இயேசு கப்பர்நகூமில் ஒரு நூற்றுக்கதிபதியின் வேலைக்காரனைக் குணமாக்குகிறார்
கிறிஸ்துவின் செல்வாக்கு விரைவாகப் பரவுவதையும், சிறையிலுள்ள யோவான்ஸ்நானன் அனுப்பிய விசாரணையையும் இங்கே காண்கிறோம்.
கி.பி. 27 முதல் 29 வரை
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மத்தேயு 8:5–13
8:5 இயேசு கப்பர்நகூமில் நுழைந்தபோது, நூறு படைவீரர்களுக்குத் தலைவனாகிய ஒருவன் அவரிடத்தில் வந்து:
6 ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே பக்கவாதமாகக் கிடந்து மிகவும் வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
7 அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சுகமாக்குவேன் என்றார். 8 அந்தத் தலைவன் மறுமொழியாக: ஆண்டவரே! நீர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் தகுதியானவன் இல்லை; ஒரு வார்த்தைமட்டும் சொல்லும்; அப்பொழுது என் வேலைக்காரன் சுகமாவான்.
9 நான் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாக இருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற போர்வீரர்களும் உண்டு; நான் ஒருவனைப் போ என்றால் போகிறான், மற்றொருவனை வா என்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய் என்றால் செய்கிறான் என்றான்.
10 இயேசு இதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப்பின்னே வருகிறவர்களைப் பார்த்து: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 11 அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடு பந்தியிருப்பார்கள். 12 ராஜ்யத்தின் பிள்ளைகளோ, வெளியில் உள்ள இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 13 பின்பு இயேசு அந்தத் தலைவனைப் பார்த்து: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அதே மணிநேரத்திலே அவனுடைய வேலைக்காரன் சுகமானான்.
லூக்கா 7:1–10
7:1 இயேசு தம்முடைய வார்த்தைகளையெல்லாம் மக்கள் கேட்கும்படி சொல்லிமுடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார். 2 அங்கே நூறுபேர்கொண்ட படைப்பிரிவின் அதிபதி ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதியால் மரணவேதனைப்பட்டான். 3 அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டும் என்று, அவரைக் கேட்டுக்கொள்ள யூதர்களுடைய ஆலய மூப்பர்களை அவரிடத்தில் அனுப்பினான்.
4 அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைத் தாழ்மையாக வேண்டிக்கொண்டு: நீர் அவனுக்கு இந்த தயவுசெய்கிறதற்கு அவன் தகுதி உடையவனாக இருக்கிறான்.
5 அவன் நம்முடைய மக்களை நேசித்து, நமக்கு ஒரு ஜெப ஆலயத்தையும் கட்டினான் என்றார்கள். 6 அப்பொழுது இயேசு அவர்களோடு போனார். வீட்டிற்கு அருகில் சென்றபோது, அந்த படைஅதிபதி தன் நண்பரை நோக்கி: நீங்கள் இயேசுவிடம்போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் தகுதியானவன் இல்லை; 7 உம்மிடத்திற்கு வர நான் என்னைத் தகுதியானவனாக நினைக்கவில்லை; ஒரு வார்த்தைமட்டும் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சுகம் பெறுவான்.
8 நான் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாக இருந்தாலும், எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கிற போர்வீரர்களும் உண்டு; நான் ஒருவனைப் போ என்றால் போகிறான், மற்றொருவனை வா என்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய் என்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான்.
9 இயேசு இவைகளைக் கேட்டு அவனைக்குறித்து ஆச்சரியப்பட்டு, அவருக்குப் பின்னே வருகிற மக்களைப் பார்த்து: இஸ்ரவேலரிடத்தில் இப்படிப்பட்ட விசுவாசத்தை நான் இதுவரை கண்டதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 10 அனுப்பப்பட்டவர்கள் வீட்டிற்குத் திரும்பிவந்தபோது, வியாதியாகக்கிடந்த வேலைக்காரன் சுகம் பெற்றிருந்ததைக் கண்டார்கள்.
இயேசு நாயீனில் ஒரு விதவையின் மகனை உயிரோடு எழுப்புகிறார்
லூக்கா 7:11–17
7:11 மறுநாளிலே இயேசு நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீடர்களும் திரளான மக்களும் அவரோடு போனார்கள். 12 அவர், அந்த ஊரின் தலைவாசலுக்கு அருகில் வந்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணுவதற்காக கொண்டுவந்தார்கள்; அவன் தன் விதவைத் தாய்க்கு ஒரே மகனாக இருந்தான்; அந்த ஊரில் உள்ள அநேக மக்கள் அவளோடு வந்தார்கள். 13 இயேசு அவளைப் பார்த்து, அவள்மேல் மனமிரங்கி: அழவேண்டாம் என்று சொல்லி, 14 அருகில் வந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்துகொண்டுவந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 15 மரித்தவன் உயிரோடு எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயாரிடம் ஒப்படைத்தார். 16 எல்லோரும் பயந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது மக்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள். 17 இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதும் சுற்றியிருக்கிற பகுதிகள் எல்லாவற்றிலும் பிரசித்தமானது.