காலப்பகுதி 5: சாலொமோனின் ஆட்சி
பகுதி 1: ஆலயம் பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு முன் சாலொமோனின் ஆட்சி
கிபியோனில் சாலொமோனின் பலியும் அவரது தீர்ப்பும்
கிபியோனில் சாலொமோனின் பலி. சாலொமோனின் தீர்ப்பு. அதோனியாவின் மரணம். ஆதாத் திரும்பி வருகிறார்.
கி.மு. 1015
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
12 சாலொமோன் தன்னுடைய தகப்பனாகிய தாவீதுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான்; அவனுடைய அரசாட்சி மிகவும் உறுதிப்பட்டது.
1 தாவீதின் மகனாகிய சாலொமோன் தன் ராஜ்ஜியத்தில் பலப்பட்டான்; அவனுடைய தேவனாகிய யெகோவா அவனோடு இருந்து அவனை மிகவும் பெரியவனாக்கினார்.
3 சாலொமோன் யெகோவாவை நேசித்து, தன்னுடைய தகப்பனாகிய தாவீதின் கட்டளைகளில் நடந்தான்; ஆனாலும் அவன் மேடைகளிலே பலியிட்டுத் தூபம்காட்டி வந்தான்.
2 சாலொமோன், இஸ்ரவேலில் உள்ள ஆயிரம்பேருக்கு அதிபதிகளோடும், நூறுபேருக்கு அதிபதிகளோடும், நியாயாதிபதிகளோடும், இஸ்ரவேல் எங்குமிருக்கிற வம்சங்களின் தலைவர்களாகிய அனைத்துப் பிரபுக்களோடும் பேசி, 3 அவனும் அவனோடுகூட சபையார் அனைவரும், கிபியோனிலிருக்கிற மேடைக்குப் போனார்கள். 4 தாவீது தேவனுடைய பெட்டிக்கு எருசலேமிலே கூடாரம்போட்டு ஆயத்தம்செய்த இடத்திற்குக் கீரியாத்யாரீமிலிருந்து அதைக் கொண்டுவந்தான்; யெகோவாவின் தாசனாகிய மோசே வனாந்திரத்திலே செய்த தேவனுடைய ஆசரிப்புக்கூடாரம் அங்கே இருந்தது. 5 ஊரின் மகனாகிய ஊரியின் மகன் பெசலெயேல் உண்டாக்கிய வெண்கலப் பலிபீடமும் அங்கே யெகோவாவின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருந்தது; சாலொமோனும் சபையாரும் அதை நாடிப்போனார்கள். 6 அங்கே சாலொமோன் ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் யெகோவாவின் சந்நிதியிலிருக்கிற வெண்கலப் பலிபீடத்தின்மேல் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி பலியிட்டான்.
5 கிபியோனிலே யெகோவா சாலொமோனுக்கு இரவில் கனவில் தரிசனமாகி: நீ விரும்புவதை என்னிடம் கேள் என்று தேவன் சொன்னார். 6 அதற்கு சாலொமோன்: என்னுடைய தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியான் உம்மைப்பற்றி உண்மையும் நீதியும் செம்மையான இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடந்தபடியே தேவரீர் அவருக்குப் பெரிய கிருபைசெய்து, அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து, இந்த நாளில் இருக்கிறபடியே அவருடைய சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற ஒரு மகனை அவருக்குத் தந்தீர். 7 இப்போதும் என்னுடைய தேவனாகிய யெகோவாவே, தேவரீர் உமது அடியேனை என்னுடைய தகப்பனாகிய தாவீதின் இடத்திலே ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்குவரத்து அறியாத சிறுபிள்ளையாக இருக்கிறேன். 8 நீர் தெரிந்துகொண்டதும் மிகுதியான எண்ணிக்கைக்கு அடங்காததும் கணக்கில் சேராததுமான திரளான மக்களாகிய உமது மக்களின் நடுவில் அடியேன் இருக்கிறேன். 9 ஆகையால் உமது மக்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று பகுத்தறியவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; மிகுதியாக இருக்கிற உமது மக்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான். 10 சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்குப் பிரியமான விண்ணப்பமாக இருந்தது. 11 ஆகையால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேட்காமலும், ஐசுவரியத்தைக் கேட்காமலும், உன்னுடைய எதிரிகளின் உயிரைக் கேட்காமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிப்பதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு கேட்டுக்கொண்டதால், 12 உன்னுடைய வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்கு இணையானவன் உனக்குமுன்பு இருந்ததுமில்லை, உனக்கு இணையானவன் உனக்குப்பின்பு எழும்புவதுமில்லை. 13 இதுவுமில்லாமல், நீ கேட்காத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன்னுடைய நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்கு இணையானவன் இருப்பதில்லை. 14 உன்னுடைய தகப்பனாகிய தாவீது நடந்தது போல, நீயும் என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய நியமங்களையும் கைக்கொண்டு, என்னுடைய வழிகளில் நடந்தால், உன்னுடைய நாட்களையும் நீடித்திருக்கச்செய்வேன் என்றார். 15 சாலொமோனுக்கு தூக்கம் தெளிந்தபோது, அது கனவு என்று அறிந்தான்; அவன் எருசலேமுக்கு வந்து, யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக நின்று, சர்வாங்க தகனபலிகளை செலுத்தி, சமாதானபலிகளைச் செலுத்தி, தன்னுடைய வேலைக்காரர்கள் எல்லோருக்கும் விருந்தளித்தான்.
16 அப்பொழுது வேசிகளான இரண்டு பெண்கள் ராஜாவிடம் வந்து, அவனுக்கு முன்பாக நின்றார்கள். 17 அவர்களில் ஒருத்தி: என்னுடைய எஜமானனே, நானும் இந்த பெண்ணும் ஒரே வீட்டிலே குடியிருக்கிறோம்; நான் இவளோடு வீட்டிலிருக்கும்போது ஆண்பிள்ளை பெற்றேன். 18 நான் பிள்ளை பெற்ற மூன்றாம் நாளிலே, இந்த பெண்ணும் ஆண்பிள்ளை பெற்றாள்; நாங்கள் ஒன்றாக இருந்தோம், எங்கள் இருவரையும் தவிர, வீட்டுக்குள்ளே வேறொருவரும் இல்லை. 19 இரவு தூக்கத்திலே இந்த பெண் தன்னுடைய பிள்ளையின்மேல் புரண்டுபடுத்ததால் அது செத்துப்போனது. 20 அப்பொழுது, உமது அடியாள் தூங்கும்போது, இவள் நடுஇரவில் எழுந்து, என்னுடைய பக்கத்திலே கிடக்கிற என்னுடைய பிள்ளையை எடுத்து, தன்னுடைய மார்பிலே கிடத்திக்கொண்டு, செத்த தன்னுடைய பிள்ளையை எடுத்து, என்னுடைய மார்பிலே கிடத்திவிட்டாள். 21 என்னுடைய பிள்ளைக்குப் பால்கொடுக்கக் காலையில் நான் எழுந்தபோது, அது இறந்து கிடந்தது; பொழுது விடிந்தபின்பு நான் அதை உற்றுப்பார்க்கும்போது, அது நான் பெற்ற பிள்ளை இல்லை என்று கண்டேன் என்றாள். 22 அதற்கு மற்ற பெண்: அப்படியல்ல, உயிரோடு இருக்கிறது என்னுடைய பிள்ளை, செத்தது உன்னுடைய பிள்ளை என்றாள். இவளோ: இல்லை, செத்தது உன்னுடைய பிள்ளை, உயிரோடு இருக்கிறது என்னுடைய பிள்ளை என்றாள்; இப்படி ராஜாவிற்கு முன்பாக வாதாடினார்கள். 23 அப்பொழுது ராஜா: உயிரோடு இருக்கிறது என்னுடைய பிள்ளை, செத்தது உன்னுடைய பிள்ளை என்று இவள் சொல்லுகிறாள்; அப்படியல்ல, செத்தது உன்னுடைய பிள்ளை, உயிரோடு இருக்கிறது என்னுடைய பிள்ளை என்று அவள் சொல்லுகிறாள் என்று சொல்லி, 24 ஒரு பட்டயத்தைக் கொண்டுவாருங்கள் என்றான்; அவர்கள் ஒரு பட்டயத்தை ராஜாவிடம் கொண்டுவந்தார்கள். 25 ராஜா உயிரோடு இருக்கிற பிள்ளையை இரண்டாகப் பிளந்து, பாதியை இவளுக்கும் பாதியை அவளுக்கும் கொடுங்கள் என்றான். 26 அப்பொழுது உயிரோடு இருக்கிற பிள்ளையின் தாய், தன்னுடைய பிள்ளைக்காக அவள் இருதயம் துடித்ததால், ராஜாவை நோக்கி: ஐயோ, என்னுடைய எஜமானனே, உயிரோடு இருக்கிற பிள்ளையைக் கொல்லவேண்டாம்; அதை அவளுக்கே கொடுத்துவிடும் என்றாள்; மற்றவள் அது எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம், பிளந்து போடுங்கள் என்றாள். 27 அப்பொழுது ராஜா உயிரோடு இருக்கிற பிள்ளையைக் கொல்லாமல், அவளுக்குக் கொடுத்துவிடுங்கள்; அவளே அதின் தாய் என்றான். 28 ராஜா தீர்த்த இந்த நியாயத்தை இஸ்ரவேலர்கள் எல்லோரும் கேள்விப்பட்டு, நியாயம் விசாரிப்பதற்கு தேவன் அருளின ஞானம் ராஜாவிற்கு உண்டென்று கண்டு, அவனுக்குப் பயந்தார்கள்.
13 இப்படி சாலொமோன் கிபியோனிலிருக்கிற மேட்டிற்குப் போய், ஆசரிப்புக்கூடாரத்தின் சந்நிதியிலிருந்து எருசலேமுக்கு வந்து, இஸ்ரவேலை ஆட்சிசெய்தான்.
13 ஆகீத்தின் மகனாகிய அதோனியா சாலொமோனின் தாயாகிய பத்சேபாளிடம் வந்தான். நீ சமாதானமாக வருகிறாயா என்று அவள் கேட்டதற்கு: சமாதானமாகத்தான் வருகிறேன் என்றான். 14 பின்பு அவன்: உம்மோடு நான் பேசவேண்டிய ஒரு காரியம் இருக்கிறது என்றான். அதற்கு அவள்: சொல் என்றாள். 15 அப்பொழுது அவன்: ராஜ்ஜியம் என்னுடையதாக இருந்தது என்றும், நான் அரசாளுவதற்கு இஸ்ரவேலர்கள் எல்லோரும் என்னை எதிர்பார்த்தார்கள் என்றும் நீர் அறிவீர்; ஆனாலும் அரசாட்சி என்னைவிட்டுத் தாண்டி, என்னுடைய சகோதரனுடையதானது; யெகோவாவால் அது அவருக்குக் கிடைத்தது. 16 இப்பொழுது நான் உம்மிடம் ஒரு விண்ணப்பத்தைக் கேட்கிறேன்; அதை எனக்கு மறுக்கவேண்டாம் என்றான். அவள்: சொல் என்றாள். 17 அப்பொழுது அவன்: ராஜாவாகிய சாலொமோன் உம்முடைய சொல்லை மறுப்பதில்லை; சூனேம் ஊரைச்சேர்ந்த அபிஷாகை எனக்கு அவர் திருமணம் செய்துகொடுக்க, அவரோடு பேசும்படி வேண்டுகிறேன் என்றான். 18 அதற்கு பத்சேபாள்; நல்லது, நான் உனக்காக ராஜாவிடம் பேசுவேன் என்றாள். 19 பத்சேபாள் அதோனியாவுக்காக ராஜாவாகிய சாலொமோனிடம் பேசும்படி போனாள்; அப்பொழுது ராஜா எழுந்து, அவளுக்கு எதிரேவந்து அவளை வணங்கி, தன்னுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, ராஜாவின் தாயார் தன்னுடைய வலதுபுறமாக உட்கார அவளுக்கு ஒரு இருக்கையை வைத்தான். 20 அப்பொழுது அவள்: நான் உம்மிடம் ஒரு சிறிய விண்ணப்பத்தைக் கேட்க விரும்புகிறேன்; எனக்கு அதை மறுக்கவேண்டாம் என்றாள். அதற்கு ராஜா: என்னுடைய தாயாரே, கேளும்; நான் உமக்கு மறுப்பதில்லை என்றான். 21 அப்பொழுது அவள்: சூனேம் ஊரைச்சேர்ந்த அபிஷாகை உம்முடைய சகோதரனாகிய அதோனியாவுக்குத் திருமணம் செய்துகொடுக்கவேண்டும் என்றாள். 22 ராஜாவாகிய சாலொமோன் தன்னுடைய தாயாருக்கு மறுமொழியாக: நீர் சூனேம் ஊரைச்சேர்ந்த அபிஷாகை அதோனியாவுக்கு ஏன் கேட்கிறாய்? அப்படியானால் ராஜ்ஜியபாரத்தையும் அவனுக்குக் கேளும்; அவன் எனக்கு மூத்த சகோதரன்; அவனுக்கும் ஆசாரியனாகிய அபியத்தாருக்கும் செருயாவின் மகன் யோவாபுக்குமே அதைக் கேளும் என்றான். 23 பின்பு சாலொமோன் ராஜா: அதோனியா இந்த வார்த்தையைத் தன்னுடைய உயிருக்குச் சேதம் உண்டாக்கும்படிச் சொல்லாமலிருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யட்டும் என்று யெகோவா மேல் ஆணையிட்டு, 24 இப்போதும் இன்றைக்கு அதோனியா கொலை செய்யப்படுவான் என்று என்னை உறுதிப்படுத்தினவரும், என்னை என்னுடைய தகப்பனாகிய தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கச்செய்து, தாம் சொன்னபடி எனக்கு வீட்டைக் கட்டினவருமாகிய யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று சொல்லி, 25 ராஜாவாகிய சாலொமோன் யோய்தாவின் மகன் பெனாயாவுக்குக் கட்டளைக் கொடுத்து அனுப்பினான்; பெனாயா அதோனியாவைக் கண்டுபிடித்து அவனைக் கொன்றுபோட்டான். 26 ராஜா: ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: நீ உன்னுடைய நிலங்கள் இருக்கிற ஆனதோத்திற்குப் போய்விடு; நீ மரணத்திற்குரியவனாக இருந்தும், நீ என்னுடைய தகப்பனாகிய தாவீதுக்கு முன்பாகக் யெகோவாவாகிய ஆண்டவருடைய பெட்டியைச் சுமந்ததாலும், என்னுடைய தகப்பன் அநுபவித்த உபத்திரவத்தையெல்லாம் நீ கூட அநுபவித்ததாலும், இன்றைய தினம் நான் உன்னைக் கொலை செய்யமாட்டேன் என்றான். 27 அப்படியே யெகோவா சீலோவிலே ஏலியின் வீட்டாரைக்குறித்துச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாக, சாலொமோன் அபியத்தாரைக் யெகோவாவுடைய ஆசாரியனாக இல்லாதபடித் தள்ளிப்போட்டான். 28 நடந்த இந்தச் செய்தி யோவாபுக்கு வந்தபோது, அவன் யெகோவாவுடைய கூடாரத்திற்கு ஓடிப்போய், பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான்; யோவாப் அப்சலோமின் பக்கம் சாயாதவனாக இருந்தும், அதோனியாவின் பக்கம் சாய்ந்திருந்தான். 29 யோவாப் யெகோவாவின் கூடாரத்திற்கு ஓடிப்போனான் என்றும், இதோ, பலிபீடத்தின் அருகில் நிற்கிறான் என்றும், ராஜாவாகிய சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டபோது, சாலொமோன் யோய்தாவின் மகனாகிய பெனாயாவை அனுப்பி, நீ போய் அவனைக் கொலைசெய் என்றான். 30 பெனாயா யெகோவாவின் கூடாரத்திற்குப் போய், அவனைப் பார்த்து: வெளியே வா என்று ராஜா சொல்லுகிறார் என்றான். அதற்கு அவன்: நான் வரமாட்டேன்; இங்கேயே சாவேன் என்றான்; ஆகையால் பெனாயா ராஜாவிடம் போய், யோவாப் இன்னபடி சொல்லி, இன்னபடி எனக்கு பதில் கொடுத்தான் என்று மறுசெய்தி சொன்னான். 31 அப்பொழுது ராஜா அவனை நோக்கி: அவன் சொன்னபடியே நீ செய்து, அவனைக் கொன்று, அடக்கம்செய்து, இவ்விதமாக யோவாப் காரணமில்லாமல் சிந்தின இரத்தத்தை என்னைவிட்டும் என்னுடைய தகப்பன் வீட்டைவிட்டும் விலக்கிப்போடு. 32 அவன் தன்னைவிட நீதியும் நற்குணமும் உள்ள இரண்டு பேர்களாகிய நேரின் மகன் அப்னேர் என்னும் இஸ்ரவேலின் படைத்தலைவனையும், ஏத்தேரின் மகன் அமாசா என்னும் யூதாவின் படைத்தலைவனையும் தாக்கி, என்னுடைய தகப்பனாகிய தாவீதுக்குத் தெரியாமல் அவர்களைப் பட்டயத்தால் கொன்ற அவனுடைய இரத்தப்பழியைக் யெகோவா அவனுடைய தலையின்மேல் திரும்பச்செய்வாராக. 33 இப்படியே அவர்களுடைய இரத்தப் பழி என்றும் யோவாபுடைய தலையின்மேலும், அவனுடைய சந்ததியினர்களின் தலையின்மேலும் திரும்பவும், தாவீதுக்கும் அவருடைய சந்ததியினர்களுக்கும் அவருடைய வீட்டார்களுக்கும் அவர் சிங்காசனத்திற்கும் என்றென்றைக்கும் யெகோவாவாலே சமாதானம் உண்டாயிருக்கவும்கடவது என்றான். 34 அப்படியே யோய்தாவின் மகன் பெனாயா போய், அவனைத் தாக்கி அவனைக் கொன்றுபோட்டான்; அவன் வனாந்திரத்திலிருக்கிற தன்னுடைய வீட்டிலே அடக்கம் செய்யப்பட்டான். 35 அவனுக்குப் பதிலாக ராஜா யோய்தாவின் மகன் பெனாயாவை இராணுவத்தின்மேலும், ஆசாரியனாகிய சாதோக்கை அபியத்தாரின் இடத்திலும் வைத்தான்.
36 பின்பு ராஜா சீமேயியை அழைத்து, அவனை நோக்கி: நீ எருசலேமிலே உனக்கு ஒரு வீட்டைக்கட்டி, அங்கேயிருந்து எங்கேயாவது வெளியே போகாமல், அங்கேயே குடியிரு. 37 நீ வெளியே போய்க் கீதரோன் ஆற்றைக் கடக்கும் நாளில், நீ சாவாய்; அப்பொழுது உன்னுடைய இரத்தப்பழி உன்னுடைய தலையின்மேல் இருக்கும் என்பதை நீ நிச்சயமாக அறிந்துகொள் என்றான். 38 சீமேயி ராஜாவைப் பார்த்து: அது நல்ல வார்த்தை; ராஜாவாகிய என்னுடைய ஆண்டவன் சொன்னபடியே, உமது அடியானாகிய நான் செய்வேன் என்று சொல்லி, சீமேயி அநேகநாட்கள் எருசலேமிலே குடியிருந்தான்.
21 தாவீது தன்னுடைய முன்னோர்களோடு மரணமடைந்தான் என்றும், படைத்தலைவனாகிய யோவாப் இறந்துபோனான் என்றும், எகிப்திலே ஆதாத் கேள்விப்பட்டபோது, ஆதாத் பார்வோனை நோக்கி: நான் என்னுடைய சொந்த நாட்டிற்குப்போக என்னை அனுப்பவேண்டும் என்றான். 22 அதற்குப் பார்வோன்: இதோ, நீ உன்னுடைய சொந்தநாட்டிற்குப்போக விரும்புவதற்கு, என்னிடத்தில் உனக்கு என்ன குறை இருக்கிறது என்றான்; அதற்கு அவன்: ஒரு குறையும் இல்லை; இருந்தாலும் என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான்.
4 அப்படியே ராஜா பலியிட கிபியோனுக்குப் போனான்; அது பெரிய மேடையாக இருந்தது; அந்தப் பலிபீடத்தின்மேல் சாலொமோன் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான்.
7 அன்று இரவிலே தேவன் சாலொமோனுக்குக் காட்சியளித்து: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார். 8 சாலொமோன் தேவனை நோக்கி: தேவரீர் என் தகப்பனாகிய தாவீதுக்குப் பெரிய கிருபை செய்து, என்னை அவனுடைய இடத்திலே ராஜாவாக்கினீர். 9 இப்போதும் தேவனாகிய யெகோவாவே, நீர் என் தகப்பனாகிய தாவீதுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தம் உறுதிப்படுவதாக; தேவரீர் பூமியின் தூளைப்போன்ற ஏராளமான மக்களின்மேல் என்னை ராஜாவாக்கினீர். 10 இப்போதும் நான் இந்த மக்களுக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய மக்களை நியாயம் விசாரிக்கத் தகுதியுள்ளவன் யார் என்றான். 11 அப்பொழுது தேவன் சாலொமோனை நோக்கி: இந்த விருப்பம் உன் இருதயத்தில் இருந்ததாலும், நீ ஐசுவரியத்தையும் சொத்துக்களையும் கனத்தையும், உன் எதிரிகளின் உயிரையும், நீடித்த ஆயுளையும் கேட்காமல், நான் உன்னை அரசாளச்செய்த என் மக்களை நியாயம் விசாரிப்பதற்கேற்ற ஞானத்தையும் விவேகத்தையும் நீ கேட்டதாலும், 12 ஞானமும் விவேகமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்கு முன்னும் பின்னும் இருந்த ராஜாக்களுக்கு இல்லாத ஐசுவரியத்தையும் சொத்துக்களையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார்.