ஆலயப்பணி மீண்டும் தொடங்குதல் (continued)

கி.மு. 520

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சகரியா 2–6

1 நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, தன் கையிலே அளவுநூல் பிடித்திருந்த ஒரு மனிதனைக் கண்டேன். 2 நீர் எவ்விடத்திற்குப் போகிறீர் என்று கேட்டேன்; அதற்கு அவர்: எருசலேமின் அகலம் இவ்வளவு என்றும் அதின் நீளம் இவ்வளவு என்றும் தெரிந்துகொள்ளும்படி அதை அளப்பதற்குப் போகிறேன் என்றார். 3 இதோ, என்னுடன் பேசின தூதன் புறப்பட்டபோது, வேறொரு தூதன் அவரைச் சந்திப்பதற்காகப் புறப்பட்டு வந்தான். 4 இவனை அவர் நோக்கி: நீ ஓடி இந்த வாலிபனிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால்: எருசலேம் தன் நடுவிலே கூடும் மனிதர்களின் திரளினாலும் மிருகஜீவன்களின் திரளினாலும் மதில் இல்லாத பட்டணங்கள்போல் குடியிருப்பாகும். 5 நான் அதற்குச் சுற்றிலும் நெருப்பு மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். 6 ஓகோ, நீங்கள் எழும்பி வடதேசத்திலிருந்து ஓடிவாருங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; ஆகாயத்து நான்கு திசைகளிலும் உங்களை நான் சிதறடித்தேன் என்று யெகோவா சொல்லுகிறார். 7 பாபிலோன் மகளிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள். 8 அதன்பிறகு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட தேசங்களிடத்திற்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் என்னுடைய கண்மணியைத் தொடுகிறான். 9 இதோ, நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக அசைப்பேன்; அதினால் அவர்கள் தங்கள் அடிமைகளுக்குக் கொள்ளையாவார்கள்; அப்பொழுது சேனைகளின் யெகோவா என்னை அனுப்பினாரென்று அறிவீர்கள். 10 மகளாகிய சீயோனே கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார். 11 அந்நாளிலே அநேக தேசங்கள் யெகோவாவைச் சேர்ந்து என் மக்களாவார்கள்; நான் உன் நடுவில் வாசமாயிருப்பேன்; அப்பொழுது சேனைகளின் யெகோவா என்னை உன்னிடத்தில் அனுப்பினாரென்று அறிவாய். 12 யெகோவா பரிசுத்த தேசத்திலே யூதாவாகிய தமது பங்கை சொந்தமாக்கிக்கொள்ள திரும்பவும் எருசலேமைத் தெரிந்துகொள்வார். 13 மாம்சமான அனைத்துமக்களே, யெகோவாவுக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; அவர் தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து எழுந்தருளினார் என்று சொல் என்றார்.

3:1 அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் யெகோவாவுடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதம் செய்ய அவன் வலதுபக்கத்திலே நின்றான். 2 அப்பொழுது யெகோவா சாத்தானை நோக்கி: யெகோவா உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட யெகோவா உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியிலிருந்து தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா என்றார். 3 யோசுவாவோ என்றால் அழுக்கு உடை அணிந்தவனாகத் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான். 4 அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேல் இருக்கிற அழுக்கு உடைகளைக் களைந்துபோடுங்கள் என்றார்; பின்பு அவனை நோக்கி: பார், நான் உன் அக்கிரமத்தை உன்னிடத்திலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த உடையை உடுத்தினேன் என்றார். 5 அவன் தலையின்மேல் சுத்தமான தலைப்பாகையை வைப்பார்களாக என்றார்; அப்பொழுது சுத்தமான தலைப்பாகையை அவன் தலையின்மேல் வைத்து, அவனுக்கு ஆடைகளை உடுத்தினார்கள்; யெகோவாவுடைய தூதன் அங்கே நின்றார். 6 யெகோவாவுடைய தூதன் யோசுவாவுக்குச் சாட்சியாக: 7 சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்; என் ஆலய வளாகங்களையும் காவல்காப்பாய்; இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளையிடுவேன். 8 இப்போதும், பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழர்களும் கேட்கட்டும்; இவர்கள் அடையாளமாயிருக்கிற மனிதர்கள்; இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரச்செய்வேன். 9 இதோ, நான் யோசுவாவுக்கு முன்பாக வைத்த கல்; இந்த ஒரே கல்லின்மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது; இதோ, நான் அதின் சித்திரவேலையை நிறைவேற்றி, இந்த தேசத்தில் அக்கிரமத்தை ஒரே நாளிலே நீக்கிப்போடுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 10 அந்நாளிலே நீங்கள் ஒருவரையொருவர் திராட்சைச்செடியின்கீழும் அத்திமரத்தின்கீழும் வரவழைப்பீர்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றார்.

4:1 என்னுடன் பேசின தூதன் திரும்பி வந்து தூங்குகிற ஒருவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி: 2 நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும், அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது. 3 அதின் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடதுபுறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன். 4 நான் என்னுடன் பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன். 5 என்னுடன் பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன். 6 அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற யெகோவாவுடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 7 பெரிய மலையே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார். 8 பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 9 செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்; அதினால் சேனைகளின் யெகோவா என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிவாய். 10 அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைசெய்யலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய யெகோவாவுடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலை சந்தோஷமாகப் பார்க்கிறது என்றார். 11 பின்பு நான் அவரை நோக்கி: குத்துவிளக்கிற்கு வலதுபுறமாகவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்னவென்று கேட்டேன். 12 மறுபடியும் நான் அவரை நோக்கி: இரண்டு பொற்குழாய்களின் வழியாகத் தொங்கி, பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கச்செய்கிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன். 13 அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன். 14 அப்பொழுது அவர்: இவைகள் இரண்டும் சர்வலோகத்திற்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் என்றார்.

5:1 நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து பார்க்கும்போது, இதோ, பறக்கிற ஒரு புத்தகச்சுருளைக் கண்டேன். 2 தூதன் என்னிடம், நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; பறக்கிற ஒரு புத்தகச்சுருளைக் காண்கிறேன், அதின் நீளம் இருபது முழமும் அதின் அகலம் பத்து முழமுமாயிருக்கிறது என்றேன். 3 அப்பொழுது அவர்: இது பூமியின் மீதெங்கும் புறப்பட்டுப்போகிற சாபம்; எந்தத் திருடனும் அந்த புத்தகச்சுருளின் ஒரு புறத்திலிருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்; ஆணையிடுகிற எவனும், அந்த புத்தகச்சுருளின் மறுபுறத்தில் இருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான். 4 அது திருடன் வீட்டிலும், என் நாமத்தைக்கொண்டு பொய்யாக சத்தியம் செய்கிறவன் வீட்டிலும் வந்து, அவனவன் வீட்டின் நடுவிலே தங்கி, அதை அதின் மரங்களோடும் அதின் கற்களோடும்கூட நிர்மூலமாக்குவதற்காக அதைப் புறப்பட்டுப்போகச்செய்வேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றார். 5 பின்பு என்னுடன் பேசின தூதன் வெளியே வந்து என்னை நோக்கி: நீ உன் கண்களை ஏறெடுத்து, புறப்பட்டு வருகிறதை என்னவென்று பார் என்றார். 6 அது என்னவென்று கேட்டேன்; அதற்கு அவர்: அது புறப்பட்டுவருகிறதான ஒரு மரக்கால் என்றார். பின்னும் அவர்: பூமியெங்கும் இதுதான் அவர்களுடைய கண்ணோக்கம் என்றார். 7 இதோ, ஒரு தாலந்து எடையுள்ள ஈயமூடி தூக்கிவரப்பட்டது; மரக்காலின் நடுவிலே ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். 8 அப்பொழுது அவர்: இவள் அக்கிரமக்காரி என்று சொல்லி, அவளை மரக்காலுக்குள்ளே தள்ளி ஈயக்கட்டியை அதின் வாயிலே போட்டார். 9 அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, இதோ, புறப்பட்டு வருகிற இரண்டு பெண்களைக் கண்டேன்; அவர்களுக்கு நாரையின் இறக்கைகளைப்போன்ற இறக்கைகள் இருந்தது; அவர்கள் இறக்கைகளில் காற்றிருந்தது; இவர்கள் மரக்காலை பூமிக்கும் வானத்திற்கும் நடுவாகத் தூக்கிக்கொண்டு போனார்கள். 10 நான் என்னுடன் பேசின தூதனை நோக்கி: இவர்கள் மரக்காலை எங்கே கொண்டுபோகிறார்கள் என்று கேட்டேன். 11 அதற்கு அவர்: சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டுவதற்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.

6:1 நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து, இதோ, இரண்டு மலைகளின் நடுவாகப் புறப்பட்டு வருகிற நான்கு இரதங்களைக் கண்டேன்; அந்த மலைகள் வெண்கல மலைகளாயிருந்தன. 2 முதலாம் இரதத்தில் சிவப்புக் குதிரைகளும், இரண்டாம் இரதத்தில் கறுப்புக்குதிரைகளும், 3 மூன்றாம் இரதத்தில் வெள்ளைக்குதிரைகளும், நான்காம் இரதத்தில் புள்ளிபுள்ளியான சிவப்புக்குதிரைகளும் பூட்டப்பட்டிருந்தன. 4 நான் என்னுடன் பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன். 5 அந்தத் தூதன் எனக்கு மறுமொழியாக: இவைகள் சர்வலோகத்திற்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய சமுகத்தில் நின்று புறப்படுகிற வானத்தினுடைய நான்கு ஆவிகள் என்றார். 6 ஒன்றில் பூட்டப்பட்டிருந்த கறுப்புக்குதிரைகள் வடதேசத்திற்குப் புறப்பட்டுப்போயின; வெண்மையான குதிரைகள் அவைகளின் பின்னே புறப்பட்டுப்போனது; புள்ளிபுள்ளியான குதிரைகள் தென்தேசத்திற்குப் புறப்பட்டுப்போனது. 7 சிவப்புக் குதிரைகளோவென்றால் புறப்பட்டுப்போய், பூமியிலே சுற்றித்திரிய கேட்டுக்கொண்டன; அதற்கு அவர்: போய் பூமியில் சுற்றித்திரியுங்கள் என்றார்; அப்படியே பூமியிலே சுற்றித்திரிந்தன. 8 பின்பு அவர் என்னைக் கூப்பிட்டு: பார், வடதேசத்திற்குப் புறப்பட்டுப்போனவைகள், வடதேசத்திலே என் கோபத்தைச் சாந்தப்படுத்தியது என்று என்னுடன் சொன்னார்.

9 பின்பு யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: 10 சிறையிருப்பின் மனிதர்களாகிய எல்தாயும், தொபியாவும், யெதாயாவும் பாபிலோனிலிருந்து வந்திருக்கும் அந்நாளிலே நீ போய், செப்பனியாவின் மகனாகிய யோசியாவின் வீட்டிற்குள் நுழைந்து, 11 அங்கே அவர்களுடைய கையிலே வெள்ளியையும் பொன்னையும் வாங்கி, கிரீடங்களைச் செய்வித்து, யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய தலையிலே வைத்து, 12 அவனுடன் சொல்லவேண்டியது: சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, ஒரு மனிதன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவார். 13 அவரே யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராகவும் இருப்பார்; இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும். 14 இந்தக் கிரீடங்களோவென்றால், யெகோவாவுடைய ஆலயத்திலே, ஏலேமுக்கும், தொபியாவுக்கும், யெதாயாவுக்கும், செப்பனியாவின் மகனாகிய ஏனுக்கும் நினைப்பூட்டுதலுக்கென்று வைக்கப்படுவதாக. 15 தூரத்திலுள்ளவர்கள் வந்து யெகோவாவுடைய ஆலயத்தைக் கூட இருந்து கட்டுவார்கள்; அப்பொழுது சேனைகளின் யெகோவா என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிந்துகொள்வீர்கள்; நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கேட்டு நடந்தீர்களென்றால் இது நிறைவேறும் என்று சொல் என்றார்.