யோவான் வெளிப்படுத்தின விசேஷத்தை எழுதுகிறார்

உலகத்தை நியாயந்தீர்ப்பதற்காகக் கிறிஸ்து இரண்டாம் முறை வரும்வரை, கிறிஸ்தவச் சபையில் தொடர்ந்து வரும் தீர்க்கதரிசிகளின் வரிசைக்குப் பதிலாக இருக்கும்படி, அப்போஸ்தலனாகிய யோவான் வெளிப்படுத்தின விசேஷத்தை எழுதுகிறார் (அநேகமாகக் கி.பி. 96-இல்).

கி.பி. 96

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

வெளிப்படுத்தின விசேஷத்தை ஆராய்ந்து படிக்கும்படி அனைவருக்கும் சொல்லப்படுகிறது

வெளிப்படுத்தின விசேஷத்தை ஆராய்ந்து படிக்கும்படி மனிதகுலம் முழுவதற்கும் கட்டளையிடப்படுகிறது.

வெளிப்படுத்தின விசேஷம் 1:1–3

1 சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரர்களுக்குக் காண்பிப்பதற்காக, தேவன் இயேசுகிறிஸ்துவிற்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான காரியம். 2 இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் பார்த்த எல்லாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான். 3 இந்தத் தீர்க்கதரிசன வசனங்களைப் படிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளின்படி நடக்கிறவர்களும் பாக்கியவான்கள், காலம் நெருங்கிவிட்டது.

யோவான் சபைகளை வாழ்த்துகிறார்

யோவான் சபைகளை வாழ்த்தி, உலகத்தை நியாயந்தீர்க்க வரவிருக்கும் அவர்களுடைய இரட்சகரின் தெய்வத்தன்மையை உறுதிப்படுத்துகிறார்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:4–8

4 யோவான் ஆசியாவில் உள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும், 5 உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதலில் பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 6 நம்மேல் அன்புவைத்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். 7 இதோ, மேகங்களோடு வருகிறார்; கண்கள் எல்லாம் அவரைப் பார்க்கும், அவரைக் குத்தினவர்களும் அவரைப் பார்ப்பார்கள்; பூமியில் உள்ள கோத்திரத்தார்கள் எல்லோரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே நடக்கும், ஆமென். 8 இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், துவக்கமும், முடிவுமாக இருக்கிறேன் என்று உரைக்கிறார்.

பத்முவில் கிறிஸ்து யோவானுக்குத் தோன்றுகிறார்

பத்மு தீவில் கிறிஸ்து தமக்கு எவ்வாறு தோன்றினார் என்பதையும், தீர்க்கதரிசியாகத் தமக்கு அளிக்கப்பட்ட பணியாணையைக் குறித்தும் யோவான் கூறுகிறார்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:9–20

9 உங்களுடைய சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்களுடைய உடன்பங்காளியுமாக இருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன். 10 கர்த்த்தரை ஆராதிக்கும் நாளில் நான் ஆவியானவரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போல ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டேன். 11 அது: நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாக இருக்கிறேன். நீ பார்க்கிறதை ஒரு புத்தகத்தில் எழுதி, ஆசியாவில் இருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களில் உள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று சொன்னது. 12 அப்பொழுது என்னோடு பேசின அந்த சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபொழுது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும், 13 அந்த ஏழு குத்துவிளக்குகளின் நடுவிலே, பாதம்வரை நீளமான அங்கி அணிந்து, மார்பில் பொற்கச்சை கட்டியிருந்த மனிதகுமாரனைப்போல ஒருவரைப் பார்த்தேன். 14 அவருடைய தலையும், தலைமுடியும் வெண்மையான பஞ்சைப்போலவும் உறைந்த பனியைப்போலவும் வெண்மையாக இருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போல இருந்தது; 15 அவருடைய பாதங்கள் உலையிலே காய்ந்த பிரகாசமான வெண்கலம்போல இருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போல இருந்தது. 16 தமது வலது கையிலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயில் இருந்து இரண்டு பக்கமும் கூர்மையான வாள் புறப்பட்டு வந்தது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போல இருந்தது. 17 நான் அவரைப் பார்த்தபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலது கையை என்மேல் வைத்து, என்னைப் பார்த்து: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாக இருக்கிறேன்; 18 மரித்தேன், ஆனாலும், இதோ, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன், ஆமென்; நான் மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை வைத்திருக்கிறேன். 19 நீ பார்த்தவைகளையும் இருக்கிறவைகளையும், இவைகளுக்குப் பின்பு நடக்கப்போகிறவைகளையும் எழுது; 20 என் வலது கையில் நீ பார்த்த ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்கள்; நீ பார்த்த ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகள்.

எபேசுவுக்கும் வழிவிலகும் எல்லாச் சபைகளுக்கும்

எபேசுவிலுள்ள சபைக்கும், வழிவிலகத் தொடங்கும் எல்லாச் சபைகளுக்கும் ஓர் உரை.

வெளிப்படுத்தின விசேஷம் 2:1–7

1 எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலது கையில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் நடுவிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது; 2 நீ செய்தவைகளையும், உன் கடினஉழைப்பையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகித்துக்கொள்ளமுடியாமல் இருக்கிறதையும், அப்போஸ்தலர்களாக இல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலர்கள் என்று சொல்லுகிறதை நீ சோதித்துப்பார்த்து அவர்கள் பொய்யர்கள் என்பதைக் கண்டுபிடித்ததையும்; 3 நீ சகித்துக்கொண்டு இருக்கிறதையும், பொறுமையாக இருக்கிறதையும், என் நாமத்திற்காக ஓய்வு இல்லாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன். 4 ஆனாலும், நீ ஆரம்பத்திலே வைத்திருந்த அன்பைவிட்டுவிட்டாய் என்று உன்மேல் எனக்குக் குறை உண்டு. 5 எனவே, நீ எந்த நிலைமையில் இருந்து விழுந்தாய் என்பதை நினைத்து, மனம்திரும்பி, ஆதியில் செய்த செய்கைகளைச் செய்; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, நீ மனம்திரும்பவில்லை என்றால், உன் விளக்குத்தண்டை அதனிடத்திலிருந்து நீக்கிவிடுவேன். 6 நான் வெறுக்கிற நிக்கொலாய் மதத்தைச் சேர்ந்தவர்களின் செய்கைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்தில் உண்டு. 7 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவன் எவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் நடுவில் இருக்கிற ஜீவமரத்தின் கனியை உண்ணக்கொடுப்பேன் என்று எழுது.

சிமிர்னாவுக்கும் துன்புறுத்தப்படும் எல்லாச் சபைகளுக்கும்

சிமிர்னா சபைக்கும், துன்புறுத்தலுக்கும் உபத்திரவத்துக்கும் உள்ளாகும் எல்லாச் சபைகளுக்கும் ஓர் உரை.

வெளிப்படுத்தின விசேஷம் 2:8–11

8 சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தவருமானவர் சொல்லுகிறதாவது; 9 உன் செய்கைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியம் உள்ளவனாக இருந்தும் உனக்கு இருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதர்கள் என்று சொல்லியும் யூதர்களாக இல்லாமல் சாத்தானுடைய கூட்டமாக இருக்கிறவர்கள் செய்யும் அவதூறுகளையும் அறிந்திருக்கிறேன். 10 நீ படப்போகிற பாடுகளைப்பற்றிப் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படுவதற்காகப் பிசாசு உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாட்கள் உபத்திரவப்படுவீர்கள். ஆனாலும் நீ மரிக்கும்வரை உண்மையாக இரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன். 11 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்று எழுது.

பெர்கமுவுக்கும் தவறான போதனையை அனுமதிக்கும் சபைகளுக்கும்

பெர்கமு சபைக்கும், தங்கள் ஒழுங்குக் கட்டுப்பாட்டைத் தளர்த்தியதால் தவறான போதனையைப் போதிப்பவர்களை உள்ளே அனுமதித்த எல்லாச் சபைகளுக்கும் ஓர் உரை.

வெளிப்படுத்தின விசேஷம் 2:12–17

12 பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: இரண்டு பக்கமும் கூர்மையான வாளை வைத்திருப்பவர் சொல்லுகிறதாவது; 13 உன் செய்கைகளையும், சாத்தானுடைய சிங்காசனம் இருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடியிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்மேல் நீ வைத்த உன் விசுவாசத்தை, நீ மறுதலிக்காமல் இருந்ததையும் அறிந்திருக்கிறேன். 14 ஆனாலும், சில காரியங்களைக்குறித்து உன்மேல் எனக்குக் குறை உண்டு; இஸ்ரவேல் மக்கள் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளை சாப்பிடுவதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் சாதகமான இடறலை அவர்களுக்கு முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதனையைக் கடைபிடிக்கிறவர்கள் உன்னிடம் உண்டு. 15 அப்படியே நிக்கொலாய் மதத்தினருடைய போதனையைக் கடைபிடிக்கிறவர்களும் உன்னிடம் உண்டு; அதை நான் வெறுக்கிறேன். 16 நீ மனம்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, என் வாயின் வாளினால் அவர்களோடு யுத்தம்பண்ணுவேன். 17 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவை உண்ணக்கொடுத்து, பெற்றுக்கொள்கிறவனைத்தவிர வேறொருவனுக்கும் தெரியாத புதிய நாமம் எழுதப்பட்ட வெண்மையானக் கல்லைக் கொடுப்பேன் என்று எழுது.

தியத்தீராவுக்கும் ஒழுக்கக்கேட்டை அனுமதிக்கும் சபைகளுக்கும்

தியத்தீராவிலுள்ள சபைக்கும், உண்மையான விசுவாசத்தை அறிக்கையிட்டு, பல வழிகளில் நற்செயல்களில் பெருகியிருந்தும், தங்களிடையே ஒழுக்கக்கேடும் விக்கிரக ஆராதனையும் தொடர இன்னமும் அனுமதிக்கும் எல்லாச் சபைகளுக்கும் ஓர் உரை.

வெளிப்படுத்தின விசேஷம் 2:18–29

18 தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: அக்கினிஜூவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களும் உள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது; 19 உன் செய்கைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த செயல்களைவிட பின்பு செய்த செயல்கள் அதிகமாக இருக்கிறதையும் அறிந்திருக்கிறேன். 20 ஆனாலும், உன்மேல் எனக்குக் குறை உண்டு; என்னவென்றால், தன்னைத் தீர்க்கதரிசி என்று சொல்லுகிற யேசபேல் என்னும் பெண், என்னுடைய ஊழியக்காரர்கள் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைச் சாப்பிடவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை ஏமாற்ற, நீ அவளுக்கு இடம் கொடுக்கிறாய். 21 அவள் மனம்திரும்புவதற்காக அவளுக்கு வாய்ப்புக்கொடுத்தேன்; தன் வேசித்தன வழியைவிட்டு மனம்திரும்ப அவளுக்கு விருப்பம் இல்லை. 22 இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளோடு விபசாரம் செய்தவர்கள் தங்களுடைய செய்கைகளைவிட்டு மனம்திரும்பவில்லை என்றால், அவர்களையும் அதிக உபத்திரவத்திலே தள்ளி, 23 அவளுடைய பிள்ளைகளையும் கொல்லுவேன்; அப்பொழுது நானே, சிந்தனைகளையும், இருதயங்களையும் ஆராய்கிறவர் என்று எல்லா சபைகளும் அறிந்துகொள்ளும்; உங்கள் ஒவ்வொருவனுக்கும் உங்களுடைய செய்கைகளுக்குத் தகுந்தபடியே பலன் கொடுப்பேன். 24 தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பின்பற்றாமலும், சாத்தானுடைய ஆழமான இரகசியங்கள் என்று சொல்லப்படுகிற அந்தத் தந்திரங்களை அறிந்துகொள்ளாமலும் இருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள்மேல் எந்தவொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன். 25 நான் வரும்வரைக்கும் என்னை விசுவாசித்து என்னைப் பற்றிக்கொண்டிருங்கள். 26 ஜெயம்பெற்று கடைசிவரைக்கும் நான் செய்த காரியங்களைச் செய்கிறவன் எவனோ அவனுக்கு நான் என் பிதாவிடம் இருந்து அதிகாரம் பெற்றதுபோல, தேசங்களின் மக்கள்மேல் அதிகாரம் கொடுப்பேன். 27 அவன் இரும்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள். 28 விடியற்கால நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன். 29 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது.