பவுல் தொடர்ந்து கிரேக்குக்குச் செல்லுதல்
பவுல் மக்கெதோனியாவிலிருந்து கிரேக்கு அல்லது அகாயாவுக்குத் தொடர்ந்து சென்று, அங்கே மூன்று மாதங்கள் தங்குகிறார்.
கி.பி. 57
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:2–3
2 அவன் அந்த பகுதிகளுக்குச் சென்று சீடர்களுக்குப் புத்திச்சொல்லி, உற்சாகப்படுத்தி கிரேக்கு தேசத்திற்குச் சென்றான். 3 அங்கே அவன் மூன்று மாதங்கள் வசித்தபின்பு, அவன் கப்பல் ஏறி, சீரியா தேசத்திற்குப்போக நினைத்தபோது, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி இரகசியமாக யோசனை செய்துகொண்டிருந்தபடியால், மக்கெதோனியா தேசத்தின்வழியாகத் திரும்பிப்போகத் தீர்மானம்பண்ணினான்.
பவுல் கொரிந்தியர்களுக்கு மீண்டும் எழுதுதல் கி.பி. 58
கொரிந்தியர்கள் தமது முதல் கடிதத்தை எப்படி ஏற்றுக்கொண்டார்கள் என்பதைக் கேள்விப்பட்ட பவுல், அப்போஸ்தலனாகத் தமது நடத்தையை நியாயப்படுத்தவும் தமது அதிகாரத்தைப் பாதுகாக்கவும் பிலிப்பியிலிருந்து தமது இரண்டாவது கடிதத்தை எழுதுகிறார். இவ்விரண்டையும் ஒரு பொய்ப்போதகர் கேள்விக்குள்ளாக்கியிருந்தார்.
பவுல் கொரிந்தியர்களை மீண்டும் வாழ்த்துதல்
பவுலின் அறிமுகமும் ஆசீர்வாதமும்.
1 தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயுவும், கொரிந்து பட்டணத்தில் உள்ள தேவனுடைய சபைக்கும், அகாயா நாடு முழுவதும் உள்ள எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறது என்னவென்றால்: 2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
தேவன் அளிக்கும் ஆறுதலுக்காகப் பவுல் அவரைப் போற்றுதல்
தமது எல்லாத் துன்பங்களிலும் ஆபத்துகளிலும் தம்மைத் தாங்கி விடுவித்ததற்காகப் பவுல் தேவனைப் போற்றுகிறார். ஏனெனில் தமது முன்மாதிரியினால், அதேபோன்ற துன்பங்களில் மற்றவர்களும் அதே ஆறுதலைப் பெறலாம்.
3 நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், எல்லாவிதமான ஆறுதலின் தேவனுமாக இருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். 4 தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எப்படிப்பட்ட உபத்திரவங்களிலும் இருப்பவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்கிறவர்களாவதற்கு, எங்களுக்கு வரும் எல்லா உபத்திரவங்களிலும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர். 5 எப்படியென்றால், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடம் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது. 6 எனவே, நாங்கள் உபத்திரவப்பட்டாலும், அது உங்களுடைய ஆறுதலுக்கும் இரட்சிப்பிற்கும் ஏற்றதாகும்; நாங்கள் ஆறுதல் அடைந்தாலும், அதுவும் உங்களுடைய ஆறுதலுக்கும் இரட்சிப்பிற்கும் ஏற்றதாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகித்துக்கொள்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன் தருகிறது. 7 நீங்கள் எங்களோடு பாடுபடுகிறதுபோல, எங்களோடு ஆறுதலும் பெற்றுக்கொள்கிறீர்கள் என்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறோம்.
எபேசுவில் தேவன் பவுலை மீட்கிறார்
எபேசுவில் தான் எதிர்கொண்ட உடனடி ஆபத்திலிருந்து தேவனுடைய வல்லமை தன்னை எவ்வாறு விடுவித்தது என்று பவுல் கூறுகிறார். தனக்காக அவர்கள் செய்த ஜெபங்களை அவர் நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறார்.
8 எனவே, சகோதரர்களே, ஆசியாவில் எங்களுக்கு ஏற்பட்ட உபத்திரவத்தை நீங்கள் தெரிந்துகொள்ளாமலிருக்க எங்களுக்கு மனமில்லை. என்னவென்றால், நாங்கள் பிழைப்போம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இல்லாமல்போகும் அளவிற்கு, எங்களுடைய பலத்திற்கும் மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டானது. 9 நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாக இல்லாமல், மரித்தவர்களை உயிரோடு எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாக இருப்பதற்காக, மரணம் வரும் என்று நாங்கள் எங்களுக்குள்ளே உறுதியாக இருந்தோம். 10 அப்படிப்பட்ட மரணத்திலிருந்தும் அவர் எங்களைக் காப்பாற்றினார், இப்பொழுதும் காப்பாற்றுகிறார், இனிமேலும் காப்பாற்றுவார் என்று அவரையே நம்பியிருக்கிறோம். 11 அநேகர் மூலமாக எங்களுக்கு உண்டான இரக்கத்திற்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படுவதற்கு, நீங்களும் ஜெபத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள்.
கொரிந்தியர்களிடம் பவுலின் உண்மைத்தன்மை
பொய்ப்போதகரின் அவதூறுகளைச் சுட்டிக்காட்டும் பவுல், கொரிந்தியர்களிடம் தான் உண்மையுடனும் தூய நடத்தையுடனும் இருந்ததைக் குறித்து மகிழ்கிறார். தன்னுடைய நடத்தையில் சுயநலமான அல்லது தனக்கே ஆதாயம் தேடும் நோக்கங்கள் எதுவும் இருக்கவில்லை என்று அறிவிக்கிறார். கர்த்தருடைய நாளில் அவர்கள் தனக்கு மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதால், சிலர் ஏற்கெனவே செய்திருப்பதுபோல அனைவரும் தன்னை ஏற்றுக்கொண்டு தன்னைக் குறித்துப் பெருமைப்படுவார்கள் என்று நம்புகிறார்.
12 உலகத்திற்குரிய ஞானத்தோடு நடக்காமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலும், விசேஷமாக உங்களிடமும், கபடம் இல்லாமல் உண்மையோடு நடந்தோம் என்று, எங்களுடைய மனது எங்களுக்குச் சொல்லும் சாட்சியே எங்களுடைய புகழ்ச்சியாக இருக்கிறது. 13 ஏனென்றால், நீங்கள் படித்தும் புரிந்தும் இருக்கிற விஷயங்களைத்தவிர, வேறொன்றையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை; முடிவுவரைக்கும் அப்படியே புரிந்துகொள்வீர்கள் என்று நம்பியிருக்கிறேன். 14 கர்த்தராகிய இயேசு வரும்நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாக இருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாக இருப்போம் என்பதை ஓரளவு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே.
பவுல் தனது வருகையைத் தள்ளிவைத்தது ஏன்
கொரிந்தியர்களுக்கு வாக்களித்தபடி பவுல் அவர்களிடம் வராததால், அவர் உறுதியற்றவராகவும் உலகப்பற்றுள்ளவராகவும் இருப்பதாகப் பொய்ப்போதகர் குற்றஞ்சாட்டியிருந்தார். தான் போதித்த மாறாத உபதேசத்தின் மூலம் பவுல் தனது உறுதியை வெளிப்படுத்துகிறார். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை ஆதாரமாகச் சுட்டிக்காட்டுகிறார்; அதன் மூலமே தேவன் அவர்களிடையே அவருடைய அதிகாரத்தை உறுதியாக நிலைநாட்டியிருந்தார். அவர்களைத் தண்டனையிலிருந்து காக்க விரும்பியதே தனது வருகையைத் தாமதப்படுத்தியதன் உண்மையான காரணம் என்று ஆணித்தரமாக அறிவிக்கிறார். அவர்களைத் தண்டிக்க வருவதற்குப் பதிலாக, அவர்களுடைய மனந்திரும்புதலில் தான் மகிழ்ச்சியடையவும், அவர்கள்மேல் தனக்குள்ள அன்பு எவ்வளவு பெரியது என்பதை அவர்களுக்கு உணர்த்தவும், மிகுந்த மனவேதனையுடன் எழுதியதாக உறுதியளிக்கிறார்.
15 நான் இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவனாக இருக்கிறதினால், உங்களுக்கு இரண்டாவதுமுறையும் பிரயோஜனம் உண்டாவதற்காக, முதலாவது உங்களிடம் வரவும், 16 பின்பு உங்களுடைய ஊர்வழியாக மக்கெதோனியா நாட்டிற்குப் போகவும், மக்கெதோனியாவைவிட்டு மீண்டும் உங்களிடம் வரவும், உங்களால் யூதேயா நாட்டிற்கு நான் வழியனுப்பப்படவேண்டும் என்றும் யோசனையாக இருந்தேன். 17 இப்படி நான் யோசித்தது வீணாக யோசித்தேனோ? அல்லது ஆம் ஆம் என்கிறதும், இல்லை இல்லை என்கிறதும், என்னிடத்திலே இருப்பதற்காக, நான் யோசிக்கிறவைகளை சரீரத்தின்படி யோசிக்கிறேனோ? 18 நாங்கள் உங்களுக்குச் சொன்ன வார்த்தை ஆம் என்றும் இல்லை என்றும் இல்லை; அதற்கு உண்மையுள்ள தேவனே சாட்சி. 19 என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும், இல்லை என்றும் இல்லாமல், ஆம் என்றே இருக்கிறார். 20 எங்களால் தேவனுக்கு மகிமை உண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவிற்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே. 21 உங்களோடு எங்களையும் கிறிஸ்துவிற்குள் உறுதிப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே. 22 அவர் நம்மை முத்திரை செய்து, நம்முடைய இருதயங்களில் ஆவியானவரை உத்திரவாதமாகக் கொடுத்திருக்கிறார். 23 மேலும் நான் உங்களை வருத்தப்படுத்தாமல் இருப்பதற்காகத்தான் இதுவரைக்கும் கொரிந்து பட்டணத்திற்கு வராமல் இருக்கிறேன் என்று, என் ஆத்துமாவின்பேரில் தேவனையே சாட்சியாக வைக்கிறேன். 24 உங்களுடைய விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாக இல்லாமல், நீங்கள் உங்களுடைய விசுவாசத்தில் நிலைத்து நிற்பதால், உங்களுடைய சந்தோஷத்திற்கு உதவியாக இருக்கிறோம்.
2:1 நான் மீண்டும் துக்கத்தோடு உங்களிடம் வரக்கூடாது என்று எனக்குள்ளே தீர்மானம்பண்ணிக்கொண்டேன். 2 நான் உங்களைத் துக்கப்படுத்தினால், என்னாலே துக்கமடைந்தவனைத்தவிர, வேறு யார் என்னைச் சந்தோஷப்படுத்துவான்? 3 என்னுடைய சந்தோஷம் உங்களெல்லோருக்கும் சந்தோஷமாக இருக்கும் என்று, நான் உங்களெல்லோரையும்பற்றி நம்பிக்கை உள்ளவனாக இருந்து, நான் வரும்போது, என்னைச் சந்தோஷப்படுத்தவேண்டியவர்களால் நான் துக்கமடையாமல் இருப்பதற்காக, அதை உங்களுக்கு எழுதினேன். 4 அன்றியும், நீங்கள் துக்கப்படுவதற்காக எழுதாமல், உங்கள்மேல் நான் வைத்த அன்பின் அளவை நீங்கள் தெரிந்துகொள்வதற்காகவே, அதிக வியாகுலமும் மனவருத்தமும் அடைந்தவனாக அதிகக் கண்ணீரோடு உங்களுக்கு எழுதினேன்.
குற்றம் செய்தவனை மன்னித்து மீண்டும் ஏற்றுக்கொள்ளுங்கள்
சபையிலிருந்து நீக்கப்பட்டவனைக் குறித்து அவர்கள் துக்கப்பட்டிருந்தார்கள். இப்போது அவன் உண்மையாக மனந்திரும்புவதால், அவனை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்படி பவுல் கட்டளையிடுகிறார். சாத்தான் அவனை நம்பிக்கையிழக்கச் செய்யாதபடி, அன்புடனும் நட்புடனும் நடந்துகொண்டு அவன்மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும்படியும் கூறுகிறார். தண்டனையை விதிப்பதில் தனக்குக் கீழ்ப்படிந்ததுபோல, அதை நீக்குவதிலும் அவர்கள் தனக்குக் கீழ்ப்படிவார்கள் என்று பவுல் எதிர்பார்க்கிறார். இந்த இரண்டிலும் தான் கிறிஸ்துவின் நாமத்திலும் அதிகாரத்திலும் செயல்பட்டதாக அறிவிக்கிறார்.
5 துக்கம் உண்டாக்கினவன் எனக்கு மாத்திரமல்ல, ஏறக்குறைய உங்களெல்லோருக்கும் துக்கம் உண்டாக்கினான்; நான் உங்கள் எல்லோர்மேலும் அதிக சுமையைச் சுமத்தாமல் இருப்பதற்காக இதைச் சொல்லுகிறேன். 6 அப்படிப்பட்டவனுக்கு அநேகரால் உண்டான இந்தத் தண்டனையே போதும். 7 எனவே அவன் அதிக துக்கத்தில் மூழ்கிப்போகாமல் இருக்க, நீங்கள் அவனுக்கு மன்னித்து ஆறுதல் செய்யவேண்டும். 8 அப்படியே, உங்களுடைய அன்பை அவனுக்குக் காண்பிக்கவேண்டும் என்று உங்களை வேண்டிக்கொள்கிறேன். 9 நீங்கள் எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருக்கிறீர்களோ என்று உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காக இப்படி எழுதினேன். 10 யாரை நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனை நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்களுக்காக கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன். 11 சாத்தானாலே நாம் மோசமடையாமல் இருக்க அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் இல்லை.
தீத்துவைக் குறித்துப் பவுலின் கவலை
குறித்த நேரத்தில் கொரிந்துவுக்கு வராததற்கு மற்றொரு காரணமாக, தீத்துவைக் குறித்துத் தனக்கிருந்த கவலையைப் பவுல் கூறுகிறார். மக்கெதோனியாவில் தனக்குக் கிடைத்த வெற்றியைப் பற்றிக் கூறி, சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்பவர்களுக்கும் அதை நிராகரிப்பவர்களுக்கும் தனது பிரசங்கம் ஏற்படுத்திய பெரும் விளைவுகளை அறிவிக்கிறார். பொய்ப்போதகரைப் பற்றிய கடுமையான கருத்துடனும், தனது உண்மைத்தன்மையையும் சுயநலமின்மையையும் பற்றிய அறிவிப்புடனும் முடிக்கிறார்.
12 மேலும் நான் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக துரோவா பட்டணத்திற்கு வந்தபோது, கர்த்தராலே எனக்குக் கதவு திறக்கப்பட்டிருக்கும்போது, 13 நான் என் சகோதரனாகிய தீத்துவைப் பார்க்காததினாலே, என் மனதில் சமாதானம் இல்லாமல் இருந்தது. எனவே நான் அவர்களைவிட்டு, மக்கெதோனியா நாட்டிற்குப் புறப்பட்டுப்போனேன். 14 கிறிஸ்துவிற்குள் எப்பொழுதும் எங்களை வெற்றியடையச்செய்து, எல்லா இடங்களிலும் எங்களைக்கொண்டு அவரைத் தெரிந்துகொள்கிற அறிவின் நறுமணத்தை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். 15 இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நறுமணமாக இருக்கிறோம். 16 கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம். இவைகளை நடத்துவதற்கு தகுதியானவன் யார்? 17 அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்படம் செய்து பேசாமல், சுத்தமாகவும், தேவனால் அருளப்பட்டபடியாகவே, கிறிஸ்துவிற்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்.