யோவான் செய்தி அனுப்புகிறார்; இயேசு அவரைப் புகழ்கிறார்
யோவான்ஸ்நானன் அனுப்பிய செய்தியும், அவரைப் பற்றி இயேசு கூறிய புகழுரையும்.
கலிலேயா
கி.பி. 27 முதல் 29 வரை
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மத்தேயு 11:2–19
11:2 அந்தநேரத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் செயல்களைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து: 3 வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வருவதற்காக நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான்.
4 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடம்போய் அறிவியுங்கள்; 5 குருடர்கள் பார்வையடைகிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது.
6 என்னிடத்தில் இடறலடையாமலிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.
7 அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக்குறித்து மக்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?
8 இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? மெல்லிய உடை அணிந்திருந்த மனிதனையோ? மெல்லிய உடை அணிந்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள்.
9 இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைவிட மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
10 அதெப்படியெனில்:
இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்;
அவன் உமக்குமுன்னேபோய்,
உமது வழியை ஆயத்தம் செய்வான்’ என்று வேதத்தில் எழுதப்பட்டவன் இவன்தான்.
11 பெண்களிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைவிட பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆனாலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாக இருக்கிறவன் அவனைவிட பெரியவனாக இருக்கிறானென்று உங்களுக்கு உண்மையாகவே சொல்லுகிறேன். 12 யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் செய்யப்படுகிறது; பலவந்தம் செய்கிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள். 13 நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் அனைவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் சொன்னதுண்டு. 14 நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.
15 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும்.
16 இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்களுடைய தோழரைப் பார்த்து:
17 உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் நடனமாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாக இருக்கிறது.
18 எப்படியென்றால், யோவான் உபவாசிக்கிறவனாகவும் திராட்சைரசம் குடிக்காதவனாகவும் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன்என்றார்கள்.
19 உண்கிறவராகவும் குடிக்கிறவராகவும் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, உணவுப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனிதன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன் என்கிறார்கள். ஆனாலும், ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.
லூக்கா 7:18–35
7:18 இவைகளையெல்லாம் யோவானுடைய சீடர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து, 19 நீங்கள் இயேசுவினிடத்திற்குப்போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான். 20 அப்படியே அவர்கள் இயேசுவிடம் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடம் அனுப்பினார் என்றார்கள். 21 அந்த நேரத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேக குருடர்களுக்குப் பார்வையளித்தார்.
22 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் போய், பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு சொல்லுங்கள்; பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், காதுகேளாதோர் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது.
23 என்னிடத்தில் என் செயல்களைக்குறித்து சந்தேகமில்லாமல் விசுவாசிக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.
24 யோவானால் அனுப்பப்பட்டவர்கள் போனபின்பு அவர் யோவானைப்பற்றி மக்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசைகின்ற புல்லையோ?
25 இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? விலையுயர்ந்த ஆடை அணிந்த மனிதனையோ? அலங்கார ஆடை அணிந்து சுகபோகமாக வாழ்கிறவர்கள் அரசருடைய மாளிகைகளிலே இருக்கிறார்கள்.
26 இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைவிட உயர்ந்தவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
27 இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்;
அவன் உமக்குமுன்னேபோய்,
உமது வழியை ஆயத்தம்பண்ணுவான்
என்று எழுதிய வாக்கியத்தில் சொல்லப்பட்டவன் இவன்தான்.
28 பெண்களிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைவிட பெரிய தீர்க்கதரிசி ஒருவனும் இல்லை; ஆனாலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாக இருக்கிறவன் அவனைவிட பெரியவனாக இருக்கிறான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
29 யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட வரி வசூலிப்பவர்களும், மக்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதியுள்ளவர் என்று அறிக்கை செய்தார்கள். 30 ஆனால், பரிசேயர்களும் நியாயப்பண்டிதர்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெறாமல் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.
31 மறுபடியும் இயேசு சொன்னது என்னவென்றால்: இந்த வம்சத்தை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாக இருக்கிறார்கள்?
32 சந்தைகளில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காக புல்லாங்குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறைசொல்லுகிற குழந்தைகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.
33 யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சைரசம் குடிக்காதவனுமாக வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள்.
34 மனிதகுமாரன் சாப்பிட வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, சாப்பாட்டுப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனிதன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள்.
35 ஆனாலும் ஞானமானது அதின் குழந்தைகளால் நீதியுள்ளதென்று நிரூபிக்கப்படும் என்றார்.