64 Bible Verses About Following Jesus

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

Bible Verses About Following Jesus
  1. 57 அவர்கள் வழியிலே போகும்போது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் நான் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான். 58 அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனிதகுமாரனுக்கோ தலை சாய்க்கவும் இடமில்லை என்றார். 59 வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண என்னை அனுப்பவேண்டும் என்றான். 60 அதற்கு இயேசு: மரித்தோர் தங்களுடைய மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணு என்றார். 61 பின்பு வேறு ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முதலில் நான் போய் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு வரும்படி என்னை அனுமதிக்கவேண்டும் என்றான். 62 அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துவிட்டு பின்னோக்கிப் பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்திற்குத் தகுதியுள்ளவன் இல்லை என்றார்.

  2. 13 நீங்கள் மனிதர்களுடைய கட்டளைகள் எல்லாவற்றிற்கும் கர்த்தருக்காக கீழ்ப்படியுங்கள். 14 மேலான அதிகாரமுள்ள ராஜாவாக இருந்தாலும், தீமைசெய்கிறவர்களுக்கு தண்டனையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் கொடுக்க ராஜாவால் அனுப்பப்பட்ட அதிகாரிகளாக இருந்தாலும், அவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். 15 நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீனமான மனிதர்களுடைய வார்த்தைகளை அடக்குவது தேவனுடைய விருப்பமாக இருக்கிறது. 16 சுதந்திரம் உள்ளவர்களாக இருந்தும் உங்களுடைய சுதந்திரம் தீயகுணத்தை மூடுகிறதாக இல்லாமல், தேவனுக்கு அடிமைகளாக இருங்கள். 17 எல்லோரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரர்களிடம் அன்பாக இருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள். 18 வேலைக்காரர்களே, அதிக பயத்தோடு உங்களுடைய எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும், சாந்தகுணமுள்ளவர்களுக்கும்மட்டும் இல்லை, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள். 19 ஏனென்றால், ஒருவன் அநியாயமாகப் பாடுகள்படும்போது தேவனை நினைத்துக்கொண்டே உபத்திரவங்களைப் பொறுமையாகச் சகித்துக்கொண்டால் அதுவே தேவனுக்குப் பிரியமாக இருக்கும். 20 நீங்கள் குற்றம் செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடு சகித்துக்கொண்டால், அதினால் என்ன நன்மை உண்டு? ஆனால், நீங்கள் நன்மைசெய்து பாடுகள்படும்போது பொறுமையோடு சகித்துக்கொண்டால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரியமாக இருக்கும். 21 இதற்காகத்தான் நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; ஏனென்றால், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுகள்பட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி வருவதற்காக உங்களுக்கு முன்மாதிரியை வைத்துப்போனார்.

    22 அவர் பாவம் செய்யவில்லை,

    அவருடைய வாயிலே வஞ்சனையும் காணப்படவில்லை;

    23 அவர் தூஷிக்கப்படும்போது பதிலுக்குத் தூஷிக்காமலும்,

    பாடுகள்பட்டபோது திரும்ப பயமுறுத்தாமலும்,

    நியாயமாக நியாயத்தீர்ப்புச் செய்கிறவருக்கு தம்மையே ஒப்புவித்தார்.

    24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கத்தக்கதாக, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையிலே சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். 25 சிதறிப்போன ஆடுகளைப்போல இருந்தீர்கள்; இப்பொழுதோ உங்களுடைய ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவிடம் திரும்பிவந்திருக்கிறீர்கள்.

  3. 18 இயேசு கலிலேயாக் கடலோரமாக நடந்துபோகும்போது, மீனவர்களாக இருந்த இரண்டு சகோதரர்களாகிய பேதுரு என்ற சீமோனும், அவனுடைய சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலையைப் போட்டுக்கொண்டிருக்கின்றபோது, அவர்களைக் கண்டு: 19 “என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக ஆக்குவேன்” என்றார். 20 உடனே அவர்கள் வலைகளைவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள். 21 அவர் அந்த இடத்தைவிட்டுப் போகும்போது, வேறு இரண்டு சகோதரர்களாகிய செபெதேயுவின் குமாரர்களான யாக்கோபும், யோவானும் தங்களுடைய தகப்பன் செபெதேயுவோடு படகிலிருந்து, தங்களுடைய வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார். 22 உடனே அவர்கள் படகையும் தங்களுடைய தகப்பனையும்விட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.

    23 பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி குணமாக்கினார். 24 அவருடைய புகழ் சீரியா தேசமெங்கும் பரவியது. அப்பொழுது பலவிதமான வியாதிகளிலும் வேதனைகளிலும் இருந்த எல்லா நோயாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், வலிப்பு நோயாளிகளையும், பக்கவாதக்காரர்களையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைக் குணமாக்கினார். 25 கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலுமிருந்து அநேக மக்கள் வந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள்.

  4. 24 அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றவேண்டும். 25 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான். 26 மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனிதன் தன் ஜீவனுக்கு இணையாக என்னத்தைக் கொடுப்பான்? 27 மனிதகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராகத் தம்முடைய தூதர்களோடு வருவார்; அப்பொழுது, அவனவன் செயல்களுக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். 28 இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனிதகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காண்பதற்குமுன், மரணத்தைக் காண்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

  5. 34 பின்பு அவர் மக்களையும் தம்முடைய சீடர்களையும் தம்மிடம் அழைத்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றி வரவேண்டும். 35 தன் வாழ்வைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துபோவான், எனக்காகவும், நற்செய்திக்காகவும் தன் வாழ்வை இழந்துபோகிறவன் அதைக் காப்பாற்றிக்கொள்ளுவான். 36 மனிதன் உலகம் முழுவதையும் சம்பாதித்துக்கொண்டாலும், தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? 37 மனிதன் தன் ஆத்துமாவிற்கு பதிலாக எதைக் கொடுப்பான்? 38 எனவே விபசாரமும் பாவமும் உள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனிதகுமாரனும் தமது பிதாவின் மகிமையில் பரிசுத்த தூதர்களோடு வரும்போது வெட்கப்படுவார் என்றார்.

  6. 23 பின்பு அவர் எல்லோரையும் நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால் அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும். 24 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; எனக்காகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான். 25 மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத்தானே கெடுத்து நஷ்டப்படுத்திக்கொண்டால் அவனுக்கு லாபம் என்ன? 26 என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனிதகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார். 27 இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணும் முன்னே, மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று நிச்சயமாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

  7. 16 அவர் கலிலேயா கடலின் ஓரமாக நடந்துபோகும்போது, மீனவர்களாக இருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலையைப் போட்டுக்கொண்டிருக்கிறதைப் பார்த்தார். 17 இயேசு அவர்களைப் பார்த்து: என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். 18 உடனே அவர்கள் தங்களுடைய வலைகளைவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள். 19 அவர் அந்த இடத்தைவிட்டுச் சற்றுதூரம் சென்றபோது, செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவனுடைய சகோதரன் யோவானும் படகிலே வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்து, 20 உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்களுடைய தகப்பனாகிய செபெதேயுவை படகிலே கூலியாட்களோடு விட்டுவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.

  8. 1 பஸ்காபண்டிகைக்கு முன்பே, இயேசு இந்த உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இந்த உலகத்தில் இருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுவரைக்கும் அவர்களிடத்தில் அன்புவைத்தார். 2 சீமோனின் மகனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் மாலை உணவு சாப்பிடும்போது; 3 தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தார் என்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து; 4 பந்தியிலிருந்து எழுந்து, தம்முடைய மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து, இடுப்பிலே கட்டிக்கொண்டு, 5 பின்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சீடர்களுடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த துண்டால் துடைக்கவும் தொடங்கினார்.

    6 அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவப்போகிறீரா? என்றான். 7 இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் செய்கிறது என்னவென்று இப்பொழுது உனக்கு தெரியாது, இனிமேல் தெரியும் என்றார். 8 பேதுரு அவரைப் பார்த்து: நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவகூடாது என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். 9 அதற்குச் சீமோன்பேதுரு: ஆண்டவரே, என் கால்களை மட்டுமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான். 10 இயேசு அவனைப் பார்த்து: குளித்தவன் தன் கால்களைமட்டும் கழுவவேண்டியதாக இருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாக இருக்கிறான்; நீங்களும் சுத்தமாக இருக்கிறீர்கள்; ஆனாலும் எல்லோரும் அல்ல என்றார். 11 தம்மைக் காட்டிக் கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்கள் எல்லோரும் சுத்தமுள்ளவர்கள் இல்லை என்றார்.

    12 அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய ஆடைகளை அணிந்துகொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களைப் பார்த்து: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா? 13 நீங்கள் என்னைப் போதகர் என்றும், ஆண்டவர் என்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். 14 ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்களுடைய கால்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவவேண்டும். 15 நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். 16 உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானைவிட பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரைவிட பெரியவனல்ல. 17 நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாக இருப்பீர்கள்.

  9. 1 நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாக இருங்கள்.

    2 சகோதரர்களே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைத்துக்கொண்டு, நான் உங்களுக்கு ஒப்புவித்தபடி நீங்கள் கட்டளைகளைக் கைக்கொண்டு வருகிறதினால் உங்களைப் புகழுகிறேன்.

  10. 26 ஒருவன் எனக்கு ஊழியம் செய்கிறவனானால் என்னைப் பின்பற்றட்டும், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.

  11. 1 எனவே, நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாக இருந்து, 2 கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்கு இனிய வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புவைத்ததுபோல, நீங்களும் அன்பாக நடந்துகொள்ளுங்கள்.

  12. 37 தகப்பனையாவது தாயையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை; மகனையாவது மகளையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை. 38 தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்கு தகுதியானவன் இல்லை. 39 தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.

  13. 1 என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவம் செய்தால் நீதிபரராக இருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராக இருக்கிறார். 2 நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற பாவநிவாரணபலி அவரே; நம்முடைய பாவங்களைமட்டும் அல்ல, முழு உலகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலியாக இருக்கிறார். 3 அவருடைய கட்டளைகளை நாம் கடைபிடிக்கிறவர்களாக இருப்போமானால், அவரை அறிந்திருக்கிறோம் என்பதை அதினால் அறிவோம். 4 அவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்லியும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதவன் பொய்யனாக இருக்கிறான், அவனுக்குள் சத்தியம் இல்லை. 5 அவருடைய வசனத்தைக் கடைபிடிக்கிறவனிடத்தில் தேவ அன்பு உண்மையாகவே பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோம் என்பதை அதினாலே அறிந்திருக்கிறோம். 6 அவருக்குள் நிலைத்திருக்கிறேன் என்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.

  14. 18 பின்பு, திரளான மக்கள் தம்மைச் சுற்றியிருக்கிறதை இயேசு கண்டு, அக்கரைக்குப் போகக் கட்டளையிட்டார். 19 அப்பொழுது, வேதபண்டிதன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான். 20 அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனிதகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார். 21 அவருடைய சீடர்களில் வேறொருவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்செய்ய எனக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்றான். 22 அதற்கு இயேசு: மரித்தோர் தங்களுடைய மரித்தோரை அடக்கம் செய்யட்டும், நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.

  15. 28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். 29 நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்களுடைய ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். 30 என் நுகம் எளிதாகவும், என் சுமை இலகுவாகவும் இருக்கிறது என்றார்.

  16. 34 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருங்கள்; நான் உங்களில் அன்பாக இருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாக இருங்கள் என்கிற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். 35 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பு உள்ளவர்களாக இருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீடர்கள் என்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.

  17. 1 ஆகவே, கிறிஸ்துவிற்குள் எந்தவொரு ஆறுதலும், அன்பினாலே எந்தவொரு தேறுதலும், ஆவியின் எந்தவொரு ஐக்கியமும், எந்தவொரு உருக்கமான பரிவும் இரக்கங்களும் உண்டானால், 2 நீங்கள் ஒரே சிந்தையும் ஒரே அன்பும் உள்ளவர்களாக இருந்து, இசைந்த ஆத்துமாக்களாக ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். 3 ஒன்றையும் சுயநலத்தினாலோ, வீண்பெருமையினாலோ செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் உங்களைவிட மேன்மையானவர்களாக நினைக்கவேண்டும். 4 அவனவன் தன்னுடைய காரியங்களை மட்டுமல்ல, மற்றவர்களுடைய காரியங்களிலும் உதவிசெய்யவேண்டும். 5 கிறிஸ்து இயேசுவில் இருந்த சிந்தையே உங்களுக்கும் இருக்கவேண்டும்; 6 அவர் தேவனுடைய உருவமாக இருந்தும், தேவனுக்குச் சமமாக இருப்பதைக் கொள்ளையாடின பொருளாக நினைக்காமல், 7 தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் உருவமெடுத்து, மனிதனின் சாயல் ஆனார். 8 அவர் மனித உருவமாக வெளிப்பட்டு, மரணம்வரைக்கும், அதாவது சிலுவையின் மரணம்வரைக்கும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். 9 ஆகவே, தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, 10 இயேசுவின் நாமத்தில் வானத்தில் உள்ளவைகளும், பூமியில் உள்ளவைகளும், பூமியின் கீழ் உள்ளவைகளுடைய முழங்கால்கள் எல்லாம் முடங்கும்படிக்கும், 11 பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்துவே கர்த்தர் என்று நாக்குகளெல்லாம் அறிக்கைபண்ணுவதற்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

  18. 1 ஆகவே, மேகத்தைப்போல இத்தனை அதிகமான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான எல்லாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாக இருக்கிற இயேசுவைப் பார்த்து, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஓடுவோம்; 2 அவர் தமக்குமுன்பாக வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை நினைக்காமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபக்கத்தில் வீற்றிருக்கிறார். 3 ஆகவே, நீங்கள் மனம் தளர்ந்தவர்களாக உங்களுடைய ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாமல் இருக்க, தமக்கு விரோதமாகப் பாவிகளால் செய்யப்பட்ட இந்தவிதமான வெறுக்கத்தக்க காரியங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள். 4 பாவத்திற்கு விரோதமாகப் போராடுகிறதில் இரத்தம் சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே.

  19. 27 இவைகளுக்குப் பின்பு அவர் புறப்பட்டு, வரி வசூலிக்கும் மையத்தில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பெயருடைய வரிவசூலிக்கும் ஒருவனைக் கண்டு: என்னைப் பின்பற்றிவா என்றார். 28 அவன் எல்லாவற்றையும்விட்டு, எழுந்து, அவருக்குப் பின்னேசென்றான். 29 அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக வரி வசூலிப்பவர்களும் மற்றவர்களும் அவர்களோடு பந்தியில் இருந்தார்கள். 30 வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் அவருடைய சீடர்களுக்கு எதிராக முறுமுறுத்து: நீங்கள் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உட்கார்ந்து சாப்பிடுகிறதும் குடிக்கிறதும் ஏன்? என்று கேட்டார்கள். 31 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவையேதவிர சுகமாக உள்ளவர்களுக்குத் தேவையில்லை. 32 நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.

  20. 12 மறுபடியும் இயேசு மக்களைப் பார்த்து: நான் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடக்காமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார்.

  21. 25 அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: யூதரல்லாதவர்களுடைய தலைவர்கள் அவர்களை இறுமாப்பாக ஆளுகிறார்கள் என்றும், அதிகாரமுடைய மனிதர்கள் அவர்கள்மேல் கடினமாக அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 26 உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாவது பெரியவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைசெய்கிறவனாக இருக்கவேண்டும். 27 உங்களில் எவனாவது முதன்மையானவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைசெய்கிறவனாக இருக்கவேண்டும். 28 அப்படியே, மனிதகுமாரனும் பணிவிடை பெரும்படி வராமல், பணிவிடைசெய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.

  22. 28 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாக தேவனிடம் அன்பாக இருக்கிறவர்களுக்கு எல்லாம் நன்மைக்குரியவைகளாக நடக்கிறது என்று அறிந்திருக்கிறோம். 29 தம்முடைய குமாரன் அநேக சகோதரர்களுக்குள்ளே முதற்பேறானவராக இருப்பதற்காக, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக இருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;

  23. 9 இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, வரிவசூல் மையத்தில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனிதனைக் கண்டு: எனக்குப் பின்னே வா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்னேசென்றான்.

  24. 16 அப்பொழுது ஒருவன் வந்து, அவரைப் பார்த்து: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். 17 அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கட்டளைகளைக் கைக்கொள் என்றார். 18 அவன் அவரைப் பார்த்து: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக; 19 உன் தகப்பனையும் உன் தாயையும் மதிப்பாயாக; உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பவைகளையே என்றார். 20 அந்த வாலிபன் அவரைப் பார்த்து: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான். 21 அதற்கு இயேசு: நீ தேவனுக்கு பூரண சற்குணனாக இருக்கவிரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரர்களுக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குச் செல்வம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். 22 அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாக இருந்தபடியால், இயேசு சொன்னவைகளைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாகப் போய்விட்டான்.

  25. 17 பின்பு அவர் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும்போது, ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். 18 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வது எதினால்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லை. 19 விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, திருடாதே, பொய்ச்சாட்சி சொல்லாதே, ஏமாற்றாதே, உன் தகப்பனையும், தாயையும் கனம்பண்ணு என்கிற கட்டளைகளைப்பற்றி தெரிந்திருக்கிறாயே என்றார். 20 அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறிய வயதிலிருந்து கடைபிடித்து வருகிறேன் என்றான். 21 இயேசு அவனைப் பார்த்து, அவனிடம் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளை எல்லாவற்றையும் விற்று, ஏழைகளுக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார். 22 அவனுக்கு அதிக சொத்துக்கள் இருந்ததால், இந்த வார்த்தையைக் கேட்டு, சோர்ந்து, துக்கத்தோடு போய்விட்டான். 23 அப்பொழுது இயேசு சுற்றிலும்பார்த்து, தம்முடைய சீடர்களைப் பார்த்து: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்றார். 24 சீடர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து: பிள்ளைகளே, செல்வத்தின்மேல் நம்பிக்கையாக இருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது! 25 செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார். 26 அவர்கள் அதிகமாக ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படமுடியும் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். 27 இயேசு அவர்களைப் பார்த்து: மனிதர்களால் இது முடியாது, தேவனால் இது முடியும்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார். 28 அப்பொழுது பேதுரு அவரைப் பார்த்து: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றிவந்தோமே, என்று சொல்லத்தொடங்கினான். 29 அதற்கு இயேசு மறுமொழியாக: எனக்காகவும், நற்செய்திப் பணிக்காகவும், வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, குழந்தைகளையாவது, நிலங்களையாவது விட்டு வந்தவன் எவனும், 30 இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடு நூறுமடங்காக வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 31 ஆனாலும் முந்தினவர்கள் அநேகர் பிந்தினவர்களாகவும், பிந்தினவர்கள் அநேகர் முந்தினவர்களாகவும் இருப்பார்கள் என்றார்.

  26. 18 அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை பெற்றுக்கொள்வதற்க்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். 19 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்லுவானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே. 20 விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கட்டளைகளை நீ தெரிந்திருக்கிறாயே என்றார். 21 அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான். 22 இயேசு அதைக்கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரர்களுக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்கு செல்வம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். 23 அவன் அதிக செல்வந்தனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான். 24 அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாக இருக்கிறது. 25 செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார். 26 அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். 27 அதற்கு அவர்: மனிதர்களால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார். 28 அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான். 29 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றோரையாவது, சகோதரர்களையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும், 30 இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

  27. 27 என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப்பின் செல்லுகிறது. 28 நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதும் இல்லை. 29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லோரையும்விட பெரியவராக இருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.

  28. 13 ஆகவே, நீங்கள் உங்களுடைய மனதை ஆயத்தப்படுத்தி, தெளிவான புத்தி உள்ளவர்களாக இருந்து; இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படும் கிருபையின்மேல் பூரண நம்பிக்கை உள்ளவர்களாக இருங்கள். 14 நீங்கள் முன்பே உங்களுடைய அறியாமையினாலே, உங்களுக்குள் இருந்த இச்சைகளின்படி இனி நடக்காமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாக இருந்து, 15 உங்களை அழைத்தவர் பரிசுத்தராக இருக்கிறதுபோல, நீங்களும் உங்களுடைய நடக்கைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருங்கள். 16 நான் பரிசுத்தர், ஆகவே, நீங்களும் பரிசுத்தமாக இருங்கள் என்று எழுதியிருக்கிறதே. 17 அன்றியும், பட்சபாதம் இல்லாமல் அவனவனுடைய செய்கைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொள்ளுகிறதினால், இங்கே அந்நியர்களைப்போல பயத்தோடு வாழுங்கள். 18 உங்களுடைய முன்னோர்களால் பாரம்பரியமாக நீங்கள் கடைபிடித்துவந்த வீணான செயல்களில் இருந்து, அழிவுள்ள பொருட்களாகிய வெள்ளியினாலும் தங்கத்தினாலும் மீட்கப்படாமல், 19 குற்றம் இல்லாத, மாசு இல்லாத ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையுயர்ந்த இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கள் என்று தெரிந்திருக்கிறீர்களே. 20 அவர் உலகம் உருவாவதற்கு முன்னமே தெரிந்துகொள்ளப்பட்டவராக இருந்து, தமது மூலமாக தேவன்மேல் விசுவாசமாக இருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார். 21 உங்களுடைய விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேல் இருப்பதற்காக, அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார். 22 ஆகவே, நீங்கள் மாய்மாலம் இல்லாத சகோதர அன்பு உள்ளவர்களாவதற்கு, ஆவியானவராலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்களுடைய ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாக இருக்கிறதினால், சுத்தமான இருதயத்தோடு ஒருவரையொருவர் ஊக்கமாக நேசியுங்கள்; 23 அழிவுள்ள விதையினாலே இல்லை, என்றென்றைக்கும் நிலைத்துநிற்கிறதும், ஜீவன் உள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத விதையினாலே மீண்டும் பிறந்திருக்கிறீர்களே.

    24 மனிதர்கள் எல்லோரும் புல்லைப்போலவும்,

    மனிதனுடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவும் இருக்கிறது;

    புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.

    25 கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்;” உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே.

  29. 25 பின்பு அநேக மக்கள் அவரோடுகூடப் பயணமாகப் போகும்போது, அவர்களிடமாக அவர் திரும்பிப்பார்த்து: 26 யாராவது ஒருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீடனாக இருக்கமாட்டான். 27 தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என் பின்னே வராதவன் எனக்குச் சீடனாக இருக்கமுடியாது. 28 உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்டவிருப்பமாக இருந்து, 29 அஸ்திபாரம் போட்டப்பின்பு வேலையை முடிக்கமுடியாமற்போனால், பார்க்கிறவர்களெல்லோரும்: 30 இந்த மனிதன் கட்டத்தொடங்கி, முடிக்க முடியாமற்போனான் என்று சொல்லி தன்னை ஏளனமாக பேசாதபடிக்கு, அதைக் கட்டிமுடிப்பதற்கு தனக்கு வேண்டிய பொருளாதாரம் உண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செலவாகும் தொகையைக் கணக்குப்பார்க்காமல் இருப்பானோ? 31 அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடு போர்செய்யப்போகிறபோது, தன்மேல் இருபதாயிரம் போர்வீரர்களோடு வருகிற அவனைத் தான் பத்தாயிரம் போர்வீரர்களைக்கொண்டு எதிர்க்கக்கூடுமோ கூடாதோ என்று முன்னமே உட்கார்ந்து ஆலோசனை செய்யாமலிருப்பானோ? 32 கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, தூதுவரை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே. 33 அப்படியே உங்களில் எவனாவது தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீடனாக இருக்கமாட்டான்.

  30. 27 அப்பொழுது, பேதுரு அவரைப் பார்த்து: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான். 28 அதற்கு இயேசு: மறுபிறப்பின் காலத்திலே மனிதகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருப்பீர்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 29 என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது இழந்தவன் எவனோ, அவன் நூறுமடங்காகப் பெற்று, நித்தியஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; 30 ஆனாலும், முந்தினோர் அநேகர் பிந்தினோராகவும், பிந்தினோர் அநேகர் முந்தினோராகவும் இருப்பார்கள் என்றார்.

  31. 53 அதற்கு இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் மனிதகுமாரனுடைய சரீரத்தைச் சாப்பிடாமலும், அவருடைய இரத்தத்தைக் குடிக்காமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவன் இல்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 54 என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். 55 என் சரீரம் உண்மையான உணவாக இருக்கிறது, என் இரத்தம் உண்மையான பானமாக இருக்கிறது. 56 என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன். 57 ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். 58 வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே; இது உங்களுடைய தகப்பன்மார்கள் புசித்த மன்னாவைப்போல அல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். 59 கப்பர்நகூமிலுள்ள ஜெப ஆலயத்திலே அவர் உபதேசிக்கும்போது இவைகளைச் சொன்னார்.

    60 அவருடைய சீடர்களில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்றார்கள். 61 சீடர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்கள் என்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களைப் பார்த்து: இது உங்களுக்கு இடறலாக இருக்கிறதோ? 62 மனிதகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் பார்ப்பீர்களானால் எப்படி இருக்கும்? 63 ஆவியே உயிர்ப்பிக்கிறது, சரீரமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாகவும், ஜீவனாகவும் இருக்கிறது. 64 ஆனாலும் உங்களில் விசுவாசிக்காதவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்றார்; விசுவாசிக்காதவர்கள் இவர்கள் என்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இவன்தான் என்றும் ஆரம்பமுதல் இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்: 65 ஒருவன் என் பிதாவின் அனுமதி பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதற்காகவே உங்களுக்குச் சொன்னேன் என்றார். 66 அதுமுதல் அவருடைய சீடர்களில் அநேகர் அவருடனேகூட நடக்காமல் பின்வாங்கிப்போனார்கள். 67 அப்பொழுது இயேசு பன்னிரண்டுபேரையும் பார்த்து: நீங்களும் போய்விட விருப்பமாக இருக்கிறீர்களோ என்றார். 68 சீமோன்பேதுரு அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வார்த்தைகள் உம்மிடத்தில் இருக்கிறது. 69 நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான். 70 இயேசு அவர்களைப் பார்த்து: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாக இருக்கிறான் என்றார். 71 சீமோனின் மகனாகிய யூதாஸ்காரியோத்து பன்னிருவரில் ஒருவனாக இருந்தும், தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனாக இருந்தபடியினால் அவனைக்குறித்து இப்படிச் சொன்னார்.

  32. 16 பதினொரு சீடர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள். 17 அங்கே அவர்கள் அவரைப் பார்த்து, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள். 18 அப்பொழுது இயேசு அருகில் வந்து, அவர்களைப் பார்த்து: பரலோகத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 19 ஆகவே, நீங்கள் புறப்பட்டுப்போய், எல்லா தேசத்து மக்களையும் சீடராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இதோ, உலகத்தின் இறுதிவரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

  33. 13 அவர் மீண்டும் புறப்பட்டுக் கடல் அருகே போனார்; அப்பொழுது மக்கள் எல்லோரும் அவரிடம் வந்தார்கள்; அவர்களுக்குப் போதனைப்பண்ணினார். 14 அப்பொழுது அவர் நடந்துபோகும்போது, அல்பேயுவின் குமாரனாகிய லேவி வரிவசூலிக்கும் மையத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து: என் பின்னே வாஎன்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்னேசென்றான்.

  34. 1 நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். 2 பூமியிலுள்ளவைகளை இல்லை, மேலானவைகளையே விரும்புங்கள். 3 ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்களுடைய ஜீவன் கிறிஸ்துவோடு தேவனுக்குள் மறைந்திருக்கிறது. 4 நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடுகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள். 5 ஆகவே, விபசாரம், அசுத்தம், மோகம், தீய எண்ணம், விக்கிரக ஆராதனையான பொருளாசை ஆகிய இந்த உலகத்திற்குரிய பாவ சுபாவத்தை அழித்துப்போடுங்கள். 6 இவைகளினாலேயே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வரும். 7 நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே வாழ்ந்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள். 8 இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்களுடைய வாயிலிருந்து வரக்கூடாத நிந்தனையும், வம்புவார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள். 9 ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனிதனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, 10 தன்னைப் படைத்தவருடைய சாயலுக்கு ஒப்பாக பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொண்டிருக்கிறீர்களே. 11 அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனம் உள்ளவனென்றும், விருத்தசேதனம் இல்லாதவனென்றுமில்லை, யூதனல்லாதவனென்றும் வெளிதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுதந்திரமானவனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லோரிலும் எல்லாமுமாக இருக்கிறார். 12 ஆகவே, நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாக, உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், அமைதியையும், நீடிய பொறுமையையும் அணிந்துகொண்டு; 13 ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். 14 இவை எல்லாவற்றின்மேலும், பூரண நற்குணத்தின் கட்டாகிய அன்பை அணிந்துகொள்ளுங்கள். 15 தேவசமாதானம் உங்களுடைய இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியுள்ளவர்களாகவும் இருங்கள். 16 கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே எல்லா ஞானத்தோடும் பரிபூரணமாக குடியிருப்பதாக; பாடல்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்களுடைய இருதயத்திலே கர்த்த்தரைப் பக்தியுடன் பாடி; 17 வார்த்தையினாலாவது செயல்களினாலாவது, நீங்கள் எதைச்செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் மூலமாகப் பிதாவாகிய தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

  35. 2 பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம், இனி எவ்விதமாக இருப்போம் என்று இன்னும் வெளிப்படவில்லை; ஆனாலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற பிரகாரமாகவே நாம் அவரைக் காண்பதினால், அவருடைய சாயலாக இருப்போம் என்று அறிந்திருக்கிறோம். 3 அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவன் எவனும், அவர் சுத்தமுள்ளவராக இருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.

  36. 1 நான் உண்மையான திராட்சைச்செடி, என் பிதா திராட்சைத்தோட்டக்காரர். 2 என்னில் கனிகொடுக்காதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்செய்கிறார். 3 நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாக இருக்கிறீர்கள். 4 என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சைச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாக கனிகொடுக்காததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். 5 நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னை அல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது. 6 ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எரியப்பட்ட கொடியைப்போல அவன் எரியப்பட்டு உலர்ந்துபோவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோகும். 7 நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவது எதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். 8 நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீடராக இருப்பீர்கள். 9 பிதா என்னில் அன்பாக இருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாக இருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். 10 நான் என் பிதாவின் கட்டளைகளைக் கடைபிடித்து அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைபிடித்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள். 11 என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன். 12 நான் உங்களில் அன்பாக இருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாக இருக்கவேண்டும் என்பதே என்னுடைய கட்டளையாக இருக்கிறது. 13 ஒருவன் தன் நண்பனுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை. 14 நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் நண்பர்களாக இருப்பீர்கள். 15 இனி நான் உங்களை வேலைக்காரர்கள் என்று சொல்லுகிறதில்லை, வேலைக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களை நண்பர்கள் என்றேன், ஏனென்றால், என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன். 16 நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்ளுவது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கும்படி நீங்கள் போய்க் கனி கொடுக்கும்படிக்கும், உங்களுடைய கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன். 17 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்.

  37. 1 ஆனபடியால், கிறிஸ்து இயேசுவிற்கு உட்பட்டவர்களாக இருந்து, சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்களுக்கு தண்டனைத்தீர்ப்பு இல்லை. 2 ஜீவனுடைய ஆவியானவரின் பிரமாணம் கிறிஸ்து இயேசுவிற்குள் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கினதே. 3 அது எப்படியென்றால், சரீரத்தினாலே பலவீனமாக்கப்பட்ட நியாயப்பிரமாணம் செய்யமுடியாததை தேவனே செய்வதற்காக, தம்முடைய குமாரனைப் பாவசரீரத்தின் சாயலாகவும், பாவத்தை நீக்கும் பலியாகவும் அனுப்பி, சரீரத்திலே பாவத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்த்தார். 4 சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிற நம்மிடம் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறுவதற்காகவே அப்படிச் செய்தார். 5 அன்றியும் சரீரத்தின்படி நடக்கிறவர்கள் சரீரத்திற்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்கள் ஆவியானவருக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். 6 சரீரசிந்தை மரணம்; ஆவியானவரின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாகும். 7 எப்படியென்றால், சரீரசிந்தை தேவனுக்கு எதிரான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியமுடியாமலும் இருக்கிறது. 8 சரீரத்திற்கு உட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாக இருக்கமாட்டார்கள். 9 தேவனுடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால், நீங்கள் சரீரத்திற்கு உட்பட்டவர்களாக இல்லாமல் ஆவியானவருக்கு உட்பட்டவர்களாக இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியானவர் இல்லாதவன் அவருடையவன் இல்லை.

  38. 8 அதுமட்டும் இல்லை, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். 9 நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்வதற்காக, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாக இல்லாமல், கிறிஸ்துவின்மேல் உள்ள விசுவாசத்தினால் வருகிறதும், விசுவாசம் மூலமாக தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாக இருந்து, கிறிஸ்துவிற்குள் இருக்கிறவன் என்று தெரியும்படிக்கும், 10 இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் தெரிந்துகொள்வதற்கும், அவருடைய மரணத்திற்கு இணையான மரணத்திற்குள்ளாகி, எப்படியாவது நான் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பதற்குத் தகுதியாவதற்கும், 11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்றும் குப்பையென்றும் நினைக்கிறேன்.

  39. 8 கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானது இல்லை, இது தேவனுடைய ஈவு; 9 ஒருவரும் பெருமைப்படாதபடி இது செயல்களினால் உண்டானது இல்லை; 10 ஏனென்றால், நற்செயல்களைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவிற்குள் உருவாக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாக இருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.

  40. 31 இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களைப் பார்த்து: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் உண்மையாகவே என் சீடராக இருப்பீர்கள்; 32 சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

  41. 23 அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது. 24 உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயானால் மிகுந்த பலனைக் கொடுக்கும். 25 தன் ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்தியஜீவகாலமாகக் காத்துக்கொள்ளுவான்.

  42. 19 தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. 20 வீணான மனிதனே, செயல்களில்லாத விசுவாசம் உயிரில்லாதது என்று நீ அறியவேண்டுமா? 21 நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் வைக்கும்போது, செயல்களினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்? 22 விசுவாசம் அவனுடைய செயல்களோடுகூட முயற்சிசெய்து, செயல்களினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று பார்க்கிறாயே. 23 அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறியது; அவன் தேவனுடைய நண்பன் எனப்பட்டான். 24 ஆதலால், மனிதன் விசுவாசத்தினால் மாத்திரமல்ல, செயல்களினாலேயும் நீதிமானாக்கப்படுகிறான் என்று நீங்கள் பார்க்கிறீர்களே.

  43. 16 ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகவே, பாம்புகளைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போல வஞ்சகமற்றவர்களுமாக இருங்கள். 17 மனிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்களுடைய ஜெப ஆலயங்களில் உங்களைச் சாட்டையினால் அடிப்பார்கள். 18 அவர்களுக்கும் யூதரல்லாதவர்களுக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள். 19 அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாமலிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்தநேரத்தில் உங்களுக்குக் கொடுக்கப்படும். 20 பேசுகிறவர்கள் நீங்கள் இல்லை, உங்களுடைய பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர். 21 சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றோருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்ய ஒப்புக்கொடுப்பார்கள். 22 என் நாமத்தினாலே நீங்கள் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்; இறுதிவரைக்கும் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். 23 ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் வேறொரு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனிதகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிவரமுடியாதென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 24 சீடன் தன் போதகனைவிடவும், வேலைக்காரன் தன் எஜமானைவிடவும் மேலானவன் இல்லை. 25 சீடன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பதுபோதும். வீட்டு எஜமானையே பெயெல்செபூல் என்று சொன்னார்களென்றால், அவன் குடும்பத்தினரை இன்னும் அதிகமாகச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?

  44. 43 மறுநாளிலே இயேசு கலிலேயாவிற்குப் போக விருப்பமாக இருந்து, பிலிப்புவைப் பார்த்து: நீ என் பின்னே வா என்றார். 44 பிலிப்பு என்பவன், அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா ஊரைச் சேர்ந்தவன். 45 பிலிப்பு நாத்தான்வேலைப் பார்த்து: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதி இருக்கிறவரைப் பார்த்தோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்து ஊரானுமாகிய இயேசுவே என்றான். 46 அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து எந்தவொரு நன்மை உண்டாகக் கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான். 47 இயேசு நாத்தான்வேல் தம்மிடத்தில் வருவதைப் பார்த்து அவனைக்குறித்து: இதோ, கபடம் இல்லாத உத்தம இஸ்ரவேலன் என்றார். 48 அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனைப் பார்த்து: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைப் பார்த்தேன் என்றார். 49 அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். 50 இயேசு அவனுக்கு மறுமொழியாக: அத்திமரத்தின் கீழே உன்னைப் பார்த்தேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைப் பார்ப்பாய் என்றார். 51 பின்னும், அவர் அவனைப் பார்த்து: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனிதகுமாரன் இடத்திலிருந்து ஏறுகிறதையும், இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் பார்ப்பீர்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

  45. 49 மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்ளுவோம். 50 சகோதரர்களே, நான் சொல்லுகிறது என்னவென்றால், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையை சுதந்தரிப்பதில்லை. 51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லோரும் மரணமடைவதில்லை; ஆனாலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிடத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லோரும் மறுரூபமாக்கப்படுவோம். 52 எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாக எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். 53 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் அணிந்துகொள்ளவேண்டும்.

  46. 21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. 22 அந்த நாளில் அநேகர் என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொன்னோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 23 அப்பொழுது, நான் ஒருபோதும் உங்களை அறியவில்லை; அக்கிரமச்செய்கைக்காரர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

    24 ஆகவே, நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனிதனுக்கு ஒப்பிடுவேன். 25 பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. 26 நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனிதனுக்கு ஒப்பிடப்படுவான். 27 பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.

  47. 51 ஒரு வாலிபன் ஒரு போர்வையைமட்டும் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னால் போனான்; அவனைப் பிடித்தார்கள். 52 அவன் தன் போர்வையைப் போட்டுவிட்டு, நிர்வாணமாக அவர்களைவிட்டு ஓடிப்போனான்.

  48. 40 சீடன் தன் குருவிற்கு மேலானவன் இல்லை, பயிற்சியில் முழுமையாக தேறினவன் தன் குருவைப்போல இருப்பான்.

  49. 46 பின்பு அவர்கள் எரிகோவிற்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீடர்களும் மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் பார்வையற்ற மகனாகிய பர்திமேயு, வழியருகில் உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். 47 அவன் நசரேயனாகிய இயேசு வருகிறார் என்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று சத்தமிட்டு கூப்பிடத் தொடங்கினான். 48 அவனை அமைதியாக இருக்கச்சொல்லி மக்கள் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்பைவிட அதிகமாக சத்தமிட்டு கூப்பிட்டான். 49 இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்தப் பார்வையற்றவனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள். 50 உடனே அவன் தன் மேலாடையை கழற்றிவிட்டு, எழுந்து, இயேசுவிடம் வந்தான். 51 இயேசு அவனைப் பார்த்து: நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்று விரும்புகிறாய் என்றார். அதற்கு அந்தப் பார்வையற்றவன்: ஆண்டவரே, நான் பார்வைபெறவேண்டும் என்றான். 52 இயேசு அவனைப் பார்த்து: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வைபெற்று, வழியிலே இயேசுவைப் பின்பற்றி அவர்பின்னே சென்றான்.

  50. 20 கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டேன்; ஆனாலும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் இல்லை, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது சரீரத்தில் பிழைத்திருக்கிறதோ, என்மேல் அன்புவைத்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரன்மேல் உள்ள விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

  51. 1 பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடு அவருடைய பிதாவின் பெயர் தங்களுடைய நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த ஒருஇலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேரும் நிற்பதைப் பார்த்தேன். 2 அல்லாமலும், பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும். பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர்கள் தங்களுடைய சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போல இருந்தது. 3 அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட ஒருஇலட்சத்து நாற்பத்து நான்காயிரம் நபர்களைத்தவிர வேறொருவரும் கற்றுக்கொள்ளமுடியாமல் இருந்தது. 4 பெண்களால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே சென்றாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனிதர்களில் இருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். 5 இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக குற்றமில்லாதவர்களாக இருக்கிறார்கள்.

  52. 33 நீங்கள் சொந்தமாக்கிக்கொள்கிற தேசத்திலே பிழைத்து சுகமாக நீண்டநாட்கள் வாழ, உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்கு ஏற்படுத்தின வழிகளெல்லாவற்றிலும் நடக்கக்கடவீர்கள்.

  53. 13 குறுகின வாசல்வழியாக உள்ளே பிரவேசியுங்கள்; அழிவிற்குப்போகிற வாசல் அகலமும், வழி விசாலமுமாக இருக்கிறது; அதின்வழியாக பிரவேசிக்கிறவர்கள் அநேகர். 14 ஜீவனுக்குப்போகிற வாசல் குறுகினதும், வழி நெருக்கமுமாக இருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.

  54. 15 அப்பொழுது, அவனுடைய வீட்டிலே அவர் விருந்து சாப்பிடும்போது, அநேக வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் அவரோடு வந்திருந்தபடியால், அவர்களும் இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் பந்தியில் இருந்தார்கள்.

  55. 1 பின்பு அவர் கெனேசரேத்துக் கடலின் அருகே நின்றபோது, மக்கள்கூட்டம் தேவவசனத்தைக் கேட்பதற்காக அவரிடம் நெருங்கிவந்தார்கள். 2 அப்பொழுது கடற்கரையிலே நின்றுகொண்டிருந்த இரண்டு படகுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் படகுகளைவிட்டு இறங்கி வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள். 3 அப்பொழுது அவர் ஒரு படகில் ஏறினார், அது சீமோனுடைய படகாக இருந்தது; அதைக் கரையிலிருந்து கொஞ்சம் தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படகில் உட்கார்ந்து, மக்களுக்குப் போதகம்பண்ணினார். 4 அவர் போதகம்பண்ணி முடித்தபின்பு சீமோனை நோக்கி: ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்க உங்களுடைய வலைகளைப் போடுங்கள் என்றார். 5 அதற்குச் சீமோன்: ஐயா, இரவு முழுவதும் நாங்கள் முயற்சிசெய்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; இருப்பினும் உம்முடைய வார்த்தையின்படி நான் வலைகளைப் போடுகிறேன் என்றான். 6 அப்படியே அவர்கள் வலைகளைப் போட்டு, அவர்கள் வலைகள் கிழிந்துபோகும் அளவிற்கு அதிகமான மீன்களைப் பிடித்தார்கள். 7 அப்பொழுது மற்றப் படகில் இருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்று அவர்களுக்கு சைகை காட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படகுகளும் அமிழ்ந்துபோகும் அளவிற்கு நிரப்பினார்கள். 8 சீமோன்பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனிதன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான். 9 அவர்கள் அதிகமான மீன்களைப் பிடித்ததினால், அவனுக்கும் அவனோடுகூட இருந்த எல்லோருக்கும் பிரமிப்பாக இருந்ததால் அப்படிச் சொன்னான். 10 சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும் யோவானும் அப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இனி நீ மனிதர்களைப் பிடிக்கிறவனாக இருப்பாய் என்றார். 11 அவர்கள் படகுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும்விட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.

  56. 10 அப்போஸ்தலர்கள் திரும்பிவந்து, தாங்கள் செய்த எல்லாவற்றையும் அவருக்கு விளக்கிச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனிமையாக இருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தின் வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார். 11 மக்கள் அதை அறிந்து, அவர் பின்னால் போனார்கள்; அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய இராஜ்யத்தைக்குறித்து அவர்களோடு பேசி, சுகமடையவேண்டும் என்றிருந்தவர்களைச் சுகப்படுத்தினார். 12 மாலைநேரத்தில், பன்னிரண்டுபேரும், அவரை நோக்கி: நாம் இருக்கிற இடம் வனாந்திரமாக இருப்பதினால், மக்கள், சுற்றியிருக்கிற ஊர்களிலும் கிராமங்களிலும்போய்த் தங்குவதற்கும், உணவுப்பொருள்களை வாங்கிக்கொள்வதற்கும் அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். 13 இயேசு, அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்கு உணவைக் கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்கள்மட்டுமே இருக்கிறது, இந்த மக்கள் எல்லோருக்கும் உணவு கொடுக்கவேண்டுமானால், நாங்கள்போய் வாங்கிக்கொண்டு வரவேண்டும் என்றார்கள். 14 அங்கு ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படிச் சொல்லுங்கள் என்று தம்முடைய சீடர்களுக்குச் சொன்னார். 15 அவர்கள் அப்படியே எல்லோரையும் உட்காரும்படிச் செய்தார்கள். 16 அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு, மக்களுக்கு பகிர்ந்துகொடுக்கும்படி சீடர்களிடத்தில் கொடுத்தார். 17 எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான உணவுப்பொருட்கள் பன்னிரண்டு கூடைகள்நிறைய எடுக்கப்பட்டது.

  57. 1 அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீடர்களில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீடருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீங்களும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான். 2 அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது:

    பரமண்டலங்களிலிருக்கிற எங்களுடைய பிதாவே,

    உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;

    உம்முடைய ராஜ்யம் வருவதாக;

    உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக;

    3 எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்று எங்களுக்குத் தாரும்;

    4 எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னியும்;

    நாங்களும் எங்களிடம் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே;

    எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும், என்று சொல்லுங்கள்” என்றார்.

  58. 24 அன்றியும் தங்களில் எவன் பெரியவனாக இருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டானது. 25 அவர் அவர்களைப் பார்த்து: யூதரல்லாத இனத்தாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் நற்பணியாளர்கள் என்று எண்ணப்படுகிறார்கள். 26 உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் சேவைசெய்கிறவனைப்போலவும் இருக்கவேண்டும். 27 பந்தியில் உட்கார்ந்திருக்கிறவனோ, சேவைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியில் உட்கார்ந்திருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்களுடைய நடுவிலே சேவைசெய்கிறவனைப்போல இருக்கிறேன்.

  59. 9 நானே வாசல், என்வழியாக ஒருவன் உள்ளே பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும், வெளியும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். 10 திருடன், திருடவும், கொல்லவும், அழிக்கவும் வருகிறானே அன்றி வேறொன்றுக்கும் வரமாட்டான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். 11 நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

  60. 36 சீமோன்பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் போகிற இடத்திற்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய் என்றார். 37 பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப்பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான். 38 இயேசு அவனுக்கு மறுமொழியாக: எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று, உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

  61. 18 உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். 19 நீங்கள் உலகத்தாராக இருந்தால், உலகம் தன்னுடையதை நேசித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராக இல்லாதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. 20 வேலைக்காரன் தன் எஜமானைவிட பெரியவன் இல்லை என்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினது உண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வார்த்தையை கடைபிடித்தது உண்டானால், உங்களுடைய வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள். 21 அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள். 22 நான் வந்து அவர்களோடு பேசாதிருந்தால் அவர்களுக்குப் பாவம் இருக்காது; இப்பொழுதோ தங்களுடைய பாவத்தைக்குறித்து சாக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை. 23 என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான். 24 வேறொருவரும் செய்யாத செயல்களை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தால், அவர்களுக்குப் பாவம் இருக்காது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் பார்த்தும், பகைத்தும் இருக்கிறார்கள். 25 காரணம் இல்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதி இருக்கிற வாக்கியம் நிறைவேறும்படி இப்படியானது. 26 பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார். 27 நீங்களும் ஆரம்பமுதல் என்னுடனே இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்.

  62. 25 நாம் ஆவியானவராலே பிழைத்திருந்தால், அவருக்கேற்றபடி நடப்போம்.

  63. 11 நீங்கள் அசதியாக இல்லாமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் அதிக பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாக இருந்து, 12 உங்களுக்கு நம்பிக்கையின் பூரணநிச்சயம் உண்டாக நீங்கள் எல்லோரும் முடிவுவரைக்கும் அதிக கவனத்தைக் காண்பிக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறோம்.

  64. 3 தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய எல்லாவற்றையும், அவருடைய தெய்வீக வல்லமையானது நமக்குத் தந்தருளினது மட்டுமல்லாமல், 4 இச்சையினால் உலகத்தில் உள்ள தீமைக்குத் தப்பி, தெய்வீக சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாவதற்காக, அதிக மேன்மையும் அருமையான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 5 இப்படியிருக்க, நீங்கள் அதிக கவனம் உள்ளவர்களாக உங்களுடைய விசுவாசத்தோடு தைரியத்தையும், தைரியத்தோடு ஞானத்தையும், 6 ஞானத்தோடு இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடு பொறுமையையும், பொறுமையோடு தேவபக்தியையும், 7 தேவபக்தியோடு சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடு அன்பையும் காட்டுங்கள். 8 இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியில்லாதவர்களுமாக இருக்கமாட்டீர்கள். 9 இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்னமே செய்த பாவங்கள் சுத்திகரிக்கப்பட்டது, என்பதை மறந்து தன் அருகில் உள்ளவைகளையும் காண இயலாதவனாகவும் குருடனாகவும் இருக்கிறான். 10 ஆகவே, சகோதரர்களே, உங்களுடைய அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்குவதற்கு எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருபோதும் இடறிவிழுவதில்லை. 11 இவ்விதமாக, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தல் உங்களுக்குப் பரிபூரணமாக அளிக்கப்படும்.