ஆலயத்தைக் கட்ட சாலொமோன் ஆயத்தமாகிறார்

ஆலயத்தைக் கட்டுவதற்கான ஆயத்தங்கள். சீமேயியின் மரணம். சாலொமோனின் திருமணம்.

கி.மு. 1015

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

1 இராஜாக்கள் 4:1–25

1 ராஜாவாகிய சாலொமோன் அனைத்து இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக இருந்தான். 2 அவனுக்கு இருந்த அதிகாரிகள்: சாதோக்கின் மகனாகிய அசரியா ஆசாரியனாக இருந்தான். 3 சீசாவின் மகனாகிய ஏலிகோரேப்பும் அகியாவும் எழுத்தர்களாக இருந்தார்கள்; அகிலூதின் மகன் யோசபாத் மந்திரியாக இருந்தான். 4 யோய்தாவின் மகன் பெனாயா படைத்தலைவனும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்களுமாக இருந்தார்கள். 5 நாத்தானின் மகன் அசரியா அலுவலர்களின் தலைவனாக இருந்தான்; நாத்தானின் மகன் சாபூத் ராஜாவின் ஆசாரியனும் நண்பனாகவும் இருந்தான். 6 அகீஷார் அரண்மனை அதிகாரியும், அப்தாவின் மகன் அதோனீராம் கட்டாய வேலை செய்கிறவர்களின் அதிகாரியாக இருந்தான். 7 ராஜாவிற்கும் அவனுடைய அரண்மனையில் உள்ளவர்களுக்கும் தேவையான உணவுப்பொருள்களைச் சேகரிக்கிற பன்னிரண்டு அதிகாரிகள் சாலொமோனுக்கு இஸ்ரவேல் தேசமெங்கும் வைக்கப்பட்டிருந்தார்கள்; அவர்கள் மாதத்திற்கு ஒவ்வொருவராக வருடம் முழுவதும் பராமரித்துவந்தார்கள். 8 அவர்களின் பெயர்கள்: ஊரின் மகன், இவன் எப்பிராயீம் மலைத் தேசத்தில் இருந்தான். 9 தேக்கேரின் மகன், இவன் மாகாத்சிலும், சால்பீமிலும், பெத்ஷிமேசிலும், ஏலோன்பெத்தானானிலும் இருந்தான். 10 ஏசேதின் மகன், இவன் அறுபோத்தில் இருந்தான்; சோக்கோவும் எப்பேர் பூமியனைத்தும் இவனுடைய விசாரிப்பில் இருந்தது. 11 அபினதாபின் மகன், இவன் தோரின் நாட்டுப்புறம் அனைத்திற்கும் அதிகாரியாக இருந்தான்; சாலொமோனின் மகளாகிய தாபாத் இவனுக்கு மனைவியாக இருந்தாள். 12 அகிலூதின் மகனாகிய பானா, இவன் விசாரிப்பில், தானாகும், மெகிதோவும், சர்த்தனாவுக்குப் பக்கமாகவும் யெஸ்ரயேலுக்குக் கீழாகவும் பெத்செயான்துவங்கி ஆபேல் மெகொலாவரை யக்மெயாமுக்கு மறுபக்கம்வரை இருக்கிற பெத்செயான் அனைத்தும் இருந்தது. 13 கேபேரின் மகன், இவன் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் இருந்தான்; கீலேயாத்திலுள்ள மனாசேயின் மகனாகிய யாவீரின் கிராமங்களும் மதில்களும் வெண்கலத் தாழ்ப்பாள்களுமுள்ள பாசான் தேசத்தினுடைய அறுபது பெரிய பட்டணங்களுள்ள அர்கோப் பட்டணமும் இவன் விசாரிப்பில் இருந்தது. 14 இத்தோவின் மகன் அகினதாப், இவன் மகனாயீமில் இருந்தான். 15 அகிமாஸ், இவன் நப்தலியில் இருந்தான்; இவன் சாலொமோனுக்கு இருந்த ஒரு மகளாகிய பஸ்மாத் என்பவளைத் திருமணம்செய்தான். 16 ஊசாயின் மகன் பானா, இவன் ஆசேரிலும் ஆலோத்திலும் இருந்தான். 17 பருவாவின் மகன் யோசபாத், இவன் இசக்காரில் இருந்தான். 18 ஏலாவின் மகன் சீமேயி, இவன் பென்யமீனில் இருந்தான். 19 ஊரியின் மகன் கேபேர், இவன் எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்கும் பாசானின் ராஜாவாகிய ஓகுக்கும் இருந்த தேசமாகிய கீலேயாத் தேசத்தில் இருந்தான்; இவன் மாத்திரம் அத்தேசத்தில் அதிபதியாக இருந்தான்.

20 யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலைப்போல அதிகமாக இருந்து, சாப்பிட்டுக் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். 21 நதிதுவங்கி, பெலிஸ்தர்களின் தேசத்தின் வழியாக எகிப்தின் எல்லைவரை இருக்கிற சகல ராஜ்ஜியங்களையும் சாலொமோன் ஆண்டுகொண்டிருந்தான்; அவர்கள் சாலொமோனுக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவன் உயிரோடிருந்த நாட்களெல்லாம் அவனுக்கு பணிவிடை செய்தார்கள். 22 ஒரு நாளுக்கு சாலொமோனுக்கு ஆகும் சாப்பாட்டுச் செலவு, முப்பது மரக்கால் மெல்லிய மாவும், அறுபது மரக்கால் மாவும், 23 கலைமான்களையும் வெளிமான்களையும் வரையாடுகளையும் கொழுமையான பறவைகளையும் தவிர, கொழுத்த பத்து மாடுகளும், மேய்ச்சலிலிருந்து வந்த இருபது மாடுகளும் நூறு ஆடுகளுமாகும். 24 நதிக்கு இந்த பக்கத்தில் இருக்கிற திப்சாமுதற்கொண்டு காசாவரை உள்ளவைகள் எல்லாவற்றையும், நதிக்கு இந்தப்பக்கத்திலுள்ள சகல ராஜாக்களையும் ஆண்டுவந்தான்; அவனைச் சுற்றி எங்கும் சமாதானமாக இருந்தது. 25 சாலொமோனுடைய நாட்களெல்லாம் தாண் துவங்கி பெயெர்செபாவரையும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சைச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்.

2 நாளாகமம் 2:1–2

1 சாலொமோன் யெகோவாவுடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தையும், தனது அரசாட்சிக்கு ஒரு அரண்மனையையும் கட்டத் தீர்மானம் செய்து, 2 சுமைசுமக்கிறதற்கு எழுபதாயிரம் ஆண்களையும், மலையில் மரம் வெட்டுகிறதற்கு எண்பதாயிரம் ஆண்களையும், இவர்கள்மேல் தலைவர்களாக மூவாயிரத்து அறுநூறு ஆண்களையும் கணக்கிட்டு ஏற்படுத்தினான்.

1 இராஜாக்கள் 5:1–12

1 சாலொமோனை அவனுடைய தகப்பன் இடத்தில் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள் என்று தீருவின் ராஜாவாகிய ஈராம் கேள்விப்பட்டு, தன்னுடைய வேலைக்காரர்களை அவனிடம் அனுப்பினான்; ஈராம் தாவீதுக்கு எப்பொழுதும் நண்பனாக இருந்தான். 2 அப்பொழுது சாலொமோன் ஈராமிடம் ஆட்களை அனுப்பி: 3 என்னுடைய தகப்பனாகிய தாவீதின் எதிரிகளைக் யெகோவா அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தும்வரை, அவர்கள் தம்மைச் சுற்றிலும் செய்கிற யுத்தத்தினால், அவர் தம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்ட, அவரால் முடியாமலிருந்தது என்று நீர் அறிந்திருக்கிறீர். 4 ஆனாலும் இப்பொழுதோ என்னுடைய தேவனாகிய யெகோவா எனக்கு எங்கும் இளைப்பாறுதலைத் தந்தார்; விரோதியும் இல்லை, இடையூறும் இல்லை. 5 ஆகையால்: நான் உன்னுடைய இடத்தில் உன் சிங்காசனத்தின்மேல் அமர்த்தும் உன்னுடைய மகனே என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான் என்று யெகோவா என்னுடைய தகப்பனாகிய தாவீதிடம் சொன்னபடியே, என்னுடைய தேவனாகிய யெகோவாவின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று இருக்கிறேன். 6 ஆதலால் லீபனோனில் எனக்காக கேதுரு மரங்களை வெட்ட கட்டளை கொடும்; சீதோனியர்களைப்போல மரம்வெட்டும் வேலை தெரிந்தவர்கள் எங்களுக்குள்ளே ஒருவருமில்லை என்பது உமக்குத் தெரியும்; அதற்காக என்னுடைய வேலைக்காரர்கள் உம்முடைய வேலைக்காரர்களோடு இருப்பார்கள்; நீர் சொல்வதின்படியெல்லாம் உம்முடைய வேலைக்காரர்களின் சம்பளத்தை உமக்குக் கொடுப்பேன் என்று சொல்லச் சொன்னான். 7 ஈராம் சாலொமோனின் வார்த்தைகளைக் கேட்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு: அந்த ஏராளமான மக்களை ஆளும்படி, தாவீதுக்கு ஒரு ஞானமுள்ள மகனைக் கொடுத்த யெகோவா இன்று ஸ்தோத்திரிக்கப்படுவாராக என்று சொல்லி; 8 ஈராம் சாலொமோனிடத்தில் செய்தி அனுப்பி: நீர் எனக்குச் சொல்லியனுப்பின காரியத்தை நான் கேட்டேன்; கேதுரு மரங்களுக்காகவும், தேவதாரு மரங்களுக்காகவும், உம்முடைய விருப்பத்தின்படியெல்லாம் நான் செய்வேன். 9 என்னுடைய வேலைக்காரர்கள் லீபனோனிலிருந்து அவைகளை இறக்கி மத்திய தரைக் கடலிலே கொண்டுவருவார்கள்; அங்கே நான் அவைகளைத் தெப்பங்களாகக் கட்டி, நீர் நியமிக்கும் இடத்திற்குக் கடல்வழியாக அனுப்பி, அவைகளை அவிழ்ப்பேன்; அங்கே நீர் அவைகளை எடுத்துக்கொண்டு என்னுடைய மக்களுக்கு ஆகாரங்கொடுத்து, என்னுடைய விருப்பத்தின்படி செய்யவேண்டும் என்று சொல்லச்சொன்னான். 10 அப்படியே ஈராம் சாலொமோனுக்கு தேவையான அளவு கேதுருமரங்களையும் தேவதாரு மரங்களையும் கொடுத்துக்கொண்டுவந்தான். 11 சாலொமோன் ஈராமின் அரண்மனைக்கு உணவிற்காக 20,000 கலம் கோதுமையையும், இடித்துப் பிழிந்த ஒலிவமரங்களின் இருபது கல எண்ணெயையும் கொடுத்தான்; இப்படி சாலொமோன் ஈராமுக்கு ஆண்டுதோறும் கொடுத்துவந்தான். 12 யெகோவா சாலொமோனுக்குச் சொல்லியிருந்தபடியே அவனுக்கு ஞானத்தைத் தந்தருளினார்; ஈராமுக்கும் சாலொமோனுக்கும் சமாதானம்உண்டாயிருந்து, இருவரும் உடன்படிக்கை செய்துகொண்டார்கள்.

2 நாளாகமம் 2:3–16

3 தீருவின் ராஜாவாகிய ஈராமிடத்திற்கு ஆள் அனுப்பி: என் தகப்பனாகிய தாவீது தாம் குடியிருக்கும் அரண்மனையைத் தமக்குக் கட்டும்படிக்கு, நீர் அவருக்கு தயவுசெய்து, அவருக்குக் கேதுருமரங்களை அனுப்பினதுபோல எனக்கும் தயவு செய்யும். 4 இதோ, என் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாகச் சுகந்தவர்க்கங்களின் தூபம் காட்டுகிறதற்கும், சமுகத்து அப்பங்களை எப்போதும் வைக்கிறதற்கும், காலையிலும் மாலையிலும், ஓய்வு நாட்களிலும், மாதப்பிறப்புகளிலும், எங்கள் தேவனாகிய யெகோவாவின் பண்டிகைகளிலும், இஸ்ரவேல் நித்திய காலமாகச் செலுத்தவேண்டியபடி சர்வாங்கதகனபலிகளைச் செலுத்துகிறதற்கும், அவருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்டி அதை அவருக்குப் பிரதிஷ்டை செய்ய நான் திட்டமிட்டிருக்கிறேன். 5 எங்கள் தேவன் அனைத்து தெய்வங்களையும்விட பெரியவர்; ஆகையால் நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதாயிருக்கும். 6 வானங்களும், வானாதிவானங்களும், அவருக்குப் போதாமலிருக்கும்போது அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வல்லவன் யார்? அவர் சந்நிதியில் தூபங்காட்டுகிறதற்கே அல்லாமல், வேறு காரணத்திற்காக அவருக்கு ஆலயம் கட்டுகிறதற்கு நான் எம்மாத்திரம்? 7 இப்போதும் என் தகப்பனாகிய தாவீது குறித்தவர்களும், என்னிடத்தில் யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிறவர்களுமாகிய நிபுணர்களோடு, பொன்னிலும், வெள்ளியிலும், வெண்கலத்திலும், இரும்பிலும், இரத்தாம்பர நூலிலும், சிவப்பு நூலிலும், இளநீல நூலிலும் வேலைசெய்வதில் நிபுணனும், கொத்துவேலை செய்யத்தெரிந்த ஒரு மனிதனை என்னிடத்திற்கு அனுப்பும். 8 லீபனோனிலிருந்து கேதுரு மரங்களையும், தேவதாரு மரங்களையும், வாசனை மரங்களையும் எனக்கு அனுப்பும்; லீபனோனின் மரங்களை வெட்ட உம்முடைய வேலைக்காரர்கள் பழகினவர்களென்று எனக்குத் தெரியும்; எனக்கு மரங்களைத் திரளாக ஆயத்தப்படுத்த என் வேலைக்காரர்கள் உம்முடைய வேலைக்காரர்களோடு இருப்பார்கள். 9 நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதும் ஆச்சரியப்படத்தக்கதுமாயிருக்கும். 10 அந்த மரங்களை வெட்டுகிற உம்முடைய வேலைக்காரர்களுக்கு இருபதாயிரம் மரக்கால் கோதுமை அரிசியையும், இருபதாயிரம் மரக்கால் வாற்கோதுமையையும், இருபதாயிரம் குடம் திராட்சைரசத்தையும், இருபதாயிரம் குடம் எண்ணெயையும் கொடுப்பேன் என்று சொல்லி அனுப்பினான்.

11 அப்பொழுது தீருவின் ராஜாவாகிய ஈராம் சாலொமோனுக்கு மறுமொழியாக: யெகோவா தம்முடைய மக்களை சிநேகித்ததால், உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார். 12 யெகோவாவுக்கு ஒரு ஆலயத்தையும், தமது அரசாட்சிக்கு ஒரு அரண்மனையையும் கட்டத்தக்க கூரிய அறிவும், புத்தியுமுடைய ஞானமுள்ள மகனை, தாவீது ராஜாவுக்குக் கொடுத்தவராகிய வானத்தையும் பூமியையும் உண்டாக்கின இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. 13 இப்போதும் ஈராம் அபி என்னும் புத்திமானாகிய நிபுணனை அனுப்புகிறேன். 14 அவன் தாணின் மகள்களில் ஒரு பெண்ணின் மகன்; அவனுடைய தகப்பன் தீரு தேசத்தான்; அவன் பொன்னிலும், வெள்ளியிலும், வெண்கலத்திலும், இரும்பிலும், கற்களிலும், மரங்களிலும், இரத்தாம்பர நூலிலும், இளநீல நூலிலும் மெல்லிய நூலிலும், சிவப்பு நூலிலும் வேலை செய்யவும், சகலவிதக் கொத்துவேலை செய்யவும், என்னென்ன செய்யவேண்டுமென்று அவனுக்குச் சொல்லப்படுமோ, அவைகளையெல்லாம் உம்மிடத்திலுள்ள நிபுணர்களோடும், உம்முடைய தகப்பனாகிய தாவீது என்னும் என் ஆண்டவனின் நிபுணர்களோடும் ஆலோசித்துச் செய்யவும் அறிந்தவன். 15 என் ஆண்டவன் தாம் சொன்னபடி கோதுமையையும், வாற்கோதுமையையும், எண்ணெயையும், திராட்சைரசத்தையும் தம்முடைய ஊழியக்காரர்களுக்கு அனுப்புவாராக. 16 நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லீபனோனிலே வெட்டி, அவைகளைத் தெப்பங்களாகக் கட்டி கடல் வழியாக யோப்பாவரைக்கும் கொண்டுவருவோம்; பின்பு நீர் அவைகளை எருசலேமுக்குக் கொண்டுபோகலாம் என்று எழுதி அனுப்பினான்.

1 இராஜாக்கள் 5:13–18

13 ராஜாவாகிய சாலொமோன் இஸ்ரவேலர்கள் எல்லோரிலும் வேலைக்கு 30,000 கூலியில்லா வேலைக்காரர்களைப் பிடித்தான். 14 அவர்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் 10,000 பேரை மாற்றி மாற்றி, லீபனோனுக்கு அனுப்பினான்; அவர்கள் ஒரு மாதம் லீபனோனிலும், இரண்டு மாதங்கள் தங்களுடைய வீடுகளிலும் இருப்பார்கள்; அதோனீராம் அந்த கூலியில்லா ஆட்களின்மேல் தலைவனாக இருந்தான். 15 சாலொமோனிடம் சுமை சுமக்கிறவர்கள் 70,000 பேர்களும், மலைகளில் மரம் வெட்டுகிறவர்கள் 80,000 பேர்களும், 16 இவர்களைத் தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைக் கண்காணிப்பதற்குத் தலைமையான அதிகாரிகள் 3,300 பேர்களும் இருந்தார்கள். 17 வெட்டின கல்லால் ஆலயத்திற்கு அஸ்திபாரம்போட, பெரிதும் விலையுயர்ந்ததுமான கற்களைக் கொண்டுவர ராஜா கட்டளையிட்டான். 18 ஆலயத்தைக் கட்ட, சாலொமோனின் சிற்பிகளும், ஈராமின் சிற்பிகளும், கிப்லி ஊரைச் சேர்ந்தவர்களும், அந்த மரங்களையும் கற்களையும் வெட்டி ஆயத்தப்படுத்தினார்கள்.

2 நாளாகமம் 2:17–18

17 தன் தகப்பனாகிய தாவீது இஸ்ரவேல் தேசத்திலிருந்த வேறு தேசத்தாரையெல்லாம் எண்ணித் தொகையிட்டதுபோல, சாலொமோனும் அவர்களை எண்ணினான்; அவர்கள் ஒருலட்சத்து ஐம்பத்துமூவாயிரத்து அறுநூறுபேராக இருந்தார்கள். 18 இவர்களில் அவன் எழுபதாயிரம்பேரை சுமைசுமக்கவும், எண்பதாயிரம்பேரை மலையில் மரம்வெட்டவும், மூவாயிரத்து அறுநூறுபேரை மக்களின் வேலையை கவனிக்கும் தலைவர்களாயிருக்கவும் ஏற்படுத்தினான்.

சீமேயியின் மரணம் கி.மு. 1011

1 இராஜாக்கள் 2:39–46

39 மூன்று வருடங்கள்சென்றபோது, சீமேயியின் வேலைக்காரர்கள் இரண்டுபேர் மாக்காவின் மகனாகிய ஆகீஸ் என்னும் காத்தின் ராஜாவிடம் ஓடிப்போனார்கள்; உன்னுடைய வேலைக்காரர்கள் காத் ஊரில் இருக்கிறார்கள் என்று சீமேயிக்கு அறிவித்தார்கள். 40 அப்பொழுது சீமேயி எழுந்து, தன்னுடைய கழுதையின்மேல் சேணம் வைத்து, தன்னுடைய வேலைக்காரர்களைத் தேட, காத் ஊரிலிருக்கிற ஆகீசிடம் புறப்பட்டுப் போனான்; இப்படி சீமேயி போய், தன்னுடைய வேலைக்காரர்களைக் காத் ஊரிலிருந்து கொண்டுவந்தான். 41 சீமேயி எருசலேமிலிருந்து காத் ஊருக்குப் போய், திரும்பி வந்தான் என்று சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டபோது, 42 ராஜா சீமேயியை அழைத்து: நீ வெளியே புறப்பட்டு எங்கேயாவது போகிற நாளிலே சாவாய் என்பதை நீ நிச்சயமாக அறிந்துகொள் என்று நான் உன்னைக் யெகோவாமேல் ஆணையிடச் செய்து, உனக்கு மிகவும் உறுதியாகச் சொல்லியிருக்க, அதற்கு நீ: நான் கேட்ட வார்த்தை நல்லதென்று சொல்லவில்லையா? 43 நீ யெகோவாவின் ஆணையையும், நான் உனக்குக் கற்பித்த கட்டளையையும் கைக்கொள்ளாமற்போனது என்ன? என்று சொல்லி, 44 பின்னும் ராஜா சீமேயியைப் பார்த்து: நீ என்னுடைய தகப்பனாகிய தாவீதுக்குச் செய்ததும் உன் மனதுக்குத் தெரிந்திருக்கிறதுமான எல்லாத் தீங்கையும் அறிந்திருக்கிறாய்; ஆகையால் யெகோவா உன்னுடைய தீங்கை உன்னுடைய தலையின்மேல் திரும்பச்செய்வார். 45 ராஜாவாகிய சாலொமோனோ ஆசீர்வதிக்கப்பட்டவனாக இருப்பான்; தாவீதின் சிங்காசனம் என்றைக்கும் யெகோவாவுக்கு முன்பாக உறுதியாக இருக்கும் என்று சொல்லி, 46 ராஜா யோய்தாவின் மகனாகிய பெனாயாவுக்குக் கட்டளை கொடுத்தான்; அவன் வெளியே போய், அவனைக் கொன்றுபோட்டான். அரசாட்சி சாலொமோனின் கையிலே உறுதிப்பட்டது.

சாலொமோனின் திருமணம்

1 இராஜாக்கள் 3:1–2

1 சாலொமோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடு சம்பந்தங்கலந்து, பார்வோனின் மகளைத் திருமணம் செய்து, தன்னுடைய அரண்மனையையும் யெகோவாவுடைய ஆலயத்தையும் எருசலேமின் சுற்றுமதிலையும் கட்டி முடியும்வரை அவன் அவளைத் தாவீதின் நகரத்தில் கொண்டுவந்து வைத்தான். 2 அந்த நாட்கள்வரை யெகோவாவுடைய நாமத்திற்கு ஒரு ஆலயம் கட்டப்படாமல் இருந்ததால், மக்கள் மேடைகளில் பலியிட்டு வந்தார்கள்.