இயேசு கடலோரத்தில் பெருந்திரளான மக்களுக்குப் போதித்துக் குணமாக்குகிறார்
இயேசு கலிலேயா கடலோரத்தில் பெருந்திரளான மக்களுக்குப் போதித்துக் குணமாக்குகிறார்.
கிறிஸ்து பன்னிரண்டு அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கும் திரளான மக்களுக்கும் மலைப்பிரசங்கத்தை வழங்குவதை இங்கே காண்கிறோம்.
கி.பி. 27 முதல் 29 வரை
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மத்தேயு 12:15–21
12:15 இயேசு அதை அறிந்து, அந்த இடத்தைவிட்டு விலகிப்போனார். திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்; அவர்களெல்லோரையும் அவர் சுகமாக்கி,
16 தம்மைப் பிரசித்தப்படுத்தாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டார். 17 ஏசாயா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவன் சொன்னதாவது:
18 “இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன்,
என் ஆத்துமாவிற்குப் பிரியமாக இருக்கிற என்னுடைய நேசன்;
என் ஆவியை அவர்மேல் அமரச் செய்வேன்,
அவர் யூதரல்லாதவர்களுக்கு நியாயத்தை அறிவிப்பார்.
19 வாக்குவாதம் செய்யவும் மாட்டார்,
சத்தமிடவும் மாட்டார்;
அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை.
20 அவர் நியாயத்திற்கு ஜெயம் கிடைக்கச்செய்கிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும்,
மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்.
21 அவருடைய நாமத்தின்மேல் உலகிலுள்ளோர் நம்பிக்கையாக இருப்பார்கள்” என்பதே.
மாற்கு 3:7–12
3:7 இயேசு தம்முடைய சீடர்களோடு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு கடலோரத்திற்குப் போனார். 8 கலிலேயாவிலும், யூதேயாவிலும், எருசலேமிலும், இதுமேயாவிலும், யோர்தானுக்கு அக்கரையிலுமிருந்து அநேக மக்கள் வந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள். அதோடு தீரு சீதோன் பட்டணங்களின் பகுதிகளிலும் இருந்து அநேக மக்கள் அவர் செய்த அற்புதங்களைப்பற்றிக் கேள்விப்பட்டு, அவரிடம் வந்தார்கள். 9 அவர் அநேகரைச் சுகமாக்கினார். நோயாளிகளெல்லோரும் அதை அறிந்து அவரைத் தொடவேண்டும் என்று அவரை நெருங்கிவந்தார்கள்.
10 மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தபடியால் அவர்கள் தம்மை நெருக்காமல் இருப்பதற்காக, தமக்கு ஒரு படகை ஆயத்தம் பண்ணவேண்டும் என்று, தம்முடைய சீடர்களுக்குச் சொன்னார். 11 அசுத்தஆவிகளும் இயேசுவைப் பார்த்தபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன.
12 தம்மைப் பிரசித்தம் பண்ணாமல் இருக்க அவைகளுக்கு உறுதியாகக் கட்டளையிட்டார்.
இயேசு பன்னிரண்டு அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுக்கிறார்
ஓர் இரவு முழுவதும் ஜெபித்தபின், இயேசு பன்னிரண்டு அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுக்கிறார்.
மாற்கு 3:13–19
3:13 பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்கு விருப்பமானவர்களைத் தம்மிடம் வரவழைத்தார்; அவர்கள் அவரிடம் வந்தார்கள்.
14 அப்பொழுது அவர் பன்னிரண்டு நபர்களைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடு இருக்கவும், பிரசங்கம்பண்ணுவதற்காகத் தாம் அவர்களை அனுப்பவும், 15 வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்துவதற்கு அவர்கள் அதிகாரம் உள்ளவர்களாக இருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார்.
16 அவர்கள் யாரென்றால், சீமோன், இவனுக்குப் பேதுரு என்று பெயரிட்டார். 17 செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இந்த இவருக்கும் இடிமுழக்க மக்கள் என்று அர்த்தம்கொண்ட பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார், 18 அந்திரேயா, பிலிப்பு, பர்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன்,
19 அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
லூக்கா 6:12–16
6:12 அந்த நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இரவு முழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
13 பொழுதுவிடிந்தபோது, அவர் தம்முடைய சீடர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர்கள் என்று பெயரிட்டார்.
14 அவர்கள் யாரென்றால், பேதுரு என்று தாம் பெயரிட்ட சீமோன், அவனுடைய சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்தொலொமேயு, 15 மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே எனப்பட்ட சீமோன்,
16 யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே.