35 Bible Verses About Loving Your Siblings

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

Bible Verses About Loving Your Siblings
  1. 18 அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தை வெளியே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் இல்லை. 19 அவர் முதலாவது நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்பு செலுத்துகிறோம். 20 தேவனிடத்தில் அன்பு கூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு செலுத்துவான்? 21 தேவனிடத்தில் அன்புசெலுத்துகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கட்டளையை அவராலே பெற்றிருக்கிறோம்.

  2. 46 இப்படி அவர் மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, அவருடைய தாயாரும் சகோதரர்களும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள். 47 அப்பொழுது, ஒருவன் அவரைப் பார்த்து: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் உம்மோடு பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான். 48 தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் மறுமொழியாக: என் தாயார் யார்? என் சகோதரர்கள் யார்? என்று சொல்லி, 49 தம்முடைய கையைத் தமது சீடர்களுக்கு நேராக நீட்டி; இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே! 50 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்கு சகோதரனும், சகோதரியும், தாயுமாகவும் இருக்கிறான் என்றார்.

  3. 16 அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரர்களுக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாக இருக்கிறோம். 17 ஒருவன் இந்த உலகத்தின் செல்வம் உடையவனாக இருந்து, தன் சகோதரனுக்கு வறுமை உண்டென்று அறிந்து, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவஅன்பு நிலைபெறுகிறது எப்படி? 18 என் பிள்ளைகளே, வசனத்தினாலும் பேச்சினாலுமல்ல, செயல்களினாலும் உண்மையினாலும் அன்பு செலுத்துவோம்.

  4. 22 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு உரியவனாக இருப்பான். 23 ஆகவே, நீ பலிபீடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயானால், 24 அங்கே பலிபீடத்தின்முன்பு உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முதலில் உன் சகோதரனோடு ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.

  5. 9 உங்களுடைய அன்பு மாயமில்லாமல் இருக்கட்டும், தீமையை வெறுத்து, நன்மையைப் பிடித்துக்கொண்டிருங்கள். 10 சகோதர அன்பினாலே ஒருவர்மேல் ஒருவர் பாசமாக இருங்கள்; மரியாதை கொடுக்கிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். 11 அசதியாக இல்லாமல் எச்சரிக்கையாக இருங்கள்; ஆவியிலே அனலாக இருங்கள்; கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்.

  6. 7 பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாக இருப்போம்; ஏனென்றால், அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். 8 அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார். 9 தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இந்த உலகத்திற்கு அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. 10 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற பாவநிவாரணபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.

  7. 12 நான் உங்களில் அன்பாக இருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாக இருக்கவேண்டும் என்பதே என்னுடைய கட்டளையாக இருக்கிறது. 13 ஒருவன் தன் நண்பனுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை.

  8. 34 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருங்கள்; நான் உங்களில் அன்பாக இருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாக இருங்கள் என்கிற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். 35 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பு உள்ளவர்களாக இருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீடர்கள் என்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.

  9. 1 சகோதர அன்பு நிலைத்திருக்கட்டும். 2 அந்நியர்களை உபசரிக்க மறக்காதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதர்களையும் உபசரித்ததுண்டு.

  10. 22 ஆகவே, நீங்கள் மாய்மாலம் இல்லாத சகோதர அன்பு உள்ளவர்களாவதற்கு, ஆவியானவராலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்களுடைய ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாக இருக்கிறதினால், சுத்தமான இருதயத்தோடு ஒருவரையொருவர் ஊக்கமாக நேசியுங்கள்;

  11. 8 எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பு உள்ளவர்களாக இருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும். 9 முறுமுறுப்பு இல்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள். 10 அவனவன் பெற்றுக்கொண்ட வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல பொறுப்பாளர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள். 11 ஒருவன் போதனை செய்தால் தேவனுடைய வார்த்தைகளின்படியே போதனை செய்யவேண்டும்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படியே உதவிசெய்யவேண்டும்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாக தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

  12. 17 நண்பன் எல்லாக் காலத்திலும் நேசிப்பான்;

    இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.

  13. 8 மேலும், நீங்களெல்லோரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கம் உள்ளவர்களும், சகோதரஅன்பு உள்ளவர்களும், மனதுருக்கம் உள்ளவர்களும், தாழ்மை உள்ளவர்களுமாக இருந்து,

  14. 11 நாம் ஒருவரையொருவர் நேசிக்கவேண்டும் என்பதே நீங்கள் ஆரம்பமுதல் கேள்விப்பட்ட செய்தியாக இருக்கிறது.

  15. 32 ஒருவருக்கொருவர் தயவாகவும் மனஉருக்கமாகவும் இருந்து, கிறிஸ்துவிற்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

  16. தாவீதின் ஆரோகண பாடல்.

    1 இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்செய்கிறது

    எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?

  17. 16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். 17 உலகத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

  18. 8 ஒருவரிலொருவர் அன்பு செலுத்துகிற கடனைத்தவிர, வேறு எதிலும் யாருக்கும் கடன்படாமல் இருங்கள்; அயலகத்தாரிடம் அன்புசெலுத்துகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான். 9 எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சிக்காமல் இருப்பாயாக என்கிற இந்தக் கட்டளைகளும், வேறு எந்தக் கட்டளையும், உன்னிடத்தில் நீ அன்பாக செலுத்துவதுபோல மற்றவனிடமும் அன்புசெலுத்துவாயாக என்கிற ஒரே வாக்கியத்தில் அடங்கியிருக்கிறது. 10 அன்பு மற்றவனுக்கு தீமை செய்யாது; எனவே, அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாக இருக்கிறது.

  19. 1 ஆகவே, கிறிஸ்துவிற்குள் எந்தவொரு ஆறுதலும், அன்பினாலே எந்தவொரு தேறுதலும், ஆவியின் எந்தவொரு ஐக்கியமும், எந்தவொரு உருக்கமான பரிவும் இரக்கங்களும் உண்டானால், 2 நீங்கள் ஒரே சிந்தையும் ஒரே அன்பும் உள்ளவர்களாக இருந்து, இசைந்த ஆத்துமாக்களாக ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். 3 ஒன்றையும் சுயநலத்தினாலோ, வீண்பெருமையினாலோ செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் உங்களைவிட மேன்மையானவர்களாக நினைக்கவேண்டும். 4 அவனவன் தன்னுடைய காரியங்களை மட்டுமல்ல, மற்றவர்களுடைய காரியங்களிலும் உதவிசெய்யவேண்டும்.

  20. 9 ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான். 10 தன் சகோதரனிடத்தில் அன்புசெலுத்துகிறவன் ஒளியிலே நிலைத்திருக்கிறான்; அவனிடத்தில் தடுமாற்றம் ஒன்றுமில்லை. 11 தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் எங்கேயென்று தெரியாமல் இருக்கிறான்.

  21. 11 பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாக நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிலொருவர் அன்புகூரக் கடனாளிகளாக இருக்கிறோம்.

  22. 17 “உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகைக்காதே; பிறன்மேல் பாவம் சுமராதபடி அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும்.

  23. 24 நண்பர்கள் உள்ளவன் நேசிக்கவேண்டும்;

    சகோதரனைவிட அதிக சொந்தமாக நேசிக்கப்படுபவனும் உண்டு.

  24. 17 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்.

  25. 12 தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிலொருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.

  26. 9 மேலும்: தீருவினுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அதின் தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்களுடைய சகோதர்களின் உடன்படிக்கையை நினைக்காமல், சிறைப்பட்டவர்களை முழுவதும் ஏதோமியர்கள் கையில் ஒப்புவித்தார்களே.

  27. 15 உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனிமையாக இருக்கும்போது, அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய். 16 அவன் செவிகொடுக்காமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய ஒப்புதல்களினாலே காரியங்களெல்லாம் உறுதிப்படும்படி இரண்டொருவரை உன்னுடனே அழைத்துக்கொண்டு போ. 17 அவர்களுக்கும் அவன் செவிகொடுக்காமற்போனால், அதை சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடுக்காமற்போனால், அவன் உனக்கு வேறுமார்க்கத்தான்போலவும் வரி வசூலிப்பவனைப்போலவும் இருப்பானாக.

  28. 31 மனிதர்கள் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.

  29. 38 பின்பு, அவர்கள் பயணம்செய்யும்போது, அவர் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தார். அங்கே மார்த்தாள் என்னும் பெயருள்ள ஒரு பெண் அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள். 39 அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். 40 மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக்குறித்து உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். 41 இயேசு அவளுக்கு மறுமொழியாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். 42 தேவையானது ஒன்றே, மரியாள் தன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.

  30. 26 யாராவது ஒருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீடனாக இருக்கமாட்டான்.

  31. 11 நான் உங்களுக்கு எழுதினது என்னவென்றால், சகோதரன் என்னப்பட்ட ஒருவன் விபசாராக்காரனாகவோ, பொருளாசைக்காரனாகவோ, விக்கிரக ஆராதனைக்காரனாகவோ, தூஷிக்கிறவனாகவோ, குடிவெறியனாகவோ, கொள்ளைக்காரனாகவோ இருந்தால், அவனோடுகூட கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனோடுகூட உண்ணவும் கூடாது.

  32. 1 நான் மனிதர்களுடைய மொழிகளையும் தூதர்களுடைய மொழிகளையும் பேசினாலும், எனக்கு அன்பு இல்லையென்றால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன். 2 நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாக இருந்து, எல்லா இரகசியங்களையும், எல்லா அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பெயர்க்கத்தக்கதாக விசுவாசமும் உள்ளவனாக இருந்தாலும், அன்பு இல்லையென்றால் நான் ஒன்றுமில்லை. 3 எனக்கு உண்டான எல்லாவற்றையும் நான் அன்னதானம் செய்தாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு இல்லையென்றால் எனக்கு பயன் ஒன்றுமில்லை. 4 அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமை இல்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாக இருக்காது, 5 அயோக்கியமானதைச் செய்யாது, தன்னலத்தைத் தேடாது, கோபமடையாது, தீங்கு நினைக்காது, 6 அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். 7 எல்லாவற்றையும் தாங்கும், எல்லாவற்றையும் விசுவாசிக்கும், எல்லாவற்றையும் நம்பும், எல்லாவற்றையும் சகிக்கும். 8 அன்பு ஒருபோதும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோகும், அந்நிய மொழிகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோகும்.

  33. 1 எனவே, கர்த்தருக்காக சிறைப்பட்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தி என்னவென்றால், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குத் தகுதி உள்ளவர்களாக நடந்து, 2 மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் அதிக பொறுமையும் உள்ளவர்களாக, அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, 3 சமாதானக்கட்டினால் ஆவியானவர் தரும் ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கு கவனமாக இருங்கள். 4 உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு; 5 ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், 6 எல்லோருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லோர்மேலும், எல்லோரோடும், உங்கள் எல்லோருக்குள்ளும் இருக்கிறவர்.

  34. 14 என் சகோதரர்களே, ஒருவன் தனக்கு விசுவாசம் உண்டென்று சொல்லியும், செயல்களில்லாதவனாக இருந்தால் அவனுக்குப் பயன் என்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? 15 ஒரு சகோதரனாவது சகோதரியாவது, ஆடையில்லாமலும், அனுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, 16 உங்களில் ஒருவன் அவர்களைப் பார்த்து: நீங்கள் சமாதானத்தோடு போங்கள், குளிர்காய்ந்து பசியாற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடுக்காவிட்டால் பயன் என்ன? 17 அப்படியே விசுவாசமும் செயல்களில்லாதிருந்தால் அது தன்னிலேதானே உயிரில்லாததாக இருக்கும். 18 ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்கு செயல்களும் உண்டு; செயல்களில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என் செயல்களினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே.

  35. 14 நாம் சகோதரர்களிடம் அன்பு செலுத்துகிறபடியால், மரணத்தைவிட்டு விலகி ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைபெற்றிருக்கிறான்.