ஆலயப்பணி நிறுத்தப்பட்டு மறுபடியும் தொடங்கப்படுதல்

கி.மு. 519

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எஸ்றா 5:3–6:13

3 அக்காலத்திலே நதிக்கு இந்தப்புறத்தில் இருக்கிற நாடுகளுக்கு அதிபதியாகிய தத்னாய் என்பவனும், சேத்தார் பொஸ்னாயும், அவர்கள் கூட்டாளிகள் அவர்களிடத்திற்கு வந்து, இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டவன் யார் என்று அவர்களைக் கேட்டார்கள். 4 அப்பொழுது அதற்கு ஏற்ற பதிலையும், இந்த மாளிகையைக் கட்டுகிற மனிதர்களின் பெயர்களையும் அவர்களுக்குச் சொன்னோம். 5 ஆனாலும் இந்தச் செய்தி தரியுவினிடத்திற்குப் போய் எட்டுகிறவரைக்கும் இவர்கள் யூதருடைய மூப்பரின் வேலையைத் தடைசெய்யாதபடி, அவர்களுடைய தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது; அப்பொழுது இதைக்குறித்து அவர்கள் சொன்ன மறுமொழியைக் கடிதத்தில் எழுதியனுப்பினார்கள்.

6 நதிக்கு இந்தப்புறத்திலிருக்கிற தத்னாய் என்னும் தேசாதிபதியும், சேத்தார் பொஸ்னாயும், நதிக்கு இப்புறத்திலிருக்கிற அப்பற்சாகியரான அவனுடன் இருந்தவர்களும், ராஜாவாகிய தரியுவிற்கு எழுதியனுப்பின கடிதத்தின் நகலாவது: 7 ராஜாவாகிய தரியுவிற்கு முழு சமாதானமும் உண்டாவதாக. 8 நாங்கள் யூத நாட்டிலுள்ள மகா தேவனுடைய ஆலயத்திற்குப் போனோம்; அது பெருங்கற்களால் கட்டப்படுகிறது; மதில்களின்மேல் நீண்ட மரங்கள் வைக்கப்பட்டு, அந்த வேலை ஒழுங்காக நடந்து, அவர்களுக்குக் கைகூடிவருகிறதென்பது ராஜாவுக்குத் தெரிந்திருப்பதாக. 9 அப்பொழுது நாங்கள் அவர்கள் மூப்பர்களை நோக்கி: இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டது யார் என்று கேட்டோம். 10 இதுவுமல்லாமல், அவர்களுக்குள்ளே தலைவர்களான மனிதர்கள் யார் என்று உமக்கு எழுதி தெரியப்படுத்த, அவர்களுடைய பெயர்கள் என்னவென்றும் கேட்டோம். 11 அவர்கள் எங்களுக்கு மறுமொழியாக: நாங்கள் பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் தேவனாக இருக்கிறவரைப் பின்பற்றுகிறவர்களாக இருந்து, இஸ்ரவேலின் பெரிய ராஜா ஒருவன் அநேக வருடங்களுக்குமுன்னே கட்டிமுடித்த இந்த ஆலயத்தை நாங்கள் மறுபடியும் கட்டுகிறோம். 12 எங்கள் முற்பிதாக்கள் பரலோகத்தின் தேவனைக் கோபப்படுத்தியதால், அவர் இவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் கல்தேயன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் இந்த ஆலயத்தை இடித்து, ஜனத்தைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான். 13 ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருடத்திலே கோரேஸ் ராஜா தேவனுடைய இந்த ஆலயத்தைக் கட்டுவதற்கு கட்டளையிட்டார். 14 நேபுகாத்நேச்சார் எருசலேம் தேவாலயத்திலிருந்து எடுத்து, பாபிலோன் கோவிலில் கொண்டுபோய் வைத்திருந்த தேவனுடைய ஆலயத்தின் பொன், வெள்ளித் தட்டுமுட்டுகளையும் ராஜாவாகிய கோரேஸ் பாபிலோன் கோவிலிலிருந்து எடுத்து. அவர் தேசத்து ஆளுனராக ஏற்படுத்திய செஸ்பாத்சாரென்னும் பெயருள்ளவனிடத்தில் அவைகளை ஒப்படைத்து, 15 அவனை நோக்கி: நீ இந்தத் தட்டுமுட்டுகளை எடுத்து, எருசலேமில் இருக்கும் தேவாலயத்திற்குக் கொண்டுபோ; தேவனுடைய ஆலயம் அதின் இடத்திலே கட்டப்படவேண்டும் என்றார். 16 அப்பொழுது அந்த செஸ்பாத்சார் வந்து, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் அஸ்திபாரத்தைப் போட்டான்; அந்தநாள்முதல் இதுவரைக்கும் அது கட்டப்பட்டுவருகிறது; அது இன்னும் நிறைவடையவில்லை என்றார்கள். 17 இப்பொழுதும் ராஜாவுக்கு சித்தமாயிருந்தால், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்ட, ராஜாவாகிய கோரேஸ் கட்டளையிட்டதுண்டோ என்று பாபிலோனில் இருக்கிற ராஜாவின் கஜானாவிலே ஆராய்ந்து பார்க்கவும், இந்த விஷயத்தில் ராஜாவினுடைய விருப்பம் என்னவென்று எங்களுக்கு எழுதியனுப்பவும், கட்டளையிடவும்வேண்டும் என்று எழுதியனுப்பினார்கள்.

6:1 அப்பொழுது ராஜாவாகிய தரியு இட்ட கட்டளையின்படியே பாபிலோன் கஜானாவிலுள்ள பத்திர அறையை சோதித்தார்கள். 2 மேதிய நாட்டிலிருக்கிற அக்மேதா பட்டணத்தின் அரண்மனையிலே ஒரு சுருள் கிடைத்தது; அதிலே எழுதியிருந்த விபரமாவது: 3 ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருடத்தில், கோரேஸ் ராஜா எருசலேமிலிருந்த தேவாலயத்தைக்குறித்து இட்ட கட்டளை என்னவென்றால்: தேவாலயமானது பலிசெலுத்திவந்த இடத்திலே கட்டவேண்டும்; அதின் அஸ்திபாரங்கள் பலமாயிருக்கவேண்டும்; அது அறுபதுமுழ உயரமும், அறுபதுமுழ அகலமுமாக இருக்கவேண்டும். 4 அது மூன்று வரிசை பெருங்கற்களாலும், ஒரு மாடிவரிசை புது நீண்டகற்களாக கட்டவேண்டும்; அதற்காக ஆகும் செலவு ராஜாவின் அரண்மனையிலிருந்து கொடுக்கப்படவேண்டும். 5 அன்றியும் நேபுகாத்நேச்சார் எருசலேமின் ஆலயத்திலிருந்து எடுத்து, பாபிலோனுக்குக் கொண்டுவந்த தேவனுடைய ஆலயத்திற்குரிய பொன் வெள்ளிப் பொருட்கள் எருசலேமிலுள்ள தேவாலயமாகிய தங்களுடைய இடத்திற்குப் போய்சேருவதற்குத் திரும்பக் கொடுக்கவேண்டும்; அவைகளை தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுபோங்கள் என்று எழுதப்பட்டிருந்தது. 6 அப்பொழுது தரியு ராஜா எழுதியனுப்பினதாவது: இப்பொழுதும், நதிக்கு மறுபுறத்திலிருக்கிற ஆளுனராகிய தத்னாயும் சேத்தார் பொஸ்னாயுமாகிய நீங்களும், நதிக்கு மறுபுறத்திலிருக்கிற அதிகாரிகளான உங்களுடைய கூட்டாளிகளான அனைவரும் அந்த இடத்தைவிட்டு விலகியிருங்கள். 7 தேவனுடைய ஆலயத்தின் வேலையை அவர்கள் செய்யட்டும், யூதருடைய அதிபதியும், மூப்பர்களும், தேவனுடைய ஆலயத்தை அதின் இடத்திலே கட்டுவார்களாக. 8 தேவனுடைய ஆலயத்தை யூத மூப்பர்கள் கட்டும் விஷயத்தில் நீங்கள் அவர்களுக்கு செய்யத்தக்கதாக, நம்மால் உண்டான கட்டளை என்னவென்றால், அந்த மனிதர்களுக்குத் தடை ஏற்படாமலிருக்க, நதிக்கு மறுபுறத்தில் வாங்கப்படும் வரியை ராஜாவின் பணத்திலே அவர்களுக்குத் தாமதமில்லாமல் ஆகும் செலவைக் கொடுக்கவேண்டும். 9 பரலோகத்தின் தேவனுக்கு சர்வாங்க தகனபலிகளை செலுத்தத் தேவையான இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சைரசம், எண்ணெய் ஆகியவை அனுதினம் அவர்கள் கேட்கிற விதத்தில் குறையில்லாமல் கொடுக்கவேண்டும். 10 எருசலேமில் இருக்கிற ஆசாரியர்கள் பரலோகத்தின் தேவனுக்கு சுகந்த வாசனையான பலிகளைச் செலுத்தி, ராஜாவுக்கும் அவருடைய மகன்களுக்கும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுதல் செய்ய இப்படிச் செய்யவேண்டும். 11 பின்னும் நம்மால் பிறக்கும் கட்டளை என்னவென்றால்: எந்த மனிதனாவது இந்தக் கட்டளையை மாற்றினால், அவனுடைய வீட்டிலிருந்து ஒரு நீண்ட கல் பிடுங்கி நாட்டப்பட்டு, அவன் அதில் தூக்கிப்போடப்படவும், அதினால் அவனுடைய வீடு குப்பைமேடாவதாக. 12 ஆகையால் இதை மாற்றவும், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கெடுக்கவும், தங்கள் கையை நீட்டப்போகிற சகல ராஜாக்களையும், அனைத்து மக்களையும் தம்முடைய நாமத்தை அங்கே விளங்கச் செய்த தேவன் அழிப்பாராக; தரியுவாகிய நாம் இந்தக் கட்டளையைக் கொடுத்தோம்; இதன்படி ஜாக்கிரதையாக செய்யவேண்டும் என்று எழுதியனுப்பினான்.

13 அப்பொழுது நதிக்கு இந்தப்புறத்திலிருக்கிற ஆளுனராகிய தத்னாயும், சேத்தார் பொஸ்னாயும், அவர்களின் கூட்டாளிகளும், தரியு ராஜா கட்டளையிட்ட பிரகாரம் ஜாக்கிரதையாக செய்தார்கள்.

சங்கீதங்கள் 138

தாவீதின் பாடல்.

1 உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்;

தெய்வங்களுக்கு முன்பாக உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.

2 உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து,

உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது பெயரைத் துதிப்பேன்;

உமது எல்லாப் புகழைவிட உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.

3 நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்திரவு அருளினீர்;

என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்;

4 யெகோவாவே, பூமியின் ராஜாக்களெல்லோரும்

உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள்.

5 யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால்,

அவர்கள் யெகோவாவின் வழிகளைப் பாடுவார்கள்.

6 யெகோவா உயர்ந்தவராக இருந்தும்,

தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்;

மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.

7 நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்;

என்னுடைய எதிரிகளின் கோபத்திற்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்;

உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்.

8 யெகோவா எனக்காக யாவையும் செய்து முடிப்பார்;

யெகோவாவே, உமது கிருபை என்றுமுள்ளது;

உமது கரத்தின் செயல்களைத் தள்ளிவிடாமலிரும்.