சகரியாவின் கடைசித் தீர்க்கதரிசனங்கள் (continued)
கி.மு. 457
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 இஸ்ரவேலைக்குறித்துக் யெகோவா சொன்ன வார்த்தையின் செய்தி; வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனிதனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற யெகோவா சொல்லுகிறதாவது: 2 இதோ, சுற்றிலும் இருக்கிற எல்லா மக்களுக்கும் நான் எருசலேமைத் தத்தளிப்பின் பாத்திரமாக்குகிறேன்; எருசலேமிற்கு விரோதமாகப் போடப்படும் முற்றுகையிலே யூதாவும் அப்படியேயாகும். 3 அந்நாளிலே நான் எருசலேமை சகல மக்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதை அசைக்கிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள தேசங்களெல்லாம் அதற்கு விரோதமாகக் கூடிக்கொள்வார்கள். 4 அந்நாளிலே நான் குதிரைகளுக்கெல்லாம் திகைப்பையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களுக்கெல்லாம் புத்திமயக்கத்தையும் வரச்செய்து, யூதா வம்சத்தின்மேல் என் கண்களைத் திறந்துவைத்து, மக்களுடைய எல்லாக் குதிரைகளுக்கும் குருட்டாட்டத்தை உண்டாக்குவேன் என்று யெகோவா சொல்லுகிறார். 5 எருசலேமின் மக்கள், சேனைகளின் யெகோவாகிய தங்கள் தேவனுடைய துணையினால் எங்களுக்குப் பெலனானவர்கள் என்று அப்போது யூதாவின் தலைவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுவார்கள். 6 அந்நாளிலே யூதாவின் தலைவர்களை விறகுகளுக்குள்ளே எரிகிற நெருப்பு அடுப்பிற்கும், வைக்கோல் கட்டுகளுக்குள்ளே எரிகிற தீப்பந்தத்திற்கும் ஒப்பாக்குவேன்; அவர்கள் வலதுபுறமும் இடதுபுறமுமாகப் புறப்பட்டு, சுற்றிலும் இருக்கிற எல்லா மக்களையும் அழிப்பார்கள்; எருசலேம் திரும்பவும் தன் இடமாகிய எருசலேமிலே குடியேற்றப்பட்டிருக்கும். 7 தாவீது வம்சத்தாரின் மகிமையும், எருசலேமின் குடிமக்களுடைய மகிமையும், யூதாவின்மேல் தன்னை உயர்த்தாமலிருக்க, யெகோவா யூதாவின் கூடாரங்களை முதலாவது காப்பாற்றுவார். 8 அந்நாளிலே யெகோவா எருசலேமின் மக்களைக் காப்பாற்றுவார்; அவர்களில் தள்ளாடினவன் அந்நாளிலே தாவீதைப்போல இருப்பான்; தாவீது குடும்பத்தார்கள் அவர்களுக்கு முன்பாக தேவனைப்போலவும் யெகோவாவுடைய தூதனைப்போலவும் இருப்பார்கள். 9 அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாக வருகிற எல்லா மக்களையும் அழிக்கப் பார்ப்பேன்.
10 நான் தாவீது குடும்பத்தார்கள் மேலும் எருசலேம் குடிமக்கள் மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைமகனுக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். 11 அந்நாளிலே மெகிதோன் பட்டணத்துப் பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத்ரிம்மோனின் புலம்பலைப்போல எருசலேமின் புலம்பல் பெரிதாக இருக்கும். 12 தேசம் புலம்பிக்கொண்டிருக்கும்; ஒவ்வொரு வம்சமும் தனித்தனியாகப் புலம்பும்; தாவீது குடும்பத்தார் தனியாகவும், அவர்களுடைய பெண்கள் தனியாகவும், நாத்தான் குடும்பத்தார் தனியாகவும், அவர்களுடைய பெண்கள் தனியாகவும், 13 லேவி குடும்பத்தார் தனியாகவும், அவர்களுடைய பெண்கள் தனியாகவும், சீமேயி குடும்பத்தார் தனியாகவும், அவர்களுடைய பெண்கள் தனியாகவும், 14 மீதமுள்ள எல்லா குடும்பங்களிலும் ஒவ்வொரு குடும்பத்தின் மனிதர்கள் தனித்தனியாகவும் அவர்களுடைய பெண்கள் தனித்தனியாகவும் புலம்புவார்கள்.
13:1 அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிமக்களுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும். 2 அந்நாளிலே நான் விக்கிரகங்களின் பெயரும் தேசத்தில் இல்லாதபடிக்கு அழிப்பேன்; அவைகள் இனி நினைக்கப்படுவதில்லை; தரிசனம் சொல்லுகிறவர்களையும், அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும் செய்வேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 3 இனி ஒருவன் தரிசனம் சொன்னால், அவனைப்பெற்ற அவன் தகப்பனும் தாயும் அவனை நோக்கி: நீ யெகோவாவுடைய நாமத்தைக்கொண்டு பொய்பேசுகிறதினால் நீ உயிரோடிருக்கக்கூடாது என்று சொல்லி, அவனைப்பெற்ற அவன் தகப்பனும் தாயும் அவன் தரிசனம் சொல்லும்போது அவனைக் குத்திப்போடுவார்கள். 4 அந்நாளிலே தரிசனம் சொல்லுகிற அவனவன் தான் சொன்ன தரிசனத்தினால் வெட்கப்பட்டு, பொய் சொல்லும்படிக்கு இனி கம்பளியைப் போர்த்துக்கொள்ளாமல், 5 நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைவாங்கினான் என்பான். 6 அப்பொழுது ஒருவன் அவனை நோக்கி: உன் கைகளில் இருக்கிற இந்த தழும்புகள் என்னவென்று கேட்டால், என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டதினால் உண்டானவைகள் என்பான். 7 பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய மனிதன்மேலும் எழும்பு என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்கள்மேல் திரும்பவைப்பேன். 8 தேசமெங்கும் சம்பவிக்கும் காரியம் என்னவென்றால், அதில் இருக்கிற இரண்டு பங்கு மனிதர்கள் அழிக்கப்பட்டு இறந்துபோவார்கள்; மூன்றாம் பங்கோ அதில் மீதியாயிருக்கும். 9 அந்த மூன்றாம் பங்கை நான் நெருப்புக்குட்படச்செய்து, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்களுடைய விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என் மக்களென்று நான் சொல்லுவேன், யெகோவா என் தேவன் என்று அவர்கள் சொல்லுவார்கள்.
14:1 இதோ, யெகோவாவுடைய நியாயதீர்ப்பு நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும். 2 எருசலேமிற்கு விரோதமாக போரிடச் சகல தேசங்களையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; பெண்கள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனிதர்கள் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான மக்களோ நகரத்தைவிட்டு வெளியேற்றப்படுவதில்லை. 3 யெகோவா புறப்பட்டு, போர்செய்கிற நாளிலே போராடுவதுபோல் அந்த தேசங்களோடே போராடுவார். 4 அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமிற்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் மையத்திலே கிழக்கு மேற்காக எதிராகப் பிளந்துபோகும்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும். 5 அப்பொழுது யெகோவாவின் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாக ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்வரை போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய யெகோவா வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள். 6 அந்நாளில் வெளிச்சம் இல்லாமல், ஒருநேரம் பிரகாசமும் ஒருநேரம் மப்புமாயிருக்கும். 7 ஒருநாள் உண்டு, அது யெகோவாவுக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும். 8 அந்நாளிலே ஜீவதண்ணீர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு, பாதி கிழக்குச் சமுத்திரத்திற்கும், பாதி மேற்குச் சமுத்திரத்திற்கும் போய், மழைக்காலத்திற்கும் கோடைக்காலத்திற்கும் இருக்கும். 9 அப்பொழுது யெகோவா பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே யெகோவா இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும். 10 தேசமெல்லாம் கேபாதுவங்கி எருசலேமிற்குத் தெற்கே இருக்கிற ரிம்மோன்வரைக்கும் சமபூமியாக மாற்றப்படும்; எருசலேமோ உயர்ந்ததாகி, தன் இடத்திலே பென்யமீன் வாசல்தொடங்கி முதல்வாசலென்கிற இடம்வரை, கோடிவாசல் வரைக்கும், அனானெயேல் கோபுரம் துவங்கி ராஜாவின் திராட்சை ஆலைகள்வரை குடியேற்றப்பட்டிருக்கும். 11 அதிலே மக்கள் வாசம்செய்வார்கள்; இனிச் சங்கரிப்பில்லாமல் எருசலேம் சுகமாகத் தங்கியிருக்கும். 12 எருசலேமிற்கு விரோதமாக போர்செய்த எல்லா மக்களையும் யெகோவா வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலூன்றி நிற்கும்போதும் அவர்களுடைய சதை அழிந்துபோகும்; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும். 13 அந்நாளிலே யெகோவால் பெரிய கலக்கம் அவர்களுக்குள் உண்டாகும்; அவனவன் தன்தன் அயலானின் கையைப் பிடிப்பான்; அவனவனுடைய கை அவனவன் அயலானுடைய கைக்கு விரோதமாக எழும்பும். 14 யூதாவும் எருசலேமிலே போர்செய்யும்; அப்பொழுது சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளுடைய ஆஸ்தியாகிய பொன்னும் வெள்ளியும் ஆடைகளும் மகா திரளாகக் கூட்டப்படும். 15 அந்த முகாம்களில் இருக்கும் குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் முதலான எல்லா மிருகஜீவன்களுக்கும் வரும் வாதையும், அந்த வாதையைப்போலவே இருக்கும். 16 பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் யெகோவாகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிப்பதற்காக, வருடாவருடம் வருவார்கள். 17 அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் யெகோவாகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை பெய்வதில்லை. 18 எகிப்தின் வம்சம் எருசலேமுக்கு வராமல் சேராமலும்போனால் அவர்களுக்கு மழை பொழியாது, கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத மக்களைக் யெகோவா வாதிக்கும் வாதையே அவர்கள்மேலும் வரும். 19 இது எகிப்தியருடைய பாவத்திற்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல மக்களுடைய பாவத்திற்கும் வரும் தண்டனை. 20 அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்னும் விலாசம் எழுதியிருக்கும்; யெகோவாவுடைய ஆலயத்திலுள்ள பானைகள் பலிபீடத்திற்கு முன்பாக இருக்கிற பாத்திரங்களைப் போலிருக்கும். 21 அப்பொழுது எருசலேமிலும் யூதாவிலுமுள்ள எல்லாப் பானைகளும் சேனைகளின் யெகோவாவுக்குப் பரிசுத்தமாயிருக்கும்; பலியிடுகிற யாவரும் வந்து அவைகளில் எடுத்து, அவைகளில் சமைப்பார்கள்; அந்நாள்முதல் சேனைகளுடைய யெகோவாவின் ஆலயத்திலே எந்தவொரு கானானியனும் இருப்பதில்லை.
அர்தசஷ்டாவுக்கு எதிரான சதியை மொர்தெகாய் கண்டுபிடிக்கிறார்
21 அந்த நாட்களில் மொர்தெகாய் ராஜாவின் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருக்கிறபோது, வாசல்காக்கிற ராஜாவின் இரண்டு வாசல் காவலாளிகள் பிக்தானாவும் தேரேசும் கடுங்கோபத்துடன், ராஜாவாகிய அகாஸ்வேருக்கு தீங்குசெய்ய வாய்ப்பைத் தேடினார்கள். 22 இந்தக் காரியம் மொர்தெகாய்க்குத் தெரியவந்ததால், அவன் அதை ராணியாகிய எஸ்தருக்கு அறிவித்தான்; எஸ்தர் மொர்தெகாயின் பெயரால் அதை ராஜாவிற்குச் சொன்னாள். 23 அந்தக் காரியம் விசாரிக்கப்படுகிறபோது, அது உண்மையென்று காணப்பட்டது; ஆகையால் அவர்கள் இருவரும் மரத்திலே தூக்கிப்போடப்பட்டார்கள்; இது ராஜ சமுகத்திலே நாளாகமப்புத்தகத்திலே எழுதப்பட்டிருக்கிறது.