ஆமானின் சதி முறியடிக்கப்படுகிறது

கி.மு. 453

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எஸ்தர் 3–5

1 இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேரு அம்மெதாத்தாவின் மகனாகிய ஆமான் என்னும் ஆகாகியனை மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற எல்லா பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய அதிகாரத்தின் ஆசனத்தை உயர்த்திவைத்தான். 2 ஆகையால் ராஜாவின் அரண்மனை வாசலில் இருக்கிற ராஜாவின் வேலைக்காரர்கள் எல்லோரும் ஆமானுக்கு முன்பாக முழங்காலிட்டு வணங்கிவந்தார்கள்; அவனுக்கு இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்; ஆனாலும் மொர்தெகாய் அவனுக்கு முன்பாக முழங்காலிடவுமில்லை, வணங்கவுமில்லை. 3 அப்பொழுது ராஜாவின் அரண்மனை வாசலில் இருக்கிற ராஜாவின் வேலைக்காரர்கள் மொர்தெகாயைப் பார்த்து: நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறது என்ன என்று கேட்டார்கள். 4 இப்படி அவர்கள் நாளுக்குநாள் அவனிடம் சொல்லியும், அவன் தங்களுடைய வார்த்தையைக் கேட்காதபோது, தான் யூதன் என்று அவன் அவர்களுக்கு அறிவித்திருந்தபடியால், மொர்தெகாயின் சொற்கள் நிலைநிற்குமோ என்று பார்ப்பதற்கு, அதை ஆமானுக்கு அறிவித்தார்கள். 5 ஆமான் மொர்தெகாய் தனக்கு முன்பாக முழங்காலிட்டு வணங்காததைக் கண்டபோது, கடுங்கோபம் நிறைந்தவனானான். 6 ஆனாலும் மொர்தெகாயை மட்டும் கொல்லுவது அவனுக்கு அற்பமான காரியமாக இருந்தது; மொர்தெகாயின் மக்கள் இன்னாரென்று ஆமானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபடியால், அகாஸ்வேருவின் ராஜ்ஜியமெங்கும் இருக்கிற மொர்தெகாயின் மக்களாகிய யூதர்களையெல்லாம் அழிக்க அவன் திட்டம் தீட்டினான். 7 ராஜாவாகிய அகாஸ்வேருவின் பன்னிரண்டாம் வருட ஆட்சியின் நிசான் மாதமாகிய முதலாம் மாதத்திலே ஆமானுக்கு முன்பாகப் பூர் என்னப்பட்ட சீட்டு (யூதர்களை அழிக்கும் திட்டத்திற்கா) எந்த நாள் எந்த மாதம் என்று அறியப் போடப்பட்டது, ஆதார் (ஏப்ரல்) மாதமான பன்னிரண்டாம் மாதத்தின்மேல் சீட்டு விழுந்தது. 8 அப்பொழுது ஆமான் அகாஸ்வேரு ராஜாவை நோக்கி: உம்முடைய ராஜ்ஜியத்தின் எல்லா நாடுகளிலுமுள்ள மக்களுக்குள்ளே ஒருவித மக்கள் சிதறி பரவியிருக்கிறார்கள்; அவர்களுடைய வழக்கங்கள் எல்லா மக்களுடைய வழக்கங்களுக்கும் வித்தியாசமாக இருக்கிறது; அவர்கள் ராஜாவின் சட்டங்களைக் கைக்கொள்ளுவதில்லை; ஆகையால் அவர்களை இப்படி விட்டிருக்கிறது ராஜாவிற்கு நியாயமல்ல. 9 ராஜாவிற்கு விருப்பமிருந்தால், அவர்களை அழிக்கவேண்டுமென்று எழுதி அனுப்பவேண்டியது; அப்பொழுது நான் ராஜாவின் கருவூலத்தில் கொண்டுவந்து செலுத்த பத்தாயிரம் தாலந்து வெள்ளியை எண்ணி ராஜாவின் காரியத்தில் பொறுப்பாய் உள்ளவனுடைய கையில் கொடுப்பேன் என்றான். 10 அப்பொழுது ராஜா தன்னுடைய கையிலிருக்கிற தன்னுடைய மோதிரத்தைக் கழற்றி, அதை ஆகாகியனான அம்மெதாத்தாவின் மகனும் யூதர்களின் எதிரியுமாகிய ஆமானிடம் கொடுத்து, 11 ஆமானை நோக்கி: அந்த வெள்ளியை நீ வைத்துக்கொள்; அந்த மக்களுக்கு உன்னுடைய விருப்பப்படி செய்யலாம் என்றான். 12 முதலாம் மாதம் பதிமூன்றாந்தேதியிலே, ராஜாவின் எழுத்தர்கள் அழைக்கப்பட்டார்கள்; ஆமான் கற்பித்தபடியெல்லாம் ராஜாவின் அதிகாரிகளுக்கும், ஒவ்வொரு நாட்டின்மேல் வைக்கப்பட்டிருந்த துரைகளுக்கும், எல்லா வகையான மக்களின் பிரபுக்களுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் எழுத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் மொழிகளிலும் எழுதப்பட்டது; ராஜாவாகிய அகாஸ்வேருவின் பெயரால் அது எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டது. 13 ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதம் பதிமூன்றாந் தேதியாகிய ஒரே நாளில் சிறியோர் பெரியோர் குழந்தைகள் பெண்கள் ஆகிய எல்லா யூதர்களையும் கொன்று அழிக்கவும், அவர்களை நொறுக்கவும், தபால்காரர்கள் கையில் ராஜாவின் நாடுகளுக்கெல்லாம் கட்டளைகள் அனுப்பப்பட்டது. 14 அந்த நாளுக்கு ஆயத்தப்பட்டிருக்கவேண்டும் என்று எல்லா மக்களுக்கும் கூறி அறிவிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே, இது ஒவ்வொரு நாட்டிலும் தெரியப்படுத்தப்பட்டது. 15 அந்த தபால்காரர்கள் ராஜாவின் உத்திரவினால் விரைவாகப் புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரண்மனையில் பிறந்தது. ராஜாவும் ஆமானும் குடிக்கும்படி உட்கார்ந்தார்கள்; சூசான் நகரம் கலங்கியது.

4:1 நடந்த எல்லாவற்றையும் மொர்தெகாய் அறிந்தபோது, மொர்தெகாய் தன்னுடைய ஆடைகளைக் கிழித்து, சணலாடை அணிந்து, சாம்பல் போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே புறப்பட்டுப்போய், துயரமுள்ள உரத்த சத்தத்துடன் அலறிக்கொண்டு, 2 ராஜாவின் அரண்மனை வாசல்வரை வந்தான்; சணலாடை அணிந்தவனாக ராஜாவின் அரண்மனை வாசலுக்குள் நுழைய ஒருவனுக்கும் அனுமதி இல்லை. 3 ராஜாவின் உத்திரவும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் யூதர்களுள்ள பகுதிகளில் பெரிய துக்கமும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாகி, அநேகர் சணலாடை அணிந்து சாம்பலில் கிடந்தார்கள். 4 அப்பொழுது எஸ்தரின் இளம்பெண்களும், அவளுடைய பணிவிடைக்காரர்களும் போய், அதை அவளுக்கு அறிவித்தார்கள்; அதினாலே ராணி மிகவும் துக்கப்பட்டு, மொர்தெகாய் உடுத்தியிருந்த சணலாடையை எடுத்துப்போட்டு, அவனுக்கு அணிந்துகொள்ள ஆடைகளை அனுப்பினாள்; அவனோ அவைகளை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தான். 5 அப்பொழுது எஸ்தர் தன்னுடைய பணிவிடைக்கென்று ராஜாவினால் நியமித்திருந்த அவனுடைய அதிகாரிகளில் ஒருவனாகிய ஆத்தாகை அழைத்து: காரியம் என்ன? அதின் காரணம் என்ன? என்று அறியும்படி, மொர்தெகாயினிடம் விசாரிக்க அவனுக்குக் கட்டளையிட்டாள். 6 அப்படியே ஆத்தாகு ராஜாவின் அரண்மனை வாசலுக்கு முன்னான பட்டணத்து வீதியில் இருக்கிற மொர்தெகாயிடம் புறப்பட்டுப்போனான். 7 அப்பொழுது மொர்தெகாய் தனக்குச் சம்பவித்த எல்லாவற்றைப்பற்றியும், யூதர்களை அழிக்கும்படி ஆமான் ராஜாவின் கருவூலத்திற்கு எண்ணிக்கொடுப்பேன் என்று சொன்ன பணத்தொகையைப் பற்றியும் அவனுக்கு அறிவித்ததும் அல்லாமல், 8 யூதர்களை அழிக்கும்படி சூசானில் பிறந்த கட்டளையின் நகலையும் அவனிடம் கொடுத்து, அதை எஸ்தருக்குக் காண்பித்துத் தெரியப்படுத்தவும், அவள் தைரியமாக ராஜாவிடம் போய், அவனிடம் தன்னுடைய மக்களுக்காக விண்ணப்பம்செய்யவும் மன்றாடவும் வேண்டுமென்று அவளுக்குச் சொல்லச்சொன்னான். 9 ஆத்தாகு வந்து, மொர்தெகாயின் வார்த்தைகளை எஸ்தருக்கு அறிவித்தான். 10 அப்பொழுது எஸ்தர் ஆத்தாகிடம் மொர்தெகாய்க்குச் சொல்லியனுப்பினது: 11 யாராவது அழைக்கப்படாமல், உள்முற்றத்தில் ராஜாவிடம் வந்தால், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் பிழைக்கும்படி அவர்களுக்கு நேராக ராஜா பொற்செங்கோலை நீட்டினாலொழிய மற்றப்படி சாகவேண்டும் என்கிற ஒரு சட்டமுண்டு, இது ராஜாவின் எல்லா வேலைக்காரர்களுக்கும், ராஜாவுடைய நாடுகளிலுள்ள எல்லா மக்களுக்கும் தெரியும்; நான் இந்த முப்பது நாட்களாக ராஜாவிடம் வரவழைக்கப்படவில்லை என்று சொல்லச்சொன்னாள். 12 எஸ்தரின் வார்த்தைகளை மொர்தெகாய்க்குத் தெரிவித்தார்கள். 13 மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது: நீ ராஜாவின் அரண்மனையில் இருக்கிறதினால், மற்ற யூதர்கள் தப்ப முடியாமல் இருக்கும்போது, நீ தப்புவாயென்று உன்னுடைய மனதிலே நினைவுகொள்ளாதே. 14 நீ இந்தக் காலத்திலே மவுனமாக இருந்தால், யூதருக்கு உதவியும் விடுதலையும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன்னுடைய தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்திற்கு உதவியாக இருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான். 15 அப்பொழுது எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும் சொல்லச்சொன்னது: 16 நீர் போய், சூசானில் இருக்கிற யூதர்களையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்று நாட்கள் இரவும் பகலும் சாப்பிடாமலும் குடிக்காமலுமிருந்து, எனக்காக உபவாசம் இருங்கள்; நானும் என்னுடைய பணிவிடைப்பெண்களும் உபவாசம் இருப்போம்; இப்படியே சட்டத்தை மீறி, ராஜாவிடம் போவேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள். 17 அப்பொழுது மொர்தெகாய் புறப்பட்டுப்போய், எஸ்தர் தனக்குச் சொன்னபடியெல்லாம் செய்தான்.

5:1 மூன்றாம் நாளிலே எஸ்தர் ராஜஉடை அணிந்துகொண்டு, ராஜ அரண்மனையின் உள்முற்றத்தில், ராஜா இருக்கும் இடத்திற்கு எதிராக வந்து நின்றாள்; ராஜா அரண்மனைவாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் சிங்காசனத்திலே அமர்ந்திருந்தான். 2 ராஜா ராணியாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது, அவளுக்கு அவனுடைய கண்களில் தயவு கிடைத்ததால், ராஜா தன்னுடைய கையிலிருக்கிற பொற் செங்கோலை எஸ்தரிடம் நீட்டினான்; அப்பொழுது எஸ்தர் அருகே வந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள். 3 ராஜா அவளை நோக்கி: எஸ்தர் ராணியே, உனக்கு என்ன வேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்ஜியத்தில் பாதியைக் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும் என்றான். 4 அப்பொழுது எஸ்தர்: ராஜாவிற்கு விருப்பமானால், நான் தங்களுக்குச் செய்த விருந்திற்கு ராஜாவும் ஆமானும் இன்றைக்கு வரவேண்டும் என்றாள். 5 அப்பொழுது ராஜா எஸ்தர் சொன்னபடியே செய்ய, ஆமானை விரைவாக வரும்படி சொல்லி, எஸ்தர் செய்த விருந்திற்கு ராஜாவும் ஆமானும் வந்தார்கள். 6 விருந்திலே திராட்சைரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரைப் பார்த்து: உன்னுடைய வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிறது என்ன? நீ ராஜ்ஜியத்தில் பாதியைக் கேட்டாலும் கிடைக்கும் என்றான். 7 அதற்கு எஸ்தர் மறுமொழியாக: 8 ராஜாவின் கண்களில் எனக்குக் கிருபை கிடைத்து, என்னுடைய வேண்டுதலைக் கட்டளையிடவும், என்னுடைய விண்ணப்பத்தின்படி செய்யவும், ராஜாவிற்குச் விருப்பமாக இருந்தால், ராஜாவும் ஆமானும் நான் இன்னும் தங்களுக்குச் செய்யப்போகிற விருந்திற்கு வரவேண்டும் என்பதே என்னுடைய வேண்டுதலும் என்னுடைய விண்ணப்பமுமாக இருக்கிறது; நாளைக்கு ராஜாவின் சொற்படி செய்வேன் என்றாள்.

9 அன்றையதினம் ஆமான் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுடனும் புறப்பட்டான்; ஆனாலும் ராஜாவின் அரண்மனை வாசலில் இருக்கிற மொர்தெகாய் தனக்கு முன்பு எழுந்திருக்காமலும் அசையாமலும் இருக்கிறதை ஆமான் கண்டபோது, அவன் மொர்தெகாயின்மேல் கடுங்கோபம் அடைந்தவனானான். 10 ஆனாலும் ஆமான் அதை அடக்கிக்கொண்டு, தன்னுடைய வீட்டிற்கு வந்து, தன்னுடைய நண்பர்களையும் தன்னுடைய மனைவியாகிய சிரேஷையும் அழைத்து, 11 தன்னுடைய ஐசுவரியத்தின் மகிமையையும், தன்னுடைய பிள்ளைகளின் எண்ணிக்கையையும், ராஜா தன்னைப் பெரியவனாக்கி, தன்னைப் பிரபுக்கள்மேலும் ராஜாவின் வேலைக்காரர்கள்மேலும் உயர்த்தின எல்லாவற்றையும் ஆமான் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான். 12 பின்னும் ஆமான்: ராணியாகிய எஸ்தரும் தான் செய்த விருந்திற்கு ராஜாவுடன் என்னைத்தவிர வேறொருவரையும் அழைக்கவில்லை; நாளைக்கும் ராஜாவுடன் நான் விருந்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறேன். 13 ஆனாலும் அந்த யூதனாகிய மொர்தெகாய் ராஜாவின் அரண்மனைவாசலில் உட்கார்ந்திருக்கிறதை நான் காணும்போது அவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லை என்றான். 14 அப்பொழுது அவனுடைய மனைவியாகிய சிரேஷூம் அவனுடைய நண்பர்கள் எல்லோரும் அவனைப் பார்த்து: ஐம்பது முழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும்; அதிலே மொர்தெகாயைத் தூக்கிப்போடும்படி நாளையதினம் நீர் ராஜாவிற்குச் சொல்லவேண்டும்; பின்பு சந்தோஷமாக ராஜாவுடன் விருந்திற்குப் போகலாம் என்றார்கள்; இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாகத் தெரிந்ததால் தூக்குமரத்தைச் செய்தான்.