எபேசுவில் தெமேத்திரியு ஒரு கலகக் கூட்டத்தைத் தூண்டிவிடுகிறான்
பவுல் எபேசுவில் தொடர்ந்து தங்குகிறார். தெமேத்திரியு அங்கே ஒரு கலகக் கூட்டத்தைத் தூண்டிவிடுகிறான்.
கி.பி. 57
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:23–41
23 அக்காலத்திலே இந்த மார்க்கத்தைக்குறித்துப் பெரிய கலகம் உண்டானது. 24 எப்படியென்றால், தெமேத்திரியு என்னும் பெயர்கொண்ட ஒரு தட்டான் தியானாளின் கோவிலைப்போல வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து, தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக்கொண்டிருந்தான். 25 இவர்களையும் இப்படிப்பட்டத் தொழில்செய்கிற மற்ற வேலையாட்களையும் அவன் கூடிவரச்செய்து: மக்களே, இந்தத் தொழிலினால் நமக்கு நல்ல பிழைப்பு உண்டாயிருக்கிறதென்று அறிவீர்கள். 26 இப்படியிருக்க, கைகளினால் செய்யப்பட்ட தேவர்கள் தேவர்களல்லவென்று இந்தப் பவுல் என்பவன் சொல்லி, எபேசுவிலே மாத்திரமல்ல, கொஞ்சங்குறைய ஆசியா எங்கும் அநேக மக்களுக்குப் போதித்து, அவர்களைத் தன் பக்கமாகச் சேர்த்துக்கொண்டான் என்று நீங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறீர்கள். 27 இதனால் நம்முடைய தொழில் அற்றுப்போகும்படியான அபாயம் சம்பவித்திருக்கிறதுமல்லாமல், மகா தேவியாகிய தியானாளுடைய கோவில் நினைவில்லாமல் போகிறதற்கும், ஆசியா முழுமையும் உலகமுழுவதும் சேவிக்கிற அவளுடைய மகத்துவம் அழிந்துபோகிறதற்கும் ஏதுவாக இருக்கிறது என்றான். 28 அவர்கள் இதைக்கேட்டு, கோபத்தால் நிறைந்து: எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று சத்தமிட்டார்கள். 29 பட்டணம் முழுவதும் கலகத்தினால் நிறைந்தது. பவுலுக்கு வழித்துணையாக வந்த மக்கெதோனியர்களாகிய காயுவையும் அரிஸ்தர்க்குவையும் அவர்கள் இழுத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு மண்டபத்திற்கு பாய்ந்தோடினார்கள். 30 பவுல் கூட்டத்திற்குள்ளே போக மனதாயிருந்தபோது, சீடர்கள் அவனைப் போகவிடவில்லை. 31 ஆசியாநாட்டுத் தலைவரில் அவனுக்கு நண்பர்களாக இருந்த சிலரும் அவனிடத்திற்கு ஆள் அனுப்பி, மண்டபத்திற்குள் போகவேண்டாம் என்று எச்சரித்தார்கள். 32 கூட்டத்தில் குழப்பமுண்டாகி, சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகப் பேசினார்கள்; தாங்கள் கூடிவந்த காரணம் இன்னதென்று அநேகருக்குத் தெரியாதிருந்தது. 33 அப்பொழுது யூதர்கள் அலெக்சந்தர் என்பவனை முன்னே நிற்கத் தள்ளும்போது, கூட்டத்திலே சிலர் அவனை முன்னே இழுத்துவிட்டார்கள். அலெக்சந்தர் கையால் சைகை காட்டி, மக்களுக்கு உத்தரவுசொல்ல மனதாயிருந்தான். 34 அவன் யூதனென்று அவர்கள் அறிந்தபோது, எபேசியர்களுடைய தியானாளே பெரியவள் என்று இரண்டுமணி நேரம்வரை எல்லோரும் ஏகமாகச் சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள். 35 பட்டணத்து அவைத்தலைவன் மக்களை அமைதிப்படுத்தி: எபேசியர்களே, இந்த பட்டணம் மகா தேவியாகிய தியானாளின் கோவிலும் வானத்திலிருந்து விழுந்த சிலையையும் எபேசியரது நகரின் பாதுகாப்பில் இருக்கிறதென்று அறியாதவன் உண்டோ? 36 இதை எவரும் மறுக்கமுடியாத காரியமாகையால், நீங்கள் பதற்றங்கொண்டு ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருக்கவேண்டும். 37 இந்த மனிதர்களை இங்கே கொண்டுவந்தீர்கள்; இவர்கள் கோவில் கொள்ளைக்காரர்களும் அல்ல, உங்களுடைய தேவியை நிந்தித்துப் பேசுகிறவர்களும் அல்ல. 38 தெமேத்திரியுவிற்கும் அவனைச் சேர்ந்த தொழிலாளிகளுக்கும் ஒருவன்மேல் ஒரு காரியம் உண்டாயிருந்தால், நியாயம் விசாரிக்கிற நாட்களுண்டு, ஆளுனர்கள் இருக்கிறார்கள்; ஒருவர் பேரிலொருவர் வழக்காடிக்கொள்ளட்டும். 39 நீங்கள் வேறு எந்தவொரு காரியத்தைக்குறித்து விசாரிக்கவேண்டுமானால், அதை சட்டப்படிக் கூடுகின்ற சபையில் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். 40 இன்றைக்கு உண்டான கலகத்தைக்குறித்து நாம் உத்தரவு சொல்லுகிறதற்கு எதுவும் இல்லாதபடியால், இந்தக் கலகத்தைக்குறித்து நாங்கள் விசாரிக்கப்படும்போது, குற்றவாளிகளாகிறதற்கு ஏதுவாக இருப்போமே என்று சொல்லி, 41 பின்பு கூட்டத்தை அனுப்பிவிட்டான்.
பவுல் மக்கெதோனியாவுக்குச் செல்ல எபேசுவைவிட்டுப் புறப்படுதல்
1 கலகம் முடிந்தபின்பு, பவுல் சீடர்களைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, உற்சாகப்படுத்தி, மக்கெதோனியாவிற்குப் புறப்பட்டுப்போனான்
பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதுதல்
தீமோத்தேயு தலைமை தாங்கும்படி நியமிக்கப்பட்டிருந்த எபேசு சபையில், யூத வைராக்கியக்காரர்கள் நிலைநாட்ட முயன்ற பொய்யான கோட்பாடுகளையும் சீர்கேடுகளையும் எவ்வாறு ஒடுக்குவது என்று அவருக்கு வழிகாட்ட, பவுல் அவருக்குத் தனது முதல் கடிதத்தை எழுதுகிறார்.
பவுல் தீமோத்தேயுவை வாழ்த்துதல்
வாழ்த்துரை.
1 நம்முடைய இரட்சகராக இருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாக இருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுல், 2 விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவிற்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
பவுல் தீமோத்தேயுவை எபேசுவில் விட்டுச்சென்றதன் காரணம்
கிறிஸ்தவப் போதனையில் வம்சவரலாறுகளையும் மரபுகளையும் கலக்க முயன்ற யூத வைராக்கியக்காரர்களை எதிர்ப்பதற்காகவே தீமோத்தேயுவை எபேசுவில் விட்டுச்சென்றதைப் பவுல் அவருக்கு நினைவூட்டுகிறார்.
3 மாறுபாடான உபதேசங்களைப் போதிக்காதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவளர்ச்சிக்கு ஏதுவாக இல்லாமல், வாக்குவாதங்களுக்கு ஏதுவாக இருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனிக்காதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்படி, 4 நான் மக்கெதோனியாவிற்குப் போகும்போது, உன்னை எபேசு பட்டணத்தில் இருக்கக் கேட்டுக்கொண்டபடியே செய்.
நியாயப்பிரமாணத்தின் நோக்கமும் பயன்பாடும்
பவுல் நியாயப்பிரமாணத்தின் நோக்கத்தையும் பயன்பாட்டையும் விளக்குகிறார். அது நல்லொழுக்கத்தை வலியுறுத்தி, எல்லா வகையான தீமைகளையும் கண்டிப்பதால், கிறிஸ்தவத்துடன் முழுமையாக ஒத்துப்போவதை எடுத்துக்காட்டுகிறார்.
5 இந்த கட்டளையின் பொருள் என்னவென்றால், சுத்தமான இருதயத்திலும் நல்லமனச்சாட்சியிலும் மாயமில்லாத விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே. 6 இவைகளைச் சிலர் பார்க்காமல் வீண்பேச்சுக்கு இடம்கொடுத்து விலகிப்போனார்கள். 7 தாங்கள் சொல்லுகிறதும், தாங்கள் உறுதியாக நம்புகிறதும் என்னவென்றும் தெரியாமல், வேதபண்டிதர்களாக இருக்க விரும்புகிறார்கள். 8 ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி கடைபிடித்தால், நியாயப்பிரமாணம் நல்லது என்று அறிந்திருக்கிறோம். 9 எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரர்களுக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தமானவர்களுக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தகப்பனையும் தாயையும் கொலை செய்கிறவர்களுக்கும், கொலைபாதகர்களுக்கும், 10 வேசிக்கள்ளர்களுக்கும், ஆண்புணர்ச்சிக்காரர்களுக்கும், கொத்தடிமைகளாக விற்க மனிதர்களைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யர்களுக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும், ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிராக போதிக்கிறவர்களுக்கும், 11 ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய மகிமையான நற்செய்தியின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது.
பவுலை அப்போஸ்தலனாக்கிய கிறிஸ்துவின் இரக்கம்
இந்த மகிமையான நற்செய்தியின் அப்போஸ்தலனாகத் தன்னை ஆக்கிய கிறிஸ்துவின் நன்மையை விரிவாக எடுத்துரைக்கப் பவுல் தலைப்பைவிட்டு விலகுகிறார். தேவன் தனக்குக் காட்டிய இரக்கத்தை முன்வைத்து, பாவிகள் அனைவரையும் மனந்திரும்ப அழைக்கிறார்.
12 என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையானவன் என்று நினைத்து, இந்த ஊழியத்திற்கு நியமித்தபடியால் அவருக்கு நன்றி செலுத்துகிறேன். 13 கடந்த காலத்தில் நான் நிந்திக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமைப்படுத்துகிறவனுமாக இருந்தேன்; அப்படி இருந்தும், நான் தெரியாமல், விசுவாசம் இல்லாமல் அப்படிச் செய்ததினால் இரக்கம்பெற்றேன். 14 நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடும் சேர்ந்து என்னிடத்தில் பரிபூரணமாகப் பெருகியது. 15 பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் தகுதியுள்ளதாக இருக்கிறது; அவர்களில் மோசமான பாவி நான். 16 அப்படி இருந்தும், நித்தியஜீவனை அடைவதற்காக இனிமேல் இயேசுகிறிஸ்துவிடம் விசுவாசமாக இருப்பவர்களுக்கு மாதிரியாக இருக்கும்படிக்கு மோசமான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படி இரக்கம்பெற்றேன். 17 நித்தியமாக நிலைத்திருக்கிற அழிவில்லாத கண்ணுக்குத் தெரியாத ராஜனுமாக, தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாக இருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
விசுவாசத்தைக் காத்துக்கொள்ளத் தீமோத்தேயுவுக்குக் கட்டளை
தீர்க்கதரிசனத்தினால் கிறிஸ்தவ ஊழியத்திற்கு நியமிக்கப்பட்டதைப் பவுல் தீமோத்தேயுவுக்கு நினைவூட்டி, தூய விசுவாசத்தையும் நல்மனச்சாட்சியையும் பற்றிக்கொள்ளும்படி வலியுறுத்துகிறார். இவ்விரண்டையும் காத்துக்கொள்ளாத அலெக்சந்தரும் இமெனேயும் தங்கள் தேவபக்தியின்மைக்காகத் தண்டிக்கப்படுகிறார்கள்.
18 என் குமாரனாகிய தீமோத்தேயுவே, உன்னைக்குறித்து முன்னமே சொன்ன தீர்க்கதரிசனங்களின்படியே, நீ விசுவாசத்தையும் மனசாட்சியையும் பற்றிக்கொண்டு நல்லப் போராட்டத்தைப் போராடும்படி, இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன். 19 இந்த நல்ல மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள். 20 இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் கர்த்த்தரை அவமதிக்காமல் இருக்கக் கற்றுக்கொள்ள அவர்களை சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்.
எல்லா மக்களுக்காகவும் ஜெபிக்கப் பவுல் கட்டளையிடுதல்
யூதமுறைகளைப் புகுத்தும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக, கிறிஸ்தவத்திற்கு மாறியவர்கள் நற்செய்தியின் அன்பான மனப்பான்மையுடன், யூதர்களாக இருந்தாலும் யூதரல்லாதோர்களாக இருந்தாலும் எல்லா மக்களுக்காகவும், குறிப்பாக ஒவ்வொரு தேசத்திலும் நாட்டிலும் உள்ள அரசர்களுக்காகவும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்காகவும் ஜெபிக்கும்படி பவுல் கட்டளையிடுகிறார். எல்லா மக்களும் இரட்சிக்கப்பட விரும்பும் தேவனுக்கு இது பிரியமானது என்றும், தேவனுக்கும் எல்லா தேசத்து மக்களுக்கும் இடையில் ஒரே மத்தியஸ்தரே இருக்கிறார் என்றும் அவர் அறிவிக்கிறார். இந்த உண்மைகளை யூதர்களுக்கும் யூதரல்லாதோர்களுக்கும் அறிவிக்கப் பவுல் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
1 நான் முதலாவது சொல்லுகிற புத்தி என்னவென்றால், எல்லா மனிதருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் நன்றிசெலுத்துதலையும் செய்யவேண்டும்; 2 நாம் எல்லாப் பக்தியோடும், நல்லொழுக்கத்தோடும், சண்டை இல்லாமல் அமைதியான வாழ்க்கை வாழும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள எல்லோருக்காகவும் அப்படியே செய்யவேண்டும். 3 நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாக இருக்கிறது. 4 எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் விருப்பமுள்ளவராக இருக்கிறார். 5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனிதர்களுக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 6 எல்லோரையும் மீட்பதற்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த மனிதனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. 7 இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், யூதரல்லாதோர்களுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவிற்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.