ஐசுவரியமுள்ள இளம் அதிகாரியும் செல்வத்தின் ஆபத்துகளும்

ஐசுவரியமுள்ள இளம் அதிகாரி, செல்வத்தின் ஆபத்துகள், சீடர்களின் வியப்பு. எல்லாவற்றையும் விட்டுவிட்டு மேசியாவைப் பின்பற்றுவதற்கான வெகுமதிகள் பெரிதாக இருக்கும்; ஆனால் அவை தேவனுடைய இறையாண்மைப்படியே கொடுக்கப்படும் (திராட்சைத்தோட்ட வேலையாட்களின் உவமை).

பெரேயாவில்

கி.பி. 29 முதல் 30 வரை

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மத்தேயு 19:16–20:16

19:16 அப்பொழுது ஒருவன் வந்து, அவரைப் பார்த்து: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்.

17 அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கட்டளைகளைக் கைக்கொள் என்றார்.

18 அவன் அவரைப் பார்த்து: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக;

19 உன் தகப்பனையும் உன் தாயையும் மதிப்பாயாக; உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பவைகளையே என்றார்.

20 அந்த வாலிபன் அவரைப் பார்த்து: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான்.

21 அதற்கு இயேசு: நீ தேவனுக்கு பூரண சற்குணனாக இருக்கவிரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரர்களுக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குச் செல்வம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.

22 அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாக இருந்தபடியால், இயேசு சொன்னவைகளைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாகப் போய்விட்டான்.

23 அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து: செல்வந்தன் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது சுலபமல்லவென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

24 மேலும் செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

25 அவருடைய சீடர்கள் அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால், யார் இரட்சிக்கப்படமுடியும் என்றார்கள்.

26 இயேசு, அவர்களைப் பார்த்து: மனிதர்களால் இது முடியாததுதான்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார்.

27 அப்பொழுது, பேதுரு அவரைப் பார்த்து: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான்.

28 அதற்கு இயேசு: மறுபிறப்பின் காலத்திலே மனிதகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருப்பீர்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

29 என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது இழந்தவன் எவனோ, அவன் நூறுமடங்காகப் பெற்று, நித்தியஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;

30 ஆனாலும், முந்தினோர் அநேகர் பிந்தினோராகவும், பிந்தினோர் அநேகர் முந்தினோராகவும் இருப்பார்கள் என்றார்.

20:1 பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது; அவன் தன் திராட்சைத்தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான். 2 வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு வெள்ளிக்காசு கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சைத்தோட்டத்திற்கு அனுப்பினான். 3 காலை ஒன்பதுமணியளவில் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து: 4 நீங்களும் திராட்சைத்தோட்டத்திற்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள். 5 மறுபடியும், நண்பகல் பன்னிரண்டுமணிக்கும், மூன்றுமணிக்கும் அவன்போய் அப்படியே செய்தான். 6 ஐந்துமணியளவிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான். 7 அதற்கு அவர்கள்: ஒருவரும் எங்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்றார்கள். அவன் அவர்களைப் பார்த்து: நீங்களும் திராட்சைத்தோட்டத்திற்குப் போங்கள், நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான். 8 மாலைநேரத்தில், திராட்சைத்தோட்டத்தின் எஜமான் தன் நிர்வாகியைப் பார்த்து: நீ வேலையாட்களை அழைத்து, பிந்தி வந்தவர்கள் தொடங்கி முதலில் வந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலிகொடு என்றான். 9 அப்பொழுது ஐந்துமணியளவில் சேர்க்கப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்காசு வாங்கினார்கள். 10 முந்தி சேர்க்கப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று நினைத்தார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்காசு வாங்கினார்கள். 11 வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானைப் பார்த்து: 12 பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒருமணிநேரம்மட்டும் வேலைசெய்தார்கள்; பகலின் பாடுகளையும் வெயிலின் வெப்பத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள். 13 அவர்களில் ஒருவனுக்கு அவன் மறுமொழியாக: நண்பனே, நான் உனக்கு அநியாயம் செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு வெள்ளிக்காசுக்குச் சம்மதிக்கவில்லையா? 14 உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோல பிந்திவந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய விருப்பம். 15 என்னுடையதை என் விருப்பப்படிச்செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தாராளமனமுடையனாக இருக்கிறபடியால், நீ பொறாமைகொள்ளலாமா என்றான். 16 இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராகவும், முந்தினோர் பிந்தினோராகவும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.

மாற்கு 10:17–31

10:17 பின்பு அவர் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும்போது, ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்.

18 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வது எதினால்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லை.

19 விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, திருடாதே, பொய்ச்சாட்சி சொல்லாதே, ஏமாற்றாதே, உன் தகப்பனையும், தாயையும் கனம்பண்ணு என்கிற கட்டளைகளைப்பற்றி தெரிந்திருக்கிறாயே என்றார்.

20 அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறிய வயதிலிருந்து கடைபிடித்து வருகிறேன் என்றான்.

21 இயேசு அவனைப் பார்த்து, அவனிடம் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளை எல்லாவற்றையும் விற்று, ஏழைகளுக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார்.

22 அவனுக்கு அதிக சொத்துக்கள் இருந்ததால், இந்த வார்த்தையைக் கேட்டு, சோர்ந்து, துக்கத்தோடு போய்விட்டான்.

23 அப்பொழுது இயேசு சுற்றிலும்பார்த்து, தம்முடைய சீடர்களைப் பார்த்து: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்றார். 24 சீடர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து: பிள்ளைகளே, செல்வத்தின்மேல் நம்பிக்கையாக இருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது!

25 செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார்.

26 அவர்கள் அதிகமாக ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படமுடியும் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

27 இயேசு அவர்களைப் பார்த்து: மனிதர்களால் இது முடியாது, தேவனால் இது முடியும்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார்.

28 அப்பொழுது பேதுரு அவரைப் பார்த்து: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றிவந்தோமே, என்று சொல்லத்தொடங்கினான்.

29 அதற்கு இயேசு மறுமொழியாக: எனக்காகவும், நற்செய்திப் பணிக்காகவும், வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, குழந்தைகளையாவது, நிலங்களையாவது விட்டு வந்தவன் எவனும்,

30 இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடு நூறுமடங்காக வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

31 ஆனாலும் முந்தினவர்கள் அநேகர் பிந்தினவர்களாகவும், பிந்தினவர்கள் அநேகர் முந்தினவர்களாகவும் இருப்பார்கள் என்றார்.

லூக்கா 18:18–30

18:18 அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை பெற்றுக்கொள்வதற்க்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்.

19 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்லுவானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.

20 விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கட்டளைகளை நீ தெரிந்திருக்கிறாயே என்றார்.

21 அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.

22 இயேசு அதைக்கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரர்களுக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்கு செல்வம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.

23 அவன் அதிக செல்வந்தனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான்.

24 அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாக இருக்கிறது.

25 செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார்.

26 அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.

27 அதற்கு அவர்: மனிதர்களால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.

28 அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான்.

29 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றோரையாவது, சகோதரர்களையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும்,

30 இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.