சாலொமோனுக்குத் தாவீதின் கட்டளை
கி.மு. 1015
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 தாவீது மரணமடையும் காலம் நெருங்கியபோது, அவன் தன்னுடைய மகனாகிய சாலொமோனுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது: 2 நான் பூமியில் உள்ள யாவரும் மரிப்பதுப் போல மரிக்கப் போகிறேன்; நீ திடன்கொண்டு தைரியமானவனாக இரு. 3 நீ என்ன செய்தாலும், நீ எங்கே போனாலும், எல்லாவற்றிலும் புத்திசாலியாக இருப்பதற்கும், யெகோவா என்னைக் குறித்து: உன்னுடைய பிள்ளைகள் தங்களுடைய முழு இதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் எனக்கு முன்பாக உண்மையாக நடக்கும்படித் தங்கள் தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கத்தக்க ஆண் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்ன தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்துவதற்கும், 4 மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி, நீ உன்னுடைய தேவனாகிய யெகோவாவுடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும்படி அவருடைய கட்டளைகளைக் காப்பாயாக. 5 செருயாவின் மகனாகிய யோவாப், இஸ்ரவேலின் இரண்டு தளபதிகளாகிய நேரின் மகன் அப்னேருக்கும், ஏத்தேரின் மகன் அமாசாவுக்கும் செய்த காரியத்தினால் எனக்குச் செய்த குற்றத்தை நீ அறிந்திருக்கிறாயே; அவன் அவர்களைக் கொன்று, சமாதானகாலத்திலே யுத்தகாலத்து இரத்தத்தைச் சிந்தி, யுத்தகாலத்து இரத்தத்தைத் தன்னுடைய இடுப்பிலுள்ள வாரிலும் தன்னுடைய கால்களில் இருந்த காலணிகளிலும் சிந்தவிட்டானே. 6 ஆகையால் உன்னுடைய ஞானத்தின்படியே நீ செய்து, அவனுடைய நரைமுடி சமாதானமாகப் பாதாளத்தில் இறங்கவிடாமலிரு. 7 கீலேயாத்தியனான பர்சிலாயியின் மகன்களுக்குத் தயவுசெய்வாயாக; அவர்கள் உன்னுடைய பந்தியிலே சாப்பிடுகிறவர்களுடன் இருப்பார்களாக; உன்னுடைய சகோதரனாகிய அப்சலோமுக்கு முன்பாக நான் ஓடிப்போகும்போது, அவர்கள் என்னை ஆதரித்தார்கள். 8 மேலும் பகூரிம் ஊரைச்சேர்ந்த பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயி உன்னிடம் இருக்கிறான்; நான் மகனாயீமுக்குப் போகிற நாளிலே, அவன் என்னை மிகவும் மோசமாக சபித்தான்; ஆனாலும் அவன் யோர்தானிலே எனக்கு எதிரே வந்ததால்: நான் உன்னைப் பட்டயத்தாலே கொன்றுபோடுவதில்லை என்று யெகோவாமேல் அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தேன். 9 ஆனாலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று நினைக்காதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமுடியை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கச்செய்ய, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான்.
தாவீதின் கடைசி வார்த்தைகள்
1 தாவீதின் கடைசி வார்த்தைகள்:
“மேன்மையாக உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று,
இஸ்ரவேலின் சங்கீதங்களை இனிமையாகப் பாடின
ஈசாயின் மகனான தாவீது என்னும் மனிதன் சொல்லுகிறது என்னவென்றால்;
2 யெகோவாவுடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்;
அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.
3 இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர்
எனக்குச் சொல்லி உரைத்ததாவது:
நீதிபதியாக மனிதர்களை ஆட்சி செய்து,
தெய்வபயத்தோடு ஆளுகிறவர் இருப்பார்.
4 அவர் காலையில் மேகம் இல்லாமல் உதித்து,
மழைக்குப்பின்பு தன்னுடைய வெளிச்சத்தினால்
புல்லை பூமியிலிருந்து முளைக்கச்செய்கிற
சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார்.
5 என்னுடைய வீடு தேவனிடம் இப்படி இருக்காதோ?
அனைத்தும் தீர்மானித்திருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை
என்னுடன் அவர் செய்திருக்கிறார்;
ஆதலால் என்னுடைய எல்லா இரட்சிப்பும்
எல்லா வாஞ்சையும் பெருகச்செய்யாமல் இருப்பாரோ?
6 தீயவர்கள் அனைவரும், கையினால் பிடிக்கப்படமுடியாததாக
எறிந்துபோடப்படவேண்டிய முள்ளுக்குச் சமானமானவர்கள்.
7 அவைகளை ஒருவன் தொடப்போனால்,
இரும்பாலான ஆயுதத்தையும் ஈட்டிப்பிடியையும் இறுகப் பிடித்துக்கொள்ளவேண்டும்;
அவைகள் இருக்கிற இடத்திலேயே அக்கினியால் முழுவதும் சுட்டெரிக்கப்படும்” என்றான்.
தாவீதின் மரணம்
26 இவ்விதமாக ஈசாயின் மகனாகிய தாவீது இஸ்ரவேல் அனைத்திற்கும் ராஜாவாக இருந்தான். 27 அவன் இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பது வருடங்கள்; எப்ரோனிலே ஏழு வருடங்களும், எருசலேமிலே முப்பத்துமூன்று வருடங்களும் ராஜாவாக இருந்தான். 28 அவன் தீர்க்காயுசும் ஐசுவரியமும் மகிமையுமுள்ளவனாக, நல்ல முதிர்வயதிலே மரணமடைந்தபின்பு, அவனுடைய மகனாகிய சாலொமோன் அவனுடைய இடத்திலே ஆட்சிசெய்தான். 29 தாவீது ராஜாவினுடைய ஆரம்பம்முதல் கடைசிவரை செய்த எல்லா செயல்களும், அவன் அரசாண்ட விபரமும், அவனுடைய வல்லமையும், அவனுக்கும் இஸ்ரவேலுக்கும், அந்தந்த தேசங்களின் ராஜ்ஜியங்கள் அனைத்திற்கும் நடந்த காலசம்பவங்களும், 30 தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் வரலாற்று புத்தகத்திலும், தீர்க்கதரிசியாகிய நாத்தானின் வரலாற்று புத்தகத்திலும், தீர்க்கதரிசியாகிய காத்தின் வரலாற்று புத்தகத்திலும் எழுதியிருக்கிறது.
10 பின்பு தாவீது தன்னுடைய முன்னோர்களோடு மரணமடைந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். 11 தாவீது இஸ்ரவேலை அரசாட்சி செய்த நாட்கள் 40 வருடங்கள்; அவன் எப்ரோனில் 7 வருடங்களும், எருசலேமில் 33 வருடங்களும் ஆட்சிசெய்தான்.