45 Bible Verses About Tithing

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

Bible Verses About Tithing
  1. 6 பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், கொஞ்சம் விதைக்கிறவன் கொஞ்சம் அறுப்பான், அதிகமாக விதைக்கிறவன் அதிகமாக அறுப்பான். 7 அவனவன் வருத்தத்தோடும் அல்ல, கட்டாயமாகவும் அல்ல, தன் மனதில் திட்டமிட்டபடியே கொடுக்கவேண்டும்; உற்சாகமாகக் கொடுக்கிறவனிடம் தேவன் பிரியமாக இருக்கிறார். 8 மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாகவும், எல்லாவித நல்ல செயல்களிலும் பெருகுகிறவர்களாகவும் இருப்பதற்காக, தேவன் உங்களில் எல்லாவிதமான கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராக இருக்கிறார். 9 வாரி இறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியே ஆகும். 10 விதைக்கிறவனுக்கு விதையையும், சாப்பிடுகிறதற்கு ஆகாரத்தையும் கொடுக்கிறவர் உங்களுக்கு விதையைக் கொடுத்து, அதைப் பெருகப்பண்ணி, உங்களுடைய நீதியின் விளைச்சலைப் பெருகச்செய்வார். 11 நீங்கள் எல்லா வகையிலும் செல்வந்தராகி தாராளகுணத்திலே சம்பூரணமுள்ளவர்களாவீர்கள். இதனால் தேவனுக்கு எங்கள் மூலமாக ஸ்தோத்திரமுண்டாகும்.

  2. 5 நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரர்களுக்கும், விபசாரக்காரர்களுக்கும், பொய் சத்தியம் செய்கிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதவைகளும், திக்கற்றபிள்ளைகளுமாகிய கூலிக்காரர்களின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கும், அநியாயம் செய்கிறவர்களுக்கும் விரோதமாக முக்கிய சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 6 நான் யெகோவா, நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் மக்களாகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை. 7 நீங்கள் உங்கள் முற்பிதாக்களின் நாட்கள் துவங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்; என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; நாங்கள் எந்த காரியத்தில் திரும்பவேண்டும் என்கிறீர்கள்.

    8 மனிதன் தேவனை ஏமாற்றலாமா? நீங்களோ என்னை ஏமாற்றுகிறீர்கள். எதிலே உம்மை ஏமாற்றினோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலும்தானே. 9 நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; மக்களாகிய நீங்கள் எல்லோரும் என்னை ஏமாற்றினீர்கள். 10 என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படி தசமபாகங்களையெல்லாம் பண்டகசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் மதகுகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகும்வரை உங்கள்மேல் ஆசீர்வாதத்தை பொழியச்செய்யமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப்பாருங்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 11 பூமியின் கனியை அழித்துப்போடுகிறவைகளை உங்கள் நிமித்தம் கண்டிப்பேன்; அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை, வெளியிலுள்ள திராட்சைக்கொடி பழமில்லாமற்போவதுமில்லை என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 12 அப்பொழுது எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள், தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

  3. 30 “தேசத்திலே நிலத்தின் வித்திலும், மரங்களின் பழங்களிலும், தசமபாகம் எல்லாம் யெகோவாவுக்கு உரியது; அது யெகோவாவுக்குப் பரிசுத்தமானது. 31 ஒருவன் தன் தசமபாகத்திலே எவ்வளவாவது மீட்டுக்கொள்ள விருப்பமாக இருந்தான் என்றால், அதனுடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன். 32 மேய்ப்பனின் கோலின் கீழ்ப்பட்ட ஆடுமாடுகளிலே பத்தில் ஒரு பங்காகிறதெல்லாம் யெகோவாவுக்குப் பரிசுத்தமானது. 33 அது நல்லதோ குறைபாடுள்ளதோ என்று அவன் பார்க்கவேண்டாம்; அதை மாற்றவும் வேண்டாம்; மாற்றினால், அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுக்கப்பட்டதுமாகிய இரண்டும் பரிசுத்தமாகும்; அது மீட்கப்படக்கூடாதென்று அவர்களோடே சொல்” என்றார். 34 இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லும்படி யெகோவா சீனாய்மலையில் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே.

  4. 14 இஸ்ரவேலிலே சாபத்தீடாக நேர்ந்துகொள்ளப்பட்டதெல்லாம் உனக்கு உரியதாக இருக்கும். 15 மனிதரிலும் மிருகங்களிலும் அவர்கள் யெகோவாவுக்குச் செலுத்தும் எல்லா மிருகங்களுக்குள்ளே கர்ப்பந்திறந்து பிறக்கும் யாவும் உனக்கு உரியதாக இருக்கும்; ஆனாலும் மனிதரின் முதற்பேற்றை கொல்லப்படாத நியமத்தின்படி மீட்கவேண்டும்; தீட்டான மிருகஜீவனின் தலையீற்றையும் மீட்கவேண்டும். 16 மீட்கவேண்டியவைகள் ஒரு மாதத்திற்கு மேற்பட்டதானால், உன்னுடைய மதிப்புக்கு இசைய பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி ஐந்து சேக்கல் பணத்தாலே அவைகளை மீட்கவேண்டும்; ஒரு சேக்கல் இருபது கேரா. 17 மாட்டின் தலையீற்றும், செம்மறியாட்டின் தலையீற்றும், வெள்ளாட்டின் தலையீற்றுமோ மீட்கப்படவேண்டாம்; அவைகள் பரிசுத்தமானவைகள்; அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து, அவைகளின் கொழுப்பைக் யெகோவாவுக்குச் சுகந்த வாசனையான தகனமாகத் தகனிக்கவேண்டும். 18 அசைவாட்டும் மார்புப்பகுதியைப்போலவும் வலது முன்னந்தொடையைப்போலவும் அவைகளின் இறைச்சியும் உன்னுடையதாகும். 19 இஸ்ரவேல் மக்கள் யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கிற பரிசுத்த படைப்புகளையெல்லாம் உனக்கும் உன்னுடைய மகன்களுக்கும் உன்னுடைய மகள்களுக்கும் நிரந்தர கட்டளையாகக் கொடுத்தேன்; யெகோவாவுடைய சந்நிதியில் இது உனக்கும் உன்னுடைய சந்ததிக்கும் என்றைக்கும் செல்லும் மாறாத உடன்படிக்கை” என்றார். 20 பின்னும் யெகோவா ஆரோனை நோக்கி: “அவர்களுடைய தேசத்தில் நீ ஒன்றையும் சுதந்தரித்துக்கொள்ளவேண்டாம், அவர்கள் நடுவே உனக்குப் பங்கு உண்டாயிருக்கவும் வேண்டாம்; இஸ்ரவேல் மக்கள் நடுவில் நானே உன்னுடைய பங்கும் உன்னுடைய சுதந்தரமுமாக இருக்கிறேன். 21 “இதோ, லேவியின் சந்ததி ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன். 22 இஸ்ரவேல் மக்கள் குற்றஞ்சுமந்து சாகாதபடி, இனி ஆசரிப்புக் கூடாரத்தைக் அருகில் வராமலிருக்க வேண்டும். 23 லேவியர்கள் மட்டும் ஆசரிப்புக் கூடாரத்தைச்சேர்ந்த வேலைகளைச் செய்யவேண்டும்; அவர்கள் தங்களுடைய அக்கிரமத்தைச் சுமப்பார்கள்; இஸ்ரவேல் மக்கள் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் இல்லை என்பது உங்களுடைய தலைமுறைதோறும் நிரந்தர கட்டளையாக இருக்கும். 24 இஸ்ரவேல் மக்கள் யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகிய தசமபாகத்தை லேவியர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்; ஆகையால் இஸ்ரவேல் மக்களின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரமில்லையென்று அவர்களுக்குச் சொன்னேன்” என்றார். 25 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: 26 “நீ லேவியரோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் மக்கள் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது. தசமபாகத்தில் பத்தில் ஒரு பங்கைக் யெகோவாவுக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும். 27 நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும் இந்தப் படைப்பு களத்தின் தானியத்தைப்போலும், ஆலையின் இரசத்தைப்போலும் உங்களுக்கு எண்ணப்படும். 28 இப்படியே நீங்கள் இஸ்ரவேல் மக்கள் கையில் வாங்கும் தசமபாகமாகிய உங்களுடைய பங்குகளிலெல்லாம் நீங்களும் யெகோவாவுக்கு என்று ஒரு படைப்பை ஏறெடுத்துப் படைத்து, அந்தப் படைப்பை ஆசாரியனாகிய ஆரோனுக்குக் கொடுக்கவேண்டும். 29 உங்களுக்குக் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு காணிக்கையிலுமுள்ள சிறந்த பரிசுத்த பங்கையெல்லாம் யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.

  5. 1 இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாக இருந்தான்; ராஜாக்களை முறியடித்து திரும்பிவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான். 2 இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதல் பெயராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்கு சமாதானத்தின் ராஜா என்றும் அர்த்தமாகும். 3 இவன் தகப்பனும், தாயும், வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் வாழ்நாட்களின் துவக்கமும், முடிவும் இல்லாதவனாக, தேவனுடைய குமாரனைப்போல என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான். 4 இவன் எவ்வளவு பெரியவனாக இருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம்கூட கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான். 5 லேவியின் குமாரர்களில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் வம்சத்திலிருந்து வந்த தங்களுடைய சகோதரர்களான மக்களிடம் நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைப் பெற்றிருக்கிறார்கள். 6 ஆனாலும், அவர்களுடைய வம்சவரிசையில் வராதவனாகிய மெல்கிசேதேக்கு ஆபிரகாமிடம் தசமபாகம் வாங்கி, வாக்குத்தத்தங்களைப் பெற்றிருந்த அவனை ஆசீர்வதித்தான். 7 சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான், அதில் சந்தேகம் இல்லை. 8 அன்றியும், இங்கே, தசமபாகம் வாங்குகிற மனிதர்கள் ஒருநாளில் மரித்துப்போவார்கள்; அங்கேயோ, ஆபிரகாமிடம் தசமபாகத்தைப் பெற்றுக்கொண்டவன், உயிரோடு இருப்பவன் என்று சாட்சிபெற்றவன். 9 அன்றியும், மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டுபோனபோது, லேவியானவன் தன் முற்பிதாவாகிய ஆபிரகாமின் சரீரத்தில் இருந்ததினால், 10 தசமபாகம் வாங்குகிற அவனும் ஆபிரகாமின் மூலமாகத் தசமபாகம் கொடுத்தான் என்று சொல்லலாம்.

  6. 41 இயேசு காணிக்கைப்பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, மக்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்; செல்வந்தர்கள் அநேகர் அதிகமாகப் போட்டார்கள். 42 ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு நாணய மதிப்பிற்கு சரியான இரண்டு காசுகளைப் போட்டாள். 43 அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களை அழைத்து, காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்ற எல்லோரையும்விட இந்த ஏழை விதவை அதிகமாகப் போட்டாள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்; 44 அவர்களெல்லோரும் தங்களுடைய பரிபூரணத்திலிருந்து எடுத்துப்போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தான் வாழ்வதற்காக வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டுவிட்டாள் என்றார்.

  7. 22 “நீ உன் தேவனாகிய யெகோவாவுக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படி, வருடந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து,

  8. 16 அனைத்து பொருட்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்; தன் சகோதரனாகிய லோத்தையும், அவனுடைய பொருட்களையும், பெண்களையும், மக்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்.

    17 அவன் கெதர்லாகோமேரையும், அவனோடிருந்த ராஜாக்களையும் தோற்கடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குவரை அவனுக்கு எதிர்கொண்டுபோனான். 18 அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சைரசமும் கொண்டுவந்து, 19 அவனை ஆசீர்வதித்து: “வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக. 20 உன் எதிரிகளை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.

  9. 23 மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் புதினாவிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாமலிருக்கவேண்டுமே. 24 குருடர்களான வழிகாட்டிகளே, கொசு இல்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாக இருக்கிறீர்கள்.

  10. 32 மேலும்: நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக சமுகத்து அப்பங்களுக்கும், நிரந்தர உணவுபலிக்கும், ஓய்வு நாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் செலுத்தும் நிரந்தர சர்வாங்க தகனபலிகளுக்கும், பண்டிகைகளுக்கும், அபிஷேகத்துக்கான பொருள்களுக்கும், இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தி உண்டாக்கும் பலிகளுக்கும், 33 எங்கள் தேவனுடைய ஆலயத்தின் எல்லா வேலைக்கும், வருடந்தோறும் நாங்கள் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுப்போம் என்கிற பொறுப்பை எங்கள்மேல் ஏற்றுக்கொண்டோம். 34 நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக குறிக்கப்பட்ட காலங்களில் வருடாவருடம் எங்கள் முன்னோர்களின் குடும்பங்களின்முறையே, எங்கள் தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரவேண்டிய விறகு காணிக்கைக்காகவும், ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும், மக்களுக்கும் சீட்டுப்போட்டோம். 35 நாங்கள் வருடந்தோறும் எங்கள் தேவனுடைய ஆலயத்திற்கு எங்கள் தேசத்தின் முதற்பலனையும், சகலவித மரங்களின் எல்லா முதற்கனிகளையும் கொண்டுவரவும், 36 நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே, எங்கள் மகன்களில் முதற்பிறந்தவர்களையும், எங்கள் ஆடுமாடுகளாகிய மிருகஜீவன்களின் முதற்பிறந்தவைகளையும், எங்கள் தேவனுடைய ஆலயத்திற்கும் எங்கள் தேவனுடைய ஆலயத்திலே ஊழியஞ்செய்கிற ஆசாரியர்களிடத்திற்கும் கொண்டுவரவும், 37 நாங்கள் எங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும், எங்கள் படைப்புகளையும், எல்லா மரங்களின் முதற்பலனாகிய திராட்சைப்பழரசத்தையும், எண்ணெயையும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் வைக்க ஆசாரியர்களிடத்திற்கும், எங்கள் நிலப்பயிர்களில் தசமபாகம் லேவியர்களிடத்திற்கும் கொண்டுவரவும், லேவியர்களாகிய இவர்கள் எங்கள் வேளாண்மையின் பட்டணங்களிலெல்லாம் தசமபாகம் சேர்க்கவும், 38 லேவியர்கள் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் மகனாகிய ஒரு ஆசாரியன் லேவியர்களோடுகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர்கள் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் முடிவுசெய்துகொண்டோம். 39 பரிசுத்த இடத்தின் பணிபொருட்களும், ஊழியஞ்செய்கிற ஆசாரியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும் இருக்கிற அந்த அறைகளிலே இஸ்ரவேல் மக்களும், லேவிகோத்திரத்தார்களும் தானியம் திராட்சைரசம் எண்ணெய் என்பவைகளின் படைப்புகளைக் கொண்டுவரவேண்டியது; இந்த விதமாக நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தைப் பராமரிக்காமல் விடுவதில்லையென்று முடிவுசெய்துகொண்டோம்.

  11. 20 அப்பொழுது யாக்கோபு: “தேவன் என்னோடிருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண உணவும், உடுக்க உடையும் எனக்குத் தந்து, 21 என்னை என் தகப்பன் வீட்டிற்குச் சமாதானத்தோடு திரும்பிவரச் செய்வாரானால், யெகோவா எனக்குத் தேவனாயிருப்பார்; 22 நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன்” என்று சொல்லிப் பொருத்தனை செய்துகொண்டான்.

  12. 9 உன்னுடைய பொருளாலும்,

    உன்னுடைய எல்லா விளைச்சலின் முதற்பலனாலும் யெகோவாவுக்கு மரியாதை செலுத்து.

    10 அப்பொழுது உன்னுடைய களஞ்சியங்கள் பூரணமாக நிரம்பும்;

    உன்னுடைய ஆலைகளில் திராட்சைரசம் புரண்டோடும்.

  13. 4 ஆசாரியர்களும் லேவியர்களும் யெகோவாவுடைய நியாயப்பிரமாணத்தை உற்சாகமாகக் கைக்கொள்ள, அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுக்க மக்களுக்கும் எருசலேமின் குடிகளுக்கும் கட்டளையிட்டான். 5 இந்த வார்த்தை பிரபலமானபோது, இஸ்ரவேல் மக்கள் தானியத்திலும், திராட்சைரசத்திலும், எண்ணெயிலும், தேனிலும், நிலத்தின் எல்லா வரவிலும் முதற்பலன்களைத் திரளாகக் கொண்டுவந்து, சகலத்திலும் தசமபாகத்தைப் பரிபூரணமாகக் கொடுத்தார்கள். 6 யூதாவின் பட்டணங்களில் குடியிருந்த இஸ்ரவேல் வம்சத்தாரும், யூதா வம்சத்தாரும், மாடுகளிலும் ஆடுகளிலும் தசமபாகத்தையும், தங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தம் செய்யப்பட்டவைகளில் தசமபாகத்தையும் கொண்டுவந்து குவியல் குவியலாக வைத்தார்கள். 7 மூன்றாம் மாதத்தில் குவியல் செய்யத்துவங்கி ஏழாம் மாதத்தில் முடித்தார்கள். 8 எசேக்கியாவும் பிரபுக்களும் வந்து, அந்தக் குவியல்களைப் பார்க்கும்போது, யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, அவருடைய மக்களாகிய இஸ்ரவேலைப் புகழ்ந்தார்கள். 9 அந்தக் குவியல்களைக் குறித்து எசேக்கியா, ஆசாரியர்களையும் லேவியர்களையும் விசாரித்தபோது, 10 சாதோக்கின் சந்ததியானாகிய அசரியா என்னும் பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: இந்தக் காணிக்கையைக் யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரத் தொடங்கினதுமுதல் நாங்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தோம்; இன்னும் மீதம் இருக்கிறது; யெகோவா தம்முடைய மக்களை ஆசீர்வதித்ததால் இந்தத் திரளான தானியக் குவியல் மீந்திருக்கிறது என்றான். 11 அப்பொழுது எசேக்கியா யெகோவாவுடைய ஆலயத்தில் சேமிப்புக் கிடங்குகளை ஆயத்தப்படுத்தச் சொன்னான். 12 அவர்கள் அவைகளை ஆயத்தப்படுத்தினபின்பு, அவைகளிலே காணிக்கைகளையும், தசம பாகத்தையும், பரிசுத்தம்செய்யப்பட்டவைகளையும் உண்மையாக எடுத்துவைத்தார்கள்; அவைகளின்மேல் லேவியனாகிய கொனனியா தலைவனும், அவன் தம்பியாகிய சிமேயி இரண்டாவதுமாக இருந்தான்.

  14. 42 பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் புதினா, மறிக்கொழுந்து ஆகிய எல்லாவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாமல் இருக்கவேண்டும்.

  15. 5 மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்தருடைய சகோதரர்களும், கேபாவும் செய்கிறதுபோல, விசுவாசியாகிய ஒரு மனைவியை கூட்டிக்கொண்டுபோக எங்களுக்கு உரிமை இல்லையா? 6 அல்லது, கைத்தொழில் செய்யாமலிருக்க எனக்கும் பர்னபாவிற்கும்மட்டும்தானா உரிமை இல்லை? 7 எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, இராணுவத்திலே சேவை செய்வான்? எவன் திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியை சாப்பிடாமல் இருப்பான்? எவன் மந்தையை மேய்த்து, அதின் பாலைக் குடிக்காமல் இருப்பான்? 8 இவைகளை மனிதர்கள் வழக்கத்தின்படி சொல்லுகிறேனோ? நியாயப்பிரமாணமும் இவைகளைச் சொல்லுகிறதில்லையா? 9 போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டாதே என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாக இருக்கிறாரோ? 10 நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடு உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடு போரடிக்கவும் வேண்டும். ஆகவே, அது நமக்காகவே எழுதியிருக்கிறது. 11 நாங்கள் உங்களுக்கு ஆவியானவருக்குரிய நன்மைகளை விதைத்திருக்க, உங்களுடைய சரீர நன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா? 12 மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களைவிட நாங்கள் அதிகமாகச் செலுத்தலாமல்லவா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் நற்செய்திக்கு எந்தவொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப் பாடுகளும் படுகிறோம். 13 ஆசாரிய ஊழியம் செய்கிறவர்கள் தேவாலயத்தில் இருக்கிறவைகளிலிருந்து சாப்பிடுகிறார்கள் என்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்கு பலிபீடத்தில் உள்ளவைகளில் பங்கு உண்டென்றும் உங்களுக்குத் தெரியாதா? 14 அந்தப்படியே நற்செய்தியை அறிவிக்கிறவர்களுக்கு நற்செய்தியினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.

  16. 9 அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாக எண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார். 10 இரண்டு மனிதர்கள் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்திற்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி வசூலிப்பவன். 11 பரிசேயன் நின்று: தேவனே! நான் கொள்ளைக்காரர்கள், அநியாயக்காரர்கள், விபசாரக்காரர்கள் ஆகிய மற்ற மனிதர்களைப்போலவும், இந்த வரி வசூலிப்பவனைப்போலவும் இராததினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். 12 வாரத்தில் இரண்டுமுறை உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் பத்தில் ஒரு பங்கு காணிக்கை செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். 13 வரி வசூலிப்பவன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்திற்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாக இரும் என்றான். 14 அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாகத் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனென்றால், தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

  17. 19 பூமியிலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடர்களும் கன்னமிட்டுத் திருடுவார்கள். 20 பரலோகத்திலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர்கள் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. 21 உங்களுடைய சொத்து எங்கேயிருக்கிறதோ அங்கே உங்களுடைய இருதயமும் இருக்கும். 22 கண்ணானது சரீரத்தின் விளக்காக இருக்கிறது; உன் கண் தெளிவாக இருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருக்கும். 23 உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாக இருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாக இருந்தால், அந்த இருள் எவ்வளவு அதிகமாக இருக்கும்! 24 இரண்டு முதலாளிகளுக்கு வேலைசெய்ய ஒருவனாலும் முடியாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனை நேசிப்பான்; அல்லது ஒருவனைப்பற்றிக்கொண்டு, மற்றவனைப் புறக்கணிப்பான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் வேலைசெய்ய உங்களால் முடியாது.

  18. 1 பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் நன்கொடை பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்கு செய்த திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள். 2 நான் வந்திருக்கும்போது பணம் சேர்க்குதல் இல்லாதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவிற்கு ஏற்றபடி எதையாவது தன்னிடத்திலே சேர்த்துவைக்கவேண்டும். 3 நான் வரும்போது உங்களுடைய உதவியை எருசலேமுக்குக் கொண்டுபோகும்படிக்கு, நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் குறிக்கிறவர்கள் எவர்களோ, அவர்களிடத்தில் கடிதங்களைக் கொடுத்து, அவர்களை அனுப்புவேன். 4 நானும் அதை நேரில் எடுத்துச்செல்வது தகுதியானது என்று தோன்றினால், அவர்கள் என்னோடுகூட வரலாம்.

  19. 38 கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாக அளந்து, உங்களுடைய மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.

  20. 6 மகன் தன் தகப்பனையும், வேலைக்காரன் தன் எஜமானையும் கனப்படுத்துகிறார்களே; நான் தகப்பனானால் எனக்குரிய கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் யெகோவா தமது நாமத்தை அசட்டைசெய்கிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்; அதற்கு நீங்கள்: உமது நாமத்தை எதினாலே அசட்டை செய்தோம் என்கிறீர்கள். 7 என் பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே; ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுத்தினோம் என்கிறீர்கள்; யெகோவாவுடைய பந்தி முக்கியமல்ல என்று நீங்கள் சொல்லுகிறதினாலேயே. 8 நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக்கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல, நீங்கள் காலூனமானதையும், வியாதியுள்ளதையும் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே; அதை நீ உன் அதிகாரிக்குச் செலுத்து, அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் யெகோவா கேட்கிறார். 9 இப்போதும் தேவனுடைய சமுகத்தை நோக்கிக் கெஞ்சுங்கள்; அப்பொழுது நம்மேல் இரங்குவார்; இது உங்களாலே வந்த காரியம்; அவர் உங்களை அங்கீகரிப்பாரோ என்று சேனைகளின் யெகோவா கேட்கிறார். 10 உங்களில் எவன் கூலிவாங்காமல் கதவுகளைப் பூட்டுவான்; என் பலிபீடத்தின்மேல் நெருப்பைக் கூலிவாங்காமல் கொளுத்தவுமாட்டீர்கள்; உங்கள்மேல் எனக்குப் பிரியமில்லையென்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; உங்கள் கைகளிலுள்ள காணிக்கை எனக்கு உகந்ததல்ல. 11 சூரியன் உதிக்கும் திசை தொடங்கி, அது மறையும் திசைவரைக்கும், என் நாமம் தேசங்களுக்குள்ளே மிகவும் உயர்ந்திருக்கும்; எல்லா இடங்களிலும் என் நாமத்திற்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் தேசங்களுக்குள்ளே மிகவும் உயர்ந்திருக்கும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 12 நீங்களோ யெகோவாவுடைய பந்தி அசுத்தமானது என்றும், அதின் ஆகாரமாகிய அதின் பலன் அற்பமானது என்றும் சொல்லுகிறதினாலே, என் நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறீர்கள். 13 இதோ, இது எவ்வளவு வருத்தமென்று சொல்லி, அதை ஒரு இழிவாகப் பேசி, கிழிக்கப்பட்டதையும் கால் ஊனமானதையும், வியாதியுள்ளதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக்கொள்வேனோ என்று யெகோவா கேட்கிறார். 14 தன் மந்தையில் கடா இருக்கும்போது கெட்டுப்போனதை ஆண்டவருக்கு பொருத்தனை செய்துகொண்டு பலியிடுகிற வஞ்சகன் சபிக்கப்பட்டவன்; என் நாமம் தேசங்களுக்குள்ளே பயங்கரமாயிருக்கும்; நான் மிக உயர்ந்த ராஜா என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

  21. 6 அப்பொழுது வம்சங்களின் பிரபுக்களும், இஸ்ரவேல் கோத்திரங்களின் பிரபுக்களும், ஆயிரம்பேர்களுக்குத் தலைவர்களும், நூறுபேர்களுக்குத் தலைவர்களும், ராஜாவின் வேலைக்காரர்களாகிய பிரபுக்களும் மனப்பூர்வமாக, 7 தேவனுடைய ஆலயத்து வேலைக்கு ஐயாயிரம் தாலந்து பொன்னையும், பத்தாயிரம் தங்கக்காசையும், பத்தாயிரம் தாலந்து வெள்ளியையும், பதிணெட்டாயிரம் தாலந்து வெண்கலத்தையும், லட்சம் தாலந்து இரும்பையும் கொடுத்தார்கள். 8 யார் கையில் ரத்தினங்கள் இருந்ததோ, அவர்கள் அவைகளையும் யெகோவாவுடைய ஆலயத்துப் பொக்கிஷத்திற்கென்று கெர்சோனியனான யெகியேலின் கையிலே கொடுத்தார்கள். 9 இப்படி மனப்பூர்வமாகக் கொடுத்ததற்காக மக்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடு உற்சாகமாகக் யெகோவாவுக்குக் கொடுத்தார்கள்; தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான்.

    10 ஆகையால் தாவீது சபை அனைத்தின் கண்களுக்கு முன்பாகவும் யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் செலுத்திச் சொன்னது: எங்கள் முற்பிதாவாகிய இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, எல்லாக் காலங்களிலும் தேவரீருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. 11 யெகோவாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகள் எல்லாம் உம்முடையவைகள்; யெகோவாவே, ராஜ்ஜியமும் உம்முடையது; தேவரீர், எல்லோருக்கும் தலைவராக உயர்ந்திருக்கிறீர். 12 ஐசுவரியமும் புகழும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சக்தியும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும். 13 இப்போதும் எங்களுடைய தேவனே, நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்கிறோம்.

  22. 10 இப்பொழுதும், இதோ, யெகோவாவே, தேவரீர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய அறுவடைகளின் முதற்பலனைக் கொண்டுவந்தேன் என்று சொல்லி, அதை உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் வைத்து, உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் பணிந்து, 11 நீயும், லேவியனும் உன்னிடத்தில் இருக்கிற அந்நியனும் உன் தேவனாகிய யெகோவா உனக்கும் உன் வீட்டாருக்கும் செய்த சகல நன்மைகளுக்காகவும் சந்தோஷப்படுவீர்களாக. 12 “தசமபாகம் செலுத்தும் வருடமாகிய மூன்றாம் வருடத்திலே, நீ உன் விளைச்சலில் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் அந்நியனும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் உன் வாசல்களில் சாப்பிட்டுத் திருப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்தபின்பு,

  23. 4 பெத்தேலுக்குப் போய்த் துரோகம்செய்யுங்கள், கில்காலுக்கும் போய் துரோகத்தைப் பெருகச்செய்து, காலைதோறும் உங்களுடைய பலிகளையும், மூன்றாம் வருடத்திலே உங்களுடைய தசமபாகங்களையும் செலுத்தி, 5 புளித்தமாவுள்ள ஸ்தோத்திரபலியோடு தூபம் காட்டி, உற்சாகபலிகளைக் கூறித் தெரியப்படுத்துங்கள்; இஸ்ரவேல் மக்களே, இப்படிச் செய்வதே உங்களுக்குப் பிரியம் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

  24. 24 வாரி இறைத்தும் விருத்தியடைந்தவர்களும் உண்டு;

    அதிகமாக தனக்கென்று மட்டும் வைத்துக்கொண்டும்

    வறுமையடைபவர்களும் உண்டு.

    25 உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்;

    எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.

  25. 16 வருடத்தில் மூன்றுமுறை புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லோரும் உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள். 17 ஆனாலும் அவர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய யெகோவா உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன்.

  26. 6 போதும் என்கிற மனதோடுகூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். 7 உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததும் இல்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். 8 உண்பதற்கும் உடுத்துவதற்கும் நமக்கு இருந்தால் அது போதும் என்று இருக்கவேண்டும். 9 செல்வந்தர்களாவதற்கு விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனிதர்களைத் தீமையிலும், அழிவிலும் அமிழ்த்திப்போடுகிற மதிகேடும் சேதமுமான பலவிதமான இச்சைகளிலும் விழுகிறார்கள். 10 பணஆசை எல்லாத் தீமைகளுக்கும் வேராக இருக்கிறது; சிலர் அதை விரும்பி, விசுவாசத்தைவிட்டு விலகி, அநேக வேதனைகளாலே தங்களைத்தாங்களே கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

    11 நீயோ, தேவனுடைய மனிதனே, இவைகளைவிட்டு விலகி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் நாடிப் பெற்றுக்கொள்.

  27. 1 “மனிதர்கள் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்களுடைய நல்ல செயல்களைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அப்படிச் செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. 2 ஆகவே, நீ தர்மம் செய்யும்போது, மனிதர்களால் புகழப்படுவதற்கு, மாயக்காரர்கள் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதாதே; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்தார்களென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 3 நீயோ தர்மம் செய்யும்போது, உன் தர்மம் மறைமுகமாக இருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது. 4 அப்பொழுது மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா தாமே, உனக்கு வெளியரங்கமாகப் பலனளிப்பார்.

  28. 35 இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைவிட கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.

  29. 1 அன்றியும் சகோதர, சகோதரிகளே மக்கெதோனியா நாட்டு சபைகளுக்கு தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம். 2 அவர்கள் அதிக உபத்திரவத்தினாலே சோதிக்கப்படும்போது, கொடிய தரித்திரம் உடையவர்களாக இருந்தும், தங்களுடைய பரிபூரண சந்தோஷத்தினாலே அதிக தாராளமாகக் கொடுத்தார்கள். 3 மேலும் அவர்கள் தங்களுடைய தகுதிக்கும், தங்களுடைய தகுதிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே விருப்பம் உள்ளவர்களாக இருந்தார்கள் என்பதற்கு, நான் சாட்சியாக இருக்கிறேன். 4 தங்களுடைய உதவிகளையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை அதிகமாக வேண்டிக்கொண்டார்கள். 5 மேலும் நாங்கள் எதிர்பார்த்தபடி கொடுக்காமல், தேவனுடைய விருப்பத்தினாலே தங்களைத்தாமே, முதலில் கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள்.

  30. 6 மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்கு எல்லா நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கவேண்டும். 7 ஏமார்ந்துபோகாமல் இருங்கள், தேவன் தம்மைப் பரிகாசம்பண்ண விடமாட்டார்; மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். 8 தன் சரீரத்திற்கென்று விதைக்கிறவன் சரீரத்தினால் அழிவை அறுப்பான்; ஆவியானவருக்கென்று விதைக்கிறவன் ஆவியானவராலே நித்தியஜீவனை அறுப்பான். 9 நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாமல் இருந்தால் சரியான நேரத்தில் அறுப்போம். 10 ஆகவே, நமக்குக் கிடைக்கும் வாய்ப்பின்படி, எல்லோருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும் நன்மைசெய்வோம்.

  31. 10 பின்னும் லேவியர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகள் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லையென்பதையும், வேலை செய்கிற லேவியர்களும் பாடகர்களும் அவரவர் தங்களுடைய விளைநிலங்களுக்கு ஓடிப்போனார்கள் என்பதையும் நான் அறிந்துகொண்டேன்.

  32. 15 உங்களுடைய தானியத்திலும் உங்களுடைய திராட்சை பலனிலும் தசமபாகம் வாங்கி, தன்னுடைய அதிகாரிகளுக்கும் தன்னுடைய வேலைக்காரர்களுக்கும் கொடுப்பான்.

  33. 2 பெசலெயேலையும், அகோலியாபையும் யெகோவாவால் ஞானமடைந்து அந்த வேலைகளைச் செய்யவரும்படி தங்களுடைய இருதயத்தில் எழுப்புதலடைந்த ஞான இருதயமுள்ளவர்களாகிய எல்லோரையும், மோசே வரவழைத்தான். 3 அவர்கள், இஸ்ரவேலர்கள் திருப்பணிகளின் எல்லா வேலைகளுக்காகவும் கொண்டுவந்த காணிக்கைப் பொருட்களையெல்லாம், மோசேயிடம் வாங்கிக்கொண்டார்கள். பின்னும் மக்கள் காலைதோறும் தங்களுக்கு விருப்பமான காணிக்கைகளை அவனிடம் கொண்டுவந்தார்கள். 4 அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்தின் வேலைகளைச் செய்கிற அனைவரும் அவரவர் செய்கிற வேலையின் காரியமாக வந்து, 5 மோசேயை நோக்கி: “யெகோவா செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை மக்கள் கொண்டுவருகிறார்கள்” என்றார்கள். 6 அப்பொழுது மோசே “இனி ஆண்களோ பெண்களோ பரிசுத்த ஸ்தலத்திற்கென்று காணிக்கையாக ஒரு வேலையும் செய்யவேண்டாம்” என்று முகாம் எங்கும் சொல்லும்படிக் கட்டளையிட்டான்; இப்படியாக மக்கள் கொண்டுவருகிறது நிறுத்தப்பட்டது. 7 செய்யவேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமான பொருள்கள் இருந்ததுமல்லாமல் அதிகமாகவும் இருந்தது.

  34. 17 இந்த உலகத்தில் செல்வந்தர்கள் பெருமையான சிந்தையுள்ளவர்களாக இல்லாமலும், நிலையில்லாத செல்வத்தின்மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அனுபவிக்கிறதற்கு எல்லாவித நன்மைகளையும் நமக்கு பரிபூரணமாகக் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும், 18 நன்மைசெய்யவும், நல்ல செயல்களில் செல்வந்தர்களாகவும், தாராளமாகக் கொடுக்கிறவர்களும், தங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொடுக்கிறவர்களாகவும் இருக்கவும், 19 நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு உறுதியான அஸ்திபாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.

  35. 10 அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய யெகோவாவுக்கென்று ஆசரித்து, உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதித்ததற்குத்தக்கதாக உன்னால் முடிந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி,

  36. 1 “லேவியர்களாகிய ஆசாரியர்களும் லேவிகோத்திரத்தார் அனைவருக்கும் இஸ்ரவேல் மக்களுடன் பங்கும் உரிமையும் இல்லாதிருப்பதாக; யெகோவாவுக்குச் செலுத்தும் தகனபலிகளையும் அவருக்கு உரிமையானவைகளையும் அவர்கள் சாப்பிடலாம். 2 அவர்களுடைய சகோதரர்களுக்குள்ளே அவர்களுக்கு உரிமையில்லை; யெகோவா அவர்களுக்குச் சொன்னபடியே, அவரே அவர்களுடைய சொத்து. 3 மக்களிடத்தில் பெற்றுக்கொள்ளவேண்டிய ஆசாரியர்களுக்குரிய வரவானது: மக்கள் பலியிடும் ஆடுமாடுகளில் முன்னந்தொடையையும், தாடைகளையும், இரைப்பைகளையும் ஆசாரியனுக்குக் கொடுக்கவேண்டும். 4 உன் தானியம், திராட்சைரசம், எண்ணெய், ஆட்டுரோமம் என்னும் இவைகளின் முதற்பலனையும் அவனுக்குக் கொடுக்கவேண்டும். 5 அவனும் அவனுடைய மகன்களும் எல்லா நாட்களும் யெகோவாவின் நாமத்தை முன்னிட்டு ஆராதனைசெய்ய நிற்பதற்காக, உன் தேவனாகிய யெகோவா உன் கோத்திரத்தார் எல்லோருக்குள்ளும் அவனையே தெரிந்துகொண்டார்.

  37. 15 மேலும், பிலிப்பியரே, நற்செய்தி ஊழியத்தின் ஆரம்பத்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது, உங்களைத்தவிர வேறு எந்த சபையும் எனக்குப் பணம் கொடுத்து உதவிசெய்யவில்லை என்று உங்களுக்குத் தெரியும். 16 நான் தெசலோனிக்கேயில் இருந்தபோதும், என் குறைவுகளில் உதவிசெய்ய நீங்கள் பலமுறை பணம் அனுப்பி உதவி செய்தீர்கள். 17 உங்களுடைய உதவிகளை நான் தேடாமல், உங்களுடைய உதவிகளால் உங்களுக்கு வரும் பலன் பெருகுவதையே பார்க்க விரும்புகிறேன். 18 எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளை தேவனுக்குச் சுகந்த வாசனையாகவும், பிரியமான பலியாகவும் எப்பாப்பிரோதீத்துவின் கைகளினால் பெற்றுக்கொண்டதினால் நான் திருப்தியடைந்திருக்கிறேன். 19 என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்களுடைய குறைகளையெல்லாம் கிறிஸ்து இயேசுவிற்குள் மகிமையிலே நிறைவாக்குவார். 20 நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

  38. 15 ஆகவே, அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாக எப்போதும் தேவனுக்குச் செலுத்துவோம். 16 அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறக்காமல் இருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாக இருக்கிறார்.

  39. 6 இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவனுடைய ஊழியக்காரர்களாக இருக்கிறார்களே. 7 எனவே எல்லோருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; யாருக்கு வரியைச் செலுத்தவேண்டுமோ அவனுக்கு வரியையும், யாருக்கு சொத்துவரியைச் செலுத்தவேண்டுமோ அவனுக்கு சொத்துவரியையும் செலுத்துங்கள்; யாருக்குப் பயப்படவேண்டுமோ அவனுக்குப் பயப்படுங்கள்; யாருக்கு மதிப்புக் கொடுக்கவேண்டுமோ அவனுக்கு மதிப்புக் கொடுங்கள்.

  40. 16 அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரர்களுக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாக இருக்கிறோம். 17 ஒருவன் இந்த உலகத்தின் செல்வம் உடையவனாக இருந்து, தன் சகோதரனுக்கு வறுமை உண்டென்று அறிந்து, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவஅன்பு நிலைபெறுகிறது எப்படி? 18 என் பிள்ளைகளே, வசனத்தினாலும் பேச்சினாலுமல்ல, செயல்களினாலும் உண்மையினாலும் அன்பு செலுத்துவோம். 19 இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்கள் என்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.

  41. 31 அன்றியும் மனிதகுமாரன் தமது மகிமை பொருந்தினவராக அனைத்து பரிசுத்த தூதர்களோடுகூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். 32 அப்பொழுது, எல்லா மக்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, 33 செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். 34 அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். 35 பசியாக இருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; தாகமாக இருந்தேன், என் தாகத்தைத் தனித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; 36 ஆடை இல்லாதிருந்தேன், எனக்கு ஆடை கொடுத்தீர்கள்; வியாதியாக இருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; சிறைப்பட்டிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார். 37 அப்பொழுது, நீதிமான்கள் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்கு உணவு கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தணித்தோம்? 38 எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை ஆடையில்லாதவராகக் கண்டு உமக்கு ஆடை கொடுத்தோம்? 39 எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் சிறையிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். 40 அதற்கு ராஜா மறுமொழியாக: மிகவும் எளியவராகிய என் சகோதரர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். 41 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். 42 பசியாக இருந்தேன், நீங்கள் எனக்கு ஆகாரம் கொடுக்கவில்லை; தாகமாக இருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தணிக்கவில்லை; 43 அந்நியனாக இருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; ஆடையில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாகவும் சிறையில் அடைக்கப்பட்டவனாகவும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை என்பார். 44 அப்பொழுது, அவர்களும் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், ஆடையில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், சிறையில் அடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள். 45 அப்பொழுது, அவர் அவர்களுக்கு மறுமொழியாக: மிகவும் எளியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். 46 அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார்.

  42. 33 உங்களுக்கு உள்ளவைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுங்கள், பழமையாகப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி அரிக்கிறதுமில்லை. 34 உங்களுடைய பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்களுடைய இருதயமும் இருக்கும்.

  43. 42 அவர்கள் அப்போஸ்தலர்களுடைய போதனைகளிலும், ஐக்கியத்திலும், அப்பம் புசித்தலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாகத் தரித்திருந்தார்கள். 43 எல்லோருக்கும் பயமுண்டானது. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அதிசயங்களும் செய்யப்பட்டது. 44 விசுவாசிகள் எல்லோரும் ஒன்றாக இருந்து, எல்லாவற்றையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள். 45 நிலங்களையும் சொத்துக்களையும்விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவைக்குத்தக்கதாக அவைகளில் எல்லோருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள்.

  44. 32 திரளான விசுவாசக் கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாக இருந்தார்கள். ஒருவனும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; அனைத்தும் அவர்களுக்குப் பொதுவாக இருந்தது. 33 கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த உறுதியாக சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லோர்மேலும் பூரணகிருபை உண்டாயிருந்தது. 34 நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் தொகையைக் கொண்டுவந்து, 35 அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவைக்குத்தக்கதாகப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாக இருந்ததில்லை.

  45. 10 ஏனென்றால், உங்களுடைய செயல்களையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியம் செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் அவருடைய நாமத்திற்காகக் காண்பித்த உங்களுடைய அன்பையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவர் இல்லையே.