முதியோரிடமும் விதவைகளிடமும் தீமோத்தேயுவின் நடத்தை

தீமோத்தேயுவின் போதனை மேலும் பயனளிக்கும்படி அவருக்குக் கூடுதல் வழிகாட்டுதல்கள் கொடுக்கப்படுகின்றன. முதியோரிடமும் இளைஞர்களிடமும் இளம்பெண்களிடமும், சபையின் தரும உதவியால் ஆதரிக்கப்படும் விதவைகளிடமும் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று அவர் அறிவுறுத்தப்படுகிறார். அறுபது வயதிற்குக் குறைந்த எவரையும் சேர்த்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில் இளம்பெண்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டுத் திருமணம் செய்யத் தடைசெய்யப்பட்டால், அவர்கள் கிறிஸ்தவத்தைவிட்டு விலகவோ கிறிஸ்தவப் பெயருக்கு அவமானம் கொண்டுவரவோ கூடும்.

கி.பி. 57

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

1 தீமோத்தேயு 5:1–16

1 முதிர்வயதானவரைக் கடிந்துபேசாமல், அவரைத் தகப்பனைப்போலவும், வாலிபர்களை சகோதரர்களைப்போலவும், 2 முதிர்வயதுள்ள பெண்களைத் தாய்களைப்போலவும், வாலிபப்பெண்களை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் நினைத்து, புத்திசொல்லு. 3 ஆதரவற்ற விதவைகளைக் கனம்பண்ணு. 4 விதவையானவளுக்கு குழந்தைகளாவது, பேரன் பேத்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்களுடைய சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாக நடத்தி, பெற்றோர் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளவேண்டும்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாக இருக்கிறது. 5 ஆதரவற்ற விதவையாக இருந்து தனிமையாக இருக்கிறவள் தேவன்மேல் நம்பிக்கையுள்ளவளாக, இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள். 6 சுகபோகமாக வாழ்கிறவள் உயிரோடு செத்தவள். 7 அவர்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாக இருக்கும்படி இவைகளைக் கட்டளையிடு. 8 ஒருவன் தன் சொந்த உறவினர்களையும், விசேஷமாகத் தன் குடும்பத்தையும் கவனிக்காமல் இருந்தால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியைவிட கெட்டவனுமாக இருப்பான். 9 அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே கணவனுக்கு மனைவியாக இருந்து, 10 குழந்தைகளை வளர்த்து, அந்நியர்களை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, எல்லா நல்லகிரியைகளையும் கவனமாக செய்து, இவ்விதமாக நற்கிரியைகளைக்குறித்து நற்பெயர் பெற்றவளுமாக இருந்தால், அப்படிப்பட்ட விதவைகளையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும். 11 இளம்வயதுள்ள விதவைகளை அதிலே சேர்த்துக்கொள்ளாதே; ஏனென்றால், அவர்கள் கிறிஸ்துவிற்கு விரோதமாக காமஇச்சைகொள்ளும்போது திருமணம் செய்துகொள்ள விரும்பி, 12 முதலில் கொண்டிருந்த வாக்குறுதியை விட்டுவிடுவதினாலே தண்டிக்கப்படுவார்கள். 13 அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாக, வீடுவீடாகத் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாக மட்டுமல்ல, அலப்புகிறவர்களாகவும், மற்றவர்களுடைய வேலையில் தலையிடுகிறவர்களாகவும், வேண்டாத காரியங்களைப் பேசுகிறவர்களாகவும் இருப்பார்கள். 14 எனவே இளவயதுள்ள விதவைகள் திருமணம்செய்யவும், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவும், வீட்டை நடத்தவும், எதிரியானவன் அவதூறாக பேசுவதற்கு இடம்கொடுக்காமலும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். 15 ஏனென்றால், இதற்குமுன்பு சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப்போனார்கள். 16 விசுவாசியாகிய பெண்ணின் சொந்தத்தில் விதவைகள் இருந்தால், அவள் அவர்களுக்கு உதவிசெய்யவேண்டும்; சபையானது ஆதரவற்ற விதவைகளுக்கு உதவிசெய்யவேண்டியிருப்பதால் அந்தச் சுமையை அதின்மேல் வைக்கக்கூடாது.

மூப்பர்களுக்கு மரியாதையும் அவர்களை ஊழியத்தில் நியமிப்பதில் கவனமும்

சபையின் மூப்பர்கள் அல்லது மேய்ப்பர்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று தீமோத்தேயுவுக்கு வழிகாட்டப்படுகிறது. நல்ல ஊழியர்கள் இரட்டிப்பான மரியாதைக்கும் ஊதியத்திற்கும் தகுதியானவர்கள்; சபை அவர்களுக்கு ஏற்ற ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். முழுமையான ஆதாரம் இருந்தால் மட்டுமே மூப்பர்கள் கடிந்துகொள்ளப்படவேண்டும்; அப்போது மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்படி வெளிப்படையாகக் கடிந்துகொள்ளப்படவேண்டும். தீமோத்தேயு தமது நிர்வாகத்தில் முற்றிலும் பாரபட்சமின்றி இருக்கவும், மூப்பர்களின் குணநலன்களை உண்மையுடன் ஆராய்ந்தபின் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் அவர்களை ஊழியத்தில் நியமிக்கவும் அவருக்கு மிகுந்த பொறுப்புடன் கட்டளையிடப்படுகிறது. இதனால் பின்னர் ஏற்படும் குற்றத்திலோ தவறான நடத்தையிலோ அவர் பங்கில்லாதவராக இருக்கலாம். இடையில் பவுல் அவருடைய உடல்நலம் குறித்து ஆலோசனை கூறுகிறார்.

1 தீமோத்தேயு 5:17–25

17 நன்றாக விசாரிக்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்கு தகுதியுள்ளவர்களாகக் கருதவேண்டும். 18 போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டக்கூடாது என்றும், வேலைசெய்கிறவன் தன் கூலிக்குத் தகுதியானவன் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே. 19 மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் குற்றச்சாட்டை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது. 20 மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி. பாவம் செய்தவர்களை எல்லோருக்கும் முன்பாகக் கடிந்துகொள். 21 நீ பட்சபாதத்தோடு ஒன்றும் செய்யாமலும், விசாரிப்பதற்குமுன்பு முடிவுபண்ணாமலும், இவைகளைக் காத்துநடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதர்களுக்கும்முன்பாக, உறுதியாகக் கட்டளையிடுகிறேன். 22 யார்மேலும் சீக்கிரமாகக் கரங்களை வைக்கவேண்டாம்; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தமானவனாகக் காத்துக்கொள். 23 நீ இனிமேல் தண்ணீர்மட்டும் குடிக்காமல், உன் வயிற்றுக்காகவும், உனக்கு அடிக்கடி வருகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சைரசத்தையும் குடித்துக்கொள். 24 சிலருடைய பாவங்கள் வெளிப்படையாக இருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும். 25 அப்படியே சிலருடைய நல்லசெயல்களும் வெளிப்படையாக இருக்கும்; அப்படி இல்லாதவைகளும் மறைந்திருக்கமுடியாது.

அடிமைகள் தங்கள் எஜமான்களை மதிக்கவேண்டும்

கிறிஸ்தவம் சமூக உறவுகளை மாற்றுவதில்லை என்பதால், வேலைக்காரர்களும் அடிமைகளும் பிற தெய்வங்களை வழிபடும் தங்கள் எஜமான்களுக்குக்கூட உரிய மரியாதை காட்டும்படி சொல்லப்படவேண்டும். தங்கள் கிறிஸ்தவ எஜமான்களுக்கும் அதே கீழ்ப்படிதலைக் காட்டவும், கிறிஸ்தவர்களாகத் தங்களுக்குள்ள சகோதர ஐக்கியம் தங்களுக்குத் தெரிந்த கடமைகளுக்கு இடையூறாக இருக்க விடாதிருக்கவும் அவர்கள் குறிப்பாக எச்சரிக்கப்படுகிறார்கள்.

1 தீமோத்தேயு 6:1–2

1 தேவனுடைய நாமமும் உபதேசமும் அவமதிக்கப்படாதபடிக்கு, அடிமைத்தனத்திற்கு உட்பட்டிருக்கிற வேலைக்காரர்கள் அனைவரும் தங்களுடைய எஜமான்களை எல்லாக் கனத்திற்கும் தகுதியுள்ளவர்கள் என்று நினைத்துக்கொள்ளவேண்டும். 2 விசுவாசிகளாகிய எஜமான்களை உடையவர்கள், தங்களுடைய எஜமான்கள் சகோதரர்களாக இருப்பதினால் அவர்களை அசட்டைபண்ணாமல், நல்ல வேலையின் பலனைப் பெற்றுக்கொள்ளுகிறவர்கள் விசுவாசிகளும், பிரியமுள்ளவர்களுமாக இருப்பதினால் அவர்களுக்கு அதிகமாக ஊழியம் செய்யுங்கள்; இந்தப்படியே போதித்துப் புத்திசொல்லு.

யூதமுறைகளைப் புகுத்தும் போதகர்களைப் பவுல் கண்டித்தல்

வேறு கோட்பாடுகளைப் பின்பற்றி, மக்களை அவர்களுடைய குடிமைக் கடமைகளிலிருந்து விடுவிக்கும் யூதமுறைகளைப் புகுத்தும் போதகர்கள் கண்டிக்கப்படுகிறார்கள். சொற்களைப் பற்றிய அவர்களுடைய வாதங்களுக்காகவும் சண்டைகளுக்காகவும், தேவனுடைய மகிமைக்கும் அவருடைய உண்மை பரவுவதற்கும் மேலாகத் தங்கள் சொந்த உலக ஆதாயத்தை வைப்பதற்காகவும் அவர்கள் கடிந்துகொள்ளப்படுகிறார்கள். பூமிக்குரிய உடைமைகள் அனைத்தும் வெறுமையானவை என்பதால், வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் மனநிறைவு வலியுறுத்தப்படுகிறது. செல்வத்தின்மீதான அளவுகடந்த அன்பு பெரும் ஆபத்தாகும்.

1 தீமோத்தேயு 6:3–10

3 ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வார்த்தைகளையும், தேவபக்திக்குரிய உபதேசங்களையும் ஏற்றுக்கொள்ளாமல், மாறுபாடான உபதேசங்களைப் போதிக்கிறவனானால், 4 அவன் பெருமை உள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கமும், வாக்குவாதமும் பண்ணுகிற நோய்கொண்டவனுமாக இருக்கிறான்; அவைகளினாலே பொறாமையும், சண்டையும், அவதூறுகளும், பொல்லாத சந்தேகங்களும் உண்டாகி, 5 கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழில் என்று நினைக்கிறவர்களுமாக இருக்கிற மனிதர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களைவிட்டு விலகி இரு. 6 போதும் என்கிற மனதோடுகூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். 7 உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததும் இல்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். 8 உண்பதற்கும் உடுத்துவதற்கும் நமக்கு இருந்தால் அது போதும் என்று இருக்கவேண்டும். 9 செல்வந்தர்களாவதற்கு விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனிதர்களைத் தீமையிலும், அழிவிலும் அமிழ்த்திப்போடுகிற மதிகேடும் சேதமுமான பலவிதமான இச்சைகளிலும் விழுகிறார்கள். 10 பணஆசை எல்லாத் தீமைகளுக்கும் வேராக இருக்கிறது; சிலர் அதை விரும்பி, விசுவாசத்தைவிட்டு விலகி, அநேக வேதனைகளாலே தங்களைத்தாங்களே கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

உறுதியாக நிலைத்திருக்கத் தேவனுக்கு முன்பாகத் தீமோத்தேயுவுக்குக் கட்டளை

தெய்வீக ஏவுதல் பெற்றவரான தீமோத்தேயு, இந்தத் தீய செயல்களிலிருந்து விலகி தேவபக்தியை நாடும்படி அழைக்கப்படுகிறார். தேவனுடைய சமுகத்தில் இருப்பதுபோலவும், நியாயத்தீர்ப்பின் மகா நாளைக் கருத்தில்கொண்டும், விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருக்கவும், மனச்சாட்சியுடன் தமது பொறுப்பை நிறைவேற்றவும், உலகப்பற்றும் பேராசையும் கொண்ட எல்லா நோக்கங்களையும் தவிர்க்கவும் பவுல் அவருக்குக் கட்டளையிடுகிறார். இனிமேல் வெளிப்படப்போகும் கிறிஸ்துவின் பெரும் மகிமையை விவரித்துப் பவுல் முடிக்கிறார்.

1 தீமோத்தேயு 6:11–16

11 நீயோ, தேவனுடைய மனிதனே, இவைகளைவிட்டு விலகி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் நாடிப் பெற்றுக்கொள். 12 விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாக இருக்கிறாய். 13 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்வரைக்கும், நீ இந்தக் கட்டளையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கடைபிடிக்கும்படி, 14 எல்லாவற்றையும் உயிரோடு இருக்கச்செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவிற்கு முன்பாக நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன். 15 இயேசுவின் வருகையை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே ஸ்தோத்தரிக்கப்பட்ட ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், 16 அவர் ஒருவரே மரணம் இல்லாதவரும், ஒருவரும் நெருங்கமுடியாத ஒளியில் வாழ்கிறவரும், மனிதர்களில் ஒருவரும் காணாதவரும், காணக்கூடாதவருமாக இருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

செல்வந்தர்கள் செல்வத்தையல்ல, தேவனை நம்பவேண்டும்

செல்வந்தர்கள் நிலையற்ற தங்கள் உடைமைகளை நம்பாமல், அவற்றைக் கொடுக்கும் தேவனை நம்பும்படி எச்சரிக்கத் தீமோத்தேயுவுக்குக் கட்டளையிடப்படுகிறது. அவர்கள் தங்களுக்காக மேலும் நிலையான, நித்திய ஆசீர்வாதங்களைச் சேமித்துக்கொள்ளும்படி நற்செயல்களில் செல்வந்தர்களாக இருக்க வலியுறுத்தப்படுகிறார்கள்.

1 தீமோத்தேயு 6:17–19

17 இந்த உலகத்தில் செல்வந்தர்கள் பெருமையான சிந்தையுள்ளவர்களாக இல்லாமலும், நிலையில்லாத செல்வத்தின்மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அனுபவிக்கிறதற்கு எல்லாவித நன்மைகளையும் நமக்கு பரிபூரணமாகக் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும், 18 நன்மைசெய்யவும், நல்ல செயல்களில் செல்வந்தர்களாகவும், தாராளமாகக் கொடுக்கிறவர்களும், தங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொடுக்கிறவர்களாகவும் இருக்கவும், 19 நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு உறுதியான அஸ்திபாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.

விசுவாசத்தைப் பற்றிக்கொள்ளப் பவுலின் இறுதிக் கட்டளை

கிறிஸ்தவக் கோட்பாட்டில் உறுதியாக நிலைத்திருக்கவும், பொய்ப்போதகர்கள் மிகவும் வலியுறுத்தி ஊக்குவித்த தத்துவம் சார்ந்த, பயனற்ற ஊகங்கள் அனைத்தையும் தவிர்க்கவும் தீமோத்தேயுவை மீண்டும் வலியுறுத்தி, பவுல் கடிதத்தைத் தொடங்கியபடியே முடிக்கிறார்.

1 தீமோத்தேயு 6:20–21

20 ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாகப் பெயர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகி இரு. 21 சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு விலகிப்போனார்கள். கிருபையானது உன்னோடு இருப்பதாக. ஆமென்.