ஆமானின் சதி முறியடிக்கப்படுகிறது (continued)
கி.மு. 453
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 அந்த இரவில் ராஜாவிற்கு தூக்கம் வராததினால், அவனுடைய ராஜ்ஜியத்தின் நிகழ்வுகள் எழுதியிருக்கிற பதிவு புத்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது. 2 அப்பொழுது வாசற் காவலாளர்களில் ராஜாவின் இரண்டு அதிகாரிகளாகிய பிக்தானாவும் தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு தீங்கு செய்ய நினைத்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான் என்று எழுதியிருக்கிறது வாசிக்கப்பட்டது. 3 அப்பொழுது ராஜா: இதற்காக மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ராஜாவிற்கு பணிவிடை செய்கிற வேலைக்காரர்கள்: அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள். 4 ஆமான் தான் செய்த தூக்குமரத்திலே மொர்தெகாயைத் தூக்கிப்போடவேண்டுமென்று, ராஜாவிடம் பேசும்படி ராஜஅரண்மனையின் வெளிமுற்றத்திலே வந்திருந்தான். அப்பொழுது ராஜா: முற்றத்திலிருக்கிறது யார் என்று கேட்டான். 5 ராஜாவின் வேலைக்காரர்கள் அவனை நோக்கி: இதோ, ஆமான் முற்றத்திலே நிற்கிறான் என்றார்கள்; ராஜா: அவன் உள்ளே வரட்டும் என்றான். 6 ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனை நோக்கி: ராஜா கனப்படுத்த விரும்புகிற மனிதனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான்; அதற்கு ஆமான், என்னைத்தவிர, யாரை ராஜா கனப்படுத்த விரும்புவார் என்று தன்னுடைய மனதிலே நினைத்து, 7 ராஜாவை நோக்கி: ராஜா கனப்படுத்த விரும்புகிற மனிதனுக்கு செய்யவேண்டியது என்னவென்றால், 8 ராஜா அணிந்துகொள்ளுகிற ராஜஉடையும், ராஜா ஏறுகிற குதிரையும், அவருடைய தலையிலே சூட்டப்படும் ராஜகிரீடமும் கொண்டுவரப்படவேண்டும். 9 அந்த ஆடையும் குதிரையும் ராஜாவுடைய முக்கிய பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்; ராஜா கனப்படுத்த விரும்புகிற மனிதனை அலங்கரித்தபின்பு, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படிச் செய்து, ராஜா கனப்படுத்த விரும்புகிற மனிதனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான். 10 அப்பொழுது ராஜா ஆமானை நோக்கி: சீக்கிரமாக நீ சொன்னபடி ஆடையையும் குதிரையையும் கொண்டுபோய், ராஜ அரண்மனையின் வாசலில் உட்கார்ந்திருக்கிற யூதனாகிய மொர்தெகாய்க்கு அந்தப்படியே செய்; நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார் என்றான். 11 அப்படியே ஆமான் ஆடையையும் குதிரையையும் கொண்டுபோய், மொர்தெகாயை அலங்கரித்து, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவரும்படிச்செய்து, ராஜா கனப்படுத்த விரும்புகிற மனிதனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறினான். 12 பின்பு மொர்தெகாய் ராஜாவின் அரண்மனைவாசலுக்குத் திரும்பி வந்தான்; ஆமானோ துக்கப்பட்டு முக்காடிட்டுக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு விரைவாகப்போனான். 13 ஆமான் தனக்கு நேர்ந்த எல்லாவற்றையும் தன்னுடைய மனைவியாகிய சிரேஷூக்கும் தன்னுடைய நண்பர்கள் எல்லோருக்கும் அறிவித்தபோது, அவனுடைய ஆலோசனைக்காரர்களும் அவனுடைய மனைவியாகிய சிரேஷூம் அவனைப் பார்த்து: மொர்தெகாய்க்கு முன்பாக நீர் தாழ்ந்துபோகத் துவங்கினீர்; அவன் யூத குலமாக இருந்தால், நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம் என்றார்கள். 14 அவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, ராஜாவின் அதிகாரிகள் வந்து, எஸ்தர் செய்த விருந்திற்கு வர ஆமானைத் துரிதப்படுத்தினார்கள்.
7:1 ராணியாகிய எஸ்தருடன் விருந்து உண்ண, ராஜாவும் ஆமானும் வந்தபோது, 2 இரண்டாம் நாள் விருந்தில் திராட்சைரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை நோக்கி: எஸ்தர் ராணியே, உன்னுடைய வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்ஜியத்தில் பாதியைக் கேட்டாலும் கிடைக்கும் என்றான். 3 அப்பொழுது ராணியாகிய எஸ்தர் மறுமொழியாக: ராஜாவே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்து, ராஜாவிற்கு விருப்பமாக இருந்தால் என்னுடைய வேண்டுதலுக்கு என்னுடைய ஜீவனும், என்னுடைய மன்றாட்டுக்கு என்னுடைய மக்களும் எனக்குக் கட்டளையிடப்படுவதாக. 4 எங்களை அழித்துக் கொல்லும்படி நானும் என்னுடைய மக்களும் விற்கப்பட்டோம்; ஆண்களும், பெண்களும் அடிமைகளாக விற்கப்பட்டுப்போனாலும் நான் மவுனமாக இருப்பேன்; இப்பொழுதோ ராஜாவிற்கு உண்டாகும் நஷ்டத்திற்கு அந்த எதிரி உத்திரவாதம் பண்ணமுடியாது என்றாள். 5 அப்பொழுது ராஜாவாகிய அகாஸ்வேரு மறுமொழியாக, ராணியாகிய எஸ்தரை நோக்கி: இப்படிச் செய்யத் துணிகரங்கொண்டவன் யார்? அவன் எங்கே? என்றான். 6 அதற்கு எஸ்தர்: எதிரியும் பகைவனுமாகிய அந்த மனிதன் இந்த பொல்லாத ஆமான்தான் என்றாள்; அப்பொழுது ராஜாவிற்கும் ராணிக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான். 7 ராஜா கடுங்கோபத்தோடு திராட்சைரசப் பந்தியைவிட்டு எழுந்து, அரண்மனைத் தோட்டத்திற்குப் போனான்; ராஜாவினால் தனக்கு ஆபத்து நிர்ணயிக்கப்பட்டதென்று ஆமான் கண்டு, ராணியாகிய எஸ்தரிடம் தன்னுடைய உயிருக்காக விண்ணப்பம்செய்ய எழுந்து நின்றான். 8 ராஜா அரண்மனைத் தோட்டத்திலிருந்து திராட்சைரசம் பரிமாறப்பட்ட இடத்திற்குத் திரும்பி வரும்போது, எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்துகிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரண்மனையில் இருக்கும்போதே என்னுடைய கண்முன்னே இவன் ராணியை பலவந்தம் செய்யவேண்டுமென்று இருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து வந்தவுடனே ஆமானின் முகத்தை மூடினார்கள். 9 அப்பொழுது ராஜசமுகத்தில் இருக்கிற அதிகாரிகளில் அற்போனா என்னும் ஒருவன்: இதோ, ராஜாவின் நன்மைக்காகப் பேசின மொர்தெகாய்க்கு ஆமான் செய்வித்த ஐம்பது முழ உயரமான தூக்குமரம் ஆமானுடைய வீட்டின் அருகில் நடப்பட்டிருக்கிறது என்றான்; அப்பொழுது ராஜா: அதிலே அவனைத் தூக்கிப்போடுங்கள் என்றான். 10 அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்செய்த தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் கோபம் தணிந்தது.
8:1 அன்றையதினம் அகாஸ்வேரு ராஜா யூதர்களின் விரோதியாக இருந்த ஆமானின் வீட்டை ராணியாகிய எஸ்தருக்குக் கொடுத்தான்; மொர்தெகாய் ராஜாவிற்கு முன்பாக வந்தான்; அவன் தனக்கு இன்ன உறவு என்று எஸ்தர் அறிவித்திருந்தாள். 2 ராஜா ஆமானின் கையிலிருந்து வாங்கிய தம்முடைய மோதிரத்தை எடுத்து, அதை மொர்தெகாய்க்குக் கொடுத்தான்; எஸ்தர் மொர்தெகாயை ஆமானின் அரண்மனைக்கு அதிகாரியாக வைத்தாள். 3 பின்னும் எஸ்தர் ராஜாவிடம் பேசி, அவனுடைய பாதங்களில் விழுந்து அழுது, ஆகாகியனான ஆமானின் தீவினையையும் அவன் யூதர்களுக்கு விரோதம் செய்ய யோசித்த யோசனையையும் மாற்ற அவனிடம் விண்ணப்பம் செய்தாள். 4 அப்பொழுது ராஜா பொற்செங்கோலை எஸ்தருக்கு நீட்டினான்; எஸ்தர் எழுந்து ராஜாவிற்கு முன்பாக நின்று: 5 ராஜாவிற்கு விருப்பமாயிருந்து அவர் சமுகத்தில் எனக்குக் கிருபை கிடைத்து, ராஜாவிற்கு முன்பாக நான் சொல்லும் வார்த்தை சரியென்று காணப்பட்டு, அவருடைய கண்களுக்கு நான் பிரியமாக இருந்தால், ராஜாவின் நாடுகளிலெல்லாம் இருக்கிற யூதர்களை அழிக்கவேண்டும் என்று அம்மெதாத்தாவின் மகனாகிய ஆமான் என்னும் ஆகாகியன் தீய எண்ணத்தோடு எழுதின கட்டளைகள் செல்லாமல் போகச்செய்யும்படி எழுதி அனுப்பப்படவேண்டும். 6 என்னுடைய மக்களின்மேல் வரும் தீங்கை நான் எப்படிப் பார்க்கமுடியும்? என்னுடைய உறவினர்களுக்கு வரும் அழிவை நான் எப்படி சகிக்கமுடியும்? என்றாள். 7 அப்பொழுது அகாஸ்வேரு ராஜா ராணியாகிய எஸ்தரையும் யூதனாகிய மொர்தெகாயையும் நோக்கி: இதோ, ஆமானின் வீட்டை எஸ்தருக்குக் கொடுத்தேன்; அவன் யூதர்களை தாக்க துணிந்தபடியால் அவனை மரத்திலே தூக்கிப்போட்டார்கள். 8 இப்போதும் உங்களுக்கு விருப்பமானபடி நீங்கள் ராஜாவின் பெயரால் யூதர்களுக்காக எழுதி ராஜாவின் மோதிரத்தால் முத்திரை போடுங்கள்; ராஜாவின் பெயரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தால் முத்திரை போடப்பட்டதைச் செல்லாமல் போகச்செய்ய ஒருவராலும் முடியாது என்றான். 9 சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாம் தேதிலே ராஜாவின் எழுத்தர்கள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதர்களுக்கும் இந்திய தேசம்முதல் எத்தியோப்பியா தேசம் வரையுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த தேசத்தில் பேசுகிற மொழிகளிலும், அந்தந்த ஜாதியார் பேசும் மொழியிலும், யூதர்களுக்கும் அவர்களுடைய தேசத்தில் பேசுகிற மொழிகளிலும் அவர்களுடைய சொந்த மொழிகளிலும் எழுதப்பட்டது. 10 அந்தக் கட்டளைகள் அகாஸ்வேரு ராஜாவின் பெயரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தால் முத்திரை போடப்பட்டபின்பு, குதிரைகள்மேலும் வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் வேகமாக ஓடுகிற குதிரைகள் மேல்ஏறிப்போகிற தபால்காரர்கள் கையில் அனுப்பப்பட்டது. 11 அவைகளில், அகாஸ்வேரு ராஜாவுடைய எல்லா நாடுகளிலும் ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் தேதியாகிய அந்த ஒரே நாளிலே, 12 அந்தந்த நாடுகளில் இருக்கிற யூதர்கள் ஒன்றாகச் சேர்ந்து, தங்களுடைய உயிரைக் காப்பாற்றவும், தங்களை விரோதிக்கும் எதிரிகளாகிய மக்களும், தேசத்தைச் சேர்ந்தவர்களுமான எல்லோரையும், அவர்களுடைய குழந்தைகளையும், பெண்களையும் கொன்று அழிக்கவும், அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையிடவும், ராஜா யூதர்களுக்குக் கட்டளையிட்டார் என்று எழுதியிருந்தது. 13 யூதர்கள் தங்களுடைய பகைவர்களைப் பழிவாங்கும்படி நியமித்த அன்றையதினத்தில் ஆயத்தமாக இருக்கவேண்டும் என்று அந்தந்த நாட்டிலுள்ள எல்லா மக்களுக்கும் கூறப்படுகிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே; இது ஒவ்வொரு நாட்டிலும் பிரபலப்படுத்தப்பட்டது. 14 அப்படியே வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறின தபால்காரர்கள் ராஜாவின் வார்த்தையால் ஏவப்பட்டு, விரைவாக புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரண்மனையில் கொடுக்கப்பட்டது. 15 அப்பொழுது மொர்தெகாய் இளநீலமும் வெள்ளையுமான ராஜஉடையும், பெரிய பொற்கிரீடமும், பட்டும் இரத்தாம்பரமும் அணிந்தவனாக ராஜாவிடத்திலிருந்து புறப்பட்டான்; சூசான் நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திருந்தது. 16 இவ்விதமாக யூதர்களுக்கு வெளிச்சமும், மகிழ்ச்சியும், களிப்பும், கனமும் உண்டானது. 17 ராஜாவின் வார்த்தையும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த எல்லா நாடுகளிலும், எல்லாப் பட்டணங்களிலும், யூதர்களுக்குள்ளே அது மகிழ்ச்சியும், களிப்பும், விருந்துண்டு கொண்டாடும் நல்ல நாளுமாக இருந்தது; யூதர்களுக்குப் பயப்படுகிற பயம் தேசத்து மக்களைப் பிடித்ததால், அவர்களில் அநேகர் யூத மார்க்கத்தில் இணைந்தார்கள்.