மக்களின் இரண்டாவது கூட்டம்

கி.மு. 1015

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

1 நாளாகமம் 29:1–19

1 பின்பு தாவீது ராஜா சபையார்கள் எல்லோரையும் நோக்கி: தேவன் தெரிந்துகொண்ட என்னுடைய மகனாகிய சாலொமோன் இன்னும் வாலிபனும் இளைஞனுமாகவும் இருக்கிறான்; செய்யவேண்டிய வேலையோ பெரியது; அது ஒரு மனிதனுக்கு அல்ல, தேவனாகிய யெகோவாவுக்குக் கட்டும் அரண்மனை. 2 நான் என்னாலே முடிந்தவரை என்னுடைய தேவனுடைய ஆலயத்திற்கென்று பொன் வேலைக்குப் பொன்னையும், வெள்ளி வேலைக்கு வெள்ளியையும், வெண்கல வேலைக்கு வெண்கலத்தையும், இரும்பு வேலைக்கு இரும்பையும், மரவேலைக்கு மரத்தையும், பதிக்கப்படத்தக்க கோமேதகக் கற்களையும், பலவர்ணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், பளிங்கு கற்கள் முதலிய கற்களையும் ஏராளமாகச் சேமித்தேன். 3 இன்னும் என்னுடைய தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சேமித்த அனைத்தையும்தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என்னுடைய தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன். 4 அறைகளின் சுவர்களை மூடுவதற்காகவும். பொன்வேலைக்குப் பொன்னும், வெள்ளிவேலைக்கு வெள்ளியும் உண்டாக்கவும், கைவினைக் கலைஞர்கள் செய்யும் வேலை அனைத்திற்காகவும், ஓப்பீரின் தங்கமாகிய மூவாயிரம் தாலந்து தங்கத்தையும், சுத்த வெள்ளியாகிய ஏழாயிரம் தாலந்து வெள்ளியையும் கொடுக்கிறேன். 5 இப்போதும் உங்களில் இன்றையதினம் யெகோவாவுக்குத் தன்னுடைய கைக்காணிக்கைகளைச் செலுத்த மனபூர்வமானவர்கள் யார் என்றான். 6 அப்பொழுது வம்சங்களின் பிரபுக்களும், இஸ்ரவேல் கோத்திரங்களின் பிரபுக்களும், ஆயிரம்பேர்களுக்குத் தலைவர்களும், நூறுபேர்களுக்குத் தலைவர்களும், ராஜாவின் வேலைக்காரர்களாகிய பிரபுக்களும் மனப்பூர்வமாக, 7 தேவனுடைய ஆலயத்து வேலைக்கு ஐயாயிரம் தாலந்து பொன்னையும், பத்தாயிரம் தங்கக்காசையும், பத்தாயிரம் தாலந்து வெள்ளியையும், பதிணெட்டாயிரம் தாலந்து வெண்கலத்தையும், லட்சம் தாலந்து இரும்பையும் கொடுத்தார்கள். 8 யார் கையில் ரத்தினங்கள் இருந்ததோ, அவர்கள் அவைகளையும் யெகோவாவுடைய ஆலயத்துப் பொக்கிஷத்திற்கென்று கெர்சோனியனான யெகியேலின் கையிலே கொடுத்தார்கள். 9 இப்படி மனப்பூர்வமாகக் கொடுத்ததற்காக மக்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடு உற்சாகமாகக் யெகோவாவுக்குக் கொடுத்தார்கள்; தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான்.

10 ஆகையால் தாவீது சபை அனைத்தின் கண்களுக்கு முன்பாகவும் யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் செலுத்திச் சொன்னது: எங்கள் முற்பிதாவாகிய இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, எல்லாக் காலங்களிலும் தேவரீருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. 11 யெகோவாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகள் எல்லாம் உம்முடையவைகள்; யெகோவாவே, ராஜ்ஜியமும் உம்முடையது; தேவரீர், எல்லோருக்கும் தலைவராக உயர்ந்திருக்கிறீர். 12 ஐசுவரியமும் புகழும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சக்தியும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும். 13 இப்போதும் எங்களுடைய தேவனே, நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்கிறோம். 14 இப்படி மனப்பூர்வமாகக் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் யார்? என்னுடைய மக்கள் யார்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம். 15 உமக்கு முன்பாக நாங்கள் எங்களுடைய முன்னோர்கள் எல்லோரைப்போலவும் அந்நியர்களாகவும் வழிப்போக்கர்களாகவும் இருக்கிறோம்; பூமியின்மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல இருக்கிறது; நிலைத்திருப்போம் என்னும் நம்பிக்கையில்லை. 16 எங்களுடைய தேவனாகிய யெகோவாவே, உம்முடைய பரிசுத்த நாமத்திற்கென்று உமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு, நாங்கள் சேமித்திருக்கிற இந்தப் பொருட்களெல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது. 17 என்னுடைய தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிவேன்; இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடு மனப்பூர்வமாகக் கொடுத்தேன்; இப்பொழுது இங்கேயிருக்கிற உம்முடைய மக்களும் உமக்கு மனப்பூர்வமாகக் கொடுப்பதைக் கண்டு சந்தோஷமடைந்தேன். 18 ஆபிரகாம் ஈசாக்கு இஸ்ரவேல் என்னும் எங்கள் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவே, உமது மக்களின் இருதயத்தில் உண்டான இந்த சிந்தையையும் நினைவையும் என்றைக்கும் காத்து, அவர்கள் இருதயத்தை உமக்கு நேராக்கியருளும். 19 என்னுடைய மகனாகிய சாலொமோன் உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய சாட்சிகளையும், உம்முடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்படிக்கும், இவைகள் எல்லாவற்றையும் செய்து, நான் ஆயத்தம்செய்த இந்த அரண்மனையைக் கட்டும்படிக்கும், அவனுக்கு உத்தம இருதயத்தைத் தந்தருளும் என்றான்.

சங்கீதங்கள் 72

1 தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும்,

ராஜாவின் மகனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும்.

2 அவர் உம்முடைய மக்களை நீதியோடும்,

உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார்.

3 மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைத் தரும்,

மேடுகள் நீதியின் விளைவோடு இருக்கும்.

4 மக்களில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து,

ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார்.

5 சூரியனும் சந்திரனும் உள்ளவரை, அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள்.

6 புல் அறுக்கப்பட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார்.

7 அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்;

சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.

8 ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும்,

நதி துவங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.

9 வனாந்திரத்தார்கள் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்;

அவருடைய எதிரிகள் மண்ணை நக்குவார்கள்.

10 தர்ஷீசின் ராஜாக்களும் மத்திய தரைக் கடல் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்;

ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.

11 எல்லா ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்;

எல்லா தேசங்களும் அவரைச் சேவிப்பார்கள்.

12 கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.

13 எளியவனுக்கும், தேவையுள்ளவனுக்கும் அவர் இரங்கி,

எளியவர்களின் ஆத்துமாக்களை விடுவிப்பார்.

14 அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்;

அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாக இருக்கும்.

15 அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்;

அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்செய்யப்படும்,

எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார்.

16 பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்;

அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்;

பூமியின் புல்லைப்போல நகரத்தார்கள் செழித்தோங்குவார்கள்.

17 அவருடைய பெயர் என்றென்றைக்கும் இருக்கும்;

சூரியன் இருக்கும்வரை அவருடைய பெயரும் புகழும் தொடர்ந்து நிலைக்கும்;

மனிதர்கள் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்,

எல்லா தேசங்களும் அவரைப் பாக்கியமுடையவர்கள் என்று வாழ்த்துவார்கள்.

18 இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக;

அவரே அதிசயங்களைச் செய்கிறவர்.

19 அவருடைய மகிமைபொருந்திய நாமத்திற்கு என்றென்றைக்கும் துதி உண்டாவதாக;

பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக.

ஆமென், ஆமென்.

20 ஈசாயின் மகனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது.

1 நாளாகமம் 29:20–25

20 அதின்பின்பு தாவீது சபையார் அனைத்தையும் நோக்கி: இப்போது உங்களுடைய தேவனாகிய யெகோவாவை ஸ்தோத்தரியுங்கள் என்றான்; அப்பொழுது சபையார்கள் எல்லோரும் தங்கள் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவை ஸ்தோத்தரித்து, தலை குனிந்து யெகோவாவையும் ராஜாவையும் பணிந்துகொண்டு.

21 யெகோவாவுக்குப் பலியிட்டு, மறுநாளிலே சர்வாங்க தகனபலிகளாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்குரிய பானபலிகளையும் இஸ்ரவேல் அனைத்திற்காகவும் யெகோவாவுக்குச் செலுத்தினார்கள். 22 அவர்கள் அன்றையதினம் மிகுந்த சந்தோஷத்தோடு யெகோவாவுக்கு முன்பாக சாப்பிட்டு குடித்து, தாவீதின் மகனாகிய சாலொமோனை இரண்டாம் முறை ராஜாவாக்கி, யெகோவாவுக்கு முன்பாக அவனை அதிபதியாகவும், சாதோக்கை ஆசாரியனாகவும் அபிஷேகம்செய்தார்கள். 23 அப்படியே சாலொமோன் தன்னுடைய தகப்பனாகிய தாவீதின் இடத்திலே யெகோவாவுடைய சிங்காசனத்தில் ராஜாவாக அமர்ந்திருந்து பாக்கியசாலியாக இருந்தான்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள். 24 எல்லா பிரபுக்களும் பெலசாலிகளும் தாவீது ராஜாவினுடைய எல்லா மகன்களோடும் ராஜாவாகிய சாலொமோனுக்கு அடங்கியிருந்தார்கள். 25 இஸ்ரவேலர்கள் எல்லோரும் காணக் யெகோவா சாலொமோனை மிகவும் பெரியவனாக்கி, முன்பே இஸ்ரவேலில் ராஜாவான ஒருவனுக்கும் இல்லாமலிருந்த ராஜரிக மகத்துவத்தை அவனுக்குக் கட்டளையிட்டார்.