48 Bible Verses About False Prophets

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

Bible Verses About False Prophets
  1. 15 கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடம் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பேராசையுள்ள ஓநாய்கள். 16 அவர்களுடைய செயல்களினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சைப் பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? 17 அப்படியே நல்லமரமெல்லாம் நல்லகனிகளைக் கொடுக்கும்; கெட்டமரமோ கெட்டகனிகளைக் கொடுக்கும். 18 நல்லமரம் கெட்டகனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்டமரம் நல்லகனிகளைக் கொடுக்கமாட்டாது. 19 நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, நெருப்பிலே போடப்படும். 20 ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். 21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. 22 அந்த நாளில் அநேகர் என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொன்னோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 23 அப்பொழுது, நான் ஒருபோதும் உங்களை அறியவில்லை; அக்கிரமச்செய்கைக்காரர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

    24 ஆகவே, நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனிதனுக்கு ஒப்பிடுவேன். 25 பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. 26 நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனிதனுக்கு ஒப்பிடப்படுவான். 27 பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.

  2. 13 சமாரியாவின் தீர்க்கதரிசிகளிலோ மதிகேட்டைக் கண்டேன்; பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இஸ்ரவேல் என்னும் என் மக்களை மோசம்போக்கினார்கள். 14 எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்செய்து, வஞ்சகமாய் நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பைவிட்டுத் திரும்பாமல் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள்; அவர்கள் எல்லோரும் எனக்குச் சோதோமைப்போலவும், அதின் குடிமக்கள் கொமோராவைப்போலவும் இருக்கிறார்கள். 15 ஆதலால் சேனைகளின் யெகோவா தீர்க்கதரிசிகளைக்குறித்து: இதோ, நான் அவர்களுக்குச் சாப்பிட எட்டியையும், குடிக்க விஷம் கலந்த தண்ணீரையும் கொடுப்பேன்; எருசலேமின் தீர்க்கதரிசிகளிலிருந்து மாயமானது தேசமெங்கும் பரவிற்றோ என்று சொல்லுகிறார். 16 உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமையடையச் செய்கிறார்கள்; யெகோவாவுடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 17 அவர்கள் என்னை அசட்டை செய்கிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று யெகோவா சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல்; தங்கள் இருதயத்தின் கடினத்தில் நடக்கிற அனைவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள். 18 யெகோவாவுடைய ஆலோசனையில் நின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்?

  3. 1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் மக்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் அழிவிற்குரிய வேதப்புரட்டுகளைத் தந்திரமாக நுழையப்பண்ணி, தங்களை விலைக்கொடுத்து வாங்கின ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்கு வேகமான அழிவை வரவழைத்துக்கொள்வார்கள். 2 அவர்களுடைய தீயசெய்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்களால் சத்தியப்பாதை அவமானப்படும். 3 பொருளாசை உள்ளவர்களாக, தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; ஆதிகாலம்முதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை காத்திருக்காது, அவர்களுடைய அழிவு தாமதிக்காது. 4 பாவம்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; 5 முழு உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்த நோவாவையும் மற்ற ஏழு நபர்களையும் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் பெரும்வெள்ளத்தை வரப்பண்ணி; 6 சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, தண்டனைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாக நடப்பவர்களுக்கு அவைகளை உதாரணமாக வைத்து; 7 அக்கிரமக்காரர்களோடு வாழ்கின்றபோது அவர்களுடைய காமவிகார செயல்களினால் வருத்தப்பட்டு, 8 நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமச் செய்கைகளைப் பார்த்து, கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க; 9 கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையில் இருந்து இரட்சிக்கவும், அக்கிரமக்காரர்களை தண்டனைக்குரியவர்களாக நியாயத்தீர்ப்பின் நாளுக்காக வைக்கவும் அறிந்திருக்கிறார். 10 விசேஷமாக அசுத்தமான ஆசைகளோடு சரீரத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தரின் அதிகாரத்தை அவமதிக்கிறவர்களை அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரமானவர்கள், அகங்காரம் நிறைந்தவர்கள், மகத்துவங்களை அவமானப்படுத்த பயப்படாதவர்கள். 11 அதிக பெலனையும் வல்லமையையுமுடைய தேவதூதர்கள் முதலாகக் கர்த்தருக்கு முன்பாக அவர்களை அவமானமாகக் குற்றப்படுத்தமாட்டார்களே. 12 இவர்களோ பிடிபட்டு அழிக்கப்படுவதற்கு உண்டான புத்தி இல்லாத மிருகஜீவன்களைப்போலத் தங்களுக்குத் தெரியாதவைகளை அவமானப்படுத்தி, தங்களுடைய தீயச்செயலினால் கெட்டு, அழிந்து, அநீதீயின் பலனை அடைவார்கள். 13 இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பம் என்று நினைத்து, தங்களுடைய வஞ்சனைகளில் உல்லாசமாக வாழ்ந்து, உங்களோடு விருந்து சாப்பிடும்போது கறைகளாகவும் களங்கமாகவும் இருக்கிறார்கள்; 14 விபசார மயக்கத்தினால் நிறைந்தவர்களும், பாவத்தைவிட்டு ஓயாதவைகளுமாக இருக்கிற கண்களை உடையவர்கள்; உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாகப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் குழந்தைகள். 15 செம்மையான பாதையைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப் போனவர்கள்; அவன் அநீதியின் கூலியை விரும்பி, 16 தன்னுடைய அக்கிரமத்திற்காகக் கடிந்து கொள்ளப்பட்டான்; பேசாதக் கழுதை மனிதர்களின் பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது. 17 இவர்கள் தண்ணீர் இல்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடிபட்டு ஓடுகிற மேகங்களுமாக இருக்கிறார்கள்; எப்பொழுதும் உள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. 18 வஞ்சகமாக நடக்கிறவர்களிடம் இருந்து அரிதாகத் தப்பினவர்களிடம் இவர்கள் பெருமையான வீண்வார்த்தைகளைப் பேசி, சரீர இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாகப் பிடிக்கிறார்கள். 19 தாங்களே தீமைக்கு அடிமைகளாக இருந்தும், அவர்களுக்குச் சுதந்திரத்தை வாக்குத்தத்தம்பண்ணுகிறார்கள்; எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே. 20 கர்த்தரும் இரட்சகருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மீண்டும் அவைகளில் சிக்கிக்கொண்டு அவற்றால் ஆட்கொள்ளப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையைவிட அதிக தீமையுள்ளதாக இருக்கும். 21 அவர்கள் நீதியின் பாதையை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கட்டளையைவிட்டுவிலகுவதைவிட, அதை அறியாமல் இருந்தார்களானால் அவர்களுக்கு நலமாக இருக்கும். 22 நாய் தான் கக்கினதை சாப்பிடவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட உண்மையான பழமொழியின்படியே அவர்களுக்கு நடந்தது.

  4. 18 உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரர்களிடத்திலிருந்து எழும்பச்செய்து, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். 19 என் பெயராலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன். 20 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தைகளை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தெய்வங்களின் பெயராலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். 21 யெகோவா சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில், 22 ஒரு தீர்க்கதரிசி யெகோவாவின் நாமத்தினால் சொல்லும் காரியம் நடக்காமலும் செயல்படாமலும் போனால், அது யெகோவா சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.

  5. 1 பிரியமானவர்களே, உலகத்தில் அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்துப்பாருங்கள். 2 தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாம் என்றால்: சரீரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை செய்கிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. 3 சரீரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை செய்யாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. 4 பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை வென்றீர்கள்; ஏனென்றால், உலகத்தில் இருக்கிறவனைவிட உங்களுக்குள் இருக்கிறவர் பெரியவர். 5 அவர்கள் உலகத்திற்குரியவர்கள், ஆகவே, உலகத்திற்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும். 6 நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாகாதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி எதுவென்றும் ஏமாற்றும் ஆவி எதுவென்றும் அறிந்திருக்கிறோம்.

  6. 13 அப்பொழுது நான்: ஆ யெகோவாவாகிய ஆண்டவரே, இதோ, நீங்கள் பட்டயத்தைக் காண்பதில்லை, உங்களுக்குப் பஞ்சமும் வருவதில்லை; உறுதியான சமாதானத்தையே இவ்விடத்தில் உங்களுக்குத் தருவோமென்றார் என்று தீர்க்கதரிசிகள் அவர்களுக்குச் சொல்லுகிறார்களே என்றேன். 14 அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: தீர்க்கதரிசிகள் என் பெயரைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அவர்களுடன் பேசினதுமில்லை; அவர்கள் பொய்யான தரிசனத்தையும், பொய்யான சகுனத்தையும், இல்லாத விசேஷத்தையும், தங்கள் இருதயத்தின் பொய்யையுமே, உங்களுக்குத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள். 15 ஆதலால், நான் அனுப்பாதிருந்தும், என் பெயரைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இந்தத் தேசத்தில் பட்டயமும் பஞ்சமும் வருவதில்லையென்கிற தீர்க்கதரிசிகளைக்குறித்து: இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் இறப்பார்கள். 16 அவர்களிடத்தில் தீர்க்கதரிசனம் கேட்கும் மக்களும், எருசலேமின் வீதிகளில் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்து, அவர்களும் அவர்கள் மனைவிகளும், மகன்களும், மகள்களும் அடக்கம்செய்வாரில்லாமல் கிடப்பார்கள்; அவர்களுடைய பொல்லாப்பை அவர்கள்மேல் வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

  7. 1 “உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி: 2 நீங்கள் அறியாத வேறே தெய்வங்களைப் பின்பற்றி, அவர்களை வணங்குவோம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாகச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும், 3 அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேட்காதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய யெகோவாவிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புசெலுத்துகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படி உங்கள் தேவனாகிய யெகோவா உங்களைச் சோதிக்கிறார். 4 நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, அவருடைய சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக. 5 அந்தத் தீர்க்கதரிசியும், அந்தச் சொப்பனக்காரனும் கொலைசெய்யப்படக்கடவன்; நீங்கள் நடக்கும்படி உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்கு விதித்த வழியைவிட்டு உங்களை விலக்கும்படி, அவன், உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்தவரும் உங்களை அடிமைத்தன வீட்டிலிருந்து நீங்கலாக்கி மீட்டுக்கொண்டவருமான உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமான துரோகப்பேச்சைப் பேசினான்; இப்படிப்பட்ட தீமையை உங்களிடத்திலிருந்து விலக்குவீர்களாக.

  8. 3 பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, சீடர்கள் அவரிடத்தில் தனிமையில் வந்து: இவைகள் எப்பொழுது நடக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவிற்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். 4 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; 5 ஏனென்றால், அநேகர் வந்து, என் நாமத்தை வைத்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை ஏமாற்றுவார்கள். 6 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளெல்லாம் நடக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. 7 மக்களுக்கு விரோதமாக மக்களும், ராஜ்யத்திற்கு விரோதமாக ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். 8 இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். 9 அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்: என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லா மக்களாலும் பகைக்கப்படுவீர்கள். 10 அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். 11 அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை ஏமாற்றுவார்கள். 12 அக்கிரமம் பெருகுவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும். 13 இறுதிவரை நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

  9. 28 ஆகவே, உங்களைக்குறித்தும் தேவன், தம்முடைய சொந்த இரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவியானவர் உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை எல்லாவற்றையும்குறித்தும், எச்சரிக்கையாக இருங்கள். 29 நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிய ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். 30 உங்களிலும் சிலர் எழும்பி, சீடர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி தவறானவைகளைப் போதிப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். 31 எனவே, நான் மூன்று வருடங்கள் இரவும் பகலும் கண்ணீரோடு இடைவிடாமல் உங்கள் அனைவருக்கும் புத்திச் சொன்னதை நினைத்து விழித்திருங்கள். 32 இப்பொழுதும் சகோதரர்களே, உங்களுடைய பக்தி பெருகவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்கு உரிமைப்பங்கைக் கொடுக்கவும் வல்லவராக இருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்திற்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.

  10. 13 அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தை அணிந்துகொண்டவர்களாக இருக்கிறார்கள். 14 அது ஆச்சரியம் இல்லை, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தை அணிந்துகொள்வானே. 15 எனவே அவனுடைய ஊழியக்காரர்களும் நீதியின் ஊழியக்காரர்களுடைய வேஷத்தை அணிந்துகொண்டால் அது ஆச்சரியம் இல்லையே; அவர்கள் முடிவு அவர்கள் செய்கைகளைப் பொருத்திருக்கும்.

  11. 25 சொப்பனங்கண்டேன், சொப்பனங்கண்டேன் என்று, என் பெயரைச் சொல்லிப் பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகள் சொல்லுகிறதைக் கேட்டேன். 26 எதுவரைக்கும் இப்படியிருக்கும்? பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் இருதயத்தில் ஏதாகிலுமுண்டோ? இவர்கள் தங்கள் இருதயத்தின் வஞ்சகத்தையே தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறவர்கள். 27 என் மக்களின் முற்பிதாக்கள் பாகாலுக்காக என் பெயரை மறந்ததுபோல, இவர்கள் தங்கள் அயலாருக்கு விவரிக்கிற தங்கள் சொப்பனங்களினால் என் பெயரை அவர்கள் மறக்கும்படி செய்யப்பார்க்கிறார்கள். 28 சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக; என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக; கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று யெகோவா சொல்லுகிறார். 29 என் வார்த்தை நெருப்பைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று யெகோவா சொல்லுகிறார். 30 ஆகையால், இதோ, ஒவ்வொருவராய்த் தன்தன் அயலாரிடத்தில் என் வார்த்தையைத் திருட்டுத்தனமாய் எடுக்கிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று யெகோவா சொல்லுகிறார். 31 இதோ, தங்கள் நாவின் சொல்லையே வழங்கி: அவர் அதை சொன்னார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று யெகோவா சொல்லுகிறார். 32 இதோ, பொய்ச்சொப்பனங்களைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அவைகளை விவரித்து, என் மக்களைத் தங்கள் பொய்களினாலும், தங்கள் வீம்புகளினாலும், மோசம்போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று யெகோவா சொல்லுகிறார்; நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்கள் இந்த மக்களுக்கு ஒரு பிரயோஜனமாய் இருப்பதுமில்லை என்று யெகோவா சொல்லுகிறார்.

  12. 23 அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாவது சொன்னால் நம்பாதீர்கள். 24 ஏனென்றால், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். 25 இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். 26 ஆகவே: அதோ, வனாந்திரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாமலிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதீர்கள். 27 மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனிதகுமாரனுடைய வருகையும் இருக்கும். 28 பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.

  13. 3 ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவி கொடுக்காதவர்களாகி, தங்களுடைய சுயவிருப்பங்களுக்குத் தகுந்த போதகர்களைத் தங்களுக்கு மிகுதியாக சேர்த்துக்கொண்டு. 4 சத்தியத்திற்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகும் காலம் வரும்.

  14. 11 பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்புவதைப் பார்த்தேன்; அது ஒரு ஆட்டுக்குட்டியைப்போல இரண்டு கொம்புகளை உடையதாக இருந்து, இராட்சசப் பாம்பைப்போலப் பேசினது. 12 அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடத்திக்காட்டி, மரணத்திற்குரிய காயத்திலிருந்தும் குணமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதில் வாழும் மக்களையும் வணங்கும்படிச் செய்தது. 13 அன்றியும், அது மனிதர்களுக்கு முன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணும்விதமாகப் பெரிய அற்புதங்களை நடத்திக்காட்டி, 14 மிருகத்தின் முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட அடையாளங்களினாலே பூமியின் மக்களை ஏமாற்றி, வாளினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு உருவம் உண்டாக்கவேண்டும் என்று பூமியின் மக்களுக்குச் சொன்னது. 15 மேலும் அந்த மிருகத்தின் உருவம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் உருவத்தை வணங்காத எல்லோரையும் கொலைசெய்வதற்காகவும், மிருகத்தின் உருவத்திற்கு சுவாசத்தைக் கொடுக்கும்படி அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.

  15. 6 உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாகவிட்டு, வேறொரு வித்தியாசமான நற்செய்திக்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; 7 வேறொரு நற்செய்தி இல்லையே; சிலர் உங்களைக் கலங்கப்படுத்தி, கிறிஸ்துவினுடைய நற்செய்தியை மாற்ற விரும்புகிறார்கள். 8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியைத்தவிர, நாங்களோ அல்லது வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனோ, வேறொரு நற்செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாக இருப்பான். 9 முன்பே சொன்னதுபோல மீண்டும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்தியைத்தவிர வேறொரு நற்செய்தியை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாக இருப்பான்.

  16. 3 ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வார்த்தைகளையும், தேவபக்திக்குரிய உபதேசங்களையும் ஏற்றுக்கொள்ளாமல், மாறுபாடான உபதேசங்களைப் போதிக்கிறவனானால், 4 அவன் பெருமை உள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கமும், வாக்குவாதமும் பண்ணுகிற நோய்கொண்டவனுமாக இருக்கிறான்; அவைகளினாலே பொறாமையும், சண்டையும், அவதூறுகளும், பொல்லாத சந்தேகங்களும் உண்டாகி, 5 கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழில் என்று நினைக்கிறவர்களுமாக இருக்கிற மனிதர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களைவிட்டு விலகி இரு. 6 போதும் என்கிற மனதோடுகூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.

  17. 19 அவர்கள் உங்களை நோக்கி: ஜோதிடம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணுவென்று ஓதுகிற குறி சொல்கிறவர்களிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, மக்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ? 20 வேதத்தையும் சாட்சி புத்தகத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமிருக்காது.

  18. 17 அன்றியும் சகோதரர்களே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு எதிராகப் பிரிவினைகளையும், இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருந்து, அவர்களைவிட்டு விலகவேண்டும் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 18 அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கு ஊழியம் செய்யாமல் தங்களுடைய வயிற்றுக்கே ஊழியம் செய்து, நயமான மொழிகளாலும், இனிய பேச்சினாலும், கபடு இல்லாதவர்களின் இருதயங்களை ஏமாற்றுகிறவர்களாக இருக்கிறார்கள்.

  19. 11 மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரன்மேலுள்ள விசுவாசத்திலும் அறிவிலும் ஒன்றுபட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவிற்குத்தக்கதாக தேறின விசுவாசியாகும் வரைக்கும், 12 பரிசுத்தவான்கள் சீர்படுத்தப்படுவதற்காகவும், நற்செய்தி ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய ஆலயமானது பக்தியில் வளர்ச்சி அடைவதற்காகவும், 13 அவர், சிலரை அப்போஸ்தலர்களாகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகர்களாகவும், சிலரை மேய்ப்பர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். 14 நாம் இனிக் குழந்தைகளைப்போல இல்லாமல், மனிதர்களுடைய வஞ்சகமான தந்திரமுள்ள போதனையாகிய பலவிதமான காற்றினாலே, அலைகளினால் அடிபட்டு அலைகிறவர்களாக இல்லாமல், 15 அன்புடன் சத்தியத்தில் நடந்து, தலையாகிய கிறிஸ்துவிற்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாக இருப்பதற்காக அப்படிச் செய்தார். 16 அவராலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாக இருக்கிற எல்லா பாகங்களினாலும் சரியாகச் சேர்த்து இணைக்கப்பட்டு, ஒவ்வொரு சரீர பாகங்களும் தன்தன் அளவிற்குத்தக்கதாக வேலை செய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவளர்ச்சியை உண்டாக்குவதற்காகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது.

  20. 1 ஆனாலும், ஆவியானவர் வெளிப்படையாக சொல்லுகிறபடி, கடைசிகாலத்தில் மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் ஏமாற்றுகிற ஆவிகளுக்கும், பிசாசுகளின் உபதேசங்களுக்கும் கீழ்ப்படிந்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள். 2 திருமணம் செய்யக்கூடாது என்றும், 3 விசுவாசிகளும், சத்தியத்தை அறிந்தவர்களும் நன்றி செலுத்தி அனுபவிக்கும்படி தேவன் படைத்த உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்றும் அந்தப் பொய்யர்கள் கட்டளையிடுவார்கள்.

  21. 30 திகைத்துத் திடுக்கிடத்தக்க காரியம் தேசத்தில் நடந்துவருகிறது. 31 தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள்; இப்படியிருப்பது என் மக்களுக்குப் பிரியமாயிருக்கிறது; ஆனாலும் முடிவில் என்ன செய்வீர்கள்?

  22. 3 மாறுபாடான உபதேசங்களைப் போதிக்காதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவளர்ச்சிக்கு ஏதுவாக இல்லாமல், வாக்குவாதங்களுக்கு ஏதுவாக இருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனிக்காதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்படி, 4 நான் மக்கெதோனியாவிற்குப் போகும்போது, உன்னை எபேசு பட்டணத்தில் இருக்கக் கேட்டுக்கொண்டபடியே செய். 5 இந்த கட்டளையின் பொருள் என்னவென்றால், சுத்தமான இருதயத்திலும் நல்லமனச்சாட்சியிலும் மாயமில்லாத விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே. 6 இவைகளைச் சிலர் பார்க்காமல் வீண்பேச்சுக்கு இடம்கொடுத்து விலகிப்போனார்கள். 7 தாங்கள் சொல்லுகிறதும், தாங்கள் உறுதியாக நம்புகிறதும் என்னவென்றும் தெரியாமல், வேதபண்டிதர்களாக இருக்க விரும்புகிறார்கள்.

  23. 16 சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தி உள்ளவர்கள் ஆவார்கள்; 17 அவர்களுடைய வார்த்தை அழுகல் நோயைப்போல பரவும்; இமெனேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்; 18 அவர்கள் சத்தியத்தைவிட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்துவிட்டதென்று சொல்லி, சிலருடைய நம்பிக்கையை அழித்துப்போடுகிறார்கள். 19 ஆனாலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவன் என்பதும், அதற்கு முத்திரையாக இருக்கிறது.

  24. 20 ஆனாலும், உன்மேல் எனக்குக் குறை உண்டு; என்னவென்றால், தன்னைத் தீர்க்கதரிசி என்று சொல்லுகிற யேசபேல் என்னும் பெண், என்னுடைய ஊழியக்காரர்கள் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைச் சாப்பிடவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை ஏமாற்ற, நீ அவளுக்கு இடம் கொடுக்கிறாய்.

  25. 1 யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனிதகுமாரனே, தீர்க்கதரிசனம் சொல்லுகிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ தீர்க்கதரிசனம் சொல்லி, தங்களுடைய இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவர்களுடன் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால்: யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். 3 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறதாவது: தாங்கள் ஒன்றும் பார்க்காமல் இருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ, 4 இஸ்ரவேலே, உன்னுடைய தீர்க்கதரிசிகள் வனாந்திரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். 5 நீங்கள் யெகோவாவுடைய நாளிலே போரிலே நிலைநிற்கும்படி, திறப்புகளில் ஏறினதுமில்லை; இஸ்ரவேல் வீட்டாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை. 6 யெகோவா தங்களை அனுப்பாமல் இருந்தும், யெகோவா சொன்னாரென்று சொல்லி, அவர்கள் பொய்யானதையும், பொய்க்குறியையும் பார்த்து, காரியத்தை நிர்வாகம் செய்யலாமென்று நம்பிக்கையாக இருக்கிறார்கள். 7 நான் சொல்லாமல் இருந்தும், நீங்கள் யெகோவா சொன்னார் என்று சொல்லும்போது, பொய் தரிசனத்தைப் பார்த்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா? 8 ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் அபத்தமானதைச் சொல்லி, பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு எதிரானவர் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 9 பொய்யானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என்னுடைய கை எதிராக இருக்கும்; அவர்கள் என்னுடைய மக்களின் சங்கத்தில் இருப்பதுமில்லை; இஸ்ரவேல் மக்களின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை; இஸ்ரவேல் தேசத்திற்குள் நுழைவதுமில்லை; அப்பொழுது நான் யெகோவாகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள். 10 சமாதானம் இல்லாமல் இருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என்னுடைய மக்களை மோசம் போக்குகிறார்கள்; ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள். 11 சாரமில்லாத சாந்தைப் பூசுகிறவர்களை நோக்கி: அது இடிந்து விழுமென்று சொல்; வெள்ளமாகப் பெருகுகிற மழை பெய்யும்; மகா கல்மழையே, நீ பெய்வாய்; கொடிய புயல்காற்றும் அதைப் பிளக்கும். 12 இதோ, சுவர் விழும்போது: நீங்கள் பூசின பூச்சு எங்கே என்று சொல்வார்கள் அல்லவா?

  26. 6 அவர்கள் பாப்போ பட்டணம்வரைக்கும் தீவைக் கடந்துவந்தபோது, பர்யேசு என்னும் பெயர்கொண்ட மாயவித்தைக்காரனும் கள்ளத்தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைப் பார்த்தார்கள். 7 அவன் விவேகமுள்ள மனிதனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியோடு இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைத்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாக இருந்தான். 8 மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பெயரையுடைய எலிமா என்பவன், அதிபதியை இயேசுவை விசுவாசிக்காமல் திசைதிரும்பும்படி செய்ய, அவர்களோடு எதிர்த்து நின்றான். 9 அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவனாக அவனை உற்றுப்பார்த்து: 10 எல்லாக் கபடமும் அக்கிரமமும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, உண்மைக்கெல்லாம் பகைவனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதை நிறுத்தமாட்டாயோ? 11 இதோ, இப்பொழுதே கர்த்தருடைய கை உன்மேல் வந்திருக்கிறது, கொஞ்சகாலம் நீ சூரியனைப் பார்க்காமல் குருடனாக இருப்பாய் என்றான். உடனே அவன் தன் கண்பார்வையை இழந்தான்; அவன் தடுமாறி, தனக்கு கை கொடுக்கிறவர்களைத் தேடினான். 12 அப்பொழுது அதிபதி நடந்தவைகளைப் பார்த்து, கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான்.

  27. 10 மேலும் அவர்களை ஏமாற்றின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் இருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் எல்லாக் காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.

  28. 11 பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவிற்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார். 12 அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.

  29. 8 உலக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அது மனிதர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலக வழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப்பற்றினதல்ல.

  30. 8 நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் தோற்றத்தினாலே நாசம்பண்ணுவார். 9 அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி எல்லா பொய்யான வல்லமையோடும் அடையாளங்களோடும் அற்புதங்களோடும், 10 கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் எல்லாவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாகச் சத்தியத்தை நேசிக்க அவர்கள் மறுத்ததினால் அப்படி நடக்கும். 11 ஆகவே, சத்தியத்தை விசுவாசிக்காமல் அநீதியில் பிரியப்படுகிற எல்லோரும் தண்டனைக்குள்ளாக்கப்படும்படிக்கு, 12 அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய மாய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

  31. 16 ஆகையால், இதோ, உன்னைப் பூமியின்மேல் இல்லாமல் அகற்றிவிடுவேன்; இந்த வருடத்தில் நீ இறந்துபோவாய் என்று யெகோவா சொல்லுகிறார்; யெகோவாவுக்கு விரோதமாய்க் கலகம் ஏற்படப் பேசினாயே என்றான். 17 அப்படியே அனனியா என்கிற தீர்க்கதரிசி அவ்வருடத்தில்தானே ஏழாம் மாதத்தில் இறந்துபோனான்.

  32. 8 மேலும், உங்கள் நடுவிலிருக்கிற உங்கள் தீர்க்கதரிசிகளும் உங்கள் குறிகாரரும் உங்களை ஏமாற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள்; சொப்பனம் காணச்செய்கிற உங்கள் சொப்பனக்காரர் சொல்வதைக் கேட்காமலும் இருங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 9 அவர்கள் என் பெயரைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்; நான் அவர்களை அனுப்பவில்லை என்று யெகோவா சொல்லுகிறார்.

  33. 28 அதின் தீர்க்கதரிசிகள் பொய்யானதை பார்த்து, பொய்ச்சாஸ்திரத்தை அவர்களுக்குச் சொல்லி, யெகோவா சொல்லாமலிருந்தும், யெகோவாகிய ஆண்டவர் சொன்னாரென்று சொல்லி, அவர்களுக்குச் சாரமற்ற சாந்தைப் பூசுகிறார்கள்.

  34. 5 தங்கள் பற்களினால் கடிக்கிறவர்களாயிருந்து, சமாதானமென்று சொல்லி, தங்கள் வாய்க்கு உணவைக் கொடுக்காதவனுக்கு விரோதமாகச் சண்டைக்கு ஆயத்தமாகி, என் மக்களை மோசம்போக்குகிற தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாகக் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: 6 தரிசனம் காணமுடியாத இரவும், குறிசொல்லமுடியாத அந்தகாரமும் உங்களுக்கு வரும்; தீர்க்கதரிசிகளின்மேல் சூரியன் மறைந்து, அவர்கள்மேல் பகல் மிகவும் இருளாகப்போகும். 7 தரிசனம்பார்க்கிறவர்கள் வெட்கப்பட்டு, குறிசொல்லுகிறவர்கள் நாணமடைந்து, உத்திரவுகொடுக்கிற தேவன் இல்லாததினால் அவர்கள் அனைவரும் தங்கள் வாயை மூடிக்கொள்வார்கள்.

  35. 2 அந்நாளிலே நான் விக்கிரகங்களின் பெயரும் தேசத்தில் இல்லாதபடிக்கு அழிப்பேன்; அவைகள் இனி நினைக்கப்படுவதில்லை; தரிசனம் சொல்லுகிறவர்களையும், அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும் செய்வேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 3 இனி ஒருவன் தரிசனம் சொன்னால், அவனைப்பெற்ற அவன் தகப்பனும் தாயும் அவனை நோக்கி: நீ யெகோவாவுடைய நாமத்தைக்கொண்டு பொய்பேசுகிறதினால் நீ உயிரோடிருக்கக்கூடாது என்று சொல்லி, அவனைப்பெற்ற அவன் தகப்பனும் தாயும் அவன் தரிசனம் சொல்லும்போது அவனைக் குத்திப்போடுவார்கள். 4 அந்நாளிலே தரிசனம் சொல்லுகிற அவனவன் தான் சொன்ன தரிசனத்தினால் வெட்கப்பட்டு, பொய் சொல்லும்படிக்கு இனி கம்பளியைப் போர்த்துக்கொள்ளாமல், 5 நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைவாங்கினான் என்பான். 6 அப்பொழுது ஒருவன் அவனை நோக்கி: உன் கைகளில் இருக்கிற இந்த தழும்புகள் என்னவென்று கேட்டால், என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டதினால் உண்டானவைகள் என்பான்.

  36. 22 ஏனென்றால், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, முடிந்தவரை தெரிந்துகொள்ளப்பட்டவர்களை ஏமாற்ற அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். 23 நீங்களோ எச்சரிக்கையாக இருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.

  37. 2 நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே கணவனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியம் கொண்டிருக்கிறேன். 3 ஆனாலும், பாம்பானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை ஏமாற்றினதுபோல, உங்களுடைய மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையிலிருந்து விலகும்படி கெடுக்கப்படுமோ என்று பயந்திருக்கிறேன். 4 எப்படியென்றால், உங்களிடம் வருகிறவன் நாங்கள் பிரசங்கிக்காத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தால், அல்லது நீங்கள் பெற்றுக்கொள்ளாத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு நற்செய்தியையும் பெற்றீர்களானால், நன்றாகச் சகித்திருப்பீர்களே.

  38. 20 வேதத்தில் உள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் தீர்க்கதரிசியினுடைய சொந்த விளக்கமாக இருக்காது என்று நீங்கள் முதலில் அறியவேண்டும். 21 தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனிதர்களுடைய விருப்பத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனிதர்கள் பரிசுத்த ஆவியானவராலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.

  39. 9 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திருக்காமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவன் இல்லை, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். 10 ஒருவன் உங்களிடம் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமல் இருந்தால், அவனை உங்களுடைய வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.

  40. 3 பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதுவதற்கு நான் மிகவும் கருத்துள்ளவனாக இருக்கும்போது, பரிசுத்தவான்களுக்கு ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாகப் போராடவேண்டும் என்று, உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாகத் தெரிந்தது. 4 ஏனென்றால், நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்திற்குரியதாக மாற்றி, நம்முடைய ஒரே ஆண்டவராகிய தேவனையும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தி இல்லாதவர்களாகிய சிலர் இரகசியவழியாக நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று ஆரம்பத்திலே எழுதியிருக்கிறது.

  41. 13 அப்பொழுது, இராட்சசப் பாம்பின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலும் இருந்து தவளைகளைப்போல மூன்று அசுத்தஆவிகள் புறப்பட்டு வருவதைப் பார்த்தேன். 14 அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்கும் உள்ள ராஜாக்களை சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படி புறப்பட்டுப்போகிறது.

  42. 10 மெகதாபெயேலின் மகனாகிய தெலாயாவின் மகன் செமாயா தன்னுடைய வீட்டிலே அடைக்கப்பட்டிருக்கும்போது, நான் அவனிடத்தில் போனேன்; அப்பொழுது அவன்: நாம் இருவருமாக தேவனுடைய வீடாகிய ஆலயத்திற்குள்ளே போய், தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும்; உம்மைக் கொன்றுபோட வருவார்கள், இரவிலே உம்மைக் கொன்றுபோட வருவார்கள் என்றான். 11 அதற்கு நான்: என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை என்றேன். 12 தேவன் அவனை அனுப்பவில்லையென்றும், தொபியாவும் சன்பல்லாத்தும் அவனுக்குக் பணம்கொடுத்ததால், அவன் எனக்கு விரோதமாக அந்தத் தீர்க்கதரிசனத்தைச் சொன்னான் என்றும் அறிந்துகொண்டேன். 13 நான் பயந்து அவர்கள் சொன்னதைச்செய்து பாவம் செய்வதற்கும், என்னை அவமானப்படுத்த காரணத்தை ஏற்படுத்துவதற்கும் அவனுக்கு பணம் கொடுத்திருந்தார்கள். 14 என்னுடைய தேவனே, தொபியாவும் சன்பல்லாத்தும் செய்த இந்தச் செய்கைகளுக்குத்தகுந்ததாக நீர் அவர்களையும், நொவதியாள் என்னும் தீர்க்கதரிசியானவளையும், எனக்கு பயமுண்டாக்கப்பார்த்த மற்றத் தீர்க்கதரிசிகளையும் நினைத்துக்கொள்ளும்.

  43. 15 மூப்பனும் கனம்பொருந்தினவனுமே தலை, பொய்ப்போதகம்செய்கிற தீர்க்கதரிசியே வால். 16 இந்த மக்களை நடத்துகிறவர்கள் ஏமாற்றுக்காரர்களாகவும், அவர்களால் நடத்தப்படுகிறவர்கள் நாசமடைகிறவர்களுமாக இருக்கிறார்கள்.

  44. 11 அதின் தலைவர்கள் லஞ்சத்திற்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கைக்கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்திற்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் யெகோவாவைச் சார்ந்துகொண்டு: யெகோவா எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்.

  45. 2 சுரூபங்கள் பொய்யானதைச் சொல்லிற்று; குறிசொல்லுகிறவர்கள் பொய்யை கண்டார்கள்; சொப்பனக்காரர்கள் வீணானதைச் சொல்லி, பயனில்லாததைச் சொல்லி தேற்றினார்கள்; ஆகையால் மக்கள் ஆடுகளைப்போல சிதறி, மேய்ப்பனில்லாததினால் சிறுமைப்பட்டார்கள்.

  46. 6 இயேசு அவர்களைப் பார்த்து: பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்றார்.

  47. 20 அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாக அற்புதங்கள் செய்த கள்ளத்தீர்க்கதரிசியும் பிடிக்கப்பட்டான். தன்னுடைய அற்புதங்கள் மூலமாக மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களையும் அதின் உருவத்தை வணங்கினவர்களையும் ஏமாற்றினவன் இவனே; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடு தள்ளப்பட்டார்கள்.

  48. 13 அவர்களில், சிறியோர்முதல் பெரியோர்வரை, ஒவ்வொருவரும் பொருளாசைக்காரர்; இதுவுமல்லாமல் தீர்க்கதரிசிகள்முதல் ஆசாரியர்கள்வரை ஒவ்வொருவரும் பொய்யர்.