மலைப்பிரசங்கம்

மலைப்பிரசங்கம்: மேசியாவின் ஆட்சியில் கிடைக்கும் சிறப்புரிமைகளும் கடைப்பிடிக்க வேண்டியவையும், நீதியைக் குறித்த கிறிஸ்துவின் தரநெறியும்.

கப்பர்நகூமிலிருந்து வெகுதூரத்தில் இல்லாத ஒரு மலையிலுள்ள சமவெளியான இடம்

கி.பி. 27 முதல் 29 வரை

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மத்தேயு 5:1–8:1

இடமும் கேட்டுக்கொண்டிருந்த மக்களும்

5:1 இயேசு திரளான மக்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்தார்கள். 2 அப்பொழுது அவர் அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்:

பாக்கிய அறிவிப்புகளும் ஐயோ அறிவிப்புகளும்

அறிமுகம்: பாக்கிய அறிவிப்புகளும் ஐயோ அறிவிப்புகளும், மேசியாவின் குடிமக்களுக்குரிய சிறப்புரிமைகளும்.

3 “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.

4 துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.

5 சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

6 நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.

7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்பெறுவார்கள்.

8 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

9 சமாதானம் செய்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள்.

10 நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.

11 “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவிதமான தீமையான சொற்களையும் உங்கள்மேல் பொய்யாகச் சொல்வார்களானால் பாக்கியவான்களாக இருப்பீர்கள்;

12 சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருங்கள்; பரலோகத்தில் உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும்; உங்களுக்குமுன்பே வாழ்ந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.

நீதியைக் குறித்த கிறிஸ்துவின் தரநெறி

பிரசங்கத்தின் மையக்கருத்து: வேதபண்டிதர்கள் மற்றும் பரிசேயர்களின் நீதித் தரநெறிக்கு மாறான கிறிஸ்துவின் நீதித் தரநெறி.

13 நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனிதர்களால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. 14 நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. 15 விளக்கைக் கொளுத்தி பாத்திரத்தினாலே மூடிவைக்காமல், விளக்குத்தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். 16 இவ்விதமாக, மனிதர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்களுடைய வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.

17 நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று நினைத்துக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு இல்லை, நிறைவேற்றுவதற்கே வந்தேன். 18 வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்தில் உள்ளதெல்லாம் நிறைவேறும்வரை, அதில் ஒரு சிறு எழுத்தாவது, ஒரு எழுத்தின் உறுப்பாவது ஒழிந்துபோகாது என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 19 ஆகவே, இந்தக் கட்டளைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாவது மீறி, அவ்விதமாக மனிதர்களுக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லோரையும்விட சிறியவன் எனப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் எனப்படுவான். 20 வேதபண்டிதர்கள் பரிசேயர்கள் என்பவர்களுடைய நீதியைவிட உங்களுடைய நீதி அதிகமாக இல்லாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறிஸ்துவின் அறநெறிகள் வேதபண்டிதர்களின் போதனையை மிஞ்சுகின்றன

கொலை, விபசாரம், விவாகரத்து, சத்தியம் செய்தல், பழிவாங்குதல், பகைவர்களை நேசித்தல் ஆகிய ஆறு அம்சங்களில் அல்லது எடுத்துக்காட்டுகளில், கிறிஸ்துவின் அறநெறிப் போதனை வேதபண்டிதர்களின் போதனையைவிட (பழைய ஏற்பாடு மற்றும் வாய்மொழிச் சட்டம் ஆகிய இரண்டிலும்) மேலானது.

21 கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான் என்பதும், முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 22 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு உரியவனாக இருப்பான். 23 ஆகவே, நீ பலிபீடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயானால், 24 அங்கே பலிபீடத்தின்முன்பு உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முதலில் உன் சகோதரனோடு ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.

25 எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடுக்காமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுக்காமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாக அவனோடு சமாதானமாகு. 26 இல்லாவிட்டால், நீ ஒரு காசும் குறைவில்லாமல் செலுத்தித்தீர்க்கும்வரைக்கும் சிறைச்சாலையிலிருந்து வெளியே வரமாட்டாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

27 விபசாரம் செய்யாதிருப்பாயாக என்பது முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு விபசாரம் செய்துவிட்டான். 29 உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். 30 உன் வலது கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட. உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும்.

31 தன் மனைவியை விவாகரத்து செய்கிற எவனும், அவளுக்கு விடுதலைப்பத்திரம் கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது. 32 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தனக் காரணத்தினாலொழிய தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன், அவளை விபசாரம்செய்யத் தூண்டுகிறவனாக இருப்பான்; அப்படி விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாக இருப்பான்.

33 அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையில் செலுத்துவாயாக என்று முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 34 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; எதையும் செய்வேன் என்று சத்தியம் செய்யவேண்டாம்; பரலோகத்தின்பேரில் சத்தியம் செய்யவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம். 35 பூமியின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். 36 உன் தலையின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அதின் ஒரு முடியையாவது வெண்மையாக்கவும் கருமையாக்கவும் உன்னால் முடியாதே. 37 உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.

38 கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 39 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு. 40 உன்னோடு வழக்காடி உன் ஆடையை எடுத்துக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறவனுக்கு உன் மேலாடையையும் கொடுத்துவிடு. 41 ஒருவன் உன்னை ஒரு மைல்தூரம் வரக் கட்டாயப்படுத்தினால், அவனோடுகூட இரண்டு மைல்தூரம் போ. 42 உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.

43 உனக்கடுத்தவனைச் நேசித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்களுடைய சத்துருக்களை நேசியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.

45 இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவிற்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் தீயவர்கள்மேலும் நல்லவர்கள்மேலும் தமது சூரியனை உதிக்கச்செய்து, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.

46 உங்களை நேசிக்கிறவர்களையே நீங்கள் நேசிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?

47 உங்களுடைய சகோதரர்களைமட்டும் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?

48 ஆகவே, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா பூரண சற்குணராக இருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராக இருக்கக்கடவீர்கள்.

பகட்டான மாய்மாலத்திற்கு மாறான உண்மையான நீதி

பரிசேயர்களின் பகட்டான மாய்மாலத்தைப் போலல்லாமல், ஏழைகளுக்குக் கொடுத்தல், ஜெபித்தல், உபவாசித்தல் ஆகியவற்றில் உண்மையான நீதியைக் கடைப்பிடித்தல்.

6:1 “மனிதர்கள் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்களுடைய நல்ல செயல்களைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அப்படிச் செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. 2 ஆகவே, நீ தர்மம் செய்யும்போது, மனிதர்களால் புகழப்படுவதற்கு, மாயக்காரர்கள் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதாதே; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்தார்களென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 3 நீயோ தர்மம் செய்யும்போது, உன் தர்மம் மறைமுகமாக இருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது. 4 அப்பொழுது மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா தாமே, உனக்கு வெளியரங்கமாகப் பலனளிப்பார்.

5 அன்றியும் நீ ஜெபம்செய்யும்போது மாயக்காரர்களைப்போல இருக்கவேண்டாம்; மனிதர்கள் பார்க்கும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் முற்சந்திகளிலும் நின்று ஜெபம்செய்ய விரும்புகிறார்கள்; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்ததென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 6 நீயோ ஜெபம்செய்யும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, மறைவிடத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் செய்; அப்பொழுது மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாக உனக்குப் பலனளிப்பார். 7 அன்றியும் நீங்கள் ஜெபம்செய்யும்போது, தேவனை அறியாதவர்களைப்போல வீண்வார்த்தைகளைத் திரும்பத்திரும்ப பேசாதிருங்கள்; அவர்கள், அதிக வார்த்தைகளினால் தங்களுடைய ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். 8 அவர்களைப்போல நீங்கள் செய்யாமலிருங்கள்; நீங்கள், உங்களுடைய பிதாவை நோக்கி வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு என்ன தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். 9 நீங்கள் ஜெபம் செய்யவேண்டிய விதமாவது:

“பரலோகத்திலிருக்கிற எங்களுடைய பிதாவே,

உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.

10 உம்முடைய ராஜ்யம் வருவதாக;

உம்முடைய விருப்பம் பரலோகத்திலே செய்யப்படுகிறதுபோல

பூமியிலேயும் செய்யப்படுவதாக.

11 எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.

12 எங்களுடைய எதிராளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல

எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னியும்.

13 எங்களைச் சோதனைக்குட்படச் செய்யாமல்,

தீமையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும்,

ராஜ்யமும், வல்லமையும், மகிமையும்

என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்’ என்பதே.

14 மனிதர்களுடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்களுடைய பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். 15 மனிதர்களுடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னிக்காதிருந்தால், உங்களுடைய பிதா உங்களுடைய குற்றங்களையும் மன்னிக்காதிருப்பார்.

16 நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரர்களைப்போல முகவாடலாக இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனிதர்கள் பார்க்கும்படிக்கு, தங்களுடைய முகங்களை வாடச்செய்கிறார்கள்; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்ததென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 17 நீயோ உபவாசிக்கும்போது, உன் உபவாசம் மனிதர்களுக்குக் காணப்படாமல், மறைவிடத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. 18 அப்பொழுது, மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாகப் பலனளிப்பார்.

தேவனிடம் முழுமனதான பக்தி

உலக நோக்கங்களுக்கும் கவலைகளுக்கும் மாறாக, தேவனிடம் முழுமனதான பக்தி.

19 பூமியிலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடர்களும் கன்னமிட்டுத் திருடுவார்கள். 20 பரலோகத்திலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர்கள் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. 21 உங்களுடைய சொத்து எங்கேயிருக்கிறதோ அங்கே உங்களுடைய இருதயமும் இருக்கும். 22 கண்ணானது சரீரத்தின் விளக்காக இருக்கிறது; உன் கண் தெளிவாக இருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருக்கும். 23 உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாக இருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாக இருந்தால், அந்த இருள் எவ்வளவு அதிகமாக இருக்கும்! 24 இரண்டு முதலாளிகளுக்கு வேலைசெய்ய ஒருவனாலும் முடியாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனை நேசிப்பான்; அல்லது ஒருவனைப்பற்றிக்கொண்டு, மற்றவனைப் புறக்கணிப்பான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் வேலைசெய்ய உங்களால் முடியாது.

25 ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்களுடைய வாழ்க்கைக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்களுடைய சரீரத்திற்காகவும் கவலைப்படாமலிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; உணவைவிட வாழ்க்கையும், உடையைவிட சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? 26 வானத்துப் பறவைகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்களுடைய பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைவிட நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? 27 கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? 28 உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறது ஏன்? காட்டுப்பூக்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; 29 என்றாலும், சாலொமோன்கூட தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாவது உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 30 விசுவாசக்குறைவுள்ளவர்களே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப்புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? 31 ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாமல் இருங்கள். 32 இவைகளையெல்லாம் தேவனை அறியாதவர் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்களுடைய பரமபிதா அறிந்திருக்கிறார். 33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு சேர்த்துக்கொடுக்கப்படும். 34 ஆகவே, நாளைக்காகக் கவலைப்படாமல் இருங்கள்; நாளையதினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.

குற்றம் கண்டுபிடித்தல், அல்லது மற்றவர்களை நியாயந்தீர்த்தல்

7:1 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காமலிருங்கள். 2 ஏனென்றால், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். 3 நீ உன் கண்ணிலிருக்கிற பெரிய மரத்துண்டை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற சிறிய துரும்பைப் பார்க்கிறதென்ன?

4 இதோ, உன் கண்ணில் பெரிய மரத்துண்டு இருக்கும்போது உன் சகோதரனைப் பார்த்து: நான் உன் கண்ணிலிருக்கும் சிறிய துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? 5 மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற பெரிய மரத்துண்டை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரனுடைய கண்ணிலிருக்கிற சிறிய துரும்பை எடுத்துப்போடுவதற்கு உனக்கு தெளிவாகத் தெரியும். 6 பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள்; உங்களுடைய முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதீர்கள்; போட்டால் தங்களுடைய கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.

ஜெபமும் பொன்விதியும்

7 கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; 8 ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். 9 உங்களில் எந்த மனிதனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? 10 மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? 11 ஆகவே, பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?

12 ஆதலால், மனிதர்கள் உங்களுக்கு எவைகளைச் செய்யவிரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.

வலிமையான உவமைகளுடன் பிரசங்கம் முடிவடைகிறது

பிரசங்கத்தின் முடிவுரை: தனிப்பட்ட நீதியைக் குறித்த பாடம், வலிமையான உவமைகளால் ஆழமாக வலியுறுத்தப்படுகிறது.

13 குறுகின வாசல்வழியாக உள்ளே பிரவேசியுங்கள்; அழிவிற்குப்போகிற வாசல் அகலமும், வழி விசாலமுமாக இருக்கிறது; அதின்வழியாக பிரவேசிக்கிறவர்கள் அநேகர். 14 ஜீவனுக்குப்போகிற வாசல் குறுகினதும், வழி நெருக்கமுமாக இருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.

15 கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடம் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பேராசையுள்ள ஓநாய்கள். 16 அவர்களுடைய செயல்களினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சைப் பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? 17 அப்படியே நல்லமரமெல்லாம் நல்லகனிகளைக் கொடுக்கும்; கெட்டமரமோ கெட்டகனிகளைக் கொடுக்கும்.

18 நல்லமரம் கெட்டகனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்டமரம் நல்லகனிகளைக் கொடுக்கமாட்டாது.

19 நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, நெருப்பிலே போடப்படும்.

20 ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். 21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. 22 அந்த நாளில் அநேகர் என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொன்னோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 23 அப்பொழுது, நான் ஒருபோதும் உங்களை அறியவில்லை; அக்கிரமச்செய்கைக்காரர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

24 ஆகவே, நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனிதனுக்கு ஒப்பிடுவேன்.

25 பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.

26 நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனிதனுக்கு ஒப்பிடப்படுவான். 27 பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். 28 இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லிமுடித்தபோது, அவர் வேதபண்டிதர்களைப்போல போதிக்காமல், அதிகாரமுடையவராக அவர்களுக்குப் போதித்ததினால், 29 மக்கள் அவருடைய போதனையைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

8:1 இயேசு மலையிலிருந்து இறங்கினபோது, திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்.

லூக்கா 6:17–30, 32–42, 31, 43–49

இடமும் கேட்டுக்கொண்டிருந்த மக்களும்

6:17 பின்பு அவர் அவர்களுடன் இறங்கி, சமமான ஒரு இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீடர்கள் அநேகரும், அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்காகவும், தங்களுடைய வியாதிகளிலிருந்து குணமாக்கப்படுவதற்காகவும், யூதேயா மற்றும் எருசலேம் நகரங்களில் இருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்தில் இருந்தும் அநேக மக்கள் வந்திருந்தார்கள். 18 அசுத்தஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள். 19 அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லோரையும் குணமாக்கினபடியினாலே, மக்கள் எல்லோரும் அவரைத் தொடுவதற்காக முயற்சிசெய்தார்கள்.

பாக்கிய அறிவிப்புகளும் ஐயோ அறிவிப்புகளும்

அறிமுகம்: பாக்கிய அறிவிப்புகளும் ஐயோ அறிவிப்புகளும், மேசியாவின் குடிமக்களுக்குரிய சிறப்புரிமைகளும்.

20 அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களை நோக்கிப்பார்த்து:

“தரித்திரர்களாகிய நீங்கள் பாக்கியவான்கள்;

தேவனுடைய இராஜ்யம் உங்களுடையது.

21 இப்பொழுது பசியாக இருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்;

திருப்தியடைவீர்கள்.

இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்;

இனி சிரிப்பீர்கள்.

22 மனிதகுமாரனைப் பின்பற்றுவதால் மக்கள் உங்களைப் பகைத்து,

உங்களை நிராகரித்து,

உங்களை அவமதித்து,

உங்களுடைய பெயரைப் பொல்லாததென்று சொல்லி

உங்களைத் தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாக இருப்பீர்கள்.

23 “அந்த நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருங்கள்; பரலோகத்தில் உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும்; அவர்களுடைய முற்பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படித்தான் செய்தார்கள்.

24 செல்வந்தர்களாகிய உங்களுக்கு ஐயோ;

உங்களுடைய ஆறுதலை நீங்கள் அடைந்து விட்டீர்கள்.

25 திருப்தியுள்ளவர்களாக இருக்கிற உங்களுக்கு ஐயோ;

நீங்கள் பசியாக இருப்பீர்கள்.

இப்பொழுது சிரிக்கிற உங்களுக்கு ஐயோ;

இனித் துக்கப்பட்டு அழுவீர்கள்.

26 எல்லா மனிதர்களும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாகப் பேசும்போது உங்களுக்கு ஐயோ;

அவர்களுடைய முற்பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளைக்குறித்தும் அப்படித்தான் பேசினார்கள்.

கிறிஸ்துவின் அறநெறிகள் வேதபண்டிதர்களின் போதனையை மிஞ்சுகின்றன

கொலை, விபசாரம், விவாகரத்து, சத்தியம் செய்தல், பழிவாங்குதல், பகைவர்களை நேசித்தல் ஆகிய ஆறு அம்சங்களில் அல்லது எடுத்துக்காட்டுகளில், கிறிஸ்துவின் அறநெறிப் போதனை வேதபண்டிதர்களின் போதனையைவிட (பழைய ஏற்பாடு மற்றும் வாய்மொழிச் சட்டம் ஆகிய இரண்டிலும்) மேலானது.

27 “என் வார்த்தைகளைக் கேட்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்களுடைய பகைவர்களை நேசியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.

28 உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை அவமதிக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள். 29 உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு; உன் மேலாடையை எடுத்துக்கொள்ளுகிறவன் உன் ஆடையையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே. 30 உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேட்காதே.

32 உங்களை நேசிக்கிறவர்களையே நீங்களும் நேசித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களை நேசிக்கிறவர்களை நேசிக்கிறார்களே.

33 உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்களும் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே.

34 திரும்பக் கொடுப்பார்கள் என்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும் என்று பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே. 35 உங்களுடைய பகைவர்களை நேசியுங்கள், நன்மை செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும், உன்னதமான தேவனுக்கு நீங்கள் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே. 36 எனவே உங்களுடைய பிதா இரக்கமுள்ளவராக இருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள்.

குற்றம் கண்டுபிடித்தல், அல்லது மற்றவர்களை நியாயந்தீர்த்தல்

37 மற்றவர்களைக் குற்றவாளிகள் என்று சொல்லாதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகள் என்று சொல்லப்படாமலிருப்பீர்கள்; மற்றவர்களை தண்டனைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாமலிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள். 38 கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாக அளந்து, உங்களுடைய மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார். 39 பின்னும் அவர் ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பார்வையற்றவனுக்கு பார்வையற்றவன் வழிகாட்ட முடியுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா? 40 சீடன் தன் குருவிற்கு மேலானவன் இல்லை, பயிற்சியில் முழுமையாக தேறினவன் தன் குருவைப்போல இருப்பான். 41 நீ உன் கண்ணில் இருக்கிற மரத்தைப் பார்க்காமல், உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பைப் பார்க்கிறது என்ன?

42 அல்லது நீ உன் கண்ணில் இருக்கிற மரத்தைப் பார்க்காமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்துப்போடுகிறேன் என்று நீ சொல்வது எப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணில் இருக்கிற மரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்துப்போடும் வழியைப் பார்ப்பாய்.

ஜெபமும் பொன்விதியும்

31 மனிதர்கள் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.

வலிமையான உவமைகளுடன் பிரசங்கம் முடிவடைகிறது

பிரசங்கத்தின் முடிவுரை: தனிப்பட்ட நீதியைக் குறித்த பாடம், வலிமையான உவமைகளால் ஆழமாக வலியுறுத்தப்படுகிறது.

43 நல்ல மரமானது கெட்ட கனியைக் கொடுக்காது, கெட்ட மரமானது நல்ல கனியைக் கொடுக்காது.

44 ஒவ்வொரு மரமும் அதின் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச்செடியில் திராட்சைப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை.

45 நல்ல மனிதன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக்காட்டுகிறான்; பொல்லாத மனிதன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவனுடைய வாய் பேசும்.

46 என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமல் போகிறதென்ன?

47 என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக்கேட்டு, அதின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாக இருக்கிறான் என்று உங்களுக்குச் சொல்லுவேன்.

48 ஆழமாகத் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்க முடியாமல்போனது; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.

49 என் வார்த்தைகளைக் கேட்டும் அதின்படி செய்யாதவன் எவனோ, அவன் அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாக இருக்கிறான்; நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதினவுடனே அது விழுந்து முழுவதும் அழிந்துபோனது” என்றார்.