகப்பனாகிய சவுலுக்குப் பதிலாக; அவன் ஏன் கொல்லப்படவேண்டும்? அவன் என்ன செய்தான் என்றான். 33 அப்பொழுது சவுல்: அவனைக் குத்திப்போட அவன்மேல் ஈட்டியை எறிந்தான்; ஆகையால் தாவீதைக் கொன்றுபோடத் தன்னுடைய தகப்பன் தீர்மானித்திருக்கிறான் என்பதை யோனத்தான் அறிந்துகொண்டு, 34 கோபத்தோடு பந்தியைவிட்டு எழுந்துபோய், அமாவாசையின் மறுநாளாகிய அன்றையதினம் சாப்பிடாமல் இருந்தான்; தன்னுடைய தகப்பன் தாவீதை நிந்தித்துச் சொன்னது அவனுக்கு மனவருத்தமாக இருந்தது.

  38. 6 அவர்கள் கூக்குரலையும், இந்த வார்த்தைகளையும் நான் கேட்டபோது, மிகவும் கோபங்கொண்டு, 7 என்னுடைய மனதிலே ஆலோசனைசெய்து, பிறகு பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டு: நீங்கள் அவரவர் தங்களுடைய சகோதரர்கள்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு விரோதமாக ஒரு பெரிய சபை கூடிவரச்செய்து,

  39. 28 தன்னுடைய ஆவியை அடக்காத மனிதன்

    மதில் இடிந்த பாழான பட்டணம்போல இருக்கிறான்.

  40. 21 பிதாக்களே, உங்களுடைய பிள்ளைகள் மனம் தளர்ந்துபோகாதபடி, அவர்களை கோபமூட்டாமலிருங்கள்.

  41. 1 உங்களுக்குள்ளே வாக்குவாதங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்களுடைய அவயவங்களிலே போர்செய்கிற ஆசைகளினாலல்லவா? 2 நீங்கள் ஆசைப்பட்டும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாக இருந்தும், அடையக்கூடாமல் போகிறீர்கள்; நீங்கள் சண்டையும், யுத்தமும் செய்தும், நீங்கள் விண்ணப்பம்செய்யாமல் இருக்கிறதினாலே, உங்களுக்குக் கிடைப்பதில்லை.

  42. 10 அதினால் யெகோவா அந்த நாளிலே கோபம் வந்தவராகி: 11 உத்தமமாக என்னைப் பின்பற்றின கேனேசியனான எப்புன்னேயின் மகன் காலேபும், நூனின் மகன் யோசுவாவும் தவிர, 12 எகிப்திலிருந்து வந்தவர்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட மனிதர்களில் ஒருவரும் என்னை உத்தமமாகப் பின்பற்றாதபடியால், அவர்கள் நான் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காண்பதில்லை என்று ஆணையிட்டிருக்கிறார். 13 அப்படியே யெகோவாவுடைய கோபம் இஸ்ரவேலின் மேல் வந்தது; யெகோவாவுடைய சமுகத்தில் தீங்குசெய்த அந்தச் சந்ததியெல்லாம் அழிந்துபோகும்வரை அவர்களை வனாந்திரத்திலே 40 வருடங்கள் அலையச்செய்தார். 14 இப்பொழுதும் இதோ இஸ்ரவேலர்களின் மேல் இருக்கும் யெகோவாவுடைய கோபத்தின் கடுமையை இன்னும் அதிகரிக்கச்செய்யும்படி, நீங்கள் உங்களுடைய தகப்பன்களின் இடத்திலே பாவமுள்ள பெருங்கூட்டமாக எழும்பியிருக்கிறீர்கள். 15 நீங்கள் அவரைவிட்டுப் பின்வாங்கினால், அவர் இன்னும் அவர்களை வனாந்திரத்தில் இருக்கச்செய்வார்; இப்படி நீங்கள் இந்த மக்களையெல்லாம் அழியச்செய்வீர்கள்” என்றான்.

  43. 2 கோபம் மூடனைக் கொல்லும்;

    பொறாமை புத்தியில்லாதவனை அழிக்கும்.

  44. 4 நீங்கள் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாமலிருங்கள்;

    உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா)

  45. 6 இப்படிப்பட்டவைகளினால் கீழ்ப்படியாத பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வருவதால், யாரும் வீண்வார்த்தைகளினாலே உங்களை ஏமாற்றாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்;

  46. 42 மூத்த மகனாகிய ஏசாவின் வார்த்தைகள் ரெபெக்காளுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது அவள் தன் இளைய மகனாகிய யாக்கோபை அழைத்து: “உன் சகோதரனாகிய ஏசா உன்னைக் கொன்றுபோட நினைத்து, தன்னைத் தேற்றிக்கொள்ளுகிறான். 43 ஆகையால், என் மகனே, நான் சொல்வதைக் கேட்டு, எழுந்து புறப்பட்டு, ஆரானில் இருக்கிற என் சகோதரனாகிய லாபானிடத்திற்கு ஓடிப்போய், 44 உன் சகோதரன் உன்மேல் கொண்ட கோபம் தணியும்வரை சிலநாட்கள் அவனிடத்தில் இரு. 45 உன் சகோதரன் உன்மேல் கொண்ட கோபம் தணிந்து, நீ அவனுக்குச் செய்ததை அவன் மறந்தபின்பு, நான் ஆள் அனுப்பி, அந்த இடத்திலிருந்து உன்னை வரவழைப்பேன்; நான் ஒரே நாளில் உங்கள் இருவரையும் ஏன் இழந்துபோகவேண்டும்” என்றாள்.

  47. 15 அப்பொழுது மோசேக்குக் கடுங்கோபம் மூண்டது; அவன் யெகோவாவை நோக்கி: “அவர்கள் செலுத்தும் காணிக்கையை அங்கீகரியாமல் இருப்பீராக; நான் அவர்களிடம் ஒரு கழுதையைக் கூட எடுத்துக்கொள்ளவில்லை; அவர்களில் ஒருவனுக்கும் யாதொரு தீங்கு செய்யவும் இல்லை” என்றான்.

  48. 19 கடுங்கோபி தண்டனைக்குள்ளாவான்;

    நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாக வரும்.

  49. 16 அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் ஏமாற்றப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாக விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் எல்லா எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலைசெய்தான்.

  50. 28 ஜெப ஆலயத்திலிருந்த எல்லோரும், இவைகளைக் கேட்டபொழுது, கடும்கோபமடைந்து, 29 எழுந்திருந்து, அவரை ஊருக்கு வெளியே தள்ளி, தங்களுடைய ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் உச்சியிலிருந்து அவரைத் தலைகீழாகத் தள்ளிவிடுவதற்காக அந்த இடத்திற்குக் கொண்டுபோனார்கள்.

  51. 36 குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.

  52. 20 ஆனாலும் நான் வந்து, உங்களை என் மனவிருப்பத்தின்படி இருக்கிறவர்களாகப் பார்க்காமலும், நானும் உங்களுடைய மனவிருப்பத்தின்படி இருக்கிறவனாகப் பார்க்கப்படாமல் இருப்பேனோ என்றும்; விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், வாக்குவாதங்கள், புறங்கூறுதல், கோள் சொல்லுதல், இறுமாப்பு, கலகங்கள் ஆகிய இவைகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோ என்றும்;

  53. 15 அன்புடன் சத்தியத்தில் நடந்து, தலையாகிய கிறிஸ்துவிற்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாக இருப்பதற்காக அப்படிச் செய்தார். 16 அவராலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாக இருக்கிற எல்லா பாகங்களினாலும் சரியாகச் சேர்த்து இணைக்கப்பட்டு, ஒவ்வொரு சரீர பாகங்களும் தன்தன் அளவிற்குத்தக்கதாக வேலை செய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவளர்ச்சியை உண்டாக்குவதற்காகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது.

    17 எனவே, கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவென்றால், யூதரல்லாதவர்கள் தங்களுடைய வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடக்காமல் இருங்கள். 18 அவர்கள் புத்தியில் இருள் அடைந்து, தங்களுடைய இருதயக் கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவன் தரும் ஜீவனுக்கு அந்நியர்களாக இருந்து; 19 உணர்வில்லாதவர்களாக, எல்லாவித அசுத்தங்களையும் ஆவலோடு செய்வதற்கு, தங்களைக் காமஇச்சைகளுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.

  54. 23 புத்தியீனமும் அறிவில்லாததுமான வாக்குவாதங்கள் சண்டைகளை உண்டாக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகி இரு. 24 கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாக இல்லாமல், எல்லோரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதிப்பதற்குத் திறமையுள்ளவனும், தீமையைச் சகிக்கிறவனுமாக இருக்கவேண்டும். 25 எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை கொடுக்கத்தக்கதாகவும், 26 பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிக்கப்பட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கம் தெளிந்து அவன் தந்திரத்திற்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாக அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.

  55. 6 யெகோவா அவனுக்கு முன்பாக கடந்துபோகிறபோது, அவர்: “யெகோவா, யெகோவா; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயவும், சத்தியமுள்ள தேவன். 7 ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும், மீறுதலையும், பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றம் இல்லாதவனாக விடாமல், தகப்பன்மார்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிக்கிறவர்” என்று கூறினார்.

  56. 19 அப்பொழுது உசியா கோபங்கொண்டான்; அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து, ஆசாரியரோடு கோபமாகப் பேசுகிறபோது, ஆசாரியருக்கு முன்பாகக் யெகோவாவுடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே தொழுநோய் தோன்றியது.

  57. 8 பரியாசக்காரர்கள் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்;

    ஞானிகளோ கோபத்தை விலக்குகிறார்கள்.

  58. 11 பின்னும் யெகோவா என்னை நோக்கி: யூதா என்கிற துரோகியைப்பார்க்கிலும் சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் தன்னை நீதியுள்ளவளாக்கினாள். 12 நீ போய் வடதிசையை நோக்கி சொல்லவேண்டிய வார்த்தைகள் என்னவென்றால்: சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பு என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உங்கள்மேல் என் கோபத்தை இறங்கச்செய்வதில்லை; நான் கிருபையுள்ளவரென்று யெகோவா சொல்லுகிறார்; நான் என்றைக்கும் கோபம் வைக்கமாட்டேன்.

  59. 4 அதற்குக் யெகோவா: நீ எரிச்சலாக இருக்கிறது நல்லதோ என்றார்.

  60. 54 இவைகளை அவர்கள் கேட்டபொழுது மிகுந்த கோபமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள். 55 அவன் பரிசுத்த ஆவியானவராலே நிறைந்தவனாக, வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபக்கத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் பார்த்து: 56 அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், இயேசுவானவர் தேவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான். 57 அப்பொழுது அவர்கள் உரத்த சத்தமாகக் கூக்குரலிட்டுத் தங்களுடைய காதுகளை அடைத்துக்கொண்டு, ஒன்றுசேர்ந்து அவன்மேல் பாய்ந்து, 58 அவனை நகரத்திற்கு வெளியே தள்ளி, அவன் மீது கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர்கள் தங்களுடைய ஆடைகளைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தின் அருகே வைத்தார்கள்.

  61. 3 எனக்கு உண்டான எல்லாவற்றையும் நான் அன்னதானம் செய்தாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு இல்லையென்றால் எனக்கு பயன் ஒன்றுமில்லை.

  62. 15 பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், படைத்தளபதிகளும், பலவான்களும், அடிமைகள், சுதந்திரமானவர்கள் எல்லோரும், குகைகளிலும் மலைகளின் பாறைகளிலும் ஒளிந்துகொண்டு, 16 மலைகளையும் பாறைகளையும் பார்த்து: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்; 17 அவருடைய கோபத்தின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைத்து நிற்கமுடியும் என்றார்கள்.

  63. 36 அப்பொழுது யாக்கோபுக்குக் கோபம் எழும்பி, லாபானோடு வாக்குவாதம்செய்து: “நீர் என்னை இவ்வளவு தீவிரமாகத் தொடர்ந்துவர நான் செய்த தவறு என்ன? நான் செய்த துரோகம் என்ன?

  64. 9 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “இந்த மக்களைப் பார்த்தேன்; இவர்கள் பிடிவாதமுள்ள மக்கள். 10 ஆகையால் என்னுடைய கோபம் இவர்கள்மேல் வரவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய தேசமாக்குவேன்” என்றார். 11 மோசே தன்னுடைய தேவனாகிய யெகோவாவை நோக்கி: “யெகோவாவே, தேவரீர் மகா பெலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உம்முடைய மக்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவது ஏன்? 12 மலைகளில் அவர்களைக் கொன்றுபோடவும், பூமியின்மேல் இல்லாதபடி அவர்களை அழிக்கவும், அவர்களுக்குத் தீங்குசெய்வதற்காகவே அவர்களைப் புறப்படச்செய்தார் என்று எகிப்தியர்கள் சொல்லுவானேன்? உம்முடைய கடுங்கோபத்தைவிட்டுத் திரும்பி, உமது மக்களுக்குத் தீங்குசெய்யாதபடி, அவர்கள்மேல் பரிதாபம்கொள்ளும். 13 உமது ஊழியக்காரர்களாகிய ஆபிரகாமையும், ஈசாக்கையும், இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்களுடைய சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகச்செய்து, நான் சொன்ன இந்த தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார்கள் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படி, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டு அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே” என்று கெஞ்சிப் பிரார்த்தனை செய்தான். 14 அப்பொழுது யெகோவா தமது மக்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச்செய்யாதபடி பரிதாபங்கொண்டார்.

  65. 27 கழுதை யெகோவாவுடைய தூதனைக்கண்டு, பிலேயாமின் கீழ்ப் படுத்துக்கொண்டது; பிலேயாம் கோபம் வந்தவனாகி, கழுதையைத் தடியினால் அடித்தான்.

  66. 19 “யெகோவா அதைக்கண்டு, தமது மகன்களும்,

    மகள்களும் தம்மைக் கோபப்படுத்தியதால் மனச்சோர்வடைந்து,

    அவர்களைப் புறக்கணித்து:

    20 என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்;

    அவர்களுடைய முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்பேன்;

    அவர்கள் மகா மாறுபாடுள்ள சந்ததி;

    உண்மையில்லாத பிள்ளைகள்.

    21 தெய்வம் அல்லாதவைகளினால் எனக்கு எரிச்சலை மூட்டி,

    தங்களுடைய வீணான தீயசெயல்களினால் என்னைக் கோபப்படுத்தினார்கள்;

    ஆகையால் மதிக்கப்படாத மக்களினால் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி,

    மதிகெட்ட மக்களால் அவர்களைப் கோபப்படுத்துவேன்.

    22 என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது,

    அது தாழ்ந்த நரகம்வரை எரியும்;

    அது பூமியையும், அதின் பலனையும் அழித்து,

    மலைகளின் அஸ்திபாரங்களை வேகச்செய்யும்.

  67. 10 அதனால் ஆசா தரிசனம் காண்கிறவன்மேல் கடுங்கோபங்கொண்டு அவனைக் காவலறையிலே வைத்தான்; இதைத்தவிர அக்காலத்தில் மக்களுக்குள் சிலரைக் கொடூரமாக நடப்பித்தான்.

  68. 4 யெகோவாவுடைய பரிசுத்தவான்களே,

    அவரைப் புகழ்ந்துபாடி,

    அவருடைய பரிசுத்தத்தின் நினைவு கூருதலைக் கொண்டாடுங்கள்.

    5 ஏனெனில் அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே,

    அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும்;

    மாலையில் அழுகை வரும்,

    அதிகாலையிலே மகிழ்ச்சி உண்டாகும்.

  69. 27 அறிவாளி தன்னுடைய வார்த்தைகளை அடக்குகிறான்;

    விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.

  70. 1 யோனாவுக்கு இது மிகவும் வருத்தமாக இருந்தது; அவன் கடுங்கோபம் கொண்டு, 2 யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: ஆ யெகோவாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினாலேயே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்கிற்கு மனமிரங்குகிறவருமான தேவனென்று அறிவேன்.

  71. 28 அப்பொழுது அவன் கோபமடைந்து உள்ளே போக விருப்பமில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து அவனை வருந்தி அழைத்தான். 29 அவன் தகப்பனுக்கு மறுமொழியாக: இதோ, இத்தனை வருடகாலமாக நான் உமக்கு வேலைச்செய்து, எப்பொழுதுமே எல்லாவற்றிலும் உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தும், என் நண்பர்களோடு நான் மகிழ்ச்சியாக இருக்கும்படி நீர் ஒருபோதும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை. 30 வேசிகளிடத்தில் உம்முடைய சொத்துக்களை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்தக் கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.

  72. 16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். 17 உலகத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

  73. 11 என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிக்கமாட்டார்கள் என்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்.

  74. 8 நமக்குப் பாவம் இல்லை என்று சொல்வோமானால், நம்மைநாமே ஏமாற்றிக்கொள்ளுகிறவர்களாக இருப்போம், சத்தியம் நமக்குள் இருக்காது. 9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராக இருக்கிறார். 10 நாம் பாவம் செய்யவில்லை என்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாக இருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இருக்காது.

  75. 10 அவன் தேவனுடைய கோபத்தின் தண்டனையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் ஊற்றப்பட்ட அவருடைய கோபமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும், அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான். 11 அவர்களுடைய வாதையின் புகை எல்லாக் காலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய பெயரின் முத்திரையை அணிந்துகொள்ளுகிற அனைவருக்கும் இரவும் பகலும் ஓய்வு இருக்காது.

  76. 19 அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, யூதரல்லாதவர்களுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்கு தேவனுடைய கடுமையான கோபத்தின் தண்டனையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்கு முன்பாக ஞாபகப்படுத்தப்பட்டது.

  77. 15 அந்நிய மக்களை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான வாள் புறப்படுகிறது; இரும்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கடுமையான கோபமாகிய மதுபான ஆலையை மிதிக்கிறார்.