ஆலயப்பணி மீண்டும் தொடங்குதல்
கி.மு. 520
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் மகனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேலுடைய தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
1 ராஜாவாகிய தரியு அரசாண்ட இரண்டாம் வருடம் ஆறாம் மாதம் முதலாம்தேதியிலே, யெகோவாவுடைய வார்த்தை ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாக செயல்தியேலின் மகனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுக்கும், யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுக்கும் உண்டாகி, அவர் சொன்னது என்னவென்றால்: 2 இந்த மக்கள் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்றகாலம் இன்னும் வரவில்லை என்கிறார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 3 ஆனாலும் ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாகக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அவர் சொல்லுகிறார்: 4 இந்த வீடு பாழாய்க்கிடக்கும்போது, நீங்கள் மேல்தளமுள்ள உங்கள் வீடுகளில் குடியிருக்கவேண்டிய காலம் இதுவோ? 5 இப்போதும் சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள். 6 நீங்கள் அதிகமாக விதைத்தும் கொஞ்சமாக அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் சாப்பிட்டும் திருப்தியாகவில்லை; குடித்தும் நிறைவடையவில்லை; நீங்கள் உடை உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாக அதைச் சம்பாதிக்கிறான். 7 உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 8 நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை வெட்டிக்கொண்டுவந்து, ஆலயத்தைக் கட்டுங்கள்; அதின்மேல் நான் பிரியமாயிருப்பேன், அதினால் என் மகிமை வெளிப்படும் என்று யெகோவா சொல்லுகிறார். 9 அதிகமாக வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினாலென்றால், என் வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் எல்லோரும் அவனவன் தன்தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதனாலே என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 10 ஆதலால் உங்கள்மேல் இருக்கிற வானம் பனியைப் பெய்யாமலும், பூமி பலனைக் கொடுக்காமலும் போனது. 11 நான் நிலத்தின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புது திராட்சைரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில் விளைகிற எல்லாவற்றின்மேலும், மனிதர்களின்மேலும், மிருகங்களின்மேலும், கைவேலை அனைத்தின்மேலும் வறட்சியை வருவித்தேன் என்றார்.
2 அப்பொழுது செயல்தியேலின் மகனாகிய செருபாபேலும் யோசதாக்கின் மகனாகிய யெசுவாவும் எழும்பி, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்டத்தொடங்கினார்கள்; அவர்களுக்கு தைரியம் சொல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள்.
12 அப்பொழுது செயல்தியேலின் மகனாகிய செருபாபேலும், யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனும், இஸ்ரவேல் மக்களில் மீதியான அனைவரும் தங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்திற்கும், தங்கள் தேவனாகிய யெகோவா அனுப்பின ஆகாய் என்னும் தீர்க்கதரிசியினுடைய வார்த்தைகளுக்கும் செவிகொடுத்தார்கள், மக்கள் யெகோவாவுக்கு முன்பாகப் பயந்திருந்தார்கள். 13 அப்பொழுது யெகோவாவுடைய தூதனாகிய ஆகாய், யெகோவா தூதனுப்பிய வார்த்தையின்படி மக்களை நோக்கி: நான் உங்களோடே இருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான். 14 பின்பு யெகோவா செயல்தியேலின் மகனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுடைய ஆவியையும், யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய ஆவியையும் மக்களில் மீதியான எல்லோருடைய ஆவியையும் எழுப்பினார்; அவர்கள் வந்து, தங்கள் தேவனாகிய சேனைகளுடைய யெகோவாவின் ஆலயத்திலே வேலைசெய்தார்கள். 15 தரியு ராஜாவின் ஆட்சியின் இரண்டாம் வருடம் ஆறாம் மாதம் இருபத்து நான்காம் தேதியிலே இது நடந்தது.
2:1 ராஜாவாகிய தரியு அரசாண்ட ஏழாம் மாதம் இருபத்தொன்றாம் தேதியிலே ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாக, யெகோவாவுடைய வார்த்தை உண்டானது; அவர்: 2 நீ செயல்தியேலின் மகனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனோடும், யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனோடும், மக்களில் மீதியானவர்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: 3 இந்த ஆலயத்தின் முந்தின மகிமையைக் கண்டவர்களில் உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிறவர்கள் யார்? இப்பொழுது இது உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? அதற்கு இது உங்கள் பார்வையில் ஒன்றுமில்லாததுபோல் தோன்றுகிறதல்லவா? 4 ஆனாலும் செருபாபேலே, நீ திடன்கொள் என்று யெகோவா சொல்லுகிறார்; யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனே, நீ திடன்கொள்; தேசத்தின் எல்லா மக்களே, நீங்கள் திடன் கொள்ளுங்கள், வேலையை நடத்துங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உங்களுடனே இருக்கிறேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 5 நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைசெய்த வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள். 6 சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: கொஞ்சக்காலத்திற்குள்ளே இன்னும் ஒருமுறை நான் வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும், வெட்டாந்தரையையும் அசையச்செய்வேன். 7 சகல தேசங்களையும் அசையச்செய்வேன், சகல தேசங்களாலும் விரும்பப்பட்டவர் வருவார்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையச்செய்வேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 8 வெள்ளியும் பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 9 முந்தின ஆலயத்தின் மகிமையைக்காட்டிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் யெகோவா உரைக்கிறார் என்று சொல் என்றார்.
1 தரியு அரசாண்ட இரண்டாம் வருடம் எட்டாம் மாதத்திலே இத்தோவின் மகனான பெரகியாவின் மகனாகிய சகரியாவுக்கு உண்டான யெகோவாவுடைய வார்த்தை: 2 யெகோவா உங்கள் முன்னோர்களின்மேல் கடுங்கோபமாயிருந்தார். 3 ஆகையால் நீ அவர்களை நோக்கி: சேனைகளின் யெகோவா உரைக்கிறது என்னவென்றால்: என்னிடத்தில் திரும்புங்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; அப்பொழுது நான் உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 4 உங்கள் முன்னோர்களைப்போல் இருக்காதீர்கள்; முந்தின தீர்க்கதரிசிகள் அவர்களை நோக்கி: உங்கள் பொல்லாத வழிகளையும், உங்கள் பொல்லாத செயல்களையும்விட்டுத் திரும்புங்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்று கூப்பிட்டார்கள்; ஆனாலும் எனக்குச் செவிகொடுக்காமலும் என்னைக் கவனிக்காமலும் போனார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 5 உங்கள் முன்னோர்கள் எங்கே? தீர்க்கதரிசிகள் என்றென்றைக்கும் உயிரோடிருப்பார்களோ? 6 இல்லாமற்போனாலும், தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரர்களுக்கு நான் கட்டளையிட்ட என் வார்த்தைகளும் என் தீர்மானங்களும் உங்கள் முன்னோர்களிடத்தில் பலிக்கவில்லையோ? எங்கள் வழிகளின்படியேயும், எங்கள் செயல்களின்படியாகவும் சேனைகளின் யெகோவா எங்களுக்குச் செய்ய தீர்மானித்தபடியே எங்களுக்குச் செய்தாரென்று அவர்கள் திரும்பவந்து சொன்னதில்லையோ என்று சொல் என்றார்.
10 தரியுவின் ஆட்சியின் இரண்டாம் வருடம் ஒன்பதாம் மாதம் இருபத்திநான்காம் தேதியிலே, ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாகக் யெகோவாவுடைய வார்த்தை உண்டானது; அவர்: 11 ஒருவன் தன் ஆடையின் தொங்கலிலே பரிசுத்த மாம்சத்தைக் கொண்டுபோகும்போது தன் ஆடையின் தொங்கல், அப்பத்தையாகிலும், சாதத்தையாகிலும், திராட்சைரசத்தையாகிலும், எண்ணெயையாகிலும், மற்றெந்த உணவையாகிலும் தொட்டால் அது பரிசுத்தமாகுமோ என்று நீ ஆசாரியர்களிடத்தில் வேத நியாயத்தைப்பற்றிக் கேள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றார். 12 அதற்கு ஆசாரியர்கள் மறுமொழியாக: பரிசுத்தமாகாது என்றார்கள். 13 பிணத்தால் தீட்டுப்பட்டவன் அவைகளில் எதையாகிலும் தொட்டால், அது தீட்டுப்படுமோ என்று ஆகாய் மேலும் கேட்டான்; அதற்கு ஆசாரியர்கள் மறுமொழியாக: தீட்டுப்படும் என்றார்கள். 14 அப்பொழுது ஆகாய்; அப்படியே இந்த மக்களும் இந்த தேசத்தாரும் என் சமுகத்தில் இருக்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; அவர்களுடைய கைகளின் எல்லா செயல்களும் அப்படியே இருக்கிறது; அவர்கள் அங்கே கொண்டுவந்து படைக்கிறதும் தீட்டுப்பட்டிருக்கிறது.
15 இப்போதும் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கு ஒரு கல்லின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டதுமுதல் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள். 16 அந்த நாட்கள்முதல் ஒருவன் இருபது மரக்காலாகக் கண்ட தானியக் குவியலிடம் வந்தபோது, பத்து மரக்கால் மாத்திரம் இருந்தது; ஒருவன் ஆலையின் தொட்டியில் ஐம்பது குடம் மொள்ள ஆலையினிடத்திலே வந்தபோது இருபது குடம் மாத்திரம் இருந்தது. 17 பிஞ்சுக்காய்களினாலும், விஷப்பனியினாலும், கல்மழையினாலும் உங்களை உங்கள் கைகளின் வேலைகளிலெல்லாம் அடித்தேன்; ஆனாலும் நீங்கள் என்னிடத்தில் மனதைத் திருப்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 18 இப்போதும் இதற்கு முந்தின காலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்; ஒன்பதாம் மாதம் இருபத்திநான்காம் தேதியாகிய இந்நாள்முதல் யெகோவாவுடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்ட அந்நாள்வரைக்கும் சென்ற காலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள். 19 களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் உண்டோ? திராட்சைச்செடியும், அத்திமரமும், மாதுளம்செடியும், ஒலிவமரமும் பழங்களைக் கொடுக்கவில்லையே; நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார் என்றான்.
20 இருபத்திநான்காம் தேதியாகிய அதே நாளிலே யெகோவாவுடைய வார்த்தை இரண்டாவதுமுறை ஆகாய் என்பவனுக்கு உண்டாகி, அவர்: 21 நீ யூதாவின் தலைவனாகிய செருபாபேலோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்தையும் பூமியையும் அசையச்செய்து, 22 இராஜ்யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, தேசங்களுடைய ராஜ்யங்களின் பெலத்தை அழித்து, இரதத்தையும் அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப்போடுவேன்; குதிரைகளோடே அவைகளின்மேல் ஏறியிருப்பவர்களும் அவரவர் தங்கள் தங்கள் சகோதரனின் பட்டயத்தினாலே விழுவார்கள். 23 சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: செயல்தியேலின் மகனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் யெகோவா உரைக்கிறார் என்று சொல் என்றார்.
7 தரியு அரசாண்ட இரண்டாம் வருடம், சேபாத் மாதமாகிய பதினோராம் மாதம் இருபத்திநான்காம் தேதியிலே, யெகோவாவுடைய வார்த்தை இத்தோவின் மகனான பெரகியாவின் மகன் சகரியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டானது; அவன் சொன்னது: 8 இதோ, இன்று இரவிலே சிவப்புக்குதிரையின்மேல் ஏறியிருந்த ஒரு மனிதனைக் கண்டேன்; அவர் பள்ளத்தாக்கில் இருக்கிற மிருதுச்செடிகளுக்குள்ளே நின்றார்; அவருக்குப் பின்னாலே சிவப்பும், மங்கின நிறமும், வெண்மையுமான குதிரைகள் இருந்தன. 9 அப்பொழுது நான்: என் ஆண்டவரே, இவர்கள் யாரென்று கேட்டேன்; என்னுடன் பேசுகிற தூதனானவர்: இவர்கள் யாரென்று நான் உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னார். 10 அப்பொழுது மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற அந்த மனிதன் மறுமொழியாக: இவர்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்க்கக் யெகோவா அனுப்பினவர்கள் என்றார். 11 பின்பு அவர்கள் மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற யெகோவாவுடைய தூதனை நோக்கி: நாங்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்த்தோம்; இதோ, பூமிமுழுவதும் அமைதலாக இருக்கிறது என்றார்கள். 12 அப்பொழுது யெகோவாவுடைய தூதன் மறுமொழியாக: சேனைகளின் யெகோவாவே, இந்த எழுபது வருடங்களாக நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எதுவரை இரங்காதிருப்பீர் என்று சொல்ல, 13 அப்பொழுது யெகோவா, என்னுடன் பேசின தூதனுக்கு நல்வார்த்தைகளையும் ஆறுதலான வார்த்தைகளையும் மறுமொழியாகச் சொன்னார். 14 அப்பொழுது என்னுடன் பேசின தூதன் என்னை நோக்கி: சேனைகளின் யெகோவா உரைக்கிறது என்னவென்றால்: நான் எருசலேமுக்காகவும் சீயோனுக்காகவும் மகா வைராக்கியம் கொண்டிருக்கிறேன். 15 நான் கொஞ்சங் கோபங்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் தீங்கை அதிகரிக்கத் தேடினபடியினால், சுகமாக வாழுகிற அன்னியமக்கள்மேல் நான் கடுங்கோபம்கொண்டேன். 16 ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று யெகோவா சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்று கூறு என்றார். 17 இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் நிரம்பியிருக்கும்; இன்னும் யெகோவா சீயோனைத் தேற்றரவு செய்வார்; இன்னும் எருசலேமைத் தெரிந்துகொள்வார் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்று மேலும் கூறு என்றார்.
18 நான் என் கண்களை ஏறெடுத்துப்பார்த்தபோது, இதோ, நான்கு கொம்புகளைக் கண்டேன். 19 அவைகள் என்னவென்று என்னுடன் பேசின தூதனைக் கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும், இஸ்ரவேலையும், எருசலேமையும் சிதறடித்த தேசங்கள் என்றார். 20 பின்பு யெகோவா எனக்கு நான்கு தொழிலாளிகளைக் காண்பித்தார். 21 இவர்கள் என்ன செய்ய வருகிறார்களென்று கேட்டேன்; அதற்கு அவர்: ஒருவனும் தன் தலையை ஏறெடுக்கமுடியாதபடி அந்தக் கொம்புகள் யூதாவைச் சிதறடித்ததே, அவைகளுக்குப் பயமுறுத்துகிறதற்கும், யூதாவின் தேசத்தைப் பாழாக்கத் தங்கள் கொம்பை எடுத்த தேசங்களுடைய கொம்புகளை விழத்தள்ளுகிறதற்கும் இவர்கள் வந்தார்கள் என்றார்.