எஸ்றாவின் சீர்திருத்தங்கள்

கி.மு. 457

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எஸ்றா 9–10

1 இவைகள் செய்து முடிந்தபின்பு, பிரபுக்கள் என்னிடம் வந்து: இஸ்ரவேல் மக்களும், ஆசாரியர்களும் லேவியர்களும் ஆகிய இவர்கள், கானானியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், எபூசியர்கள், அம்மோனியர்கள், மோவாபியர்கள், எகிப்தியர்கள், அம்மோரியர்கள் என்னும் இந்த தேசங்களின் மக்களுக்கும், அவர்களுடைய அருவருப்புகளுக்கும் விலகியிருக்கவில்லை. 2 எப்படியென்றால், அவர்களுடைய மகள்களிலே தங்களுக்கும் தங்கள் மகன்களுக்கும் பெண்களைத் திருமணம் செய்துகொண்டார்கள்; இப்படியே பரிசுத்த வம்சம்தேசங்களின் மக்களோடே கலந்துவிட்டது; பிரபுக்களின் கையும், அதிகாரிகளின் கையும், இந்தக் குற்றத்தில் முந்தினதாயிருக்கிறது என்றார்கள். 3 இந்தக் காரியத்தை நான் கேட்டபொழுது, என் ஆடையையும் என் சால்வையையும் நான் கிழித்து, என் தலையிலும் என் தாடியிலுமுள்ள முடியைப் பிடுங்கித் திகைத்தவனாக உட்கார்ந்திருந்தேன். 4 அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தின் காரணமாக இஸ்ரவேலுடைய தேவனின் வார்த்தைகளுக்கு நடுங்குகிற அனைவரும் என்னுடன் கூடிக்கொண்டார்கள்; நானோ மாலை பலி செலுத்தப்படும்வரை திகைத்தவனாக உட்கார்ந்துகொண்டிருந்தேன். 5 மாலை பலி செலுத்தப்படும் நேரத்திலே நான் துக்கத்தோடே எழுந்து, கிழித்துக்கொண்ட ஆடையோடும் சால்வையோடும் முழங்காற்படியிட்டு, என் கைகளை என் தேவனாகிய யெகோவாவுக்கு நேராக விரித்து: 6 என் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கப்பட்டுக் கலங்குகிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்கு மேலாகப் பெருகினது; எங்கள் குற்றம் வானம்வரை உயர்ந்துபோனது. 7 எங்கள் பிதாக்களின் நாட்கள்முதல் இந்நாள்வரை நாங்கள் பெரிய குற்றத்திற்கு உள்ளாயிருக்கிறோம்; எங்கள் அக்கிரமங்களினாலே நாங்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் ஆசாரியர்களும், இந்நாளிலிருக்கிறதுபோல, அந்நியதேச ராஜாக்களின் கையிலே, பட்டயத்திற்கும், சிறையிருப்புக்கும், கொள்ளைக்கும், வெட்கத்திற்கும் ஒப்புக்கொடுக்கப்பட்டோம். 8 இப்பொழுதும் எங்கள் தேவனாகிய யெகோவா எங்களிலே தப்பின சிலரை மீதியாக வைக்கவும், தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தில் எங்களுக்கு ஒரு இடத்தைக் கொடுக்கவும், இப்படியே எங்கள் தேவன் எங்கள் கண்களைப் பிரகாசமடையச் செய்து, எங்கள் அடிமைத்தனத்திலே எங்களுக்குக் கொஞ்சம் உயிர் கொடுக்கவும், அவராலே கொஞ்சநேரமாவது கிருபை கிடைத்தது. 9 நாங்கள் அடிமைகளாயிருந்தோம்; ஆனாலும் எங்கள் அடிமைத்தனத்திலே எங்கள் தேவன் எங்களைக் கைவிடாமல், எங்களுக்கு உயிர்கொடுக்கவும்; நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தைத் திரும்பக் கட்டி, பழுதடைந்த அதைப் புதுப்பிக்கவும் எங்களுக்கு யூதாவிலும் எருசலேமிலும் ஒரு வேலியைக் கட்டளையிடும்படிக்கும், பெர்சியாவின் ராஜாக்களின் சமுகத்தில் எங்களுக்குத் தயைகிடைக்கச் செய்தார். 10 இப்பொழுதும் எங்கள் தேவனே, நாங்கள் இனி என்னசொல்லுவோம்; தேவரீர் உமது ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளைக்கொண்டு போதித்த உமது கற்பனைகளை விட்டுவிட்டோம். 11 நீங்கள் குடியேறுகிறதற்கு உட்பிரவேசிக்கும் தேசமானது; தேசாதேசங்களுடைய மக்களின் அசுத்தத்தினாலும், அவர்கள் அதை ஒரு முனைதொடங்கி மறுமுனைவரை நிறையச் செய்த அவர்களுடைய அருவருப்புகளினாலும் அவர்களுடைய அசுத்தத்தாலும், தீட்டுப்பட்டதாயிருக்கிறது. 12 ஆதலால் நீங்கள் பலத்துக்கொண்டு, தேசத்தின் நன்மையைச் சாப்பிட்டு, அதை நித்தியகாலமாக உங்கள் பிள்ளைகளுக்கு சொத்தாகப் பின்வைக்கும்படிக்கு, நீங்கள் உங்கள் மகள்களை அவர்களுடைய மகன்களுக்குக் கொடுக்காமலும், அவர்களுடைய மகள்களை உங்கள் மகன்களுக்குக் கொள்ளாமலும், அவர்களுடைய சமாதானத்தையும் நன்மையையும் ஒருக்காலும் நாடாமலும் இருப்பீர்களாக என்றீரே. 13 இப்பொழுதும் எங்கள் தேவனே, எங்கள் பொல்லாத செயல்களினாலும், எங்கள் பெரிய குற்றத்தாலும், இவைகளெல்லாம் எங்கள்மேல் வந்தும், தேவரீர் எங்கள் அக்கிரமத்திற்குத்தக்க ஆக்கினையை எங்களுக்கு இடாமல், எங்களை இப்படித் தப்பவிட்டிருக்கும்போது, 14 நாங்கள் உமது கற்பனைகளை வீணாக்கவும், இந்த அருவருப்புகளுள்ள மக்களோடே சம்பந்தம் கலக்கவும் முடியுமோ? அப்படிச் செய்தால், எங்களில் ஒருவரும் மீந்து தப்பாதபடிக்கு, தேவரீர் எங்களை நிர்மூலமாக்கும்வரை எங்கள்மேல் கோபமாயிருப்பீர் அல்லவோ? 15 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, நீர் நீதியுள்ளவர்; ஆகையால் இந்நாளில் இருக்கிறதுபோல, நாங்கள் தப்பி மீந்திருக்கிறோம்; இதோ, நாங்கள் உமக்கு முன்பாகக் குற்றத்திற்குள்ளானவர்கள்; இதின் காரணமாக நாங்கள் உமக்கு முன்பாக நிற்கத்தக்கவர்கள் அல்ல என்று விண்ணப்பம் செய்தேன்.

10:1 எஸ்றா இப்படி விண்ணப்பம்செய்து, அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்திற்கு முன்பாகத் தாழவிழுந்துகிடக்கும்போது, இஸ்ரவேலில் ஆண்களும் பெண்களும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடினது; மக்கள் மிகவும் அழுதார்கள். 2 அப்பொழுது ஏலாமின் மகன்களில் ஒருவனாகிய யெகியேலின் மகன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து மக்களிலுள்ள அந்நியப் பெண்களைச் சேர்த்துக்கொண்டதால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவம்செய்தோம்; ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு. 3 இப்பொழுதும் அந்தப் பெண்கள் எல்லோரையும், அவர்களிடத்தில் பிறந்தவர்களையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும், நமது தேவனுடைய கற்பனைக்கு நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனுடன் உடன்படிக்கை செய்வோமாக; நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக. 4 எழுந்திரும்; இந்தக் காரியத்தை நடப்பிக்கிறது உமக்குரியது; நாங்களும் உம்மோடு இருப்போம்; நீர் திடன்கொண்டு இதைச் செய்யும் என்றான். 5 அப்பொழுது எஸ்றா எழுந்திருந்து, ஆசாரியர்களிலும் லேவியர்களிலும் முக்கியமானவர்களும் இஸ்ரவேல் அனைவரும் இந்த வார்த்தையின்படி செய்ய, அவர்களை ஆணையிடச் சொன்னான்; அவர்கள் ஆணையிட்டார்கள். 6 அதன்பின்பு எஸ்றா தேவனுடைய ஆலயத்திற்கு முன்னிருந்து எழுந்து, எலியாசிபின் மகனாகிய யோகனானின் அறைக்குள் சென்றான்; அங்கே வந்தபோது, அவன் சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினால் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் துக்கப்பட்டுக்கொண்டிருந்தான். 7 அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லோரும் எருசலேமிலே வந்து கூடவேண்டும் என்றும், 8 மூன்று நாட்களுக்குள்ளே பிரபுக்கள் மூப்பர்களுடைய ஆலோசனையின்படியே எவனாகிலும் வராமல்போனால், அவனுடைய பொருட்களெல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு, சிறையிருப்பிலிருந்து வந்த சபையிலிருந்து அவன் விலக்கப்படுவான் என்றும், யூதாவிலும் எருசலேமிலும் விளம்பரம் செய்தார்கள். 9 அப்படியே யூதா பென்யமீன் கோத்திரத்தார் எல்லோரும் மூன்று நாட்களுக்குள்ளே எருசலேமிலே கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாம் தேதியாயிருந்தது; மக்கள் எல்லோரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். 10 அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்து அவர்களை நோக்கி: நீங்கள் இஸ்ரவேலின்மேல் இருக்கிற குற்றத்தை அதிகரிக்கச்செய்ய, வேறு இனப் பெண்களைத் திருமணம்செய்ததால் பாவம் செய்தீர்கள். 11 இப்பொழுதும் நீங்கள் உங்கள் முன்னோர்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரியத்தின்படியே செய்து, தேசத்தின் மக்களையும், வேறு இனப் பெண்களையும் விட்டுவிலகுங்கள் என்றான். 12 அப்பொழுது சபையார் அனைவரும் மகா சத்தத்தோடே மறுமொழியாக: ஆம், நீர் சொன்ன வார்த்தைகளின்படியே செய்யவேண்டியதுதான். 13 ஆனாலும் மக்கள் திரளாயிருக்கிறார்கள், இது மழைக்காலமுமாக இருக்கிறது, இங்கே வெளியிலே நிற்க எங்களாலே முடியாது; இது ஒருநாள் இரண்டுநாள் வேலையல்ல; இந்தக் காரியத்திலே கட்டளையை மீறினவர்களாகிய நாங்கள் அநேகர். 14 ஆகையால் இதற்கு சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரர்களாக ஏற்படுத்தப்படவேண்டும்; இந்தக் காரியத்தினால் நம்முடைய தேவனுக்கு இருக்கிற கடுங்கோபம் எங்களைவிட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் வேறு இனமான பெண்களைக்கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரவேண்டும் என்றார்கள். 15 ஆசகேலின் மகன் யோனத்தானும், திக்காவின் மகன் யக்சியாவும் மாத்திரம் அதை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டார்கள்; மெசுல்லாமும், சப்பேதாயி என்னும் லேவியனும் அவர்களுக்கு உதவியாயிருந்தார்கள். 16 சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் இந்தப்பிரகாரம் செய்தார்கள்; ஆசாரியனாகிய எஸ்றாவும் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்தின்படியே பேர்பேராக அழைக்கப்பட்ட பிதாக்களுடைய வம்சங்களின் தலைவர்கள் அனைவரும், இந்தக் காரியத்தை விசாரிக்கும்படி, பத்தாம் மாதம் முதல் தேதியிலே, தனித்து உட்கார்ந்து, 17 வேறு இனமான பெண்களைத் திருமணம் செய்தவர்கள் எல்லோருடைய காரியத்தையும் முதலாம் மாதம் முதல் தேதியிலே விசாரித்து முடித்தார்கள்.

18 ஆசாரிய புத்திரரில் மறு ஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டவர்கள் யாரென்றால்: யோசதாக்கின் மகனாகிய யெசுவாவின் மகன்களிலும் அவனுடைய சகோதரர்களிலும், மாசெயா, எலியேசர், யாரீப், கெதலியா என்பவர்கள். 19 இவர்கள் தங்கள் பெண்களைத் தள்ளிவிடுவோம் என்று உறுதிமொழி கொடுத்து; தாங்கள் குற்றவாளிகளானதால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள். 20 இம்மேரின் மகன்களில் அனானியும், செபதியாவும், 21 ஆரீமின் மகன்களில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும்; 22 பஸ்கூரின் மகன்களில் எலியோனாய், மாசெயா, இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா என்பவர்களும்; 23 லேவியர்களில் யோசபாத், சிமேயி, கெலிதா என்னும் பெயர்கொண்ட கெலாயா, பெத்தகியா, யூதா, எலியேசர் என்பவர்களும்; 24 பாடகர்களில் எலியாசிபும், வாசல் காவலாளர்களில் சல்லூம், தேலேம், ஊரி என்பவர்களும்; 25 மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரோஷின் மகன்களில் ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா என்பவர்களும்; 26 ஏலாமின் மகன்களில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா என்பவர்களும்; 27 சத்தூவின் மகன்களில் எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத், அசிசா என்பவர்களும்; 28 பெபாயின் மகன்களில் யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி என்பவர்களும்; 29 பானியின் மகன்களில் மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசுப், செயால், ராமோத் என்பவர்களும், 30 பாகாத்மோவாபின் மகன்களில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூயி, மனாசே என்பவர்களும்; 31 ஆரீமின் மகன்களில் எலியேசர், இஷியா, மல்கியா, செமாயா, ஷிமியோன், 32 பென்யமீன், மல்லூக், செமரியா என்பவர்களும்; 33 ஆசூமின் மகன்களில் மதனாய், மத்தத்தா, சாபாத், எலிப்பெலேத், எரெமாயி, மனாசே, சிமேயி என்பவர்களும்; 34 பானியின் மகன்களில் மாதாயி, அம்ராம், ஊவேல், 35 பெனாயா, பெதியா, கெல்லூ, 36 வனியா, மெரெமோத், எலியாசிப், 37 மத்தனியா, மதனாய், யாசாய், 38 பானி, பின்னூயி, சிமெயி, 39 செலேமியா, நாத்தான், அதாயா, 40 மக்நாத்பாயி, சாசாயி, சாராயி, 41 அசரெயேல், செலேமியா, செமரியா, 42 சல்லூம், அமரியா, யோசேப் என்பவர்களும்; 43 நேபோவின் மகன்களில் ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோவேல், பெனாயா என்பவர்களுமே. 44 இவர்கள் எல்லோரும் வேறு இனமான பெண்களைத் திருமணம் செய்தவர்கள்; இவர்களில் சிலர் திருமணம்செய்த பெண்களிடத்தில் பிள்ளைகளைப் பெற்றிருந்தார்கள்.