லாசரு உயிரோடு எழுப்பப்பட்டதன் விளைவுகள்
லாசருவை உயிரோடு எழுப்பியது மக்கள்மேலும், ஆலோசனைச் சங்கத்தின்மேலும், இயேசுவின் நடமாட்டங்களின்மேலும் ஏற்படுத்திய விளைவு.
யூதேயாவிலுள்ள எருசலேமும் எப்பிராயீமும்
கி.பி. 29 முதல் 30 வரை
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யோவான் 11:45–54
11:45 அப்பொழுது மரியாளிடத்தில் வந்து, இயேசு செய்தவைகளைப் பார்த்தவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். 46 அவர்களில் சிலர் பரிசேயர்களிடம்போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள். 47 அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் ஆலோசனை சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்ன செய்கிறது? இந்த மனிதன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே. 48 நாம் இவனை இப்படியே விட்டுவிட்டால், எல்லோரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர்கள் வந்து நம்முடைய இடத்தையும் மக்களையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள். 49 அப்பொழுது அவர்களில் ஒருவனும், அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களைப் பார்த்து: உங்களுக்கு ஒன்றும் தெரியாது; 50 மக்கள் எல்லோரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனிதன் மக்களுக்காக மரிப்பது நமக்கு நலமாக இருக்கும் என்று நீங்கள் சிந்திக்காமல் இருக்கிறீர்கள் என்றான். 51 இதை அவன் தானாகச் சொல்லாமல், அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதமக்களுக்காக மரிக்கப்போகிறார் என்றும், 52 அந்த மக்களுக்காக மாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறார் என்றும் தீர்க்கதரிசனமாக சொன்னான். 53 அந்தநாள்முதல் அவரைக் கொலைசெய்யும்படிக்கு ஆலோசனை செய்தார்கள். 54 ஆகவே, இயேசு அதன்பின்பு வெளியரங்கமாக யூதர்களுக்குள்ளே தங்காமல், அந்த இடத்தைவிட்டு வனாந்திரத்திற்கு அருகான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீடர்களோடு தங்கியிருந்தார்.
இயேசு எருசலேமுக்குத் தமது இறுதிப் பயணத்தைத் தொடங்குகிறார்
இயேசு சமாரியா, கலிலேயா வழியாக எருசலேமுக்குத் தமது இறுதிப் பயணத்தைத் தொடங்குகிறார்.
சமாரியாவில் அல்லது கலிலேயாவில்
அவர் பத்து குஷ்டரோகிகளைக் குணமாக்கி, பரிசேயர்களுக்கும் சீடர்களுக்கும் தேவனுடைய ராஜ்யத்தின் தன்மையை விளக்குகிறார்.
லூக்கா 17:11–37
17:11 பின்பு அவர் எருசலேமுக்குப் பயணமாகபோகும்போது, அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின்வழியாக நடந்துபோனார். 12 அவர் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தபோது, குஷ்டரோகமுள்ள மனிதர்கள் பத்துபேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று: 13 இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள். 14 அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகும்போது சுகமானார்கள். 15 அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தமாக தேவனை மகிமைப்படுத்தி, 16 அவருடைய பாதத்தருகே முகங்குப்புறவிழுந்து, அவருக்கு நன்றி செலுத்தினான்; அவன் சமாரியனாக இருந்தான். 17 அப்பொழுது இயேசு: சுகமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? 18 தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனைத்தவிர மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, 19 அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
20 தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர்கள் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் மறுமொழியாக: தேவனுடைய ராஜ்யம் கண்களுக்குத் தெரியும்படியாக வராது. 21 இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவாக இருக்காது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார். 22 பின்பு அவர் சீடர்களை நோக்கி: மனிதகுமாரனுடைய நாட்களிலொன்றைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுங்காலம் வரும்; ஆனாலும் அதைக் காணமாட்டீர்கள். 23 இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், சிலர் உங்களிடம் சொல்லுவார்கள்; நீங்களோ போகாமலும் பின்தொடராமலும் இருங்கள். 24 மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனிதகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார். 25 அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுகள்பட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாக இருக்கிறது. 26 நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனிதகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். 27 நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரை மக்கள் புசித்துக் குடித்தார்கள், பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் இருந்தார்கள்; பெருவெள்ளம் வந்து எல்லோரையும் அழித்துப்போட்டது. 28 லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; மக்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். 29 லோத்து சோதோமைவிட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் பெய்து, எல்லோரையும் அழித்துப்போட்டது. 30 மனிதகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். 31 அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பொருட்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கவேண்டும்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கவேண்டும். 32 லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள். 33 தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக்கொள்ளுவான். 34 அந்த இரவில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான். 35 மாவரைக்கிற இரண்டு பெண்களில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள். 36 வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 37 அவர்கள் அவருக்கு மறுமொழியாக: எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார்.