கேகிலாவில் தாவீது

கி.மு. 1060

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

1 சாமுவேல் 23:1

1 இதோ, பெலிஸ்தர்கள் கேகிலாவின்மேல் யுத்தம்செய்து, களஞ்சியங்களைக் கொள்ளையிடுகிறார்கள் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.

1 சாமுவேல் 22:20–23

20 அகிதூபின் மகனான அகிமெலேக்கின் மகன்களில் அபியத்தார் என்னும் பெயருள்ள ஒருவன் தப்பி, தாவீது இருக்கும் இடத்திற்கு ஓடிப்போய், 21 சவுல் யெகோவாவுடைய ஆசாரியர்களைக் கொன்றுபோட்ட செய்தியை தாவீதுக்கு அறிவித்தான். 22 அப்பொழுது தாவீது அபியத்தாரைப் பார்த்து: ஏதோமியனாகிய தோவேக்கு அங்கே இருந்ததாலே, அவன் எப்படியாகிலும் சவுலுக்கு அதை அறிவிப்பான் என்று அன்றையதினமே அறிந்திருந்தேன்; உன்னுடைய தகப்பன் வீட்டார்களாகிய எல்லோருடைய மரணத்திற்கும் காரணம் நானே. 23 நீ என்னிடத்தில் இரு, பயப்படவேண்டாம்; என் உயிரை வாங்கத்தேடுகிறவனே உன்னுடைய உயிரையும் வாங்கத்தேடுகிறான்; நீ என்னுடைய ஆதரவிலே இரு என்றான்.

1 சாமுவேல் 23:6

6 அகிமெலேக்கின் மகனான அபியத்தார் கேகிலாவில் இருக்கிற தாவீதினிடத்தில் தப்பியோடுகிறபோது, அவனிடத்தில் ஒரு ஏபோத்து இருந்தது.

1 சாமுவேல் 23:2–5

2 அப்பொழுது தாவீது: நான் போய், அந்தப் பெலிஸ்தர்களை முறியடிக்கலாமா என்று யெகோவாவிடத்தில் விசாரித்ததற்கு, யெகோவா: நீ போ; பெலிஸ்தர்களை முறிய அடித்து, கேகிலாவை இரட்சிப்பாயாக என்று தாவீதுக்குச் சொன்னார். 3 ஆனாலும் தாவீதின் மனிதர்கள் அவனை பார்த்து: இதோ, நாங்கள் இங்கே யூதாவிலே இருக்கும்போதே பயப்படுகிறோம்; நாங்கள் பெலிஸ்தர்களுடைய இராணுவங்களை எதிர்க்கிறதற்கு கேகிலாவுக்குப் போனால், எவ்வளவு அதிகம் என்றார்கள். 4 அப்பொழுது தாவீது திரும்பவும் யெகோவாவிடத்தில் விசாரித்தபோது, யெகோவா அவனுக்கு பதிலாக: நீ எழுந்து, கேகிலாவுக்குப் போ; நான் பெலிஸ்தர்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார். 5 அப்படியே தாவீது தன் மனிதர்களைக் கூட்டிக்கொண்டு, கேகிலாவுக்குப் போய், பெலிஸ்தர்களோடு யுத்தம்செய்து, அவர்களில் அநேகம்பேரை வெட்டி, அவர்களுடைய ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டு போனான்; இவ்விதமாக கேகிலாவின் குடிகளை இரட்சித்தான்.

1 சாமுவேல் 23:7–12

7 தாவீது கேகிலாவுக்கு வந்தான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தேவன் அவனை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள பட்டணத்திற்குள் நுழைந்ததால், அடைபட்டிருக்கிறான் என்று சவுல் சொல்லி, 8 தாவீதையும் அவனுடைய மனிதர்களையும் முற்றுகை போடும்படி, கேகிலாவுக்குப் போக, எல்லா மக்களையும் யுத்தத்திற்கு அழைத்தான். 9 தனக்கு தீங்கு செய்யச் சவுல் முயற்சிக்கிறான் என்று தாவீது அறிந்துகொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: ஏபோத்தை இங்கே கொண்டுவா என்றான். 10 அப்பொழுது தாவீது: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, சவுல் கேகிலாவுக்கு வந்து, என்னாலே பட்டணத்தை அழிக்க வழிதேடுகிறான் என்று உமது அடியானாகிய நான் நிச்சயமாய்க் கேள்விப்பட்டேன். 11 கேகிலா பட்டணத்தார்கள் என்னை அவனுடைய கையில் ஒப்புக்கொடுப்பார்களோ, உம்முடைய அடியான் கேள்விப்பட்டபடி சவுல் வருவானோ, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, இதை உம்முடைய அடியானுக்குத் தெரிவிக்கவேண்டும் என்றான். அதற்குக் யெகோவா: அவன் வருவான் என்றார். 12 கேகிலா பட்டணத்தார்கள் என்னையும் என்னுடைய மனிதர்களையும் சவுலின் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ என்று தாவீது கேட்டதற்கு, யெகோவா: ஒப்புக்கொடுப்பார்கள் என்றார்.

சங்கீதங்கள் 31

இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.

1 யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்;

நான் ஒருபோதும் வெட்கமடையாதபடி செய்யும்;

உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.

2 உமது செவியை எனக்குச் சாய்த்து,

சீக்கிரமாக என்னைத் தப்புவியும்;

நீர் எனக்குப் பலத்த கோபுரமும்,

எனக்கு அடைக்கலமான கன்மலையுமாக இரும்.

3 என் கன்மலையும் என் கோட்டையும் நீரே;

உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி,

என்னை நடத்தியருளும்.

4 அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்;

தேவனே நீரே எனக்கு அடைக்கலம்.

5 உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்;

சத்தியபரனாகிய யெகோவாவே,

நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.

6 பொய் தெய்வங்ககளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து,

யெகோவாவையே நம்பியிருக்கிறேன்.

7 உமது, கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்;

நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து,

என் ஆத்தும துயரங்களை அறிந்திருக்கிறீர்.

8 எதிரியின் கையில் என்னை ஒப்புக்கொடுக்காமல்,

என்னுடைய பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர்.

9 எனக்கு இரங்கும் யெகோவாவே, நான் நெருக்கப்படுகிறேன்;

துக்கத்தினால் என் கண்ணும்

என் ஆத்துமாவும் என்னுடைய வயிறுங்கூடக் கருகிப்போனது.

10 என்னுடைய வாழ்க்கை துக்கத்தினாலும்,

என்னுடைய வருடங்கள் தவிப்பினாலும் கழிந்துபோனது;

என்னுடைய பாடுகளினாலே என்னுடைய பெலன் குறைந்து,

என்னுடைய எலும்புகள் உலர்ந்துபோனது.

11 என்னுடைய எதிரிகளாகிய அனைவர் நிமித்தமும்,

நான் என் அயலாருக்கு நிந்தையும்,

எனக்கு அறிமுகமானவர்களுக்கு அலட்சியமுமானேன்;

வீதியிலே என்னைக் கண்டவர்கள்

எனக்கு விலகி ஓடிப்போனார்கள்.

12 செத்தவனைப்போல எல்லோராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்;

உடைந்த பாத்திரத்தைப்போல ஆனேன்.

13 அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்;

எனக்கு விரோதமாக அவர்கள் ஒன்றாக ஆலோசனை செய்கிறதினால்

திகில் என்னைச் சூழ்ந்துகொண்டது;

என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறார்கள்.

14 நானோ, யெகோவாவே,

உம்மை நம்பியிருக்கிறேன்;

நீரே என் தேவன் என்று சொன்னேன்.

15 என்னுடைய காலங்கள் உமது கரத்திலிருக்கிறது;

என் எதிரிகளின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும்

என்னைத் தப்புவியும்.

16 நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கச்செய்து,

உமது கிருபையினாலே என்னை இரட்சியும்.

17 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்;

நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்;

துன்மார்க்கர்கள் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாக இருக்கட்டும்.

18 நீதிமானுக்கு விரோதமாகப்

பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாகப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக.

19 உமக்குப் பயந்தவர்களுக்கும்,

மனிதர்களுக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும்,

நீர் உண்டாக்கி வைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாக இருக்கிறது!

20 மனிதர்களுடைய அகங்காரத்திற்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து,

நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி,

உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர்.

21 யெகோவா பாதுகாப்பான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாக தெரியப்படுத்தினபடியால்,

அவருக்கு ஸ்தோத்திரம்.

22 உம்முடைய கண்களுக்கு முன்பாக இல்லாதபடிக்கு வெட்டுண்டேன் என்று

நான் என்னுடைய மனக்கலக்கத்திலே சொன்னேன்;

ஆனாலும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது,

என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்.

23 யெகோவாவுடைய பரிசுத்தவான்களே,

நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்;

உண்மையானவனைக் யெகோவா தற்காத்து,

வீம்பு செய்கிறவனுக்குப் பூரணமாகப் பதிலளிப்பார்.

24 யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களே,

நீங்களெல்லாரும் திடமனதாக இருங்கள்,

அவர் உங்களுடைய இருதயத்தை உறுதிப்படுத்துவார்.