என்கேதியில் தாவீது

கி.மு. 1058

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

1 சாமுவேல் 23:29–24:22

29 தாவீது அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, என்கேதியிலுள்ள பாதுகாப்பான இடங்களில் தங்கினான்.

24:1 சவுல் பெலிஸ்தர்களைப் பின்தொடர்வதைவிட்டுத் திரும்பி வந்தபோது, இதோ, தாவீது என்கேதியின் வனாந்திரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது. 2 அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட 3,000 பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவனுடைய மனிதர்களையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின்மேல் தேடப்போனான். 3 வழியோரத்திலிருக்கிற ஆட்டுத்தொழுவங்களிடத்தில் அவன் வந்தபோது, அங்கே ஒரு குகை இருந்தது; அதிலே சவுல் காலைக்கடன் கழிக்கப்போனான்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் அந்தக் குகையின் பக்கங்களில் உட்கார்ந்திருந்தார்கள். 4 அப்பொழுது தாவீதின் மனிதர்கள் அவனை நோக்கி: இதோ, நான் உன்னுடைய எதிரியை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன்னுடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று யெகோவா உன்னோடு சொன்ன நாள் இதுவே என்றார்கள்; தாவீது எழுந்துபோய், சவுலுடைய சால்வையின் தொங்கலை மெதுவாக அறுத்துக்கொண்டான். 5 தாவீது சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்துக்கொண்டதினால் அவனுடைய மனது அடித்துக்கொண்டிருந்தது. 6 அவன் தன்னுடைய மனிதர்களைப் பார்த்து: யெகோவா அபிஷேகம்செய்த என்னுடைய ஆண்டவன்மேல் என்னுடைய கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடி, யெகோவா என்னைக் காப்பாராக; அவர் யெகோவாவால் அபிஷேகம்செய்யப்பட்டவர் என்று சொல்லி, 7 தன்னுடைய மனிதர்களை சவுலின்மேல் எழும்ப விடாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடை செய்தான்; சவுல் எழுந்து, குகையைவிட்டு, வழியே நடந்து போனான். 8 அப்பொழுது தாவீதும் எழுந்து, கெபியிலிருந்து புறப்பட்டு, சவுலுக்குப் பின்னாகப் போய்: ராஜாவாகிய என் ஆண்டவனே என்று கூப்பிட்டான்; சவுல் திரும்பிப்பார்த்தபோது, தாவீது தரை வரை முகங்குனிந்து வணங்கி, 9 சவுலை நோக்கி: தாவீது உமக்கு தீங்கு செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனிதர்களுடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்? 10 இதோ, யெகோவா இன்று குகையில் உம்மை என்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள்; ஆனாலும் என்னுடைய கை உம்மைத் தப்பவிட்டது; என்னுடைய ஆண்டவன்மேல் என்னுடைய கையைப் போடேன்; அவர் யெகோவாவால் அபிஷேகம்செய்யப்பட்டவராமே என்றேன். 11 என்னுடைய தகப்பனே பாரும்; என்னுடைய கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்று போடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என்னுடைய கையிலே தீங்கும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என்னுடைய உயிரை வாங்க, அதை வேட்டையாடுகிறீர். 12 யெகோவா எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயம் விசாரித்து, யெகோவா தாமே என்னுடைய காரியத்தில் உமக்கு நீதியைச் சரிக்கட்டுவாராக; என்னுடைய கை உமக்கு விரோதமாக இருக்காது. 13 முதியோர் வாக்கின்படியே, தீயோரிடமிருந்து தீமை பிறக்கும்; எனவே, என்னுடைய கை உமக்கு விரோதமாக இருக்காது. 14 இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு செத்த நாயையா, ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின்தொடருகிறீர்? 15 யெகோவா நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வாதாடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான். 16 தாவீது இந்த வார்த்தைகளைச் சவுலோடே சொல்லி முடிந்தபின்பு, சவுல்: என்னுடைய மகனான தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுது, 17 தாவீதைப் பார்த்து: நீ என்னைவிட நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; நானோ உனக்கு தீமை செய்தேன். 18 நீ எனக்கு நன்மை செய்ததை இன்று விளங்கச்செய்தாய்; யெகோவா என்னை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக் கொன்று போடவில்லை. 19 ஒருவன் தன்னுடைய எதிரியைக் கண்டுபிடித்தால், அவனைச் சுகமாக போகவிடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காகக் யெகோவா உனக்கு நன்மை செய்வாராக. 20 நீ நிச்சயமாக ராஜாவாக இருப்பாய் என்றும், இஸ்ரவேலின் ராஜ்ஜியம் உன்னுடைய கையில் நிலைக்கும் என்றும் அறிவேன். 21 இப்போதும் நீ எனக்குப் பின்னிருக்கும் என்னுடைய சந்ததியை வேரறுப்பதில்லை என்றும், என்னுடைய தகப்பன் வீட்டாரில் என்னுடைய பெயரை அழித்துப்போடுவதில்லை என்றும் யெகோவாமேல் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான். 22 அப்பொழுது தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்; பின்பு, சவுல் தன்னுடைய வீட்டுக்குப் புறப்பட்டுப்போனான்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் பாதுகாப்பான இடத்திற்கு ஏறிப்போனார்கள்.

சங்கீதங்கள் 57–58

தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.

1 எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்;

உம்மை என்னுடைய ஆத்துமா சார்ந்துகொள்கிறது;

பிரச்சனைகள் கடந்துபோகும்வரை உமது சிறகுகளின் நிழலிலே வந்து அடைவேன்.

2 எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்.

3 என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை சபிக்கும்போது,

அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னைக் காப்பாற்றுவார்: (சேலா).

தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்.

4 என்னுடைய ஆத்துமா சிங்கங்களின் நடுவில் இருக்கிறது;

தீயை இறைக்கிற மனிதர்களுக்குள்ளே கிடக்கிறேன்;

அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கூர்மையான வாளாக இருக்கிறது.

5 தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்;

உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.

6 என்னுடைய கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்;

என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள் (சேலா)

7 என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது,

தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; நான் பாடிப் புகழுவேன்.

8 என்னுடைய மனமே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்;

அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.

9 ஆண்டவரே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்;

தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.

10 உமது கிருபை வானம்வரையும்,

உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரையும் எட்டுகிறது.

11 தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்;

உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.

தான் கெட்டுப்போகாதபடிக்கு அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க தாவீது பாடி இசைத்தலைவனுக்கு ஒப்புவித்த மிக்தாம் என்னும் பாடல்.

58:1 மவுனமாக இருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாக நீதியைப் பேசுவீர்களோ?

மனுமக்களே, நியாயமாகத் தீர்ப்பு செய்வீர்களோ?

2 மனதார நியாயக்கேடு செய்கிறீர்கள்;

பூமியிலே உங்கள் கைகளின் கொடுமையை நிறுத்துக் கொடுக்கிறீர்கள்.

3 துன்மார்க்கர்கள் கர்ப்பத்தில் தோன்றியதுமுதல் முறைதவறுகிறார்கள்;

தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பொய்சொல்லி வழிதப்பிப்போகிறார்கள்.

4 பாம்பின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது.

5 பாம்பாட்டிகள் விநோதமாக ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்தைக் கேட்காதபடிக்குத் தன்னுடைய காதை அடைக்கிற செவிட்டுவிரியனைப்போல் இருக்கிறார்கள்.

6 தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்;

யெகோவாவே, பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடும்.

7 கடந்தோடுகிற தண்ணீரைப்போல் அவர்கள் கழிந்துபோகட்டும்;

அவன் தன்னுடைய அம்புகளைத் தொடுக்கும்போது

அவைகள் சின்னபின்னமாகப் போகட்டும்.

8 கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக;

பெண்ணின் முதிர்ச்சி அடையாத கருவைப்போல் சூரியனைக் காணாமல் இருப்பார்களாக.

9 முள் நெருப்பினால் உங்களுடைய பானைகளில் சூடேறுவதற்கு முன்பே

பச்சையானதையும் எரிந்துபோனதையும் அவர் சுழல் காற்றினால் அடித்துக்கொண்டு போவார்.

10 பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்;

அவன் தன்னுடைய பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.

11 அப்பொழுது, மெய்யாக நீதிமானுக்குப் பலன் உண்டென்றும்,

மெய்யாக பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனிதன் சொல்லுவான்.

சங்கீதங்கள் 63

யூதாவின் பாலைவனத்தில் இருந்தபோது தாவீது பாடிய பாடல்.

1 தேவனே, நீர் என் தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்;

வறண்டதும் சோர்வுற்றதும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது,

என்னுடைய உடலானது உம்மை வாஞ்சிக்கிறது.

2 இப்படியே பரிசுத்த இடத்தில் உம்மைப்பார்க்க ஆசையாக இருந்து,

உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.

3 உயிரைவிட உமது கிருபை நல்லது;

என்னுடைய உதடுகள் உம்மைத் துதிக்கும்.

4 என்னுடைய உயிர் உள்ளவரை நான் உம்மைத் துதித்து,

உமது பெயரை சொல்லிக் கையை உயர்த்துவேன்.

5 நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என்னுடைய ஆத்துமா திருப்தியாகும்;

என்னுடைய வாய் ஆனந்த சந்தோஷமுள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.

6 என்னுடைய படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது,

இரவுநேரங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.

7 நீர் எனக்குத் துணையாக இருந்ததினால்,

உமது இறக்கைகளின் நிழலிலே சந்தோஷப்படுகிறேன்.

8 என்னுடைய ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது;

உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.

9 என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்களோ,

பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள்.

10 அவர்கள் வாளால் விழுவார்கள்;

நரிகளுக்கு இரையாவார்கள்.

11 ராஜாவோ தேவனில் சந்தோஷப்படுவார்;

தேவன் பேரில் சத்தியம்செய்கிறவர்கள்

அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள்;

பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்.