சகரியாவின் கடைசித் தீர்க்கதரிசனங்கள்
கி.மு. 457
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 ஆதிராக் தேசத்திற்கு விரோதமானதும், தமஸ்குவின்மேல் வந்து தங்குவதுமான யெகோவாவுடைய வார்த்தையாகிய செய்தி; மனிதர்களின் கண்களும் இஸ்ரவேலுடைய சகல கோத்திரங்களின் கண்களும் யெகோவாவை பார்த்துக்கொண்டிருக்கும். 2 ஆமாத்தும், மிகவும் ஞானமுள்ள தீருவும், சீதோனும் அதின் எல்லைக்குள்ளாக இருக்கும். 3 தீரு தனக்கு மதிலைக் கட்டி, தூளைப்போல் வெள்ளியையும், வீதிகளின் சேற்றைப்போல் பசும்பொன்னையும் சேர்த்துவைத்தது. 4 இதோ, ஆண்டவர் அதைத் தள்ளிவிட்டு, சமுத்திரத்தில் அதின் பலத்தை முறித்துப்போடுவார்; அது நெருப்பிற்கு இரையாகும். 5 அஸ்கலோன் அதைக் கண்டு பயப்படும், காசாவும் அதைக் கண்டு மிகவும் துக்கிக்கும், எக்ரோனும் தன் நம்பிக்கை அற்றுப்போனபடியால் மிகவும் புலம்பும்; காத்சாவில் ராஜா அழிந்துபோவான்; அஸ்கலோன் குடியற்று இருக்கும். 6 அஸ்தோத்தில் வேசிப்பிள்ளைகள் தங்கியிருப்பார்கள்; நான் பெலிஸ்தரின் கர்வத்தை அழிப்பேன். 7 அவனுடைய இரத்தத்தை அவன் வாயிலிருந்தும், அவனுடைய அருவருப்புகளை அவன் பற்களின் நடுவிலிருந்தும் நீக்கிப்போடுவேன்; அவனோ நம்முடைய தேவனுக்கென்று மீதியாக வைக்கப்பட்டு, யூதாவிலே பிரபுவைப்போல இருப்பான்; எக்ரோன் எபூசியனைப்போல இருப்பான். 8 சேனையானது புறப்படும்போதும், திரும்பி வரும்போதும், என் ஆலயம் காக்கப்படுவதற்காக அதைச் சுற்றிலும் முகாமிடுவேன்; இனி ஒடுக்குகிறவன் அவர்களிடத்தில் கடந்துவருவதில்லை; அதை என் கண்களினாலே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
9 மகளாகிய சீயோனே, மிகவும் மகிழ்ச்சியாயிரு; மகளாகிய எருசலேமே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் பெண் கழுதைக்குட்டியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார். 10 எப்பிராயீமிலிருந்து இரதங்களையும், எருசலேமிலிருந்து குதிரைகளையும் அற்றுப்போகச்செய்வேன், யுத்தவில்லும் இல்லாமற்போகும்; அவர் மக்களுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரம் துவங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதுவங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் செல்லும். 11 உனக்கு நான் செய்வது என்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைசெய்வேன். 12 நம்பிக்கையுடைய சிறைகளே, பாதுகாப்பிற்குள் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன். 13 நான் எனக்கென்று யூதாவை நாணேற்றி, எப்பிராயீமிலே வில்லை நிரப்பி, சீயோனே, உன் மக்களைக் கிரேக்க தேசமக்களுக்கு விரோதமாக எழுப்பி, உன்னைப் பராக்கிரமசாலியின் பட்டயத்திற்கு ஒப்பாக்குவேன். 14 அவர்கள் பக்கம் யெகோவா காணப்படுவார்; அவருடைய அம்பு மின்னலைப்போலப் புறப்படும்; யெகோவாகிய ஆண்டவர் எக்காளம் ஊதி, தென்திசைச் சுழல்காற்றுகளோடே நடந்துவருவார். 15 சேனைகளின் யெகோவா அவர்களைக் காப்பாற்றுவார்; அவர்கள் அழித்து, கவண்கற்களால் கீழ்ப்படுத்திக்கொள்வார்கள்; அவர்கள் மதுமயக்கத்தினால் ஆரவாரம் செய்வார்கள்; பானபாத்திரங்கள்போலவும், பலிபீடத்தின் கோடிகளைப்போலவும் நிறைந்திருப்பார்கள். 16 அந்நாளில் அவர்களுடைய தேவனாகிய யெகோவா தம்முடைய ஜனமான மந்தையாகிய அவர்களை இரட்சிப்பார்; அவர்கள் அவருடைய தேசத்தில் ஏற்றப்பட்ட கொடிகளின் கிரீடத்தில் பதிந்திருப்பார்கள். 17 அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது? தானியம் வாலிபர்களையும், புது திராட்சைரசம் இளம்பெண்களையும் வளர்க்கும்.
10:1 பின்மாரிகாலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்; அப்பொழுது யெகோவா மின்னல்களை உண்டாக்கி, வயல்வெளியில் அவரவருக்குப் பயிருண்டாக அவர்களுக்கு மழையைக் கட்டளையிடுவார். 2 சுரூபங்கள் பொய்யானதைச் சொல்லிற்று; குறிசொல்லுகிறவர்கள் பொய்யை கண்டார்கள்; சொப்பனக்காரர்கள் வீணானதைச் சொல்லி, பயனில்லாததைச் சொல்லி தேற்றினார்கள்; ஆகையால் மக்கள் ஆடுகளைப்போல சிதறி, மேய்ப்பனில்லாததினால் சிறுமைப்பட்டார்கள். 3 மேய்ப்பருக்கு விரோதமாக என் கோபம் மூண்டது; கடாக்களைத் தண்டித்தேன்; சேனைகளின் யெகோவா யூதா வம்சத்தாராகிய தமது மந்தையை விசாரித்து, அவர்களை யுத்தத்திலே தமது சிறந்த குதிரையாக நிறுத்துவார். 4 அவர்களிலிருந்து மூலைக்கல்லும், அவர்களிலிருந்து கூடாரமுளையும், அவர்களிலிருந்து யுத்தவில்லும் வரும்; அவர்களிலிருந்து ஆளுகிற அனைவரும் ஒன்றாகப் புறப்படுவார்கள். 5 அவர்கள் போரிலே தங்கள் எதிரிகளை வீதிகளின் சேற்றில் மிதிக்கிற பராக்கிரமசாலிகளைப்போல இருந்து போர் செய்வார்கள்; யெகோவா அவர்களுடன் இருப்பார்; குதிரைகளின்மேல் ஏறிவருகிறவர்கள் வெட்கப்படுவார்கள். 6 நான் யூதா வம்சத்தாரைப் பலப்படுத்தி, யோசேப்பு வம்சத்தாரை காப்பாற்றி, அவர்களைத் திரும்ப நிலைக்கச்செய்வேன்; நான் அவர்களுக்கு இரங்கினேன்; அவர்கள் என்னால் ஒருக்காலும் தள்ளிவிடப்படாதவர்களைப்போல இருப்பார்கள்; நான் அவர்களுடைய தேவனாகிய யெகோவா, நான் அவர்களுக்குச் செவிகொடுப்பேன். 7 எப்பிராயீம் மக்கள் திறமையானவர்களைப்போல இருப்பார்கள்; மதுபானத்தால் களிப்பதுபோல, அவர்களுடைய இருதயம் களிக்கும்; அவர்களுடைய பிள்ளைகளும் அதைக் கண்டு மகிழுவார்கள்; அவர்கள் இருதயம் யெகோவாவுக்குள் களிகூரும். 8 நான் அவர்களைப் பார்த்து சைகைகாட்டி அவர்களைக் கூட்டிக்கொள்ளுவேன்; அவர்களை மீட்டுக்கொண்டேன்; அவர்கள் பெருகியிருந்ததுபோலவே பெருகுவார்கள். 9 நான் அவர்களை மக்களுக்குள்ளே சிதறடித்தபின்பு, அவர்கள் தூரதேசங்களிலே என்னை நினைத்து தங்கள் பிள்ளைகளுடன் பிழைத்துத் திரும்புவார்கள். 10 நான் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து திரும்பிவரச்செய்து, அவர்களை அசீரியாவிலிருந்து கூட்டிக்கொண்டு, அவர்களைக் கீலேயாத் தேசத்திற்கும் லீபனோனுக்கும் வரச்செய்வேன்; அவர்களுக்கு இடம் போதாமலிருக்கும். 11 இடுக்கமென்கிற சமுத்திரத்தைக் கடக்கும்போது அவர் சமுத்திரத்தின் அலைகளை அடிப்பார்; அப்பொழுது நதியின் ஆழங்கள் எல்லாம் வறண்டுபோகும்; அசீரியாவின் கர்வம் தாழ்த்தப்படும், எகிப்தின் கொடுங்கோல் விலகிப்போகும். 12 நான் அவர்களைக் யெகோவாவுக்குள் பலப்படுத்துவேன்; அவர்கள் அவருடைய நாமத்திலே நடந்துகொள்ளுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
11:1 லீபனோனே, நெருப்பு உன் கேதுருமரங்களை அழிக்க உன் வாசல்களைத் திற. 2 தேவதாரு மரங்களே, புலம்புங்கள்; கேதுருமரங்கள் விழுந்ததே; பிரபலமானவைகள் பாழாக்கப்பட்டன. பாசானின் கர்வாலிமரங்களே, புலம்புங்கள்; பாதுகாப்பான சோலை கீழே தள்ளப்பட்டது. 3 மேய்ப்பர்களின் மகிமை அழிந்துபோனதினால், அவர்கள் அலறுகிற சத்தம் கேட்கிறது; யோர்தானின் பெருமை அழிந்துபோனதினால், பாலசிங்கங்கள் கர்ச்சிக்கிற சத்தம் கேட்கிறது. 4 என் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், கொலைசெய்யப்படுகிற ஆடுகளை மேய்க்கவேண்டும். 5 அவைகளை உடையவர்கள், அவைகளைக் கொன்றுபோட்டுத் தங்களுக்குக் குற்றமில்லையென்று நினைக்கிறார்கள். அவைகளை விற்கிறவர்கள், யெகோவாவுக்கு ஸ்தோத்திரம், நாங்கள் ஐசுவரியமுள்ளவர்கள் ஆனோம் என்கிறார்கள்; அவைகளை மேய்க்கிறவர்கள், அவைகள்மேல் இரக்கம் வைக்கிறதில்லை. 6 நான் இனி தேசத்து மக்கள்மேல் இரக்கம் வைக்காமல் மனிதர்களில் அனைவரையும் அவனவனுடைய அயலான் கையிலும், அவனவனுடைய ராஜாவின் கைகளிலும் அகப்படச்செய்வேன்; அவர்கள் தேசத்தை அழித்தும், நான் இவர்களை அவர்கள் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று யெகோவா சொல்லுகிறார். 7 கொலை செய்யப்படுகிற மந்தையாகிய சிறுமைப்பட்ட உங்களை நான் மேய்ப்பேன்; நான் இரண்டு கோல்களை எடுத்து, ஒன்றிற்கு அநுக்கிரகம் என்றும், ஒன்றிற்கு தண்டனை என்றும் பெயரிட்டு மந்தையை மேய்த்து, 8 ஒரே மாதத்திலே மூன்று மேய்ப்பர்களையும் அழித்தேன்; என் ஆத்துமா அவர்களை வெறுத்தது; அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது. 9 இனி நான் உங்களை மேய்ப்பதில்லை; சாகிறது சாகட்டும், அழிகிறது அழியட்டும்; மீதியானவைகளோவென்றால், ஒன்றின் மாம்சத்தை ஒன்று சாப்பிடவேண்டும் என்று நான் சொல்லி, 10 அநுக்கிரகம் என்னப்பட்ட என் கோலை எடுத்து, நான் அந்த மக்கள் அனைவருடனும் செய்திருந்த என் உடன்படிக்கை முறிந்துபோகும்படி அதை அழித்துப்போட்டேன். 11 அந்நாளிலே அது இல்லாமல்போனது; அப்படியே மந்தையில் எனக்குக் காத்திருந்த சிறுமைப்பட்டவைகள் அது யெகோவாவுடைய வார்த்தையென்று அறிந்துகொண்டன. 12 உங்கள் பார்வைக்கு நல்லது என்று கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களுடன் சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசுகளை கொடுத்தார்கள். 13 யெகோவா என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசுகளை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று யெகோவாவுடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன். 14 நான் யூதாவிற்கும் இஸ்ரவேலுக்கும் இருக்கிற சகோதர ஐக்கியத்தை இல்லாமல் போகச்செய்ய தண்டனை என்னப்பட்ட என் இரண்டாம் கோலையும் உடைத்தேன். 15 யெகோவா என்னை நோக்கி: நீ மதியற்ற ஒரு மேய்ப்பனுடைய ஆயுதங்களை இன்னும் எடுத்துக்கொள். 16 இதோ, நான் தேசத்திலே ஒரு மேய்ப்பனை எழும்பச்செய்வேன்; அவன் அழிக்கிறவைகளைப் பராமரிக்காமலும், சிதறிப்போனதைத் தேடாமலும், காயப்பட்டதைக் குணமாக்காமலும், இளைத்திருக்கிறதை ஆதரிக்காமலும், கொழுத்ததின் மாம்சத்தைத் தின்று, அவைகளுடைய பாதங்களை உடைத்துப்போடுவான். 17 மந்தையைக் கைவிடுகிற பொய்யான மேய்ப்பனுக்கு ஐயோ, பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலது கண்ணின்மேலும் வரும்; அவன் புயம் முழுவதும் சூம்பிப்போகும்; அவன் வலது கண் முற்றிலும் இருள் அடையும் என்றார்.