கொரிந்தியர்களே பவுலின் கடிதம்

பொய்ப்போதகரைப்போலத் தானும் பரிந்துரைக் கடிதங்களுடன் அவர்களிடம் வரவேண்டுமா என்று பவுல் கேலியாகக் கேட்கிறார். மையினால் அல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியானவரால் எழுதப்பட்ட தனது பரிந்துரைக் கடிதங்கள் அவர்களே என்று அறிவிக்கிறார். எனவே, புதிய உடன்படிக்கையின் ஊழியத்தில் தேவன் தன்னிடம் ஒப்படைத்த அதிகாரத்திற்கு அவர்களே சான்றாக இருந்தார்கள்.

கி.பி. 58

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

2 கொரிந்தியர் 3:1–6

1 எங்களை நாங்களே மீண்டும் பெருமைப்படுத்தத் தொடங்குகிறோமோ? அல்லது சிலருக்கு வேண்டியதாக இருக்கிறதுபோல, உங்களுக்கு சிபாரிசுக் கடிதங்களை அனுப்புவதும், உங்களிடமிருந்து சிபாரிசுக் கடிதங்களைப் பெற்றுக்கொள்வதும் எங்களுக்குத் தேவையோ? 2 எங்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டும், எல்லா மனிதர்களாலும் அறிந்தும், படித்தும் இருக்கிற எங்களுடைய சிபாரிசுக் கடிதங்கள் நீங்கள்தானே. 3 ஏனென்றால், நீங்கள் எங்களுடைய ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் கடிதமாக இருக்கிறீர்கள் என்று வெளிக்காட்டப்பட்டிருக்கிறது; அது மையினால் இல்லை, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளில் இல்லை, இருதயங்களாகிய பலகைகளிலும் எழுதப்பட்டிருக்கிறது. 4 நாங்கள் தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவின் மூலமாக இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவர்களாக இருக்கிறோம். 5 எங்களால் ஏதாவது ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் இல்லை; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது. 6 புதிய உடன்படிக்கையின் ஊழியக்காரர்களாக இருப்பதற்கு, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாக இல்லாமல், ஆவியானவருக்குரியதாக இருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆனால், ஆவியோ உயிர் கொடுக்கிறது.

சுவிசேஷத்தின் மேலான மகிமை

பொய்ப்போதகருக்கு எதிராக, சுவிசேஷத்தின் மகிமையான மேன்மையைப் பவுல் அறிவிக்கிறார். மோசேயின் நிலையற்ற வெளிப்புற மகிமையை மூடியிருந்த முக்காடு, மரணத்தின் உடன்படிக்கையிலிருந்த தெளிவின்மையையும் அதன் உருவகத் தன்மையையும் குறிக்கும் அடையாளமாக இருந்தது. பரிசுத்த ஆவியின் நிலைத்திருக்கும் வரங்களிலும் ஏவுதலிலும் காணப்படும் நீடித்த, மேலான மகிமையினால், ஆவியானவரின் உடன்படிக்கைக்குரிய ஊழியர்கள் இன்னும் மகிமையான நீதியின் உடன்படிக்கையை வெளிப்படுத்தவும் விளக்கவும் எங்கும் பிரசங்கிக்கவும் ஆற்றல் பெற்றார்கள்.

2 கொரிந்தியர் 3:7–18

7 எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பொறிக்கப்பட்டிருந்த மரணத்திற்கான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமையின் பிரகாசம் உண்டானதினால், இஸ்ரவேல் மக்கள் அவன் முகத்தை நேரடியாகப் பார்க்கமுடியாமல் இருந்தார்களே. 8 மங்கிப்போகிற மகிமையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாக இருந்தால், ஆவியானவருக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாக இருக்கும்? 9 அழிவுக்கான தீர்ப்பைக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாக இருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாக இருக்குமே. 10 இப்படியாக, மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த ஊழியத்திற்கு உண்டாயிருக்கிற சிறந்த மகிமைக்கு முன்பாக மகிமையே அல்ல. 11 அன்றியும் மங்கிப்போவதே மகிமையுள்ளதாக இருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாக இருக்குமே. 12 நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையுடையவர்களாக இருப்பதால், மிகவும் தாராளமாகப் பேசுகிறோம். 13 மேலும் மங்கிப்போகிற மகிமையின் முடிவை இஸ்ரவேல் மக்கள் நோக்கிப் பார்க்காதபடி, மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டதுபோல நாங்கள் போடுகிறதில்லை. 14 அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்தநாள் வரைக்கும் பழைய ஏற்பாடு படிக்கும்போது, அந்த முக்காடு நீங்காமல் இருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது. 15 மோசேயின் ஆகமங்கள் படிக்கப்படும்போது, இந்தநாள் வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே. 16 அவர்கள் கர்த்தரிடத்தில் மனம்திரும்பும்போது, அந்த முக்காடு எடுக்கப்படும். 17 கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையும் உண்டு. 18 நாமெல்லோரும் திறந்த முகமாகக் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே பார்க்கிறதுபோலப் பார்த்து, ஆவியாக இருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகவே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபமடைகிறோம்.

பவுல் தன்னையல்ல, கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்

தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மகிமையான ஊழியம் தன்னை நம்பிக்கையாலும் கருத்தான முயற்சியாலும் நிரப்புகிறது என்பதைப் பவுல் காட்டுகிறார். சுவிசேஷத்தின் உண்மைகளை முழுமையாக எடுத்துரைப்பதன் மூலம் தன்னைப் பரிந்துரைக்க விரும்புகிறார். தங்கள் இச்சைகளாலும் தீவிர ஆசைகளாலும் குருடாக்கப்பட்ட உலகப்பற்றுள்ளவர்களுக்கு மட்டுமே அந்த உண்மைகள் மறைந்திருக்க முடியும். இயேசு கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்ட தேவனைப் பற்றிய அறிவையும் அவருடைய மகிமையையும் பிறருக்குத் தெரிவிப்பதற்காகத் தேவன் தனது இருதயத்தை ஒளிரச்செய்திருப்பதால், தான் தன்னுடைய மகிமையைத் தேடவில்லை என்று பவுல் அறிவிக்கிறார்.

2 கொரிந்தியர் 4:1–6

1 இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறது இல்லை. 2 வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாக நடக்காமலும், தேவ வசனத்தைத் திரித்துக் கூறாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்குமுன்பாக எல்லா மனிதர்களுடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமர்கள் என்று விளங்கப்பண்ணுகிறோம். 3 எங்களுடைய நற்செய்தி மறைபொருளாக இருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாக இருக்கும். 4 தேவனுடைய சாயலாக இருக்கிற கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தியின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாக இல்லாதபடி, இந்த உலகத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். 5 நாங்கள் எங்களையே பிரசங்கிக்காமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தர் என்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் நாங்கள் உங்களுடைய ஊழியக்காரர்கள் என்றும் பிரசங்கிக்கிறோம். 6 இருளில் இருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்தில் உள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணுவதற்காக, எங்களுடைய இருதயங்களிலே பிரகாசித்தார்.

மண்பாண்டங்களாக அப்போஸ்தலர்கள்

சுவிசேஷ ஊழியர்களை மண்பாண்டங்களுடன் ஒப்பிடும் பவுல், தேவன் தமது மார்க்கத்தைப் பரவச்செய்த ஒப்பற்ற வல்லமை மனிதர்களிடமிருந்து அல்ல, தம்மிடமிருந்தே வந்தது என்பதைக் காட்டுவதற்காக, கல்வியறிவற்ற, முக்கியத்துவமற்ற மனிதர்களைத் தமது அப்போஸ்தலர்களாகத் தேர்ந்தெடுத்தார் என்று அறிவிக்கிறார். அவர்கள் எதிர்கொண்ட துன்பங்களைப் பட்டியலிட்டு, அவற்றிலிருந்து அவர்களுக்குக் கிடைத்த விடுதலை அவர்களாலேயே அல்ல, தேவனாலேயே வந்தது என்பதற்குச் சான்றாக அவற்றைக் காட்டுகிறார்.

2 கொரிந்தியர் 4:7–12

7 இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாகாமல், தேவனால் உண்டாகியிருக்கிறது என்று தெரியும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். 8 நாங்கள் எல்லாப் பக்கங்களிலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கம் அடைவதும், மனம் உடைவதும் இல்லை; 9 துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை. 10 கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவன் எங்களுடைய சரீரத்திலே தெரியும்படி, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்களுடைய சரீரத்தில் சுமந்து திரிகிறோம். 11 எப்படியென்றால், மரணத்திற்குரிய எங்களுடைய சரீரத்திலே இயேசுவினுடைய ஜீவன் தெரியும்படி உயிரோடு இருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவுக்காக மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம். 12 இப்படி மரணமானது எங்களிடமும், ஜீவனானது உங்களிடமும் பெலன் செய்கிறது.

விசுவாசமும் நம்பிக்கையும் பவுலைத் தாங்கி நடத்துகின்றன

கிறிஸ்துவின்மீதுள்ள விசுவாசத்தாலும் மகிமையான அழியாத வாழ்வின் நம்பிக்கையாலும், தனது கிறிஸ்தவ ஊழியத்தின் எல்லாத் துன்பங்களையும் ஆபத்துகளையும் மேற்கொள்ள முடிகிறது என்பதைப் பவுல் காட்டுகிறார். தனது உண்மைத்தன்மையை அவர்கள் உணர்ந்து தேவனுக்கு நன்றி செலுத்தும்படி, அவர்களுக்காகவே இந்தப் பாடுகளைச் சகித்ததாக அவர்களிடம் கூறுகிறார். சுவிசேஷத்திற்காகத் தான் அனுபவிக்கும் பாடுகள் தனக்குப் பரலோகத்தில் அதற்கேற்ற பலனைப் பெற்றுத்தரும் என்ற தனது உறுதியான நம்பிக்கையை அறிவிக்கிறார். இதனாலேயே அவர் இவ்வுலகத்தின் நிலையற்ற நன்மைகளை நாடாமல், காணப்படாத உலகத்தின் நித்திய மகிமைகளை நாடுகிறார்.

2 கொரிந்தியர் 4:13–18

13 விசுவாசித்தேன், ஆகவே, பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாக இருந்து, விசுவாசிக்கிறதினால் பேசுகிறோம். 14 கர்த்தராகிய இயேசுவை உயிரோடு எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களோடு தமக்குமுன்பாக நிறுத்துவார் என்று அறிந்திருக்கிறோம். 15 தேவனுடைய மகிமை அநேகருக்கு வெளிப்படுவதற்கேதுவாக அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே கிருபையானது பெருகும்படி, இவைகளெல்லாம் உங்களுக்காக உண்டாகியிருக்கிறது. 16 எனவே, நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்களுடைய புறம்பான மனிதன் அழிந்தாலும், உள்ளான மனிதன் நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறான். 17 மேலும் காணப்படுகிறவைகளை இல்லை, காணாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கிப்போகும் இலேசான நம்முடைய உபத்திரவம், மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. 18 ஏனென்றால், காணப்படுகிறவைகள் தற்காலிகமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.

வரவிருக்கும் பரலோக வாசஸ்தலம்

நமது பரலோக வாசஸ்தலம், நாம் இப்போது வாழும் வாசஸ்தலத்தைவிட எவ்வளவு மேலானதாக இருக்கும் என்பதைக் காட்டிப் பவுல் தனது வாதத்தைத் தொடர்கிறார். அழியாத இந்த நிலைக்காகத் தேவன் நம்மை ஆயத்தப்படுத்தி, அதற்கு உத்தரவாதமாகத் தமது ஆவியானவரை நமக்குத் தருகிறார் என்று உறுதியாகக் கூறுகிறார். இது அவருடைய பிரசங்கத்தில் தைரியத்தைத் தருவதோடு, இந்தச் சரீரத்தைவிட்டு நீங்கிக் கர்த்தருடன் இருக்கவும் அவரை விரும்பச்செய்கிறது. ஆயினும், வாழ்ந்தாலும் மரித்தாலும், அனைவரும் கணக்குக் கொடுக்கவேண்டிய தேவனுக்குப் பிரியமானவராக இருப்பதே அவருடைய நோக்கம்.

2 கொரிந்தியர் 5:1–10

1 பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய சரீரம் அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலை இல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். 2 ஏனென்றால், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வீட்டை அணிந்துகொள்ள அதிக ஏக்கம் உள்ளவர்களாக இருக்கிறோம்; 3 அணிந்துகொண்டவர்களானால், நிர்வாணிகளாகக் காணப்படமாட்டோம். 4 இந்தக் கூடாரத்தில் இருக்கிற நாம் சுமை சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்து போடவேண்டும் என்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காக போர்வை தரித்தவர்களாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். 5 இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவி என்னும் உத்திரவாதத்தை நமக்குத் தந்தவரும் அவரே. 6 நாம் காண்பவைகளின்படி நடக்காமல், அவரை விசுவாசித்து நடக்கிறோம். 7 இந்த சரீரத்தில் குடியிருக்கும்போது கர்த்தரிடம் குடியில்லாதவர்களாக இருக்கிறோம் என்று தெரிந்தும், எப்பொழுதும் தைரியமாக இருக்கிறோம். 8 நாம் தைரியமாகவே இருந்து, இந்த சரீரத்தைவிட்டுப் போகவும் கர்த்தரிடம் குடியிருக்கவும் அதிகமாக விரும்புகிறோம். 9 அதினாலேயே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியில்லாமல் போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாக இருக்கவிரும்புகிறோம். 10 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தகுந்த பலனைப் பெற்றுக்கொள்வதற்காக, நாமெல்லோரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்கவேண்டும்.