சர்தைக்கும் வைராக்கியம் குறைந்துவரும் சபைகளுக்கும்
சர்தை சபைக்கும், தங்கள் வைராக்கியமும் உண்மைத்தன்மையும் குறைய இடமளிக்கும் எல்லாச் சபைகளுக்கும் ஓர் உரை.
கி.பி. 96
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் வைத்திருப்பவர் சொல்லுகிறதாவது; உன் செய்கைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவன் என்று பெயர்பெற்றிருந்தும் செத்தவனாக இருக்கிறாய். 2 நீ விழித்துக்கொண்டு, மரித்துப்போகிறதாக இருக்கிற காரியங்களைப் பெலப்படுத்து; உன் செய்கைகள் தேவனுக்குமுன்பாக நிறைவானவைகளாக நான் பார்க்கவில்லை. 3 எனவே நீ கேட்டதையும், பெற்றுக்கொண்டதையும் நினைத்துப்பார்த்து, அதற்குக் கீழ்ப்படிந்து மனம்திரும்பு. நீ விழிப்படையாவிட்டால், திருடனைப்போல உன்னிடம் வருவேன்; நான் உன்னிடம் வரும் நேரத்தை நீ தெரியாமல் இருப்பாய். 4 ஆனாலும் தங்களுடைய ஆடைகளை அசுத்தப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்கு உண்டு; அவர்கள் தகுதி உடையவர்களாக இருப்பதால், வெண்மையான ஆடை அணிந்து என்னோடு நடப்பார்கள். 5 ஜெயம் பெறுகிறவன் எவனோ அவனுக்கு வெண்மையான ஆடை அணிவிக்கப்படும்; ஜீவபுத்தகத்திலிருந்து அவனுடைய பெயரை நான் நீக்கிப்போடாமல், என் பிதாவிற்கு முன்பாகவும் அவருடைய தூதர்களுக்கு முன்பாகவும் அவன் பெயரை அறிக்கைச் செய்வேன். 6 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது.
பிலதெல்பியாவுக்கும் உண்மையும் வைராக்கியமும் உள்ள சபைகளுக்கும்
பிலதெல்பியாவிலுள்ள சபைக்கும், தங்கள் வாய்ப்புகளும் ஆற்றலும் அனுமதிக்கும் அளவிற்கு வைராக்கியத்துடனும் உண்மையுடனும் செயல்படும் எல்லாச் சபைகளுக்கும் ஓர் உரை.
7 பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுதவேண்டியது என்னவென்றால்: பரிசுத்தம் உள்ளவரும், சத்தியம் உள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவனும் பூட்டமுடியாதபடி திறக்கிறவரும், ஒருவனும் திறக்கமுடியாதபடி பூட்டுகிறவருமாக இருக்கிறவர் சொல்லுகிறதாவது; 8 நீ செய்த உன் செயல்களை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலிக்காமல், என் வசனத்திற்கு கீழ்ப்படிந்து நடந்ததினால், இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். 9 இதோ, யூதர்களாக இல்லாதிருந்தும் தங்களை யூதர்கள் என்று பொய் சொல்லுகிற சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாக இருப்பதை அவர்கள் தெரிந்துகொள்ளும்படி செய்வேன். 10 என் பொறுமையைப்பற்றிச் சொல்லிய வசனத்திற்கு நீ கீழ்ப்படிந்து நடந்ததினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிப்பதற்காகப் பூச்சக்கரத்தின்மேல் வரப்போகிற சோதனைக்காலத்திற்கு நான் உன்னைத் தப்பித்துக் காப்பேன். 11 இதோ, சீக்கிரமாக வருகிறேன்; யாரும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடி நான் உனக்குச் சொன்னதையெல்லாம் செய்துகொண்டு இரு. 12 ஜெயம் பெறுகிறவன் எவனோ, அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக வைப்பேன், அதில் இருந்து அவன் எப்போதும் நீங்குவது இல்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்தில் இருந்து இறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன். 13 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது.
லவோதிக்கேயாவுக்கும் செல்வமும் பெருமையும் வெதுவெதுப்பான நிலையும் கொண்ட சபைகளுக்கும்
லவோதிக்கேயாவிலுள்ள சபைக்கும், செல்வமும் பெருமையும் வெதுவெதுப்பான நிலையும் கொண்ட எல்லாச் சபைகளுக்கும் ஓர் உரை.
வெளிப்படுத்தின விசேஷம் 3:14–22
14 லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: உண்மையும் சத்தியமுள்ள சாட்சியும், தேவனுடைய படைப்பிற்கு ஆதியுமாக இருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது; 15 உன் செய்கைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிரும் இல்லை அனலும் இல்லை; நீ குளிராக அல்லது அனலாக இருந்தால் நன்றாக இருக்கும். 16 இப்படி நீ குளிரும் இல்லாமல் அனலும் இல்லாமல் வெதுவெதுப்பாக இருக்கிறதினால் உன்னை என் வாயில் இருந்து வாந்திபண்ணிப்போடுவேன். 17 நீ பாக்கியமில்லாதவனாகவும், பரிதாபப்படத்தக்கவனாகவும், தரித்திரனும், பார்வை இல்லாதவனாகவும், நிர்வாணியாகவும் இருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவான் என்றும், பொருளாதார வசதிபடைத்தவன் என்றும், எனக்கு ஒரு குறையும் இல்லை என்றும் சொல்லுகிறதினால்; 18 நான்: நீ ஐசுவரியவானாவதற்காக நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தெரியாதபடி நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்மையான ஆடைகளையும் என்னிடம் வாங்கிக்கொள்ளவும், நீ பார்வை பெறுவதற்காக உன் கண்களுக்கு மருந்து போடவேண்டும் என்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். 19 நான் நேசிக்கிறவர்கள் எவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; எனவே நீ எச்சரிக்கையாக இருந்து, மனம்திரும்பு. 20 இதோ, வாசற்படியிலே நின்று கதவைத் தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், நான் அவன் வீட்டிற்குள் சென்று, அவனோடுகூட உணவு உண்பேன், அவனும் என்னோடு உண்பான். 21 நான் ஜெயம்பெற்று என் பிதாவுடைய சிங்காசனத்திலே அவரோடு உட்கார்ந்ததுபோல, ஜெயம் பெறுகிறவன் எவனோ, அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடு உட்காருவதற்கு அருள்செய்வேன். 22 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது என்றார்.
படைப்பனைத்தும் இயேசு கிறிஸ்துவை ஆராதிக்கிறது
கிறிஸ்தவத்தின் தேவனாகிய இயேசு கிறிஸ்துவை ஆராதிப்பதில் படைப்பனைத்தும் ஒன்றுசேரும் காட்சியுடன் யோவானின் தரிசனங்கள் தொடங்குகின்றன.
1 இவைகளுக்குப் பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முதலில் எக்காளசத்தம்போல என்னோடு பேசின சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப் பின்பு நடக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னது. 2 உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார். 3 வீற்றிருந்தவர், பார்ப்பதற்கு வச்சிரக்கல்லைப்போலவும், பதுமராகத்தைப்போலவும் இருந்தார்; அந்த சிங்காசனத்தைச் சுற்றிலும் ஒரு வானவில் இருந்தது; அது பார்ப்பதற்கு மரகதம்போல தோன்றியது. 4 அந்த சிங்காசனத்தைச் சுற்றிலும் இருபத்துநான்கு சிங்காசனங்கள் இருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்மையான ஆடை அணிந்து, தங்களுடைய தலைகளில் பொற்கிரீடம் சூடி, அந்த சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். 5 அந்தச் சிங்காசனத்தில் இருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன. 6 அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக் கல்லைப்போல கண்ணாடிக் கடல் இருந்தது; அந்தச் சிங்காசனத்தின் நடுவிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்கள் இருந்தன, அவைகள் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் கண்களால் நிறைந்திருந்தன. 7 முதலாம் ஜீவன் சிங்கத்தைப்போலவும், இரண்டாம் ஜீவன் காளையைப்போலவும், மூன்றாம் ஜீவன் மனிதமுகம் போன்ற முகம் உள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுபோலவும் இருந்தன. 8 அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்றும் ஆறுஆறு சிறகுகள் உள்ளவைகளும், சுற்றிலும், உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாக இருந்தன. அவைகள்:
“இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்” என்று இரவும் பகலும் ஓய்வு இல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன. 9 மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,
10 இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாகத் தாழவிழுந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்களுடைய கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து:
11 கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும்
வல்லமையையும் பெற்றுக்கொள்கிறதற்குத் தகுதி உடையவராக இருக்கிறீர்;
நீரே எல்லாவற்றையும் படைத்தீர்,
உம்முடைய விருப்பத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும்
படைக்கப்பட்டவைகளுமாக இருக்கிறது” என்றார்கள்.
முத்திரையிடப்பட்ட சுருளை எந்த மனிதனாலும் திறக்க முடியாது
யோவான் தமது தரிசனத்தில், தேவனுடைய சபையின் எதிர்கால வரலாற்றை உள்ளடக்கிய, ஏழு முத்திரைகளையுடைய ஒரு சுருளைக் காண்கிறார்; அதைத் திறக்க எந்த மனிதனாலும் முடியவில்லை.
1 பின்னும், உள்ளேயும் வெளியேயும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரை போடப்பட்டிருந்த ஒரு புத்தகத்தை சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவருடைய வலது கையிலே பார்த்தேன். 2 புத்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் தகுதியானவர் யார்? என்று அதிக சத்தமாகக் கேட்கிற பலமுள்ள ஒரு தூதனையும் பார்த்தேன். 3 வானத்திலோ, பூமியிலோ, பூமியின் கீழாவது, ஒருவனும் அந்தப் புத்தகத்தைத் திறக்கவும், அதைப் படிக்கவும் முடியாமல் இருந்தது.
ஆட்டுக்குட்டியானவர் சுருளைத் திறக்கிறார்
பலியிடப்படும் ஆட்டுக்குட்டியாகச் சித்தரிக்கப்படும் தேவனுடைய குமாரன், காலத்தின் முடிவுவரை தேவனுடைய பராமரிப்பு சபையை எவ்வாறு ஆளும் என்ற வரலாற்றைச் சபைக்குக் காட்டும்படி சுருளைத் திறக்கிறார். படைப்பனைத்தும் பலியிடப்பட்ட தேவ ஆட்டுக்குட்டியானவருக்குத் தன் துதியையும் வணக்கத்தையும் மீண்டும் செலுத்துகிறது.
4 ஒருவனும் அந்தப் புத்தகத்தைத் திறக்கவும் படிக்கவும் தகுதியானவனாக இல்லாததினால் நான் மிகவும் அழுதேன். 5 அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னைப் பார்த்து: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்தின் சிங்கமும், தாவீதின் வேருமானவர் புத்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான். 6 அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட நிலையில் இருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் நடுவிலே நிற்பதைக் கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாக இருந்தது; அந்தக் கண்கள் பூமியெல்லாம் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளே. 7 அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவருடைய வலது கரத்திலிருந்து அந்தப் புத்தகத்தை வாங்கினார். 8 அந்தப் புத்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்களுடைய சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக முகங்குப்புறவிழுந்து:
9 “தேவரீர் புத்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் தகுதி உள்ளவராக இருக்கிறீர்;
ஏனென்றால், நீர் அடிக்கப்பட்டு, எல்லாக் கோத்திரங்களிலும், மொழிகளிலும், மக்களிலும், தேசங்களிலும் இருந்து
எங்களை தேவனுக்காக உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,
10 எங்களுடைய தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்;
நாங்கள் பூமியிலே அரசாளுவோம்” என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.
11 பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சுற்றியிருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய எண்ணிக்கை கோடானகோடியாக இருந்தது. 12 அவர்களும் அதிக சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவராக இருக்கிறார் என்று சொன்னார்கள். 13 அப்பொழுது, வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் இருக்கிற படைப்புகளும், கடலில் உள்ள எல்லா ஜீவன்களும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்வதைக்கேட்டேன். 14 அதற்கு நான்கு ஜீவன்களும்: ஆமென் என்று சொல்லின. இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புறவிழுந்து எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.