சீடர்கள் ஓய்வுநாளில் தானியக் கதிர்களைப் பறிக்கிறார்கள்

சீடர்கள் வயல்களில் தானியக் கதிர்களைப் பறிக்கும்போது, பரிசேயர்களுடன் ஓய்வுநாள் குறித்த மற்றொரு சர்ச்சை ஏற்படுகிறது.

அநேகமாக எருசலேமிலிருந்து திரும்பும் வழியில் கலிலேயாவில்

கி.பி. 27 முதல் 29 வரை

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மத்தேயு 12:1–8

12:1 அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் வயல்வழியே போனார்; அவருடைய சீடர்கள் பசியாக இருந்து, கதிர்களைப் பறித்து, சாப்பிடத் தொடங்கினார்கள்.

2 பரிசேயர்கள் அதைக் கண்டு, அவரைப் பார்த்து: இதோ, ஓய்வுநாளில் செய்யக்கூடாததை உம்முடைய சீடர்கள் செய்கிறார்களே என்றார்கள்.

3 அதற்கு அவர்: தாவீதும் அவனோடு இருந்தவர்களும் பசியாக இருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?

4 அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்கள்தவிர வேறு ஒருவரும் புசிக்கக்கூடாத தேவ சமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடு இருந்தவர்களும் புசித்தார்களே. 5 அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலைநாளாக்கினாலும் குற்றமில்லாமல் இருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா? 6 தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

7 பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.

8 மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார்.

மாற்கு 2:23–28

2:23 பின்பு, அவர் ஓய்வுநாளில் வயல்வழியாக நடந்துபோனார்; அவருடைய சீடர்கள் அவரோடு நடந்துபோகும்போது, கதிர்களைச் சாப்பிட தொடங்கினார்கள்.

24 பரிசேயர்கள் அவரைப் பார்த்து: இதோ, ஓய்வுநாளில் செய்யக்கூடாததை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்றார்கள்.

25 அதற்கு அவர்: தாவீதுக்கு உண்டான ஆபத்தில், தானும் தன்னோடு இருந்தவர்களும் பசியாக இருந்தபோது,

26 அவன் அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில் செய்ததை நீங்கள் படித்தது இல்லையா? அவன் தேவனுடைய வீட்டிற்கு சென்று, ஆசாரியர்கள்தவிர வேறு ஒருவரும் சாப்பிடக்கூடாத தேவ சமுகத்தின் அப்பங்களைத் தானும் சாப்பிட்டுத் தன்னோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்றார்.

27 பின்பு அவர்களை நோக்கி: மனிதன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டது;

28 எனவே மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார்.

லூக்கா 6:1–5

6:1 பஸ்கா பண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, இயேசு வயல்வெளியில் நடந்துபோகும்போது, அவருடைய சீடர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித்தின்றார்கள்.

2 பரிசேயர்களில் சிலர் அவர்களை நோக்கி: ஓய்வுநாளில் செய்யக்கூடாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

3 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: தாவீதும் அவனோடுகூட இருந்தவர்களும் பசியாக இருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டிற்கு சென்று, ஆசாரியர்கள்தவிர வேறுயாரும் சாப்பிடக்கூடாத தேவசமூகத்தின் அப்பங்களைக் கேட்டு வாங்கி,

4 தான் சாப்பிட்டதுமல்லாமல், தன்னோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்று சொன்னார்.

5 மேலும் மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார்.

இயேசு ஓய்வுநாளில் சூம்பிய கையைக் குணமாக்குகிறார்

ஜெப ஆலயத்தில் சூம்பிய கையுடைய ஒருவன் குணமாக்கப்படுவது குறித்து, பரிசேயர்களுடன் ஓய்வுநாள் பற்றிய மூன்றாவது சர்ச்சை ஏற்படுகிறது.

கலிலேயாவில்

மத்தேயு 12:9–14

12:9 அவர் அந்த இடத்தைவிட்டுப்போய், அவர்களுடைய ஜெப ஆலயத்திற்கு வந்தார். 10 அங்கே சூம்பின கையையுடைய மனிதன் ஒருவன் இருந்தான். அப்பொழுது, அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வுநாளில் சுகமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள்.

11 அதற்கு அவர்: உங்களில் எந்த மனிதனுக்காவது ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப் பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ?

12 ஆட்டைவிட மனிதனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால், ஓய்வுநாளிலே நன்மை செய்வது நியாயம்தான் என்று சொன்னார். 13 பின்பு அந்த மனிதனைப் பார்த்து: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல சுகமானது.

14 அப்பொழுது, பரிசேயர்கள் வெளியேபோய், அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாக ஆலோசனை செய்தார்கள்.

மாற்கு 3:1–6

3:1 இயேசு மறுபடியும் ஜெப ஆலயத்திற்குச் சென்றார். அங்கே சூம்பின கையையுடைய ஒரு மனிதன் இருந்தான்.

2 அவர் ஓய்வுநாளில் அவனைச் சுகமாக்கினால் அவர்மேல் குற்றஞ்சாட்டலாம் என்று அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

3 அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனிதனைப் பார்த்து: எழுந்து நடுவில் நில் என்று சொல்லி; 4 அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ அல்லது தீமை செய்வதோ, ஜீவனைக் காப்பாற்றுவதோ அல்லது அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் மவுனமாக இருந்தார்கள்.

5 அவர்களுடைய இருதயத்தின் கடினத்தினால் அவர் விசனப்பட்டு, கோபத்துடன் சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனிதனைப் பார்த்து: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மற்றொரு கையைப்போல சுகமானது.

6 உடனே பரிசேயர்கள் புறப்பட்டுப்போய், அவரைக் கொலைசெய்யவேண்டும் என்று, அவருக்கு எதிராக ஏரோதியர்களோடு ஆலோசனைபண்ணினார்கள்.

லூக்கா 6:6–11

6:6 வேறொரு ஓய்வுநாளிலே, அவர் ஜெப ஆலயத்திற்குச் சென்று உபதேசித்தார். அங்கே வலது கை சூம்பின ஒரு மனிதன் இருந்தான்.

7 அப்பொழுது வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் அவரிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கும்படி, ஓய்வுநாளில் சுகமாக்குவாரோ என்று அவரை கவனித்துக்கொண்டிருந்தார்கள்.

8 அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனிதனை நோக்கி: நீ எழுந்து நடுவில் நில் என்றார். அவன் எழுந்து நின்றான்.

9 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ? அல்லது ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ? எது நியாயம் என்று கேட்டு, 10 அவர்களெல்லோரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனிதனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போல குணமானது.

11 அவர்களோ அதிக கோபம் கொண்டு, இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவருக்கொருவர் ஆலோசனைபண்ணினார்கள்.