வழிபாடு குறித்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் பவுல் அறிவுறுத்துதல்

ஜெபிக்கும் கடமை மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. பொது ஜெபங்களை ஏறெடுக்கும்படி ஆண்களுக்குக் கட்டளையிடப்படுகிறது; அவை ஜெப ஆலயத்திற்கோ எருசலேமிலுள்ள தேவாலயத்திற்கோ மட்டுப்படுத்தப்படக்கூடாது. பக்தியுடன் ஏறெடுக்கப்பட்டால், அவை எல்லா இடங்களிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை. நற்செயல்கள் செய்யவும் அமைதியாக இருக்கவும் கிறிஸ்தவப் பெண்கள் வலியுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் அறிக்கையிடும் பரிசுத்த விசுவாசத்திற்கு ஏற்றதாக அவர்களுடைய உடை இருக்கவேண்டும். பெண் தனது மீறுதலின் காரணமாக ஆணுக்குக் கீழ்ப்பட்டிருக்கவேண்டும். விசுவாசமும் பரிசுத்தமும் இருந்தால், அவள்மீது கூறப்பட்ட சாபம் குறைக்கப்படும்.

கி.பி. 57

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

1 தீமோத்தேயு 2:8–15

8 அன்றியும், ஆண்கள் கோபமும், வாக்குவாதமும் இல்லாமல் பரிசுத்தமான கரங்களை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டும் என்று விரும்புகிறேன். 9 பெண்களும் மயிரைப் பின்னுவதினாலும், பொன்னினாலும் மற்றும் முத்துக்களினாலும், விலையுயர்ந்த ஆடைகளினாலும் தங்களை அலங்கரிக்காமல், 10 தகுதியான ஆடையினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிற பெண்களுக்குரிய நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும். 11 பெண் என்பவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாக இருந்து, அமைதியோடு கற்றுக்கொள்ளவேண்டும். 12 உபதேசம்பண்ணவும், ஆணின்மேல் அதிகாரம்பண்ணவும் பெண்ணிற்கு நான் அனுமதி கொடுப்பது இல்லை; அவள் அமைதியாக இருக்கவேண்டும். 13 ஏனென்றால், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். 14 மேலும், ஆதாம் ஏமாற்றப்படவில்லை, பெண்ணே ஏமாற்றப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள். 15 அப்படி இருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைத்திருந்தால், குழந்தைப் பெறுவதினாலே காக்கப்படுவாள்.

அத்தியட்சகர்கள் மற்றும் ஊழியர்களின் தகுதிகள்

பல சபைகளைக் கண்காணிக்கும் அத்தியட்சகருக்கும், ஒரு சபைக்குப் பொறுப்பான ஊழியருக்கும் உரிய தகுதிகள் விவரிக்கப்படுகின்றன.

1 தீமோத்தேயு 3:1–7

1 கண்காணி பொறுப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை. 2 எனவே கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய கணவனும், நிதானமுள்ளவனும், தெளிந்த புத்தி உள்ளவனும், யோக்கியதை உள்ளவனும், அந்நியர்களை உபசரிக்கிறவனும், திறமையாகப் போதிக்கிறவனுமாக இருக்கவேண்டும். 3 அவன் மதுபானத்திற்கு அடிமையானவனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை விரும்புகிறவனுமாக இல்லாமல், பொறுமை உள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பணஆசை இல்லாதவனுமாக இருந்து, 4 தன் சொந்தக் குடும்பத்தை நன்றாக நடத்துகிறவனும், தன் குழந்தைகளை எல்லா நல்லொழுக்கமும் உள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாக இருக்கவேண்டும். 5 ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்தத்தெரியாமல் இருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்? 6 அவன் பெருமை அடைந்து, சாத்தானைப்போல தண்டனையிலே விழாதபடிக்கு, புதிய சீடனாக இருக்கக்கூடாது. 7 அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, விசுவாசமில்லாத மக்களிடம் நற்பெயர் பெற்றவனாக இருக்கவேண்டும்.

உதவிக்காரர்களும் அவர்களுடைய மனைவிகளும் எப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும்

உதவிக்காரர்களின் தகுதிகள் பட்டியலிடப்படுகின்றன. அவர்களுடைய மனைவிகள் மக்களுக்கு முன்மாதிரிகளாக இருக்கவேண்டும்.

1 தீமோத்தேயு 3:8–13

8 அப்படியே, உதவிக்காரர்களும் இருநாக்கு உள்ளவர்களாகவும், மதுபானத்திற்கு அடிமையானவர்களாகவும், இழிவான ஆதாயத்தை விரும்புகிறவர்களாகவும் இல்லாமல், நல்லொழுக்கம் உள்ளவர்களாகவும், 9 விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாகவும் இருக்கவேண்டும். 10 மேலும், இவர்கள் முதலில் சோதிக்கப்படவேண்டும்; குற்றஞ்சாட்டப்படாதவர்களென்றால் உதவிக்காரர்களாக ஊழியம் செய்யலாம். 11 அப்படியே பெண்களும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலும் உண்மையுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். 12 மேலும், உதவிக்காரர்கள் ஒரே மனைவியையுடைய கணவனும், தங்களுடைய குழந்தைகளையும் சொந்தக் குடும்பத்தையும் நன்றாக நடத்துகிறவர்களுமாக இருக்கவேண்டும். 13 இப்படி உதவிக்காரர்களுடைய ஊழியத்தை நன்றாகச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவில் உள்ள விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள்.

தீமோத்தேயுவின் கடமைகளில் பவுல் அவரை ஊக்குவித்தல்

கிறிஸ்தவ மதத்தின் உயர்ந்த கோட்பாடுகளைத் தீமோத்தேயுவுக்கு நினைவூட்டி, அத்தியட்சகராகவும் ஊழியராகவும் அவருடைய கடமைகளில் பவுல் அவரை ஊக்குவிக்கிறார்.

1 தீமோத்தேயு 3:14–16

14 நான் உன்னிடத்திற்குச் சீக்கிரமாக வருவேன் என்று நம்பியிருக்கிறேன். 15 தாமதிப்பேன் என்றால், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய முறையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்திற்குத் தூணும் ஆதாரமுமாக இருக்கிறது. 16 அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது அனைவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் சரீரத்திலே வெளிப்பட்டார், ஆவியானவராலே நீதியுள்ளவர் என்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், யூதரல்லாதவர்களிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே எடுத்துக்கொள்ளப்பட்டார்.

சபையின் விசுவாசவிலகலைப் பவுல் முன்னறிவித்தல்

தேவனுடைய ஆவியானவரால் பவுல் கிறிஸ்தவச் சபையின் விசுவாசவிலகலை முன்னறிவித்து, அதன் சீர்கேடுகளின் தன்மையை விவரிக்கிறார்; அதற்கு வழி ஆயத்தப்படுத்தியவர்களில் யூதமுறைகளைப் புகுத்தும் போதகர்களும் இருந்ததைச் சூசகமாகக் குறிப்பிடுகிறார். இந்தச் சீர்கேடுகளை நோக்கிச் செல்லும் ஒவ்வொரு போக்கையும் குறித்து தீமோத்தேயு எச்சரிக்கப்படுகிறார். நற்பண்பையும் தேவபக்தியையும் கடைப்பிடிப்பதே ஒரு கிறிஸ்தவனின் பயனுள்ள, ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரே சேவை என்று போதிக்கும்படி அவர் வலியுறுத்தப்படுகிறார். இவ்வாறு செய்வதற்காக அவர் நிந்திக்கப்பட்டுத் துன்புறுத்தப்படுவார் என்றாலும், இந்த முக்கியமான உண்மையை வலியுறுத்தும்படி அவருக்குச் சொல்லப்படுகிறது.

1 தீமோத்தேயு 4:1–11

1 ஆனாலும், ஆவியானவர் வெளிப்படையாக சொல்லுகிறபடி, கடைசிகாலத்தில் மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் ஏமாற்றுகிற ஆவிகளுக்கும், பிசாசுகளின் உபதேசங்களுக்கும் கீழ்ப்படிந்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள். 2 திருமணம் செய்யக்கூடாது என்றும், 3 விசுவாசிகளும், சத்தியத்தை அறிந்தவர்களும் நன்றி செலுத்தி அனுபவிக்கும்படி தேவன் படைத்த உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்றும் அந்தப் பொய்யர்கள் கட்டளையிடுவார்கள். 4 தேவன் படைத்தவைகள் அனைத்தும் நல்லதாக இருக்கிறது; நன்றியோடு ஏற்றுக்கொள்ளப்படுமானால் ஒன்றும் தள்ளப்படவேண்டியது இல்லை. 5 அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும். 6 இவைகளை நீ சகோதரர்களுக்குப் போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நல்லபோதகத்திலும் தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவிற்கு நல்ல ஊழியக்காரனாக இருப்பாய். 7 சீர்கேடும், கிழவிகள் பேச்சுமாக இருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கானவைகளை முயற்சிபண்ணு. 8 சரீரமுயற்சி கொஞ்சம் பிரயோஜனமுள்ளது; ஆனால், தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப்பின்பு வரும் ஜீவனுக்கும் உள்ள வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது. 9 இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் தகுதி உள்ளதாக இருக்கிறது. 10 இதற்காகவே பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனென்றால், எல்லா மனிதர்களுக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம். 11 இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு.

தீமோத்தேயுவின் சொந்த நடத்தைக்குப் பவுல் வழிகாட்டுதல்

பவுல் தீமோத்தேயுவின் சொந்த நடத்தை குறித்து அவருக்கு வழிகாட்டுகிறார்; தீமோத்தேயு தமது போதனையில் ஊகத்தின் அடிப்படையிலான எல்லா விஷயங்களையும் ஒதுக்கிவைக்கவேண்டும் என்று பவுல் விரும்புகிறார். தீமோத்தேயு சபைக்கு முன்மாதிரியாகி, ஊழியம், வாசிப்பு, படிப்பு, தியானம், தன்னடக்கம் ஆகியவற்றிற்குத் தம்மை அர்ப்பணிக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் அவர் தம்மை இரட்சித்துக்கொள்வதோடு மற்றவர்களின் இரட்சிப்புக்கும் கருவியாக இருப்பார்.

1 தீமோத்தேயு 4:12–16

12 உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடி, நீ உன் வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக இரு. 13 நான் வரும்வரைக்கும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாக இரு. 14 சபை மூப்பர்களாகிய சங்கத்தினர்கள் உன்மேல் கரங்களை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைக்குறித்து அசதியாக இருக்கவேண்டாம். 15 உன்னுடைய வளர்ச்சி எல்லோருக்கும் தெரியும்படி இவைகளையே நீ சிந்தித்து, இவைகளில் நிலைத்திரு. 16 உன்னைக்குறித்தும், உன் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாக இரு, இவைகளில் நிலைகொண்டிரு, நீ இப்படிச் செய்தால், உன்னையும், உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.