38 Bible Verses About Witchcraft

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

Bible Verses About Witchcraft
  1. 9 “உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச்சேரும்போது, அந்த மக்கள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ளவேண்டாம். 10 தன் மகனையாவது தன் மகளையாவது தகனபலியாகத் தீயில் பலியிடுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், ஜோதிடம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், 11 மந்திரவாதியும், வசியக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். 12 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்பான செயலின் காரணமாக உன் தேவனாகிய யெகோவா அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார். 13 உன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நீ உத்தமனாயிருப்பாயாக.

    14 “நீ துரத்திவிடப்போகிற இந்த மக்கள் நாள்பார்க்கிறவர்களுக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய யெகோவா உத்திரவுகொடுக்கமாட்டார்.

  2. 16 பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், ஆவியானவருக்கு ஏற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது சரீர இச்சையை நிறைவேற்றாமல் இருப்பீர்கள். 17 சரீர இச்சை ஆவியானவருக்கு எதிராக செயல்படுகிறது. ஆவியானவர் சரீர இச்சைக்கு எதிராக செயல்படுகிறார்; நீங்கள் செய்யவேண்டியவைகளைச் செய்யாதபடி, இவைகள் ஒன்றுக்கொன்று எதிராக இருக்கிறது. 18 ஆவியானவரால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்கள் இல்லை. 19 சரீரத்தின் செய்கைகள் வெளியரங்கமாக இருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், 20 விக்கிரக ஆராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், 21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைப் பெற்றுக்கொள்வதில்லை என்று முன்னமே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

  3. 18 சூனியக்காரியை உயிரோடு வைக்கவேண்டாம்.

  4. 12 சூனிய வித்தைகள் உன் கையில் இல்லாதபடிக்கு அகற்றுவேன்; நாள் பார்க்கிறவர்கள் உன்னிடத்தில் இல்லாமற்போவார்கள்.

  5. 22 அதற்குச் சாமுவேல்:

    “யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைவிட,

    சர்வாங்க தகனங்களும் பலிகளும் யெகோவாவுக்குப் பிரியமாயிருக்குமோ?

    பலியைவிட கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் கொழுப்பைவிட செவிகொடுத்தலும் உத்தமம்.

    23 கலகம்செய்தல் பில்லிசூனிய பாவத்திற்கும்,

    பிடிவாதம்செய்தல் அவபக்திக்கும் விக்கிரக ஆராதனைக்கும் சமமாக இருக்கிறது;

    நீர் யெகோவாவுடைய வார்த்தையைப் புறக்கணித்ததாலே,

    அவர் உம்மை ராஜாவாக இல்லாதபடி புறக்கணித்துத் தள்ளினார்”

    என்றான். 24 அப் பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: நான் யெகோவாவுடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதால் பாவம் செய்தேன்; நான் மக்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன்.

  6. 6 அவன் பென் இன்னோம் பள்ளத்தாக்கிலே தன் மகன்களைத் தகனபலிகளாக தீயிலே பலியிட்டு, நாள் நட்சத்திரம் பார்த்து, பில்லிசூனியங்களை அநுசரித்து, ஜோதிடம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, யெகோவாவுக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தான்.

  7. 18 இதோ, நானும் யெகோவா எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் மலையில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம். 19 அவர்கள் உங்களை நோக்கி: ஜோதிடம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணுவென்று ஓதுகிற குறி சொல்கிறவர்களிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, மக்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ? 20 வேதத்தையும் சாட்சி புத்தகத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமிருக்காது. 21 துன்பம் அடைந்தவர்களாகவும் பட்டினியாகவும் தேசத்தைக் கடந்துபோவார்கள்; அவர்கள் பட்டினியாயிருக்கும்போது, மூர்க்கவெறிகொண்டு, தங்கள் ராஜாவையும் தங்கள் தேவனையும் அவமதிப்பார்கள். 22 அவர்கள் அண்ணாந்துபார்ப்பார்கள், பூமியையும் நோக்கிப்பார்ப்பார்கள்; ஆனாலும் இதோ, இக்கட்டும் அந்தகாரமும் இருக்கும்; இடுக்கத்தால் இருளடைந்து, அந்தகாரத்திலே தள்ளாடி அலைவார்கள்.

  8. 10 உன் துன்மார்க்கத்திலே நீ திடநம்பிக்கையாயிருந்து: என்னைப் பார்க்கிறவர் ஒருவரும் இல்லையென்றாய். உன் ஞானமும் உன் அறிவுமே உன்னைக் கெடுத்தது; நான்தான், என்னைத் தவிர ஒருவருமில்லையென்று உன் இருதயத்தில் எண்ணினாய். 11 ஆகையால் தீங்கு உன்மேல் வரும், அது எங்கேயிருந்து உதித்ததென்று உனக்குத் தெரியாது; உனக்குத் துன்பம் வரும், நீ அதை நிவிர்த்தியாக்கமாட்டாய்; நீ அறியாதபடிக்கு உடனடியாக உண்டாகும் அழிவு உன்மேல் வரும். 12 நீ உன் சிறுவயதுமுதல் பிரயாசப்பட்டுப் பழகிவருகிற உன் மாயவித்தைகளையும், உன் திரளான சூனியங்களையும் நீ பயன்படுத்து; அவைகளால் உனக்குப் பயனோ, பலனோ உண்டாகுமா என்று பார்ப்போம். 13 உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் சோதிடர்களும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னைத் தப்புவித்துக் காப்பாற்றட்டும். 14 இதோ, அவர்கள் பதரைப்போல் இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்; அவர்கள் தங்கள் உயிரை நெருப்புத்தழலினின்று விடுவிப்பதில்லை; அது குளிர்காயத்தக்க தழலுமல்ல; எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல. 15 உன் சிறுவயதுமுதல் நீ பிரயாசப்பட்டு எவர்களுடன் வியாபாரம்செய்தாயோ, அவர்களும் அப்படியே இருப்பார்கள்; அவரவர் தங்கள் போக்கிலே போய் அலைவார்கள்; உன்னை காப்பாற்றுவார் இல்லை.

  9. 21 அப்பொழுது யோராம்: இரதத்தை ஆயத்தப்படுத்து என்றான்; அவனுடைய இரதத்தை ஆயத்தப்படுத்தினபோது, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமும், யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் அவனவன் தன்தன் இரதத்தில் ஏறி யெகூவுக்கு நேராகப் புறப்பட்டு, யெஸ்ரயேலயனாகிய நாபோத்தின் நிலத்திலே அவனுக்கு எதிர்ப்பட்டார்கள். 22 யோராம் யெகூவைக் கண்டவுடனே: யெகூவே, சமாதானமா என்றான். அதற்கு யெகூ: உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லி சூனியங்களும், இத்தனை ஏராளமாயிருக்கும்போது சமாதானம் ஏது என்றான்.

  10. 9 சீமோன் என்ற ஒருவன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தை செய்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியா நாட்டு மக்களைத் திகைக்கவைத்துக்கொண்டிருந்தான். 10 தெய்வத்தின் பெரிய சக்தி இவன்தான் என்று நினைத்து, சிறியோர் பெரியோர் எல்லோரும் அவனுடைய சொல்லைக்கேட்டு வந்தார்கள். 11 அவன் நீண்ட நாட்களாக தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள். 12 தேவனுடைய இராஜ்யத்திற்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்திற்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு போதித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, ஆண்களும் பெண்களும் ஞானஸ்நானம் பெற்றார்கள். 13 அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைச் சேர்ந்துகொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் பார்த்து பிரமித்தான்.

  11. 31 “மாந்திரீகம் செய்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.

  12. 26 யெகோவாகிய நான் பரிசுத்தராக இருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாக இருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாக இருக்கும்படிக்கு, உங்களை மற்ற மக்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன். 27 “ஜோதிடம் பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாக இருக்கிற ஆணாகிலும் பெண்ணாகிலும் கொலைசெய்யப்படவேண்டும்; அவர்கள்மேல் கல்லெறிவார்களாக; அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக என்று சொல்” என்றார்.

  13. 9 பாபிலோன் ராஜாவை நீங்கள் சேவிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிற உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும், உங்கள் குறிகாரருக்கும், உங்கள் சொப்பனக்காரருக்கும், உங்கள் நாள் பார்க்கிறவர்களுக்கும், உங்கள் சூனியக்காரருக்கும் நீங்கள் காதுகொடுத்துக் கேட்காதிருங்கள். 10 நான் உங்களை உங்கள் தேசத்திலிருந்து தூரப்படுத்துகிறதற்கும், உங்களைத் துரத்திவிடுகிறதற்கும், நீங்கள் அழிவதற்காக அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.

  14. 4 தன் வேசித்தனங்களினால் தேசங்களையும், தன் சூனியங்களினால் மக்களையும் விற்கிற மகா சூனியக்காரியும் ரூபவதியுமாயிருக்கிற வேசியினுடைய மிகுதியான வேசித்தனங்களினிமித்தம், 5 இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து உன் ஆடையின் ஓரங்களை உன் முகம்வரை தூக்கியெடுத்து, தேசங்களுக்கு உன் நிர்வாணத்தையும், இராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் வெளிப்படுத்தி,

  15. 17 இது எபேசுவிலே குடியிருந்த யூதர்கள் கிரேக்கர்கள் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லோரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது. 18 விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்களுடைய பொல்லாத வித்தைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள். 19 மாயவித்தைக்காரர்களாக இருந்தவர்களில் அநேகர் தங்களுடைய புத்தகங்களைக் கொண்டுவந்து, எல்லோருக்கும் முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் விலையைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள். 20 இவ்வளவு வல்லமையாக கர்த்தருடைய வசனம் பரவியது.

  16. 6 சவுல் யெகோவாவிடத்தில் விசாரிக்கும்போது, யெகோவா அவனுக்குச் சொப்பனங்களினாலும், ஊரீமினாலும், தீர்க்கதரிசிகளினாலும் பதில் சொல்லவில்லை. 7 அப்பொழுது சவுல் தன்னுடைய ஊழியக்காரர்களைப் பார்த்து: இறந்தவர்களிடத்தில் பேசுகிற ஒரு பெண்ணைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்கள்: இதோ, எந்தோரில் இறந்தவர்களிடத்தில் பேசுகிற ஒரு பெண் இருக்கிறாள் என்றார்கள். 8 அப்பொழுது சவுல் வேடம் மாறி, வேறு உடை அணிந்துகொண்டு, அவனும் அவனோடு இரண்டுபேரும் இரவிலே அந்த பெண்ணிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள்; அவளை அவன் பார்த்து: நீ எனக்குக் குறிசொல்லி, நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பிவரச்செய் என்றான். 9 அதற்கு அந்த பெண்: சவுல் இறந்தவர்களோடும், ஆவிகளோடும் பேசுகிறவர்களை தேசத்தில் இல்லாதபடி, தடை செய்த செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என்னுடைய உயிருக்குக் கண்ணிவைக்கிறது என்ன என்றாள். 10 அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்திற்காக உனக்குப் தீங்கு வராது என்பதைக் யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் யெகோவாவின்மேல் ஆணையிட்டான். 11 அப்பொழுது அந்த பெண்: உமக்கு நான் யாரை எழும்பிவரச் செய்யவேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரச் செய்யவேண்டும் என்றான். 12 அந்த பெண் சாமுவேலைப் பார்த்தவுடன் மகா சத்தமாய் அலறி, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தானே சவுல் என்றாள். 13 ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ பார்க்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த பெண்: முதியவர் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள். 14 அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனிதன் எழும்பி வருகிறான் என்றாள்; அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்து கொண்டு தரைவரை முகங்குனிந்து வணங்கினான்.

  17. 8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகர்களும், விபசாரக்காரர்களும், சூனியக்காரர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

  18. 11 அப்பொழுது பார்வோன் ஞானிகளையும், சூனியக்காரர்களையும் அழைத்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள். 12 அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் பாம்புகளாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கியது.

  19. 26 “யாதொன்றையும் இரத்தத்துடன் சாப்பிடவேண்டாம். குறிகேட்காமலும், நாள்பார்க்காமலும் இருப்பீர்களாக.

  20. 6 “ஜோதிடம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் பின்பற்றி கெட்டுப்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோகச் செய்வேன்.

  21. 9 சந்ததி சேதமும் விதவையிருப்பும் ஆகிய இவ்விரண்டும் உனக்குச் சடிதியாக ஒரே நாளில் வரும்; உன் திரளான சூனியங்களினிமித்தமும், உன் வெகுவான மந்திரவித்தைகளினிமித்தமும் அவைகள் பூரணமாக உன்மேல் வரும்.

  22. 16 நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்திற்குப் போகும்போது குறிசொல்லுகிற ஆவியினால், குறிசொல்லி தன் எஜமான்களுக்கு அதிக வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் ஒரு பெண் எங்களுக்கு எதிரே வந்தாள். 17 அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனிதர்கள் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர்கள், இரட்சிப்பின் வழியை நமக்குத் தெரிவிக்கிறவர்கள் என்று சத்தமாக சொன்னாள். 18 அவள் பல நாட்கள் இப்படியே செய்துவந்தாள். பவுல் கோபமடைந்து, திரும்பிப்பார்த்து: நீ இவளைவிட்டு வெளியே போ என்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளைக் கொடுக்கிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அப்பொழுதே அந்த ஆவி அவளைவிட்டு வெளியேபோனது. 19 அவளுடைய எஜமான்கள் தங்களுடைய வருமானத்திற்கான நம்பிக்கை போய்விட்டதால், பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோனார்கள்.

  23. 13 அப்படியே சவுல் யெகோவாவுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், யெகோவாவுக்குச் செய்த தன்னுடைய துரோகத்தினாலும், அவன் யெகோவாவை தேடாமல் குறி சொல்லுகிறவர்களைக் கேட்கும்படி தேடியதாலும் செத்துப்போனான். 14 அதற்காக அவர் அவனைக் கொன்று, ராஜ்ஜியபாரத்தை ஈசாயின் மகனாகிய தாவீதிடம் ஒப்படைத்தார்.

  24. 2 அப்பொழுது ராஜா தன் கனவுகளைத் தனக்குத் தெரிவிப்பதற்காக ஞானிகளையும் சோதிடர்களையும் மாயவித்தைக்காரர்களையும் கல்தேயர்களையும் அழைக்கச் சொன்னான்; அவர்கள் வந்து, ராஜசமுகத்தில் நின்றார்கள்.

  25. 14 ஜீவமரத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள்வழியாக நகரத்திற்குள் செல்வதற்கும் அவருடைய கட்டளைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். 15 நாய்களும், சூனியக்காரர்களும், விபசாரக்காரர்களும், கொலைபாதகர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற அனைவரும் வெளியே இருப்பார்கள்.

  26. 20 அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்றமனிதர்கள், பேய்களையும் பொன் வெள்ளி செம்பு கல் மரம் போன்றவைகளால் செய்யப்பட்டவைகளும், பார்க்கவும் கேட்கவும் நடக்கவும் முடியாதவைகளுமாக இருக்கிற விக்கிரகங்களையும்; வணங்காமல் இருப்பதற்குத் தங்களுடைய கைகளின் செய்கைகளைவிட்டு மனம்திரும்பவும் இல்லை; 21 தங்களுடைய கொலைபாதகங்களை, தங்களுடைய சூனியங்களை, தங்களுடைய வேசித்தனங்களை, தங்களுடைய களவுகளைவிட்டும் மனம்திரும்பவில்லை.

  27. 23 விளக்குவெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை;

    மணமகன் மற்றும் மணமகளுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை.

    உன்னுடைய வியாபாரிகள் உலகத்தின் முக்கிய நபர்களாக இருந்தார்களே;

    உன் சூனியத்தால் எல்லா நாட்டு மக்களும் மோசம்போனார்களே.

  28. 3 சாமுவேல் இதற்கு முன்பே இறந்துபோனான்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவனுக்குத் துக்கங்கொண்டாடி, அவனுடைய ஊராகிய ராமாவிலே அவனை அடக்கம் செய்தார்கள். சவுல் இறந்தவர்களோடும், ஆவிகளோடும் பேசுகிறவர்களை தேசத்தில் இல்லாதபடித் துரத்திவிட்டான்.

  29. 17 அவர்கள் தங்கள் மகன்களையும் தங்கள் மகள்களையும் அக்கினியில் சுட்டெரித்துப்போட்டு, குறிகேட்டு சகுனங்கள் பார்த்து, யெகோவாவுக்குக் கோபமுண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்கிறதற்குத் தங்களை விற்றுப்போட்டார்கள்.

  30. 1 எகிப்தைக் குறித்த செய்தி. இதோ, யெகோவா வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்திற்கு வருவார்; அப்பொழுது எகிப்தின் சிலைகள் அவருக்கு முன்பாகக் குலுங்கும், எகிப்தின் இருதயம் தனக்குள்ளே கரைந்து போகும். 2 சகோதரனுடன் சகோதரனும், சிநேகிதனுடன் சிநேகிதனும், பட்டணத்துடன் பட்டணமும், தேசத்துடன் தேசமும் போர்செய்வதற்காக, எகிப்தியரை எகிப்தியருடன் போரிட வைப்பேன். 3 அதினால் எகிப்தியருடைய ஆவி அவர்களுக்குள் சோர்ந்துபோகும்; அவர்கள் ஆலோசனையை அழிந்துபோகச்செய்வேன்; அப்பொழுது சிலைகளையும், மந்திரவாதிகளையும், இறந்தவர்களிடம் பேசுகிறவர்களையும், குறிசொல்கிறவர்களையும் தேடுவார்கள். 4 நான் எகிப்தியரைக் கடினமான அதிபதியின் கையில் ஒப்புவிப்பேன்; கொடூரமான ராஜா அவர்களை ஆளுவான் என்று சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் சொல்கிறார்.

  31. 20 யெகோவா கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவனுடைய வேலைக்காரர்களின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி, நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாக மாறியது. 21 நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போனது; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியர்களுக்கு முடியாமற்போனது; எகிப்து தேசம் எங்கும் இரத்தமாக இருந்தது. 22 எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்; யெகோவா சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவர்களுடைய வார்த்தைகளை கேட்காமற்போனான். 23 பார்வோன் இதையும் சிந்திக்காமல், தன்னுடைய வீட்டிற்குத் திரும்பிப்போனான். 24 நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர்கள் எல்லோரும் நதியோரத்தில் ஊற்று தோண்டினார்கள்.

  32. 17 மனிதகுமாரனே, தங்களுடைய இருதயத்தில் இருக்கிறதையே எடுத்து, தீர்க்கதரிசனம்சொல்லுகிற உன்னுடைய மக்களின் மகள்களுக்கு எதிராக உன்னுடைய முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு எதிராக தீர்க்கதரிசனம் சொல்லி, சொல்லவேண்டியது என்னவென்றால்: 18 ஆத்துமாக்களை வேட்டையாடும்படி எல்லா கைகளுக்கும் காப்புகளைத் தைத்து, அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டாக்குகிறவர்களுக்கு ஐயோ, நீங்கள் என்னுடைய மக்களின் ஆத்துமாக்களை வேட்டையாடி, அவைகளை உங்களுக்கு உயிரோடு காப்பாற்றுவீர்களோ? 19 சாகத்தகாத ஆத்துமாக்களைக் கொல்வதற்கும், உயிரோடு இருக்கத்தகாத ஆத்துமாக்களை உயிரோடு காப்பாற்றுவதற்குமாக நீங்கள் பொய்யைக் கேட்கிற என்னுடைய மக்களுக்குப் பொய் சொல்லுகிறதினாலே சில கைப்பிடியளவு வாற்கோதுமைக்காகவும் அப்பத்துண்டுகளுக்காகவும் என்னை என்னுடைய மக்களுக்குள்ளே பரிசுத்தக்குலைச்சலாக்குவீர்களோ என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 20 ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீங்கள் ஆத்துமாக்களைப் பறக்கடிக்கும்படி வேட்டையாடுகிற உங்களுடைய காப்புகளுக்கு விரோதமாக நான் வந்து, அவைகளை உங்களுடைய புயங்களிலிருந்து பிடுங்கிக்கிழித்து, நீங்கள் பறக்கடிக்க வேட்டையாடுகிற ஆத்துமாக்களை நான் விடுதலைசெய்து, 21 உங்களுடைய தலையணைகளைக் கிழித்து, என் மக்களை உங்களுடைய கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அவர்கள் இனி வேட்டையாடப்படும்படி உங்களுடைய கைகளில் இருக்கமாட்டார்கள்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள். 22 நான் சஞ்சலப்படுத்தாத நீதிமானின் இருதயத்தை நீங்கள் வீணாக முறியச்செய்தபடியினாலும், துன்மார்க்கன் தன்னுடைய பொல்லாத வழியைவிட்டுத் திரும்பவும் நான் அவனை உயிரோடு காக்கவும் கூடாதபடிக்கு நீங்கள் அவனுடைய கைகளைத் திடப்படுத்தினபடியினாலும், 23 நீங்கள் இனி பொய்யானதைப் பார்ப்பதுமில்லை, சாஸ்திரம் பார்ப்பதுமில்லை; நான் என்னுடைய மக்களை உங்களுடைய கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.

  33. 6 அவர்கள் பாப்போ பட்டணம்வரைக்கும் தீவைக் கடந்துவந்தபோது, பர்யேசு என்னும் பெயர்கொண்ட மாயவித்தைக்காரனும் கள்ளத்தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைப் பார்த்தார்கள். 7 அவன் விவேகமுள்ள மனிதனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியோடு இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைத்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாக இருந்தான். 8 மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பெயரையுடைய எலிமா என்பவன், அதிபதியை இயேசுவை விசுவாசிக்காமல் திசைதிரும்பும்படி செய்ய, அவர்களோடு எதிர்த்து நின்றான். 9 அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவனாக அவனை உற்றுப்பார்த்து: 10 எல்லாக் கபடமும் அக்கிரமமும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, உண்மைக்கெல்லாம் பகைவனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதை நிறுத்தமாட்டாயோ? 11 இதோ, இப்பொழுதே கர்த்தருடைய கை உன்மேல் வந்திருக்கிறது, கொஞ்சகாலம் நீ சூரியனைப் பார்க்காமல் குருடனாக இருப்பாய் என்றான். உடனே அவன் தன் கண்பார்வையை இழந்தான்; அவன் தடுமாறி, தனக்கு கை கொடுக்கிறவர்களைத் தேடினான். 12 அப்பொழுது அதிபதி நடந்தவைகளைப் பார்த்து, கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான்.

  34. 5 மேலும் யெகோவா மோசேயிடம் நீ ஆரோனை நோக்கி:” நீ உன்னுடைய கையில் இருக்கிற கோலை நதிகள்மேலும், வாய்க்கால்கள்மேலும், குளங்கள்மேலும் நீட்டி, எகிப்துதேசத்தின்மேல் தவளைகளை வரும்படிச் செய் என்று சொல்” என்றார். 6 அப்படியே ஆரோன் தன்னுடைய கையை எகிப்திலுள்ள தண்ணீர்கள்மேல் நீட்டினான்; அப்பொழுது தவளைகள் வந்து, எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது. 7 மந்திரவாதிகளும் தங்களுடைய மந்திரவித்தையினால் அப்படிச் செய்து, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரச்செய்தார்கள்.

  35. 6 தன் மகனைப் பலியாக அக்கினியில் சுட்டெரித்து, நாள் நட்சத்திரம் பார்க்கிறவனுமாயிருந்து, ஜோதிடம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, யெகோவாவுக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாகச் செய்தான்.

  36. 9 பொய்யானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என்னுடைய கை எதிராக இருக்கும்; அவர்கள் என்னுடைய மக்களின் சங்கத்தில் இருப்பதுமில்லை; இஸ்ரவேல் மக்களின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை; இஸ்ரவேல் தேசத்திற்குள் நுழைவதுமில்லை; அப்பொழுது நான் யெகோவாகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள்.

  37. 2 சுரூபங்கள் பொய்யானதைச் சொல்லிற்று; குறிசொல்லுகிறவர்கள் பொய்யை கண்டார்கள்; சொப்பனக்காரர்கள் வீணானதைச் சொல்லி, பயனில்லாததைச் சொல்லி தேற்றினார்கள்; ஆகையால் மக்கள் ஆடுகளைப்போல சிதறி, மேய்ப்பனில்லாததினால் சிறுமைப்பட்டார்கள்.

  38. 5 நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரர்களுக்கும், விபசாரக்காரர்களுக்கும், பொய் சத்தியம் செய்கிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதவைகளும், திக்கற்றபிள்ளைகளுமாகிய கூலிக்காரர்களின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கும், அநியாயம் செய்கிறவர்களுக்கும் விரோதமாக முக்கிய சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.