தாவீதின் ஆட்சிக்காலச் சங்கீதங்கள், காலங்கள் உறுதியாகத் தெரியவில்லை (continued)

தாவீது அரசரான பிறகு எழுதிய சங்கீதங்கள்; இவை எழுதப்பட்ட காலங்களும் சூழ்நிலைகளும் உறுதியாகத் தெரியவில்லை.

கி.மு. 1015

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சங்கீதங்கள் 120–122

ஆரோகண பாடல்.

1 என்னுடைய நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்;

அவர் எனக்குச் செவிகொடுத்தார்.

2 யெகோவாவே, பொய் உதடுகளுக்கும் வஞ்சகமாக பேசும் நாவுக்கும் என்னுடைய ஆத்துமாவைத் தப்புவியும்.

3 வஞ்சக நாவே, உனக்கு என்ன கிடைக்கும்?

உனக்கு என்ன செய்யப்படும்?

4 பலவானுடைய கூர்மையான அம்புகளும்,

சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.

5 ஐயோ, நான் மேசேக்கிலே வாழ்ந்தது போதும்,

கேதாரின் கூடாரங்கள் அருகில் குடியிருந்ததும் போதும்!

6 சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடம் என்னுடைய ஆத்துமா குடியிருந்ததும் போதும்!

7 நான் சமாதானத்தை நாடுகிறேன்;

அவர்களோ, நான் பேசும்போது போர்செய்ய முயற்சி செய்கிறார்கள்.

ஆரோகண பாடல்.

121:1 எனக்கு உதவி வரும் மலைகளுக்கு நேராக

என்னுடைய கண்களை உயர்த்துகிறேன்.

2 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின

யெகோவாவிடத்திலிருந்து எனக்கு உதவி வரும்.

3 உன்னுடைய காலைத் தள்ளாடவிடமாட்டார்;

உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார்.

4 இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.

5 யெகோவா உன்னைக் காக்கிறவர்;

யெகோவா உன்னுடைய வலது பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார்.

6 பகலிலே வெயிலோ, இரவிலே நிலவோ

உன்னைச் சேதப்படுத்துவதில்லை.

7 யெகோவா உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்;

அவர் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பார்.

8 யெகோவா உன்னுடைய போக்கையும் உன்னுடைய வரத்தையும்

இதுமுதற்கொண்டு என்றென்றும் காப்பார்.

தாவீதின் ஆரோகண பாடல்.

122:1 யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள்

என்று என் நண்பர்கள் எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தேன்.

2 எருசலேமே, உன்னுடைய வாசல்களில் எங்களுடைய கால்கள் நிற்கிறது.

3 எருசலேம் கச்சிதமான நகரமாகக் கட்டப்பட்டிருக்கிறது.

4 அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக்

யெகோவாவுடைய மக்களாகிய கோத்திரங்கள் யெகோவாவின் பெயரைப் போற்றுவதற்குப் போகும்.

5 அங்கே தாவீதின் வீட்டாருடைய சிங்காசனங்களாகிய

நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.

6 எருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள்;

உன்னை நேசிக்கிறவர்கள் செழித்திருக்கட்டும்.

7 உன்னுடைய மதில்களுக்குள்ளே சமாதானமும்,

உன்னுடைய அரண்மனைகளுக்குள்ளே செழிப்பும் இருக்கும்.

8 என்னுடைய சகோதரர்களுக்காகவும் என்னுடைய நண்பர்களுக்காகவும்,

உன்னில் சமாதானம் இருக்கட்டும் என்பேன்.

9 எங்களுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்காக

உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.

சங்கீதங்கள் 124

தாவீதின் ஆரோகண பாடல்.

1 மனிதர்கள் நமக்கு விரோதமாக எழும்பினபோது,

யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,

2 யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,

3 அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது,

நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.

4 அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து,

வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,

5 கொந்தளிக்கும் தண்ணீர்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும்

என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.

6 நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காமல்

இருக்கிற யெகோவாவுக்கு நன்றி.

7 வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல

நம்முடைய ஆத்துமா தப்பினது,

கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.

8 நம்முடைய உதவி வானத்தையும் பூமியையும் உண்டாக்கின

யெகோவாவுடைய பெயரில் உள்ளது.

சங்கீதங்கள் 131

தாவீதின் ஆரோகண பாடல்.

1 யெகோவாவே, என்னுடைய இருதயம் பெருமைகொள்வதில்லை,

என்னுடைய கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல;

பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை.

2 தாயின் பால்மறந்த குழந்தையைப்போல நான் என்னுடைய ஆத்துமாவை அடக்கி அமரச்செய்தேன்;

என்னுடைய ஆத்துமா பால்மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது.

3 இதுமுதல் என்றென்றைக்கும் இஸ்ரவேல் யெகோவாவை நம்பியிருப்பதாக.

சங்கீதங்கள் 133

தாவீதின் ஆரோகண பாடல்.

1 இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்செய்கிறது

எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?

2 அது ஆரோனுடைய தலையின்மேல் ஊற்றப்பட்டு,

அவனுடைய தாடியிலே வடிகிறதும்,

அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்திற்கும்,

3 எர்மோன்மேலும், சீயோன் மலைகள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாக இருக்கிறது;

அங்கே யெகோவா என்றென்றைக்கும்

ஆசீர்வாதத்தையும் வாழ்வையும் கட்டளையிடுகிறார்.