ஆலோசனைச் சங்கம் இயேசுவின் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது
அதிகாரிகள் (ஆலோசனைச் சங்கம்) அங்கீகரிக்கப்பட்ட போதகராக (ரபீ) இயேசுவுக்கு உள்ள அதிகாரத்தை முறைப்படி கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.
தேவாலயப் பிராகாரத்தில். (செவ்வாய்க்கிழமை) விவாதங்கள் நிறைந்த நாள்
இயேசு தமது மனித அதிகாரத்தைத் தமக்கு முன்னோடியாக இருந்து தமக்கு ஞானஸ்நானம் கொடுத்த யோவான்ஸ்நானனின்மேல் அடிப்படையாக வைத்து, யோவானின் ஞானஸ்நானத்தைக் குறித்து ஆலோசனைச் சங்கத்தின் கருத்தைக் கோருகிறார். இந்தக் கூர்மையான எதிர்க்கேள்வி யூதத் தலைவர்களைச் செயலிழக்கச் செய்கிறது; இயேசு மூன்று உவமைகளால் தமது வாதத்தை ஆணித்தரமாக நிறுவுகிறார்: (அ) இரண்டு மகன்களின் உவமை; (ஆ) பொல்லாத தோட்டக்காரர்களின் உவமை; (இ) ராஜாவின் மகனுடைய திருமண விருந்தின் உவமை.
கி.பி. 30 அல்லது 29
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மத்தேயு 21:23–22:14
21:23 அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம்பண்ணும்போது, பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள்.
24 இயேசு மறுமொழியாக: நானும் உங்களிடம் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் எந்த அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன்.
25 யோவான் கொடுத்த ஞானஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனிதர்களால் உண்டாயிற்றோ? யாரால் உண்டானது? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னே ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்;
26 மனிதர்களால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், மக்களுக்குப் பயப்படுகிறோம், எல்லோரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைசெய்து,
27 இயேசுவிற்கு மறுமொழியாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது, அவர்: நானும் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்வதில்லை என்றார்.
28 ஆனாலும், உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சைத்தோட்டத்தில் வேலைசெய் என்றான். 29 அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆனாலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப்போனான். 30 இளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை. 31 இவ்விருவரில் எவன் தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: வரி வசூலிப்பவர்களும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 32 ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாக உங்களிடம் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; வரி வசூலிப்பவர்களும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாவது மனஸ்தாபப்படவில்லை என்றார்.
33 வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனிதன் இருந்தான், அவன் ஒரு திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை உருவாக்கி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரர்களுக்கு அதைக் குத்தகைக்கு விட்டு, வெளிதேசத்திற்குச் சென்றிருந்தான்.
34 அறுவடைக்காலம் நெருங்கியபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் வேலைக்காரர்களைத் தோட்டக்காரர்களிடத்தில் அனுப்பினான்.
35 தோட்டக்காரர்கள் அந்த வேலைக்காரர்களைப்பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
36 பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறு வேலைக்காரர்களை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.
37 அவன்: என் குமாரனுக்கு பயப்படுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.
38 தோட்டக்காரர்கள் குமாரனைக் கண்டபோது: இவனே வாரிசு; இவனைக் கொன்று, இவனுடைய சொத்தை எடுத்துக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;
39 அவனைப் பிடித்துத் திராட்சைத்தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொலைசெய்தார்கள்.
40 அப்படியிருக்க, திராட்சைத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரர்களை என்ன செய்வான் என்று கேட்டார்.
41 அதற்கு அவர்கள்: அந்தக் கொடியவர்களைக் கொடுமையாக அழித்து, ஏற்றக் காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கக்கூடிய வேறு தோட்டக்காரர்களிடத்தில் திராட்சைத்தோட்டத்தைக் குத்தகைக்குக் கொடுப்பான் என்றார்கள்.
42 இயேசு அவர்களைப் பார்த்து:
வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே
மூலைக்குத் தலைக்கல்லானது,
அது கர்த்தராலே ஆனது,
அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று
நீங்கள் வேதத்தில் ஒருபோதும் வாசிக்கவில்லையா?
43 ஆகவே, தேவனுடைய ராஜ்யம் உங்களிடமிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகின்ற மக்களுக்குக் கொடுக்கப்படும்.
44 இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 45 பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் அவருடைய உவமைகளைக் கேட்டு, தங்களைக்குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்து,
46 அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் மக்கள் அவரைத் தீர்க்கதரிசியென்று நினைத்தபடியினால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.
22:1 இயேசு மறுபடியும் அவர்களோடு உவமைகளாகப் பேசிச் சொன்னது என்னவென்றால்: 2 பரலோகராஜ்யம் தன் குமாரனுக்கு திருமணம் செய்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது. 3 அழைக்கப்பட்டவர்களைத் திருமணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் வேலைக்காரர்களை அனுப்பினான்; அவர்களோ வர விருப்பமில்லாதிருந்தார்கள். 4 அப்பொழுது அவன் வேறு வேலைக்காரர்களை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம் செய்தேன், என் எருதுகளும், கொழுத்த கன்றுக்குட்டிகளும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது; திருமணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான். 5 அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைசெய்து, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்திற்கும் போய்விட்டார்கள். 6 மற்றவர்கள் அவனுடைய வேலைக்காரர்களைப்பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள். 7 ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் படைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகர்களை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான். 8 அப்பொழுது, அவன் தன் வேலைக்காரர்களைப் பார்த்து: திருமணவிருந்து ஆயத்தமாக இருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு தகுதியற்றவர்களாக போனார்கள். 9 ஆகவே, நீங்கள் வீதிகளிலேபோய், காணப்படுகிற அனைவரையும் திருமணத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான். 10 அந்த வேலைக்காரர்கள் புறப்பட்டு, வழிகளிலேபோய், தாங்கள் கண்ட நல்லவர்கள் பொல்லாதவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டுவந்தார்கள்; திருமண மண்டபம் விருந்தாளிகளால் நிறைந்திருந்தது. 11 விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே நுழைந்தபோது, திருமணஆடை அணிந்திராத ஒரு மனிதனை அங்கே பார்த்து: 12 நண்பனே, நீ திருமணஆடை இல்லாதவனாக இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான். 13 அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரர்களைப் பார்த்து: இவனுடைய கையையும் காலையும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான். 14 அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
மாற்கு 11:27–12:12
11:27 அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். அவர் தேவாலயத்திலே உலாவிக்கொண்டிருக்கும்போது, பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மூப்பர்களும் அவரிடம் வந்து:
28 நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இவைகளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார் என்று கேட்டார்கள்.
29 இயேசு மறுமொழியாக: நானும் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன், நீங்கள் எனக்கு பதில் சொல்லுங்கள், அப்பொழுது நானும் எந்த அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லுவேன்.
30 யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டானதா அல்லது மனிதர்களால் உண்டானாதா என்று எனக்கு பதில் சொல்லுங்கள் என்றார்.
31 அதற்கு அவர்கள்: தேவனால் உண்டானது என்று சொன்னால், பின்பு ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார்.
32 எல்லோரும் யோவானை உண்மையான தீர்க்கதரிசி என்று நினைக்கிறார்கள். எனவே மக்களுக்குப் பயப்பட்டதினால், மனிதர்களால் உண்டானது என்று சொல்லமுடியாமல், தங்களுக்குள் ஆலோசனைபண்ணி;
33 இயேசுவிற்கு மறுமொழியாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது இயேசு: நானும் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லமாட்டேன் என்றார்.
12:1 பின்பு இயேசு உவமைகளாக அவர்களுக்குச் சொன்னது: ஒரு மனிதன் ஒரு திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலி அடைத்து, திராட்சை ஆலையை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரர்களுக்கு அதைக் குத்தகைக்கு விட்டு, வேறு தேசத்திற்குச் சென்றிருந்தான்.
2 தோட்டக்காரர்களிடம் திராட்சைத்தோட்டத்துக் கனிகளில் தன் பங்கை வாங்கிக்கொண்டுவரும்படி, பருவகாலத்திலே அவர்களிடம் ஒரு வேலைக்காரனை அனுப்பினான்.
3 அவர்கள் அவனைப் பிடித்து, அடித்து, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.
4 பின்பு வேறொரு வேலைக்காரனை அவர்களிடம் அனுப்பினான்; அவர்கள் அவனைக் கல்லால் அடித்து, தலையைக் காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள்.
5 மீண்டும் வேறொருவனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொலைசெய்தார்கள். வேறு அநேகரையும் அனுப்பினான்; அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்றுபோட்டார்கள்.
6 அவனுக்குப் பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனை மதிப்பார்கள் என்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடம் அனுப்பினான்.
7 தோட்டக்காரர்களோ: இவனே சொத்திற்கு வாரிசு, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சொத்து நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;
8 அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சைத்தோட்டத்திற்குப் வெளியே எறிந்துவிட்டார்கள்.
9 அப்படியிருக்க, திராட்சைத்தோட்டத்திற்கு எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரர்களைக் கொன்று, திராட்சைத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பான் அல்லவா?
10 வீடுகட்டுகிறவர்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய
கல்லே மூலைக்குத் தலைக்கல்லானது;
11 அது கர்த்தராலே நடந்தது,
அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று எழுதியிருக்கிற வாக்கியத்தை நீங்கள் வாசிக்கவில்லையா!” என்றார்.
12 இந்த உவமையைத் தங்களைக்குறித்துச் சொன்னார் என்று அவர்கள் அறிந்து, அவரைக் கைது செய்ய முயற்சிசெய்தார்கள்; ஆனாலும் மக்களுக்குப் பயந்து, அவரைவிட்டுப் போய்விட்டார்கள்.
லூக்கா 20:1–19
20:1 அந்த நாட்களிலே, அவர் தேவாலயத்திலே மக்களுக்கு உபதேசித்து, நற்செய்தியைப் பிரசங்கித்தபோது, பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மூப்பர்களும் அவரிடத்தில் கூடிவந்து:
2 நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.
3 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: நானும் உங்களிடம் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுங்கள். 4 யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனிதர்களால் உண்டாயிற்றோ? என்று கேட்டார்.
5 அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைசெய்து: தேவனால் உண்டானது என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை நம்பவில்லை என்று கேட்பார்.
6 மனிதர்களால் உண்டானது என்று சொல்வோமானால், மக்களெல்லோரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறபடியினால் நம்மேல் கல்லெறிவார்கள் என்று சொல்லி:
7 அது யாரால் உண்டாயிற்றோ, எங்களுக்குத் தெரியாது என்று மறுமொழி சொன்னார்கள்.
8 அப்பொழுது இயேசு: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லமாட்டேன் என்றார்.
9 பின்பு அவர் மக்களுக்கு சொல்லத்தொடங்கின உவமையாவது: ஒரு மனிதன் ஒரு திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதைத் தோட்டக்காரர்களுக்குக் குத்தகையாக விட்டு, நீண்ட நாட்களாக வெளிதேசத்திற்குச் சென்றிருந்தான்.
10 அந்தத் தோட்டக்காரர்கள் திராட்சைத்தோட்டத்தின் கனிகளில் தன் பங்கைக் கொடுத்தனுப்பும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு வேலைக்காரனை அனுப்பினான். அந்தத் தோட்டக்காரர்கள் அவனை அடித்து, ஒன்றும் கொடுக்காமல் அனுப்பிவிட்டார்கள்.
11 பின்பு அவன் வேறொரு வேலைக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, ஒன்றும் கொடுக்காமல் அனுப்பிவிட்டார்கள்.
12 அவன் மூன்றாம்முறையும் ஒரு வேலைக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் காயப்படுத்தி துரத்திவிட்டார்கள்.
13 அப்பொழுது திராட்சைத்தோட்டத்தின் எஜமான்: நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான மகனை அனுப்பினால், அவனையாவது பார்த்து பயப்படுவார்கள் என்று நினைத்து, அவனை அனுப்பினான்.
14 தோட்டக்காரர்கள் அவனைக் கண்டபோது: இவனே வாரிசு, சொத்தை நம்முடையதாக்கும்படிக்கு இவனைக் கொன்று போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு,
15 அவனைத் திராட்சைத்தோட்டத்திற்குப் வெளியே தள்ளி, கொன்றுபோட்டார்கள். இப்படியிருக்க, திராட்சைத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்ன செய்வான்?
16 அவன் வந்து அந்தத் தோட்டக்காரர்களை அழித்து, திராட்சைத்தோட்டத்தை வேறு தோட்டக்காரர்களிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார். அவர்கள் அதைக்கேட்டு, அப்படியாகாதிருப்பதாக என்றார்கள்.
17 அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து:
வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே,
மூலைக்குத் தலைக்கல்லானது என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் பொருள் என்ன?
18 அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான்,
அது எவன்மேல் விழுமோ அவனை அழித்துப்போடும்” என்றார்.
19 பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் தங்களைக்குறித்து இந்த உதாரணத்தைச் சொன்னாரென்று அறிந்து, அந்த நேரத்திலே அவரைப் பிடிக்க வகைதேடியும் மக்களுக்குப் பயந்திருந்தார்கள்.