சீப் மற்றும் மாகோன் வனாந்தரத்தில் தாவீது
கி.மு. 1059
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
13 ஆகையால் தாவீதும் ஏறக்குறைய 600 பேராகிய அவனுடைய மனிதர்களும் எழும்பி, கேகிலாவை விட்டுப் புறப்பட்டு, போகக்கூடிய இடத்திற்குப் போனார்கள்; தாவீது கேகிலாவிலிருந்து தப்பிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தான் புறப்படுகிறதை நிறுத்திவிட்டான். 14 தாவீது வனாந்திரத்திலுள்ள பாதுகாப்பான இடங்களிலே தங்கி, சீப் என்னும் வனாந்தரத்திலிருக்கிற ஒரு மலையிலே தங்கியிருந்தான்; சவுல் அனுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவனுடைய கையில் ஒப்புக்கொடுக்கவில்லை. 15 தன்னுடைய உயிரை வாங்கத் தேடும்படி, சவுல் புறப்பட்டான் என்று தாவீது அறிந்தபடியால், தாவீது சீப் வனாந்திரத்திலுள்ள ஒரு காட்டிலே இருந்தான். 16 அப்பொழுது சவுலின் மகனான யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையை பலப்படுத்தி: 17 நீர் பயப்படவேண்டாம்; என்னுடைய தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்காது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாக இருப்பேன்; அப்படி நடக்கும் என்று என்னுடைய தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார் என்றான். 18 அவர்கள் இருவரும் யெகோவாவுக்கு முன்பாக உடன்படிக்கைசெய்த பின்பு, தாவீது காட்டில் இருந்து விட்டான்; யோனத்தானோ தன்னுடைய வீட்டிற்குப் போனான். 19 பின்பு சீப் ஊர்க்காரர்கள் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள பாதுகாப்பான இடங்களில் ஒளிந்துகொண்டிருக்கிறான் அல்லவா? 20 இப்போதும் ராஜாவே, நீர் உம்முடைய மனவிருப்பத்தின்படி இறங்கி வாரும்; அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க, எங்களால் ஆகும் என்றார்கள். 21 அதற்கு சவுல்: நீங்கள் என்மேல் தயை வைத்ததினாலே, யெகோவாவால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்களாக. 22 நீங்கள் போய், அவனுடைய கால் நடமாடுகிற இடத்தைப் பார்த்து, அங்கே அவனைக் கண்டவன் யார் என்பதையும் இன்னும் நன்றாக விசாரித்து அறியுங்கள்; அவன் மகா தந்திரவாதி என்று எனக்குத் தெரிய வந்தது. 23 அவன் ஒளிந்துகொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும் பார்த்து அறிந்துகொண்டு, நிச்சயமான செய்தியை எனக்குக் கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் உங்களோடு வந்து, அவன் தேசத்தில் இருந்தால், யூதாவிலிருக்கிற சகல ஆயிரம் பேருக்குள்ளும் அவனைத் தேடிப் போவேன் என்றான்.
தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
1 தேவனே, உமது பெயரினிமித்தம் என்னைப் பாதுகாத்து,
உமது வல்லமையினால் எனக்கு நியாயம் செய்யும்.
2 தேவனே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டு, என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கேளும்.
3 அந்நியர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்;
கொடியவர்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள்;
தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி வைப்பதில்லை. (சேலா)
4 இதோ, தேவன் எனக்கு உதவி செய்பவர்;
ஆண்டவர் என்னுடைய ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடு இருக்கிறார்.
5 அவர் என்னுடைய எதிரிகளுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார்,
உமது சத்தியத்திற்காக அவர்களை அழியும்.
6 உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்;
யெகோவாவே, உமது பெயரைத் துதிப்பேன், அது நலமானது.
7 அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்;
என்னுடைய கண் என்னுடைய எதிரிகளில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.
24 அப்பொழுது அவர்கள் எழுந்து, சவுலுக்கு முன்னாலே சீப் ஊருக்குப் போனார்கள்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் எஷிமோனுக்குத் தெற்கான மாகோன் வனாந்திரத்தில் இருந்தார்கள். 25 சவுலும் அவனுடைய மனிதர்களும் தாவீதைத் தேடவருகிறார்கள் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் கன்மலையிலிருந்து இறங்கி, மாகோன் வனாந்திரத்திலே தங்கினான்; அதை சவுல் கேள்விப்பட்டு, மாகோன் வனாந்தரத்திலே தாவீதைப் பின்தொடர்ந்தான். 26 சவுல் மலையின் இந்தப்பக்கத்திலும், தாவீதும், அவனுடைய மனிதர்களும் மலையின் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள்; சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது விரைந்தபோது, சவுலும் அவனுடைய மனிதர்களும் தாவீதையும் அவனுடைய மனிதர்களையும் பிடிக்கத்தக்கதாக அவர்களை சூழ்ந்துகொண்டார்கள். 27 அந்தச் சமயத்தில் ஒரு ஆள் சவுலிடத்தில் வந்து: நீர் சீக்கிரமாய் வாரும்; பெலிஸ்தர்கள் தேசத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றான். 28 அதனால் சவுல் தாவீதைப் பின்தொடருகிறதை விட்டுத் திரும்பி, பெலிஸ்தர்களை எதிர்க்கும்படி போனான்; எனவே, அவ்விடத்திற்குச் சேலா அம்மாலிகோத் என்று பெயரிட்டார்கள்.