ஜெபத்தைப் பற்றிய இரண்டு உவமைகள்

ஜெபத்தைப் பற்றிய இரண்டு உவமைகள்: விடாமுயற்சியுள்ள விதவை, பரிசேயனும் வரிவசூலிப்பவனும்.

கி.பி. 29 முதல் 30 வரை

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

லூக்கா 18:1–14

18:1 சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார். 2 ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனிதர்களை மதிக்காதவனுமாக இருந்தான். 3 அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்ணினாள். 4 வெகுநாட்கள்வரை அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனிதர்களை மதிக்காமலும் இருந்தும், 5 இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னைத் தொந்தரவுசெய்யாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார். 6 பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள். 7 அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் காரியத்தில் நீடிய பொறுமையுள்ளவராக இருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? 8 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆனாலும் மனிதகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.

9 அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாக எண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார். 10 இரண்டு மனிதர்கள் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்திற்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி வசூலிப்பவன். 11 பரிசேயன் நின்று: தேவனே! நான் கொள்ளைக்காரர்கள், அநியாயக்காரர்கள், விபசாரக்காரர்கள் ஆகிய மற்ற மனிதர்களைப்போலவும், இந்த வரி வசூலிப்பவனைப்போலவும் இராததினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். 12 வாரத்தில் இரண்டுமுறை உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் பத்தில் ஒரு பங்கு காணிக்கை செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். 13 வரி வசூலிப்பவன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்திற்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாக இரும் என்றான். 14 அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாகத் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனென்றால், தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

இயேசு விவாகரத்தைப் பற்றிப் போதிக்கிறார்

கலிலேயாவிலிருந்து பெரேயா வழியாகச் செல்லும்போது, இயேசு விவாகரத்தைப் பற்றிப் போதிக்கிறார்.

பெரேயா

மத்தேயு 19:1–12

19:1 இயேசு இந்த வசனங்களைச் சொல்லிமுடித்தபின்பு, அவர் கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அக்கரையான யூதேயாவிற்கு வந்தார். 2 திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்; அந்த இடத்தில் அவர்களை குணமாக்கினார்.

3 அப்பொழுது, பரிசேயர்கள் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: கணவனானவன் தன் மனைவியை எந்தக்காரணத்தினாலாவது விவாகரத்து செய்வது நியாயமா என்று கேட்டார்கள்.

4 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: ஆரம்பத்திலே மனிதர்களை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,

5 இதினிமித்தம் கணவனானவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டுத் தன் மனைவியோடு இணைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?

6 இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவர்களாக இல்லாமல், ஒரே சரீரமாக இருக்கிறார்கள்; ஆகவே, தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கவேண்டும் என்றார்.

7 அதற்கு அவர்கள்: அப்படியானால், விடுதலைப்பத்திரம் கொடுத்து, அவளை விவாகரத்து செய்யலாம் என்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள். 8 அதற்கு அவர்: உங்களுடைய மனைவிகளை விவாகரத்து செய்யலாம் என்று உங்களுடைய இருதயக்கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆரம்பமுதலாய் அப்படியிருக்கவில்லை.

9 ஆதலால், எவனாவது தன் மனைவி வேசித்தனம் செய்ததினிமித்தமேயன்றி, அவளை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம்செய்தால், அவன் விபசாரம் செய்கிறவனாக இருப்பான்; விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாக இருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 10 அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: மனைவியைப்பற்றி கணவனுடைய காரியம் இப்படியிருந்தால், திருமணம்செய்கிறது நல்லதல்ல என்றார்கள். 11 அதற்கு அவர்: வரம்பெற்றவர்களேதவிர மற்றவர்கள் இந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 12 தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாகப் பிறந்தவர்களும் உண்டு; மனிதர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோக ராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.

மாற்கு 10:1–12

10:1 இயேசு அந்த இடத்திலிருந்து, யோர்தான் நதிக்கு அக்கரையில் உள்ள தேசத்தின்வழியாக யூதேயாவின் எல்லைகளில் வந்தார். மக்கள் மீண்டும் அவரிடம் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே மீண்டும் அவர்களுக்குப் போதகம்பண்ணினார்.

2 அப்பொழுது பரிசேயர்கள், அவரைச் சோதிக்கவேண்டும் என்று, அவரிடம் வந்து: கணவன் தன் மனைவியை விவாகரத்து செய்வது நியாயமா? என்று கேட்டார்கள்.

3 அவர் மறுமொழியாக: மோசே உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது என்ன என்று கேட்டார். 4 அதற்கு அவர்கள் விவாகரத்திற்குரிய விடுதலைப்பத்திரத்தை எழுதிக்கொடுத்து, அவளை விவாகரத்து செய்யலாம் என்று மோசே அனுமதி கொடுத்திருக்கிறார் என்றார்கள். 5 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: உங்களுடைய இருதயக் கடினத்தினாலே இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான்.

6 ஆனாலும், ஆரம்பத்திலே மனிதர்களைப் படைத்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்.

7 இதனால் கணவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டுத் தன் மனைவியோடு இணைந்திருப்பான்;

8 அவர்கள் இருவர்களும் ஒரே மாம்சமாக இருப்பார்கள்; இவ்விதமாக அவர்கள் இருவர்களாக இல்லாமல் ஒரே மாம்சமாக இருக்கிறார்கள். 9 எனவே, தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கவேண்டும் என்றார்.

10 பின்பு வீட்டில் இருக்கும்போது அவருடைய சீடர்கள் அந்தக் காரியத்தைக்குறித்து மீண்டும் அவரிடம் விசாரித்தார்கள்.

11 அப்பொழுது அவர்: யாராவது தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம்செய்தால், அவன் அவளுக்கு விரோதமாக விபசாரம் செய்கிறவனாக இருப்பான். 12 மனைவியும் தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு, வேறொருவனை திருமணம்செய்தால், விபசாரம் செய்கிறவளாக இருப்பாள் என்றார்.

கிறிஸ்துவும் பிள்ளைகளும்

கிறிஸ்துவும் பிள்ளைகளும், இயேசுவின் மனப்பான்மையைப் புரிந்துகொள்ளச் சீடர்கள் தவறியதும்.

பெரேயா

மத்தேயு 19:13–15

19:13 அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் அவர் கரங்களை வைத்து ஜெபம்செய்யும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீடர்கள் அதட்டினார்கள்.

14 இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைசெய்யாமலிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி,

15 அவர்கள்மேல் கரங்களை வைத்து, பின்பு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போனார்.

மாற்கு 10:13–16

10:13 அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடுவதற்காக அவர்களை அவரிடம் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீடர்கள் அதட்டினார்கள்.

14 இயேசு அதைப் பார்த்து கோபப்பட்டு: சிறு பிள்ளைகள் என்னிடம் வருகிறதற்கு இடம்கொடுங்கள்; அவர்களைத் தடைப்பண்ணவேண்டாம்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.

15 யாராவது சிறு பிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவன் அதில் பிரவேசிப்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,

16 அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கரங்களை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.

லூக்கா 18:15–17

18:15 பின்பு குழந்தைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீடர்கள் அதைக் கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள்.

16 இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.

17 எவனாவது சிறு பிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.