53 Bible Verses About Guidance

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

Bible Verses About Guidance
  1. 1 என் மகனே, என்னுடைய போதகத்தை மறவாதே;

    உன்னுடைய இருதயம் என்னுடைய கட்டளைகளைக் காக்கட்டும்.

    2 அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும்,

    நீண்ட ஆயுளையும், சமாதானத்தையும் பெருகச்செய்யும்.

    3 கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாமல் இருப்பதாக;

    நீ அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டி,

    அவைகளை உன்னுடைய இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.

    4 அதினால் தேவனுடைய பார்வையிலும் மனிதர்களுடைய பார்வையிலும் தயவையும் நற்புத்தியும் பெறுவாய்.

    5 உன்னுடைய சுயபுத்தியின்மேல் சாயாமல்,

    உன்னுடைய முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாக இருந்து,

    6 உன்னுடைய வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்;

    அப்பொழுது அவர் உன்னுடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

  2. 6 இதற்காக உம்மைக் காணும் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்வான்;

    அப்பொழுது மிகுந்த வெள்ளம் வந்தாலும் அது அவனை அணுகாது.

    7 நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்;

    என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து,

    இரட்சிப்பின் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா)

    8 நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்;

    உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

    9 வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய,

    உன் அருகில் சேராத புத்தியில்லாத குதிரையைப்போலவும்

    கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.

  3. 12 மோசே யெகோவாவை நோக்கி: “தேவரீர் இந்த மக்களை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடுகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும், உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என்னுடைய கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டு; 13 உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த தேசம் உம்முடைய மக்களென்று நினைத்தருளும்” என்றான். 14 அதற்கு அவர்: “என்னுடைய சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்றார். 15 அப்பொழுது அவன் அவரை நோக்கி: “உம்முடைய சமுகம் என்னோடு வராமற்போனால், எங்களை இந்த இடத்திலிருந்து கொண்டுபோகாமல் இரும். 16 எனக்கும் உமது மக்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் தெரியவரும்; நீர் எங்களுடன் வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள மக்கள் எல்லோரையும்விட, நானும் உம்முடைய மக்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும்” என்றான்.

    17 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ சொன்ன இந்த வார்த்தையின்படி செய்வேன்; என்னுடைய கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன்” என்றார்.

  4. நூன்.

    105 உம்முடைய வசனம் என்னுடைய கால்களுக்குத் தீபமும்,

    என்னுடைய பாதைக்கு வெளிச்சமுமாக இருக்கிறது.

  5. 4 யெகோவாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்;

    உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.

    5 உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்;

    நீரே என்னுடைய இரட்சிப்பின் தேவன்,

    உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.

  6. 23 ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்;

    என்னுடைய வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்.

    24 உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி,

    முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.

    25 பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு?

    பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.

    26 என்னுடைய சரீரமும் என்னுடைய இருதயமும் வளர்ச்சியில்லாமல் போகிறது;

    தேவன் என்றென்றைக்கும் என்னுடைய இருதயத்தின் கன்மலையும்

    என்னுடைய பங்குமாக இருக்கிறார்.

    27 இதோ, உம்மைவிட்டுத் தூரமாகப்போகிறவர்கள் நாசமடைவார்கள்;

    உம்மைவிட்டு உண்மையில்லாமல் போகிற அனைவரையும் அழிப்பீர்.

    28 எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்;

    நான் உமது செயல்களையெல்லாம் சொல்லிவரும்படி

    கர்த்தராகிய ஆண்டவர்மேல் என்னுடைய நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.

  7. 1 என் மேய்ச்சலின் ஆடுகளைக் கெடுத்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ, என்று யெகோவா சொல்லுகிறார். 2 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா தமது மக்களை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு விரோதமாகச் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் என் ஆடுகளைப் பராமரிக்காமல், அவைகளைச் சிதறடித்து அவைகளைச் துரத்திவிட்டீர்கள்; இதோ, நான் உங்கள்பேரில் உங்கள் செய்கைகளின் பொல்லாப்புக்கேற்ற தண்டனையை உங்கள்மேல் வருவிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். 3 நான் என் ஆடுகளில் மீதியாக இருப்பவைகளைத் துரத்தியிருந்த எல்லா தேசங்களிலுமிருந்து சேர்த்து, அவைகளைத் திரும்ப அவைகளின் தொழுவங்களுக்குக் கொண்டுவருவேன்; அப்பொழுது அவைகள் பலுகிப்பெருகும். 4 அவைகளை மேய்க்கத் தகுதி உள்ளவர்களையும் அவைகள்மேல் ஏற்படுத்துவேன்; இனி அவைகள் பயப்படுவதுமில்லை, கலங்குவதுமில்லை, காணாமற்போவதுமில்லையென்று யெகோவா சொல்லுகிறார்.

  8. 1 அப்படியிருக்க, சகோதரர்களே, நீங்கள் உங்களுடைய சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும் என்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யும் புத்தியுள்ள ஆராதனை. 2 நீங்கள் இந்த உலகத்திற்கேற்ற வேஷம் போடாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான விருப்பம் என்னவென்று பகுத்தறிவதற்காக, உங்களுடைய மனம் புதிதாக மாறுகிறதினாலே மறுரூபமாகுங்கள். 3 அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் யாராவது தன்னைக்குறித்து நினைக்கவேண்டிய அளவிற்கு அதிகமாக நினைக்காமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்துகொடுத்த விசுவாச அளவின்படி, தெளிந்த எண்ணம் உள்ளவனாக நினைக்கவேண்டும். 4 ஏனென்றால், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக உறுப்புகள் இருந்தும், எல்லா உறுப்புகளுக்கும் ஒரே வேலை இல்லாததைப்போல, 5 அநேகராகிய நாமும் கிறிஸ்துவிற்குள் ஒரே சரீரமாக இருக்க, ஒருவருக்கொருவர் உறுப்புகளாக இருக்கிறோம். 6 நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்கள் உள்ளவர்களாக இருக்கிறதினால், நம்மில் தீர்க்கதரிசனம் சொல்லுகிற வரத்தை உடையவன் விசுவாசப்பிரமாணத்தின்படி சொல்லட்டும். 7 ஊழியம் செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும், 8 புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் நிலைத்திருக்கவேண்டும்; பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கட்டும்; முதலாளியானவன் கவனமாக இருக்கவேண்டும்; இரக்கம் செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யட்டும்.

  9. 12 இன்னும் அநேக காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாக இருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். 13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, எல்லா சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சொந்தமாக பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் எல்லாவற்றையும் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்குத் தெரிவிப்பார். 14 அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். 15 பிதாவினுடையவைகள் அனைத்தும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்குத் தெரிவிப்பார் என்றேன்.

  10. 5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். 6 ஆனாலும் அவன் கொஞ்சம்கூட சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு கேட்கவேண்டும்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாக இருக்கிறான். 7 அப்படிப்பட்ட மனிதன், தான் கர்த்தரிடத்தில் எதையாவது பெறலாமென்று நினைக்காமல் இருப்பானாக. 8 ஏனென்றால், இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாக இருக்கிறான்.

  11. 1 யெகோவா ஆபிராமை நோக்கி: “நீ உன் பிறந்த தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும்விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்குப் போ. 2 நான் உன்னைப் பெரிய இனமாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பெயரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாக இருப்பாய். 3 உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உன்மூலம் ஆசீர்வதிக்கப்படும்” என்றார். 4 யெகோவா ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான்; லோத்தும் அவனோடுகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, 75 வயதுள்ளவனாக இருந்தான்.

  12. 10 யெகோவா தேசங்களின் ஆலோசனையை வீணடித்து,

    மக்களுடைய நினைவுகளை பயனற்றதாக ஆக்குகிறார்.

    11 யெகோவாவுடைய ஆலோசனை நிரந்தரகாலமாகவும்,

    அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.

  13. 133 உம்முடைய வார்த்தையிலே என்னுடைய காலடிகளை நிலைப்படுத்தி,

    ஒரு அநியாயமும் என்னை ஆட்கொள்ளச்செய்யாமல் இரும்.

  14. 1 அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும், காற்பங்கு தேசத்தின் அதிபதியாகிய ஏரோதுடன் வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாகவும் போதகர்களாகவும் இருந்தார்கள். 2 அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் உரைத்தார். 3 அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கரங்களை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்.

    4 அப்படியே அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் அனுப்பப்பட்டு செலூக்கியா பட்டணத்திற்கு வந்து, கப்பல் ஏறி, அங்கிருந்து சீப்புருதீவிற்குப் போனார்கள். 5 சாலமி பட்டணத்திற்கு வந்தபோது அவர்கள் யூதர்களுடைய ஜெப ஆலயங்களில் தேவவசனத்தைப் போதித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாக இருந்தான்.

  15. 6 அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துச்சென்றபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லவேண்டாமென்று பரிசுத்த ஆவியானவராலே தடைசெய்யப்பட்டு, 7 மீசியா தேசம்வரை வந்து, பித்தினியா நாட்டிற்குப் போக விரும்பினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவிடவில்லை. 8 அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாகப்போய், துரோவாவிற்கு வந்தார்கள். 9 அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டானது; அது என்னவென்றால், மக்கெதோனியா தேசத்தைச் சேர்ந்த ஒருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவிற்கு வந்து எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்று பவுலை வேண்டிக்கொண்டதாக இருந்தது. 10 அந்த தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்கு நற்செய்தியைத் தெரிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தார் என்று நாங்கள் உறுதிப்படுத்திக்கொண்டு, உடனே மக்கெதோனியாவிற்குப் புறப்பட்டோம்.

  16. 34 இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்திற்கு மக்களை அழைத்துக்கொண்டுபோ; என்னுடைய தூதனானவர் உனக்குமுன்பு செல்லுவார்; ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன்” என்றார்.

  17. 1 பின்பு தாவீது யெகோவாவை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்களில் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். அதற்குக் யெகோவா: போ என்றார்; எந்த இடத்திற்குப் போகலாம் என்று தாவீது கேட்டதற்கு, அவர்: எப்ரோனுக்குப் போ என்றார். 2 அப்படியே தாவீது தன்னுடைய இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊரைச் சேர்ந்த அகினோவாமோடும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊரைச் சேர்ந்த அபிகாயிலோடும் அந்த இடத்திற்குப் போனான்.

  18. 17 தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள் என்று பெலிஸ்தர்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் எல்லோரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள்; அதைத் தாவீது கேட்டபோது, ஒரு கோட்டைக்குள் போனான். 18 பெலிஸ்தர்களோ வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள். 19 பெலிஸ்தர்களுக்கு எதிராகப் போகலாமா, அவர்களை என்னுடைய கையிலே ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது கர்த்தரிடம் விசாரித்தபோது, யெகோவா: போ, பெலிஸ்தர்களை உன்னுடைய கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுப்பேன் என்று தாவீதுக்குச் சொன்னார். 20 தாவீது பாகால்பிராசீமிற்கு வந்து, அங்கே அவர்களை முறியடித்து: தண்ணீர்கள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறதுபோல, யெகோவ என்னுடைய எதிரிகளை எனக்கு முன்பாக சிதறடித்தார் என்று சொல்லி, அதினால் அந்த இடத்திற்குப் பாகால்பிராசீம் என்று பெயரிட்டான்.

  19. தாவீதின் பாடல்.

    1 யெகோவா என் மேய்ப்பராக இருக்கிறார்;

    நான் தாழ்ச்சி அடையமாட்டேன்.

    2 அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து,

    அமர்ந்த தண்ணீர்கள் அருகில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.

    3 அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய பெயரினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

  20. 8 யெகோவா நல்லவரும் உத்தமருமாக இருக்கிறார்;

    ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.

    9 சாந்த குணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி,

    சாந்த குணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.

    10 யெகோவாவுடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு,

    அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவை.

  21. 11 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என்னுடைய ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன். 12 ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன்னுடைய ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன்னுடைய மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என்னுடைய ஆடுகளைத்தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பிவரச்செய்து, 13 அவைகளை மக்களிடத்திலிருந்து புறப்படவும் தேசங்களிலிருந்து சேரவும்செய்து, அவைகளுடைய சொந்ததேசத்திலே அவைகளைக் கொண்டுவந்து, இஸ்ரவேல் மலைகளின்மேலும் ஆறுகள் அருகிலும் தேசத்தின் எல்லா குடியிருக்கும் இடங்களிலும் அவைகளை மேய்ப்பேன். 14 அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும் இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும். 15 என்னுடைய ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 16 நான் காணாமல்போனதைத் தேடி, துரத்தப்பட்டதைத் திரும்பக் கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, வலிமை இல்லாததைத் திடப்படுத்துவேன்; நியாயத்திற்குத்தக்கதாக அவைகளை மேய்த்து, கொழுத்ததும் பெலமுமுள்ளவைகளை அழிப்பேன்.

  22. 3 நான் எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கப் பழக்கினேன்; ஆனாலும் நான் தங்களைக் குணமாக்குகிறவரென்று அறியாமற்போனார்கள். 4 மனிதரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன், அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த பாரத்தை எடுத்துப் போடுகிறவரைப்போல் இருந்து, அவர்கள் பக்கமாக சாய்ந்து, அவர்களுக்கு ஆகாரங்கொடுத்தேன்.

  23. 39 சிறிது விலகிப்போய், முகங்குப்புறவிழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிச் செய்யும்; ஆனாலும் என் விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார்.

  24. 35 சற்று தள்ளிப்போய், தரையிலே விழுந்து, அந்த நேரம் தம்மைவிட்டுக் கடந்துபோகக்கூடுமானால் அது கடந்துபோகவேண்டும் என்று வேண்டிக்கொண்டு: 36 அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே முடியும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆனாலும் என்னுடைய விருப்பத்தின்படி அல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே நடக்கட்டும் என்றார்.

  25. 3 வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பெயர் சொல்லிக் அழைத்து, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான். 4 அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறதினால் அவனுக்குப் பின்னே செல்லுகிறது.

  26. 26 அப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியது என்னவென்று தெரியாமல் இருக்கிறதினால், ஆவியானவர்தாமே சொல்லிமுடியாத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். 27 ஆவியானவர் தேவனுடைய விருப்பத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறதினால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியானவரின் சிந்தை என்னவென்று அறிவார்.

    28 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாக தேவனிடம் அன்பாக இருக்கிறவர்களுக்கு எல்லாம் நன்மைக்குரியவைகளாக நடக்கிறது என்று அறிந்திருக்கிறோம். 29 தம்முடைய குமாரன் அநேக சகோதரர்களுக்குள்ளே முதற்பேறானவராக இருப்பதற்காக, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக இருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; 30 எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்தும் இருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியும் இருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியும் இருக்கிறார்.

  27. 13 அப்படியே சவுல் யெகோவாவுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், யெகோவாவுக்குச் செய்த தன்னுடைய துரோகத்தினாலும், அவன் யெகோவாவை தேடாமல் குறி சொல்லுகிறவர்களைக் கேட்கும்படி தேடியதாலும் செத்துப்போனான். 14 அதற்காக அவர் அவனைக் கொன்று, ராஜ்ஜியபாரத்தை ஈசாயின் மகனாகிய தாவீதிடம் ஒப்படைத்தார்.

  28. 23 நல்ல மனிதனுடைய நடைகள் யெகோவாவால் உறுதிப்படும்,

    அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.

    24 அவன் விழுந்தாலும் தள்ளப்பட்டு போவதில்லை;

    யெகோவா தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.

  29. 6 பிள்ளையை நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து;

    அவனுடைய முதிர்வயதிலும் அதை விடாமல் இருப்பான்.

  30. 11 யெகோவா எப்பொழுதும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை பெலமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.

  31. 21 அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படி, யெகோவா பகலில் அவர்களை வழிநடத்த மேகத்தூணிலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சம் காட்ட அக்கினித்தூணிலும் அவர்களுக்கு முன்பு சென்றார். 22 பகலிலே மேகத்தூணிலும், இரவிலே அக்கினித்தூணிலும் மக்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.

  32. 31 “மாந்திரீகம் செய்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.

  33. 9 மனிதனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்;

    அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ யெகோவா.

  34. 7 துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்புவானாக; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்புவானாக; அவர் மன்னிக்கிறதற்கு மிகுந்த தயையுள்ளவர். 8 என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று யெகோவா சொல்கிறார். 9 பூமியைக்காட்டிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைக்காட்டிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைக்காட்டிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது. 10 மழையும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்திற்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும் சாப்பிடுகிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, 11 அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாக என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.

  35. 23 யெகோவாவே, மனிதனுடைய வழி அவனால் ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனால் ஆகிறதல்லவென்றும் அறிவேன்.

  36. 19 மரத்தால் செய்யப்பட்ட விக்கிரகத்தைப்பார்த்து விழியென்றும், ஊமையான கல் சிலையைப் பார்த்து எழும்பு என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ, அது போதிக்குமோ? இதோ, அது பொன்னும் வெள்ளியுமான தகட்டால் மூடப்பட்டிருக்கிறது; அதற்குள்ளே சுவாசம் இல்லையே?

  37. 17 அவருடைய விருப்பத்தின்படிசெய்ய மனதுள்ளவன் எவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சொந்தமாக பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.

  38. 17 பார்வோன் மக்களைப் போகவிட்டபின்பு: மக்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்திற்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தர்களின் தேசத்தின் வழியாகப் போவது அருகாமையாக இருந்தாலும், தேவன் அவர்களை அந்த வழியாக நடத்தாமல், 18 செங்கடலின் வனாந்திர வழியாக மக்களைச் சுற்றிப் போகச்செய்தார். இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து கோத்திரம் கோத்திரமாக புறப்பட்டுப்போனார்கள்.

  39. 2 உன் தேவனாகிய யெகோவா உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருடங்களும் வனாந்திரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. 3 அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனிதன் உணவினால் மாத்திரம் அல்ல, யெகோவாவுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்துவதற்கு, நீயும் உன் முற்பிதாக்களும் அறியாமலிருந்த மன்னாவினால் உன்னைப் பராமரித்தார்.

  40. 6 பெலன்கொண்டு திடமனதாக இரு; இந்த மக்களின் முற்பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று வாக்குக்கொடுத்த தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய். 7 என் ஊழியக்காரனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்ய கவனமாக இருப்பதற்கு மிகவும் பெலன்கொண்டு திடமனதாக இரு; நீ போகும் இடங்களெல்லாம் புத்திமானாக நடந்துகொள்ளும்படி, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாமல் இருப்பாயாக. 8 இந்த நியாயப்பிரமாண புத்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்ய கவனமாக இருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கச்செய்வாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய். 9 நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பெலன்கொண்டு திடமனதாக இரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடங்களெல்லாம் உன் தேவனாகிய யெகோவா உன்னோடு இருக்கிறார்” என்றார்.

  41. 7 எனக்கு ஆலோசனை தந்த யெகோவாவை துதிப்பேன்;

    இரவுநேரங்களிலும் என்னுடைய உள்மனம் என்னை உணர்த்தும்.

    8 யெகோவாவை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்;

    அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால்

    நான் அசைக்கப்படுவதில்லை.

  42. 11 யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்,

    என்னுடைய எதிராளிகளினிமித்தம் சரியான பாதையில் என்னை நடத்தும்.

  43. 19 உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது;

    உமது காலடிகள் தெரியப்படாமல்போனது.

    20 மோசே ஆரோன் என்பவர்களின் கையால்,

    உமது மக்களை ஒரு ஆட்டு மந்தையைப்போல வழிநடத்தினீர்.

  44. 10 உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்,

    நீரே என் தேவன்;

    உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்தட்டும்.

  45. 14 ஆலோசனையில்லாத இடத்தில் மக்கள் விழுந்துபோவார்கள்;

    அநேக ஆலோசனைக்காரர்கள் உண்டானால் சுகம் உண்டாகும்.

  46. 12 மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழி உண்டு;

    அதின் முடிவோ மரணவழிகள்.

  47. 16 குருடர்களை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச்செய்து, அவர்களைக் கைவிடாமலிருப்பேன்.

  48. 26 பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி: நீ எழுந்து, தெற்கு திசையாக எருசலேமிலிருந்து காசா பட்டணத்திற்குப் போகிற வனாந்திரப்பாதைவழியாகப் போ என்றான். 27 அந்தப்படி அவன் எழுந்துபோனான். அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜாத்தியாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாக இருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் தொழுதுகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து; 28 ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான். 29 ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார். 30 அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குப் புரிகிறதா என்றான். 31 அதற்கு அவன்: ஒருவன் எனக்குப் புரியவைக்காவிட்டால் அது எனக்கு எப்படி புரியும் என்று சொல்லி; பிலிப்பை, தன்னுடனே ஏறி உட்காரும்படி வேண்டிக்கொண்டான்.

  49. 19 பேதுரு அந்தத் தரிசனத்தைக்குறித்து யோசனை செய்துகொண்டிருக்கும்போது, ஆவியானவர்: இதோ, மூன்று மனிதர்கள் உன்னைத் தேடுகிறார்கள். 20 நீ எழுந்து, இறங்கி, எதைக்குறித்தும் சந்தேகப்படாமல், அவர்களோடு போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார்.

  50. 4 தகப்பன்மார்களே, நீங்களும் உங்களுடைய பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற ஒழுக்கத்திலும் போதனையிலும் அவர்களை வளர்த்துங்கள்.

  51. 24 கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாக இல்லாமல், எல்லோரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதிப்பதற்குத் திறமையுள்ளவனும், தீமையைச் சகிக்கிறவனுமாக இருக்கவேண்டும். 25 எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை கொடுக்கத்தக்கதாகவும், 26 பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிக்கப்பட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கம் தெளிந்து அவன் தந்திரத்திற்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாக அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.

  52. 13 மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இந்த பட்டணத்திற்குச் சென்று, அங்கே ஒரு வருடம் தங்கி, வியாபாரம் செய்து, பணம் சம்பாதிப்போம் என்று சொல்லுகிறவர்களே, கேளுங்கள். 14 நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்களுடைய ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலம்தோன்றி, பின்பு காணாமற்போகிற புகையைப்போல இருக்கிறதே. 15 ஆதலால்: தேவனுக்கு விருப்பமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.

  53. 15 நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீனமான மனிதர்களுடைய வார்த்தைகளை அடக்குவது தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.